“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 29 நவம்பர், 2012

ஊர் வம்பு….. அந்தக்காலம் உலக வம்பு டிவிட்டர் காலம் - 2


டிவிட்டர் குபேரன் என்று சொல்லும் அளவு டிவிட்டரில் சாதனை படைத்து வரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்கள் (ஃபாலோயர்) எண்ணிக்கை  பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து முந்நூற்று என்பத்து நான்கு. (10,56,384). இந்த சந்தோஷத்தில் அவர் விட்டிருக்கிற அறிக்கை இது. “10 லட்சம் ஆதரவாளர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையே. இது என் மீதுள்ள உங்களின் அன்பையும் ஆதரவையும் காட்டுகிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதெல்லாம் சாதாரனம். இதோட நிற்கவில்லை, “என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது” என்று பகிராங்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

இவரையும் தூக்கிச் சாப்பிடும் லேடி தாதா ஒருவர் உள்ளார். டிவிட்டர் வரலாற்றில் சாதனை படைத்தவர் இவர். இவர் பெயர் லேடி காகா. இவரைப் பின் தொடர்பவர் எண்ணிக்கை 31,434,311

இப்படி அவரவர் தம் பெயரில் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஒரு புறம். திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் பெயரில் டிவிட்டர்களைத் தொடங்கி மக்களை ஏமாற்றுவது மறுபுறம். சமீபத்தில் கோபம் உச்சிக்கேறி குதித்தவர்களில் த்ருஷா, சூர்யா என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது.

காது மடல் சூடாகி சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அரசியல் தலைவர்களின் சரித்திர சம்பவங்களும் இதில் அடக்கம். அது சரி, போலி டிவிட்டர் கணக்கு எப்படி சாத்தியம் என்று கேக்கிறீர்களா? வலையுலகில் எல்லாம் சாத்தியமே.

பிரபலங்களின் பெயரில் டிவிட்டரில் ஒரு கணக்குத் தொடங்கி இணையத்தில் கிடைக்கும் அவரது புகைப்படங்களை, அவ்வப்போது நடைபெறும் விழா புகைப்படங்களை, தொலைக்காட்சி நேர்காணல் வீடியோக்களை (யூ டியூப்) என்று எல்லாவற்றையும் அந்த டிவிட்டர் பக்கத்தில் தரவேற்றம் செய்து விடுவார்கள். பார்ப்பவர்கள் பிரபலங்கள்தான் என்று நினைத்து நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள், ஃபாலோயராகத் தொடர்வார்கள் இத்யாதி இத்யாதி.

அந்த வகையில் இப்போது அதிகமாகப் பேசப்பட்ட போலி டிவிட்டர்களில் மிகவும் ரசனையானது தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பெயரில் தொடங்கப் பெற்ற டிவிட்டர். போலியாகத் தொடங்கப் பெற்ற அந்த டிவிட்டரில் பொன்னெழுத்தால் பொறிக்கப் பட்டுள்ள வாசகம்தான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. “புரட்சித்தலைவியின் ஆசியுடன் எனது டிவிட்டர் புரட்சியை ஆரம்பிக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளதாம். இந்த டிவிட்டரில் முதல்வரின் நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்படுகிறதாம். அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த டிவிட்டரில் இணைய இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை டிவிட்டரில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாம்.

            டிவிட்டர் சிலருக்குப் பணமும் ஈட்டிக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில், குழைந்தைகளைப் பார்த்துக் கொள்ளூம் ஒரு பெண்மணி, நம்ம மொழியில் சொன்னால் ஆயா வேலை பார்க்கும் ஒரு பெண்மணி கிரிக்கெட் மட்டையைக் கூட கண்டிராத ஒரு பெண்மணி கிரிக்கெட் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு பெண்மணிக்கு டிவிட்டர் உலகளாவிய புகழையும் கோடிகளில் பணத்தையும் ஈட்டித் தந்துள்ளது ஒரு விந்தை. அமெரிக்காவைச் சார்ந்த இவர், தன் காதலன் அன்போடு அழைக்கும் ‘ஹாஷஸ்’ என்னும் பெயரில் குழந்தை நலன் குறித்து டிவிட்டரில் எழுந்தி வந்தார். இங்கிலாந்து ஆஸ்திரேலிய மட்டைப்பந்து போட்டியின் போது ‘தி ஹாஷஸ்’ என்னும் டிவிட்டர் கணக்கில் இந்தத் தொடர் பற்றிய கருத்துகளைப் பொதுமக்கள் எழுதி வந்தனர். அந்தச் சூதாட்டத்தில் தி ஹாஷஸ் என்ற கணக்கைப் பயன் படுத்த அதன் குறிச்சொல்லான ஹாஷ் (#) என்பதைப் பயன்படுத்தினர். சிலர் # இந்தக் குறிக்குப் பதிலாக பழக்கதோஷத்தில் எப்போதும் டேக் செய்யும்போது பயன் படுத்துவது போல @ என்னும் குறியைப் பயன்படுத்தி விட்டனர். அவை ஹாஷஸ் என்னும் அந்த்ப் பெண்மண்யின் டிவிட்டருக்குச் சென்று விட்டன.

அவளுக்கும் ஆஷஸ் தொடருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொறுமையாகக் பதில் கூறிக்கொண்டு வந்த அவர், ”கிரிக்கெட் மட்டை என்றால் என்ன?” என்றும் அப்பாவியாக ஒரு கேள்வியும் கேட்டு விட்டார். இந்தக் கேள்வி அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஒரு விமான நிறுவனம் அவரை ஆஸ்திரேலியாவௌக்கு இலவசமாக அழைத்துச் சென்று கிரிக்கெட் பார்க்க வைத்தது. வோடோபோன் நிறுவனம் தொடரில் கலந்து கொள்ளும்  டிக்கெட், மற்றும் இதரச் செலவுகளை ஏற்றுக் கொண்டது. அவரை ஒரு முன்னணி நாளிதழ் தேடிப்பிடித்து புகழுச்சியில் ஏற்றியது. இப்படியெல்லாம் கூட டிவிட்டர் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டச் செய்துள்ளது. பாவம் சிலரைச் சிறைக்குள்ளும் தள்ளியுள்ளது.

2006 ல் டிவிட்டர் (www.twitter.com) உருவானது. இப்போது முன்னணி 50 வலைத்தளங்களில் இதுவும் இடம்பெற்றுள்ளது. இணையத்தின் எஸ்.எம்.எஸ் (SMS) என்று அழைக்கப் படும் இதை உருவாக்கி உலவ விட்டவர் ஜேக் டோர்சே. இதன் தலைமை அதிகாரி இவான் வில்லியம்ஸ் என்பவர். இதனோட தலைமை அலுவலகம் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ளது.

ஓடியோ என்னும் ஒரு அமைப்பின் பணியாளர்களின் குழுமத்திற்காக(Group) டிவிட்டர் நிறுவப்பட்டது. அதுவோ பின்னர் பொதுச் சேவைத் தளமாக முன்னேற்றம் கண்டது

2007ல் நடந்த சவுத் பை சவுத்வெஸ்ட் என்னும் விழாவில் டிவிட்டரின் செயல்பாடுகளே அந்நிறுவனத்தை மூன்றாவது இடத்திற்கு ஏற்றி விட்டது. 2009 ஆம் ஆண்டு 50 மில்லியனாக இருந்த இதன் வருமானம் 2013ல் $111 மில்லியனாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல 2009 ல் 25 மில்லியன் பயணர்களைக் கொண்டிருந்த டிவிட்டர் 2013ல் ஒரு பில்லியனை எட்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஃபேஸ் புக் போல டிவிட்டரில் விளம்பரங்கள் வெளிப்படையாக இடம்பெறுவது இல்லை. ஆனால் தம் நண்பர்களுக்கு அனுப்புவது போல விளம்பரப் படுத்துவதை இது தடுப்பதில்லை. வலைத்தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து பணம் ஈட்டும் வசதி போல பணம் ஈட்டும் வசதி டிவிட்டரில் இல்லை.

மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கி கொண்டே போகிறது சோஷியல் மீடியா. இதற்கு உதாரணமாக டிவிட்டர் குறுக்கு வழிகளைக் (ஷாட் கட்) கண்டு பிடித்து அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் இன்னும் எளிய முறையில் ட்வீட் செய்ய முடியும். அதோடு, மவுஸ் பக்கம் கையை கொண்டு போகாத அளவுக்கு மிக சுலபமாக அனைத்தையும் செய்யலாம்.

ட்வீட்களுக்கு விருப்பம் (ஃபேவரைட்) கொடுக்க வேண்டும் என்றால் விசைப்பலகையில் (கீ போர்டில்) F என்ற எழுத்தினை அழுத்தினால் போதும். இதேபோன்று, ட்வீட்டுகளுக்கு பதில் எழுத வேண்டுமானால் கீ போர்டில் ஆங்கில எழுத்து ஆர்(R)பட்டனை அழுத்தினால், பதில் அனுப்ப வேண்டிய டப்பா திறக்கும்.இது போல் 22 குறுக்கு வழிகளை உருவாக்கி உள்ளது டிவிட்டர். இந்த ஷாட்கட்களை மனத்தில் பதிய வைத்துவிட்டால் பின்பற்றுவது எளிது மட்டுமல்ல. பிடித்தும் போய்விடும்.

140 எழுத்துகள் தான் வரைமுறை என்று இருந்தாலும் இதையும் மீறி அளவில்லாமல் டிவீட் செய்யும் (டிவிட்டரில் எழுத) வசதியையும் ஒரு வலைத்தளம் உருவாக்கித் தந்துள்ளது. எழுத வேண்டியதை எழுதி இந்தத் தளத்தில் டிவிட்டருக்கு என்று எழுதி அனுப்பி விட்டால் டிவிட்டரில் அது பதிவு செய்து விடும். செய்தியின் எந்த பகுதி முதலில் அல்லது கடைசியில் தோன்ற வேண்டும் என்று குறிப்பிடும் கூடுதல் வசதியும் இதில் இருக்கிறது

தி டெய்லி ஷோ என்னும் இதழ் 2009 பிப். 24ல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் ஒபாமாவின் உரையைக் கேட்டவர்களை விட டிவிட்டரைப் பயன் படுத்தியவர்களே அதிகம் என்று கூறியுள்ளது. ஒபாமா தன் கட்சியின் தேர்தல் விளம்பரத்திற்கு டிவிட்டரைப் பயன் படுத்தியது அனைவரும் அறிந்ததே. இன்று இந்திய அரசியலிலும் தேர்தல் விளம்பரங்களுக்கு டிவிட்டர் பயன்படுத்த படுகிறது.

2009ல் டிவிட்டரில் ஒபாமாவுக்கு எதிராக எழுதியவர் கைது செய்யப் பட்டார். இப்போதும்"பால் தாக்கரே மரணத்திற்கான கடை அடைப்பின் பின்னணி மரியாதை அல்ல. பயமே காரணம்" எனச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஷஹீன் தடா மற்றும் ரேணு சீனிவாசன் என்னும் பெண்கள் சிவசேனையர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தக் கதை பரவலாக எல்லா இடங்களிலும் தொடர்கிறது. தகவல் தொழில்நுடபச் சட்டத்தில் திருத்தம் வராத வரை இப்படி எடுத்ததற்கெல்லாம் வாரண்ட், அரஸ்ட் என்னு கதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 A யில் மாற்றம் செய்ய வேண்டி அ. மாக்ஸ் தலைமையில் வழக்கும் தொடர்ப் பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

டிவிட்டர் மூலம் தன்மனிதத் தாக்குதல்களும் தொடர்ந்து புகார்கொடுப்பதும் சிறை செல்வதும் என பல நிகழ்ந்த வண்ணமே இருப்பதைப் பார்க்கும் போது ”டிவிட்டர் ஒரு ஆற்றலுள்ள தீவிரவாதக் கருவி” என்று அமெரிக்க இராணுவ இண்டெலிஜென்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

மேலதிக தகவலாக, நாசா டிவிட்டர் வழியாக விண்வெளி வீரர்களுக்கு தகவல்பரிமாற்றம் செய்து வருகின்றது என்பது. மற்றொன்று 2008ல் பெயரிடப்படாத ஒரு விண்வெளி ஓடம் தரையிறங்கிய போது உடனுக்குடன் தகவல் அனுப்பியதை ஒட்டி டிவிட்டருக்கு 2009ல் “நாசா சார்ட்டி விருது” வழங்கி சிறப்பித்துள்ளது.

செய்திகள், முக்கிய விஷயங்கள் பரிமாற்றம், தன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளல், அர்த்தமில்லாத வெட்டி அரட்டை, ஸ்பாம் என்னும் குறுஞ்செய்தி அனுப்புதல் என்று ஆறு பிரிவுகளாக டிவிட்டரின் சேவையைப் பிரித்தாலும் வெட்டி அரட்டையே அதிக இடம் பிடித்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அறிவியல் என்னும் அலாவுதின் அற்புத விளக்கின் உரசுதலில் வெளிப்படும் ஒவ்வொரு அதிசய பூதத்தையும் வெட்டியாகப் பயன்படுத்தாமல் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தினால் ஆக்கம் நமக்கும் அறிவியலுக்கும். இல்லாவிட்டால் அழிவே எஞ்சும்! துன்பமே விஞ்சும்!


(இக்கட்டுரை டிசம்பர் 2012 சோழநாடு மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி சோழநாடு)

ஞாயிறு, 25 நவம்பர், 2012

குடலா..? கடலா?

                                             

குடலை உருவி மாலையா போட்டுடுவேன்னு அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். குடல் என்ன பூவா? கட்டி மாலையாகப் போடன்னு நெனச்சதுண்டு. ஆனா குடலைப் பூப்போல பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்பது சில் நோய்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது புரிகிறது. குடலுக்கு வருகின்ற நோய்களுள் ஒன்று இந்தக் கிரோன் நோய். 

கிரோன் நோயைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உணவுப்பாதையைத் தாக்கி அதில் சிறு வீக்கத்தைத் தோற்றுவிக்கிறது. கிரோன் நோயானது, அதிக அளவில் சிறுகுடல் மற்றும் குடல் கார்சினோமா ஆகியவற்றுடன் தொடர்புடையது, இதில் மலக்குடல் புற்றுநோயும் அடங்கும் அதுவே கிரோன் எனப்படும். வாய் முதல் மலவாய் வரையுள்ள செரிமான மண்டலத்தின் எந்த பகுதியையும் இந்த நோயானது தாக்கக்கூடும். இரைப்பை குடல் பாதை நோயின் தன்மை ஆகியவற்றின் காரணமாகவும், திசு ஊடுருவலின் ஆழம் காரணமாகவும், ஆரம்பநிலை அறிகுறிகள் மிகவும் தெளிவற்றத்தாகவும், புண்சார்ந்த பெருங்குடலழற்சி என்றும் கருதப்படுகிறது. கிரோன் நோய் கொண்டவர்கள், பெரும்பாலும் 
திடீரென நோய் தீவிரம் அடையும் நிலையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

கிரோன் நோய் மரபு சார்ந்தது. முன்னோர்களில் எவருக்கேனும் இந்நோய் இருப்பின் ஒருவருக்கு வரலாம். அதே சமயம் சுற்றுச்சுழலே பெருமளவில் இந்நோய்க்குக் காரணமாக இருக்கும் என்பதும் நாம் அறிய வேண்டுவது. ஏனெனில் தொழில்த்துறையில் முன்னேறிய நாடுகளில் இந்நோய் அதிகம் இடம்பிடிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கு இந்நோய் வருவதற்கான காரணங்கள் மூன்று மடங்கு அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு அதிலும் 18 வயது முதல் 30 வயதுடையவர்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

 வட அமெரிக்காவில் மட்டும் 400,000 முதல் 600,000 வரையிலான மக்களுக்குக் கிரோன் நோய் தாக்கம் காணப்படுகிறது. வடக்கு ஐரோப்பாவில், ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் 27-48 நபர்கள் இருப்பதாக நோய்ப்பரவல் பகுதி கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. கிரோன் நோயானது, இளைஞர்களுக்கு பால் வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் இருவருக்கும் வருகிறது. ஆனாலும், நோய் எந்த வயதினருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறும் ஐம்பது முதல் எழுபது வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கும் இதே அளவு இந்நோய் தாக்குகிறது என்கிறன ஆய்வுகள்.

அறிகுறிகள்

இந்த நோய்க்கு இதுதான் அறிகுறி என்று சுட்டிக்காட்ட இயலாது. கிரோன் நோயின் ஆரம்பநிலை அறிகுறியாக அடிவயிற்று வலி காணப்படுகிறது. இதில் தொடக்கத்தில் பேதி ஏற்படக்கூடும், குறிப்பாக இந்த பகுதியில் முன்னதாக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு. பேதியில் இரத்தமும் கலந்திருக்கக்கூடும். ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல அறுவைசிகிச்சைகளை செய்து கொண்ட நபர்கள் பொதுவாக இரைப்பை குடல் பாதையில் குறுகிய குடல் நோய்க்குறியீட்டுக்கு ஆளாவர்கள். இதில் அமைந்துள்ள சிறுகுடல் அல்லது பெருங்குடல் பகுதியைச் சார்ந்தே கிரோன் நோயில் ஏற்படும், இரைப்பை குடல் பாதைக்கு வெளியேயும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அதாவது தோல் தடித்தல், ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்களில் அழற்சி ஏற்படுதல் போன்ற ஏராளமான நோய் அறிகுறிகளைக் கொண்டது இது.

குதத்துவாரம் அருகில் அரிப்பு அல்லது வலி வீக்கம் அல்லது வெடித்து காணப்படுவது போன்றவைகளும் அழற்சியின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

குழந்தைகளுக்குப் போதிய வளர்ச்சியின்மை மற்றுமொரு அறிகுறியாகும். கிரோன் நோயைக் கொண்டுள்ள 30% குழந்தைகள் தடையுற்ற வளர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வறிக்கைக் கூறுகிறது.

கிரோன் நோயாளிகள் உணவு உண்ணாமல் இருக்கும்போது நன்றாக உணர்வார்கள், இதனால் வழக்கமான உணவூட்டம் குறைவுறும். பசியின்மை, எடையிழப்பு ஆகியவை ஏற்படும்.

இரைப்பை குடல் பாதிப்புடன், கிரோன் நோயானது, பிற உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடும். கண்ணின் உட்பகுதியில் யுவெய்டிஸ் எனப்படும் அழற்சி ஏற்படுதல், கண் வலியை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக ஒளிக்கு ஆளாகும் போது (ஃபோட்டோபோபியா). கண்ணின் வெள்ளைப் பகுதியிலும் அழற்சி தோன்றக்கூடும் (ஸ்கெலெரா), இந்நிலைக்கு எபிஸ்கெலரிடிஸ் என்று பெயர். எபிஸ்கெலரிடிஸ் மற்றும் யூவெடிஸ் ஆகிய இரண்டுமே சிகிச்சை இன்றி தொடர்ந்தால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடும்

கிரோன் நோயில் பெரியனல் தோல் குறிகளும் பொதுவாக காணப்படக்கூடும். மலம் கழித்தல் கட்டுப்படுத்தமுடியாமையும் பெரி-ஆனல் கிரோன் நோயில் காணப்படக்கூடும். இரைப்பை குடல் குழாயின் எதிர் எல்லையில் உள்ள, வாயும் கூட குணப்படுத்த முடியாத புண்களால் பாதிக்கப்படலாம். அரிதாக, எஸோபாகஸ், மற்றும் வயிறு ஆகியவையும் கிரோன் நோயில் பாதிப்படையக்கூடும். இவை விழுங்குவதில் கடினம் (dysphagia), மேல் வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவற்றைத் தோறறுவிக்கிறது.,

கிரோன் நோயில் தோல், ரத்தம் மற்றும் எண்டோகிரைன் அமைப்பு ஆகியவை அடங்கக்கூடும். தோல் பாதிப்பில் ஒரு வகை எரிதிமா நோடோசம் என்பதாகும், சிவப்பு நிற கட்டிகள் தோலில் ஏற்படுவதை எரிதிமா நோடோசம் என்பர்.  இது. சப்கியூட்டானஸ் திசுக்களில் ஏற்படும் அழற்சியின் காரணமாக ஏற்படுகிறது.

மற்றும் அது செப்டல் பன்னிகியூலிட்டிஸ் ஆல் வகைப்படுத்தப்படுகிறது. மற்றொரு தோல் நோயானது, பயோடெர்மா காங்க்ரேனோசம் என்பதாகும் இது மிகவும் வலியுள்ள புண்ணைத் தோற்றுவிக்கும். இரத்தம் உறைவடையும் விதத்தையும் கிரோன் நோய் அதிகரிக்கிறது; காலின் அடிப்பகுதியில் வலிமிகுந்த வீக்கம் காணப்படும்

நுரையீரல் எம்பாலிசம் காரணமாக சுவாசப்பற்றாக்குறையும் ஏற்படக்கூடும். கிரோன் நோயானது, நரம்பு தொடர்பான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். பொதுவாகக் காய்ச்சல் காணப்படும்,

கிரோன் நோய் ரூமட்டாலாஜிக் நோயுடனும் தொடர்புடையது. ஆதால் இதனால் முழங்கால் முட்டி, தோள் பட்டை, முதுகெலும்பு, ஆகியவை பாதிக்கப்படும். வலி, வீக்கம், முட்டி மடக்க முடியாமல் போவது ஆகிய இவையும் இந்நோயின் அறிகுறிகளுள் அடங்கும்.

ஆழமான இரத்த அடைப்பு காரணமாக இது ஏற்படும், அதே நேரத்தில். நோய் எதிர்ப்பு மண்டலம் இரத்த சிவப்பு அணுக்களைத் தாக்கத் தொடங்கும், சுயநோயெதிர்ப்பு ஹீமோலிட்டிக் அனீமியா, என்ற நிலை தோன்றக்கூடும், இதனால் மயக்கம், தோல் நிற மாற்றம் மற்றும் இரத்த சோகையில் பொதுவான பிற அறிகுறிகளும் தோன்றக்கூடும். விரல்களின் நுனியில் வடிவ மாற்றம் ஏற்படும் கிளப்பிங் என்பதும், கிரோன் நோயில் தோன்றக்கூடும். இறுதியாக, கிரோன் நோயானது, ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்பு மெலிவடைதலை தோற்றுவிக்கக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸைக் கொண்ட நபர்களுக்கு எலும்பு உடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம்

கிரோன் நோயானது, நரம்பு தொடர்பான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் 15% நோயாளிகள் வரை இந்த பாதிப்பு காணப்படுகிறது இதில் பொதுவானவை தசைபிடிப்புகள், வாதம், பரிவு தண்டுவட நியூரோபதி, தலைவலி மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஆகும்

கண்டறியும் முறை

கிரோன் நோயைக் கண்டறிவது சில நேரங்களில் மிகவும் சவாலானதாக இருக்கக்கூடும், இந்நோயைக் கண்டறிவதற்கு உதவ பல சோதனைகள் பெரும்பாலும் அவசியமாகிறது. முழுமையான சோதனைகளும், கிரோன் நோய் இருப்பதை முழு தெளிவுடன் உறுதிப்படுத்துவதில்லை; ஒரு கோலன்ஸ்கோப்பி ஏறத்தாழ 70% திறனுள்ளதாக இருக்கிறது, பிற சோதனைகள் இதைவிடவும் குறைவான திறனையே கொண்டுள்ளன. சிறுகுடலில் உள்ள நோய் குறிப்பாக அதிக கடினமானது, ஏனெனில் பாரம்பரியமான கோலனஸ்கோப்பி பெருங்குடல் மற்றும் சிறுகுடலின் அடிப்பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே எட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோப்பிக் கண்டறிதலில் கேப்ஸ்யூல் எண்டோஸ்கோப்பி அறிமுகப் படுத்தப்பட்டது உதவிகரமாக தற்போது இருந்து வருகிறது.

எண்டோஸ்கோபி

கிரோன் நோயைக் கண்டறிவதற்கு கோலனஸ்கோபி என்பது சிறந்த சோதனையாக இருக்கிறது, ஏனெனில் இது நேரடியாக பெருங்குடல் மற்றும் இறுதிப்பகுதி இலியம் ஆகியவற்றின் காட்சியைக் காண்பிக்கிறது, மேலும் நோய் வளர்ச்சியின் வடிவமைப்பைக் கண்டறிய முடிகிறது. சில நேரங்களில், கோலனஸ்கோப் இறுதிப்பகுதி இலியத்தையும் தாண்டி செல்லக்கூடும், இது ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடுவதாக காணப்படுகிறது. இந்த நடைமுறையின்போது, பயாப்ஸியையும், இரைப்பை குடல் மருத்துவர் செய்யமுடியும், அதாவது சிறிய மாதிரிகளை ஆய்வக சோதனைக்காக எடுப்பது, இது நோய் கண்டறிதலுக்கு உதவக்கூடும். 30% கிரோன் நோயானது, இலியத்தில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆனாலும் இலியத்தின் இறுதிப்பகுதியில் குழாய் மூலம் பார்த்தல் நோய் கண்டறிதலுக்கு மிகவும் அவசியம்.

கதிரியக்க சோதனைகள்

சிறுகுடல் பின் தொடருதலானது, கிரோன் நோயை சுட்டிக்காட்டக்கூடும் மற்றும் நோய் சிறுகுடலில் மட்டுமே இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், கோலனஸ்கோப்பி மற்றும் கேஸ்ட்ரோஸ்கோபி ஆகியவை இறுதிபகுதி இலியம் மற்றும் டியோடினத்தின் ஆரம்பப்பகுதி ஆகியவற்றின் நேரடி விஷுவலைசேஷனை மட்டுமே அனுமதிக்கிறது, அவற்றைப் பயன்படுத்தி சிறுகுடலின் பிற பகுதிகளை மதிப்பிட முடியாது. இதனால், பேரியம் பின் தொடருதல் எக்ஸ் கதிர் பயன்படுத்தப்படுகிறது. இதில் பேரியம் சல்ஃபேட் உட்செலுத்தப்படுகிறது மற்றும் ஃப்ளூரோஸ்கோபிக் குடல் படங்கள் எடுக்கப்படுகின்றன. இவை சிறு குடலில் அழற்சி மற்றும் சுருக்கம் ஏற்பட்டுள்ளதா என்று காண்பதற்கு உதவக்கூடியது. பேரியம் எனிமாஸ் என்ற சோதனையில் பேரியமானது மலக்குடலில் உட்செலுத்தப்பட்டு, ஃப்ளூரோஸ்கோப்பி மூலம் குடல் படமெடுக்கப்படுகிறது, கோலனஸ்கோப்பியின் பரவலான பயன்பாட்டின் காரணமாக கிரோன் நோயின் கண்டறிதலில் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. கோலனஸ்கோப்பானது நுழைய முடியாத சிறிய துளைகளில், அமைப்பு ரீதியான மாறுபாடுகளை கண்டறிவதற்கு அவை இன்னமும் பயனுள்ளதாகவே இருக்கின்றன அல்லது பெருங்குடல் நீட்சி தோற்றத்தைக் கண்டறிய பயன்படுகின்றன.

சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் சிறுகுடல் என்டரோக்லைஸில் நெறிமுறைகளை அளவிட பயன்படுகின்றன. கிரோன் நோய்களின் சிக்கல்களான சீழ் கோர்த்தல்கள், சிறுகுடல் தடை அல்லது நீட்சி உருவாக்கம் போன்றவற்றை கண்டறியவும் இவை கூடுதலாக பயன்படுகின்றன. காந்த ஒத்திசைவு படமெடுத்தல் (MRI) என்பது சிறு குடலை படமெடுப்பதற்கு மற்றும் பிற சிக்கல்களைக் கண்டறிவதற்கான மற்றொரு விருப்பமாகும், இது மிகவும் விலையுள்ளது மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்றாலும் விரும்பக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது

இரத்தப் பரிசோதனைகள்

முழுமையான இரத்த எண்ணிக்கை இரத்த சோகையைச் சுட்டிக்காட்டக்கூடும், இவை இரத்த இழப்பு அல்லது உயிர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக ஏற்படக்கூடும். இரண்டாவதாக கூறப்பட்டது, இலியிட்டஸில் காணப்படும் ஏனெனில், விட்டமின் பி ஆனது இலியத்தில் உள்ளே இழுக்கப்படுகிறது. எரித்ரோசைட் படிவடைதல் வீதம் அல்லது ESR மற்றும் சி ரியாக்டிவ் புரதம் அளவீடுகள் ஆகியவையும் அழற்சியின் அளவை அளவிடுவதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கக்கூடும். இந்த சிக்கலின் காரணமாக நோயாளிக்கு இலிக்டோமி செய்யப்படுகிறது.. இரத்தசோகை ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் தொடர் நோயாகும், இது மைக்ரோசைடிக் மற்றும் ஹைப்போகிரோனிக் இரத்த சோகை என்று வகைப்படுத்தப்படுகிறது. இரத்தசோகை ஏற்படுவதற்கு பலவகையான காரணங்கள் இருக்கக்கூடும், அசதியோபெரின் போன்ற குடல் அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகள், சைடோபினியா மற்றும் சல்ஃபாசலாசைன் போன்றவற்றைத் தோற்றுவிக்கும், அது தவறாக உள்ளிழுக்கப்படுவதை விளைவிக்கும். சாக்காரோமைசிஸ் செரிவிசியே ஆன்டிபாடிகள் (ASCA) மற்றும் நியூட்ரோபில் சைடோபிளாஸ்மிக் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் (ANCA) ஆகியவற்றுக்கான சோதனைகள் குடலின் அழற்சி நோய்களைக் கண்டறிவதற்கு பயன்படுகின்றன மற்றும் இவையே கிரோன் நோயை பிற அல்சரேட்டிவ் கொலிட்டஸ் நோயிலிருந்து வேறுபடுத்தி அறியவும் உதவுகிறது. மேலும், ASCA போன்ற சீரோலாஜிக்கல் ஆன்டிபாடிகளின் அளவு அதிகரித்தல், லாமினாரிபயோசைட் எதிர்ப்பு பொருட்கள் சிட்டோபயோசிட் எதிர்ப்பு மான்னோபயோசிட் எதிர்ப்பு லாமினாரின் எதிர்ப்பு மற்றும் சிட்டின் எதிர்ப்பு ஆகியவை தொடர்புடைய நோய்க்கூறுகளாகும் மற்றும், இவை கிரோன் நோய் முன் கண்டறிதலுக்கு உதவக்கூடும்.

கிரோனின் பெயர்க்காரணம்:

குடல் அலற்சி நோய்க்கு குரோனின் எனப் பெயர் வரக்காரணம் அமெரிக்க, இரைப்பை குடலியக்க மருத்துவர் பர்ரில் பெர்னார்டு கிரோன் என்பவரின் பெயரில் இந்நோய்க்கு பெயரிடப்பட்டுளது. இவர் 1932 -ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு குடலின் முடிவுப்பாதிப்பு பாதிப்பதை விவரித்தார், இது பாதிக்கும் உணவு குடல் பாதையின் இடத்தைப் பொறுத்தும் இது வகைப்படுத்தப்படுகிறது. இல்லியோகோலிக் கிரோன் நோய் என்பது இலியம் பகுதியையும் (சிறுகுடல் பகுதியின் இறுதி, இது பெருங்குடல் உடன் இணைப்பது) பெருங்குடலையும் பாதிக்கிறது, ஐம்பது சதவீதம் நோயாளிகள் இதனாலேயே பாதிக்கப்படுகின்றனர். இந்த கிரோன் இலிட்டிஸ் என்பது இலியம் பகுதியை மட்டுமே பாதிக்கிறது. கிரோன் கொலிட்டிஸ் என்பது பெருங்குடலை பாதிக்கக்கூடியதாகும், இந்த காரணத்திற்காகவே, நோயானது, பகுதிவாரி இலியட்டிஸ் அல்லது பகுதிவாரி என்டெரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

கிரோனின் வகைகள்:

குறுக்கக்கூடியது, ஊடுருவக்கூடியது மற்றும் அழற்சி சார்ந்தது என்று கிரோன் நோயில் மூன்று வகைகள் பொதுவாக காணப்படுகின்றன:
'குறுக்கக்கூடியது' குடலின் அகலத்தைக் குறைக்கும், இதனால், குடல் அடைப்பு அல்லது மலம் கழித்தலில் சிரமம் போன்றவை ஏற்படக்கூடும்.
'ஊடுருவல் நோய்' குடல் மற்றும் தோல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்கு இடையே வழக்கத்திற்கு மாறான பாதைகளை (ஃபிஸ்டியுல்லா) உருவாக்குகிறது.
'அழற்சி சார்ந்த' நோயில் குறுக்கம் அல்லது ஃபிஸ்டியுல்லா ஆகியவை தோன்றாமல் அழற்சி ஏற்படுகிறது. இந்நோய்கள் அனைத்தும் எண்டோஸ்கோபி செய்வதாலே தெளிவாக அறியமுடியும்.

மருந்துகள்

குரோன் நோயின் அறிகுறிகளுக்காக அளிக்கப்படும் மருந்துகளில், அமினோசாலிசிலிக் அமிலம் (5-ASA) மருந்துக்கலவைகள், ப்ரீடெனிசோன், நோயெதிர்ப்புதிறன் மாற்றிகளான அசாதியோபெரின், மெர்காப்டோப்யூரின், மெதோட்ர்க்ஸேட், இன்ஃப்ளக்சிமாப், அடாலிமுபாம்], செர்டோலிஜுமாப் மற்றும் நாட்லிஜுமாப் ஆகியவை அடங்கும். குரோன் நோயின் மிகத்தீவிர பாதிப்புகளின் போது மட்டுமே ஹைட்ரோகார்டிசோன் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஓபியேட் ஏற்பி ஆன்டாகானிஸ்ட்டான நால்ட்ரக்சோன் மருந்தின் குறைவான மருந்தளவுகள் (குறைந்த மருந்தளவு நால்ட்ரக்சோன் என்றும் அழைக்கப்படுகிறது) 67% நோயாளிகளுக்கு நோய் தணிப்பைத் தூண்டுவதற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது, இதற்கான ஆய்வு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பென்சில்வேனியா மாகாண மருத்துவ பல்கலைக்கழக, இரைப்பை குடல் மருத்துவ பேராசிரியர் டாக்டர். ஜில் ஸ்மித், "கிரோன் நோயாளிகளிடையே LDN சிகிச்சையானது பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது" என்கிறார். ஸ்மித் மற்றும் அவருடைய நண்பர்களும் இணைந்து NIH மானியத்தைப் பெற்று, இரண்டாம் கட்ட மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வை நடத்தி வருகின்றனர்.

குடல் அழற்சி சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்க அக்குபஞ்சர் பயன்படுத்தப்படுகிறது,

மீத்தோட்ரெக்ஸேட் என்பது ஒரு எதிர்ப்பு மருந்தாகும், இது கீமோதெரபியிலும் பயன்படுத்தப்படுகிறது. கார்டிகோஸ் டீராய்டுகளைத் தொடர்ந்து உட்கொள்ள முடியாத நபர்களுக்கு நோய் தணிப்பைத் தக்க வைக்க இது பயன்படுத்தப் படுகிறது

மெட்ரோனிடாசோல் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் ஆகியவை கிரோன் நோய்க்கு அளிக்கப்படும் ஆன்டிபயோடிக்குகள் ஆகும், எப்படிப் பார்த்தாலும் எய்ட்ஸ் நோய் போலத்தான் கிரோன் நோயும். இந்நோயை முற்றிலும் சரியாக்கக் கூடிய மருந்துகளோ அல்லது அறுவைசிகிச்சை முறையோ இது வரை கண்டறியப்படவில்லை. மேற்கொள்ளப்படுகின்ற எல்லா சிகிச்சைகளும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது, நோயின் நிலையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருப்பது, மற்றும் நோய் முற்றி விடாமல் தடுப்பது ஆகியவற்றுடன் முடிந்து விடுகின்றது.

(இது டிசம்பர் 1-15, 2011 குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் ஹெல்த்)

திரவ தங்கம்!


                ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமயிர்க்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி... ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

                தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு

                குணப்படுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

                பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது, பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத்திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

                எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது..

                இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது.. முக்கியமாக புற்று நோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரமப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன் படுத்தலாம்.

                எனெனில் இது கண்டிப்பாக மார்பக புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேசைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

                புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். முதலில் மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்த வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவி உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும்  பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

                இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல்  50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயை தடுக்கலாம்" என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்

                ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு

                ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

                இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

                உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு..

                கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி', முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் 'திரவத்தங்கம்' என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

(இது பிப்ரவரி  1-15, 2012 குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் ஹெல்த்)

சனி, 24 நவம்பர், 2012

அழகைக் குறைக்கும் சீரியல் அழுகை!                பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இதுதான். உப்பு கரிக்கும் என்றாலும் பெண்கள் இந்த அஸ்திரத்தைப் பயன் படுத்தி விட்டார்கள் என்றால் எப்பேர்ப் பட்ட கொம்பனாக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது. கணவன் தும்மலில்  தொடங்கி வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் அவள் குணம். ஆம்

                உண்ணும் வேளையில் கணவன் தும்முகிறான். மனைவி தலையில் தட்டி வாழ்த்திய அதே வேகத்தில் அழத்தொடங்கி விடுகிறாள். “உம்மை நினைக்க வேண்டிய நான் இங்கிருக்க யார் உம்மை நினைக்கிறார்கள், தும்மல் வருகிறதே?”. என்று அழத்தொடங்கி விடுகிறாள். மறுநாள் அதே உண்ணும் வேளையில் மீண்டும் வந்து விடுகிறது அதே தும்மல் அவனுக்கு. நேற்றைய நிலை வந்த் விட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு அச்சம். அதனால் அவன் தும்மலை அடக்கிக் கொள்கிறான். அன்றும் அழத்தொடங்கிவிடுகிறாள் தலைவி. இன்று ஏன் அழுகிறாய் என்று அவன் கேட்க, “நிச்சயமாக உங்களுக்கு யாரோ ஒருத்தி உள்ளாள். அது எனக்குத் தெரியக் கூடாது என்றுதான் வந்த தும்மலை அடக்கிக் கொண்டீர்கள்” என்று கூறி அழுகிறாள். அது மட்டுமா? மறுநாள் தனக்குத் தும்மல் வருவது போல வந்து வராது நின்று விடுகிறது. அன்றும் அழுகை. ஏன் என்றால் அவன் தன்னை நினைப்பது போல நினைத்து நினைக்காது விட்டானோ” என்று அழுகையாம். திருவள்ளுவரின் தலைவி இப்படிப்பட்டவள். இப்போது அவள் ஏன் அழுதால்? எப்படி அழுதால் என்பதில்லை ஆய்வு. இப்படி தும்மலுக்கும் இருமலுக்கும் அழுகும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா? என்பதே இன்றைய ஆய்வு.

                கண்டிப்பா பிடிக்காதுங்க.. இது நமக்குத் தெரிந்ததுதானே. ஆனாலும் ஆய்வு செய்து சொன்னாத்தானே நாம் நம்புவோம். அடக்கருமமே.... இதையும் ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காதாம். மேலும் அழுபவர்களின் அழகும் குறையுமாம். இது  சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ள முடிவு.

                பெண்கள் எப்பொழுதுமே அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள், ஏதாவது ஒரு சின்ன கஷ்டம் என்ற உடனே அழுது விடுவார்கள். தமது துயரம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் துன்பங்களை கேட்டாலும் அழுதுவிடுவர்.

                இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்த குழுவின் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.

                பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகை காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணிநேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்கு கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம்பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை சோதனைக் குழாய்களில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.

                பின்னர் கண்ணீர் வடிந்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்புநீரையும் பேசியல் செய்வது போல் பூசினர். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்கு பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை.

                இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்த பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை துல்லியமாகப் பதிவு செய்தனர்.
                அதே வேளையில் ஆண்களுக்கு காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர்.

                ஆய்வின் முடிவில் கண்ணீர் வடிக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்று முடிவுக்கு வந்துள்ளனர். அதைவிட முக்கியமானது அழுவதால் பெண்களின் அழகு குறையும் என்றும் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

                ஸ்ருதி ஹாசனின் அழகான அழுகை திரையுலகில் மிகப் பிரபலமாக உள்ளதாமே... அப்படின்னா வர இருக்கும் அவரது கணவருக்கு அவரைப் பிடிக்க வேண்டுமே...நாயகன் அழுகையை ரசித்த மக்கள் இந்த நாயகி அழுகையை ரசிக்க விரும்பவில்லையோ...

                ஐயோடா சாமி... அழுதால் அழகும் குறையுமாமே....இந்த சீரியல் நடிகைகளின் கதி என்னாவது?
                “பொண்ணு சிரிச்ச முகமா அழகா இருக்கா” என்று பெயர் வாங்குவது எப்படி? “அவ சரியான அழுமூஞ்சி” என்று பெயர் வாங்குவது எப்படி? அழுதால் கணவனுக்குப் பிடிக்காது, அழுவதால் அழகு குறையும் இவற்றையெல்லாம் தாண்டி சிந்தித்தோமானால், பெண்களின் கண்ணீரே அவர்களுக்கு எதிரி. எவரிடம் தன்னம்பிக்கை இல்லையோ அவரே கண்ணிரை நம்புவார். 'அவர்கள்' திரைப்படத்தில் வரும் கதாநாயகி போல எந்தச் சூழலிலும் அழ மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொள்வது தன்னம்பிக்கையை மட்டுமல்ல நம் மீதே நமக்கு ஒரு நல்லெண்ணம் வளரத் துணையாக இருக்கும். எப்போதும் அழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க எண்ணக் கூடாது.. அது நம்மிடம் உள்ள அச்சத்தையே காட்டும். பெண்களே கண்ணீர் சிந்துவது கண்களுக்கு நல்லது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீராக இருக்கட்டும். அழுகை கண்ணீராக இருக்க வேண்டாம். .இனியொரு விதி செய்வோம். எந்த நாளிலும் அழுவதை விடுப்போம்......


(இது மே 1-15, 2012 குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் ஹெல்த்)

சனி, 17 நவம்பர், 2012

விஜய் டி.வி. நீயா நானா. சிறப்புப் பட்டிமண்டபத்தில் நான்
Published on Apr 16, 2012 by STARVIJAY A Special Debate about the importance of 'Agam' or 'Puram' of Tamil Culture chaired by Thamizharuvi Manian. Featuring Sarada Nambi Arooran, Prof. Rajagopalan, Aarumuga Thamizhan, Prof. Bhanumathi, Poet Nandalala, Prof. Premakumar, Poetess Parveen Sultana, Poetess Vennila & folk singer Angayarkanni,
திங்கள், 12 நவம்பர், 2012

கலர் பார்க்கும் பெண்கள்

                             
                                       
                            
கலர் கலர் என்ன கலர்?” என்ற விளையாட்டு பெரும்பாலும் பெண்களால்தான் விளையாடப்படும் விளையாட்டு. கலர் பார்ப்பதில் பேதைப் பருவம் (குழந்தைப் பருவம்) முதல் பேரிளம் பெண் பருவம் வரை இல்லை இல்லை முதுமைப் பருவம் கலர் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே துள்ளியமான திறமை உடையவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வறிக்கைகள். தவறாக நினைக்காதீர்கள். நான் சொல்வது அந்தக் கலர் விஷயம் இல்லை. இது ஆடைகள் தேர்ந்தெடுக்கும் கலர் விஷயம்.
"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"

"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை.
இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"

"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் கொஞ்சம்
டார்க் மஞ்சளா இருந்தா நல்லா இருந்திருக்கும்"

என்று கணவன் வாங்கி வந்த ஆடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்டில் ஆயுசுக்கும் இவளுக்குப் புடவையே வாங்கித்தரக்கூடாது என்று முடிவெடுக்கும் கணவன்மார்கள் ஒருபுறம், பாவப்பட்டவர்கள் புடவைக்கடையில் வேலை பார்க்கும் ஆண்கள். ஹேங்கர் முழுவதும் சேலைகள் நிரப்பிரிகைகள் காட்டிக்கொண்டு தொங்கும். அவற்றை ஒவ்வொன்றாக ஒரு மூன்றரை மணி நேரம் நோட்டம் விட்ட பின்பு புடவைகள் அடுக்கியிருக்கும் அலமாரி பிரிவுக்கு வருவார்கள். அப்போதே கிளி ஆரம்பித்து விடும் அந்த பிரிவு பொறுப்பு விற்பனையாளருக்கு. அவர்தான் இந்தம்மாவை மூன்றரை மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே. ஒரு மணிநேரம் தேடி சளைத்தபின் இவங்க கருத்துகள் ஆரம்பமாகும்.

இந்தப் புடவையில் இருக்கிற இந்த லைட் ஆரஞ்ச் கலர் பார்டர்
அந்தப் புடைவையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதுமாதிரி ஆர்டர் பண்ணி தர முடியுமா

இந்த லைட் கிரீன் பேக்ரவுண்ட்ல அந்த கருப்பு பூக்கள்
வந்திருந்தால் எப்படி இருக்கும்?
அடுத்த முறை வந்தால் அப்படிக் கிடைக்குமா

என்று கருத்து கூறிக் கேட்கும் பெண்களால் வேலையை விட்டு ஓடிடலாமா என்று விற்பனையாளர்களும் முடிவெடுக்கிற அளவுக்குப் போய்விடுகிறது இந்தக் கலர் காம்பினேஷன் விஷயம்.

ஆனால் ஆண்களுக்கு இந்தப் பிரச்சனையே எழுவதில்லை. ஆம் மனைவிமார்களோ அம்மாவோ காதலியோ எதை வாங்கிக் கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு கிளம்பி விடுகின்றனர் தெருவில் கலர் பார்க்க. வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான் என்கிறது ஆய்வறிக்கை. ஆண்கள் கலர் ரசனையே இல்லாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணமாம். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்!

வண்ணங்களைப் பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள திறனைப் பற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்களும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.   ஆண்கள் அதிகபட்சமாக ஏழு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்து கின்றனர். பெண்களோ சற்றேறக்குறைய முப்பது வண்ணங்களைப் பயன்படுத்து கின்றனராம்.

சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும் இருக்கும். ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது? இதற்குக் காரணம் மரபுணுக்களின் வேலையே என்றும் கூறுகின்றனர்.

மனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபணுக்கள் (chromosome). பெண்களுக்கு இரண்டு வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 வகையும், 1 Yவகை மரபுத்திரியும் இருக்கும். நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு வகை மரபுத்திரியில் இருக்கிறது.

பெண்களுக்கு இரண்டு மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது என்கிறது ஆய்வறிக்கை. 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவிப்பெணி வளர்த்திடும் ஈசன்
என்று பாரதி கூறுவது போல
பெண்ணுக்கு வண்ணத்தைக் கண்டறியும் திறனையும் வைத்தான்

இறைவன். பெண்களுக்கு ஆண்டவன் கொடுத்துள்ள நுட்பங்களில் இந்த நுட்பம் விந்தையானது. ஆனால் கணவன்மார்களை நினைத்துப் பார்க்கையில் சற்று ஆபத்தானது என்று தோன்றுகிறது.  அது கிடக்கட்டும். இன்னொரு சுவாரசியமான தகவல். கலர்பிளைண்டு (COLOR BLIND) எனப்படும் நிறக்குருடு நோய் பெண்களிடம் அதிகம் காணப்படாத்தற்குக் காரணமும் இதனால்தானாம். பாதிக்கப்பட்ட Xமரபுத்திரியினை உடைய ஆண்கள் நிறக்குருடு நோய்க்கு ஆட்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். இரண்டு மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

என்னதான் கலர் பார்ப்பது ஆண்களுக்கே உரிய தனித்திறன் என்று நாம் பதிவு செய்து கொடுத்திருந்தாலும் (அது வேறு கலர்), கலர் பார்ப்பதில் தனித்திறன் பெண்களின் கண்களூக்கே! பெண்களே ஜமாய்ங்க!
(இக்கட்டுரை குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் குழுமம்.)
வெள்ளி, 2 நவம்பர், 2012

மறந்து போன விருந்துகள்


உடலுக்கும் மனத்துக்கும் களிப்பூட்டும் களி
                வேகம் நவீனம் இரண்டும் சேர்ந்து போடும் குதியாட்டத்தில் இன்றைய இளைஞர்களுக்கு நாற்பதுகளிலேயே நரம்புகள் தளர்ந்து போகின்றன. இந்த இளமையைக் கண்டு முறுக்கேறிய வாலிப என்பதுகள் எள்ளி நகையாடுகின்றன. இவற்றுக்கு என்ன காரணம்?. கம்பங்களி நிறைந்த தூக்குச் சட்டியும் கைப்பிடிக் கம்பியில் துணியில் கட்டிய உப்பும் ஒற்றை வெங்காயமும்தான் காரணம் என்கிறது வாலிப என்பது. வெய்யில்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு, கையில் கம்பங்களியுண்டு, கடித்துக் கொள்ள செவந்த சின்ன வேங்காயமுண்டு என்று அகத்திலும் புறத்திலும் உரத்தோடு வாழ்ந்த பொற்காலத் தமிழன் இன்றைய நாகரிக நோயாளிகளைக் கண்டு சிரிக்கத்தான் செய்வான்.

 “கதகதன்னு களி கிண்டி
    களிக்குள்ள குழி வெட்டி
    கருப்பெட்டி நல்லெண்ணெ
    கலந்து தருவாயே
    தொண்டையில அது இறங்கும்
    சுகமான இளஞ்சூடு
     மண்டையிலே இன்னும்
     மசமசன்னு நிக்குதம்மா
                                               
என்று தன் தாய் கிண்டித் தந்த கம்பங் களியைக் கூறி, கேட்போர் நாவில் எச்சிலை ஊற வைப்பார் கள்ளிக்காட்டு கவிஞன் வைரமுத்து.

எண்ணும்போதே களிப்பைத் தருவது களி. உண்டு களித்த தமிழன் களிப்பூட்டும் அந்த உணவுக்கு களி என்று பெயர் சூட்டியுள்ள திறனையும் கண்டு பாராட்டியே ஆக வேண்டும்.

களி எப்படி இருக்கும்? அதை எதில் தயாரிப்பார்கள்? அதை எதிலாவது கலந்து சாப்பிடனுமா, அப்படியே சாப்பிடலாமா? என்றெல்லாம் கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

                கண்ணாடிக் கின்னத்தில் ரசத்தை ஊற்றி அதில் ஒரு சின்னக் கரண்டியைப் போட்டு ஸ்டாட்டர்(சூப்) என்று பெயர் சொல்லி, கொடுத்தவுடன் சோமபானத்தை அருந்துவதைப் போல உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் சாப்ட்வேர் தலைமுறைகளுக்கு எதையும் புதிய பெயர் வைத்துக் கொடுத்தால்தான் பிடிக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் கிரீன் காம்ப் நட் கஸ்டட் மிக்ஸர், பிரவுன் கேப் கூல் கிரேவி என்றெல்லாம் வாயில் வராத பெயர்களை வைத்து, தலையில் குல்லா போட்ட பேரர்கள் பெரிய கலர்புல் டிரேயில் கேப்பைக் களியையும் கம்மங்களியையும் ஒரு வெள்ளைத் துண்டோட கண்ணாடிக் கின்னத்தில் கொண்டு வந்து வைத்திருந்தால் தெரிந்திருக்கும். நம்மவர்கள் மண் சட்டியில் கிண்டி எவர்சில்வர் தட்டில்  (அலுமினிய தட்டு இப்போது புழக்கத்தில் இல்லை) போட்டுக் கொடுத்தால் இவர்களுக்குத் தெரிய நியாயமில்லைதான்.

கம்பம் கொல்லையில
                கதிரொடிக்கும் மச்சினியே
காப்புப்போட்ட கையால
                கம்பம்கூழ் தந்தாலென்ன!

கம்பங்கூழ் காச்சயில
                கம்பங்களி ஆச்சிதல்லோ
 கருப்பட்டி வாங்கிவா
       கம்பங்களி தின்னிடலாம்

 கருப்பட்டி வாங்கிவாறேன்
              கருகுமணியும் வாங்கிவாறன்
   கருக்கல் ஆயிடுமே
                காந்துதல்லோ என் வயிறு!

                என்று நாட்டுப்புறக் காதலன் ஒருவன், தன் காதலியிடம் கூழ் கேட்கிறான், அவள் அவன் நினைவில் கூழ் காய்ச்சுகிறாள். கூழ் இறுகி களியாகிவிடுகிறது. கருப்பெட்டி வாங்கி வந்தால் களிப்போடு தின்றிடலாம் என்கிறாள். அவனோ காந்தும் வயிற்றுக்கு மட்டுமல்ல காந்தும் காதலுக்கும் களிப்பு உண்டாக கருப்பெட்டியுடன் கருகமணியும் வாங்கி வருகிறேன் என்கிறான். இப்படிச் சுவைத்த அற்றை நாள் தமிழனின் முத்தான காதலும் சத்தான களியும் அவர்களைக் கை விட்டு விட்டதா? அல்லது தமிழர்கள் அவற்றைக் கைவிட்டு விட்டனரா தெரியவில்லை. இரண்டுமே காணாமல் போய்விட்டது.

இப்பாடல் களிக்கும் கூழுக்கும் உள்ள வித்தியாசத்தையும் சொல்கிறது.. ஊற்றிக் குடிப்பது போல நீர்மமாக இருந்தால் கூழ். உருட்டித் தின்பதற்கு ஏற்ப கெட்டியாக இருந்தால் களி. துளாவி எடுத்துத் தின்பதற்கேற்ப சோறும் கூழுமாக இருந்தால் கூழ்த்துளாவி. கம்பையோ கேள்வரகையோ வேகவிட்டு வேந்த நீரை வடிகட்டியது கஞ்சி. களியை ஊர வைத்த உப்புத்தண்ணீர் கம்பந்தண்ணி.

கம்பங்களியும் கேப்பைக் களியும்தான் கீழ்த்தட்டு மக்களின் பட்டர்ஸ்காட்ச், சாக்லேட் ஐஸ்கிரீம்கள். கம்மங்கூழும் கேப்பைக்கூழும் புளூபெரி, பிளாக்செர்ரி மில்க் ஷேக்குகள்.

ஆதித் தமிழனுக்கு, கோடையில் குளிர்ச்சியாக்க கம்பும் குளிரில் சூடாக்க கேழ்வரகும் உதவியதைப் போல வேறு எந்த தானியமும் உதவியிருக்காது. ஆனால், பாஸ்தா, பிட்ஸா, பர்கருக்கு மாறிய நகர வாசிகளை விட்டுத் தள்ளுங்கள். கிராம வாசிகளும் இப்போது இட்லி, தோசைக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இலவச ரேசன் அரிசி இவர்களை இப்படி மாற்றியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சத்தற்ற ரேஷன் அரிசியைப் பார்த்து உயிர்ச்சத்தை விடலாமா விவசாயிகளே?


வெய்யிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான உணவு கம்பு. மழைக்கு ஏற்ற சற்று சூடான உணவு கேழ்வரகு. அதனால்தான் கோடைக் காலங்களில் மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் வழக்கம் இருந்து வருகின்றது.

                இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பு மிகவும் சத்து வாய்ந்தது. இருக்கின்ற தானியங்களிலேயே கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். 100 கிராமில் 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது. 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது. ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது. நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

இதயநோயைக் கட்டுப்படுத்துவதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் ஆரோக்கியமான வளர்சதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன. இவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்டம், ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் முதலிய பல முக்கியப் பணிகளைச் செய்கின்றன. அஜீரணம், வயிற்றுப் புண், உறக்கமின்மை ஆகியவற்றுக்கும் கம்பு நல்ல மருந்து.

அட உடலுக்கு மருந்து என்பதை விடுங்க. நாக்குக்கு நல்ல விருந்து களி. களியைச் சூடாக இருக்கும் போது யானைக் கவளம் போல உருண்டையாக உருட்டி, தட்டில் போட்டு உருண்டையின் நடுவில் குழி தோண்டி, நல்லெண்ணையை ஊற்றி,  அதில் கருப்பட்டித் தூளைத் தூவி சாப்பிட்டால் இந்திர லோகத்து சுந்தரிகள் கண்களில் வண்ண வண்ண ஆடையில் குளு குளு என்று வந்து போவார்கள்.. 

 களிக்குத் தோதான பக்க வாத்தியம் ஊறுகாயும், மோர் மிளகாயும். வத்தலும் வடகமும் சரியான ஜோடிதான். அசைவ விரும்பிகள் களிக்கும் கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்புக்கும் உசிரையே கொடுத்துடுவாங்க. அவ்வளவு பொருத்தமான சைடு. இப்போது கோடைக் காலத்தில் இளநீர், நுங்கு விற்பதைப் போல தள்ளு வண்டியில் களியும் கூழும் விற்கத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இதில் சுகாதாரம் அந்த அளவு இருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்பத்தான் களி செய்முறையைச் சொல்லப் போறீங்க என்று கேட்பது புரிகிறது. இதோ..

கம்பை ஊற வைத்து ஈரம் போக உலர்த்திய பின் அந்தக் காலத்தில் உரலில் போட்டு இடித்து முதலில் உமிவேறு கம்பு வேறாகப் புடைத்தெடுப்பார்கள். பின்னர் மீண்டும் குத்தி மாவாக்கினர். இப்போது இருக்கவே இருக்கிறது மிக்ஸி. பெரிய குடும்பம் என்றால் மாவு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம். அதுவும் முடியலையா. மாவே கடையில் கிடைக்கிறது. முதல் நாள் இரவே மாவை உப்பு சேர்க்காமல் தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்து விட வேண்டும். காலையில் அடி பிடிக்காத கெட்டியான பாத்திரத்தில் (காப்பர் பாட்டம் நல்லது) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். கரைத்து வைத்துள்ள மாவுடன் மேலும் நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். கொதித்த நீருடன் இந்த மாவைக் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இறுகி வந்தவுடன் இறக்கி வைத்து சூடாகச் சாப்பிடலாம். இதே செய்முறைதான் கேழ்வரகு களிக்கும். கேள்வரகு களி சூடு என்பதால் அளவோடு உண்ணுதல் வேண்டும்.


களி செய்வதற்கு இதை விடவும் எளிமையான முறையை கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கண்டு பிடித்துள்ளது. மாவைப் போல மூன்று முதல் மூன்றரை மடங்கு தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் கொஞ்சமாக கம்பு மாவை இட்டுக் கலக்கிக் கொண்டே வர வேண்டும். அது தோசைமாவுப் பதம் வந்தவுடன் எடுத்துக் குக்கரில் வைத்து விடலாம். .குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் கேஸை சிம்மில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் கழித்து கேஸை அணைத்து விடலாம். கம்பு மாவு கெட்டியான பதத்திற்கு மாறிவிடும். இப்போது களி ரெடி. களிப்பும் தான். வேலை குறைகிறதே. 

வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமையும் பெற்றுள்ளது. இதன் சிறப்பு ஒரே சீரான அளவில் குருணை இருக்குமாறு அதற்கென ஒரு தர அளவினை நிர்ணயித்துள்ளனர். இந்தக் கலவையைத் தயாரிக்க பேராசிரியர் முனைவர் இரா. கைலப்பன் அவர்களால் ஒரு இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. (அப்படின்னா எதிர்காலத்தில் ரேஷனில் இலவச அரிசிக்குப் பதிலாக இலவசக் கம்பு கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்களோ!!) 

மறக்கடிக்கப் பட்ட களி வகைகளில், வெந்தயக் களி, உளுந்தங்களி மோர்க்களி, உக்களியும் அடங்கும். உக்களி என்பது வெல்லம் சேர்த்து தயாரிக்கப் படும் இனிப்பு வகை. அரிசி மாவும் மோரும் சேர்த்து தயாரிக்கப் படுவது மோர்க்களி. மோர்க்களியும் உக்களியும் அக்காலத்தில் மேல்த்தட்டு மக்களின் சிற்றுண்டிகள். உளுத்தங்களியும் வெந்தயக் களியும் இடுப்புக்கு வலுவைத் தருவன. முக்கியமாக இந்த இரண்டும் வயதுக்கு வந்த பெண்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் மிகவும் நல்லது. குழந்தையைச் சுமக்கத் தேவையான சக்தியை பெண்களின் இடுப்புக்குக் கொடுக்கும் வள்ளல்கள் உளுந்தும் வெந்தயமும். இந்தக் களிகளைப் பற்றியும் சொல்லப் போனால் களி புராணம், பெரிய புராணமாக ஆயிடும்.

ஆகவே உடலில் வலுவூட்டி மனத்தில் களிப்பூட்டும் களி(களு)க்கு ஓ போட்டு. களியைக் கண்டு பிடித்த தமிழனுக்கு ஒரு பெரிய ஓஓஓஒ!! போட்டு, மெல்ல மெல்ல பாரம்பரிய உணவுகளை மறந்து ஃபாஸ்ட் ஃபுட்டுக்குள் சிறைப் பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சாஃப்டான இளசுகளுக்கு அச்சத்தோடு ???? போட்டு களிபுராணம் இதோடு முடிவடைகிறது.


(இந்தக் கட்டுரை 07/11/2012 நாளிட்ட குமுதம் இதழில் இடம்பெற்றது. நன்றி குமுதம் குழுமம்.)