“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 29 டிசம்பர், 2010

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்


பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ஈன்று புறந்தருதல் மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!

உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.
’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய்
இனிக்கும்…, சாம்பல்
ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.

அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.

இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள
மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.

ஸ்காட்லாந்திலுள்ள
எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...

புற்றீசல் போலக்
கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்

அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.


இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது. நானும் ரொம்பவே சிந்திச்சு பார்த்துட்டேன். இது மாதிரி பொமளங்க எல்லாம் என் கண்ணில் மட்டும்தான் படறாங்களா? இல்ல எல்லாரும் கண்டும் காணாம போயிடறாங்களான்னு தெரியல.
அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் விபரீத ஆசையுள்ள பெண்களும் இருக்கிறார்கள். அந்தப் படத்தையெல்லாம் பகிர மனசு வரலை. அதனால் சாம்பிளுக்கு ஒன்னோட நிறுத்திட்டேன்.

தாய்மை ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் இப்படித்தான்.

தன்னை மறந்து கருவில் இருக்கும் தன்
குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,

ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்

முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்

என்று அன்று தொடங்கி
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான். பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம். செயற்கை அழகுப் பொருட்களுக்கு பத்துத் திங்களாவது விடை கொடுப்போம். இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...ஆதிரா...

வியாழன், 23 டிசம்பர், 2010

சாவின் சுவை....

தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா? சாவுக்கு ஒரு சுவையா என்று? எல்லாவற்றிலும் ஒரு சுவை, ஒரு திரில் இருக்குதுங்க। அதை நாம ரசிக்க கற்றுக்கொண்டால் சாவும் சுவைக்கும் தானே।
என்ன பொழப்புடா இது செத்த பொழப்பு என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்கள் சிலர். இன்னும் சிலர் இப்படி வாழ்றத விட செத்து ஒழியலாம் என்று அலுத்துக் கொள்வர். இப்படியெல்லாம் சொன்னாலும் சாவை மட்டும் ஒருவரும் விரும்புவதே இல்லை. அதை விட ஒரு சிலர் என்ன சொல்லி திட்டினாலும் பொறுத்துக்கொள்வார்கள். செத்துத் தொலைய வேண்டியதுதானே என்று ஒரு வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதும்; சொன்னவரைச் சாகடிக்காமல் விட மாட்டார்கள். ஆனா நான் என்ன சொல்ல வர்றேன்னா “ஏம்மா சாவுகிராக்கி; வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு யாராவது நம்பள திட்டினாலும் சுவாரசியமா எடுத்துட்டு சிரிக்கக் கத்துக்கிடனும்। அவ்வளவு சுவையானது சாவு.
சாதலும் புதுவதன்று என்று நம் பாட்டன், அவர்தான் கணியன் பூங்குன்றன் சொன்னது போல பிறக்கும் போதே இறப்பு உண்டு என்பது தெரிந்திருந்தாலும் சாவு என்று சொல்லும் போதே நம் குலை நடுங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் வரும்போதே திரும்பிப் போகப் பயணச்சீட்டோடு வந்திருக்கிறோம்.. நாள் மட்டுமே குறிக்கப் படாத பயணச்சீட்டுடன் (Return Journey) வந்துள்ளோம் என்பது கண்டிப்பாக நாம் அறிந்ததே. குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் (RAC) என்று கூறிக்கொள்ளலாம். புறப்பட்ட இடத்துக்குப் போய்த்தானே ஆக வேண்டும் என்பதும் தெரியும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியை, வாய் நிறைய அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாலும் உள்ளூற பயம். அப்படி என்ன பயம் இந்தச் சாவில்.
இதைவிட சாவு நிகழ்ந்த வீட்டில் அழுகை வந்தாலும் வராவிட்டாலும் அழுதாக வேண்டும் என்று அழுபவர்களைப் பார்த்தால், பட்டினத்தார் பாடும் பாடலடிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
செத்துகிடக்கும் பிணத்தருகே இனிசாம் பிணங்கள்
கத்தும் கணக்கென்ன? காண்கயிலாயபுரி காளத்தியே!
என்று கிண்டல் செய்வதைப் பார்த்தால் இந்த ஆசாமிகள் மாதிரி நாம் இருக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் பட்டினத்தாரும் தன் தாயின் சாவுக்கு இரங்கி
நொந்து சுமந்து பெற்று நோவாமல்
ஏந்தி முலைதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்!
என்று அழுத பாடல்கள் இன்றளவும் தாய்மையின் சிறப்பைக் கூறி நிற்கிறது.
இந்தச் சாவு பாருங்க எல்லோருக்கும் ஒரே மாதிரி வருவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக வருகிறது. தூங்கிக்கொண்டு இருக்கும் போதே சிலர் மரணத்தை அடைந்து விடுகின்றனர். மரணமும் ஒரு தூக்கம் தானே. அதனால்தான் சாவைச் சொல்லும்போது உறக்கத்தோடு ஒப்பிடுவார் வள்ளுவர்.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்பார். தூங்கி விழிப்பது போல பிறப்பும் இறப்பும் என்று கூறுவார்.
ஒரு சாவில் பிறந்ததே ஒரு பெரும் சமயம் என்றால் அந்தச் சாவு குறித்தத் தெளிவு நமக்கு வேண்டுமல்லவா? இறப்புக் கொடுமையைப் பார்த்துப் பயந்ததால் ஒரு சமயமே உருவாகியது என்றால் இறப்பு எத்தனை கொடுமையானது. ஒரு முடிவின் (சாவின்) ஆரம்பமே, சித்தார்த்தரைப் புத்தராக ஆக்கியது, புத்த சமயத்தைத் தோற்றுவித்தது எனலாம்.
சமீபத்தில் இணையத்தில் ஒரு மருத்துவக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.. நல்ல நம்பிக்கையூட்டும் கட்டுரை. மருத்துவக் கட்டுரை. படித்தவுடன் அக்கட்டுரைப்படி நடந்தால்....எப்படி இருக்கும்? என்ற கற்பனைச் சிறகுகள் விரிந்து கொண்டே சென்றன.
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறது அம்மருத்துவ கட்டுரை. பிறகென்ன.... அப்படியென்றால் இறப்புத் துக்கமே காசு உள்ள செல்வந்தர் இல்லங்களில் இனிமேல் இருக்காது. மனித வாழ்வு நிலையற்றதாக இருக்கும் போதே இத்தனை ஆட்டம் போடும் பணக்கார வர்க்கம். பணத்தால் உயிரை வாங்க முடியும் என்றால் பிடித்த உயிர்களை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து, வைத்துக் கொண்டு கும்மாளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அரசியல் வாதிகள் கேட்கவே வேண்டாம். தங்கள் அபிமான ரவுடிகள், கள்ள ஓட்டுப் போடும் ஆசாமிகள் என்று எல்லோரையும் எத்தனை கோடி கொடுத்தேனும் காப்பாற்றி விடுவார்கள். தலைவனுக்காகத் தீக்குளிக்கும் தொண்டர்கள் கூட்டம் பெருகும்.
மனைவிமார்கள் எல்லாம் அதான் பணமும் தர்றேன்; உயிரையும் காப்பாத்தித் தரேங்கறாரே; போய்யா போய்த் தீக்குளிய்யா என்று தங்கள் கணவன்மார்களைத் நச்சறிக்க ஆரம்பித்து விடுவார்கள்...
தன் குடும்பத்துக்கு ஏதோ சிறிதளவு பணம் கிடைக்கிறது என்னும் போதே உயிர்த்தியாகம் செய்ய எண்ணும் தொண்டர்ப் படை, தன் உயிரே திரும்ப கிடைக்கும் என்றால் என்ன செய்யத் துணியமாட்டார்கள். என் தலைவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் உயிர் விடுவேன் உயிர் தலைவனுக்கு உடல் மண்ணுக்குபோன்ற மேடைகளில் எப்போதும் ஒலிக்கும் வீர வசனங்களுக்கு உயிர் வந்து விடும்.
இது கெடக்குது. சந்திரன் இந்திரன் எங்கு வீடு கட்டிக் குடியேறினாலும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இப்போது அவசர அவசரமாக கட்டப்படும் அடுக்கு மாடி வீடுகளும் கிடைக்காமல் போகும். ஒவ்வொரு அலமாரியிலும் ஒவ்வொரு குடும்பம் உட்கார்ந்தே தூங்க வேண்டியிருக்கும். அப்ப்பபா.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது.!!!
இப்படி வரிசை வரிசையாகக் கற்பனை எழுந்தாலும் ஒரு முன்னேற்றம் ஏற்படுகிறது என்றால் குறைகளைக் களைந்து அதனை ஏற்றுக்கொள்ளுவதே அறிவுடைமை.
ஆனால் இந்தச் சாவு என்பது என்ன? செத்தாரைக் காப்பாற்றுவது என்பது குறித்து மருத்துவ அறிவியல் என்ன கூறுகிறது என்று பார்க்கும் முன் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.
ஒருவர் திடீரென்று இதயத்தைப் பிடித்துக் கொண்டு மார்பு வலி என்கிறார். ஐந்தே நிமிடத்தில் படுத்து விடுகிறார். அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன முதலுதவி பலனின்றி இறந்து விடுகிறார். என்ன நடந்தது இருக்கும்? இரத்தம் இல்லை. கத்தல் இல்லை. ஆனால் இருதயமும் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. மூளை பிராண வாயுவைச் சேமிப்பதற்கான் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விடுகிறார்கள். இதனை மூளைச்சாவு என்கின்றனர்.
முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல் இருக்கும் நிலை ஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.
இறப்பு என்பது என்ன? இரத்த அணுக்களின் அல்லது கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னரே அவனது செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. அவர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் மூளைச் செல்களையும் இயங்க வைக்க முடிந்திருந்தால் அவர் பிழைத்திருப்பார்.
இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. University of Pennsuylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியம் ஊட்டும் உண்மை வெளிப்பட்டது. இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் அந்த மனிதனது (அல்லது பிணத்தினது) கலங்கள் உயிரோடு இருந்தனவாம். வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நதார்..
இறந்து சில மணி நேரங்கள் செல்கள் உயிரோடு இருந்த போதும் மருத்துவர்களால் ஏன் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் முதல் ஐந்து நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்ததால், பின்பு அக்கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைத்த போதும் அதை ஏற்றுக்கொள்ளும் வலு செல்களுக்கு இல்லாது போய் விட்டது.
இருதயம் நின்று விட்ட ஒருவரை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்க்க குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஆகிவிடுகிறது. இது மிகவும் குறைவு. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க ஆக்சிஜன் பம்ப் செய்யப் படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த செல்களை ஆக்சிஜனில் மூழ்கடிக்கிறார்கள். இது அவற்றின் மரணத்திற்கு ஏதுவாகிறது..
மாற்று சிகிச்சை முறையில், அதாவது இரத்தக் குழாய்களை இரத்தத்தால் நிறப்பாமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தைச் செயற்கையாகக் heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இதயத்தைத் துடிக்க வைத்தால். 80 சதவிகித இதய நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்கிறது ஆய்வு.
அத்துடன் இரத்தத்தின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், ஆக்சிஜனால் வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைக் குறைக்க முடியும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஐசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். (நன்றி மருத்துவர் எம்.கே.முருகானந்தன்)
மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். நுரையீரல்,சிறுநீரகம்">சிறுநீரகம், போன்ற உறுப்புகளையும், திசுக்களையும் தானம் செய்யலாம் இவையெல்லாம் நாம் அறிந்தவையே. ஆனால் இந்த மூளைச் சாவு பற்றி நம் முன்னோர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பது நாம் அறியாதவை..
நான் என்ன கூறப்போகிறேன்.. வழக்கமாகக் கூறுவதைப்போல வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் அறிவுத்திறனை எடுத்துக்கூறப் போகிறேன்.. அவ்வளவுதான். எப்போதும் போல் நம்மவர்கள் அடக்கமாகவே இருந்து அமரர்களானவர்கள். அதிலும் சித்தர்கள் எதையும் மூடி மறைத்து அடங்கித் தம் திறமையை வெளியுலகுக்குக் காட்டாமலே பித்தர்களைப் போலத் திரிந்தவர்கள். ஆனால் இவர்களிடம், இந்த நுன்னறிவு எங்கிருந்து வந்தது என்பதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இன்றுவரை இருக்கிறது.
சாவாமையை வேண்டி மருத்துவர் இடைக்காட்டுச் சித்தர் எப்படி நுட்பமாக வரம் கேட்கிறார் என்பதைப் பாருங்கள். இது வெறும் பால் கறக்கும் பாடல்தான். பால் மனிதனின் பிறப்பிலும் இறப்பிலும் சம்பந்தப் படும் பொருள் ஆயிற்றே. சாவாமல் இருக்க வேண்டுமென்றால் மூளை செல்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்திய இதய நோய் வல்லுநராக என் கண்களுக்குக் காட்சி அளிக்கிறார் இவர் நீங்களும் பாருங்கள் பாடலை.
சாவாது இருந்திட பால்கற - சிரம் தன்னில் இருந்திடும் பால்கற வேவாது இருந்திட பால்கற - வெறு வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
என்று அன்றே இறவாமை வேண்டி பாடியுள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அப்போது நம்ம இராமராஜனும் இது போல தத்துவங்கள் ஏதேனும் கூறியிருப்பாரோ என்று எண்ணுவது புரிகிறது. இவர் பாடலையும் ஆராய்ந்துவிட வேண்டியதுதான். இந்தப் பால் குறித்து சித்தர்கள் பலரும் பல்வாறு கூறியுள்ளனர். நான் சாவாமல் இருந்தால் இன்னும் சாவின் சுவை அடுத்த பதிவிலும் கூடும்..
நன்றி குமுதம் ஹெல்த்.

திங்கள், 13 டிசம்பர், 2010

காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG44QiezxV24aajy-WVXk18CvjJpDRe6KSWW4FoSMGXKZZv2Zd4UscnWPKxhHc_VwR37YUuoauTsjc571kCdirjmPDK1Q8UMdHxmyMchyvLOXfNs2BfERlgk9ou0eGhnShjtcgvmMUK75B/s320/kagirahoo+1.jpg
வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. பரவலாகப் பல வலைத்தளங்களில் பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது. 
       சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.
       ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது.
       இதைத்தான் நம் நவரச நாயகன் கட்டிப் பிடி வைத்தியம் என்று அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.
       அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர்.”இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் ரொம்பப்பழசு” என்று ஜூரிஜ் பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் செப்புவது?
       கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவத்தையும் சேர்த்தே பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.
       சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.
       இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ’புணர்தல்’ என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர். ஆதலால் ’இருத்தல்’ என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ’ஊடல்’ என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் ’இரங்கல்‘ என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ’பிரிதல் ‘ என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.
       பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது. மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழர் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பதை தாம் படைத்தளித்த இலக்கியம் வாயிலாகச் சுட்டிச் சென்றுள்ளனர்.
       சங்க இலக்கியத்தில் ‘பசலை நோய் ‘ என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு, உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன் நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி, மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் .நம் மேனி கருத்து இளைப்பதற்கும் காதல் கொண்டவரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் அவரது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். மற்றவரது உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரை அனுபவத்தவர்களுக்கு நன்கு புரியும். இதனை நீர் இறைக்காத கேணியில் நீரின் மீது படர்ந்து இருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.

“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலைக் காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விடுவழி பரத்த லானே”

காதல் என்பது நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்தும் இரண்டும் ஆவது காதல். அதனால்தான் திருவள்ளுவரும்
       நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய் என்கின்றார். இதனைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ” என்று தலைவி கூறுவது. குறள் இதோ,
“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“

       மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.
“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“

       மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. ”விளக்கு மறைவினைப் பார்த்துக் கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவதல் எப்போது மறையும் என்று பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது” என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.

“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”

       அதுமட்டுமா? ”புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த) தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே” என்றெல்லாம் தலைவியைப் புலம்ப வைத்ததென்றால் அது நோய்தானே? சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலைப் பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி, “அது கொள் தோழி காம நோயே” என்று ஒருத்தி, ”நோய் தந்தனனே தோழி” என்று ஒருத்தி, ”வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்றுஇந்நோய்” அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம் என்று ஒருத்தி இப்படி காம நோய் கண்ட பெண்கள் புலம்பியுள்ளனர்.
       “சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி” என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? ’உள்ள நோய்’, ’வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய்’, ’ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய்’, என்றெல்லாம் கடுமையாகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.
       ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட மனநோயாளியாகவே (ஹிஸ்டீரியாபோலவே) தலையில் முட்டிக்கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் ஐயோ! எந்நோயை அறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று அலறிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக் காட்ட முடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.
“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே”

       மெல்ல மெல்ல உயிரைப் வதைக்கும் மன நோய் இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன் தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
       இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை, ”மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே” என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ ஆய்வு.. இதை இன்றுதான் நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.
       உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம். இதோ,
“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”
       இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..
”பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ”

       பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறுஉண்டா? என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?
”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு”
       காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).
       இன்னும் கூறப்போனால் சங்கப் பாடல்களில் 78 விழுக்காடு காதல் பாடல்கள். வாழ்வியலை அகம் புறம் என்று வகுத்துக் கொண்ட சங்கத்தமிழன் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..
       இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம். 
-    ஆதிரா முல்லை

நன்றி  குமுதம் ஹெல்த்

திங்கள், 6 டிசம்பர், 2010

நீங்க மனித எடை குண்டா!!!! கவலையை விடுங்க!! புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம்।!!

நீங்க வெயிட் பார்ட்டியா? வெயிட்டைக் குறைக்க நாங்க இருக்கிறோம் , கவலையை விடுங்கன்னு பல நிறுவங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிளம்பி விட்டனஅவற்றின் குறி கண்டிப்பாக உங்கள் உடல் மீது இல்லைவேறு ஒன்றின் மீதுதான்இந்த நிறுவனங்கள் எந்த வெயிட்டைக் குறைக்கப் போகின்றன என்றால் நிச்சயமாக உங்கள் உடல் எடையை இல்லைங்கஅப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டா உங்களைக் கணக்கே போடத்தெரியாதவங்கன்னு, ஏற்கனவே அறைத்த மொளகா சட்டினியைக் கூட உங்க தலையில் அறைக்க ஆரம்பிச்சு அதற்கு அறைவைக் கூலியாக உங்க பர்சோட எடையைக் குறைத்து காண்பித்து விடும் இந்நிறுவனங்கள்அதனால் ஜாக்கிறதையாக இருக்க வேண்டியது உங்க கடமை.முக்கியமாக சாலைகளில் பயணம் செய்யும் போது ரெண்டு பக்கமும் பெரிய பெரிய போர்டுகளில் உள்ள விளம்பரங்களைப் பார்த்தால் கண்டிப்பாகக் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். அல்லது ஒதுங்கி போய்விடுங்கள். இப்போது நூதனமாக ஆட்டோ, வேன், முக்கியமாக பள்ளிக்கூட பஸ்கள் எல்லாம் இந்த சமுதாயக் கடமையில் களம் இறங்கி விட்டன.எங்கேயாவது உங்கள் கண்கள் அவற்றைப் பார்க்கப்போய் நீங்க இளைக்கிறீர்களோ இல்லையோ, பாவம் உங்க மணிபர்ஸ்.அதுக்கு உடல் இளைப்பு நோய் வந்துடும்.


இந்தியத் துணைக் கண்டத்தில் ‘வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்று அடிக்கடி இலக்கிய வாதிகள் கூறக்கேட்டிருப்போம்। வாளோடு பிறக்க முடியுமா? அந்த அன்னையின் வயிறு என்ன ஆவது? பத்து மாதமும் வாளும் வளர்ந்ததா? அப்படியே இருந்ததா? வாலோடு வேண்டுமானால் பிறந்திருக்கலாம்। குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்।அப்பொழுது ஏனிந்த பில்டப் கொடுத்தார்கள் என்று கேள்விகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் மாற்றாரின் தலைகளை அறுப்பதுடன், நம் மண்ணில் விளைந்த தழைகளை அறுத்து உண்டு நோயின்றி வாழவும் வாளொடு பிறந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்।

அவர்கள் வீரம் மட்டுமின்றி உடலோம்பும் விவேகமும் நிறைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன। இலக்கியத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூற அவ்வப்போது ஆசைப்படுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள்। ஆனால் ஏன் என்றே தெரியவில்லை தமிழ் ஏடுகளில் இருக்கின்ற, தமிழர்கள் பயன்படுத்திய எளிமையான மருத்துவ முறைகளை எடுத்துக் கூற அவர்கள் விரும்பவில்லை.
இதெல்லாம் நமக்கு ஒத்து வராது ஆளை விடுங்கன்னு சொல்லிட்டு கடைவிரிச்சு இருக்கிற எம்.டி.,எம்.எஸ்ன்னு நாம தேட ஆரம்பித்து விடுகிறோம்.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே”

ன்று பாடிப் பரவசப் படுவான் பாரதி. நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று பாரதி கூறுவது சற்று மிகையாகத் தெரிந்தாலும், வாழ்ந்த காலத்தில் நோய் நொடியின்றி வாழ்ந்து முடிந்தனர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. நோய் என்பது உடல்நோய், மன நோய் இரண்டையும் குறிக்கும்; நொடிதல் என்பது நோயினால் நிலை குலைந்து போதல். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வம் குறைந்து இருந்தாலும், வறுமை நிறைந்து இருந்தாலும் நாம் நிலை குலைந்து போக மாட்டோம். ஏனென்றால் செல்வம் என்பது சிந்தையின் நிறைவுதான். ஆனால் நோய்தான் நம்மை நொய்ந்து போக வைக்கும்.
நம் முன்னோர்கள் உணவுக்குள் பொதிந்திருந்த நலவாழ்வின் சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தார்கள். வருமுன் காக்கும் நோய் தடுப்பு மருந்துகளும், நோய்க்கான மருந்துகளும் அவர்கள் உண்ட உணவிலேயே இருந்தது. அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவர்கள் உணவை மருந்தாக உண்டது முக்கிய காரணம்.
ல்இன்று?!!!... உணவுக்குப் போகும் முன்பு மெக்கானிக் டூல் கிட்டை திறப்பதைப் போல ஒரு பெரிய பையைக் கையில் எடுப்பார்கள்அந்தப் பையில் இருந்து பல கலர்களில் பத்து பதினைந்து மாத்திரைகளை உள்ளே தள்ளிய பின்தான் உணவை உள்ளே தள்ளுவார்கள்எத்தனை மாத்திரைகளை சாப்பிட்டாலும் உணவு விஷயத்தில் மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளையும் இவர்களால் கடைபிடிக்க முடியாதுகேட்டா சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் வீக் என்பார்கள் இந்த போஜனப் பிரியர்கள்। ஞானிகள் என்று கூறிக்கொள்கிற ஆன்மீக வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல। இவர்கள் ஞானக்கிடங்கு என்று தாங்கள் வளர்க்கின்ற தொப்பைக்கு ஒரு சப்பைக்கட்டும் சொல்லிக் கொள்வார்கள்।
நகைச்சுவை நடிகர் என். எஸ் கிருஷ்ணன் கனவு கண்டது போல, வீட்டில் இருந்து (டெலி·போன்) பட்டனைத் தட்டினால் பிட்ஸாவும் சிக்கன் சிக்சிடி·பைவும் வீடு தேடி வரும் வேக உலகமாக மாறிவிட்டது இன்று. இதுதான் சரியான சமயம் என்று காத்திருக்கும் நோய்களும் தன் வேகத்தைக் கூட்டிக்கொண்டு கதவைத் தட்டாமலேயே உடல் ஆகிய வீட்டின் உள்ளே நுழைத்து விடுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி உணவாலேயே மருந்து தேடும் நிலை அதிகரித்து விட்டது.
ஒரு காலத்தில் மக்கள் ஊருக்குள் உலவி வந்த நிலை மாறி இன்று உலகம் முழுவதிலும் சர்வசாதாரணமாக உலவத் தொடங்கி விட்டனர். தொலைத்தொடர்பு புரட்சியும் அயல் நாட்டுக் கலாச்சாரத்தை நம் நாட்டில் குடி புகுத்திவிட்டது. அதில் முதலிடம் பிடிப்பது உணவுக்கலாச்சாரம். அண்டை மாநில உணவுகள் மட்டுமன்றி அயல் நாட்டு உணவுப் பழக்கமும் நம்மைத் தொற்றிக்கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலுக்குச் சென்றால் பூரி கிழங்கு சாப்பிட்டால் பெரிய விஷயமாக இருந்தது. இப்போது அமெரிகன் மக்ரொணி, இத்தாலியன் பாஸ்தா, சைனிஸ் ஸ்க்விட், மெக்சிகன் நாச்சோஸ், ஆஸ்திரேலியன் காங்க்ரு மீட் என்று அகில உலக உணவையும் உண்பது சின்ன விஷயமாகி விட்டது. ஹோட்டலுக்குப் போய் இட்லி, தோசை என்று கேட்டால் வந்துட்டான்யா நாட்டுப்புறத்தான் என்பது போல ஏற இறங்க பார்ப்பதில் நாம் கூனி குறுகி போக வேண்டியுள்ளது. இந்த உணவு வகைகளை அறியாதவன் இந்த உலகில் வாழவே தகுதி இல்லாதவன் என்ற எண்ணமும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிலவி வருகிறது.
இதனால் வந்ததுதான் ஒபிசிடி(Obesity) என்ற உடல் பருமன் நோய்நான்கு அடி எடுத்து வைக்கும் போதே வாயாலும் மூக்காலும் விடுகின்ற பெருமூச்சால் ஒரு காற்றாலையையே உருவாக்கி விடுவார்கள். தொப்பையைக் குறைக்க பெல்ட் போடுவார்கள். ஜிம்முக்குப் போவார்கள். அங்கு மெஷின்கள் இவர்களின் உடலைக் கடைசல் பிடிக்கும்.
https://mail.google.com/mail/?ui=2&ik=9761aa1dcf&view=att&th=12cc07dde43f43c9&attid=0.3&disp=inline&realattid=de1dc595d432390_0.3&zw
அந்த மெஷின் பெல்ட்டுக்குள் இவர்கள் சிக்கித் தவிப்பத்தைப் பார்க்கும் போது பாற்கடலை கடைந்த மந்திர மலை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தான் எண்ணத்தோன்றும்உடல் பருமன் கரைகிறதோ இல்லையோ பர்ஸின் பருமன் கரைந்து விடும்.

http://photos.demandstudios.com/getty/article/142/170/89792413_XS.jpg

பாவம்ங்க.. இவங்க.. எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்க தொப்பையைக் குறைக்க. இந்த பருத்த உடல் காரர்களுக்கு தமிழ் ஏட்டில் கூறப்பட்டுள்ள எளிய மருத்துவம் இதோ.

“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏர கத்துச் செட்டியா ரே”
ஒன்றும் புரியவில்லையா? ஒரு சில சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவிட்டால் நோய் எது, மருந்து எது என்று உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும். இப்பாடலில் உள்ள எல்லாச் சொற்களும் இரு பொருள் தருவன.
v காயம் என்றால் உடல் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. வெங்காயம் என்பது நீர் நிறைந்த (குண்டான) உடலையும், மருத்துவ குணம் நிறைந்த அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தையும் குறிக்கும்.
v பெருங்காயம் என்பது பெரிய (பருத்த) உடல், சமையலுக்கு மணம் சேர்க்கப் பயன் படும் கூட்டுப்பெருங்காயம் என்ற இரு பொருளைக் குறிக்கும்.
v இச்சரக்கு என்பது நோய் சுமந்த உடலையும், (அந்தச் சரக்கு இல்லங்க) இப்பாடலில் கூறப்பட்டுள்ள சுக்கு, வெந்தயம், சீரகம் என்ற பல சரக்குப் பொருளையும் குறிக்கும்.
v சீரகம் என்பது நோயற்ற சீரான உடலையும், அஜீரணம் இன்றி உணவைச் செரிக்க வைக்கும் பலசரக்குப் பொருளையும் குறிக்கும்.
v வெங்காயம், பெருங்காயம், இச்சரக்கு என்ற சொற்கள் எல்லாமே உடல் பருமனைக் குறித்த சொற்கள்.
v ஏரகத்துச் செட்டியார் என்பது திருவேரகம் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைக் குறிக்கும். முருகனைச் செட்டியார் என்று கூறியது ஏன்? செட்டியார் என்பது சாதிப் பெயரா? முருகன் எண்ணெய் செக்கு வைத்திருந்தாரா? ஒரு செட் (இரண்டு) மனைவிகள் உடையதால் செட்டியாரா? என்று பல கேள்விகள் எழுவது தெரிகிறது. அக்காலத்தில் வணிகத்தில் பெயர் போனவர்கள் செட்டியார்கள். முருகன் யார்? சிவன் மகன். சிவன் யார்? வளையல், விறகு இவற்றையெல்லாம் விற்ற வியாபாரி. சிவன் வியாபாரி என்றால் அவன் மகன்? அப்போது முருகன் செட்டியார் தானே.
இப்போது மருந்துக்கு வருவோம். வெங்காயம் பார்க்கப் பளபளப்பாக இருக்கும் வெங்காயத்தின் உள்ளிருப்பது வெறும் நீர்தான். வெற்றுத் தோல் தான். உரிக்க உரிக்க உள்ளீடு ஒன்றும் இருக்காது. மண்டைச் சுரப்பு மாமனிதர் பெரியார் வெங்காயம் என்று அடிக்கடி கூறியது ஏன் என்று புரிந்து இருக்கும். அது போலத்தான் வெற்று நீர் நிறைந்த குண்டு உடல்.
வெங்காயமும் மருத்துவ குணம் நிறைந்தது தான். இப்பாடல் சுட்டுவது உருவத்தைதான். வெங்காயத்தில் இன்சுலின் ஊள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்து வெங்காயம். உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பங்கும் நீர் என்றால் அது ஊளைச்சதை.
சுக்கு இளைத்துச் சுருங்கி காணப்பட்டாலும் மருத்துவ குணம் நிறைந்தது. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பர். உடலைச் சுக்கு போல ஒல்லியாக வைத்துக் கொண்டால் எந்த மருந்தும் தேவையில்லையாம். சுக்கை உணவில் பயன் படுத்தி வந்தால் நோய்ப்பையாய் உடலைச் சுமக்கத் தேவை இருக்காது. “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு" என்ற பழம்பாடல் சுக்கு அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதைச் சுட்டும்.
வெந்தயம் தமிழ் மருந்துகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை ஒல்லியாகவும், குளிர்ச்சியாகவும் வைக்கும் அருமையான, அன்றாட உணவில் பயன்படுத்தும் மருந்து மற்றும் உணவுப்பொருள். வயிற்றுக்குள் குளு குளு ஏசியை பொருத்தும் தன்மை இதற்கு உண்டு.
சீரகம் உண்ட உணவைச் செரிக்க வைக்கும் மருந்துப் பொருள்களில் முதலிடம் பிடிப்பது. ஹோட்டல்களில் பில்லுடன் பெருஞ்சீரகத்தை வைப்பார்கள். சிம்பாலிக்காக உண்ட உணவுடன் பில்லைப் பார்த்த அதிர்ச்சியும் ஜீரணம் ஆவதற்காக. அகம் என்றால் உள்ளுறுப்பு. குடல், போன்ற அக உறுப்புகளைச் சீராக வைப்பதால் இதற்கு சீரகம் என்று பெயர்.
பெருங்காயம் உணவுக்கு நல்ல மணத்தைத் தருவதுடன் சீரகத்தைப் போன்றே செரிமானத்துக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்। வாயுத்தொல்லைக்கு மிகச்சிறந்த நிவாரணி। சீரகம் இருந்தால் பெருங்காயம் தேவையில்லை। சீரான உடல் இருந்தால் போதும் பெருங்காயம் தேவையில்லை। (பெருங்காயம் - பருத்த உடல்)। ஒரு மருந்தால் நல்ல உடல் நிலையைப் பெற்றுவிட்டால் ஏன் அடுத்த மருந்தை நாடப்போகிறோம்? அதனால் தான் சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் என்கிறார்।
இவர் மட்டுமல்ல இன்னொரு சித்தர் கூறுவதைப் பாருங்கள்.
” வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி”
இங்கு, குதம்பைச் சித்தர் எதனையோ வேண்டாம் என்று கூற வந்தாலும், அதற்கு அவர் கூறும் காரணம், சுக்கும், மிளகும் இருக்க வேற எதுவும் தேவையில்லையாம் நன்காயத்திற்கு (நல்ல உடம்புக்கு).
இந்த நான்கு பலசரக்குப் பொருள்களுக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னர் வர இருக்கும் வாரங்களில் பார்க்கலாம்.
‘மீதூண் விரும்பேல்’ என்பார் ஒளவையார். எதிலும் அதிகம் என்பது ஆபத்திற்கு அருகில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வேதத்தின் தலைவனான ஐயன் திருவள்ளுவரும்,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்பார். .
மாரல்: உடல் வெங்காயம் போன்று குண்டாக இல்லாமல் சுக்கு போல ஒல்லியாக, ஒடிசலாக, சிக்கென இருந்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்அழகுக்கு அழகுஇந்த தந்திரம் அடங்கிய சுக்கு, மிளகு,வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்அத்துடன் குறைந்த அளவு வீட்டை பெறுக்குதல், துடைத்தல் என்ற சிறு சிறு வேலைகளைச் செய்யுங்கள்..உண்பதை இன்னும் கொஞ்சம் வயிற்றில் இடம் உள்ளது என்று எண்ணும்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.உடல் பருமனைப் புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம் .
பானுமதி
ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்