“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு
இலக்கியத்தில் மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியத்தில் மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூன், 2012

தண்ணீரும் வெந்நீரும்




1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உற்பத்தித் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட முடிவை அடுத்து ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாகக் கொண்டாடலாம் என ஐக்கிய நாடுகளின் அவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக நீர்த்தினம் அதாவது உலக நீர்நாள் அனுட்டித்து வருகிறோம். ஆனால் பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இடம்பிடித்து இருப்பது நீர் எனினும் உலக மக்கள் தொகையின் நான்கு பேரில் மூவர் அருந்துவதற்குத் தூய நீரின்றி அவதிப்படுகின்றனர் என்பதே உண்மை.
உலகில் பாதுகாப்பான நீரின்றி எட்டு நொடிகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் குழந்தைகள் சாவதற்குப் பாதுகாப்பற்ற குடிநீரே முதல் காரணமாக அமைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதுவே இன்றைய நீர்வளத்தின் நிலை.
நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு என்பது வள்ளுவம். இதனால் அண்டம் என்றழைக்கப்படும் உலகும் பிண்டம் எனறழைக்கப்படும் உயிரும் நீரின்றி அமையாது என்பது தெளிவு.
தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பும்போது கூட நீரின்றி அமையாத உலகம் போலத் தலைவனின்றி அமையாத தன் நிலையை அறிந்து அவன் வந்துவிடுவான் என்று ஒரு தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல் ஒன்று நற்றிணையில் காணலாகும். பாடல் இதோ,
நீரின்றி அமையாது உலகம் போல்
தம்மின்றி அமையாது நன்னயந்தருளி”.

இவ்வளவு முக்கியமான நீர் உடலுக்கு எந்த அளவு தேவை? மிகுதி என்பது எந்த அளவு? குறைவு என்பது எந்த அளவு? எந்த நீரைப் பயன் படுத்த வேண்டும்? எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்ப்தை அறிய வேண்டிய கோடை இது.

நெடுநல் வாடையில் தொகுவாய்க் கலத்து நீரை அருந்தாமல் பகுவாய் கலத்து நெருப்பில் குளிர் ஆறுவர் என்று கூறுவதால் குளிர்காலத்தில் மக்கள் குவிந்த வாயினை உடைய குடத்துத் தண்ணீரைக் குடிக்காமல் பெரிய வாயையுடைய காரைச்சட்டியில் நெருப்பை இட்டு அதில் குளிர் காய்வார்கள் என்பதை புலப்படுத்தும். ஆனால் கோடையில் குளிர் நீர்தானே வேண்டியுள்ளது.

ஆனால் என்னதான் கோடையாக இருந்தாலும் குளிர் நீரைப் பருகவே மனம் விரும்பினாலும் அதையும் காய்ச்சி குளிர வைத்தே குடிப்பது நல்லது என்கின்றனர்.

அதே சமயம். காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால் நெஞ்செரிச்சல், தலைவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று வலி, இருமல் ஆகிவை உடனே குணமாகும். குளிர் நீரை மட்பாண்டத்தில் சேமித்து அருந்துவது போல வெந்நீரை எப்பாண்ட்த்தில் சேமித்தல் நலம் பயக்கும் என்பதும் மிக முக்கியமானது.

பொன்பாத்திரத்தில் வெந்நீரைச் சேமித்து அருந்துவதால் வாயு, கபம், வெப்பு நோய் போகும். நல்ல புத்தி உண்டாகுமாம். அறிவு விருத்தி அடையுமாம். ஆனால் இது யாருக்குச் சாத்தியம்?

வெள்ளிப்பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம்,  காய்ச்சல் வெப்பு நோய் ஆகியவை நீங்குமாம். உடல் செழிப்பாக இருக்குமாம். பலம் பெருகுமாம். இது ஓரளவு சாத்தியமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான இல்லங்களில் வெள்ளி கிளாஸ் இருக்கிறது.

தாமிரப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம், கண்புகைச்சல், கண் எரிச்சல் ஆகியவை நீங்குமாம். நடுத்தற வர்க்கத்தினர் செப்புக்குடமே பெரும்பாலும் பயன் படுத்துகின்றனர். ஆலயங்களில் தீர்த்தம் தருவது இக்காரணம் கருதியே எனலாம்.
பஞ்ச லோகப் பாத்திரத்தில் வைத்து அருந்துவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முந்நோயும் நீங்குமாம்.
வெங்கலப் பாத்திரத்தில் நீரைச் சேமித்து அருந்துவதால் தாது விருத்தி ஆகுமாம்.
இரும்புப் பாத்திரத்தில் சேமித்த நீரை அருந்துவதால் பாண்டு நோய் போகுமாம். தாது உண்டாகுமாம். உடல் குளிர்ச்சி அடையுமாம். தகரக்குடம் பயன் பாடு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது அறவே இல்லை எனலாம். இவையெல்லாம் வெந்நீரைச் சேமித்து வைப்பதைப் பற்றிய தகவல்கள்.
இது மட்டுமல்ல தண்ணீரை வெந்நீராகக் காய்ச்சும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பயன் என்பதையும் ஆய்ந்து சொன்ன மருத்துவம் தமிழ் மருத்துவம். 
கால்கூறு காய்ந்த வெந்நீர் பித்த்த்தைப் போக்கும்
அரைக்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்
ன்று வெந்நீர் மருத்துவத்தைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி விளக்கும்.  இவை தண்ணீரைச் சுண்ட வைக்கும் முறை. ஆனால் தண்ணீரை மருந்தாகவே மாற்றும் முறையும் சித்த மருத்துவத்தில் இருந்து வந்துள்ளது. எட்டில் ஒரு பாகமாகத் தண்ணீரைச் சுருக்கினால் மேலே கூறப்பட்ட அனைத்து நோய்க்கும் மருந்தாகிறதாம்.
 நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்
என்று நீர் மருத்துவத்தைப் பற்றிப் பேசும் சித்த மருத்துவம்.
நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே
என்றும் ஆணித்தரமாகக் கூறுவதால் வெந்நீரைக் காய்ச்சிக் குடிப்பது மெய்க்கு நோய்வாராமல் காக்கும் வழியாம்.
பெருக்கத்து மோரும் சுருக்கத்து நீரும் உடல் நோய்க்கு மருந்தாகும் என்பது பண்டையோர் கண்ட உடலோம்பு முறை. இக்கட்டுரையில் நீர் பற்றி எத்தனையோ இலக்கியச் செய்திகளும் மருத்துவச் செய்திகளும் உள்ளன.
 அருந்தும் நீரைப் பற்றி அறிந்தோம். ஆடும் நீரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? அது கூழானும் குளித்துக் குடி” என்று கூறுதற்கும் சனிநீராடு என்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி இங்கு பார்க்க வேண்டும். குளித்தல், நீராடுதல் இரண்டு பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

நன்றி குமுதம் ஹெல்த்

திங்கள், 11 ஜூன், 2012

புத்தம்புதுக் காலை….பொன்னிற வேளை…



வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்

தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -

முந்தையோர் கண்ட முறை. 


என்பது ஆசாரக்கோவை பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம் அதற்கு எப்படி பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்து பின் தந்தை தாய் இருவரையும் வணங்கி தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று துறை இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் இறைவனை எழுப்புவதையும் பாடுபொருளாகக் கொண்டது. வடவர்கள் இதனை சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலிக்கக் காண்கிறோம். 






அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
புத்தம் புது காலை, பொன்னிற வேளை என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவயெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக்கும் முழுத்தம் (நேரம் காலம்} பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும். 

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது

ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும் குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுவது நம் முந்தையோர் கடைபிடித்த வழக்கமாக இருந்து வந்தது. இப்போது எல்லாம் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. 

தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப் பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட் மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் முக்கியமாக கணியில் பணி புரிவோர் (ஐ.டி} அங்கெங்கெனாதபடி பரவி விட்ட பின் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும். இப்போதெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக நைட் ஷிப்ட் பார்க்க பெண்களும் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. முக்கியமாக இத்துறையில் இருப்போருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. ப்ராஜக்ட் முடியும் வரை மூன்று நான்கு ஐந்து.. என்று போய் ஒரு வாரம் கூட உறங்காமல் இருக்கும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. அதனால் தான் இளம் வயதிலேயே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறிவிடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படி கூறுவது. அவர்களின் உடலியல் நுட்பத்தை எப்படி பாராட்டுவது. நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந்தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிக வேலையை சோர்வின்றி செய்தனர். 

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த இரு பிரிவினரின் வேறுபாட்டை பாரதிதாசன் குடும்ப விளக்கிலும் இருண்ட வீட்டிலும் அழகாகப் படம் பிடிப்பார். 

கருநிற மேகத்தின் ஆழத்தில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டு மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்தச் கதிர்க் குழந்தையின் உதயம், அழகான அமைதி, பறவைகள் கொஞ்சும் மொழி, பறக்கும் இனிய காட்சி என்று இவற்றை ரசிக்க பழகிக்கொண்டால் அதிகாலை அனுபவம் அழகான அனுபவமாக இருக்கும்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

பாரதிதாசனின் இந்த வர்ணனையைப் பார்த்த பின்னுமா பத்து மணி வரை உறக்கம். 

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குநின்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளியெழுந்தருளாயே!

என்று உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தைத் தன் கவிதைக் கரங்களால் தட்டி எழுப்பி விழிக்கச் சொன்னான் அந்த எழுச்சிக் கவி பாரதி. அவன் எழுப்பியது பாரத மணித்திரு நாட்டின் சோம்பேறிகளாகிய நம்மைத்தான். இத்தனை எழுச்சிக் கவிதைகளை யாத்த அவன் ஒரு தாலாட்டுப் பாடல் கூட பாடாததற்கு பாரத்தத்தின் குழந்தைகளாகிய நம் சோம்பேறித்தனமே காரணமாக இருந்துள்ளது. 

நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தோம். இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க, மடமையில் இருந்து விடுதலை பெற அதிகாலையிலேயே விழித்தெழுவோம். இரவில் சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிப்போம்….. வாருங்கள்….
நன்றி குமுதம் ஹெல்த்.

திங்கள், 7 மே, 2012

கருப்பழகி “யவ்வனப் பிரியா”



கொழு கொம்பு கண்டவிடத்து ஓடிப் படரும் கொடிமகள்தான் இந்த யவனப்பிரியா. இவளை அறியாதவர்கள் இருக்க முடியுமா?. நாம் அன்றாட வாழ்வில் ஒரு சிலரைப் பார்த்து இருப்போம். பழகி இருப்போம்; ஆனால் அவர்களின் பெயர் தெரியாமல் அல்லது அறியாமல் இருந்து விடுவது உண்டு. அதே போல் இந்தப் பசுங்கொடியாளையும் பார்த்தும் பயன் படுத்தியும் இருப்போம் என்று கூறுவது பொருந்தாது. கண்டிப்பாகப் பயன் படுத்தியுள்ளோம்; பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினால அது பொருந்தும். ஆனால் அவளின் புனைப்பெயர் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பதே உண்மை. இவள் இருந்தால் நீங்கள் நஞ்சைப் படைக்கும் உங்கள் பரம எதிரி வீட்டிலும் படைத்ததைச் சாப்பிட்டு பதறாமல் ஒரு ஏப்பம் விட்டு திரும்பலாம். இவளுக்குப் 'பைங்கறி' என்று ஒரு புனைப்பெயரும் உண்டு. அதுமட்டுமல்ல 'மிறியல்' என்னும் மற்றொரு புனை பெயரும் கொண்டவள். இவள் யார் என அறிய இந்தக் குறிப்புகள் போதும் என்று நினைக்கிறேன்..

இவளின் அங்க அடையாளம் வேறு கூற வேண்டுமா? சரி இவள் கட்டம் போட்ட சேலை கட்டித் தன் உடல் மறைத்த அட்டக்கருப்பழகி. நம் உடலைக் காப்பதில் கட்டிக் கரும்பழகி. சித்தன் அகம் எத்தன் அகம் எதுவானலும் சீர்மை சேர்க்கின்ற வண்ண மணியழகி. ஏடுபல எடுத்தியம்பும் எழில் வஞ்சிக் கொடியழகி. கடல் பறந்து மணம் பரப்பும் சின்னக்குயிலழகி. கோல மலையழகி கொட்டி வைத்த கருமை முத்தழகி. அந்தரத்தில் ஆடுகின்ற பச்சை மயிலழகி.
ஆம் மிளகுப்பெண்ணே அவள்.

"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி?"

என்று குதம்பைச் சித்தர் பாடுவதைக்கேட்கும் போது பெருங்காயம் மிளகு சுக்கு இவையே நன்காயத்திற்கு தேவயானது என்பது புலப்படுகிறது. மருந்துப் பொருளானப் பைங்கறி, மிறியல், யவனப்பிரியா என்றெல்லாம் அழைக்கப்படும் மிளகு பற்றிய இலக்கியச் செய்திகள் ஏராளம்

மிளகுப்பெண்ணின் ஆட்சியில்தான் என்ன முரண் பாருங்கள்? இந்தக் கார அழகி படர விரும்பும் தோள்கள் இன்சுவை இளவரசர்களாம் முக்கனிகளில் ஒருவரான பலாக்கனியின் தோள்கள். இதோ பாருங்கள் சிறுபாணன் கூறுகிறான் சாட்சி.

“பைங்கறி நிவந்த பலவின் நீழல்” (சிறுபாணாற்றுப்படை,43)

இவனுக்கு அடுத்து மிளகாள் விரும்பித் தன் தலையைச் சாய்க்கும் தலைவன் தோள் சந்தனத்தான் தோள். ஆம் சந்தன மரம். சான்று இதோ,

“கறிவளர் சாந்தம்” (அகநானூறு,2)

மலைச்சாரலில் மணம் பரப்பும் இவளால் மலைச்சாரல் முழுதும் நறுமணமும் இலக்கியப் புகழ் மணமும் பெறுகிறது.

“கறி வளர் அடுக்கம்” (குறுந்தொகை,288)

கிழக்கிந்தியத் தீவுகளிலும் சேர நாட்டிலும் அதிகமாக வளம் சேர்த்த இந்த அழகிகளில் சேரனின் குலக்கொழுந்தே பெரும் புகழ பெற்றாள். சேர நாட்டிலிருந்து கால்நடை வீரர்களின் கையகப்பட்டும் பொது எருதுகளின் மீதேறியும் மிளகாள் காவிரிப்பூம்பட்டினம் வந்துள்ளாள் என்றும் சங்கம் சான்று பகர்கிறது. கால்நடையாக வந்தவளை,

“காலில் வந்த கருங்கறி மூடை” (பட்டினப்பாலை,186) 

என்று அதுமட்டுமல்ல சுங்க வரி செலுத்தும் வழக்கம், இன்று நாம் பைபாஸ் என்று கூறும் மாற்று வழிபோல சுங்கம் செலுத்திச் செல்லுகின்ற பெருவழியும் இருந்திருக்கிறது என்னும் பல செய்திகளும் கிடைக்கிறது.

“தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட 
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் 
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து 
அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும் 
உல்குடைப் பெருவழி” (பெருபாணாற்றுப்படை,77-800)

'உல்கு' என்பது சுங்க வரி என்று பொருள் படும்.'கறி' 'மிறியல்' என்றெல்லாம் பல பெயர்களில் உலாவரும் இவளது இயற் பெயர் மிளகு. இவளை ஏன் யவனப்பிரியா என்று கூறுகிறோம். ஐரோப்பாவின் யவனர்கள் இவளை விரும்பி அதிக விலை கொடுத்து மணந்து (வாங்கி) சென்றதால் இவள் யவனப்பிரியா என்றே அழைக்கப்பட்டாள்.

மிளகாள் அறையிலும் ஆடி அரங்கத்திலும் ஆடியவள் ஆயிற்றே. கருப்புக்கு அழகு செய்து காத தூரத்தில் இருந்து பாரு என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல கரிய நிறத்தாலோ, அவளது அரிய குணத்தாலோ, நரிய மணத்தாலோ கவரப்பட்ட மிளகுப்பெண் சங்க காலத்தில் பொன்னுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்டுள்ளாள். அக்காலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது இலக்கியச் செய்தி. இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்துள்ளனர். பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிச் சென்றுள்ளனர். பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்கு (கொங்கு நாடு) மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் மிகவும் விரும்பி அதிக விலை கொடுத்து வாங்கிச்சென்றது மிளகைத்தான். குறிப்பாக முசிறி மிளகைக் கொடுத்து பொன்னைப் பெற்றுள்ளது. இக்கருத்தை,

“கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க 
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி” (அகநானூறு,149)

என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பெருமையாய்க் கூறுகிறார்.

“மன்கைகுவைஇய கறிமூடையால் 
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம் 
கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து” (புறநானூறு,343)

செக்கச் சிவந்த சிவப்பழகியாம் மிளகாயைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அட்டக் கருப்பழகியாம் இவளைப் பயன்படுத்துவதே உடல் நாட்டிற்கு உகந்த ஆட்சி என்று பலரும் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடி கட்டிப் பறக்கும் இவளைச் சமையலுக்கு அதிகமாகப் பயன்படுத்தியும் வருகிறோம். அக்காலத்திலும் மிளகைச் சமையலுக்குப் பயன்படுத்தி உள்ளமையை,
”துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை” (அகநானூறு)

“பசுங்காய்ப் போழொடு கறிகலந்து 
கஞ்சக நறுமுறி யளையீ” (பெருபாணாற்றுப்படை)

என்னும் சங்கப் பாடல்கள் சான்று கூறுகின்றன

.பைப்ராஸே (PIPERACEAE) என்னும் குலத்தில் உதித்த குலக்கொழுந்தாகிய இவளின் குடும்பப் பெயர் பைபர் நிக்ரம் (PIPER NIGRUM). இந்தக் குடும்பத்து வாரிசுகள் மிளகு, வால்மிளகு என்னும் இருவர். மலையாளி, குறுமிளகு, கோளகம் என்றெல்லாம் பட்டப்பெயர்களை இட்டு இவர்களை அழைப்பது வழக்கம்.

பத்து அல்லது பனிரெண்டு அடிகள் உயரமாக வளரக்கூடிய இவளது இலைகள் வெற்றிலை இலைகள் போல அகலமாக இருக்கும்.
இனி இவளின் ஆற்றலைப் பார்ப்போமா?

மனிதன் சுறுசுறுப்பாக இயங்க உதவும் அவன் உடலின் முக்கியமான பகுதி நரம்பு மண்டலமே. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால்தான் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராக இருக்கும்.

கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் ஏராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது.

மனிதன் உண்ணும் எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும் அதைச் செரிக்க வைப்பதில் மிளகுக்கு நிகர் மிளகே..

உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லைகள் முதலியவை நீங்க மிளகை நன்கு பொடி செய்து ஐம்பது கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் அரை லிட்டர் சேர்த்து அரை மணி நேரம் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொண்டு, மூன்று வேளை அருந்தி வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வில்வ இலையைக் காய வைத்து பொடியாக்கிக் கொண்டு மிளகுத்தூளுடன் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சாதாரண சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாவற்றிற்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்த சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாம் சிட்டாய்ப் பறந்து போகும். மிளகைச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழி இழுத்தால் சளித்தொல்லைக்கு இதமும் நிவாரணமும் உடனே கிட்டும்.

வால் மிளகுத்தூளுடன் சிறிதளவு சிறுகுறிஞ்சான் இலைச் சூரணத்தைச் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட நீரிழிவு நோயும் குணமாகும்.
சலி, காய்ச்சலைத் தொடர்ந்து பாகுபாடின்றி எல்லோரையும் துன்பத்துள் ஆழ்த்தும் ஒரு நோய் தலைவலி. ஒற்றை, இரட்டை, பின்மண்டை வலி என்று எந்தத் தலைவலியாக இருந்தாலும் மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி போயே போகும்.

பத்து மிளகுடன் ஒரு கைப்பிடி அறுகம் புல்லைச் சேர்த்து மையாக அரைத்து அதைக் கசாயமாகக் காய்ச்சி அருந்தினால் எப்படிப்பட்ட விஷக்கடியும் வந்த வழிச் சென்று விடும்.

உடலில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்டால் சிறிது மிளகுத்தூளைச் சிறிது நல்லெண்ணெயில் கலந்து பற்று போட்டால் சுளுக்கு வழுக்கென்று ஓடிவிடும்.

பற்சொத்தை, பல்வலி ஆகியவற்றுக்கு மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பற்சொத்தை காணாமல் போய்விடும்.
மயிர்ப் புழுவெட்டு உள்ளவர்கள் மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர அடர்த்தியாக முடி வளர்ந்து விடும்

இது மிகவும் முக்கியமானது. மகப்பேறு இல்லாதவர்கள் மிளகுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து குடித்து வர, மழலை வீட்டில் அடியெடுத்தும் வைக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மிளகை அன்றாடம் சமையலில் பயன் படுத்துவது தமிழர்களாகிய நம் கடமை.

மிளகைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். ஆம் நாள்தோறும் உணவில் மிளகைச் சேர்த்துக் கொண்டால் நாள்தோறும் உடலில் அழகு கூடிக் கொண்டே வரும். எப்படி என்று கேட்கிறீர்களா? தினம் தினம் மிளகு ரசம்.. அருந்தும் உடல்களில் கொஞ்சும் தினம் தினம் அழகு ரசம்.


நன்றி குமுதம் ஹெல்த்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!

 


இன்று உலகெங்கும் இனிமையாகக் கேட்டுக்கொண்டு இருப்பது ஒரே மொழி. அனைவருக்கும் பொதுமொழி  இந்த ஒரே பொது மொழிக்குச் சாதி தேவையில்லை. மதம் தேவையில்லை, இனம் தேவையில்லை, மொழி தேவையில்லை, ஏன் இம்மொழியைப் பேச வாயே தேவையில்லை. கண்களே போதும். ஆம், அதுதான் காதல் மொழி. கண்கள் நடத்தும் காதல் உரையாடலில் வாய்மொழிக்கு இடமிருக்காது. திருவள்ளுவரும் பார்வை பேசும் காதல் பரிபாஷயின் போது செயல் இழந்து போகும் வாய் மொழயை,

கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில
என்று கூறுவார்.

காதலை வரவேற்கும் அழகிய தோரண வாயில்கள் கண்கள். அழகாக அசைந்து மூடித்திறக்கும் இமைகள்தான் கதவுகள். ஆம் விழியின் வழியாக இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உன்னதமானது காதல். இந்தக் காதல் நாடகத்தில் மன உணர்வுகளைக் காட்சிகளாக அமைப்பது கண்களே. காதல் குறிப்போடு பார்க்கும் முதல் பார்வையே காதல் பரிமாற்றத்திற்கு அரிச்சுவடி. தமிழரின் காதலுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியர் கண்கள் எழுதும் காதல் முன்னுரையை,

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை

என்பார். நாட்டம் என்றால் கண் அல்லது பார்வை என்று பொருள்.

தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும். திருவள்ளுவர் காமத்துப்பாலில் மட்டும் 52 குறட்பாக்களில் கண்கள் பேசும் காதலைப் பற்றிக் கூறுகிறார். கம்பரோ இராமனும் சீதையும் மெய் மறந்து நோக்கிய காதல் பார்வையை,

கண்ஒடு கண்இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்

என்று படம் பிடிப்பார். இதிலிருந்து கால காலமாகக் கண்கள் காதலுக்குச் செய்து வரும் உதவி நன்கு புரியும். அதிலும் இடக் கண்ணுக்கும் காதலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு. என் இடது கண்ணும் துடித்தது, உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் என்பாள் காதலி.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

என்றுரைத்து தன் கண்களின் கருமணியில் உள்ள பாவையை நீ போய்விடுஎன்கிறான் வள்ளுவத் தலைவன், தான் விரும்பும் பாவையாகிய தலைவிக்கு அங்கு இடம் இல்லாததால்.(குறள்-1123)
        வள்ளுவர் படைத்த தலைவியோ கண்களை இமைக்க மாட்டேன் என்கிறாள். (குறள்-1129) கண்களுக்கு மை எழுத மாட்டேன் என்கிறாள். (குறள்-1127) இமைத்தாலும் மை எழுதினாலும் தலைவன் கண்களைவிட்டு மறைந்து விடுவான் என்கிறாள். இதனால் பெரும்பாலும் காதலை வளர்ப்பது கண்களே எனலாம். இதுவும் வள்ளுவன் வாய்மொழியே. 
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

காதலுக்கு மட்டுமா? கருணைக்குக் கண்களை விட யார் தாயாக இருக்க முடியும். அருகில் இருக்கும் பிற உறுப்புகள் படும் வேதனைக்குக் கண்ணீர் விட்டு அழுவது  கண்களே. இக்கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?

எங்கோ ஒரு மூலையில யாருக்கோ துன்பம் என்றால் இங்கிருந்து கண் கலங்குகிறதே இதனைத் தான் கண்ணோட்டம் என்று திருவள்ளுவர் கூறுவார். கண்ணோட்டத்தினால் உலகியல் நடக்கிறது என்றுரைத்து       
    “கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்  
     புண்ணேன்று கருதப் படும்”
என்றும் கூறுவார்.
ஐம்புலன்களில் அறிவைப் பெற்றுத்தருவதில் கண்களே முதலிடம் பெறுகிறது. கற்றவரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடயார் என்றும் கூறுவதால் கல்வியின் அடையாளம் கண்கள் என்பதை அறியலாம். இதனை அறிவுக்குறியீடு என்றும் கூறலாம்..

கண், ஒரு நோய் அறிவிப்பாளர் (indicator). உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை அறிவிப்பது கண்களே.. வண்ண ஜாலங்கள் காட்டி நோயைக் காட்டிக் கொடுத்து விடும். சூட்டு நோய் என்றால் செவ்வறி ஓடிய அழகிய கண்கள் ஒரேயடியாகச் சிவந்து பயமுறுத்தி விடும், கண்களில் சீழ் வடிந்து இமைகள் தானே மூடிக் கொள்ளும். காமாலை என்றால் மஞ்சள் நிறமாக மாறி விடும். இரத்தச் சோகை என்றால் கண்கள் வெளுத்து விடும். சோர்வு என்றால் சுமை தாங்காது இமைக் குதிரைகள் அடிக்கடி மூடிப் படுத்துவிடும். சுகம் என்றால் தண்ணீரைக் கண்ணோரம் காட்டும். சோகம் என்றால் வெந்நீரைக் கன்னத்தில் கொட்டும். காதல் என்றால் கண் விழி மேலே போய் சொருகிக் கொள்ளும். கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களித்த பாரதி,

நிலவூறித் ததும்பும் விழிகளும்

என்று கூறுவது இதற்குச் சாட்சி. (காதலும் ஒரு நோய் தானே) காதலியின் ஒரு பார்வை காதல் நோயை உண்டாக்கும். ஒரு பார்வை காதல் நோய்க்கு மருந்து போடுமாம் சொல்கிறார் திருவள்ளுவர்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

முகத்துக்கு அழகு சேர்ப்பதும் கண்தான். அட கொஞ்சும் போது என் கண்ணே, கண்மணியே என்றுதான் கொஞ்சுகிறோம். யாராவது மூக்கே, காதே என்று கொஞ்சியது உண்டா? எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்து, மூக்கு அடிக்கடி உடைபடுவது போல இத்தனை தகுதிகள், பெருமைகள் பெற்றிருக்கின்ற கண் உடைபடுகிறதா பாருங்கள். கண்களுக்கு அணியும் கண்ணாடிக்கு பெயர் சூட்டிக் கொள்வது மூக்காம். இதுக்கு என்னங்க சொல்றீங்க. கண்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக முகத்தின் உள்ளே அமைந்து முகத்துக்கு அழகையும் அல்லவா தருகின்றன.

இவ்வளவு முக்கியமான உறுப்பு கண். அதை நாம் சரியாகப் பார்த்துக் கொள்கிறோமா என்றால் அது தான் இல்லை. நம் முன்னோர்களில் எத்தனை பேர் கண்ணாடி அணிந்து இருந்தனர். எத்தனை பேர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இப்போது கண்ணாடி இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை. முக்கியமாக இளைஞர்களை. அப்படி தப்பித்தவறி சிலரைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்களுக்குள் லென்ஸ் பொருத்திக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். பொன்னாங்காணியை (பொன்னாங்கண்ணி) உணவில் பயன்படுத்தினர். சர்ஜரியில் இருந்து கண்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். கண்களைப் பொன் போல
காப்பதனால் இந்தக் கீரைக்குப் பொன்னாங்காணி என்று பெயர் வந்திருக்கலாம்.

மேல நோய்களின் அறிகுறியைக் கண்கள் காட்டும் என்று பார்த்தோம். நோய்களின் அறிகுறியே அன்றி, கண்களுக்கே வரும் நோய்கள் பொதுவாக கண் எரிச்சல், கண்களில் கண்ணீர் வடிதல், (கண்களில் கண்ணீர்தான் வடியும். கங்கை நீரா வடியும் என்று நினைப்பது புரிகிறது), கண் வறண்டு போதல் (dry eye Sintrom), கண்வலி (மெட்ராஸ் ஐ) போன்றவை.

கண் எரிச்சல் தூக்கமின்மை காரணமாகவும், அதிக சூட்டின் காரணமாகவும் வருகிறது. தலையில் நீர் கோத்துக்கொண்டால் கண்ணில் நீர் வடிகிறது. கண் வறண்டு போவது என்பது கண்ணில் இருக்கும் ஈரப்பதம் உலர்ந்து போவது. இமைகளை கொட்டாமல் உற்று உற்று பார்த்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வருகிறது. முக்கியமாக குளிரூட்டப் பட்ட அறையில் அமர்ந்து கணிப்பொறியே கதி என்று இருப்பவர்களுக்கு இந்நோய் வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)
இக்கண் நோய்களுக்கு எல்லாம் மருந்து எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வ வேர் ஆகிய நான்கையும் நன்கு இடித்து மெல்லிய துணியில் சிறு ச்¢று பொட்டனமாக மடித்துக் கொண்டு, செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி இளம்சூட்டில் கண்ணின்மீது ஒற்றடம் கொடுக்க, வெள்ளம் போல வந்த படைகள் சிங்க மன்னனைக் கண்டு, ஓடியது போல, கண் நோய் ஓடி விடுமாம். சிங்க மன்னன் என்பது நரசிங்கப் பெருமாள். பாடல் இதோ,

எள்ளு கடுக்காயா மணக்கு வில்வவேர் முத்து வெடித்துப் பின்னே
மெள்ளநறுக்கிப் பொட்டனமாய் மிகுந்த யெண்ணெய் காயவைத்து
மெள்ள கண்ணி லொத்திடவே விதனந்தீரும் வேந்தர்சிங்கம்
வெள்ளப் படையை வென்றான் காண்போலே வியாதி வெளியாமே

இதைவிடவும் எளிய மருந்து மற்றொன்றும் பழம்பாடலில் இருக்கிறது. நன்கு உருக்கிய நல்ல நெய்யில் கொஞ்சம் தவிட்டைப் பிரட்டி நன்கு உருட்டிக் கொண்டு, கண்களின் மீது ஒற்றடம் கொடுக்க வேண்டும். பிறகு புளித்தக் காடியில் (பழைய சோற்றுத் தண்ணீர்)கண்களை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த சந்தனத்தை அரைத்துப் பூச வேண்டும். இப்படி செய்தால் கண்களில் வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை மன்னன் இராவணனைக் கண்ட எதிரிப் படைகள் போல பறந்து ஓடுமாம். பாடலைப் பார்ப்போமா.

நீர் விழுந்து கண்புகைந்து நிரய முகத்தில் அனலாகில்
சேரும் சகத்தின்று நெய்யைச் சேர்ந்தே தவிடுதனில் உருட்டி
வாராங் காடியாற கழுவி வளர்ச் சந்தனத்தை தான்அப்பி
பாரும் இலங்கை சிங்கத்தைக் கண்ட படைபோற் பறந்திடுமே

முதல் கூறிய மருந்தில் எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வவேர் ஆகிய நான்கும் மிக எளிதாகக் கிடைப்பது. செய்முறையும் மிக எளிது. இரண்டாவது மருந்து தவிடு, நெய், சந்தனம், காடி இதுவும் வீட்டில் இருப்பதுதானே. முயற்சி செய்து பார்க்கலாமே? மூக்குக் கண்ணாடியைக் கொஞ்ச வயது ஆன பின்பு பயன்படுத்தலாமே.

மாரல்:
கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.
 
அவ்வப்போது கண்களை இமைப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, கண்களுக்கு மென்மையாக மசாஜ் செய்வது, தலைக்கு நல்ல எண்ணெய் வைத்து குளிப்பது, நோய் கண்ட போது மேலே சொன்ன மருத்துவத்தைச் செய்வது போன்றவை அந்நோய்க்கு மருந்து.                               காதல் செய்வதற்காகவாவது க்ண்களைப் போற்றுங்கள்.. வரட்டா.... அடுத்த பதிவில் பார்க்கலாம்...



நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.








வெள்ளி, 7 அக்டோபர், 2011

பூப்பு....பூப்பு ..., 2


http://watermarked.cutcaster.com/cutcaster-photo-100323795-beautiful-girl.jpg
சென்ற பதிவில் பூப்பு காலங்களில் பெண்கள் பிறர் காண முடியாதவாறு இல்லத்துள் இருத்தி வைக்கப்பட்டனர் என்று அறிந்தோம். இதனை விளக்குவது போல அமைந்த மற்றொரு பாடல் இது.. இரவில் உறக்கத்தில் பூப்பு எய்திவிட்டாள் குறுந்தொகைத் தலைவி. வைகறையில் கோழி கூவும்போது அதைக் காண்கிறாள்.அவளுக்கு திக்கென்றதாம் நெஞ்சம். எதனால்? பூப்பு எய்தியதை எண்ணி அல்ல. தலைவனைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியதால். எது போல? இரவு நேரத்தில் ஒருவரும் அறியாமல் சந்திக்கும் காதலர்களை வைகறை வந்து பிரித்து விடுவது போல இந்த வைகறைப் பொழுதில் பூப்பு வந்துள்ளதாம். தலைவனுடன் நான் கூட முடியாமல் பிரித்துவிடுமே என்று அஞ்சியதால், குக்கூ என்று கோழி கூவியதும் அவள் மனம் திக்கென விக்கித்ததாம். நீங்களும் பாடலைப் பாருங்களேன்.

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால்

இப்பாடல்  வாயிலாகவும் பூப்பு காலங்களில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இந்த எண்ணத்தைத் தான் மாத்தனும் என்று கூறும் விளம்பரங்களும் பாதுகாப்பான  வசதிகளும் அக்காலத்தில் இல்லாது போனதும் ஒரு குறையே.

மரங்களின் அல்லது செடிகளின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தம் தோன்றுவது பூக்களில்தான். இதனைக் கருத்தில் கொண்டே மங்கையரிலும் இனப்பெருக்கத்திற்கு அதாவது கருவுறுவதற்கு உடல் பக்குவப்படும் முதல் மாதவிடாய்ப் பருவத்தை அல்லது முதல் மாதவிடாயைப் பூப்பு என்றனர் போலும். இதனை கிராமப்புறங்களில் சமைதல் (சமஞ்சிட்டா) என்று கூறுவர். 

தமிழர்களின் மொழியறிவு இங்கு பளிச்சென மின்னுவதைக் காணமுடிகிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுவேஎன்பது எவ்வளவு உண்மை என்பதை இது போன்ற் சொல்லாட்சிகள் உறுதி படுத்துகின்றன. அரிசி, பச்சைக் காய்கறிகள், பலசரக்குப் பொருள்கள் எல்லாவற்றையும் கழுவி  சுத்தப்படுத்தி உண்பதற்கேற்ற உணவாகப் பக்குவ படுத்துதலைச் சமைத்தல் என்பது போல, தாயாவதற்குப் பக்குவப்பட்ட பெண்ணின் உடலின் இந்த குறிப்பை அல்லது அறிகுறியைச் சமைதல் என்றனர் போலும்.
 
. பூப்பு, சமைதல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த  இனிய பருவம் பிற்காலத்தில் விலக்கி வைக்கும் நிலையில் வீட்டு விலக்கு என்ற புதுப்பெயரையும் தாங்கிக்கொண்டது. ஓய்வுக்காக வீட்டில் வைத்த பண்டைய நிலை பிற்காலத்தில் தூய்மையைக் காரணமாக்கி வீட்டிலிருந்து விலக்கியது. மாதவிடாய்க் காலங்களில் பெண்களை ஒன்றுக்கும் உதவாதார் போல தீண்டத்தகாதாவர்களாக்கி வெளியில் விலக்கியது. பூப்பு காலங்களில் பெண்கள் பூச்சூடக்கூடாது. மங்களப் பொருள்களான மஞ்சள் குங்கும் அணியக்கூடாது. உயர்ந்த பஞ்சணையில் படுக்க்கூடாது. இவையெல்லாம் இன்றும் பின்பற்றப்படுகிறது துறவிகளுக்குப் பிச்சை இடுவது இல்லையாம். இடைக்கால சித்தர் வள்ளலார் பாடலிலும் இக்குறிப்புக் காணப்படுகின்றது. பசித்து வந்தவர்க்கு உணவிடாமல் தோழியை ஏவிவிட்டு நீ கீழ்பள்ளி கொண்டாய் என்று பிச்சை பெற தலைவன் கூறுவதாக ஒரு பாடலை அமைத்துள்ளார் புறட்சித் துறவி வள்ளலார்.. (1817) (இது நம்ம ர்ஞ்சிதா நித்யாவுக்குகேல்லாம் பொருந்தாதோ!!)

பூப்பு என்றால் முதல் முறை மாதவிடாய் தோன்றுவது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க தொல்காப்பியம், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் தொடர்ந்து வருகின்ற மாதவிடாய்களைப் பூப்பு என்று கூறுகிறது. ஆசாரக்கோவை பூப்பின் குறிப்பைச் சொல்லும் போது பூப்பு காலத்தில் ஆண்பெண் கூடல் தகாது என்றும், மகப்பேறுக்காக பூப்பு முடிந்த பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தும். தொல்காப்பியமும் பூப்பு தோன்றிய பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரிந்து இருத்தல் கூடாது என்று கற்பியலில் புணரும் காலம் குறித்துக் கூறும்போது குறிப்பிடும்.

பூப்பின் புறப்பாடு ஈறாறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான

இவையெல்லாம் முதல் பூப்பு பற்றி பேசுவது இல்லை. திருமணம் கழிந்தபின்பு வரும் தொடர் பூப்பு பற்றி பேசுகின்றன. 

உடலில் ஏற்படும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படும் சோர்வுகள், தீண்ட த்தகாதவர்களாக்கித் திண்ணையில் உட்கார்த்திவைக்கும சமூகச் சவுக்கடிகள், இவையெல்லாம் போதாதென்று மாதவிடாய்க் காலங்களில் உடல் நோய்களான ஊறல், அறிப்பு, செம்மேகம், கருமேகம், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களும், மங்கையரின் மனத்தை இன்னும் வாட்டமுறச்செய்கின்றன. இத்துடன் மாதவிடாயை மையமாகக் கொண்டு சூறாவளியாய்ச் சுழன்று அடித்து இளமை மனதைப் பாதிக்கும் முகப்பருக்கள், கண்ணின் கருவளையங்கள் போன்றவையும், மணமான பெண்களைப் பாதிக்கும் உடலுறவுப்பிரச்சனைகள், அதனால் உண்டாகும் ஆறாத பரிதவிப்பு, மன உளைச்சல் போன்றவையும், மாதவிடாய் பெண்களுக்கென்று அள்ளிக்குவிக்கும் விஷேஷப் பரிசுகள். இது குறித்தும் இன்னும் ஆராய்வோம்.

முந்தைய காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்தமைக்கும் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் இந்த பூப்பு தந்த அச்சமே காரணமாக இருந்திருக்கிறது. பெண்ணிடம் ஏதோ அதிசய சக்தி உள்ளது என்று பூப்பு, பிள்ளைப்பேறு இரண்டையும் கண்டு அஞ்சிய ஆண்மகன் அவளை முதன்மைப் படுத்தி வாழ்ந்தான். இன்று இந்த பூப்பே அன்பு தெய்வமான அவளுக்குப் பல விதங்களில் இன்னல் கொடுத்தாலும் பெண் அதில் இன்றும் பெருமை கொள்பவளாகவே இருந்து வருகிறாள்.


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்






















சனி, 10 செப்டம்பர், 2011

பூப்பு..பூப்பு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgNcxOj52VzuSJgdU2MY2JIM7BGeBDPJdzUWtrIR_Aihf2IKoCh8FKrhv7maUjTMmDXYl8hExPfFCZNA4QliNIS5ahrNeY_iUXY5LMVeqF_vNPoAssBKJQiBoLY2l7zMrsb6MipPl97g/s1600/bridal-hand-mehndi-design5.jpg
காலம் கெட்டுத்தான் போயிருக்கு. கலிகாலம்னு சொல்றது இதைதானா? பத்து வயசுதான் அதுக்குள்ள இது நடந்து இருக்கு!!! என்னத்த சொல்ல? புலம்பல் ஒலி பரவலாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. உண்மைதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பூப்பு அடைந்த செய்தியும் கிடைத்து உள்ளது. என்ன செய்வது? சமைஞ்சிட்டா, பெரிய மனுஷி ஆயிட்டா, வயசுக்கு வந்துட்டா, என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூப்பின் வயது என்பது வயது 12 முதல் 16 என்றுதான் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆனால் சராசரியாகவும் நலமான பூப்பாகவும் கொள்ள வேண்டிய பூப்பின் வயது 12 முதல் 16 என்பதாம்.  
 மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுத் தேவை ஏற்படுகின்றது. உணவுப்  பற்றாக்குறையைச் சரி செய்ய இயற்கையை மீறி பல்வேறு முறையில் உணவு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக உற்பத்திக்கு முக்கியமாகப் பயன் படுவது ஈஸ்ட்ரோஜன். உணவுப்பொருள்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் உடலின் தேவையைவிட அதிகரிக்கும் போது இந்த உரிய வயதுக்கு முன்பே பூப்பு அடைந்துவிடும் வைபவம் நடந்து விடுகிறது. ஏற்கனவே வறுமை. அதில் இந்த பூப்பு. வெந்த புண்ணில் தேளும் கொட்டியது போலத்தான். பின் என்ன? கவிஞர் வைரமுத்து கூறுவது போன்று ஏண்டியம்மா குத்தவச்சே என்று பூப்பு நீராட்டு விழாவை நம் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாகக் கொண்டாடி விடுகின்றனர்.

அதிலும் மாமிச உணவு உண்பவர்களுக்கு இந்நிகழ்வு இன்னும் வெகு விரைவில் என்கிறது ஆய்வு அறிக்கைகள்.. காரணம் கறிக்காகவே வளர்க்கப்படுகிற கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஊசி போடப்படுகிறது. இது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று எதிலும் கொழு கொழுதான் தேவை. கோழிக்கும் தேவை இக்கோழிகளைச் சாப்பிடுபவர்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டே உள்ளன. 
பெண்ணுக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான். இவை இரண்டும் பெண்ணின் சினைப்பையில் உருவாகின்றன. குறைவாக அட்ரினல் சுரப்பியிலும் உருவாகிறது. கோழிகளின் அதிக வளர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் ஈஸ்ட்ரோஜென் இளம்பெண்களின் உடல் எடையைக்கூட்டி முன்பருவ பூப்புக்குக் காரணமாவதுடன், பொதுவாகப் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய், எடை கூடுதல், மார்பக வீக்க நோய் போன்றவையுடன் வரைவில் பூப்பு எய்துதலும் ஏற்படுகின்றன. 
இதனால் இதனால் ஆண்களுக்கு ஒன்றும் இல்லையா என்று கேட்காதீர்கள். ஆண்களுக்குப் பெண் தன்மை ஏற்படுகிறதாம்!! ஆண்களுக்கு குறிப்பாகச் சிறுவர்களுக்கு ஆண்குறி வளர்ச்சியின்மை ஏற்படுகினறதாம்.

பூப்பு விரைவில் எய்துவதற்குக் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

பெண் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதற்கு பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகளும், அடிக்கடி இல்லத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள், சண்டைகள் முதலியவையும் காரணமாகின்றன. அத்துடன் விவாகரத்து ஆன இணையரின் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதாக உளவியல் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.


மனப்பதற்றத்தை ஏற்படுத்தும் எச்சூழலும் விரைவில் பூப்பு எயத காரணமாக அமையும். விரைவு பூப்பின் முக்கிய காரணங்களில் தொலைக்காட்சியின் பங்கு அதி முக்கியமானது என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதிலும் அடுத்த நாள் வரும் வரை என்ன ஆகுமோ பதற்றத்துடன் இருக்கத் தூண்டும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆற்று இச்சேவையை ஒருவரும் மறுக்க முடியாது.


      பூப்பு என்றவுடன் இந்நிகழ்வு பெண்களுக்கு மட்டும் உரியதா? பூப்பு ஆண்களுக்கும் உண்டா என்ற வினா எழுகிறது. ஆண்களுக்கும் பூப்பு உண்டு. சிறுவர்கள் உடல், மனம் இரண்டும் முதிர்ச்சியை எட்டிப்பிடிக்கும் இப்பருவத்தை குமரப்பருவம் என்பர். அதாவது குழந்தைப்பருவத்திற்கும் முதிர்ந்த பருவத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலான இவ்வருவத்தைக் குமரபருவம் என்பர். 

      அண்டச்சுரப்பிகள் இரண்டு பெண்ணின் உடலுக்கும், விந்துச் சுரப்பிகள் இரண்டு ஆணின் உடலுக்கும் சொந்தமானவை. இவையே இருபாலரிடமும் இனப்பெருக்கத்திற்கு உதவுபவை. இவற்றை இனப்பெருக்கச் சுரப்பிகள் என்பர். இது தவிர பிட்யூட்டரி சுரப்பி. இதுதான் இனப்பெருக்கத்துக்குத் தூண்டுவது. இனப்பெருக்கச் சுரப்பிகள் வேலை செய்யும் போது சுரக்கின்ற சுரப்பே ஆணுக்கு மீசை அரும்புதல், உடலளவிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.  இக்காலமே இரு பாலருக்கும் பூப்புக் காலமாகக் கருதப்படுகின்றது. 

   அருந்தா என்ற இனக்குழு (மலைச்சாதி) வாழ்க்கையில் ஆணுக்கான பூப்பு சடங்கு கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது. அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண் மகன் வயதுக்கு வந்துவிட்டதை அறிவிக்கும் சடங்காக இதனைக் கொண்டாடினராம். இச்சடங்கை அக்குழுவின் முதியவர் ஒருவர் நடத்துவாராம். முதியவர் தன் தலையால் சிறுவனின் தலையில் இரத்தம் வரும் வரை பலமாக மோதுவாராம். பிறகு அச்சிறுவனை எறும்புகள் நிறைந்த குழிக்குள் தள்ளி சில நாட்கள் இருக்கச் செய்வார்களாம். இச்சடங்கினை மறுபிறப்பு என்றும் கூறுவார்களாம். (நன்றி கவிஞர் கனிமொழி). இச்சடங்கின் முதன்மையான அம்சம் என்பது அந்த ஆணிடம் வீரத்தையும் வலி பொறுக்கும் தன்மையையும் ஏற்படுத்துவதாம். வீர் யுகத்தில் போருக்கு ஆணை ஆயத்தபடுத்துவதே இச்சடங்கின் முக்கிய நோக்கமாக இருந்திருத்தல் கூடும்.

மேலை நாட்டு இனக்குழுவில் ஆண் பூப்படைதலை பிணை அறுத்தல்” க்யா மோட்டு டி செலி-டு ஸ்னாப் தி டீ (Kia mottu te sele – to snap the tie) என்றும் பெண் பூப்படைதலை பாவாடை அணிதலாகவும் (Hakatiti – titi skirt) கொண்டாடியதாகத் தெரிய வருகிறது. (நன்றி கவிஞர் கனிமொழி)

   ரஷ்யாவில் பெண் பூப்பு அடைந்தவுடன் அவள் தாய் ஓங்கி ஒரு அரை கன்னத்தில் விடுவாளாம். அரையில் சிவக்கும் கன்னம் ஒரு நற்சகுணத்தின் அடையாளமாம். (என்ன சகுணமோ தெரியவில்லை, ஏண்டியம்மா குத்த வச்ச கதையாக இருக்குமோ!!)

நேபாளத்தில் பூப்பு அடைந்த பெண்ணை ஒரு இருட்டறையில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். உதிரப்போக்கு நாட்கள் முடிந்த பின்பு சூரியனுக்கும் அவளுக்கும் திருமணச்சடங்கு நட்த்துவார்களாம். (கேள்விதான் சரியாகத் தெரியாது)

ஆப்பிரிக்க சுளு இனத்தில் பூப்பு அடைந்த பெண்கள் தோழிகளுடன் சென்று நீராடி வந்த பின்பு அவள் உடலில் சிவப்பு நிற களிமண்ணைப் பூசுவார்களாம்.

இந்திய இனத்தில் ஒரு சாரார் ஒரு பெண் பூப்பு அடைந்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு குழூஉக்குறியாக வினவ எள்ளு போட்டாச்சா? என்பர். மற்றொரு சாரர் புட்டு போட்டாச்சா? என்பர். இவற்றைக் குழூஉக்குறி என்பர். இந்த எள்ளு, புட்டு இரண்டும் பூப்பின்போது பூப்படைந்த பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். இது போன்றே ஜப்பானில் ஒரு இனத்தாரிடம் சிவந்த அரிசியும் பீன்ஸும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். 

அதெல்லாம் சரி. பண்டைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு எய்தினார்கள் என்ற அடுத்த வினா எழுகிறதே நம் மனத்தில்? பழைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு அடைந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சங்கப் பாடலில் பெயர்க்குறிப்பிடப்படாத ஒரு சிற்றரசனின் மகளின் பூப்பு பற்றி குறிப்பு உள்ளது. பூப்பு விழா கொண்டாடிய அன்றைய வழக்கத்தை அறிய முடிகிறது எனினும் பூப்பான பெண்ணின் வயது தெரியவில்லை.

பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்

இச்சங்கப் பாடல் வழி பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண முடியாதவாறு மனைக்குள் வைத்தனர் என்பது தெரிகிறது. இன்றும் மாமனைத்தவிர அப்பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்க்கூடாது என்று மாமன் ஓலைக்குடிசைக் கட்டுவதும் அதற்கு உரிமைப்போர் நடப்பதும் எண்ணற்ற திரைப்படங்கள் வழி நமக்கு கிடைக்கும் பூப்பு பற்றிய செய்திகள்.

சங்க காலப் பாவலர்கள் கவி எழுதுவதை நோக்க வியப்பே எஞ்சுகிறது. பார்ப்பதற்கு அருமையான, பரம்பு மலையின் சுனை பொல என்று பூப்பு அடைந்த பெண்ணை உவமிப்பது எண்ணி எண்ணி வியத்தற்குரியது.  

பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண இயலாது மனைக்குள் வைத்தனர் என்பதும், அம்மனையுள்ளும் தூய்மை, வெண்மை, குளிர்ச்சியான அகில் மணம் கமழும் விரிப்பில் அமர்த்தப்பட்டதும் அறியலாகிறது. இதில் அக்காலத்தில் பேணப்பட்ட சுகாதாரம் நன்கு விளங்குகிறது. பூப்பு நாட்களில் அதிமுக்கியமானது சுகாதாரமானச் சுற்றுச் சூழலே என்பதை அறிந்த நம் முன்னோர் எவ்விதத்தில் உடலியல், அறிவியல் அறிவில் குறைந்தவர்கள்? உளவியல் கூறுகளும் அவர்களிடம் நிரம்பியே இருந்துள்ளன என்பதற்கும் இப்பாடல் சான்றாகின்றது.

இது அந்நாளைய பூப்பு விழாவை ஒட்டிய சடங்குகள் எனலாம். பூப்பு அடைந்தவுடன் சிறுமியாக இருந்த அப்பெண்ணிடம் பெண்மை நிரம்பி வழிந்தது என்று சுட்டும் பாடலடிகளால் பூப்பு என்பது பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் உண்மை இப்பாடலால் பெறப்படுகின்றது. இதனை நோக்கும் போது அக்காலத்து மக்களிடம் நிலவிய உளவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது. 

                                 பூ(ப்பு) இன்னும் மலரும்....


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்