“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
 
உங்கள்
ஆதிரா..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

என் ஆருயிர் தோழி அனிதாவுக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 
என்றென்றும் இதே இனிமை உன் வாழ்வில் உடன்வர.. 
இறையருளை வேண்டுகிறேன்.

வியாழன், 20 அக்டோபர், 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
சிறகு....உணர்வுகளை
கனவுகளை

லட்சியத்தை
ஒவ்வொரு
இறகாக
உதிரச் செய்த
உறவுகளை
உதிர்த்துவிட்டு
பறக்கத் தொடங்கினேன்!!
சிறகே இல்லாமலும்  

வானத்தில் 
பறக்கக்
கற்றுக் கொடுத்தது

நட்பு !!
(என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!

 


இன்று உலகெங்கும் இனிமையாகக் கேட்டுக்கொண்டு இருப்பது ஒரே மொழி. அனைவருக்கும் பொதுமொழி  இந்த ஒரே பொது மொழிக்குச் சாதி தேவையில்லை. மதம் தேவையில்லை, இனம் தேவையில்லை, மொழி தேவையில்லை, ஏன் இம்மொழியைப் பேச வாயே தேவையில்லை. கண்களே போதும். ஆம், அதுதான் காதல் மொழி. கண்கள் நடத்தும் காதல் உரையாடலில் வாய்மொழிக்கு இடமிருக்காது. திருவள்ளுவரும் பார்வை பேசும் காதல் பரிபாஷயின் போது செயல் இழந்து போகும் வாய் மொழயை,

கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில
என்று கூறுவார்.

காதலை வரவேற்கும் அழகிய தோரண வாயில்கள் கண்கள். அழகாக அசைந்து மூடித்திறக்கும் இமைகள்தான் கதவுகள். ஆம் விழியின் வழியாக இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உன்னதமானது காதல். இந்தக் காதல் நாடகத்தில் மன உணர்வுகளைக் காட்சிகளாக அமைப்பது கண்களே. காதல் குறிப்போடு பார்க்கும் முதல் பார்வையே காதல் பரிமாற்றத்திற்கு அரிச்சுவடி. தமிழரின் காதலுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியர் கண்கள் எழுதும் காதல் முன்னுரையை,

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை

என்பார். நாட்டம் என்றால் கண் அல்லது பார்வை என்று பொருள்.

தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும். திருவள்ளுவர் காமத்துப்பாலில் மட்டும் 52 குறட்பாக்களில் கண்கள் பேசும் காதலைப் பற்றிக் கூறுகிறார். கம்பரோ இராமனும் சீதையும் மெய் மறந்து நோக்கிய காதல் பார்வையை,

கண்ஒடு கண்இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்

என்று படம் பிடிப்பார். இதிலிருந்து கால காலமாகக் கண்கள் காதலுக்குச் செய்து வரும் உதவி நன்கு புரியும். அதிலும் இடக் கண்ணுக்கும் காதலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு. என் இடது கண்ணும் துடித்தது, உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் என்பாள் காதலி.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

என்றுரைத்து தன் கண்களின் கருமணியில் உள்ள பாவையை நீ போய்விடுஎன்கிறான் வள்ளுவத் தலைவன், தான் விரும்பும் பாவையாகிய தலைவிக்கு அங்கு இடம் இல்லாததால்.(குறள்-1123)
        வள்ளுவர் படைத்த தலைவியோ கண்களை இமைக்க மாட்டேன் என்கிறாள். (குறள்-1129) கண்களுக்கு மை எழுத மாட்டேன் என்கிறாள். (குறள்-1127) இமைத்தாலும் மை எழுதினாலும் தலைவன் கண்களைவிட்டு மறைந்து விடுவான் என்கிறாள். இதனால் பெரும்பாலும் காதலை வளர்ப்பது கண்களே எனலாம். இதுவும் வள்ளுவன் வாய்மொழியே. 
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

காதலுக்கு மட்டுமா? கருணைக்குக் கண்களை விட யார் தாயாக இருக்க முடியும். அருகில் இருக்கும் பிற உறுப்புகள் படும் வேதனைக்குக் கண்ணீர் விட்டு அழுவது  கண்களே. இக்கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?

எங்கோ ஒரு மூலையில யாருக்கோ துன்பம் என்றால் இங்கிருந்து கண் கலங்குகிறதே இதனைத் தான் கண்ணோட்டம் என்று திருவள்ளுவர் கூறுவார். கண்ணோட்டத்தினால் உலகியல் நடக்கிறது என்றுரைத்து       
    “கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்  
     புண்ணேன்று கருதப் படும்”
என்றும் கூறுவார்.
ஐம்புலன்களில் அறிவைப் பெற்றுத்தருவதில் கண்களே முதலிடம் பெறுகிறது. கற்றவரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடயார் என்றும் கூறுவதால் கல்வியின் அடையாளம் கண்கள் என்பதை அறியலாம். இதனை அறிவுக்குறியீடு என்றும் கூறலாம்..

கண், ஒரு நோய் அறிவிப்பாளர் (indicator). உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை அறிவிப்பது கண்களே.. வண்ண ஜாலங்கள் காட்டி நோயைக் காட்டிக் கொடுத்து விடும். சூட்டு நோய் என்றால் செவ்வறி ஓடிய அழகிய கண்கள் ஒரேயடியாகச் சிவந்து பயமுறுத்தி விடும், கண்களில் சீழ் வடிந்து இமைகள் தானே மூடிக் கொள்ளும். காமாலை என்றால் மஞ்சள் நிறமாக மாறி விடும். இரத்தச் சோகை என்றால் கண்கள் வெளுத்து விடும். சோர்வு என்றால் சுமை தாங்காது இமைக் குதிரைகள் அடிக்கடி மூடிப் படுத்துவிடும். சுகம் என்றால் தண்ணீரைக் கண்ணோரம் காட்டும். சோகம் என்றால் வெந்நீரைக் கன்னத்தில் கொட்டும். காதல் என்றால் கண் விழி மேலே போய் சொருகிக் கொள்ளும். கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களித்த பாரதி,

நிலவூறித் ததும்பும் விழிகளும்

என்று கூறுவது இதற்குச் சாட்சி. (காதலும் ஒரு நோய் தானே) காதலியின் ஒரு பார்வை காதல் நோயை உண்டாக்கும். ஒரு பார்வை காதல் நோய்க்கு மருந்து போடுமாம் சொல்கிறார் திருவள்ளுவர்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

முகத்துக்கு அழகு சேர்ப்பதும் கண்தான். அட கொஞ்சும் போது என் கண்ணே, கண்மணியே என்றுதான் கொஞ்சுகிறோம். யாராவது மூக்கே, காதே என்று கொஞ்சியது உண்டா? எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்து, மூக்கு அடிக்கடி உடைபடுவது போல இத்தனை தகுதிகள், பெருமைகள் பெற்றிருக்கின்ற கண் உடைபடுகிறதா பாருங்கள். கண்களுக்கு அணியும் கண்ணாடிக்கு பெயர் சூட்டிக் கொள்வது மூக்காம். இதுக்கு என்னங்க சொல்றீங்க. கண்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக முகத்தின் உள்ளே அமைந்து முகத்துக்கு அழகையும் அல்லவா தருகின்றன.

இவ்வளவு முக்கியமான உறுப்பு கண். அதை நாம் சரியாகப் பார்த்துக் கொள்கிறோமா என்றால் அது தான் இல்லை. நம் முன்னோர்களில் எத்தனை பேர் கண்ணாடி அணிந்து இருந்தனர். எத்தனை பேர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இப்போது கண்ணாடி இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை. முக்கியமாக இளைஞர்களை. அப்படி தப்பித்தவறி சிலரைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்களுக்குள் லென்ஸ் பொருத்திக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். பொன்னாங்காணியை (பொன்னாங்கண்ணி) உணவில் பயன்படுத்தினர். சர்ஜரியில் இருந்து கண்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். கண்களைப் பொன் போல
காப்பதனால் இந்தக் கீரைக்குப் பொன்னாங்காணி என்று பெயர் வந்திருக்கலாம்.

மேல நோய்களின் அறிகுறியைக் கண்கள் காட்டும் என்று பார்த்தோம். நோய்களின் அறிகுறியே அன்றி, கண்களுக்கே வரும் நோய்கள் பொதுவாக கண் எரிச்சல், கண்களில் கண்ணீர் வடிதல், (கண்களில் கண்ணீர்தான் வடியும். கங்கை நீரா வடியும் என்று நினைப்பது புரிகிறது), கண் வறண்டு போதல் (dry eye Sintrom), கண்வலி (மெட்ராஸ் ஐ) போன்றவை.

கண் எரிச்சல் தூக்கமின்மை காரணமாகவும், அதிக சூட்டின் காரணமாகவும் வருகிறது. தலையில் நீர் கோத்துக்கொண்டால் கண்ணில் நீர் வடிகிறது. கண் வறண்டு போவது என்பது கண்ணில் இருக்கும் ஈரப்பதம் உலர்ந்து போவது. இமைகளை கொட்டாமல் உற்று உற்று பார்த்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வருகிறது. முக்கியமாக குளிரூட்டப் பட்ட அறையில் அமர்ந்து கணிப்பொறியே கதி என்று இருப்பவர்களுக்கு இந்நோய் வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)
இக்கண் நோய்களுக்கு எல்லாம் மருந்து எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வ வேர் ஆகிய நான்கையும் நன்கு இடித்து மெல்லிய துணியில் சிறு ச்¢று பொட்டனமாக மடித்துக் கொண்டு, செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி இளம்சூட்டில் கண்ணின்மீது ஒற்றடம் கொடுக்க, வெள்ளம் போல வந்த படைகள் சிங்க மன்னனைக் கண்டு, ஓடியது போல, கண் நோய் ஓடி விடுமாம். சிங்க மன்னன் என்பது நரசிங்கப் பெருமாள். பாடல் இதோ,

எள்ளு கடுக்காயா மணக்கு வில்வவேர் முத்து வெடித்துப் பின்னே
மெள்ளநறுக்கிப் பொட்டனமாய் மிகுந்த யெண்ணெய் காயவைத்து
மெள்ள கண்ணி லொத்திடவே விதனந்தீரும் வேந்தர்சிங்கம்
வெள்ளப் படையை வென்றான் காண்போலே வியாதி வெளியாமே

இதைவிடவும் எளிய மருந்து மற்றொன்றும் பழம்பாடலில் இருக்கிறது. நன்கு உருக்கிய நல்ல நெய்யில் கொஞ்சம் தவிட்டைப் பிரட்டி நன்கு உருட்டிக் கொண்டு, கண்களின் மீது ஒற்றடம் கொடுக்க வேண்டும். பிறகு புளித்தக் காடியில் (பழைய சோற்றுத் தண்ணீர்)கண்களை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த சந்தனத்தை அரைத்துப் பூச வேண்டும். இப்படி செய்தால் கண்களில் வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை மன்னன் இராவணனைக் கண்ட எதிரிப் படைகள் போல பறந்து ஓடுமாம். பாடலைப் பார்ப்போமா.

நீர் விழுந்து கண்புகைந்து நிரய முகத்தில் அனலாகில்
சேரும் சகத்தின்று நெய்யைச் சேர்ந்தே தவிடுதனில் உருட்டி
வாராங் காடியாற கழுவி வளர்ச் சந்தனத்தை தான்அப்பி
பாரும் இலங்கை சிங்கத்தைக் கண்ட படைபோற் பறந்திடுமே

முதல் கூறிய மருந்தில் எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வவேர் ஆகிய நான்கும் மிக எளிதாகக் கிடைப்பது. செய்முறையும் மிக எளிது. இரண்டாவது மருந்து தவிடு, நெய், சந்தனம், காடி இதுவும் வீட்டில் இருப்பதுதானே. முயற்சி செய்து பார்க்கலாமே? மூக்குக் கண்ணாடியைக் கொஞ்ச வயது ஆன பின்பு பயன்படுத்தலாமே.

மாரல்:
கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.
 
அவ்வப்போது கண்களை இமைப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, கண்களுக்கு மென்மையாக மசாஜ் செய்வது, தலைக்கு நல்ல எண்ணெய் வைத்து குளிப்பது, நோய் கண்ட போது மேலே சொன்ன மருத்துவத்தைச் செய்வது போன்றவை அந்நோய்க்கு மருந்து.                               காதல் செய்வதற்காகவாவது க்ண்களைப் போற்றுங்கள்.. வரட்டா.... அடுத்த பதிவில் பார்க்கலாம்...நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.
வியாழன், 13 அக்டோபர், 2011

எங்க அப்பா ரொம்ப அழகு.....

              அப்பாவின் உடலை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நேரம், அனைவருக்கும் ஃபோன் பண்ணி இறப்புச் செய்தியைச் சொன்ன நேரம் தொட்டுத் தொட்டு அழுதுட்டு இருந்த அம்மாவை விலக்கிட்டு அப்பாவைப் ப்ரீஸர் பாக்ஸில் படுக்க வைத்த நேரம், உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொருவரா வந்து பிலாக்கணம் பாடி அழுது கதறின நேரம், இப்படி எந்த நேரத்திலும் இல்லாத் ஒரு பரபரப்பு இப்போது. எல்லார் முகத்திலும் கவலை ரேகை கட்டை விரல் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் குரல் வளத்தில் ஆனால் கம்மிய குரலில் சோகப் பாவனையில் ”கிடைக்கலப்பா” என்று வருத்தத்தோடு சொன்னார்கள்.. அங்கே கேட்டுப் பாரேன். இங்கே கேட்டுப் பாரேன் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த இடத்தைச் சொன்னார்கள்.

”இதுவே கிராமமா இருந்தா உடனே கிடைச்சுடும்” என்று ஒர்வர்.

“ஒரு வார்த்தைச் சொல்லி இருக்க கூடாதா? நான் பையில தூக்கிப் போட்டுட்டு வந்திருப்பேனே. எங்க வீட்ல எவ்வளவு கிடக்குது.” இது அப்பாவின் ஒத்தை ஆண் உடன் பிறப்பு. எங்க சித்தப்பா.

”மெட்ராஸ்ல எல்லாம் ஒருத்தரும் இருந்தாக் கூட குடுத்து உதவிக்கிட மாட்டாங்க” அப்பாவின் இறுதிச்சடங்குக்காக பூர்வீக கிராமத்தில் இருந்து வந்திருந்த அப்பாவோட ஆத்மார்த்த நண்பர். கிராமத்துக்காரர்.

”.எங்க ஊருல கோயில் கடையில கிடைக்காத பொருளே இல்ல” இது அப்பாவோட ஒன்னுவிட்ட ஸ்ரீரங்கத்துச். சகோதரி.

            ”நாங்கல்லாம் பணம் கொடுத்து வாங்க மாட்டோம். ஒரே ஓட்டமா காட்டுப்பக்கம் ஓடிப் போய் பொறுக்கிட்டு வந்துருவோம்” இது சேலத்துக்காரர்.. என்னோட ஓரகத்தி.

              ”கெடச்சா பாருடா.. இல்லாட்டா பரவாயில்லை, அப்பா இதுக்கெல்லாம் வருத்தப் படமாட்டார். இருக்கும் போது அவர நல்லா வச்சிருந்துட்டோம். அவர் திருப்தியா போயிருக்காரு. பரவால்லடா விடுடா.” இது அப்பாவைக் கண்ணும் கருத்துமா இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த, அப்பாவுக்குக் கொள்ளி வைக்கப் போகிற அந்த குடும்பத்தின் மூத்த மகன்.. எங்க அண்ணன்..

               எங்க வீட்ல இருக்கு நான் போயி கொண்டு வந்துரட்டா இது வர்ணனையாகப் பேசத்தெரியாத, வேலை மட்டுமே செய்யத் தெரிந்த என் தங்கச்சி..

            ”அதெல்லாம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரக்கூடாதும்மா” இது கடிகாரத்தையே அடிக்கடி பார்த்தபடி சட்டு புட்டுனு சடங்கை நடத்திட்டு கிளம்பறதிலேயே குறியாக அடிக்கடி கருத்த அந்தக் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த அப்பாவின் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க வந்திருந்த தொப்பைச் சாஸ்திரி.

                  இத்தனைக்கும் நடுவுல எல்லா வேலையும் சரியா நடக்கனும் ஆனா எனக்கொன்னும் தெரியாது. நான் வெளிநாட்டுக்காரன். என்ற தோரனையில் இதுகூடவா வாங்க முடியாது? இவ்வளவு பெரிய சிட்டீல” என்று எங்கள் வீட்டின் ஆறரை அடி உயரக் கடைக்குட்டி கடோத்கஜன்... என் தம்பி. குட்டி என்றவுடன் ஏதோ சின்னபையன் என்று எண்ணக்கூடாது. அவனுக்கு இரண்டு சின்னக் குட்டிங்க இருக்கு.....

                     அப்பா இப்ப ஃப்ரீஸர் பாக்ஸை ஒடச்சிட்டு எழுந்து வந்து ”நாகப்பா அதைப்போய் வாங்கிட்டு வாப்பா” என்று வாச்மேனை கூப்ட்டுச் சொல்லப்போறாரு. இல்லாட்டி அவரே எழுந்து போயி தேவர் கடைக்குப் ஃபோன் பண்ணி தேவர்! அதைக் கொஞ்சம் உடனடியா அனுப்புப்பான்னு சொல்லப் போறாரு” .இது சிரித்துக் கொண்டே அக்கா. அப்பாவின் ஒரே செல்ல மூத்த மகள். எப்போதும் காமெடியும் கையுமாகவே அலைபவள்.

                 “என்னடா இது கிலேசம்....கன்றாவி.....சாஸ்திரம் கீஸ்திரம்னு எதையாவது சொல்லிகிட்டே அலையரதே பொழப்பா போச்சுடா... யாருடா சொன்னாங்க உங்களுக்கு? திருந்தவே மாட்டீங்களாடா? சகிக்கலடா......நீங்க பன்றது...போங்கடா.... போங்கடா போயி வேலையைப் பாருங்கடா.... இருக்கும்போது ஒழுங்கா வச்சுக்கங்கடா அப்பா அம்மாவ...” அப்படின்னு எழுந்து வந்து மூக்கை வெடக்கப்போறாரு மாமா” இது அப்பாவின் அக்கா மகன். மூடப்பழக்கத்தை வெறுக்கும் அப்பாவை அவ்வப்போதுத் தூண்டி, எப்போதும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதில் சந்தோஷம் காண்பவன்.

                    அப்பா இறந்ததில் பெரிதாக ஒருவருக்கும் வருத்தம் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் அவர் பட்ட துன்பம் அவ்வளவு கடந்த ஐந்து ஆண்டுகளாக. அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாது. கேன்சர் மட்டும் இல்லை. கால் வீக்கம். உடம்பு எரிச்சல்..என்று பல...படாத பாடு. அவரை சீக்கிரம் அனுப்பி வைத்ததில் பெரும்பங்கு என்னுடையதே. எனலாம். கடைசி கடைசியாக அவரைத் கஞ்சி குடிப்பா, குடித்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஊற்றி, கஞ்சியெல்லாம் நெஞ்சில் அப்படியே சேர்ந்து, அதனைச் சிரஞ்சினால் உறிஞ்சி எடுத்து நினைக்கும் போதே கண்களைக் கரைக்கிறது அவர் இருந்த நிலை. அப்போதும் என்னப்பா செய்யுது? என்றால் ஒன்றும் இல்லை. என்று அவர் தலையாட்டியது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல மெல்ல உயிர் பிரிந்தது...

               அம்மாவுக்கு அப்படி இருக்குமா?. அறுபது வருடம் அவருடன் வாழ்ந்தவளாயிற்றே. அப்பா இறந்த துக்கத்துடன், நோயிலும் பாயிலும் இருந்தாலும் கடைசி வரையிலும் தன் அதிகாரத்தையும் சிம்மக் குரலையும் விடாது வாழ்ந்து விட்டு, இன்று நெடுஞ்சாண் கிடையாக சாய்ந்து இருக்கும் இந்த கம்பீரமான் கட்டைக்கு இறுதிச்சடங்குக்கு ஒரு இது கூடக் கிடைக்கலயா!! என்று தோன்றிய துக்கத்தையும் சேர்த்து மனத்தில் புதைத்துக் கொண்டு மெளனமாக அம்மா. . கணவனைப் பரிகொடுத்தவள் அதிகம் பேசக்கூடாதாமே!!! அதனால்.

                        எல்லார் முகத்திலும் எதோ இது இல்லாவிட்டால் இறுதிச்சடங்கே நடக்காது என்பது போன்ற சோகம். இத்தனையையும் கேட்டுக் கொண்டு நடுக்கூடத்தில் ஃப்ரீஸர் பொட்டியில் நீங்க்ல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்பது போல ஒரு நம்ட்டுச் சிரிப்புடன் இதில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத என் தி க அப்பா.

                        எங்கள் ஊரில் ஒரு பெண்மனி. யாராவது கொஞ்சம் அழகாக அவர் முன்னால் சென்று விட்டால் போதும், அவருக்கு என்ன ஆகுமோ தெரியாது. “அழக மட்டும் என்ன சந்தனக்கட்டையப் போட்டா எரிக்கப் போறாங்க”.. என்று திட்டுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஏன் இப்படித் திட்டுகிறார்கள் என்று நீண்ட நாள் எண்ணியதுண்டு. அவர்கள் அத்தனை அழகு!!! ம்ம்ம்... அப்பறம் எப்படி பொறுக்கும் மற்றவர்கள் அழகா இருந்தா??!!! அதனால்தான் என்று நினைத்துக் கொள்வேன்.. அவர் அப்படி அடிக்கடி சொன்னதின் உண்மை இப்போதுதான் புரிந்தது..

                            இந்தக் குழப்பததைத் தீர்ப்பது போல போன் மணி அலறியது. நான் தான் குறுக்கும் நெடுக்குமா அமர்ந்திருந்தவர்கள் மீது கால் பட்டுவிடாதபடி, கோடு போட்டு தாண்டித் தாண்டி சின்ன வயசுல கல்லாங்காய் விளையாடுவோமே, அது போல நொண்டி அடித்துச் சென்று ஃபோனை எடுத்தேன்.. எதிர்முனையில் ஏதோ சொல்லி மூச்சை வாங்கினார் என் நோஞ்சான் மாமா. ரிஸீவரில் வெறும் காற்றுதான் வந்தது. ஏற்கனவே அவர் பேசும் போது கிண்ற்றுக்குள் இருந்து வருவது போல இருக்கும் அவர் குரல்...

                        இப்போது இங்கு கூட்டம். அழுகை இல்லை. ஆனால் அங்கலாய்ப்பு. ஒப்பாரி இல்லை. ஆனால் ஒருவித மன உளைச்சல். 85 ஆண்டு சரித்திரம் ஒன்று படுத்து விட்டதே. ”என்ன, பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம்” முன்னாடியே சொல்லி இருந்தா கடைசியா ரெண்டு வார்த்தைப் பேசி இருக்கலாம்” ”எப்படி கம்பீரமா இருந்த மனுஷ்ன் கடைசி கடைசியா ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு”. அவருக்குப் பேரன் ஹரீஷ் பூணலைப் பாத்துட்டுப் போகனும்னு ரொம்ப “ஆசை. வரவு செலவு, பிளாட்ஸ் மெயிண்டனென்ஸ் இதே நினைப்புதான் எப்போதும்” என்றெல்லாம் வார்த்தைகள் நீட்டி முழக்கியபடி கூடத்தில் பல குரல்கள் அங்கங்கு ஒரு நான்கு பேர் கூடியபடி ஐந்து கூட்டம். அப்பாவைச் சுற்றி.

                           இந்தக் குரலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படுக்கை அறைகள் இரண்டிலும் மும்மூன்று கூட்டமாய் ஆறு கூட்டம். குஞ்சு குழுவான்கள் தாத்தாவைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாட்டு. ஓடியதில் தம்பி மகள் மூத்தவள் வாலு மட்டும் இல்லாத ஒரு பெண் ---- குட்டி. குழந்தைகளை வேறு பெயர் வைத்து சொல்வது எனக்குச் சற்றும் பிடிக்காது. அதனால் நாகரிகமாக் இப்படிச்சொல்லலாம். கீழே விழுந்து ஃப்ரீஸர் பெட்டியின் மூலை நெற்றியில் பட்டு இரத்தம். என்ன அவளாக விழுந்ததால் அழுகாமல் அதற்குப் பதிலாகச் சிரித்துக் கொள்கிறாள். கண்களில் கண்ணீருடன். பத்தாததற்கு அவள் அம்மாவிடம் இரண்டு அடியும் போனஸாகப் பெற்றுக்கொண்டு.

                           ”அதே கீழ விழுந்து இருக்கு ஏண்டி இப்படி போட்டு அடிக்கிற” என்ற தன் அம்மாவின் திட்டைக் காதிலும் போட்டுக் கொள்ளாது குழந்தையின் தலையில் லேசாக வடியும் இரத்தத்தை கண்ணிலும் பார்க்காத தம்பி மனைவி.

                       ”இவ்வளவு சின்ன குழ்ந்தைகளுக்கு எவ்வளவு சாமர்த்தியம் பாரேன், கீழே விழுந்து இரத்தம் வந்தும் அழலையே. தன் த்ப்புன்னு தெரிஞ்சிகிட்டு சிரிக்கிறாளே” என்று ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் சித்தி..

                     வாசலில் பக்கத்து வீட்டில் இருந்து அப்போதுதான் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு..”சூடா இருக்கு. கப்புல ஊற்றும் போது ஜாக்கரதை.. இது போதலன்னா கேளுங்க” என்று பக்கத்து வீட்டு அம்மா..

                   போதும் போதும். இதுவே ஜாஸ்தி. உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம். இது அந்த கிருஹத்தின் மூத்த மருமகள். அண்ணனின் சகதர்மினி . என் அண்ணி...
“அப்பாவுக்கு இது கூட செய்யாம என்ன?” என்று அப்பாவிடம் உண்மையிலேயே பாசம் கொண்ட, கண்களில் நீர் தளும்ப தளதள குரலில் அந்த அம்மா.

                      .”அப்பாடா நல்ல வேளை காபி வந்துடுச்சு. ரொம்ப தலைவலிக்குது.. கொஞ்சம் எனக்குச் சூடா முதலில் கொடுத்துடு” இது அப்பாவின் அக்கா மகன். அந்த வீட்டின் இரண்டாவது மாப்பிள்ளை. என் அன்புக் கணவர்.

                     ஒரு காதை மூடிக்கொண்டு ஒரு காதில் ரிசீவரை வைத்துக்கொண்டு எல்லோரையும் சற்று அமைதிப் படுத்தி விட்டு ’மாமா கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.. காதுல விழுகல்’ என்றேன். என்ன சொன்னாரோ புரியவில்லை. கடைசி வார்த்தை மட்டும் லேசாகப் புரிந்தது. ‘கெடச்சிடுச்சு’ என்று மெலிதாகக் கேட்டது. மீண்டும் அவரை என்ன கெடச்சிடுச்சு? என்று கேட்டேன். அவரால் கத்த முடியவில்லையோ இல்லை எனக்குத்தான் காது மந்தமோ தெரியவில்லை. ஒன்றும் பலிக்காமல் போக நானும் அண்ணனிடம் ’கெடச்சிடுச்சாம்’ என்றேன். அண்ணனும் பெரிய குரலில் கெடச்சிடுச்சாம் என்றார்.. கெடச்சிடுச்சாம் என்று நானும் அண்ணனும் கூறியவுடன் கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்.... என்னும் எதிரொலிகள் நாலா பக்கமும் கேட்டன. அனைவரது முகத்திலும் ஒரு வித நிம்மதி....

                        பத்தே நிமிடத்தில் மாமா வந்தார் கையில் ஒரு சுள்ளியைப் பிடித்துக் கொண்டு.. அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் விடுமுறை. அலைந்து திரிந்து எங்கும் கிடைக்க வில்லை. இறுதியாக மூடியிருந்த ஒரு கடையைத் திறக்கச்சொல்லி ஒரு ஜான் அளவே உள்ள அந்தச் சுள்ளியை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்தார் மாமா. அப்போதைக்கு அந்த வீட்டின் வீரப்பன் அவர்தான். மகிழ்ச்சி. அவருக்கு அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே..

                           ஆகட்டும்... ஆகட்டும்.... அப்பரம் குளிகை வந்துடும் என்று சாஸ்திரி கொஞ்சம் சுதியோடு அவசரப்படுத்தினார். ஃப்ரீஸரில் உரைந்து போயிருந்த அப்பா வீதிக்கு வந்து விட்டார்.. வீட்டில் போட்ட சாப்பாடு போதவில்லை என்று அனைவரும் வாசலில் சென்று வாயில் அரிசியை நிரப்பினர்.

                   நீ கஞ்சி ஊத்தினதாலதான் நான் சீக்கிரம் கிளம்பிட்டேன். இன்னும் அரிசி வேற  போட வந்திருக்கியா என்று அப்பா என்னை ஏக்கமாகப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ... நாம்தான் கஞ்சியை ஊற்றி அனுப்பி வைத்து விட்டோமோ என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு. அந்த அரிசியைப் போடவும் மனமில்லாமல் போடாமல் இருக்கவும் முடியாமல் கை நடுங்க போட்டு வந்தேன். அப்பாவை ஊர்தியில் ஏற்றினர். வீதி வரை சென்று அப்பாவை வழியனுப்பி வைத்தோம், கைகளால் டாடா மட்டும் காண்பிக்காமல் கண்களில் நீரைக் காண்பித்து.

                       .இரண்டே மணி நேரம் ஒரு சிறு சட்டியில் சாம்பலுடன் அண்ணன், தம்பி இருவரும் உறவுகள் புடை சூழ வந்தனர். “அதுக்குள்ளயா முடிஞ்சுடுச்சு?” என்று வியப்புடன் வீட்டில் இருந்த பெண்கள் அனைவர் குரலும்.....

                      ”அப்பாவோட நெஞ்சுல கொஞ்சம் நாங்க சட்டியில் கொண்டு போன நெருப்பு, அப்பறம் அந்த சந்தனக்கட்ட இரண்டையும் வைச்சு மிஷினுக்குள் விட்டாங்க.. ஐஞ்சே நிமிஷத்துல அப்பா சாம்பலா வெளியில வந்துட்டாரு என்றான் அண்ணன் ஆச்சரியத்துடனும் வருத்தத்துடனும் ஒரு நீண்ட பெருமூச்சுடனும்....  அப்பாவைச் சந்தனக்கட்டையில் எரிச்சிருக்கோம்..... எங்க அப்பா ரொம்ப அழகு....... 
 அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

ஆதிரா.

திங்கள், 10 அக்டோபர், 2011

ஈகரை பதிவர்கள் சந்திப்பு... கோலாகலக் கொண்டாட்டம்....சென்னை வடபழனியில்.1) மாநாட்டு வரவேற்பு பலகை.
மாநாட்டிற்கு வந்தோரை வாசலிலே வரவேற்ற 
விர்சுவல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை !


2) வந்தோரை வரவேற்க நுழைவாயிலில்
வரவேற்பு மேசை, மலர், சந்தனம் மற்றும் குங்குமத்துடன்..
மாநாட்டு நிகழ்வுகளை நேரலையில் 
ஒளிபரப்பும் முன்னேற்பாடுகள்..
 தமிழ்த்தாய் வாழ்த்து ... 
திருமதி.இந்திரா பிருதிவிராஜ்.. 
தேன் குரலில் 

மாநாட்டு துவக்கவுரை
ஆதிரா 
தலைமை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்


 6) நிகழ்ச்சித்தொகுப்பு உதயா..
ஜெய் வானொலி

 7) ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
விளக்கேற்றி வைக்கிறார்கள் ஈகரையின் பதிவர்கள்

1) ஈகரையின் சிறப்புக்கவிஞர்
திரு. பாலசுப்ரமணியம் (திரு. ரமணியன்) ஐயா
அவர்கள் முதல் திரியை ஏற்றுகிறார்..

இரண்டாம் திரியை ஏற்றமுடன் ஏற்றுகிறார்
திரு. சந்திரமோகன் ஐயா அவர்கள்.
நிறுவனர், விர்ச்சுவல் சல்யூஷன்
3) மூன்றாம் திரியை எழுச்சியுடன் ஏற்றுகிறார்
ஈகரையின் மன்ற ஆலோசகர் திரு.பாலா...
4) நான்காம் திரியை நட்புடன் ஏற்றுகிறார் 
இளைய நிலா திரு.சக்தி அவர்கள் (realvampire).

5) ஐந்தாம் திரியை அருளுடன் ஏற்றுகிறார்
திருமதி. லக்ஷ்மி வைரமணி அவர்கள்.

வரவேற்புரை திரு சந்திரமோகன்

தலைமை உரை - ரமணியன் ஐயா

ஈகரைக்கு வாழ்த்துக் கவிதை
சிறப்புக்கவிஞர் திரு. ரமணீயன் ஐயா

திரு. சந்திரமோகன் அவர்களுக்கு 
பொன்னாடை அணிவிப்பது  கே. பாலா
 
திரு. ரமணியன் அவர்களுக்கு 
பொன்னாடை அணிவிப்பது வின்சிலன்


பதிவர்களின் சுய அறிமுகமும்
இனிய ஈகரை நினைவுகளின் அரங்கேற்றமும்

திரு. உதயா ஜெய் வானொலி (FM மூலம் மாநாட்டை 
நேரடி ஒலிபரப்பு செய்தவர்
ஈகரையின் மன்ற ஆலோசகர்

திரு. சக்தி

திரு. பி. ரகு
ஆதிரா 
ராஜலஷ்மி
திரு. பாலா 
 திரு. பிரதீப் பிரபு 
(விர்சுவல் சொல்யூஷன்மேலான்மை இயக்குநர்.
மாநாடு நடத்த பெரிதும் உதவியவர்) 
திரு. ஸ்டீபன்ராஜ்
திரு. ஜெயசீலன் (வின்சீலன்)
சதுரச் செயலாளர்
திரு. சுதானந்தன்

 திரு. தஞ்சை ம. பீட்டர்
திருமதி. லக்ஷ்மி 
 திரு. வைரமணி 
திரு. ரான்ஹாசன்

மாநாட்டில் பங்கேற்ற உறவுகளுக்கு 
நினைவு பரிசு வழங்கும் காட்சிகள்:

சரவணபவனில்
அறுசுவை விருந்து உறவுகளுக்கு