“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சங்கம் போற்றிய கல்வி
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூறி தன் நாட்டைப் பற்றி. பெருமைப் பட்டுக்கொள்வான் பாரதி. அது எத்தனை உண்மை. பன்னெடுங் காலத்திற்கு முன்பே கல்விக்கு முதன்மை இடம் கொடுத்த இனம் தமிழினம். சங்கத் தமிழன் பிரிவு என்பதைக் கூறுமிடத்து கல்வியாற் பிரிவு மூன்று ஆண்டுகள் வரை என்ற இலக்கணம் வகுப்பான். இந்த இலக்கணத்தால் குடும்பத்தைப் பிரிந்து சென்று கல்வியைத் தேடியுள்ளனர், கல்விக்காக நாடு விட்டு நாடு சென்றுள்ளனர் என்பது வெளிச்சமாகிறது.

கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்கா கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம் என்று கூறும் பாரதிதாசன் ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்குக் கல்வியைத் தருவதில் அக்கறை காட்ட வேண்டும், அதற்கே முதலிடம் தரவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சற்றுக் கோபத்துடனே சுட்டிக்காட்டுவார். இன்றும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கும் சலுகைகளில் முதன்மையான இடம் கல்விக்கே தரப்படுகிறது.

இது ஒரு பெரிய செய்தியே அல்ல. ஏனெனில் போர் யுகமாகவும் ஏர் யுகமாகவும் இருந்த சங்க காலத்திலேயே சங்கத்தமிழன் கல்விக்கு அளித்த இடத்தைப் பார்க்கும்போது நமக்குப் பெரிதும் வியப்பாக உள்ளது.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன்

என்று கல்வியிற் சிறந்த பழம்பெரும் தமிழ் மூதாட்டி ஒளவை கூறுவார். ஏனெனில் மாசறக் கற்றோன் அறிவுடையவனாக ஆகிவிடுகிறான். எனவேதான் ஒரு குடியில் பிறந்த மக்களில் செல்வந்தர், கொடைவள்ளல், வீரன் என்று பலர் இருந்தாலும் ஒரு மன்னன் கல்வியில் சிறந்த சான்றோனையே தன்னருகில் அழைத்துப் போற்றி வைத்துக் கொள்வானாம். அவன் கூறும் வழியில்தான் ஆட்சியைச் செலுத்துவானாம். இதைக் கூறுவது அனுபவம் மிக்க ஒரு மன்னனே. ஆம் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருகஎன்னாது, அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

என்று கூறுகிறான். இது வீரயுகமாக இருந்த சங்க காலத்தில் எழுந்த பாடல், அதுவும் நாட்டை ஆண்ட ஒரு மன்னனின் மனத்தில் எழுந்த கருத்து என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நம் முன்னோர்களின் கல்வி பற்றிய கண்ணோட்டம் புலனாகிறது.

இந்தக் காரணம் கருதிதான் தன்னாட்டுப் புலவர்கள் பிறநாட்டுப் புலவர்கள் என்று கல்வியிற் சிறந்தவர்கள் எல்லோரையும் புரவலர்கள் புரந்து வந்தனர். அவர்கள் கூறிய அறிவுரையின் படி நாட்டை ஆண்டு வந்தனர். சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழன் பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் இருவரது நட்பும் அறிவின் தளத்தில் அமைந்தது எனில் மிகையாகாது.

இது  மன்னராட்சி காலத்துக்கு மட்டும் பொருந்தி வருவதா? மன்னராட்சி, மக்களாட்சி என்னும் எக்காலத்திற்கும் பொருந்தி வருவது. ஆம் இன்றும் அமைச்சர்கள் கற்றவர்களோ கல்லாதவர்களோ ஆனால் ஆட்சியர்கள் கற்றவர்களாக இருப்பதில் இருந்து இக்கூற்றின் உண்மையை உணர முடிகிறது. கற்றோர் பலரின் அறிவுரையின் படி அமையும் ஆட்சியே நல்லாட்சியாக அமைகிறது என்பதையும் நாம் கண்ணுற்று வருகிறோம்.

நாட்டுக்கே கல்வியாளர்களால் நன்மை என்னும் போது கற்ற ஒருவனுக்குக் கிடைக்கும் பெருமையும் புகழும் எல்லாவற்றுக்கும் மேலாக பொருளும் அவன் கற்ற கல்வியால் மட்டுமே கிடைத்துச் சிறக்கிறான்.

பொதுவாகத் தான் பெற்ற பிள்ளைகள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் தாய் பார்ப்பாள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாயும் கல்வியறிவு உள்ள பிள்ளையையே பெரிதும் விரும்புவாளாம். இதனையும் சங்கத்தமிழனே கூறுகிறான்.

பிறப்புஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்

என்று கூறி வேறுபாடு பார்க்கக் கூடாத தாயே, கற்றவன், அறிவுடையவன் என்றால் சற்று கூடுதல் மதிப்பு செலுத்துவாள் என்கிறான். ஈன்ற தாயையும் ஏற்றத்தாழ்வு பார்க்கச் செய்வது கல்வி. தாய்மையையே மாற்றும் அல்லது வெல்லும் வல்லமை பெற்றுள்ளது கல்வி, என்று கூறும் இவர், இதனாலேயே எப்பாடு பட்டாகிலும் கற்றல் தேவை என்று வலியுறுத்துகிறார். இதனையும் அதே பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே

பிறருக்கு பெரிய செல்வத்தைக் கொடுத்தாகிலும் அடிமை போலத் தொண்டு செய்தாகிலும் கற்க வேண்டிய அவசியத்தையும் இப்பாடல் நன்கு தெளிவுறுத்துகிறது.

இப்படியெல்லாம் கற்ற கல்வியின் பயன் எதுவாக இருக்கும்? எதுவாக இருக்க வேண்டும்? என்று எண்ணிப் பார்த்த அதே அரச புலவன் கல்வி கற்ற சமுதாயத்தில்தான் சாதியால், மதத்தால், இடத்தால் வேற்றுமைகள் அகலும் என்பதையும் சொல்கிறான். இதுவே கல்வியால் கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றுள்ளும் மேலான நன்மையாக இருக்கக் கூடும். இருக்கவும் வேண்டும். கல்வியைப் பால் வேற்றுமை பாராமல் கொடுக்கவும் பெறவும் வேண்டும். கல்வி ஒன்றே வேற்றுமைகளை அறவே அகற்றும் அழிப்பான் என்று அனைவரும் அறிந்து கொள்ள வெண்டும் என்பதை வலியுறுத்த எண்ணிய எம் புலவன் அன்றே,

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

என்றும் கூறுகிறான். நாற்பால் என்பதை நால்வருணம் என்று கூறி மேல்சாதி, கீழ்சாதி என்னும் சாதி வேற்றுமை என்று கூறுவாரும் உளர். அவன் கண்ட இக்கனவு இக்காலத்தில் ஓரளவு நனவாகிக் கொண்டு வருகிறது எனலாம். இந்தக் கண்ணோட்டமே தமிழனைத் தமிழன் என்று தலை நிமிர்ந்து நிறகச் செய்கிறது.

வருணபேதம் மட்டுமன்றி நாடு என்னும் பேதமும் கல்வியால் அகலும் என்பதையும் இவ் அடிகள் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. நால்வகை நிலப்பகுதியில் கீழ்பால் எனப்படும் தாழ்ந்த நிலமாகிய மருத நிலத்தில் வசிப்பவன் கற்றவனாக இருப்பின் மேட்டுப்பகுதியான குறிஞ்சி நிலத்தில் உள்ள ஒருவன் அவனது கல்வியைக் கேட்டுப் பெற அவனைத் தேடி வருவான் என்பது பொருள். இங்கு சாதி, சமயம் தாண்டி, நாடு என்னும் எல்லையையும் கடந்து கல்வி எல்லோரையும் ஈர்க்கும் தன்மையதும், வன்மையதும் கல்வி என்பது புலனாகிறது.

இப்பாடலடிகள் தேனீக்களாகக் கற்றவர்கள் உள்ள இடம் தேடி நாடு விட்டு நாடு சென்றும் கல்வியைப் பெற்றுள்ள பாங்கை எடுத்து இயம்புகிறது. சங்கத்தமிழனின் கல்விக் கொளைகையைப் பறை சாற்றுகிறது. இதனையே,

மன்னனுக்குத் தன் தேசமல்லால் சிறப்பில்லை;
கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

என்னும் ஒளைவையின் வாக்கும் உறுதிப் படுத்துகிறது. இதனால் மேல்ப்பால், கீழ்ப்பால் என்னும் வேற்றுமை ஆண்பால் பெண்பால் என்னும் வேற்றுமை எல்லாவற்றையும் களையும் கதிர் அரிவாள் கல்வியே என்பது திண்ணம்.


-    ப. பானுமதி


 (இந்தக் கட்டுரை 25, 26/08/12 ஆகிய இரு நாட்கள் சென்னையில், உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையமும் எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய கல்வி மாநாட்டு மலரில் இடம்பெற்றது)