“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 26 டிசம்பர், 2011

அடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSxKH2kfAAWa45xoN48BCaQLQSBYkxgI7MlmClXtAAJ9cxaePEyZ1lH0yZhsw

தொலைக்காட்சியில் திடீரென இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சித் தொகுப்பு. ஏ.டி.எம்.களில் காவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று. நள்ளிரவு வந்த ரோந்தில் ஒரு ஏ.டி.எம் மையத்திலும் காவலர்கள் காவல் பணியில் இல்லை. ஒருவர் தம் அடிக்கச் சென்று, ஒருவர் தண்ணீர் அடித்து விட்டு, ஒருவர் எங்கோ சென்று, ஒருவர் பக்கத்தில் உள்ள கடையில் உறக்கம், ஒருவர் அங்கேயே உறக்கம் அவரைக் கிட்டத்தட்ட மிதித்துச் சென்றதும் தெரியாமல் இவ்வாறு சென்னையின் சற்றேறக்குறைய இருபது முப்பது முக்கிய பகுதிகளில் உள்ள ஏ.டிஎம் மையங்களின் காட்சிகளைக் கண்ணாறக் கண்டு களித்தோம்.  அதை மறந்திருக்க மாட்டோம்.

இந்தச் சோதனைக்கு என்ன காரணம் என்றால் தற்போது நவீனத் திருட்டுகளில் ஏடிஎம் திருட்டு முதலிடம் பிடித்துள்ளது. நாம் வங்கிக்குச் சென்று, விண்ணப்பப் படிவம் பெற்று அதைத் தப்பும் தவறுமாக நிரப்பி அதில் எழுத்து கண்ணுக்கே தெரியாத அளவுக்குச் சிறியதாக இருப்பதால் குத்து மதிப்பாகப் பூர்த்தி செய்து கொடுத்து, அதைப் பார்த்ததும் வங்கி அலுவலர் கடுப்புடன்  “என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள் வேறு படிவத்தில் எழுதித் தாருங்கள் என்று முறைக்க, இந்த ஸ்லிப்பைப் பிரிண்ட் செய்தவன் என் கையில் கிடைத்தால் அவன் செத்தான் என்று மனதிற்குள் திட்டிகொண்டே பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது கெஞ்சி மீண்டும் பூர்த்தி செய்து, வங்கியில் இருந்து நம் பணத்தை எடுக்க நாம் அவதிப்பட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது ஏதோ கார்டைச் செறுகினோம் பின் நம்பரை அழுத்தினோம், பணத்தை எடுத்தோம், இது எவ்வளவு சுலபமாக உள்ளது என்று எண்ணி வியந்து கொண்டிருக்கையில் நம் கணக்கில் இருந்து நம் பின் நம்பரை அழுத்திப் நம் பணத்தைத் திருடுவது கொள்ளையர்களுக்கும் மிகச் சுலபமாக இருக்கிறதாம், இது மட்டுமல்ல ஏடிஎம் மெஷினையே திருடுவது வீட்டின் பூட்டை உடைத்துத் திருடுவது, வங்கிக் கொள்ளை முதலிய எல்லாவற்றையும் விட எளிமையாக இருக்கிறது என்கின்றனர் கொள்ளையர்கள் தங்கள் நடவடிக்கை மூலம். ஆதாரம் பணத்தைத் பரிகொடுத்து நொந்தவர்கள் தந்த அறிக்கையே.

இந்த ஏ.டி.எம். கொள்ளையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு ஏ.டி.எம். இயந்திரம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

ஏ.டி.எம். இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரன். ஒருமுறை அவசரத்தேவைக்காகப் பணம் எடுக்கத் தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். அன்று வங்கி விடுமுறையாக இருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. உடனே தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கத் திட்டமிட்டார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்கினாராம். ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி (ஏ.டி.எம்) இயந்திரம், லண்டன் புறநகர் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967 ம் ஆண்டு ஜூன் 27 ம் தேதி நிறுவப்பட்டது.

இதுதான் உலகின் முதலாவது ஏடிஎம் இயந்திரமாகும். இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கினேன் என்றாராம்.

அப்போது ஆறு இலக்க குறியெண்ணை உருவாக்கிய ஷெப்பர்ட் தன் மனைவி நான்கு இலக்க எண்ணைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள இயலும் என்று கூறியதன் அடிப்படையில் நான்கு இலக்க எண்ணை உருவாக்கினாராம்.

நம் ஏ.டி.எம் அட்டையின் அடையாளமாகப் பதினாறு இலக்க எண்கள் அமைந்திருக்கும். இதில் முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியின் அட்டை என்பதையும் அடுத்த ஒன்பது எண்கள் எந்ததெந்த சேவைக்குரியது அந்த அட்டை என்பதை முடிவு செய்யும் எண்களாகவும் கடைசி ஒரு எண் அட்டை பயன்படுத்தக் கூடியதா பயன்படுத்த இயலாததா என்பதைக் குறிக்கும். எகார்டு ஐந்து என்னும் இலக்கத்திலும் டெபிட் கார்டு நான்கு என்னும் இலக்கத்திலும் தொடங்கும்.


இப்போது நம் கணக்குள்ள வங்கி தவிர மற்ற எந்த வங்கி ஏ.டி.எம்.லும் நாம் பணம் பெறலாம். இதற்குச் செட்டில்மெண்ட் என்று பெயர். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் எந்த வங்கிக்குப் பணம் சேர வேண்டுமோ அந்த வங்கியின் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அந்தந்த வங்கிக்குச் சேர வேண்டிய கணக்கைச் சரி பார்த்துச் சேர்ப்பது சுவிட்ச் எனப்படும் ஒரு மென்பொருளின் வேலை. இதனால் இந்த மென்பொருள் நிறுவனத்திற்கு என்ன பயன் என்றால் நாம் ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன் படுத்தும்  ஒவ்வொரு முறைக்கும் சுவிட்ச் என்னும் மென்பொருளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகை இம்மென்பொருள் நிறுவனத்திற்கு  வங்கிகளால் கொடுக்கப் படுகிறது.


சென்னையில் உள்ள கனரா வங்கி,  எச்.டி.எஃப்.சி வங்கி,  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. போன்ற சில வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின்களில் கடந்த சில நாட்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி! அவர்களின் வங்கிக் கணக்குகளில் கொத்துக் கொத்தாகப் பணம் காணாமல் போயிருப் பதைப் பார்த்துத் திடுக்கிட்டனர். உடனே பதறியபடி வங்கிகளுக்கு ஓடினர். வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் படையெடுத்தனர்.

சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இருந்து மட்டும் கொள்ளை போனதாகச் செப்டம்பர் மாதம் சுமார் 65 புகார்களும் அக்டோபர் மாதம் சுமார் அறுபது புகார்களும் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களி சுமார் 150 க்கும் மேற்பட்ட புகார்கள், கொள்ளை போன தொகை சுமார் 2 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

சரி எப்படி கொள்ளை போகிறது? என்ன நுனுக்கத்தில் இக்கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன என்று நாம் அறிந்து கொள்ள வெண்டாமா?

இதற்கெல்லாம் சூத்திரதாரி சீனாவே. சீனாவில் தயாராகும் ஸ்கிம்மர் என்னும் கருவி ஒன்றே இப்பெரிய திருட்டுக்கு உதவியாக உள்ளது. இதன் விலை 25 ஆயிரம் ரூபாய். இது ஒரு ஸ்டிக்கர் போன்ற கருவி. யாருக்கும் தெரியாமல் இதனை ஏ.டி.எம் மெஷினில் உள்ள கார்டு ரீடரில் (Card Reader) அதாவது நாம் கார்டை நுழைக்கும் இடத்தில் பொருத்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர் பணத்தி எடுக்க கார்டை நுழைக்கும்போது அக்கார்டு ஸ்கிம்மரைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். அப்போது அந்த ஸ்கிம்மரில் வாடிக்கயாளரின் கார்டில் உள்ள பதிவு எண் பின் எண் எல்லாம் அதில் பதிவாகிவிடும். அதனை எடுத்து சி.டி ரைடர் போன்ற மெஷின் மூலம் ஏ.டி.எம். கார்டு குறித்த எல்லாத் தகவல்களையும் பதிவு செய்து கொள்வார்களாம். இந்த மெஷினின் பெயர் என்கோடர். இந்த நவீன கொள்ளையர்களுக்கு ஒரு என்கெளண்டர் வைத்தால் நல்லது என்று தோன்றுகிறதா?

இது தவிர கீஹோல் கேமராவை ஏ.டி.எம் மையத்தில் அதாவது பின் எண் அழுத்தும் போது படம் பிடிக்கும் வகையில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் பொறுத்தி விடுவார்களாம். அதன் மூலம் நம் பின் நம்பரைத் தெரிந்து கொள்கிறார்கள். பின்னர் இருக்கவே இருக்கு ஸ்கிம்மர் கொடுத்த தகவல் அடிப்படையில் தயாரித்த போலி கார்டுகள். இதற்கு மேல் என்ன வேண்டும் உங்கள் பணத்தைக் கொள்ளையர்கள் லபக்க

உங்களைப் போல எனக்கும் ஒரே ஒரு கேள்வி? இப்போது எல்லா ஏ.டி.எம் மையங்களிலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இந்தக் கேமராவுக்கு என்னதான் வேலை. இப்பணிகளையெல்லாம் செய்யும் போது அந்தக் கொள்ளையர்களைப் படம் பிடிக்காது இந்தக் கேமரா என்ன செய்து கொண்டிருக்கும். ஒரு வேளை கொள்ளையர்கள் தங்கள் பணியைத் துவங்கும்  முன் கேமராவின் கண்களைக் கருப்புத் துணியால் கட்டி விட்டுத் தொடங்குவார்களோ!! ஒன்னுமே புரியலை.

சரி, இதற்கெல்லாம் காரணமான சிறு(திருட்டு)தொழில் பண்ணை நடத்தும் சீனாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

அதைச் சிந்தித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னர் நம் பணத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாமே.

நம் மின்னஞ்சலை யார் முன்பாவது திறக்க நேர்ந்தால் என்ன செய்வோம். அவர்களுக்கு நம் குறிச்சொல் தெரிந்திருக்குமோ என்னும் ஐயத்தில் குறிச்சொல்லை மாற்றி விடுவோம் அல்லவா? கடிதங்களைப் பரிமாற்றிக்கொள்ளும் மின்னஞ்சலுக்கே இத்தனை பாதுகாப்புச் செய்யும் நாம்ன் கடினமாக உழைத்து எதிர்காலத்திற்கான முலதனத்தைச் சேமித்து வைத்திருக்கும் நம் சொந்தக் கருவூலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும். மின்னஞ்சலின் குறிச்சொல்லை அடிக்கடி மாற்றுவது போல ஏ.டி.எம். கார்டின் குறியெண்ணை (பின் நம்பரை) அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியே நம்பரை மாற்றிவிட்டாலும் மெஷினில் எண்ணைப் பதிவு செய்யும் போது மெஷின் பக்கமாகச் சற்று குனிந்து நீங்கள் பதிவு செய்யும் எண் எந்தக் கேமராவிலும் பதிவாகதவாறு தலையால் மறைத்துக் கொள்ளுங்கள்.

வேற்று நபர் உள்ளே இருக்கும் போது நீங்கள் ஏ.டி.எம். மைப் பயன் படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஏ.டி.எம். மையத்தில் ஏதாவது வழக்கத்திற்கு மாறான பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்கவும். அப்படி ஏதாவது தென்பட்டால் ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்த்து விடவும்.

         யாராவது மிரட்டி உங்களை பணம் எடுத்து கொடுக்க சொன்னால் உங்கள் பின் கோட் தலைகீழாக டைப் பண்ணுங்கள் .. பணம் கொடுக்கும் ஆனால் உடனடியாக இரண்டாவது முறை உபயோக படுத்த முடியாமல் உங்கள் கணக்கு மூடப்படும்


ஏ,டி.எம். கார்டின் பின்புறம் குறிப்பிட்டுள்ள வங்கியின் எண்ணில் அழைத்து குறிப்பிட்ட வங்கிக்கோ அல்லது காவல் துறைக்கோ அது குறித்த தகவலைக் கொடுப்பது ஒரு சிறந்த சமுதாயச் சேவையும் ஆகும்

நீங்கள் பணம் எடுக்காமல் இருக்கும் போதே உங்கள் பணம் குறைந்து இருந்தால் அல்லது களவாடப் பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்குப் புகார் கொடுக்கலாம். தொலைபேசி எண் 2345 2317. இது சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களின் திருட்டு தொடர்பாகப் புகார் கொடுக்க மட்டும். இது போல பிற பகுதிகளிலும் இயங்கும். போலிஸ் கமிஷனர் அலுவகங்களில் கேட்டு தகவல்களை அறிந்து கொள்வது உங்கள் வளமான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கு நல்லது.

கொசுறாக ஒரு சுவையான செய்தி. ஏ.டி.எம். கார்டைப் போட்டால் பணத்தை எடுக்கலாம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பணத்தைப் போட்டால் தங்கத்தை எடுக்கலாம் என்பது பலர் அறியாதது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் என்னும் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற உணவகம் ஒன்றில் தங்கம் கொடுக்கு ஏ.டி.எம். ஒன்று முதன் முதலில் நிறுப்பட்டது. இதனை நிறுவியவர் தாமஸ் ஜிஸ்லர் என்பவர்.

மேலே கூறிய இயந்திரம் தங்கம் மட்டும் கொடுக்கும். இந்தியாவில் தங்கத்தையும் வைரத்தையும் நகைகளாகவே மாற்றித் தரும் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டு விட்டது என்பது கொசுறாகக் கொடுக்கும் செய்தியிலும் பெருமையான செய்தி. மும்பையில் கீதாஞ்சலி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இதில் முப்பத்தாறு வகையான ஆபரணங்களைப் பெறலாம். வேவ்வேறு வகையான நகைகளைப் பெற குறைந்த பட்சம் 1000 உரூபாயும் அதிகபட்சமாக 30,000 உரூபாயும் இருந்தால் போதுமானது.

இன்னொரு பயங்கரமான கொசுறு. ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தவுடன் பணமும் வரவில்லை, தங்கமும் வரவில்லை. அந்த இயந்திரத்தில் இருந்து பாம்பு வந்துள்ளது. சத்தியாமாங்க. இங்க இல்ல. ஸ்பெயின் நாட்டில்.

அப்பப்பா ஏ.டி.எம் பற்றி இன்னும் சுவையான செய்திகள் பல.. ஆனால் பக்கங்கள் போதா.. அதனால் இத்துடன் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்..இக்கட்டுரை ஜனவரி மாத சோழநாடு இதழில் வெளியானது.  நன்றி சோழநாடு.