“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 16 ஜூன், 2012

தண்ணீரும் வெந்நீரும்
1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உற்பத்தித் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட முடிவை அடுத்து ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாகக் கொண்டாடலாம் என ஐக்கிய நாடுகளின் அவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக நீர்த்தினம் அதாவது உலக நீர்நாள் அனுட்டித்து வருகிறோம். ஆனால் பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இடம்பிடித்து இருப்பது நீர் எனினும் உலக மக்கள் தொகையின் நான்கு பேரில் மூவர் அருந்துவதற்குத் தூய நீரின்றி அவதிப்படுகின்றனர் என்பதே உண்மை.
உலகில் பாதுகாப்பான நீரின்றி எட்டு நொடிகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் குழந்தைகள் சாவதற்குப் பாதுகாப்பற்ற குடிநீரே முதல் காரணமாக அமைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதுவே இன்றைய நீர்வளத்தின் நிலை.
நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு என்பது வள்ளுவம். இதனால் அண்டம் என்றழைக்கப்படும் உலகும் பிண்டம் எனறழைக்கப்படும் உயிரும் நீரின்றி அமையாது என்பது தெளிவு.
தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பும்போது கூட நீரின்றி அமையாத உலகம் போலத் தலைவனின்றி அமையாத தன் நிலையை அறிந்து அவன் வந்துவிடுவான் என்று ஒரு தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல் ஒன்று நற்றிணையில் காணலாகும். பாடல் இதோ,
நீரின்றி அமையாது உலகம் போல்
தம்மின்றி அமையாது நன்னயந்தருளி”.

இவ்வளவு முக்கியமான நீர் உடலுக்கு எந்த அளவு தேவை? மிகுதி என்பது எந்த அளவு? குறைவு என்பது எந்த அளவு? எந்த நீரைப் பயன் படுத்த வேண்டும்? எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்ப்தை அறிய வேண்டிய கோடை இது.

நெடுநல் வாடையில் தொகுவாய்க் கலத்து நீரை அருந்தாமல் பகுவாய் கலத்து நெருப்பில் குளிர் ஆறுவர் என்று கூறுவதால் குளிர்காலத்தில் மக்கள் குவிந்த வாயினை உடைய குடத்துத் தண்ணீரைக் குடிக்காமல் பெரிய வாயையுடைய காரைச்சட்டியில் நெருப்பை இட்டு அதில் குளிர் காய்வார்கள் என்பதை புலப்படுத்தும். ஆனால் கோடையில் குளிர் நீர்தானே வேண்டியுள்ளது.

ஆனால் என்னதான் கோடையாக இருந்தாலும் குளிர் நீரைப் பருகவே மனம் விரும்பினாலும் அதையும் காய்ச்சி குளிர வைத்தே குடிப்பது நல்லது என்கின்றனர்.

அதே சமயம். காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால் நெஞ்செரிச்சல், தலைவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று வலி, இருமல் ஆகிவை உடனே குணமாகும். குளிர் நீரை மட்பாண்டத்தில் சேமித்து அருந்துவது போல வெந்நீரை எப்பாண்ட்த்தில் சேமித்தல் நலம் பயக்கும் என்பதும் மிக முக்கியமானது.

பொன்பாத்திரத்தில் வெந்நீரைச் சேமித்து அருந்துவதால் வாயு, கபம், வெப்பு நோய் போகும். நல்ல புத்தி உண்டாகுமாம். அறிவு விருத்தி அடையுமாம். ஆனால் இது யாருக்குச் சாத்தியம்?

வெள்ளிப்பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம்,  காய்ச்சல் வெப்பு நோய் ஆகியவை நீங்குமாம். உடல் செழிப்பாக இருக்குமாம். பலம் பெருகுமாம். இது ஓரளவு சாத்தியமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான இல்லங்களில் வெள்ளி கிளாஸ் இருக்கிறது.

தாமிரப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம், கண்புகைச்சல், கண் எரிச்சல் ஆகியவை நீங்குமாம். நடுத்தற வர்க்கத்தினர் செப்புக்குடமே பெரும்பாலும் பயன் படுத்துகின்றனர். ஆலயங்களில் தீர்த்தம் தருவது இக்காரணம் கருதியே எனலாம்.
பஞ்ச லோகப் பாத்திரத்தில் வைத்து அருந்துவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முந்நோயும் நீங்குமாம்.
வெங்கலப் பாத்திரத்தில் நீரைச் சேமித்து அருந்துவதால் தாது விருத்தி ஆகுமாம்.
இரும்புப் பாத்திரத்தில் சேமித்த நீரை அருந்துவதால் பாண்டு நோய் போகுமாம். தாது உண்டாகுமாம். உடல் குளிர்ச்சி அடையுமாம். தகரக்குடம் பயன் பாடு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது அறவே இல்லை எனலாம். இவையெல்லாம் வெந்நீரைச் சேமித்து வைப்பதைப் பற்றிய தகவல்கள்.
இது மட்டுமல்ல தண்ணீரை வெந்நீராகக் காய்ச்சும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பயன் என்பதையும் ஆய்ந்து சொன்ன மருத்துவம் தமிழ் மருத்துவம். 
கால்கூறு காய்ந்த வெந்நீர் பித்த்த்தைப் போக்கும்
அரைக்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்
ன்று வெந்நீர் மருத்துவத்தைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி விளக்கும்.  இவை தண்ணீரைச் சுண்ட வைக்கும் முறை. ஆனால் தண்ணீரை மருந்தாகவே மாற்றும் முறையும் சித்த மருத்துவத்தில் இருந்து வந்துள்ளது. எட்டில் ஒரு பாகமாகத் தண்ணீரைச் சுருக்கினால் மேலே கூறப்பட்ட அனைத்து நோய்க்கும் மருந்தாகிறதாம்.
 நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்
என்று நீர் மருத்துவத்தைப் பற்றிப் பேசும் சித்த மருத்துவம்.
நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே
என்றும் ஆணித்தரமாகக் கூறுவதால் வெந்நீரைக் காய்ச்சிக் குடிப்பது மெய்க்கு நோய்வாராமல் காக்கும் வழியாம்.
பெருக்கத்து மோரும் சுருக்கத்து நீரும் உடல் நோய்க்கு மருந்தாகும் என்பது பண்டையோர் கண்ட உடலோம்பு முறை. இக்கட்டுரையில் நீர் பற்றி எத்தனையோ இலக்கியச் செய்திகளும் மருத்துவச் செய்திகளும் உள்ளன.
 அருந்தும் நீரைப் பற்றி அறிந்தோம். ஆடும் நீரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? அது கூழானும் குளித்துக் குடி” என்று கூறுதற்கும் சனிநீராடு என்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி இங்கு பார்க்க வேண்டும். குளித்தல், நீராடுதல் இரண்டு பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

நன்றி குமுதம் ஹெல்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக