பொதுக்கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
சனி, 16 மார்ச், 2013
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்..
கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு
"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்
விடவில்லை
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"
சுவரோரமாய்
ஒரு கருவண்டு
"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்
விடவில்லை
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"
என்று தன் தந்தையின் ஒழுக்கத்தைப் பார்த்து தவறாகப் அறிந்து கொண்ட அறியாத பிள்ளை ஒன்று கூறுவதாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் என் நண்பரும் எழுச்சிக் கவிஞருமான திரு.
இரா.எட்வின். இது இன்றைய சமுதாயத்தில் ஆண்களின்
சுதந்திரத்தை அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள கவிதை என்று கூறுவதை விட வளரும் குழந்தைகளின் மனத்தில்
ஆண்களின் படிமம் எப்படி பதிந்துள்ளது என்பதை உணர்த்தும் கவிதையாகப் பார்ப்பதே
சரியான கோணம். அம்மா என்றால் சரியாக வீட்டுக்கு வர வேண்டும். அப்பா என்றால்
எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குப் வரலாம் என்னும் சமுதாய நிலைப்பாடு
குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை யாரும் சொல்லிக்
கொடுக்கவில்லை. குழந்தைகளின் இப்படிப் பட்ட புரிதலுக்குக் காரணம் யார் என்று வினா எழுப்பி
உரிய விடையைப் பார்த்துக் கொள்வது இன்றைய பெற்றோர்களின் தேவை.
கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு
வைத்திருக்கிறான். அதிகாலையில் வெளியில் செல்பவன் இரவும் அவள் வீட்டிலேயே தங்கி
விடுகிறான். பொழுது புலர்ந்ததும் அவன் அப்பெண் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து
கொண்டிருக்கிறான். இத்தகவல் மனைவிக்கு வந்து விடுகிறது. அந்தத் தகவலை எடுத்து
வருபவள் அவளது தோழி. உடனே தலைவிக்குக் கோபம் வருகிறது. கோபத்தையும் விட அழுகை
வருகிறது. அதையும் விட அச்சம் வருகிறது. என்ன அச்சம்? வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும்
தன் மகனும் தந்தை உள்ளே நுழையும்போது வீட்டுக்குள்ளே சேர்ந்து வந்து விடுவானோ.
அப்படி வருவானானால் கணவனை வைய முடியாது. ஏனெனில் குழந்தை முன்பு கணவனை வைதால்
குழந்தைக்குத் தந்தை மீது இருக்கும் மதிப்பு குறைந்து விடும். வையாமல் விட்டால்
இரவு முழுவதும் வேற்று இல்லத்தில் தங்கி வரும் இத்தீய ஒழுக்கத்தைப் பிற்காலத்தில்
குழந்தையும் தவறான ஒழுக்கம் என்று அறியாது பின்பற்ற வாய்ப்பாக அமைந்து விடும்.
என்ன செய்வது என்று சிந்தித்தவளாக இருக்கிறாள்.
அவள் எண்ணம் போலவே நல்ல வேளையாகத் தந்தையுடன் மகன் சேர்ந்து
வரவில்லை. தனயன் தனியாக வருகிறான். தலைவன் தனியாக வருகிறான். மகிழ்கிறாள் தலைவி. கணவனின்
பரத்தையர் ஒழுக்கத்தைத் தன் தோழியிடம் கூட நேரிடையாகக் கூறாத நாகரிக இனம்
தமிழினம். ஆகவே அந்தச் சங்கத் தலைவி
இவ்வாறு கூறுகிறாள்.
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே”.
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே”.
வெள்ளைக் கொக்கின்
பிள்ளை இறந்து விட்டது. அதற்குத் துட்டிக் கேட்பதற்காகக் (துக்கம் விசாரிக்க) காலை
செல்லும் நாரை மாலையும் அங்கேயே தங்கி
விடுகின்றதாம். நல்ல வேளையாக அப்படிப் பட்ட நீர்த்துறையின் தலைவனோடு வராமல் தனியே
வந்தான் என் மகன் என்கிறாள். தன் கணவனின் தீய ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி
தோழியிடம் கூறுவது இவ்வளவுதான்.
கொக்கு வயல்வெளியில்
வசிக்கும் பறவை, நாரை நீர்நிலைகளில் வாழ் பறவை. நாரை என்பது உயரமான கால்களை கொண்டது.
நன்கு பறக்கும் தன்மையது. வெள்ளைக் குருகுக்கு (வெள்ளைக் கொக்கு) கால்கள்
குட்டையாக இருக்கும். அவ்வளவாகப் பறக்க முடியாது. ஆனால் எளிதில் மாட்டிக்
கொள்ளாது. மறைவாக வாழும் தந்திரம் கற்றது. அதுபோல தலைவன் மறைவாக வாழும் தந்திரம்
நிறைந்த பரத்தையுடன் இருந்து விட்டு வருகிறான் என்பது இதில் மறைந்துள்ள பொருள். ஐந்தே
அடிகளில் தன் கணவனின் ஆகாய அளவு தவறை மறைபொருளாகக் கூறும் நுட்பத்தை வியக்காமல்
இருக்க இயலுமா? கல்வியறிவு கிஞ்சித்தும் இல்லாத சங்கத் தமிழச்சி இவ்வாறு
சிந்திக்கிறாள்.
குழந்தை வளர்ப்பின்
நுட்பம் அறிந்தவள் அவள். அதனால்தான் குழந்தை முன் எதைப் பேசக்கூடாது என்னும்
தெளிவுடன் பேசுகிறாள். அவள் வளர்த்த குழந்தைகள் பண்பாட்டை மீறாமல் ஒழுக்கத்தில்
மாறாமல் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் இந்நிலை இருக்கிறதா?
பார்க்க, கேட்க,
பேசக் கூடாத அனைத்துத் தகவல்களும் ஊடகங்கள் வாயிலாக நம் வீட்டு வரவேற்பறைக்கு
வந்து விடுகின்றன. அவற்றை ஒன்று விடாமல் நாமும் பார்த்து விடுகின்றோம். அத்துடன்
போகிறதா? நம் குழந்தைகளையும் பார்க்க விடுகின்றோம். நமக்குத் தேவை நம் குழந்தை
நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பிஞ்சுகளின்
மென்மையான இளம் மனதில் தேவையற்ற ஆபாச, வன்முறைக் காட்சிகள் ஆழமாகவும் மிக
அழுத்தமாகவும் பதிந்து விடும் என்பதை பெற்றோர்கள் அறிந்தாலும் அதைச்
செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றனர்.
இவை தவிர கணினியைப்
பயன்படுத்தத் தருகின்ற பெற்றோர்கள் அக்குழந்தையைக் கண்காணித்துக் கொண்டு இருத்தல்
மிக அவசியம். குழந்தையின் முன் பெற்றோர் ஃபேஸ் புக்கைத் திறந்து வைத்துக் கொண்டு
நண்பர்களுடன் ஜொல்லுவது கவனமாகக் களையப்
பட வேண்டிய ஒன்று. இதனால் குழந்தைக்குப் பெற்றோர் மீது உள்ள மரியாதைக் குறைவதோடு
அதுவும் நட்பு விண்ணப்பம் கொடுக்கத் தொடங்கி விடும் என்பதை பெற்றோர்கள் மறக்கக்
கூடாது.
குழந்தைகளுக்கு
நல்லது இது தீயது இது என்று பகுத்துணரும் பக்குவம் வரும் வரை குழந்தைகள் முன்பு எவற்றைச் செய்யக் கூடாது என்பதில் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். முக்கியமாகப் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்
கொள்வது முதலியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
பிறரைப் பற்றி கேலி,
கிண்டல் செய்து விமர்சனம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக்
குறிப்பிட்ட நபர் மீது குழந்தைக்கு மரியாதை இல்லாது போகும். பெற்றோர்களைப் போலவே
பிறரைப் பழிப்பதைப் பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளும். அதனால் இடம் பொருள் ஏவல்
தெரியாமல் எங்கேனும் வகையாய் மாட்டிக்கொண்டு அல்லல் படும். தங்கள் குழந்தைக்கு
இந்நிலை தேவையா என்பதை உணர்ந்து பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.
குழந்தைகள் தவறு
செய்வது இயல்பு. குழந்தைகள்தான் தவறு செய்யும். குழந்தைகள் தவறு செய்யும் போது
குழந்தைகளைத் திருத்தும் சொற்கள் கூட திருவள்ளுவர் சொல்வது போல அன்பு கலந்த
கனிச்சொற்களாக இருக்கவேண்டும். நீங்கள் கனிச்சொற்களை விடுத்து காய்ச்சொற்களைப்
பயன்படுத்தினால் குழந்தைக்கும் காய்ச்சொற்களே கனியாக இனிக்கும். எனவே சனியனே,
மூதேவி, பேய், பிசாசு முதலிய சொற்கள் உங்கள் குழந்தைகளின் நாவில் நர்த்தனமாட
வேண்டுமா என்பதைத் தீர்மானத்தால் உங்கள் வாயில் இது போன்ற சொற்கள் அறவே வராது. இதைவிடவும் மோசமான வசைச் சொற்களால் குழந்தைகளை வைபவர்களும் உளர்.
குழந்தை முன்னிலையில்
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது முதலியவற்றைச்
செய்தல் குழந்தையிடம் மோசமான மன நிலையை உருவாக்கும். அது திருட்டுத் தம்
அடிக்கலாமா என்று வாய்ப்பைத் தேடத் தொடங்கும். இளம்பருவத்தில் ஏற்படும் இது போன்ற
பழக்கங்கள் இறுதிவரை இறுகப் பற்றிக் கொள்ளு(ல்லு)ம் இரும்புக்கரமாகிக் குழந்தையை
இறுக்கும்.
வார்ததைகளால் கற்றுக்
கொடுப்பது பாடமாகிப் போகும். வாழ்ந்து கற்றுக்கொடுப்பது அக்குழந்தைகளின் மனத்தில்
படமாகிப் பதியும்.
எந்த குழந்தையும்
நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை
வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அதற்காக குழந்தையை வளர்ப்பது
தாயின் கடமை என்று கூறி தந்தைமார்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இனிய இல்லறத்தை
மேற்கொண்டு ஒழுகும் பெற்றோர்களின் வாழ்க்கை அவர்களின் வாரிசுக்கு வழிகாட்டியாக
அமைதல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள்.
வாழ்ந்து கற்றுக்கொடுங்கள்!
முனைவர்.
ப. பானுமதி(ஆதிரா)
(இக்கட்டுரை இம்மாத பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)
(இக்கட்டுரை இம்மாத பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)
ஞாயிறு, 3 மார்ச், 2013
மறியிடைப் படுத்த மான் பிணை
தாய்மையின் அணைப்பில் குழந்தைகள் ….
காலம் வெகுவாக
மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக
வாழ்ந்தது. ஒரு ஊரில் ஒரு ராஜா ராணி இருந்தார்கள் என்று கதை சொல்வது போலத்தான் இப்போது
இதையும் சொல்ல வேண்டியுள்ளது.
ஒரு பெரிய கூடம் (ஹால்)
இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு
இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும்
கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது.
இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும்
சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா
முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப்
போட்டு அமைந்திருக்கும்.
இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும்
வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய
அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள்
வந்தால்....? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர்
ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள்
ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று
கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப்
படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை
இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப்
புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை
விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா
தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ்
என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா.
தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச்
சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித்
தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும்
சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று
விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது
தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால்
அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு
வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக்
கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய்
நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!
காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி
இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம்.
அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும்
காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும்
இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது
என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள்.
இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள்.
மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
“புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை”
உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய
உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும்
தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து
தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும்
படம் பிடிக்கிறாள்.
“புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை!”
இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள்
தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான்
தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின்
நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள்.
இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப்
புலவர்.
மக்களினம் கயிற்றுத் தொட்டிலில் குழந்தைகளைப்
படுக்க வைக்க கங்காரு இனம் வயிற்றுத் தொட்டிலில் சதா உறங்க வைக்கின்றன தம் குட்டிகளை.
குரங்குகள் தம் குட்டிகள் மரம் தாவும் காலம் வரும் வரை எப்போதும் தம் வயிற்றில் கட்டிக்காக்கின்றன
தம் குட்டிகளை.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில்
இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை
வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக்
கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம்,
புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப்
படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத்
தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில்
படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு,
பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த,
நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும்
மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும்
இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு,
பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இன்னும் சிலர் வேலைக்காரப் பெண்ணிடம் தம் குழந்தையைப்
படுக்க வைக்கின்றனர். பதின் பருவத்துப் பெண்ணிடம்.
இதனினும் பெருங்கொடுமை பெருகி வரும் மகிழ்வுந்துப்
பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள்
வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம்
காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது
கணவரது எஜமானி மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்து இருப்பார்கள்.
அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த, வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே
வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம்
இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம்,
அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே
ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல்
போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும்
கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள்
வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை
முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப்
போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில்
என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர்
இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை. இளமையில்
அவர்களைத் தனிமைச் சிறையில் இடும் உங்களை அவர்கள் முதுமையில் இடுகின்றார்ள். “அப்பா
தாத்தா இறந்த பின்பு அந்தக் கொட்டாங்கச்சியை என் கிட்ட கொடுங்கப்பா. உங்களுக்கு நான்
அதில் தானே கஞ்சி ஊற்றவேண்டும்”என்று ஒரு மகன் சொன்ன கதை போலத்தான் இதுவும்.
ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன்
இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து
ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள்
உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு
இருப்பதால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மொன்கள்
அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள்
அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப்
பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது
இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட
தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.
“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பார் திருவள்ளுவர். தம் குழந்தையின் மெய்யை வருடுவது குழந்தைக்கு
இன்பம். பெற்றோர்க்கு அது பேரின்பம். அந்தப் பேரின்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,
“கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”
என்று பாடிப் பரவசமடைந்து
படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும்
தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள்.
ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக.
தங்கள் குழந்தையைப் பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர்
என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
(இக்கட்டுரை மார்ச் 2013 பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)
வியாழன், 29 நவம்பர், 2012
ஊர் வம்பு….. அந்தக்காலம் உலக வம்பு டிவிட்டர் காலம் - 2
டிவிட்டர் குபேரன் என்று சொல்லும் அளவு டிவிட்டரில் சாதனை படைத்து வரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்கள் (ஃபாலோயர்) எண்ணிக்கை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து முந்நூற்று என்பத்து நான்கு. (10,56,384). இந்த சந்தோஷத்தில் அவர் விட்டிருக்கிற அறிக்கை இது. “10 லட்சம் ஆதரவாளர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையே. இது என் மீதுள்ள உங்களின் அன்பையும் ஆதரவையும் காட்டுகிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதெல்லாம் சாதாரனம். இதோட நிற்கவில்லை, “என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது” என்று பகிராங்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.
இவரையும் தூக்கிச் சாப்பிடும் லேடி தாதா ஒருவர் உள்ளார். டிவிட்டர் வரலாற்றில் சாதனை படைத்தவர் இவர். இவர் பெயர் லேடி காகா. இவரைப் பின் தொடர்பவர் எண்ணிக்கை 31,434,311
இப்படி அவரவர் தம் பெயரில் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஒரு புறம். திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் பெயரில் டிவிட்டர்களைத் தொடங்கி மக்களை ஏமாற்றுவது மறுபுறம். சமீபத்தில் கோபம் உச்சிக்கேறி குதித்தவர்களில் த்ருஷா, சூர்யா என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது.
காது மடல் சூடாகி சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அரசியல் தலைவர்களின் சரித்திர சம்பவங்களும் இதில் அடக்கம். அது சரி, போலி டிவிட்டர் கணக்கு எப்படி சாத்தியம் என்று கேக்கிறீர்களா? வலையுலகில் எல்லாம் சாத்தியமே.
பிரபலங்களின் பெயரில் டிவிட்டரில் ஒரு கணக்குத் தொடங்கி இணையத்தில் கிடைக்கும் அவரது புகைப்படங்களை, அவ்வப்போது நடைபெறும் விழா புகைப்படங்களை, தொலைக்காட்சி நேர்காணல் வீடியோக்களை (யூ டியூப்) என்று எல்லாவற்றையும் அந்த டிவிட்டர் பக்கத்தில் தரவேற்றம் செய்து விடுவார்கள். பார்ப்பவர்கள் பிரபலங்கள்தான் என்று நினைத்து நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள், ஃபாலோயராகத் தொடர்வார்கள் இத்யாதி இத்யாதி.
அந்த வகையில் இப்போது அதிகமாகப் பேசப்பட்ட போலி டிவிட்டர்களில் மிகவும் ரசனையானது தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பெயரில் தொடங்கப் பெற்ற டிவிட்டர். போலியாகத் தொடங்கப் பெற்ற அந்த டிவிட்டரில் பொன்னெழுத்தால் பொறிக்கப் பட்டுள்ள வாசகம்தான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. “புரட்சித்தலைவியின் ஆசியுடன் எனது டிவிட்டர் புரட்சியை ஆரம்பிக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளதாம். இந்த டிவிட்டரில் முதல்வரின் நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்படுகிறதாம். அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த டிவிட்டரில் இணைய இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை டிவிட்டரில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாம்.
டிவிட்டர் சிலருக்குப் பணமும் ஈட்டிக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில், குழைந்தைகளைப் பார்த்துக் கொள்ளூம் ஒரு பெண்மணி, நம்ம மொழியில் சொன்னால் ஆயா வேலை பார்க்கும் ஒரு பெண்மணி கிரிக்கெட் மட்டையைக் கூட கண்டிராத ஒரு பெண்மணி கிரிக்கெட் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு பெண்மணிக்கு டிவிட்டர் உலகளாவிய புகழையும் கோடிகளில் பணத்தையும் ஈட்டித் தந்துள்ளது ஒரு விந்தை. அமெரிக்காவைச் சார்ந்த இவர், தன் காதலன் அன்போடு அழைக்கும் ‘ஹாஷஸ்’ என்னும் பெயரில் குழந்தை நலன் குறித்து டிவிட்டரில் எழுந்தி வந்தார். இங்கிலாந்து ஆஸ்திரேலிய மட்டைப்பந்து போட்டியின் போது ‘தி ஹாஷஸ்’ என்னும் டிவிட்டர் கணக்கில் இந்தத் தொடர் பற்றிய கருத்துகளைப் பொதுமக்கள் எழுதி வந்தனர். அந்தச் சூதாட்டத்தில் தி ஹாஷஸ் என்ற கணக்கைப் பயன் படுத்த அதன் குறிச்சொல்லான ஹாஷ் (#) என்பதைப் பயன்படுத்தினர். சிலர் # இந்தக் குறிக்குப் பதிலாக பழக்கதோஷத்தில் எப்போதும் டேக் செய்யும்போது பயன் படுத்துவது போல @ என்னும் குறியைப் பயன்படுத்தி விட்டனர். அவை ஹாஷஸ் என்னும் அந்த்ப் பெண்மண்யின் டிவிட்டருக்குச் சென்று விட்டன.
அவளுக்கும் ஆஷஸ் தொடருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொறுமையாகக் பதில் கூறிக்கொண்டு வந்த அவர், ”கிரிக்கெட் மட்டை என்றால் என்ன?” என்றும் அப்பாவியாக ஒரு கேள்வியும் கேட்டு விட்டார். இந்தக் கேள்வி அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஒரு விமான நிறுவனம் அவரை ஆஸ்திரேலியாவௌக்கு இலவசமாக அழைத்துச் சென்று கிரிக்கெட் பார்க்க வைத்தது. வோடோபோன் நிறுவனம் தொடரில் கலந்து கொள்ளும் டிக்கெட், மற்றும் இதரச் செலவுகளை ஏற்றுக் கொண்டது. அவரை ஒரு முன்னணி நாளிதழ் தேடிப்பிடித்து புகழுச்சியில் ஏற்றியது. இப்படியெல்லாம் கூட டிவிட்டர் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டச் செய்துள்ளது. பாவம் சிலரைச் சிறைக்குள்ளும் தள்ளியுள்ளது.
2006 ல் டிவிட்டர் (www.twitter.com) உருவானது. இப்போது முன்னணி 50 வலைத்தளங்களில் இதுவும் இடம்பெற்றுள்ளது. இணையத்தின் எஸ்.எம்.எஸ் (SMS) என்று அழைக்கப் படும் இதை உருவாக்கி உலவ விட்டவர் ஜேக் டோர்சே. இதன் தலைமை அதிகாரி இவான் வில்லியம்ஸ் என்பவர். இதனோட தலைமை அலுவலகம் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ளது.
ஓடியோ என்னும் ஒரு அமைப்பின் பணியாளர்களின் குழுமத்திற்காக(Group) டிவிட்டர் நிறுவப்பட்டது. அதுவோ பின்னர் பொதுச் சேவைத் தளமாக முன்னேற்றம் கண்டது
2007ல் நடந்த சவுத் பை சவுத்வெஸ்ட் என்னும் விழாவில் டிவிட்டரின் செயல்பாடுகளே அந்நிறுவனத்தை மூன்றாவது இடத்திற்கு ஏற்றி விட்டது. 2009 ஆம் ஆண்டு 50 மில்லியனாக இருந்த இதன் வருமானம் 2013ல் $111 மில்லியனாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல 2009 ல் 25 மில்லியன் பயணர்களைக் கொண்டிருந்த டிவிட்டர் 2013ல் ஒரு பில்லியனை எட்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஃபேஸ் புக் போல டிவிட்டரில் விளம்பரங்கள் வெளிப்படையாக இடம்பெறுவது இல்லை. ஆனால் தம் நண்பர்களுக்கு அனுப்புவது போல விளம்பரப் படுத்துவதை இது தடுப்பதில்லை. வலைத்தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து பணம் ஈட்டும் வசதி போல பணம் ஈட்டும் வசதி டிவிட்டரில் இல்லை.
மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கி கொண்டே போகிறது சோஷியல் மீடியா. இதற்கு உதாரணமாக டிவிட்டர் குறுக்கு வழிகளைக் (ஷாட் கட்) கண்டு பிடித்து அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் இன்னும் எளிய முறையில் ட்வீட் செய்ய முடியும். அதோடு, மவுஸ் பக்கம் கையை கொண்டு போகாத அளவுக்கு மிக சுலபமாக அனைத்தையும் செய்யலாம்.
ட்வீட்களுக்கு விருப்பம் (ஃபேவரைட்) கொடுக்க வேண்டும் என்றால் விசைப்பலகையில் (கீ போர்டில்) F என்ற எழுத்தினை அழுத்தினால் போதும். இதேபோன்று, ட்வீட்டுகளுக்கு பதில் எழுத வேண்டுமானால் கீ போர்டில் ஆங்கில எழுத்து ஆர்(R)பட்டனை அழுத்தினால், பதில் அனுப்ப வேண்டிய டப்பா திறக்கும்.இது போல் 22 குறுக்கு வழிகளை உருவாக்கி உள்ளது டிவிட்டர். இந்த ஷாட்கட்களை மனத்தில் பதிய வைத்துவிட்டால் பின்பற்றுவது எளிது மட்டுமல்ல. பிடித்தும் போய்விடும்.
140 எழுத்துகள் தான் வரைமுறை என்று இருந்தாலும் இதையும் மீறி அளவில்லாமல் டிவீட் செய்யும் (டிவிட்டரில் எழுத) வசதியையும் ஒரு வலைத்தளம் உருவாக்கித் தந்துள்ளது. எழுத வேண்டியதை எழுதி இந்தத் தளத்தில் டிவிட்டருக்கு என்று எழுதி அனுப்பி விட்டால் டிவிட்டரில் அது பதிவு செய்து விடும். செய்தியின் எந்த பகுதி முதலில் அல்லது கடைசியில் தோன்ற வேண்டும் என்று குறிப்பிடும் கூடுதல் வசதியும் இதில் இருக்கிறது
தி டெய்லி ஷோ என்னும் இதழ் 2009 பிப். 24ல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் ஒபாமாவின் உரையைக் கேட்டவர்களை விட டிவிட்டரைப் பயன் படுத்தியவர்களே அதிகம் என்று கூறியுள்ளது. ஒபாமா தன் கட்சியின் தேர்தல் விளம்பரத்திற்கு டிவிட்டரைப் பயன் படுத்தியது அனைவரும் அறிந்ததே. இன்று இந்திய அரசியலிலும் தேர்தல் விளம்பரங்களுக்கு டிவிட்டர் பயன்படுத்த படுகிறது.
2009ல் டிவிட்டரில் ஒபாமாவுக்கு எதிராக எழுதியவர் கைது செய்யப் பட்டார். இப்போதும்"பால் தாக்கரே மரணத்திற்கான கடை அடைப்பின் பின்னணி மரியாதை அல்ல. பயமே காரணம்" எனச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஷஹீன் தடா மற்றும் ரேணு சீனிவாசன் என்னும் பெண்கள் சிவசேனையர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கதை பரவலாக எல்லா இடங்களிலும் தொடர்கிறது. தகவல் தொழில்நுடபச் சட்டத்தில் திருத்தம் வராத வரை இப்படி எடுத்ததற்கெல்லாம் வாரண்ட், அரஸ்ட் என்னு கதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 A யில் மாற்றம் செய்ய வேண்டி அ. மாக்ஸ் தலைமையில் வழக்கும் தொடர்ப் பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
டிவிட்டர் மூலம் தன்மனிதத் தாக்குதல்களும் தொடர்ந்து புகார்கொடுப்பதும் சிறை செல்வதும் என பல நிகழ்ந்த வண்ணமே இருப்பதைப் பார்க்கும் போது ”டிவிட்டர் ஒரு ஆற்றலுள்ள தீவிரவாதக் கருவி” என்று அமெரிக்க இராணுவ இண்டெலிஜென்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மேலதிக தகவலாக, நாசா டிவிட்டர் வழியாக விண்வெளி வீரர்களுக்கு தகவல்பரிமாற்றம் செய்து வருகின்றது என்பது. மற்றொன்று 2008ல் பெயரிடப்படாத ஒரு விண்வெளி ஓடம் தரையிறங்கிய போது உடனுக்குடன் தகவல் அனுப்பியதை ஒட்டி டிவிட்டருக்கு 2009ல் “நாசா சார்ட்டி விருது” வழங்கி சிறப்பித்துள்ளது.
செய்திகள், முக்கிய விஷயங்கள் பரிமாற்றம், தன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளல், அர்த்தமில்லாத வெட்டி அரட்டை, ஸ்பாம் என்னும் குறுஞ்செய்தி அனுப்புதல் என்று ஆறு பிரிவுகளாக டிவிட்டரின் சேவையைப் பிரித்தாலும் வெட்டி அரட்டையே அதிக இடம் பிடித்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அறிவியல் என்னும் அலாவுதின் அற்புத விளக்கின் உரசுதலில் வெளிப்படும் ஒவ்வொரு அதிசய பூதத்தையும் வெட்டியாகப் பயன்படுத்தாமல் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தினால் ஆக்கம் நமக்கும் அறிவியலுக்கும். இல்லாவிட்டால் அழிவே எஞ்சும்! துன்பமே விஞ்சும்!
(இக்கட்டுரை டிசம்பர் 2012 சோழநாடு மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி சோழநாடு)
வெள்ளி, 2 நவம்பர், 2012
மறந்து போன விருந்துகள்
உடலுக்கும் மனத்துக்கும்
களிப்பூட்டும் களி
வேகம் நவீனம் இரண்டும் சேர்ந்து
போடும் குதியாட்டத்தில் இன்றைய
இளைஞர்களுக்கு நாற்பதுகளிலேயே நரம்புகள் தளர்ந்து போகின்றன. இந்த இளமையைக் கண்டு முறுக்கேறிய வாலிப என்பதுகள் எள்ளி நகையாடுகின்றன. இவற்றுக்கு என்ன காரணம்?. கம்பங்களி
நிறைந்த தூக்குச் சட்டியும் கைப்பிடிக் கம்பியில் துணியில் கட்டிய உப்பும் ஒற்றை வெங்காயமும்தான்
காரணம் என்கிறது வாலிப என்பது. வெய்யில்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு,
கையில் கம்பங்களியுண்டு, கடித்துக் கொள்ள செவந்த சின்ன வேங்காயமுண்டு என்று அகத்திலும்
புறத்திலும் உரத்தோடு வாழ்ந்த பொற்காலத் தமிழன் இன்றைய நாகரிக நோயாளிகளைக் கண்டு சிரிக்கத்தான்
செய்வான்.
“கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணெ
கலந்து தருவாயே
தொண்டையில அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலே இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா”
என்று தன் தாய் கிண்டித் தந்த கம்பங்
களியைக் கூறி, கேட்போர் நாவில் எச்சிலை ஊற வைப்பார் கள்ளிக்காட்டு கவிஞன் வைரமுத்து.
எண்ணும்போதே களிப்பைத் தருவது களி. உண்டு களித்த
தமிழன் களிப்பூட்டும் அந்த உணவுக்கு களி என்று பெயர் சூட்டியுள்ள திறனையும் கண்டு பாராட்டியே
ஆக வேண்டும்.
களி எப்படி இருக்கும்? அதை எதில் தயாரிப்பார்கள்? அதை எதிலாவது கலந்து சாப்பிடனுமா, அப்படியே சாப்பிடலாமா? என்றெல்லாம் கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.
கண்ணாடிக் கின்னத்தில் ரசத்தை ஊற்றி அதில் ஒரு சின்னக் கரண்டியைப் போட்டு ஸ்டாட்டர்(சூப்) என்று பெயர் சொல்லி, கொடுத்தவுடன் சோமபானத்தை
அருந்துவதைப் போல உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் சாப்ட்வேர் தலைமுறைகளுக்கு எதையும்
புதிய பெயர் வைத்துக் கொடுத்தால்தான் பிடிக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் கிரீன் காம்ப் நட் கஸ்டட் மிக்ஸர், பிரவுன் கேப் கூல் கிரேவி
என்றெல்லாம் வாயில் வராத பெயர்களை வைத்து, தலையில் குல்லா போட்ட பேரர்கள் பெரிய கலர்புல் டிரேயில் கேப்பைக் களியையும் கம்மங்களியையும் ஒரு வெள்ளைத்
துண்டோட கண்ணாடிக் கின்னத்தில் கொண்டு வந்து வைத்திருந்தால் தெரிந்திருக்கும். நம்மவர்கள் மண் சட்டியில் கிண்டி எவர்சில்வர்
தட்டில் (அலுமினிய தட்டு இப்போது புழக்கத்தில்
இல்லை) போட்டுக் கொடுத்தால் இவர்களுக்குத் தெரிய நியாயமில்லைதான்.
கம்பம் கொல்லையில
கதிரொடிக்கும் மச்சினியே
காப்புப்போட்ட கையால
கம்பம்கூழ் தந்தாலென்ன!
கம்பங்கூழ் காச்சயில
கம்பங்களி ஆச்சிதல்லோ
கருப்பட்டி வாங்கிவா
கம்பங்களி தின்னிடலாம்
கருப்பட்டி வாங்கிவாறேன்
கருகுமணியும் வாங்கிவாறன்
கருக்கல் ஆயிடுமே
காந்துதல்லோ என் வயிறு!
என்று நாட்டுப்புறக்
காதலன் ஒருவன், தன் காதலியிடம் கூழ் கேட்கிறான், அவள் அவன் நினைவில் கூழ் காய்ச்சுகிறாள்.
கூழ் இறுகி களியாகிவிடுகிறது. கருப்பெட்டி வாங்கி வந்தால் களிப்போடு தின்றிடலாம் என்கிறாள்.
அவனோ காந்தும் வயிற்றுக்கு மட்டுமல்ல காந்தும் காதலுக்கும் களிப்பு உண்டாக கருப்பெட்டியுடன்
கருகமணியும் வாங்கி வருகிறேன் என்கிறான். இப்படிச் சுவைத்த அற்றை நாள் தமிழனின் முத்தான
காதலும் சத்தான களியும் அவர்களைக் கை விட்டு விட்டதா? அல்லது தமிழர்கள் அவற்றைக் கைவிட்டு
விட்டனரா தெரியவில்லை. இரண்டுமே காணாமல் போய்விட்டது.
இப்பாடல் களிக்கும் கூழுக்கும் உள்ள வித்தியாசத்தையும் சொல்கிறது.. ஊற்றிக் குடிப்பது
போல நீர்மமாக இருந்தால் கூழ். உருட்டித் தின்பதற்கு
ஏற்ப கெட்டியாக இருந்தால் களி. துளாவி
எடுத்துத் தின்பதற்கேற்ப சோறும் கூழுமாக இருந்தால் கூழ்த்துளாவி. கம்பையோ கேள்வரகையோ
வேகவிட்டு வேந்த நீரை வடிகட்டியது கஞ்சி. களியை ஊர வைத்த உப்புத்தண்ணீர் கம்பந்தண்ணி.
கம்பங்களியும் கேப்பைக் களியும்தான் கீழ்த்தட்டு மக்களின் பட்டர்ஸ்காட்ச், சாக்லேட் ஐஸ்கிரீம்கள். கம்மங்கூழும் கேப்பைக்கூழும்
புளூபெரி, பிளாக்செர்ரி மில்க் ஷேக்குகள்.
ஆதித் தமிழனுக்கு, கோடையில் குளிர்ச்சியாக்க கம்பும் குளிரில் சூடாக்க கேழ்வரகும் உதவியதைப் போல வேறு எந்த தானியமும் உதவியிருக்காது. ஆனால், பாஸ்தா,
பிட்ஸா, பர்கருக்கு மாறிய நகர வாசிகளை விட்டுத் தள்ளுங்கள். கிராம வாசிகளும் இப்போது
இட்லி, தோசைக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இலவச ரேசன் அரிசி இவர்களை இப்படி மாற்றியதோ
என்று எண்ணத் தோன்றுகிறது. சத்தற்ற ரேஷன் அரிசியைப் பார்த்து உயிர்ச்சத்தை விடலாமா
விவசாயிகளே?
வெய்யிலுக்கு
ஏற்ற குளிர்ச்சியான உணவு கம்பு. மழைக்கு ஏற்ற சற்று சூடான உணவு கேழ்வரகு. அதனால்தான்
கோடைக் காலங்களில் மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் வழக்கம் இருந்து வருகின்றது.
இந்தியாவில்
விளையும் தானிய வகைகளில் கம்பு மிகவும் சத்து வாய்ந்தது. இருக்கின்ற தானியங்களிலேயே கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். 100 கிராமில் 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது. 11 முதல்
12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது. ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது. நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
இதயநோயைக்
கட்டுப்படுத்துவதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் ஆரோக்கியமான
வளர்சதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன.
இவை எலும்பு வளர்ச்சி, சீரான
ரத்த ஓட்டம், ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை
முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் முதலிய பல முக்கியப் பணிகளைச்
செய்கின்றன. அஜீரணம், வயிற்றுப் புண், உறக்கமின்மை ஆகியவற்றுக்கும் கம்பு நல்ல மருந்து.
அட உடலுக்கு மருந்து என்பதை விடுங்க.
நாக்குக்கு நல்ல விருந்து களி. களியைச் சூடாக இருக்கும் போது யானைக் கவளம் போல உருண்டையாக
உருட்டி, தட்டில் போட்டு உருண்டையின் நடுவில் குழி தோண்டி, நல்லெண்ணையை ஊற்றி, அதில் கருப்பட்டித் தூளைத் தூவி சாப்பிட்டால் இந்திர லோகத்து
சுந்தரிகள் கண்களில் வண்ண வண்ண ஆடையில் குளு குளு என்று வந்து போவார்கள்..
களிக்குத்
தோதான பக்க வாத்தியம் ஊறுகாயும், மோர் மிளகாயும். வத்தலும் வடகமும் சரியான ஜோடிதான்.
அசைவ விரும்பிகள் களிக்கும் கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்புக்கும் உசிரையே கொடுத்துடுவாங்க.
அவ்வளவு பொருத்தமான சைடு. இப்போது கோடைக் காலத்தில் இளநீர், நுங்கு விற்பதைப் போல தள்ளு
வண்டியில் களியும் கூழும் விற்கத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இதில் சுகாதாரம் அந்த
அளவு இருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்பத்தான் களி
செய்முறையைச் சொல்லப் போறீங்க என்று கேட்பது புரிகிறது. இதோ..
கம்பை ஊற வைத்து ஈரம் போக உலர்த்திய பின் அந்தக்
காலத்தில் உரலில் போட்டு இடித்து முதலில் உமிவேறு கம்பு வேறாகப் புடைத்தெடுப்பார்கள்.
பின்னர் மீண்டும் குத்தி மாவாக்கினர். இப்போது இருக்கவே இருக்கிறது மிக்ஸி. பெரிய குடும்பம்
என்றால் மாவு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம். அதுவும் முடியலையா. மாவே கடையில்
கிடைக்கிறது. முதல் நாள் இரவே மாவை உப்பு சேர்க்காமல் தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்து
விட வேண்டும். காலையில் அடி பிடிக்காத கெட்டியான பாத்திரத்தில் (காப்பர் பாட்டம் நல்லது)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். கரைத்து
வைத்துள்ள மாவுடன் மேலும் நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். கொதித்த
நீருடன் இந்த மாவைக் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இறுகி வந்தவுடன் இறக்கி வைத்து சூடாகச் சாப்பிடலாம். இதே செய்முறைதான் கேழ்வரகு களிக்கும்.
கேள்வரகு களி சூடு என்பதால் அளவோடு உண்ணுதல் வேண்டும்.
களி செய்வதற்கு இதை விடவும் எளிமையான முறையை கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம் கண்டு பிடித்துள்ளது. மாவைப் போல
மூன்று முதல் மூன்றரை மடங்கு தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் கொஞ்சமாக
கம்பு மாவை இட்டுக் கலக்கிக் கொண்டே வர வேண்டும். அது தோசைமாவுப் பதம் வந்தவுடன் எடுத்துக் குக்கரில் வைத்து விடலாம்.
.குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் கேஸை சிம்மில்
வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் கழித்து கேஸை
அணைத்து விடலாம். கம்பு மாவு கெட்டியான பதத்திற்கு மாறிவிடும். இப்போது களி
ரெடி. களிப்பும் தான். வேலை குறைகிறதே.
வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமையும் பெற்றுள்ளது. இதன் சிறப்பு
ஒரே சீரான அளவில் குருணை இருக்குமாறு அதற்கென ஒரு தர அளவினை நிர்ணயித்துள்ளனர். இந்தக் கலவையைத் தயாரிக்க பேராசிரியர் முனைவர் இரா. கைலப்பன் அவர்களால்
ஒரு இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. (அப்படின்னா எதிர்காலத்தில்
ரேஷனில் இலவச அரிசிக்குப் பதிலாக இலவசக் கம்பு கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்களோ!!)
மறக்கடிக்கப் பட்ட களி வகைகளில், வெந்தயக் களி,
உளுந்தங்களி மோர்க்களி, உக்களியும் அடங்கும். உக்களி என்பது வெல்லம் சேர்த்து தயாரிக்கப்
படும் இனிப்பு வகை. அரிசி மாவும் மோரும் சேர்த்து தயாரிக்கப் படுவது மோர்க்களி. மோர்க்களியும்
உக்களியும் அக்காலத்தில் மேல்த்தட்டு மக்களின் சிற்றுண்டிகள். உளுத்தங்களியும் வெந்தயக்
களியும் இடுப்புக்கு வலுவைத் தருவன. முக்கியமாக இந்த இரண்டும் வயதுக்கு வந்த பெண்களுக்கும்
கருவுற்ற பெண்களுக்கும் மிகவும் நல்லது. குழந்தையைச் சுமக்கத் தேவையான சக்தியை பெண்களின்
இடுப்புக்குக் கொடுக்கும் வள்ளல்கள் உளுந்தும் வெந்தயமும். இந்தக் களிகளைப் பற்றியும்
சொல்லப் போனால் களி புராணம், பெரிய புராணமாக ஆயிடும்.
ஆகவே உடலில் வலுவூட்டி மனத்தில் களிப்பூட்டும் களி(களு)க்கு
ஓ போட்டு. களியைக் கண்டு பிடித்த தமிழனுக்கு ஒரு பெரிய ஓஓஓஒ!! போட்டு, மெல்ல மெல்ல
பாரம்பரிய உணவுகளை மறந்து ஃபாஸ்ட் ஃபுட்டுக்குள் சிறைப் பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய
சாஃப்டான இளசுகளுக்கு அச்சத்தோடு ???? போட்டு களிபுராணம் இதோடு முடிவடைகிறது.
(இந்தக் கட்டுரை 07/11/2012 நாளிட்ட குமுதம் இதழில் இடம்பெற்றது. நன்றி குமுதம் குழுமம்.)
(இந்தக் கட்டுரை 07/11/2012 நாளிட்ட குமுதம் இதழில் இடம்பெற்றது. நன்றி குமுதம் குழுமம்.)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

