“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

உள் நின்று உடற்றும் பசி.......



கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்

ஏதோ வைவது போல இருக்கிறதா? ஆம் நாகைக்காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் வழிப்போக்கர்க்களுக்கு சோறு ஆக்குவதற்கு அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இடும்போதே நடுச்சாமம் ஆகிவிடும். சாமத்தில்
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று
, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை. ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).

காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையிலஇடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கிவிடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.

மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.

தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பார்உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்துகண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும்
மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள்
நின்று உடற்றும் பசி
என்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசிஎன்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.

பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில்
அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை.


இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு பசிப்பிணி மருத்துவன் என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.

இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.

பசித்தவர்களுக்கு உணவிட்டு டாக்டர் பட்டம் பெறுவது என்பது அந்தக் காலத்தில் சாதாரனமாக இருந்திருக்கிறது. இப்போது முடியுமா?
இந்திர லோகத்து அமிர்தமே கிடைத்தாலும் இனிமையானது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் நம் முன்னோர்கள். தமிழர்களின் கலாச்சாரச் சிறப்பே பசித்தவர்களுக்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே. இதனை,

“பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது


என்று கூறும் தமிழ் மறை. அதாவது தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம். பசி என்பது பொது நோய். இது உயிர்கள் யாவற்றையும் பற்றியிருப்பது. உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.

பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. பழைய இலக்கியங்களில் பசியை, நோய் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், மணிமேகலை வரை பசியைப் பிணி அதாவது பசிப்பிணி என்றே குறித்துள்ளன.
எல்லா இலக்கியங்களும் பசியைப்
பிணி என்று ஏன் குறிப்பிடுகின்றன. ஆராய்ந்து பார்த்தால் நோய்என்ற சொல்லுக்கும் பிணிஎன்ற சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது நம் உடலை நொய்ந்து போகச்செய்வது. அரிசியின் குருகிய வடிவத்தை நொய் என்பது என்பர். நொய்- நொய்தல் இதுவே நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் விருந்தாளி போன்றது. அவ்வப்போது வரும் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே.

ஆனால் பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலைப் பிணித்துக் கொண்டிருப்பது. ஜென்மத்தில் பிடித்தது சாகும் வரை விடாது
என்பார்களே. அது இதைத்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? தொடர்ந்து தொப்புள்கொடி வழியாகச் சென்று கொண்டிருந்த உணவு வெளியில் வந்தவுடன் ஒரு சில மணி நேரங்கள் தடை படுகிறது. உடனே குழந்தை பசியால் அழுகிறது. கருவில் உண்டான பசி இறப்பு வரை தொடர்ந்து உயிர்களைப் பிணித்துக் கொண்டிருப்பதால் பசியைப் பிணி என்று கூறினர். அது மட்டுமல்ல பசியைப் ‘பாவி
என்றுரைக்கும் மணிமேகலை.

குடிப் பிறப்பு அறுக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிகைக்கும்
பூண் முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்

என்று பசிப்பிணியைப் பாவி என்றும், அப்பசிக்கொடுமையால் விளையும் துன்பங்களையும் பட்டியல் இடும் மணிமேகலை. அது உண்மைதானே. உடல் நோய்க்கு மட்டுமல்ல, இன்று பல நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறவும் காரணமாக இருப்பது இந்தப் பசி என்ற பாவிதானே.

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
என்று பாடியவன் பாரதி. அவன் அனுபவித்த பசிக்கொடுமைதான் மகாக்கவியாகிய அவனையே,
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்று ஒரு போராளியைப் போல
குரல் கொடுக்க வைத்தது. கவிஞனுக்கும் வயிறு உண்டல்லவா?

இந்தப் பசிக்கொடுமையால் இன்று ஒரு நாடே
அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. சோமாலியா என்றால் அனைவர் நினைவிலும் பதிந்துள்ள காட்சி, விழிகள் குழிவெய்தி, மண்டை பெருத்து, உடல் சுருங்கிய அந்தக் குழந்தைகளின் உருவங்கள்தானே.

மருந்து என்றால் என்ன? உடல் நோய்களைத்
தடுப்பது; உள நோய்களைத் தடுப்பது; நோய் வராமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது. இதைத் திருமூலர் வாக்கால் கேட்க வேண்டுமா?

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தென லாகும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்

உடல், உள்ள நோய்களைப் போக்கி உயிரைக் காப்பது உணவாகிய மருந்து. அதனால் தான் உடல் நோய்க்கு மருந்து கூற வந்த திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் உணவைப்பற்றிப் பேசுகிறார்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

என்று உணவு வழங்கி அப்பசியைப் போக்குபவரை தவ முனிவர்களை
விடவும் மேலானவர்கள் என்பார்.

மணிமேகலையைக் காற்றோட்டமில்லாத ஒரு அறையில் (புழுக்கறை) அடைத்து பட்டினி போட்டாளாம் உதயகுமாரனுடைய தாய். மணிமேகலைக்குப் பல மந்திரங்கள் தெரியுமாம். அதில் ஒன்று பசி ஒழிக்கும் மந்திரம். அப்போது அவள் அந்த மந்திரத்தை ஓதி உடல் வாடாது மகிழ்ச்சியாக இருந்தாளாம். இந்த மந்திரம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால்.........!!!!!!!!!!!!!! என்ன....??

நாம் செய்கின்ற ஒன்றிரண்டு வேலைகளையும் செய்ய மாட்டோம்.
உழைப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்.

மாரல்: பசியைப் பற்றி இலக்கியங்கள் கூறும் சான்றுகள் இருக்கட்டும். ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் நாமும் தான் பாடுவோம் பசிப்பாட்டு, பசித்தொகை, பசிப்புராணம் எல்லாம். அதனால் எவரும் பசித்திருக்க நாம் பார்த்திருக்கக் கூடாது. புசித்திருக்கச் செய்வோம். நாமும் புசிப்போம். இதன் தொடர்ச்சியைப் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.. இப்போது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்’-- வாருங்கள்.




நன்றி குமுதம் ஹெல்த்.

















5 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் லேட்டாதான் படித்தேன் சோதரி.ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.இனி அவ்வப்போது உங்கள் வலையை மேய்வதாகத்தான் உத்தேசம்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஒரு வேளையை முதலில் செய்யுங்கள் ஆதிரா.தொகுத்து ஒரு நூலாக்குங்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி மோகன்ஜி அவர்க்ளே.. லேட்டாகப் படித்தாலும் மிக ரசனையுடன் படித்துள்ளீர்கள்.
    //இனி அவ்வப்போது உங்கள் வலையை மேய்வதாகத்தான் உத்தேசம்// என்று கூறியுள்ளீர்கள். தங்களின் மேய்ச்சலுக்காக இன்னும் பசும்புற்கள் பயிர் செய்யப்படும் இத்தோட்டக்காரரால்..என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. பதித்த தங்கள் முதல் பாதச்சுவடுக்கு மிக்க நன்றி... மோகன்ஜி

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள எட்வின் அவர்களே,
    தங்களின் அன்புக்கட்டளையைத் தலைமேற்கொள்வேன்..தங்களின் உதவியுடன் இப்பணி நிறைவெற வேண்டும் என்பது என் அவா. வருகைக்கும் தங்களின் அன்பான் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு