“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 27 ஜூலை, 2010

அவன் பெயர் ரவிவர்மன்.....(சிறுகதை)


அவன் பெயர் ரவிவர்மன்....(சிறுகதை)

     வான்மதி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில் ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள் கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச் சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால  இன்பத்தை எண்ணீத்துடிக்கும் மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால் தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.

     இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல் இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலக்கூடத்தில் இளங்கோவடிகள், ஊர் முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப் போல அவன்தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் பச் சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள் நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத் தன் கண்களுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

     இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, தமிழரின் முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில் முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக் கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால் ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு  கண்களையும் இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.

           அச்சத்திலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த உதயாவின் முகத்தை அலைகளின் ஓசை ஆரவாரமாக அவள் காதில் ஒலித்தது. இரண்டாவது முறை பூம்புகார் போனபோது அவளுக்கும் ஆதவனுக்கும் ஏற்பட்ட ஊடல் காட்சி நிழலாடுகிறது அள் கண்களில். அலையின் ஓசை, மக்கள் கூட்டம், பேச்சு சத்தம் இவற்றினிடையில் காதலர்கள் ஒரு கட்டுப்பாடின்றி நடந்து கொண்ட முறை, அதனைக் கண்டு தான் அறுவறுப்பு அடைந்து கோபத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றது, அவன் பார்வை அங்கு சென்றுவிடாமல் அவனைத்திருப்பி அழைத்து வந்தது, ஏன் தான் இளைஞர்கள் இப்படி நாகரிகமின்றி நடந்து கொள்கிறார்களோ என்று புலம்பிய போது, அவன் நீ மட்டும் பார்த்துட்டே அந்தக் காட்சியை நான் பார்க்க வேண்டாமா? என்று போவது போல அடியெடுத்து வைக்க, பளார் என்று அவன் முதுகில் ஒரு அடிகொடுத்து அவனை இழுத்து வந்தது, பின்பு இவ்வளவு அழகான இடத்தின் அழகை இவர்கள் கெடுக்கிறார்களே என்று இருவரும் வருத்தப்பட்டது, முதல் வேலையாக பத்திரிகையில் இதனைப்பற்றி எழுத வேண்டும் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தது என்று அலை அலையாக நினைவுகள் மேலெழ, கடலலையில்தான் இந்த நினைவலைகளைக் கரைக்க வேண்டும் என்று கடலை நிமிர்ந்து பார்த்த போது, தொலைவில் ஓர் உருவம் கடலுக்குள் அஞ்சி அஞ்சி இறங்குவது தெரிந்தது.

     இவள் இதயம் திக் திக் கென்று அடித்துக்கொண்டது. இன்னொரு தற்கொலையா? அது ஆணா பெண்ணா? எதுவும் தெரியவில்லையே. காப்பாற்றுவோமா? காப்பாற்ற நமக்கென்ன அறுகதை இருக்கிறது? நரக வேதனையில் வாழ்வது எத்தனை கடினமென்று அறியாதவள நான்? போகட்டும். நிம்மதியாகச் செத்துப் போகட்டும். என்ன துன்பமோ? வாழ்நாள் முழுவதும் துன்பப் படுவதைவிட, ஒரு பத்து நிமிட வேதனைதானே இது. என்ன? எமனின் உலகத்திற்கு என்னைவிட பத்து நிமிடம் சீனியராகச் செல்லப் போகிறார் என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு அம்ர்ந்தவளுக்கு, என் அலுவலகத்து நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் இரண்டு நாட்களாகவே நான் சாக வேண்டும், நான் சாக வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தான். நான் அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்று நினைத்தேன். இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஒரு தற்கொலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது ஆத்வன் வெடித்துச் சிதறியச் சொற்கள் அவள் காதில் மோதின.

     தற்கொலை எண்ணம் தோன்றுவதும், மறைவதும் ஒரு கணப்பொழுதில்தான். அதிக பட்சமாக அரைமணி நேரத்தில் எடுக்கும் முடிவுதான். அந்த நேரத்தில் அந்த எண்ணத்தை மாற்றி விட்டோமானால் அவர்கள் பின் எப்போதும் தற்கொலையை நினைத்து கூட பார்க்கமாட்டார்கள். வாழ்க்கையின் அழகையும், அவசியத்தையும், இறைவன் நம கையில் கொடுத்த வாழ்நாளை வாழ்ந்து முடிப்பது நம் கடன், என்பதையும் உணர வைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையை வாழ்வது மட்டுமன்றி, தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் வாழ்ந்து முடிப்பர். அது மட்டுமல்ல தற்கொலைக்கு முயல்கிறார் ஒருவர் என்பதறிந்து, அதனைத் தடுக்காமல் இருப்பது கொலை முயற்சிக்குச் சமமானது என்றுதான் நான் கூறுவேன் என்று கூறிய ஆதவனின் கோபக்கனல் வான்மதியின் வைராக்கியத்தைச் சாம்பலாக்க அவள் வேகமாக எழுந்து ஓடுகிறாள்.

     ஏங்க!! ஏங்க!! யாருங்க அது? நில்லுங்க.. என்று அலறியவுடன் இடுப்பளவு நீரில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த உருவம் நின்றது. அது அச்சமா? இவள் அழைத்ததாலோ? அந்த உருவம் லேசாகத் திரும்பிப் பார்த்ததில் அது பெண் என்று உறுதியானது. நானும் உங்களைப்போல சாகத்தான் வந்துள்ளேன்.. நில்லுங்க.. நானும் வருகிறேன் என்று உரக்கக் கூறிக்கொண்டே அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அலைகளினூடே மெதுவாக இழுத்து வந்து கரையை அடைந்தாள். கரையில் அமர்ந்து சாகத்துடித்த இரு இதயங்களும் உரையாடின.

அன்புடன் தன் இரு கரங்களிலில் ஏந்திக் கொண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் என்று சொல்லி முடிக்கும் முன்னே உதயாவின் கேவல் அதிகமாயின. சற்று நேரக் கேவலின் பின்பு பேசத்துவங்கினாள். நானும் என் கணவன் சுரேந்திரனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்தாறு முறை கரு உண்டாகி அபார்ஷன் ஆகிவிட்டது. எனக்கு யூட்ரஸ்  வீக்காக உள்ளதாம்.  அதனால் குழந்தை பெறும் பாக்கியம் எனக்கு இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். என் கணவர் நல்லவர் தான். என் மாமனார் மாமியார் இருவரும் எங்களுக்கு இருப்பதோ ஒரு வாரிசு, அந்த வாரிசுக்கு ஒரு வாரிசு இல்லையென்றால் இந்த தலைமுறை இவனோடு அற்று விடும் என்று புலம்புகின்றனர். என் கணவர் குழந்தை இல்லையென்றால் என்ன? எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையாக இருந்து விட்டுப் போகிறோம்என்று அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். அவர்களோ சமாதானம் ஆவதாக இல்லை. ஆனால் அவர்கள் என் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் நோக்கம் இருக்கும் போலத் தெரிகிறது. என் சுரேந்தரை இன்னொருத்திக்குத் தூக்கிக் கொடுத்து விட்டு............. என்னால்..........அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்........என்று வார்த்தையை முடிக்காமலே ஓஓஓஓஓ........ என்று அழ ஆரம்பித்தாள்...

     அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்மதிக்கு திருமணம் செய்து கொண்ட கையோடு நீ எனக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும். அதிலெல்லாம் தாமதமே இருக்கக் கூடாது. தம் பொருள் தம் மக்கள் னு திருவள்ளுவர் சொல்ர மாதிரி என் மனைவி, என் குழந்தைன்னு நான் பெருமையா சொல்லிட்டு வாழ வேண்டும். நான், நீ , நடுவுல நம்ம குழந்த, யோசிச்சுப் பாரேன்..வண்டியில போற காட்சி எவ்வளவு நல்லா இருக்குன்னு என்றெல்லாம் ஆதவன் ஆசைக் கோட்டைக் கட்டியது அவள் மனத்திரையில் ஓடியது. உடனே ஒரு மின்னல் அடித்தாற் போல உணர்ந்தாள். என் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு இது.. பயன் படுத்திக்கொள்என்று ஆதவன் கூறுவது போலத் தோன்றியது அவளுக்கு.

     மென்மையாக உதயாவின் தோளைத் தொட்டு நீங்கள் கவலைப் படாதீர்கள். எல்லாம் நல்ல படியாக முடியும். என்று கூறிவிட்டு உங்களுக்குக் கர்ப்பப்பைதானே வீக் என்று கூறினீர்கள்? மாதந்தோறும் கரு முட்டைகள் உரிய நாட்களில் உருவாகின்றனவா? என்று கேட்டாள் ஏதோ தெளிவு பெற்றவளாக.. உதயாவும் அதெல்லாம் நார்மலாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேல குழந்தையைத் தாங்கும் வலிமை மட்டும் என் கருப்பைக்கு இல்லையாம். என்றாள். நீங்கள் வாடகைத்தாய் மூலம்  உங்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதை கேள்விபட்டதில்லையா? இல்லை விரும்பவில்லையா? என்று கேட்டாள் வான்மதி. உதயா அதற்குப் புரிந்தும் புரியாததுமாகத் தலையை ஆட்டி என் கணவர் கூறினார். நான் தான் அதெல்லாம் சரிப்படுமா? என்று கேட்டு வேண்டாமென்று கூறிவிட்டேன் என்றாள். உடனே வான்மதி உங்கள் குழந்தையை நீங்கள் கைநிறைய எடுத்துக் கொஞ்சும் காலம் அருகில் வந்து விட்டது என்று நம்பிக்கையாகக் கூறினாள்.நீங்கள் என்ன சொல்றீஙக, அது நடக்குமா? என்று குழந்தை ஆசை கொண்ட ஒரு குழந்தையாகக் கேட்டாள் உதயா..கிளம்புங்க.,நான் பேசறேன் உங்க வீடல் என்று அவள் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக எழுந்தாள் வான்மதி.

     இருவரும் உதயாவின் வீட்டை அடைந்தனர். நடந்தவைகளை வான்மதியே உதயாவின் மாமனார் மாமியாரிடமும் சுரேந்திரனிடமும் எடுத்துக் கூறினார். சுரேந்திரனும் அவன் பெற்றோரும் நடந்ததைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். குழந்தை குறித்து சுரேந்திரனிடம் தனித்துப் பேச வேண்டும் என்பதால் அது குறித்து எதுவும் பேசவில்லை. அன்றிரவு வான்மதியும் உதயாவும் ஓர் அறையில் விடிய விடிய பேசிவிட்டு கண் அயர்ந்தனர். மறு நாள் புறப்பட்ட வான்மதி சுரேந்திரனிடம் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்என்றாள். அவளை வழியனுப்புவதாக வந்த சுரேந்திரனிடம், தான் குழந்தையைச் சுமந்து, பெற்றுத்த்ருவதாகக் கூறினாள். சில மணி நேரத்திற்குப் பிறகு அவனும் சம்மதித்தான். இருவரும் மீண்டும் வீடு திரும்பினர்.

     இது நல்ல முடிவு. இதைத்தானே நாங்கள் முன்னரே கூறினோம் என்றுரைத்து உடனடியாக ஏற்பாடு செய்கிறோம் என்றார் மகப்பேறு மருத்துவத்தில் பல சாதனைகளைப் புரிந்து வரும் டாக்டர் பூமா சுரேஷ்.

     உடனடியாக இருவருக்கும் எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன. மாதவிலக்கின் ஐந்தாம நாள் முதல் உதயாவுக்கு கருமுட்டையின் வளர் நிலை ஸ்கேன் செய்து கண்டறியப் பட்டது. கருவின் கூடுதல் வளர்ச்சிக்கு மருந்தும் இரண்டு மூன்று முறை ஊசிமூலம் கொடுக்கப்பட்டது. சரியாக பதினாறாம் நாள் கருமுட்டை நன்கு வளர்ந்து உடையும் தருவாயில் கருப்பையிலிருந்து கருமுட்டையைச் சோதனைக்குழாயில் சேமித்து, சுரேந்திரனின் விந்துவிலிருந்து விரைவாக நகரும் தனமையுடைய வீரிய விந்தணுக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கருமுட்டையுடன் இணைக்கப்பட்டது. சுரேந்திரன் உதயா தம்பதியினர் மகிழும் ஒரு நன்னாளில் வீரிய விந்தணு கருமுட்டையின் வெளிச்சுவரைக் கிழித்துக்கொண்டு முன்னேறி கருவுடன் இணைந்து உயிர்கொண்டது. உருவான உயிர்க்கரு வான்மதியின் கருப்பைக்குள் குடியேற்றப்பட்டது. இனி எந்தப் பொறுப்பும் உதயா சுரேந்திரனுக்கு இல்லை. முழுப்பொறுப்பும் வான்மதியின் வசம் வந்தடைந்தது. நாளொரு பரிசோதனை வான்மதியின் வயிற்றுக்கு நடந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழ்ந்தையும் வயிற்றில் வளர்ந்தது.
    
     இதனிடையில் வான்மதி யாரோ! எவளோ? அவள் குழந்தையைப் பெற்றுத்தர எவ்வளவு எதிர்ப்பார்ப்பாளோ?என்ற கவலை சுரேந்திரனின் பெற்றோருக்கு. எதிர் காலத்தில் குழந்தையின் மீது உரிமை கொண்டாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை சுரேந்திரனுக்கு.. வான்மதி கன்னிப்பெண். அவளுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலை உதயாவுக்கு. இத்தனை கவலைகளுக்கு இடையில் எந்தவிதக் கவலையுமில்லாமல் இருந்தாள் வான்மதி. அவளுக்கு ஆதவனின் ஆசையை நிறைவெற்றுவதில் மகிழ்ச்சி. “எப்போதும் உதயா வான்மதி அருகிலேயே இருப்பாள். உணவு, மருந்து, ஓய்வு எல்லாவற்றையும் அட்டவனைப்படி பார்த்துக்கொண்டாள் உதயா. வான்மதியைத் தனிமையிலேயே விடமாட்டாள். வான்மதிக்கு யாருமற்ற தனிமை கிடைத்துவிட்டால் போதும், ஆதவனிடம் குழந்தையைப்பற்றி வாய்விட்டுப் பேசிக்கொண்டு இருப்பது வழக்கமாகி விட்டது. குழந்தைக்காகப் பார்த்துப் பார்த்து உண்ணும்போது, ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்என்று கூறிக்கொண்டு ஏழைச்சிறுவர்களைக் கண்டால் ஆதவன் அவர்களுக்கு உதவிடும் இரக்கக் குணத்தை எண்ணுவாள். “உன் விருப்பம் போலவே நான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறேண்டாஎன்று வாய்விட்டு சொல்லிக்கொண்டாள். அன்றொரு நாள் அப்படித்தான் குழந்தை வயிற்றில் சோம்பல் முறிக்குமாம், கொட்டாவி விடுமாம், கால்களால் உதைக்குமாம். இவையெல்லாம் வயிற்றில் கை வைத்துப் பார்த்தால் தெரியுமாமே. கணவன்கள் எல்லாம் தங்கள் மனைவியின் வயிற்றில் கை வைத்துப் பார்த்து இதையெல்லாம் ரசிப்பார்களாம். இந்த அனுபவம் எனக்கு எப்ப கிடைக்கும்?என்று ஆதவன் கேட்டது நினைவு வர, வான்மதி தன் கைகளை வயிற்றில் “ஆதவா தெரியுதா? கொழந்தை ஒதக்கறது..இங்க கையை வச்சுப் பாரு..இங்கடாஎன்று சொல்லிக்கொண்டிருக்கும் போது உதயா வந்துவிட்டாள். வான்மதி எதை எதையோ சொல்லி மழுப்ப வேண்டியதாயிற்று.

     மாதங்கள் சென்றன. டாக்டர் பூமா குறிப்பிட்ட நாளில் மருத்துவமனை சென்றாள். அழகாக வெளியில் வந்தான் குட்டி சுரேந்திரன். உதயா, சுரேந்திரன் இருவரும் ஆனந்த வெள்ளத்தில் தள்ளாடினர். வான்மதியும் தான். “ஆதவா, எண்ணி பத்து  மாசத்துல கொழந்த வேணும்னு சொன்னியே, பார்த்த்க்கோடா.. நம்மளுதோ இல்லையோ. உன் வார்த்தையை நான் காப்பாத்திட்டேண்டா..என்று மனதுக்குள் பேசிக்கொண்டாள்.

     பத்துமாத ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது. இனி குழந்தைக்கும் வான்மதிக்கும் எந்த பந்தமும் இல்லை. வான்மதி வந்த வழியே போக வேண்டியவள். கிளம்பியும் விட்டாள்.

     என் உயிரையும் காப்பாற்றி எனக்கென்று ஒரு உயிரையும் பெற்றெடுத்துக் கொடுத்த நீ எங்களுடனே தங்க வேண்டும்..இது உன் அக்காவின் அன்புக்கட்டளை...அக்கா நான் உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்... என்று கூறினாள். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத வான்மதி நிதானமாக அமைதியான குரலில் “நெஞ்சில் ஆதவனைக் கணவனாகச் சுமந்து விட்டேன். அவன் ஆசையையும் உங்கள் தேவையையும் நிறைவேற்ற ஒரு குழந்தையையும் வயிற்றில் சுமந்து விட்டேன். இது ஒரு வகையில் அவனுக்குச் செய்த துரோகமாக இருக்கலாம். ஆனால் என் மனசாட்சி அவன் மனசாட்சி அவன் ஆசையை நிறைவேற்றி வைப்பதில் பாவமில்லை என்றுரைத்தது. அதன்படி நடந்தேன். ஆனால் இன்னொருவரை ஆதவன் இடத்தில் வைத்துப் பார்க்கக்கூட என் மனம் ஒப்பாது. என்னை தயவு செய்து வற்புறுத்தாது போக விடுங்கள்..என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

     நாங்கள் கொடுக்கும் சிறு கைம்மாறையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நோட்டுக் கட்டுக்கள் நிறைந்த பெட்டியை நீட்டினான் சுரேந்திரன். வான்மதி அதனையும் பெற மறுத்து விட்டாள். “நீங்கள் செய்த உதவிக்கு நாங்கள் என்று.. சுரேந்திரன் கூறும்போது இடை மறித்த வான்மதி ஒரு கணம் சிந்தித்தாள். ஆதவனும் அவளும் எதிர்கால வாழ்க்கையை எண்ணி உருகி உருகி காதலித்தவர்கள் மட்டுமல்ல. பல முடிவுகளையும் அப்போதே எடுத்தவன் அவன்.. அதற்கு அப்போதே தலை அசைத்தவன் அவள்.

      ஆதவன் கலைகளில் இலக்கியம், சிற்பம் போன்றவைகளைப் போலவே ஓவியத்தையும் ரசித்தவன். ஒரு முறை திருவனந்தபுரம் மியூசியம் சென்றிருந்த போது ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்துப் போனான். அங்கிருந்த ஓர் பெண் ஓவியத்தைக்காட்டி “என்ன கூர்மை அந்தப் பெண்ணின் பார்வையில். நாம் எங்கிருந்து பார்த்தாலும் அது நம்மையே பார்ப்பது போல தெரிகிறது பார். “இங்கு வந்து பார். இங்கு வந்து பார்என்று மாறி மாறி நின்று ரசித்தான். இதை வரைந்த கைகளுக்கு நாம் எதாவது பரிசு தர வேண்டுமே. நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரவிவர்மா என்று பெயர் பெயர் வைத்து விடுவோமே?என்று கூறிய ஆதவனின் முடிவை நினைத்துக் கொண்டே, சுரேந்திரனிடம், “எனக்கு நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால், உங்கள் குழந்தைக்கு விவர்மன் என்று பெயர் வைப்பீர்களா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள். சுரேந்திரன் மகிழ்ச்சியாகத் தலையாட்டி “நீங்களே உங்கள் வாயால் பெயர் வைத்துவிடுங்கள் என்றான். வான்மதி குழந்தையின் காதில் ரவிவர்மா, ரவிவர்மா ரவிவர்மா என்று மூன்று முறை அழைத்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து விட்டு கிளம்பினாள்..நம் குழந்தைக்கு ரவி வர்மா என்று பெயரும் வைத்து விட்டேன்...மற்றவற்றைப் பேச நேரில் வறேன் ஆதவா என்று மனதில் சொல்லிக்கொண்டே கடலை நோக்கி நடந்தாள்.....


ஆதிரா...


வியாழன், 22 ஜூலை, 2010

முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி....





முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி....

http://c1-preview.prosites.com/temp2b1agl455b/wy/images/Close%20Up%20Smile_edited-1.jpg

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்கள். எப்போது விடுமுறை விடும் என்று காத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகல்ளை அழ்காக  உருமாற்ற வேண்டி தம் குழந்தைகளுடன் மருத்துவ மனைகளுக்கு அலைய ஆரம்பித்து விடுவார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸுடன் பள்ளிக்கு வருவார்கள். அதில் இப்போது மிகப்பிரலமாகவும் அதிகமாகவும் மாணவர்களிடம் காணக்கிடைப்பது பற்களுக்கு வேலி போடுவது. நெல்லுக்கு வேலி போடலாம். அட சொல்லுக்கு வேலி போடலாம். அது எப்படி பல்லுக்கு வேலி என்று எண்ணுவது தெரிகிறது. அது ஒன்றும் இல்லை.. தோட்டத்துக்கு முல் கம்பி வேலி போல் இது பல் கம்பி வேலி.. பற்களுக்குக் கம்பி போடுவதுதான்.

வகை வகையா பற்பசைகளை விளம்பரங்களைப் பாத்து பயன்படுத்தினாலும் ஒரு பல் வெள்ளையாகவும் ஒரு பல் பழுப்பாகவும் இருக்கும் சில குழந்தைகளுக்கு. சீராக இருக்க வேண்டிய வெண் சிறுத்தைக் குட்டிகள் வாய்க்குகையில் வேறு வேறாகத் திரிந்தலைந்தால்....இப்படித்தான். ஏக்கத்துடன் ஏம்மா எனக்கு மட்டும் பல் இப்படி இருக்கு என்று கேட்கும் குழந்தைகள் இன்று பெருகி விட்டனர். அதே வேகத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களுக்குக் கம்பி  போடும் தாய்மார்களும் பெருகிவிட்டனர். 
   
http://www.weddingsmiles.co.za/images/YZ_bridge.jpg
 மரபு காரணமாகவோ குழந்தைப் பருவத்தில் அவை பழகிய விரல் சூப்புதல், நாக்கைத் துறுத்துதல், உதட்டைக் கடித்தல் போன்ற சில பழக்கங்கள் காரணமாகவோ, சில குழந்தைகள் மூக்கால் சுவாக்காமல் வாயால் சுவாசிப்பார்கள். இதன் காரணமாகவோ, இன்னும் சிலர் அடிக்கடி பின்னால அல்லது கிடைத்த கம்பிகளால் பற்களைக் குத்திக்கொண்டிருப்பர். இவற்றின் காரண்மாகவோ பற்கள் சீர்கெட்டு விடுவது உண்டு.

     இவ்வாறு சீர்கெட்டுப் போன பற்களைச் சீராக்கப்போடுவதே முன்னர் சொன்ன கம்பிவேலி. ஆர்த்தோ டாண்டிக் அப்ளையன்ஸ்’ (Orthodontic Appliances) என்று அழைக்கப்படும் இச்சிகிச்சை முறையைத் தமிழில் அழகாக பற்சீரமைப்புக் கம்பிகள் என்பர். பற்களைச் சீரமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கம்பிகளின் பெயர் அழகாக இருக்க வேண்டுமல்லவா!

     இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பி. (Removable Appliance) இரண்டு நிரந்தர பற்சீரமைப்புக் கம்பி (Fixed Appliance).

http://marketplace.dentalproductsreport.com/community/UserFiles/Ad-Photo-1817-1.jpg

இவற்றில் கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பியை அணிந்தவர் தாமே கமிபியைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று கம்பியின் தளர்ச்சியைச் சமன் செய்து கொள்ளவேண்டும். இம்முறையில் செலவு குறைவு. ஆனால் இம்முறை பற்கள் சிறிதளவு சீர்கெட்டு இருந்தால் மட்டுமே பயன்படும். அதிகமான கோணல் மாணல் என்றால் நிரந்தர பற்சீரமைப்பு முறையே பயனளிக்கும்.

http://www.archwired.com/images/Me_In_Retainers.jpg
 ஏனெனில், கழற்றி மாட்டும் முறையில் ஒற்றைக் கம்பி வேலி போல ஒரே கம்பி அத்தனைப் பற்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அடங்காத பற்களை அடக்க இந்த ஒற்றைக் கம்பியால் முடிவதில்லை.
 

http://www.prorthoassist.com/images/Brackets.JPG
நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியின் சிறப்பு:

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியில் ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு சின்ன வெள்ளி நிறத் தகடு பொருத்தப்பட்டு, அத்தகடுகள் அனைத்தையும் இணைத்தபடி ஒரு வெள்ளி நிறக்கம்பியும் பொருத்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு பல்லுக்கும் அதனை உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ தள்ளிச் சீராக்க எவ்வளவு அழுத்தம் தேவையோ அவ்வளவு அழுத்தம் தனித்தனியாகக் கொடுக்கப்படுவது இம்முறையின் முக்கிய சிறப்பம்சம்.

    இரண்டாவது சிறப்பம்சம் தாடையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சீர்கெட்டுள்ள பற்களைச் சீராக்கத் தாடையில் இடம் ஏற்படுத்தும் வண்ணம், வரிசைக்கு இரு பற்களாக மேலும் கீழும் நான்கு கடைவாயப் பற்களை எடுத்து, பற்களின் அழகான வரிசைக்குப் போதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். பற்கள் எடுத்த வெற்றிடம் தெரியாமல் பள்ளி மாணவர்களைப் போல பற்கள் வரிசையாக அமர்ந்து சீராகி விடுகிறது.

இம்முறையில் பற்கள் வரிசையாக நகர்ந்து அழகாகிவிடும் என்பது உறுதி. ஆனால் வயது, பற்களின் சீரற்ற தன்மைக்கேற்ப ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் இக்கம்பிகளை அணிவது அவசியமாகிறது. மேலும் நிரந்தர கம்பிகளைப் போட வேண்டுமாயின் பால்பற்கள் அனைத்தும் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்த பின்பே போட முடியும். சுமார் பதிமூன்று அல்லது பதிநான்கு வயதுக்கு மேல்தான் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இப்பருவம் இளைஞர்களின் மனதில் அழகுணர்ச்சி முளைவிடும் பருவம். அந்தக் கம்பி போட்ட பொண்ணு, கம்பி போட்ட பையன் என்று அடையாளம் சொல்வது அந்த இளம்  மனதைச் சங்கடப்படுத்தும். இதெல்லாம் சகஜம்பா வாழ்க்கையிலே என்று இருக்க வேண்டுவதும் அவசியமாகிறது. (வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது)

     அதுமட்டுமல்ல மாதமொரு முறை மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்பப்பா என்று பெருமூச்சி விடுவது கேட்கிறது. முத்துப்பல் வேண்டுமென்றால் சும்மாவா? இதையெல்லாம் விடவும் பெரிய விஷயம் ஒன்றுள்ளதே. அதற்குள்ள பெருமூச்சு விட்டால் எப்படி? செலவுதான்!!! கையை மட்டுமல்ல, இது தலையையும் சேர்த்துக் கடிக்கிற செலவுதான்.

     சரி மொத்தமாக இந்தக் கம்பி வேலிக்குத் தீர்வு என்னன்னு கேக்கிறீங்களா? குழந்தை விரல் சூப்பும் போதும் நாக்கைத் துறுத்தும்போதும் மென்மையாகப் பேசி அப்பழக்கங்களை மாற்ற வேண்டும்.

     குழந்தைகள் மூக்கால் சுவாசிக்காமல் வாயால் சுவாசித்தால் அதற்குக் காரணமான டான்சில், அடினாய்ட் போன்ற கோளாறுகள் இருந்தால் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை முதலில் சரியாக்க வேண்டும்.

     நவகிரங்கள் வேண்டுமானால் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி இருக்கலாம். நாக்கைப் பாதுகாக்கும், நம் முக அழகைப் பாதுகாக்கும், ஏன் பல் போனால் சொல் போச்சு என்பார்கள், சொல் வாக்கையும் பாதுகாக்கும் பற்கள் முப்பத்திரண்டும் எட்டு திசையில் திரும்பி இருந்தால் பார்க்கவா முடியும். வருமுன்னர் வேலி போடாமல் பாது காப்பதோ, இல்லை வந்த பின்பு வேலி போடு சீராக்குவதோ எல்லாம் உங்க கையில்தான்....சீராக்குங்க சொத்தான...முத்துப்பற்களை...
 

    

ஞாயிறு, 18 ஜூலை, 2010

நாடி நடக்கும் ஸ்டைலப் பார்க்கலாமா?


http://cache2.asset-cache.net/xc/76752091.jpg?v=1&c=IWSAsset&k=2&d=D63450385CD169112682CCB9EED1B2B9DC3F135D41C3007D66EDA2F5AE357F9DE30A760B0D811297 


 நாடி துடிப்பது நலம் நாடி..... நாடி... அதை நாடு... இல்லா விட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? என்பதை இந்த பதிவில் காணலாம்.
தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையனவாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,

”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல, 
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல, 
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம் நாடி 
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்ற நாடிய துயராய்ந்து பார்த்தாரானால் 
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே” 

என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும் போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச் சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.
57308008, George Doyle /Stockbyte

பொதுவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.

நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி, புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின் அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?

”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்க அத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும் மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும் வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரே தானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும் வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்க தேனென மூன்று நாடி தெளியவே காணும்”

இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.

இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.
இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. நாடிக்கடலில் நம் முன்னோர்கள் அராய்ந்து கூறியுள்ள வாத, பித்த, கப நாடிகளின் தன்மைகளையும் அவை மிகினும் குறையினும் உண்டாகும் நோய்களையும் பிரிதொரு பதிவில் பார்க்கலாமா? வரட்டா???.

திங்கள், 12 ஜூலை, 2010

நாடி... துடிக்குது.. நலம் நாடி....

http://www.rush.edu/rumc/images/ei_0364.gif
நாடித் துடிக்குது துடிக்குது...உன்னை நாடித் துடிக்குது துடிக்குது...என்று பாடல் கேட்டிருப்போம். இப்பாடலைக் கேட்கும் போது நாடி, எதை நாடித் துடிக்கிறது? எப்படி துடிக்கிறது? ஏன் துடிக்கிறது? அது துடிக்காவிட்டால் என்ன நடக்கும்? அதன் துடிப்பைக் கண்டறிவது எப்படி? இது போன்ற ஆயிரம் கேள்விகள். இறைவனின் படைப்பில் மனித உடலில் உள்ள உறுப்புகளில் மனிதனின் நல வாழ்வைக் கருதி துடித்துக்கொண்டு இருக்கின்ற நாடிகளை நோயறியும் கருவிகள் எனலாம்.  ஆங்கில மருத்துவர்கள் நோய்களைக் கண்டறிய பயன் படுத்தும் ஸ்டெத்தாஸ்கோப், தர்மாமீட்டர் போன்று நம் உடல் பொருத்திக் கொண்டுள்ள  நரம்பால் ஆன நோயறி கருவியே நாடிகள். நம் . முன்னோர்களாகிய ஆதிமருத்துவ மேதைகள் கண்டறிந்த, கண்கண்ட நோயறி கருவி இவை என்று கூறுவதில் சிறிதளவும் தடையிருக்காது ஒருவருக்கும்.
    
மருத்துவத்திற்கு நான்கு முக்கிய படிநிலைகள் உள்ளன. மருத்துவம் தொடங்குமுன் 1. மருத்துவர் நோய் இன்னது என்று நன்கு ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2. அதன் பின் நோய் வந்த காரணம் என்ன என்று ஆயாய வேண்டும். 3. பிறகு நோயைத் தணிக்கும் (குறைக்கும்) மார்க்கம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும். 4. அதன் பின்னே தேவையான மருத்துவத்தைச் செய்யத்தொடங்க வேண்டும்.  .
. அவற்றுள்  நோய் இன்னது என்று கண்டறிவதுவே முதல் படிநிலை என்பர்.  உடல் நோய்க்கும், உள்ள நோய்க்கும் ஈரடியில்  மருந்து சொன்ன தமிழ்ப்பேராசான் திருவள்ளுவரும்,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” 
என்று கூறி நோய் அறிவதையே முன் வைத்தார். தமிழ் மருத்துவத்தில் நோய் தேர்வு, அதாவது நோய் என்ன என்று கண்டறிவது எட்டு முறைகளில் காணப்படும்.. நாடி, தொடுதல், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர் ஆகிய எட்டும் நோய் தேர்வுக்குப் பயன் படுத்தும் முறைகளாக இருந்து வந்துள்ளன.இன்னும் இருக்கின்றன. ஆயினும் நாடித் துடிப்பின் வழி நோயை அறிவதே முதன்மையாக இருந்து வந்துள்ளது.. இதன் காரணத்தாலே வள்ளுவரும் நோய் அறிதலை முன்வைத்ததுடன் நாடி என்ற சொல்லை எடுத்தாண்டார்.. உயிர்களின் நலம் நாடுவது மட்டுமின்றி, நோய் இன்னது என்று நாடிக் கூறுவதும் இதன் தலையாய பணி என்பதால் நாடி ஆயிற்று எனலாம். இன்றும் பல மருத்துவ முறைகளிலும் தொட்டுப் பார்ப்பது, நாக்கை .நீட்டச்சொல்லிப் பார்ப்பது, விழியைத் திறக்கச்சொல்லிப் பார்ப்பதும், மலம், சிறுநீர் ஆகியவற்றை சோதித்துப்பார்ப்பதும் வழக்கில் உள்ளன. என்றாலும் நாடிச்சோதனை  எல்லா மருத்துவத்திலும் முதன்மையாகக் கருதபடுவதே உண்மை.. இதனையே ஆங்கிலத்தில் Pulls என்ற சொல்லால் கூறுகின்றனர். இந்த நாடிகளின் எண்ணிக்கையை 72,000 எனச்சுட்டும் சித்த மருத்துவம்..
இருப்பன நாடி எழுபத்தோடீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்
என்ற பாடல் வழி உணரலாம். அவற்றுள்ளும் கரு உருவாகும் போதே தோன்றும் நாடிகள் பத்து.  அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், ச்ங்குனி, குரு என்பன. இவற்றுள்ளும் முதன்மையானவையும், முக்கியமானவையும் மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை. இவையே. வாதம், பித்தம், கபம் என்ற பெயர்ப்படும் நாடிகள். இதனை விளக்கும் கண்ணுசாமியம்பாடல் பின்வருவது.
 “வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணனைச் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு
200532519-001, Rayman /Digital Vision
நாடியைச் சிறை என்று சுட்டும் சீவக சிந்தாமணி. சிறையைந்தும் விடுதும் என்பர் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர்என்று கூறும் சீவகசிந்தாமணி நாடிகள் ஐந்து என்று எடுத்துரைக்கும். இவை கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று ஆகிய ஐந்து இடங்களில் இருப்பவை. என்றுரைக்கும்.

http://meded.ucsd.edu/clinicalmed/extremities_normal_dp2.jpg
இலக்கியங்கள் பலபடச் சுட்டினும் நாடி என்று அழைக்கப் படும் அதி முக்க்யமான தாதுக்கள்  மூன்றே என்று உரைக்கும் தமிழ் மருத்துவம்.
http://www.istockphoto.com/file_thumbview_approve/2980706/2/istockphoto_2980706-checking-her-pulse.jpg
சரி, நாடியைச் சோதிக்கும் முறையை அறிய வேண்டாமா? பெருவிரல் பக்கமாக மணிக் கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி தெரியும் இரத்தக் குழாயையே நாடி நரம்பு என்பர். இதன் மேல் ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களையும் வைத்துப் பார்க்கும் போது, ஆள்காட்டி விரல் உணர்வது வாத நாடி. நடுவிரல் உணர்வது பித்தநாடி, மோதிர விரல் உணர்வது கப நாடி. இதனை,
கரிமுகனடியை வாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிர லங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்
ஒரு விரலோடில் வாதம்,
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலோத்தும நாடிதானே
என்று அகத்தியர் நாடி உரைக்கும், அவர் வழி வந்த திருமூலரும்,
“குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் ந்டுவிரலமர்ந்தது பித்தமே
என்று உரைப்பார். இந்த நாடிகள் முறையே 1, 1/2 , 1/4 என்ற மாத்திரையளவில் துடிக்குமாயின் நல்ல ஆரோக்கியமான் உடல்நிலை உள்ளவர்கள் என்று சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். அந்த நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் போது அவற்றின் துடிப்புகளின் (அதிர்வுகளின்) வேறுபாட்டைக் உணரக்கூடியதாக இருக்கும். அதாவது ஆள்காட்டி விரலுக்கு நேராக உள்ள நாடி 1/4 ஆகவும் நடு விரல் உணரக்கூடிய நாடி 1/2  ஆகவும் மோதிர விரல் உணரும் நாடி 1 ஆகவும் அதிர்வுகள் இருக்க வேண்டும். இந்தெ அதிர்வு எண்ணிக்கை வீதம் மாறி வருமாயின் குறைபாடு இருக்கும் மனிதன் என்று உணரலாம். அல்லது குறைபாடு வரும் அறிகுறி என்றும் உணரலாம்.
     அலோபதி முறையிலும் நாடி பார்க்கும் முறை உள்ளது என்பது நாம் அறிந்ததே..ஒரு வேறுபாடு என்னவென்றால் அம்முறையில் ஒரே எண்ணிக்கை, ஒரே நாடி. ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வு ஏற்படுகின்றன என்று கணக்கிட்டு சராசரியாக 75 முதல் 80 அதிர்வுகள் என்றால் அம்மனிதன் சாதாரணமாக உள்ளார் எனக் கொள்ளலாம் என்பர்.
இந்த நாடித்துடிப்புகள் சற்று கூடினாலும் குறைந்தாலும் நோய் என்பதை நாம் அறிய வேண்டும். இதனையே திருக்குறள் தந்த தெய்வ மருத்துவனும் முக்கியமாக வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் என்பதை பின்வரும்  குறட்பாவால் விளக்குவார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
இந்த மூன்று நாடிகளைத் தவிர `பூத நாடி என்று ஒன்று உண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல என்பர். இதில் என்ன ஒரு குறை என்றால் நாடி நூலகள் பலவும் இந்த நாடியைக் குறிப்பிடவே இல்லை என்பதே. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறியுள்ளன. இது வாத, பித்த, கப நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக இருக்கும் என்பர். அதாவது ஐந்து விரல்களாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலும் சிறுவிரலும் உணரும் நாடியே பூத நாடியாம். இந்த நாடியின் சிறப்பு, இந்த நாடி சரியானபடி துடிக்குமானால் சாமாதி நிலை என்று கூறப்படும் பேருறக்க நிலையை எளிதாக அடையலாமாம்.  சரி அது இருக்கட்டும்... இந்த நாடிகள் நடக்கும் முறையை அல்லது அதிரும் முறையை நம் முன்னோர்கள் எவ்வெவற்றோடு ஒப்பிட்டுள்ளனர் என்று அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதனை அடுத்த பதிவில் பார்ப்போமா....உங்களுக்காக இந்த நாடி அடுத்த இதழிலும் துடிக்கும்...