“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் - கல்வி மாநாடுஉதிர்க்கிறார் உதிரிப்பூக்கள் வடிவுக்கரசி

என் அம்மாவின் கை மணத்தில்……..

     

   உதிரிப்பூக்கள் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த  வடிவுக்கரசி அம்மாவை “அம்மாவின் கைம்மணத்தில்” என்னும் இந்தத் தொடருக்காக நானும் இதழாசிரியர் மணிஎழிலனும் சந்திக்கச் சென்றோம். பார்வையிலும் குரலிலும் தாய்மையுடன் அழைத்து உடனே தேநீர் வரவழைத்துக் கொடுத்து உபசரித்த விதத்தில் எங்கள் தாயையே கண்டதாக ஒரு உணர்வு. தாமதமாக அனுமதித்தமைக்குப் பலமுறை மன்னிப்புக் கேட்டதில் நெகிழ்ந்தே போனோம். அதுவும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லுடா... ஆமாடா... என்று அழைத்த பாசம்.... உருக வைத்தது. அதெல்லாவற்றையும் விட மேலாக இரவு பதினொன்றரை மணிக்கு “சாரிம்ம்மா.. பானு.. நான் உங்களுடன் நாளை பேசுகிறேன்” என்று அனுப்பிய குறுஞ்செய்தி, எவ்வளவு நேரமானாலும் நினைவு வைத்துக்கொண்டு பதில் கொடுக்கும் பண்பைப் பறை சாற்றியது.

      நிலாச்சோறு இதழை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி “இந்தப் பராட்டா எண்ணெயில் பொரித்தது, இந்த மீன் குழம்பைப் பார்க்கும் போதே வாயில் எச்சி ஊறுது” என்று ஆர்வமாகக் கூறியதுடன் “புத்தகம் ரொம்ப அழகா இருக்கு” என்று மகிழ்ச்சியாகப் பாராட்டி எங்கள் மனத்தில் மேலும் மேலும் உயர்ந்தார்.


      அப்படியே இளமைக் காலத்தை அசை போட ஆரம்பித்தார். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆர்காடு. பி.யு.சி. படித்த லாஸ்ட் செட் நான். எனக்கப்பறம் பிளஸ்டூ.. நேரடியாக டிகிரி கிளாஸ் ஆரம்பமாச்சு. நான் பியு முடித்ததும் தூர்தர்ஷனில் சிங்கராக (பாடகராக) வேலைக்குச் சேர்ந்தேன். சிறுவர் நிகழ்ச்சிகளும் அடிக்கடி கொடுப்பேன். குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம். சினிமா படம் எடுத்து செல்வத்தைத் தொலைத்தவர்களில் என் தந்தையும் அடக்கம். மேல படிக்க வைக்க முடியல. சம்பாதிச்சு ஆகவேண்டிய நிலைமை. அப்ப எனக்குச் சம்பளம் ஒரு நாளைக்கு 12 ரூபா.50 பைசா. அதுவும் பாடல் இருந்தால்தான். 

அப்பறம் தாஜ் கன்னிமாராவில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று விளம்பரம் செய்து இருந்தார்கள். நான் என்ன என்று தெரியாமலே இண்டர்வியூ போனேன். அங்கு ரிசப்ஷனிஸ்டா இருக்க விருப்பமா ஹவுஸ் கீப்பிங்க் பணி புரிய விருப்பமா என்று கேட்டார்கள். எனக்கு ஹவுஸ் கீப்பிங்க் என்றால் என்ன என்று விளக்குங்கள் என்று கேட்டேன். அவர்கள் அறையைச் சுத்தம் செய்வது முதல் எல்லாம் என்றார்கள். நானும் ரொம்ப தைரியமாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டேன். அப்படியே கன்னிமாராவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கன்னி மாராவில் எனக்கு பிராக்டிகல். அடையாரில் தியரி என்று தேர்வு எழுதி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்தேன் என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் வடிவுக்கரசி. நாங்கள் ஒரு அம்மாவாக அவர்கள் சமையல் பற்றியும், அல்லது ஒரு மகளாக அவர்கள் அம்மாவின் சமையல் பற்றியும் கேட்கச் சென்றால் இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்த ஒரு நடிகையாக புதிய உணவையும் பழைய மரபுச் சமையலையும் விலாவரியாகக் கூறி நம்மை அசர வைத்தார்.

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நீங்க முதன் முதலில் அம்மாவாக அறிமுகம் ஆகிய படம் எது? என்று கேட்டவுடன் “ஆஅ.... இது நல்ல கேள்வியா இருக்கே.... எனக்கே நினவில்லையே என்று கூறி நீண்ட சிந்தனையின் பின் ‘நான் நானேதான்’ என்னும் பி. மாதவன் இயக்கத்தில் தமிழில் உருவான தெலுங்கு திரைப்படத்தில் ராஜ்குமாருக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்ததாக ‘நிழல் தேடும் நெஞ்சங்கள்’ என்னும் படத்தில் பானுசந்தருக்கு அம்மாவாக..... அப்படியே தொடர்ந்தது. ஒரே நேரத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக, ஒரு படத்தில் அம்மாவாக என்றெல்லாம் நடித்திருக்கிறேன்” என்று கூறும் இவர் இன்று திரையுலகில் பல கதாநாயகி, கதாநாயகர்களை அம்மா என்று அழைக்க வைத்தவர். “நடிப்புக்காக மட்டுமன்றி உண்மையிலும் அம்மாவாக இருப்பதை விரும்புகிறேன். “பொதுவாக மேடம் என்று அழைப்பதை நான் விரும்புவதில்லை. ஒரு முறை இரு முறைதான் மேடம் என்று அழைப்பதை அனுமதிப்பேன். பிறகு நானே அம்மான்னு கூப்பிடுங்கனு சொல்லிடுவேன். அம்மான்னு கூப்பிடுறதுல  அன்பும், பாச உணர்வும் அதே சமயத்தில் ஒரு மரியாதையும் இருக்கறத ஒவ்வொரு அம்மாவிலும் உணர்றேன். மேடம்னு கூப்பிட்டா அந்நியமா இருக்கற மாதிரி தோனுது” என்று கூறும் வடிவுக்கரசி, தன் அம்மாவைப் பற்றிக் கூறிய போது “அம்மாவுக்காக மனம் விட்டு அழுவதற்கு  ஒரு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று நினைக்கக் கூட நமக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது என்று கண்களில் நீர்த் துளிர்த்துப் நம்மையும் கண்ணீர் சிந்தச் செய்து விட்டார்.

      நம் மகிழ்ச்சியை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் நம் கோபத்தைத் தாங்கும் ஒரே உள்ளம் தாயுள்ளம் மட்டுமே. இன்று நான் கட்டியுள்ளதும் அவர்களது புடவை.

      எங்க அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணினவங்க. எங்க அப்பா அவங்களுக்கு அதிகமா வேலை கொடுக்க மட்டாங்க. எங்களுக்குக் காலை உணவு என்றால் பிஸ்கட்தான். அந்த வெண்ணெய் பிஸ்கட் என்பார்களே.. அதுதான். ஏன்னா எங்க ஊர் ஆர்காடு. ஆர்காடிலிருந்து வேலூர் போகிற வழியில பேக்கரி அதிகமா இருக்கும். அதனால் பிஸ்கட். மதிய உணவுக்குத் தினமும் கீரையும் தயிர்சாதமும் வரும். இரவு கவாப். சப்பாத்தி, கறிக்கொழம்பு.

      ஆனால் அடிக்கடி புகாரியில் இருந்து பிரியாணி வாங்கிட்டு வந்துடுவாங்க அப்பா. அப்பல்லாம் புகாரி பிரியாணி சாப்பிட்டா ஹைகிளாஸ்னு அர்த்தம். நைட்டு பனிரெண்டு மணி ஆனாலும் எழுப்பி பிரியாணி சாப்பிட வச்சிட்டுத்தான் படுப்பாரு எங்கப்பா.

      என் அம்மாவை நினைவு படுத்தும் உணவுகள் என்று சொல்ல மாட்டேன். என்னதான் அவங்களையே பக்குவம் கேட்டு செய்தாலும் வரவே வராத ருசி அவங்க வைக்கிற அந்த மீன் குழம்புக்கு உண்டு. எங்க உறவுக்காரங்க எல்லோரும் எங்க அம்மா மீன் குழம்பு வச்சா நல்லா இருக்கும்னு சொல்லி மீன் குழம்பு வைக்கச் சொல்லி விரும்பி சாப்பிடுவாங்க. என்னதான் செய்வாங்களோ அப்படி ஒரு ருசி. அவங்க உடம்பு சரியில்லாத போது அவங்களே பக்கத்துல உக்காந்து சொல்லிக் கொடுப்பாங்க. புளியைக் கரச்சு வச்சுக்கோ. மிளகாய்த்தூளை அதுல போடு என்றெல்லாம் பக்குவம் சொல்வாங்க. அது மாதிரியே நான் செய்வேன். ஆனா அவங்க வைக்கிற குழம்பின் ருசியும் மணமும் இருக்கவே இருக்காது.

      தூக்குச் சட்டியில் சோற்றையும் நீச்சத்தண்ணியயையும் ஊற்றி வைத்து மூக்கை ஒரு முறை சிந்துவீர்களே அந்த… நடிப்பு.... என்று தொடங்கியவுடன், ஒரு மலர்ச்சியுடன் "ஓ அதுவா.... நான் நடிகர் திலகத்துடன் நடிக்கப் போகிறேன் என்றதும் தங்கப்பதக்கம் கே.ஆர். விஜயா அம்மா மாதிரி நடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இன்னொரு மூக்கெல்லாம் குத்திக்கொண்டேன். என்னை ஏண்ட்டி ஹீரோயினாக (Anty Heroine)  ஆக்கப் போகிறார்கள் என்று அப்போது எனக்குத் தெரியாது. அழுது கதறி நான் ஊருக்கே போய்விடுகிறேன் என்று அடம்பிடித்து, கடைசியில் ஒரு வழியாக நடித்தேன். ஆனால் அது இன்றும் மக்கள் மனத்தில் நிற்கும் நடிப்பாக இருக்கிறது” ன்று கூறுகிறார். முதல் மரியாதைக்காக இரண்டு மூக்குக் குத்திக் கொண்ட மகிழ்ச்சியில் இன்னும் இருக்கிறார் என்பது நேர்காணல் முடியும் தருவாயிலும் ரெண்டு மூக்குக் குத்திக் கொண்டதைப் பெருமையாகக் கூறியதில் இருந்து அறிய முடிந்தது.


      நீங்க நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவத்தைச் சொல்லுங்கம்மா என்றவுடன், ஆஹா….. நிலாச்சோறு அடிக்கடி சாப்பிட்டு இருக்கோமே…. எங்க வீட்ல மொட்டை மாடியில் ஒரு சின்ன ஓலைக் குடிசை இருக்கும். வெற்றிடம் அதிகமாக இருக்கும். அங்க கயித்துக் கட்டில் இருக்கும். பழைய காலத்து அந்தப் பித்தளை ஸ்டவ் இருக்கும்ல அதை வைத்து மொட்ட மாடியில் அம்மா சப்பாத்தி செய்வார்கள். சுடச் சுட அந்த சப்பாத்தியைச் சாப்பிடுவோம். அப்பறம் களி. ஒரு தட்டுல களி உருட்டி வெச்சு, அதுல குழி வெட்டி, சர்க்கரையும் நல்லெண்ணையும் சேர்த்துத் தரும் அவரது அம்மாவின் கைம்மணத்தைச் சொல்லும் போது,  “இப்போது நான் சொல்லும் போதே அந்த மணம் என் மூக்கில் வருகிறது” என்று இழுத்து ஒரு பெருமூச்சு விடுகிறார். அது மட்டுமல்ல சாம்பார், ரசம், பொறியல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அதைச் சோற்றில் போட்டு நன்றாகப் பிசைந்து கையில் உருட்டி உருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது…. கருவாடு மொச்சக் கொட்டை போட்டு ஒரு குழம்பு வைப்பாங்க எங்க அம்மா…… அது சும்மா….. அப்ப்ப்படி இருக்கும்” என்று பழைய நினைவுக்குச் சென்று தன் கையை முகர்ந்து பார்த்துக்கொள்ளும் வடிவம்மாவிடம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் நிலாச்சோறு ஊட்டியுள்ளீர்களா? என்று கேட்டவுடன் சற்று அதிர்ச்சியுடன் அதையெல்லாம் அவள் விரும்புவதே இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் பழைய மகிழ்ச்சியான பலவற்றை இழந்து விட்டனர் என்று தன் மகளுக்காக வருந்துகிறார். ஆனால் நான் இப்போதும் பழைய குழம்பு மீதம் இருந்தால் உடனே கீரை வாங்கி வாங்கி அதைச் சுண்டவச்சு அதை ஃப்ரெஷ்ஷா சாப்பிட மாட்டோம். அதைக் குழம்புல போட்டுக் குழம்பை நல்லா சுண்ட வச்சு சாப்பிடுவோம். இப்பவும்… அதுக்குப் பேரு சுண்டக்குழம்பு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
     
       இன்றைய தலைமுறையினருக்காக வருந்தினாலும் அவர்கள் அம்மா வீட்டில் இருக்கும்போது சமையல் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் திருமணம் ஆனதும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அவர்கள் திருமணம் ஆனதும் முதலில் வாங்கும் பொருள் மைக்ரோ அவன்தான். சூடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக என்று நகைச்சுவையாகக் கூறிச் சிரிக்கிறார்.

       “படப்பிடிப்பிற்காக வெளியிடங்களுக்குப் போனால் உங்கள் உணவு முறை எப்படிம்மா? டயட் எதாவது… என்று கேட்டவுடன் மிக ஆர்வமாக, “டயட்டா….. என்னைப் பாத்தா அப்படி தெரியுதா? என்று சிரித்து அதெல்லாம் இல்லவே இல்ல. சில பேர் சவுத் இந்தியன் ஆர்டிஸ்ட் என்றதும் இட்லி சாம்பார் கொண்டு வருவாங்க. நான் கேரளா போனா புட்டு, பயறு, பப்படம் கண்டிப்பா கேட்டுச் சாப்பிடுவேன். கர்நாடகா போனா களி, தயிர் கண்டிப்பா சாப்பிடுவேன். அந்தந்த இடத்து ஃபேமஸைக் கேட்டுச் சாப்பிடாம இருக்க மாட்டேன். எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்க்கனும் என்று தம் உணவு அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த வடிவுக்கரசி அம்மா.

        நடிகைகளுக்குச் சமையல் தெரியாது. சமைக்க ஆள் இருப்பார்கள் என்பதையெல்லாம் தாண்டி வடிவம்மா வேலைக்குக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை. என் கையால் சமைத்து என் குடும்பத்துக்குப் பரிமாறுவதை நான் மிகவும் விரும்புவதால் காலை ஒன்பதரை மணிக்கு மேல்தான் நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறுகிறார். மீண்டும் தேநீர் வரவழைத்துக் கொடுத்து எங்களை தாய்மைப் பாசத்துடன் வழியனுப்பி வைத்தது மனத்தில் இன்னும் நிறைவாக........

      
ஈகரைக் கவிதைப் போட்டிஈகரைக் கவிதைப் போட்டியின் நடுவர் பேரா.முனைவர். கிருட்டிண குமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியது. வழங்குபவர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்கள். அருகில் முனைவர் உடையார் இராசேந்திரா அவர்கள்.

புதன், 12 செப்டம்பர், 2012

லைஃபை பாதிக்கும் வை-ஃபை....லேப்டாப் எனப்படும் மடிக்கணினிக்கு உள்ள மோகம் சொல்லி முடிவதில்லை. கங்காரு தன் குட்டியை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல, குரங்கு தன் குட்டியை முதுகில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல இளைஞர்களும் எப்போதும் மடிக்கணினியைத் தம் தோளில் கட்டிக்கொண்டு அலைகின்றனர். என்ன சொல்ல. காரில், ஃபிளைட்டில், ரயிலில், பஸ்ஸில், பேருந்து நிலையத்தில் என்று உட்கார இடம் கிடைத்தால் போதும், எங்கு போனாலும் ஏறி ஐந்து நிமிடங்களில் திறந்து விடுகின்றனர் இந்த மடிக்கணினிப் பெட்டியை.

‘கன்னியவளை
என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன்
மடிக்கணினியவளை
காதலியின் நினைவோடு

என் மடிமீதும்

சுமக்கிறேன்

எப்போதும்”  (- தஞ்சை வாசன்)

என்று சொல்லி மடியில் சீராட்டிப் பாராட்டிச் சுமக்கும் அளவிற்குக் காதலி பெற்றிருந்த இடத்தைவிடவும் கணினி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது இளைஞர்களிடம். இந்தக் கவிதையை எழுதியவரும் ஐ.டி. பிரிவில் பணிபுரியும் தஞ்சையைச் சேர்ந்த இளைஞரே.
மடிக்கணினி இல்லை.. இளைஞர்களுக்கு அது இடிக்கணினி.... மடிக்கணினி ஆண்களின் உடலில் விந்தணுக்களை  மடிய வைக்கும் காலன் என்பதை இளைஞர்கள் அறிவதில்லை. அப்படி ஒரு வேகம் அதை பயன் படுத்துவதில். இவர்கள் என்னவோ மடிக்கணினியைக் குழந்தை போல பாவித்து மடியில் வைத்து சீராட்டுகின்றனர். அது இவர்கள் குழந்தையைச் சீராட்டும் வாய்ப்பை இழக்கச் செய்து விடுகிறது.
            தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கும், எப்போதும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
            சாதராணமாகவே மடிக்கணினி பயன் படுத்துவோர்க்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது என்று முன்னமே சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்போது கேட்கவே வேண்டாம். வை ஃபை (Wi-Fi) வேறு வந்து விட்டது. இந்த வையர்லெஸ் வகையான Wi-Fi என்பது WLAN (wireless local area network) என்னும் சொல்லின் மாற்றுச் சொல். இந்த வயர்லெஸ் நெட்வொர்க் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் வலைத்தளங்களை விரைவாகப் பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் வீட்டின் எங்கு வேண்டுமானாலும் இருந்து வலைத் தளங்களைப் பயன் படுத்த முடியும். அதாவது 20 மீட்டர்கள் அல்லது 65 அடிகள் வரை இதன் செயல்பாடு இருக்கும்.
லேப்டாப்களில் வை-ஃபை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப் பட்டுள்ளது..
மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-ஃபை இணைய தளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர். இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்தது.
மின்காந்த கதிர்வீச்சு

            இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்த ஆண்களைப் பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-ஃபையை இணைத்து உபயோகித்தவர்களின் விந்தணு பாதிப்பிற்குள்ளானது ஆய்வில் தெரியவந்தது.
      இதற்குக் காரணம் வை-ஃபையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்
இந்த இலட்சணத்தில் . இப்போது மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட புதிய தொழில் நுட்பத்தில் அமைந்த ஜீன்ஸை (Jeans) நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப் படுத்தி உள்ளனர். இதுதான் மடிக்கணினி என்பதன் உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று வாக்கு மூலம் வேறு கொடுத்துள்ளனர்.


இதுதான் உண்மையாக எமனை மடியில் கட்டிக் கொண்டதற்குச் சரியான பொருள் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று கூறாது விட்டுவிட்டனர். .

எரிக் டீ நிஜ்ஸ் மற்றும் டிம் ஸ்மித் ஆகியோரால் நடத்தப்படும் ஆடை வடிவமைப்பு நிறுவனமான நியூவே ஹெரன் என்ற நிறுவனம் இந்த மடிக்கணினி ஜீன்ஸை வடிவமைத்துள்ளது. கீ போர்ட், மௌஸ், ஸ்பீக்கர்கள் எல்லாம் எளிமையாகப் பயன்படுத்தும் நிலையில் ஜீன்ஸின் தொடைப் பகுதியில் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளனநெகிழ்வுத் தன்மையான கீபோர்ட் சிறிய ஒலிபெருக்கிகள், மற்றும் சிறிய மவுஸ்  என்பனவற்றின் காரணமாக இந்த ஜீன்ஸ் வழக்கமான காற்சட்டைகளைவிட அதிக பாரமாக இருக்காது என்றும் டீ நிஜ்ஸ் தெரிவித்துள்ளார். நவீன வடிவத்தில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனது பின்புற பாக்கெட் மவுஸை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மௌஸை ஆடையுடன் இணைப்பதற்காக எலாஸ்டிக் பொருத்தப் பட்டுள்ளது. அது வயர்லெஸ்ஸின் தொழில் நுட்பத்தில் மடிக்கணினியுடன் இணைக்கப் பட்டுள்ளது. முற்றிலும் மின் காந்த அலைகளால் இயங்கும் இது இது சந்தைக்கு வந்தால்……!!!! அப்பாடா……. நல்ல வேளையாக வரவில்லை. வந்தால் ரூ. 50,000 விலை ஆகுமாம். அதனைச் செய்வதற்கான பண வசதி அந்த நிறுவணத்திற்குத் தற்போது இல்லையாம். அது இல்லாமலே போகக் கடவது.
      கேளுங்க..கேளுங்க இளைஞர்களே..... மடிக்கணினி என்ன மழலையா உங்கள் மடியில் வைத்துக் கொஞ்ச? நீங்கள் மழலையைக் கொஞ்சும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுக்க வந்த மாயப் பிசாசு அது.
எல்லாவற்றையும் பெயருக்கு ஏற்றாற் போலவே பயன் படுத்த வேண்டும் என்னும் அவசியமில்லை. மடிக்கணினியை மடியில் வைத்துதான் பயன் படுத்த வேண்டும் என்று எந்த அரசும் சட்டமும் இயற்றவில்லை. மடிக்கணினியை டெஸ்கிலும் வைத்துப் பயன் படுத்தலாம். மடிக் கணினிக்காக உங்கள் மடியை இழக்காதீர்கள்.. மடிக் கணினியை மற்ற கணினியாகப் பயன் படுத்துங்கள்.. மேலும் வை-ஃபைப் பயன் படுத்தும் போது  மிகவும் எச்சரிக்கை தேவை. மீண்டும் மிண்டும் கூறுகிறேன்….. வை-ஃபை உங்கள் லைஃபைப் பாதிக்கும் மறந்து விடாதீர்கள் இளைஞர்களே.....  


(இந்தக் கட்டுரை  செப்டம்பர் மாத சோழ நாடு  இதழில் வெளியானது. நன்றி சோழ நாடு)

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

டீன் ஏஜ் பெண்களைச் சமாளிப்பது எப்படி???
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று ஒரு புலவன் பாடினான். பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது என்று ஒரு புலவன் பாடினான். இதில் எது சரியான கருத்து என்று சீர் தூக்கிப் பார்த்தல் இன்றைய பெண்களின் கடமை. இதைச் சீர் தூக்கிப் பார்க்கத் தொடங்கும் வேளையில் பெண்களைப் பற்றி வண்ணக் கனவுகள் கண்ட முண்டாசுக்காரன் பாரதி நம் கண் முன் வராமல் இருக்க மாட்டான். சாதம் படைக்கவும் செய்திடுவாள். தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவாள்என்று புதுமைப் பெண்களைப் பற்றி கனவு கண்டான்.

முதன் முதல் பெண் பிரதமராக திருமதி இந்திரா காந்தி வந்த கால கட்டத்தில் பெண்களின் முகத்தில் தோன்றிய வெற்றிக்களிப்பு சொல்லில் அடங்காது. ஏதோ ஒவ்வொருவரும் தானே பிரதமராக வந்ததாக நினைத்து மகிழ்ந்தனர்.

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக வந்ததில் என்ன வியப்பு இருக்கிறது? அவர் பிறந்த குடும்பப் பின்னணி, வளர்க்கப் பெற்ற விதம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை என்றே கூறலாம். சிறையில் இருக்கும் போது ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களைப் படித்தால் படிக்காத பாமரப் பெண்ணும் உலகியல் அறிவைப் பெற்று அரசியல் வாதியாகத் திகழலாம். அப்படி தன் குல வாரிசை வளர்த்தார் நேரு

ஆனால் நாம் நம் பெண்களை அப்படி வளர்க்கிறோமா? காலையில் எழுந்து சமைத்து, டப்பாக்களில் உணவை அடைத்துக் கொடுப்பது. அவளது உடைகளைத் துவைத்துப் பொடுவது.  கடைகளுக்குச் சென்று அவளுக்கு விருப்பமான நவநாகரிக ஆடைகளையும் காதுக்கு, கழுத்துக்கு என்று கவரிங்க நகைகளையும் வாங்கித் தந்து அவளை ஒரு நடமாடும் கவரின் நகைக்கடையாக மாற்றுவது, (ஏனெனில் நம் பொருளாதாரம் உண்மை நகைக்கடையாக மாற்ற இடம் கொடுக்காது) அவளது பிறந்த நாளில் அவளது பள்ளித்தோழி தோழர்களூக்கும் ஆசிரியர்களுக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுப்பது. அவள் கேட்டும் கேட்காமலும் ஒரு கைப்பேசி வாங்கிக் கொடுப்பது. எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பது அல்லது எந்நேரமும் படி என்று நச்சரிப்பது இவைகளைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம்.

காலையிலும் மாலையிலும் அவளுடன் ஒரு நடை போயிருப்போமா? அவள் அருகில் அமர்ந்து ஆதரவாகத் தலையைக் கோதி அவளது ஆசைகள் என்ன என்ன என்று கேட்டிருப்போமா? அவளுக்கு சாதனைப் பெண்கள் எவரது கதையையாவது கூறியிருப்போமா? அவளது ஆழ் மனம் தேடும் ஆசையின் ஏக்கத்தை அறிய ஒரு சின்ன முயற்சியாவது செய்திருப்போமா? இவை எதையும் செய்யாமல் இரவும் பகலும் சதா டி.வி. என்று முட்டாள் பெட்டியின் முன்பு உட்கார்ந்து விட்டு பெண்ணை முட்டாள்கள் என்று திட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஆணை காலையில் தினமும் கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் குடும்பம் பெண்ணை ஒரு ஹிந்தி வகுப்புக்கோ அல்லது ஒரு ஃபிரஞ்ச் வகுப்புக்கோவாவது ஏன் அவள் விருப்பப் படும் எந்த ஒரு பயிற்சிக்கும் அனுப்புவது இல்லை.

இன்றும் மூன்று பெண்கள் இந்திய அரசியலுக்கு ஆணி வேராக இருந்து ஆண் அரசியல்வாதிகளைச் சற்று அச்சுறுத்தி வருகின்றனர்காவல்துறையில் கிரன்பேடி முதலியோர் பெருமை சேர்த்து வருகின்றனர். ஆட்சித்துறையில் ஆட்சியராகப் (கலெக்டராக) பல பெண்கள் தம்மை நிருபித்து உள்ளனர். இவைகள் எல்லாம் எத்தனை விழுக்காடு என்று எண்ணிப்பார்க்கும்போது பெண்கள் வெற்றி பெறவே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

பெண்கள் வெற்றிக்கான அடியை எடுத்து வைக்கும் பருவம் டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பள்ளிப் பருவம். இந்தப் பருவத்தில் பெரும்பான்மையான பெண்கள் காதல் வலையில் சிக்கி விடுகின்றனர்.

இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில்தான் டீன் ஏஜ் பெண்கள் காதல் வசப்படுவது அதிகரித்து உள்ளது. ஆம் பழைய காலத்தில் பனிரெண்டு பதினான்கு வயதில் காதலிக்க வில்லையா? என்ற கேள்விகளும் அப்பருவ பெண்களிடமிருந்து எழுகிறது. ஆம் பழைய காலத்தில் காதலித்தனர். காதலித்தவனையே கரம்பிடித்தனர். காதலித்தவனும் காத்திருந்தாவது அவளையே மணம் முடிப்பான். இன்று??? எல்லாம் மாறிப்போனது. இளைஞர்கள் ஒரே வேளையில் பலரைக் காதலிக்கும் போக்கும் போய்க்கொண்டிருக்கிறது. ஏமாற்றுவதும் ஏமாறுவதும் இரு புறமும் இலகுவாக நடக்கத் தொடங்கி விட்டது.

இதில் அவனது அல்லது அவளது தவறு ஒன்றும் இல்லை. நம் வளர்ப்பு, நாம் சமுதாயத்தின் போக்கு, அந்நிய கலாச்சாரத்தின் வரவு என்று பல காரணங்களைக் கூற வேண்டியுள்ளது. இக்காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம் பெண்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் காதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? எப்படி அறிவுரை வழங்க வேண்டும்?

அன்று கல்வி தேவையற்ற காலமாக இருந்தது. தன் காலில் பெண்கள் நிற்க வேண்டிய அவசியமில்லமல் இருந்தது. இன்று அப்படியா இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் கல்வியறிவு இல்லாமல் வாழவே முடியாது என்னும் நிலையாக அல்லவா உள்ளது.

டீன் ஏஜில் பெண்களுக்கு ஹார்மோன்களின் சுரப்பு, அதன் காரணமாக உடல் மாற்றம், மனமாற்றம் எல்லாம் ஏற்படுவது இயல்பு. இம்மாற்றத்தின் போது அவளைப் பார்க்கும் இளைஞர்கள் எல்லோரும் அழகானவர்களாகத் தோன்றுவது, இளைஞன் ஒருவன் அக்கறையாகப் பேசினால் அவன் மட்டுமே அவள் மீது அக்கறையுள்ளவனாகத் தோன்றுவது, உலகமே அவன் மட்டும்தான் என்றெல்லாம் தோன்றுவது இயல்பு. சற்றேறக்குறைய அவள் சொர்க்கத்தில் உலவிக்கொண்டு இருப்பாள். அப்போது நீங்கள் அவளைக் கண்டித்தால் அவள் கண்களுக்கு உலகிலேயே அவளது முதல் எதிரி நீங்களாகத்தான் தெரிவீர்கள்.  இதயெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் அதாவது நாமும் கடந்துதான் வந்திருப்போம். ஆகவே அப்போது மென்மையான அன்பும் உண்மையான ஆதரவும் இதமான வருடலும் பதமான சொற்களுமே அவளை உங்களுக்கு அருகில் வரவைக்கும். கடுஞ்சொற்களும் அறிவுரைகளும் அவளது காதலை இன்னும் தீவிரமாக்கும். பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கும். அடங்காத்தனத்தை உருவாக்கும்.

டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, அது வளர்ச்சியின் ஒரு கட்டம். அதிலே நின்று சிந்தித்துக்கொண்டிருக்காமல் அதைக் கடந்து சென்று கொண்டிருக்கவேண்டும்' என்பதை வெளிப்படையாக பெண்ணிடம் பேசுங்கள். யாராவது காதல் தூது விட்டாலோ, காதல் கடிதம் கொடுத்தாலோ அங்கேயே கூச்சல்போட்டு அதை பெரிய விஷயமாக்காமல், யதார்த்தமாக, நிதானமாக அதை அணுகி மறுப்பு சொல்ல வேண்டும் என்று கூறுங்கள். உணர்ச்சி வசப்பட்டால் பிரச்சினை வலுவாகிவிடும் என்பதை புரியவையுங்கள். இது இயல்பானதே. எங்கும் நடக்கக் கூடியதே என்பதைப் புரிய வையுங்கள்.

டீன்ஏஜில் திருமணத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. அதைப் பற்றி தீர்மானம் எதுவும் எடுக்கத் தேவையில்லை என்பதையும் உணர்த்துங்கள். ஏனெனில் அது கல்விக்கு உரிய பருவம். திருமணத்திற்கு உரிய பருவம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

சக மாணவர்களோடு கல்வி ரீதியாக மட்டும் நட்பு பாராட்டலாம். அதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்று சொல்லுங்கள். காதல் வசப்பட்டு விட்டால் கூட காதலனோடு தனிமையான எந்த இடத்திற்கும் சென்றுவிட வேண்டாம் என்பதைக் கூறுங்கள். அதில் இருக்கும் சிக்கல்களை அபாயத்தை அபாயமின்றி பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டே இருங்கள்.
நண்பர்கள், தோழிகள் வாழ்க்கையில் வருவார்கள்...போவார்கள். ஆனால் யார் தன்னைப் புறக்கணித்தாலும் பெற்றோரும், உறவினர்களும் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்பதை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுங்கள். அதாவது எப்போதும் மகளின் நல்வாழ்வில் அக்கறையுடையவர்கள் நீங்கள் என்பதை உறுதிப் படுத்துக் கொண்டே இருங்கள்.

         
தன் உடல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு பொக்கிஷம். எந்த சூழ்நிலையிலும் யாரும் உடலைத் தொட அனுமதிக்க மாட்டேன் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்.

சில தேவையற்ற பிரச்சனைகள் வரும்போது என்று தைரியமாக `நோ' `சொல்லும் தைரியத்தை வளர்த்தெடுங்கள். செல்போன் வாங்கித்தருகிறேன், விலை உயர்ந்த உடை வாங்கித் தருகிறேன், நகை வாங்கித்தருகிறேன்' என்று பெற்றோரைத் தவிர யார் சொன்னாலும், `தேவையில்லை..' என்று ஒரே வார்த்தையில் மறுத்துக்கூறும் தைரியத்தை வளருங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் செல்லுக்காகக் காதலிக்கும் டீன் ஏஜ் பெண்கள் அதாவது பள்ளிப் பருவ பெண்கள் பெருகி வருகின்றனர்.

எவ்வளவு பேரழகி என்றாலும் அவள் ஒருசில வருடங்கள் மட்டுமே போற்றப்படுவாள். திறமை மட்டுமே எல்லா காலமும் போற்றுதலுக்குரியதாக இருக்கும் என்பதைக்கூறி, திறமையை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள். அவளுக்குள் இருக்கும் திறமையை அடிக்கடிச் சுட்டிக் காட்டி அவளது திறமையை வளர்க்கும் ஆர்வத்தை உண்டாக்குங்கள். பரிசும் பாராட்டும் பெருமளவுக்கு அவளுக்கு உதவுங்கள். இந்தப் போதையில் காதல் போதை அறவே காணாமல் போய்விடும் என்பது பலரின் அனுபவம்.

       உங்கள் மகள் காதலில் விழுந்து விட்டாள் என்று தெரிந்தால் அவளைத் திட்டுவதோ அடிப்பதோ தேவையில்லை. அவளது காதலனை உங்களுக்கு அறிமுகப் படுத்தச் சொல்ல்லுங்கள். நல்ல குடும்பம், பண்பு, கல்வி, ஒழுக்கம் இவை உள்ளவனாக இருந்தால் இருவரது குறிக்கோள் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்லுங்கள். உண்மைக் காதல் காத்திருக்கும். காலம் இதற்கு உரிய முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தாய் தந்தை இருவரும் மகளிடம் நட்புடன் அன்புடன் பழகுதல் முக்கியம். அதிலும் தாயின் அன்பில் தான் ஒரு குழந்தை நலம் பெறும் என்பார்கள், பெண்களைப் பொருத்த அளவில் தந்தையின் நெருக்கம் அவளது தவறை உணரச் செய்யும். (இந்தக் கட்டுரை செப்டம்பர் 2012 பெண்மணி மாத இதழில் பிரசுரமானது. பெண்மணி இதழாசிரியருக்கு நன்றி)