“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 25 ஆகஸ்ட், 2010

வெங்காயம் சுக்கானால்......



http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSiBh5QysW69s0VvfgnAcc-TZZ8wwsh7EeOpxM2cb1WhBzBjivPoQ


சர்வ சாதாரணமா நமக்கு என்னென்ன நோய் வருகிறது என்று பார்த்தால் முக்கியமாகத் தலைவலி. எண்சான் உடலுக்குத் தலையே பிரதானம்
என்று கூறுவதைக் கேட்டு இருப்போம். ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது
, அது ஒரு பெரிய தலைவலி என்று அடிக்கடி
சொல்ற அளவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்றது இந்தத் தலைவலி.

ஒரு சிலருக்கு அடைமழை போல லேசான தலைவலி நாள் முழுவதும்
இருந்து கொண்டே இருக்கும். இது நம்மைப் பறபறப்பாக ஓடவும் விடாது. ஓரிடத்தில் உட்காரவும் விடாது.

இன்னும் சிலருக்கு உண்மையாகவே இரண்டு பேர் தலைக்குள் சுத்தியலால் முடிஞ்ச்வரைக்கும் பலமா அடிப்பது போல இருக்கும். இது இடி ரகத் தலைவலி.
கிராமப்புறத்தில் இதனை மண்டை இடி என்று கூறுவார்கள். சிலருக்குக் கழுத்தில் தொடங்கி கண்கள்
, உச்சந்தலை வரைக்கும் நரம்பு வழியாக ஒரு தலைவலி எக்ஸ்பிரஸ் பாஸ் ஆகும். இது மண்டைக் குத்தல் ரகம். இது குளித்த பின்பு சரியாகத் தலை துவட்டாமல் விடுவதால், தலையில் நீர் கோத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ்ஸோ பாசஞ்சரோ எதுவாக இருந்தாலும் வந்துட்டா
ஒரே தலைவலிதான்.

எண்சான் உடலில் ஒரே ஒரு சாண் தான் வயிறு. இதில் தான் இருக்கிறது உயிர் பொம்மலாட்டத்தின் சூட்சுமக் கயிறு. ஒரு பெண் துறவியாய்ச் சுற்றித் திரிந்த ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால் நம்புவீர்களா? வயிறுபடுத்தும் பாடு பற்றி ஒளவை பாடுவதைப் பாருங்கள்.


ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்

ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்

- என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது.

என்னதான் வயிறோட வாழ்ந்து குப்பைக் கொட்ட முடியாது என்று ஒளவை சொன்னாலும் வயிறை நாம் குப்பைக் கூடை போல் நிரப்பிக் கொண்டே இருந்தால்!? உபரி உணவுகளான நொறுக்ஸுக்குத் தடை போடுவது தான் நல வாழ்வுக்கு ஒரே விடை என்று எவ்வளவு தான் படித்தாலும் நம் மூளைக்குப் புரியும் அளவு நாசமாப் போன நாவுக்குப் புரிவது இல்லையே.

பந்தியில் நின்றாய் முந்தி

பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,

அது குருதியின் இடை நிற்கும் நந்தி

இறுதியில் இயங்கும் இதயம் விந்தி

முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி

இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி எனவே

இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி

என்ற புதுப்பாடலும் உணவுக் கட்டுப்பாட்டினைப் பற்றிக் கூறுவதே.

அட நொறுக்குத் தீனிகளை விடுங்க, முதன்மை உணவே கூட அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அல்லது உருளை, சேனை என்று எதையாவது நாக்கு ருசி பார்த்து விட்டாலும் சரி வயிற்றுக்குள் வாயு பகவானின் ஆட்சி ஆரம்பித்து விடும். அசிடிடி, அப்புறம் ஒரே உப்பிசமாக இருக்கிறது என்பார்கள், நெஞ்சைக் கரிக்கிறது என்பார்கள்,

நெஞ்சுக்குத்தல் என்பார்கள், நெஞ்செரிப்பு என்பார்கள்.. தொப்புளைச் சுற்றி குத்தி
வலிக்கிறது என்பார்கள். பசியேப்பம் என்பார்கள், புளியேப்பம் என்பார்கள். ஒரே
புலம்பல்ஸ்தான் போதுமா வயிறு தொடர்பான நோய்கள்.

காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டு வைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சு இரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வு
போன்றவற்றால் ஏற்படுகிறது.

இந்த நோய்கள் மட்டுமல்ல, மூலம், வாதம், காய்ச்சல் போன்ற அனைத்து நோய்களின் நிவாரினி யார் என்று கேட்டால் தி ஒன் அண்ட் ஒன்லி சுக்குதான் என்கிறது தமிழ் மருத்துவம். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லைஎன்ற பழமொழியும் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

தீபாவளி அன்று கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் முக்கிய இடத்தைப் பிடிப்பது தீபாவளி மருந்து. இது சித்தர்கள் சொன்னது மட்டுமல்ல. நம்ம வீட்டு சித்திகள் வீட்டிலேயே கிண்டுவதும்தான். இந்த லேகியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பலசரக்குப் பொருள் சுக்குதான். தீபாவளி அன்று அதிகாலையில் நாம் விழுஙகிடும் அத்த்னை பண்டங்களையும் ஜீரணிக்கும் சக்தி நம் வயிற்றை விட இந்தச் சுக்குத்தான் அதிகம்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய கைமருந்து சுக்குப் பொடி. வயிறு தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் உடனே வெந்நீரில் சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று உப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும். முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும் நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.

சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன் வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால் நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்
வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.

சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெறும் வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு, தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.

சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்
சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு என்ற பழம்பாடல் ஒன்று நாள்தோறும்
சுக்கு நம் உணவில் அமைய வேண்டிய அவசியத்தைக் கூறும். இஞ்சியின் உலர்ந்த நிலையே சுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை மருத்துவ குணம் கொண்ட சுக்கின் மருத்த கூறும் பாடல் இதோ.

சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோடஏப்பம் மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் வாலகப
தோடமதி சார்த்தொடர் வாத குன்மநீர்த்
தோடமஆ மம்போக்குஞ் சுக்கு

இப்போது புரிந்து இருக்கு ஏன் இத்தனை நோய்களுக்கான் பீடிகை என்று. மனிதனின் உள நோயைப் போக்கும் அறநூல் திரிகடுகம்.திரிகடுகம் என்பது மூன்று காரமான மருந்துப் பொருள்கள். சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் உடல் நோயைப் போக்கும் குணம் கொண்டவை என்றாலும் இம்மூன்றினுள்ளும்
முதலிடம் பிடித்துள்ளது சுக்கே.

இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல். (Zingiber officinale). நாகரம், விசுமஞ்சுண்டி, நல்லகோடதரம், வேர்க்கொம்பு, சீதரம், சிங்கிகம், மாதிசம், அலறகட்டி, தன்னப்பி, சவுண்டம், அருக்கன், அதகம், ஆர்த்ரகம், உபகுல்லம், உலர்ந்த இஞ்சி, கடுபத்திரம், சுண்டி, சொண்டி, செளவர்ணம், நவசுறு என்று பல பெயர்களில் தமிழ் நூல்களில்
வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பு. சுக்கு புற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு என்பார்கள். சுக்கின் தோலில் நஞ்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இஞ்சியைச் சமையலுக்குப்
பயன் படுத்தும் போது தோல் எடுத்த பின்பே பயன்படுத்துவோம். ஆமாம் இஞ்சியில் இருந்து தோலை உரித்து விடலாம். சுக்கில் இருந்து எப்படி என்று கேட்பது புரிகிறது. கல்லில் இருந்தே நாரை உரிப்பவர்கள் இருக்கிறார்களே! சுக்கிலிருந்து முடியாதா? கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். அதுசரி..இதையும் நானேதான் கூற வேண்டுமா? சுக்கைச் சிறிதளவு தட்டிவிட்டு மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிய பின்பு சல்லடையில் போட்டுச் சலித்தால் தோல் எல்லாம் மேலே நின்று விடும்.

சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சக்தி சுக்குக்கு உண்டு சுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது. இதன் மூலம் சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் இரண்டையும் கட்டுப்படுத்தும் குணம் சுக்குக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.

மாரல்:
நீர் நிறைந்த இந்த உடலை வெங்காயம் என்பது சித்தர் பாணி. இந்த வெற்று உடலைச் சுக்காக்குவது அவர்களுக்குக் கை வந்த கலை. நாமும் சுக்கை நாள் தோறும் பயன் படுத்தி வந்தால் சித்தர் பேணுவது போல நம் உடலும் சுக்காக சிக்கென இருக்கும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... இத்தனை நோய்களுக்கு மருந்தாக இருக்கும் சுக்கை நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தாமல் இருக்கலாமா? யோசிங்க..... திரும்பவும் வரேன் வேற மருந்துப் பொருளோட... இப்ப.. வரட்டா....




நன்றி குமுதம் ஹெல்த்.



29 கருத்துகள்:

  1. சுக்கைப் பற்றி சிக்குன்னு சொல்லியிருக்கீங்க.. நல்லா இருக்கு... அவ்வையார் பாட்டும் அதற்கடுத்த அந்த தொந்தி வளர் பாடலும் அருமை. ஆமா அந்த தொந்தி பாட்டு எழுதினது யாருங்க?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  2. "சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை.." தானே.. முன்னாடி "வெங்கட" ஒன்னும் போடலியே... ஹி... ஹி..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள் நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி RVS அவர்களே. அந்தக் கவிதை ஒரு புத்தகத்தில் படித்ததுதான். அங்கு பெயர் இல்லாததால் குறிப்பிட முடியவில்லை.

    தங்களின் இரண்டாவது கேள்வி எனக்குப் புரியவில்லை.யார் வெங்கட்? பிளீஸ் புரியும்படி சொல்லுங்க

    காலடி பதிந்தமைக்கு, கருத்து பதிந்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி மோகன் ஜி.

    பதிலளிநீக்கு
  5. என்றும் போல இன்றும் வந்து கருத்துக் கூறிச் சென்றுள்ள ரியாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய வலையில் இடது பக்கம் "அடியேன்.." என்ற இடத்தில் "அப்பா அம்மா வைத்த பெயர்" அருகில் பார்த்தால் புரியும் உங்களுக்கு..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  7. அதிரா சித்த வைத்தியர் இருக்க இனி நமக்கு கவலை இல்லை :) சுக்கு தகவல்கள் அருமை.. ஊருக்கு போனால் ஒரு வேளை சுக்கு காபி தவறாமல் இருக்கும்.

    எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்.
    அரை சாண் வயிறுக்கு உணவே பிரதானம் என்று ஒரு உணவு விடுதியில் போட்டு, புரோட்டா தட்டி அந்த பழமொழிக்கு எதிராக இருந்தார்கள்..

    ``பந்தியில்`` பாட்டு நிங்கள் எழுதியது தானே.
    உங்கள் பொறுமையான உடல் ஆரோக்கிய பதிவிற்க்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு வேளை சுக்குக் காபி தவறாமல் குடித்து வந்தால் உடல் சுக்காக இருக்கும் பத்மநாபன் அவ்ர்க்ளே
    பந்தியில் கவிதை நிச்சயமாக நான் எழுதியது இல்லை. புரோட்டா பற்றியும் வலைப்பூவில் ஒரு பதிவு இருக்கிறது!
    காலடிக்கும் கருத்தடிக்கும் உளத்தடியில் இருந்து வரும் நன்றி...பத்மநாபன்..அன்புடன்..

    பதிலளிநீக்கு
  9. //அப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்//
    பார்த்தேன்..முன்பும் பார்த்துள்ளேன்.சில நேரங்களில் பாத்தவை பதியாமல் போவதால் ஹீ ஹீ ஹீ மன்னிக்கவும்....

    பதிலளிநீக்கு
  10. ஸ்வாமி மன்னித்துவிட்டார்.. ஹி ஹி ஹி ....

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  11. ஆதிரா, உங்கள் பதிவை சற்று முன் தான் பார்த்தேன்.உங்கள் சுக்கு வைத்தியம் உபயோகமான தகவல்களுடன் இருந்தது.சில வருடங்களுக்கு முன் என் தலைவலிக்கு சுக்கரைத்து தலையில் பற்று போட்டார்கள். அப்போது அந்தக் கரைசல் கண்ணில் விழுந்து எரிச்சல் தாள இயலவில்லை.அடுத்த நாள் கடலூரில் ஒரு கவியரங்கத்துக்கு நடுவராய் அமர்ந்த போது,கவிஞர்களை கவிசொல்ல அழைத்த நேரம், என்னையறியாமல் நான் சொன்னது..."சுக்கரைத்து வைத்தது போல் சுறுசுருக்கும் கவியுரைப்பீர் !"

    பதிலளிநீக்கு
  12. ஸூஸ்ஸ்ப்பாடா....சாமி மன்னித்துவிட்டார்.. நிம்மதி...

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள மோகன்ஜி,
    இதெல்லாம் நாம் செய்ததுதான். ஆனால் இன்றைய தலைமுறைகள் எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் சென்றே பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள்.தங்கள் கவியரங்கக் கவிதைகளைக் காணும் ஆவலுடனும்...நன்றியுடனும்...

    தாங்கள் இட்ட பதிவில் கவிஞர் டாக்டர் செந்திலைப் பற்றி கூறியிருந்தீர்களே...இறையன்பு ஐ ஏ எஸ் அறிமுகப்படுத்திய அதே மென்மையான கவிஞர்தான். நான் அவரிடமும் கூறினேன். தங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் அவருக்கும் அவ்வளவாக நினைவில்லை. நன்றி மோகன்ஜி

    பதிலளிநீக்கு
  14. இப்பதிவு ஒரு ஏலாதி..!
    இத்தனையும் படித்துவிட்டு சுக்குத் தின்னாமல் இருப்பவர்களை.... என்றே சொல்லணும் :))
    கடும்பகல் சுக்கு.. நிறைய அர்த்தம்!

    மோகன்ஜி (நடுவர்) பாணியில் சொல்ல வேண்டுமானால்...
    சுக்கரைத்து வைத்தது போல் சுறுசுறுவென எழுதியிருக்கிறீர்கள்.
    ஜெகன்ஜி (ஹிஹி..!) ஷ்ஸ்டைலில் சொல்லணும்னா..
    குக்கருக்கு வச்ச விஸில் மாதிரி குதிச்சிருக்கீங்க :))
    வாழ்த்துக்கள்!

    பி.கு.:
    வலைப்பதிவு வடிவம் நன்றாக இருக்கிறது.
    இன்னும் நன்றாக உங்களுக்குப் பொருத்தமாக மாற்ற முடியும் என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  15. ஒரே கட்டுரையில் இத்தனை தகவல்களா?
    ரொம்ப நன்றிங்க!
    இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல்!

    ”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
    இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
    ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
    - என்வயிறே
    உன்னோடு வாழ்தல் அரிது.”

    பதிலளிநீக்கு
  16. தங்கள் பாராட்டில் மனம் காற்றாய் பறக்க...மிக்க நன்றி ஆதிரன்..உங்கள் வலைப்பூவைக் கண்டு பிரமிப்புடன்....அந்த நடையில்...

    பதிலளிநீக்கு
  17. எல்லா ஸ்டைலிலும் தங்களால் பின்னூட்டம் முன்னூட்டம் எல்லாம் இட முடியும் என்பது நான் அறியாததா ஜெகன் ஜி? அதனால்தானே தங்கள் மேலான கருத்துரைக்குக் காத்திருக்கிறோம் குருஜி. குட்டுப்பாட்டாலும் மோதிரக்கையால் (மோதிரம் இருக்குல்ல கையில்) குட்டுப்படுவது சுகமே.. நீங்கதான் குட்டத் தயாரா இல்லையே.

    அழைப்பை ஏற்று ஓடி வந்து என் தோட்டத்தைக் கண்டுகிட்டதுக்கு நன்றி ஜி.

    பி. கு. க்கு மிக்க நன்றி ஜெகன் ஜி. இன்னும் பொருத்தமாக மாற்ற ஏதேனும் குளூ கொடுத்தால் முயற்சி செய்கிறேன். மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி அந்நியப் படுத்த விரும்ப வில்லை..அன்புடன்..

    பதிலளிநீக்கு
  18. ஒளவையை ரசிப்பவர்கள் எல்லோரும் ர்சிக்கும் ஒரு அழகான பாடல் இது. தாங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி அண்ணாமலை அவர்களே..

    வருகை புரிந்தமைக்கு, வாழ்த்து பகர்ந்தமைக்கு, வலைப்பூவைத் தொடந்து வருவதற்கு இனிய நன்றியும் அன்பும்...அண்ணாமலை.

    பதிலளிநீக்கு
  19. ஆதிரா தமிழ் உங்களுக்கு தண்ணி பட்ட பாடு போல
    இஞ்சி சுக்கு ம்ம்ம்
    பட் காரம் அடிக்குமே..

    பதிலளிநீக்கு
  20. எந்தத் தண்ணீ ரோஸ்?
    காரம் தானே அதிகம் சாப்பிட முடியும்.. இனிப்பு திகட்டி விடுமே...
    வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ரோஸ்..தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..மீண்டும் தங்கள் வருகையை எதிர்பார்த்து....என்றும்...

    பதிலளிநீக்கு
  21. நல்ல தகவல்கள் தொடர்ந்து எழுதுங்க

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. அதிரா என் முதல் வருகை உங்கள் வலைபூவில்.
    நல்ல உபயோகமான தகவல். சுக்கு நல்ல மருத்துவ குணம் வாந்ததது என்று எல்லா நாட்டிலும், அதை எதிலாவது ஒன்றை சேர்த்து சமைக்கிறார்கள்.

    ஆனால் தலைவலிக்கும் ஜீரனதுக்கும் நானும் என் அம்மாவும் அடிக்கடி உபயோகிப்பதுண்டு.

    மீண்டும் மீண்டும் வருகிறேன்.

    www.vijisvegkitchen.blogspot.com

    பதிலளிநீக்கு
  23. முதல் முறையாகப் பாதம் பதித்துள்ளீர்கள்..இந்தத் தடங்கள் இன்னும் இன்னும் பதிய வேண்டிடும். பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  24. அன்பு விஜி,
    முதன் முறை என் இல்லத்திறகு வருகை தந்துள்ளீர்கள். தங்களுக்குக் காரத்தைக் கொடுத்து வரவேற்று விட்டேனோ? இது நோயைப் போக்கும் காரம் என்பதாலே கொடுத்தேன். விருந்தினரின் உடல் நலம் காப்பதும் நம் கடமையல்லவா? அதனால் தாங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள்.

    நான் தங்கள் வலைப்பூவைப் பார்த்திருக்கிறேன். பதிவும் இட்டுள்ளேன். தங்கள் முதல் வரவுக்கு நன்றியும் மீண்டும் மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கியும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
  25. உடலுக்கு வைத்தியம் உள்ளத்துக்கு இன்ப தமிழ் இது ஆதிரா ஸ்பெஸல்.

    பதிலளிநீக்கு
  26. உடலும் உள்ளமும் நலம் பெறுவதே எம் நோக்கம் நூருல். தொடர் வருகைக்கு, வார்த்தைகளால் வசப்படுத்தி வழிநடத்துவதற்கு மிக்க நன்றி நூருல்.

    பதிலளிநீக்கு
  27. நமது உணவிலேயே சின்ன சின்ன மாற்றங்களுடன் ஆரோக்கியமாய் வாழமுடியும் என்று புரிய வைக்கிற பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள ரிஷபன்.
    முதல் முறை பாதம் பதித்துள்ளீர்கள். தங்கள் பாதச்சுவடு தொடர்ந்து இக்குடிலில் பதிய வேண்டும் என்ற ஆவலுடன் தங்கள் காலடிக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றியும் அன்பும்...

    பதிலளிநீக்கு