“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 30 ஜூன், 2012

பேசும் புத்தகம்.... காட்டும் வித்தகம்
திரும்பிய இடமெல்லாம் விரும்பிய நேரமெல்லாம் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் என்று எதிரொலி கேட்டுக்க்கொண்டே  இருப்பதை எல்லோரும் அவதானித்து இருப்பார்கள். இப்போதெல்லாம் இளசுகள் பேசும் ஒரே பேச்சு ஃபேஸ் புக்..  ஃபேஸ் புக். இளைஞர்கள் முக்கியமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்தப் புத்தகத்தைப் படிக்கிறார்களோ இல்லையோ எப்போதும் ஃபேஸ் புக் எனப்படும் முகப்புத்தகத்தைப் படிக்கத் தவறுவதே இல்லை. முப்பொழுதும் உன் சன்னதியில் என்று முகப் புத்தகத்திலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். அப்படி என்னதான் இந்தப் ஃபேஸ்புக்கில் இருக்கிறது என்று தெரிவதில்லை. இதுவும் ஒரு போதை போலவே மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. மாணவர்கள் மாலை பள்ளியை விட்டுக் கலையும் நேரம் சொல்லிச் செல்லும் ஒரு வார்த்தை ஏய் வரேண்டா என்பதில்லை.  “ஃபேஸ் புக்குக்கு வாடா மச்சி”  என்பதே. அதுவும் முகத்தைக் காட்டி ஜாடை சொல்லும் நிலைமைக்குப் போய்விட்டது. இதைவிட சிறப்பு என்ன என்றால் சிறுசுகளுக்கு இணையாகப் பெரிசுகளும் ஃபேஸ்புக்கே கதியென்று மோட்சத்திற்கு வழி தேடுகின்றனர்.

இன்று ஃபேஸ் புக் மூலம் எண்ணிலா காதல் மொட்டுகள் விட்டுள்ளன. அவை மலர்ந்துள்ளன. பல திருமணங்களாகக் கனிந்துள்ளன. அவற்றுள் சில வெம்பி வெடித்து விவாகரத்தாக உதிர்ந்தும் உள்ளன. என்றோ பிரிந்த உறவுகள் சேர்ந்துள்ளன. பிரிந்த நட்புகள் இணைந்துள்ளன. பல உண்ணதமான உலகலாவிய நட்புகள் இனிமையைத் தருகின்றன.

ஃபேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தனி நபரின் விவரங்களில் இருந்து பல வணிக நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றன. இது ஏதோ கேள்விப்பட்ட விபரம் அல்ல. அமெரிக்காவின் மேரிலெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை. அதுமட்டுமல்ல, விளம்பரங்கள் மூலம் பல வணிக நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டக் காரணமாக இந்தப் ஃபேஸ்புக் இருந்திருக்கின்றது என்பது கண்கூடு.

இப்படி ஃபேஸ்புக் எனப்படும் இந்த சமூகவலைத்தளம் மூலம் எண்ணற்ற புரட்சிகள் நடந்து கொண்டு வருவதை ஒருவராலும் மறுக்கவும் இயலாது. இனிவரும் காலத்தில் ஃபேஸ்புக்கை கனநேரம் கூட ஒருவராலும் மறக்கவும் இயலாது. அதே சமயம் ஏதோ ஒரு சில நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் எதிர் விளைவையே ஏற்படுத்துகின்றது என்கின்ற சமூகவியல் ஆர்வலர்களின் எச்சரிக்கைக் குரல்கள் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.. எதில்தான் குறை இல்லை. குறைகளைக் களைந்து நிறைகளைக் கையிலெடுத்தால் இந்த உலகை நம் கையில் கொள்ளலாம்.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்பது வள்ளுவம் கூறும் அறமல்லவா?

ஃபேஸ்புக்கில் எது மிகை என்று காண்பதற்கு முன்பு ஃபேஸ்புக் பற்றி துளியளவும் அறியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக இந்த சமூக வலைத்தளத்தின் சேவைகள் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளம் அமெரிக்காவின் மார்க் சுர்க்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவரால் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது முதன்முதலில் ஹார்வார்டு மாணவர்களுக்காகத் துவங்கப்பெற்றது. இந்தத் தங்கத்தட்டு இப்போது பதிமூன்று வயது நிரம்பியும் ஒரு மின்னஞ்சல் முகவரியும் இருக்கும் எவரும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம் என்ற அளவில் விரிந்திருக்கிறது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


கனடா, அமெரிக்கா, ஐக்கிய குடியரசுகள் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய குடியரசுகள், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றுள்ளது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது.. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன்களை அனுப்புவதற்குரிய சிறந்த வழியாக ஃபேஸ்புக்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற இணைய தளங்களைவிட ஃபேஸ்புக்கில் விளம்பரக் கட்டணம் குறைவு. ஏனெனில் இளைஞர்கள் விளம்பரங்களைப் பார்க்கும் ஆர்வமற்றவர்களாக உள்ளனர். நண்பர்களுடன் அளாவளாவுவதை மட்டும் இளைஞர்கள் விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது.

பிரச்சனை இல்லாதவாறு ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி சற்று பார்ப்போம். பொதுவாகச் சேமித்து வைக்கவேண்டும் என்று எண்ணும் சுய விவரங்கள், செய்திகள், புகைப்படங்கள் போன்றவற்றைச் சேமிக்க உதவும் ஒரே இடம் ஃபேஸ்புக். ஊர்விட்டு, நாடுவிட்டு, கண்டம் விட்டு நண்பர்களுடன் பேசிப் பழக வாய்ப்புள்ள இடம் ஃபேஸ்புக். அரட்டைகள், விளையாட்டுகள், பிறந்த நாள் அட்டவணைகள் என்று நட்புக்கு பலவகையில் பாலம் அமைக்கிறது இது. ஃபேஸ்புக் மூலமாக கூட்டு அமைப்பாக இணையதளம் போல அவரவர் நண்பர்கள் அவரவர்களுக்கென அமைப்பை உருவாக்கி எழுதலாம். அரட்டையும் அடிக்கலாம். கிரிக்கெட், பார்ம்வில்லா, சிட்டிவில்லா, அட்வெஞ்சர் வேர்ல்டு, எம்பையரும் அலியான்சும், அனிமல் கிங்டம், ஹார்ஸ் ஹெவன், முதலிய விளையாட்டுகள் அறிவை வளர்க்கும் வண்ணமும் விறுவிறுப்பாகவும் ஃபேஸ்புக் பயனாளர்களை ஈர்க்கின்றன. குறிப்பாக் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவர்களுக்கு இவ்விளையாட்டுகள் பயனளிக்கின்றன. இப்படி எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் ஃபேஸ்புக் இப்போது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் செய்து தந்துள்ளது.

இத்தனை வசதிகள் நிறைந்துள்ள ஃபேஸ்புக்கை நம் இளைஞர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி வருகின்றனர்? அரசியல் பேச, அன்றாடச் செய்திகளை அலசி ஆராய, வெளியாகும் புத்தம் புதுத் திரைப்படங்களை விமர்சிக்க, தங்களுக்குப் பிடித்த படப்பாடல்களைக் காணொளியாகப் பதிவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, கவிதை எழுத, கட்டுரை எழுத, நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள என்று பலவகையில் பயன்படுத்துகின்றனர்.

சமூக அக்கரையுடன் ஃபேஸ்புக் வழியாக எழுத்துப் போராட்டங்களை இளைஞர்கள் நடத்துவது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்று லைக் (கையெழுத்து) போட வைத்து அவர்கள் செய்த போராட்டம், சிறுவணிகத்தை அந்நியருக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்று செய்த போராட்டம் ஆகியவை பெரிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சமூகப் புரட்சியை உண்டாக்கும் நபர்களை இந்திய/ தமிழக அரசுகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதே இதற்கு சான்று. 

அதே வேளையில் காலைவணக்கம், மாலை வணக்கம் என்று வேளைக்கொரு வணக்கம் சொல்வதும் அதை ஒருநூறுபேர் வழிமொழிவதும் நட்பை வளர்க்கும் என்றாலும் இது வேலையற்றவர்களின் வேலை. தனியாகவும் குழுவாகவும் ரகசியமாகவும் அரட்டை அடிப்பதை என்ன என்று சொல்வது? 2008 ல் ஆரம்பித்த இந்த அரட்டைப் பிரிவு 2011 முதல் வீடியோ அரட்டைக்கும் வழி வகுத்து தந்துள்ளது.


ஃபேஸ்புக் மூலமாகப் பெரும்பான்மையான பாலியல் தவறுகள் நடக்க இந்த வீடியோ வசதியே ஏதுவாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஃபேஸ்புக்கில் பதிவிடும் தனிநபரின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு விடுகிறது என்கின்றனர்.

இதில் நடைபெற்றுள்ள சில கொடுமைகளை எண்ணும்போது எத்தனை குடும்பங்கள் ஃபேஸ்புக்கில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறதோ என்று அவர்கள் அச்சப்படுவதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஆணென நினைத்து பெண்ணே பெண்ணை காதலித்த கதை, ஆணே ஆணைக் காதலித்த கதை, கணவனிடமே வேறு ஒருவரிடம் பேசுவதாக எண்ணிக்கொண்டு காது கூசக் காதல் வசனங்களைப் பேசிய மனைவி, தன் மாணவியிடமே நட்பு கொண்டு கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியர் என்று எண்ணற்ற கதைகள் ஃபேஸ்புக்கின் பக்கங்களில் இடம்பிடித்துள்ளன. எதிரில் இருந்து பேசுபவர் யாரெனத் தெரியாது விட்ட ஜொல்லில் மாட்டிக்கொண்டு ஞேஏஏ என்று விழித்த அண்ணன் தங்கைளும் அகப்பட்டுள்ளனர். நல்ல நட்பென்று நம்பி பல மோசமான விளைவுகளைச் சந்தித்த வஞ்சகக் கதைகளும் இதில் ஏராளம்.

 ஃபேஸ்புக்கின் சிறந்த சேவையே நட்புதான். ஆனால் இதுபோன்ற விளைவுகளிருந்து தப்பித்துக்கொள்ள முதலில் நட்பு விண்ணப்பம் அனுப்பும்போதும் பிறரது நட்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நட்பு கோரிக்கை வைப்பவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து நம்பிக்கை வந்தபின்பு நட்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ப்ரொஃபைல் எனப்படும் சுயவிவரப் பக்கத்தில் அனைத்து சுய விவரங்களையும் பதிவிட்டே ஆகவேண்டும் என்னும் அவசியமில்லை. பொதுவானவற்றை மட்டும் பதிவிட்டு தேவையற்றவற்றை பதிவு செய்யாமல் இருப்பது நலம் தரும். ஆர்வ மிகுதியில் பதிவு செய்தாலும் அவற்றை நண்பர்கள் மட்டும் (only friends) என்னும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது. முக்கியமாக தொலைபேசி எண், தொடர்பு முகவரி, புகைப்படங்கள் ஆகியவற்றைப் பொதுப்பார்வைக்கு வைக்காமல் கட்டுப்பாட்டில் வைப்பது பாதுகாப்பானது.

அதே போல நாம் பதிவிடும் செய்திகளிலும் எவை பொதுவாக எல்லோரும் பாக்கும்படி பதிவிடலாம், எவை நண்பர்கள் மட்டும் பார்க்கலாம் என்பதை முடிவு செய்து நண்பர்கள் மட்டும் பார்க்கலாம் எனபதை ஒன்லி ஃப்ரண்ட்ஸ் என்பதில் சொடுக்கி அவர்கள் மட்டும் பார்க்கவும் நண்பர்களின் நண்பர்களும் பொதுமக்களும் பார்க்காமல் இருக்குமாறும் கட்டுப்பாடு செய்து கொள்வது நல்லது. முக்கியமாகப் புகைப்படங்களைப் பதிவிடும்போது Custom என்னும் பகுதியில் சொடுக்கியபின் பதிவிடுவது நீங்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ளும் வழி. தவறான ஒருவர் நண்பராகச் சேர்ந்து இருக்கிறார் என்பதாக ஐயம் ஏற்பட்டால் உடனடியாக அவரை Manage Blocking என்னும் பகுதியில் சென்று தடை (Block) செய்து விட்டால் குள்ளநரியை விறட்டியடித்த வெள்ளைப் புறாவாக நீங்கள் ஃபேஸ்புக் தென்றலில் உலாவரலாம்.

ஒருவரது ஃபேஸ்புக் கணக்கை அவர் அறியாது மற்றவர் கையாளவும் வழி இருக்கிறது முக்கியமாகப் பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்ளாமல் எட்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் கொண்ட சொற்கள், அவற்றின் நடுநடுவே எண்கள் அல்லது குறியீடுகளைச் சேர்த்து வைத்துக்கொள்வது நல்லது.

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி முடிக்கும் போது மறக்காமல் லாக் அவுட் செய்துவிட வேண்டும். முக்கியமாக வெளியிடங்களில் சென்று (பிரவுசிங் செண்டரில்) ஃபேஸ்புக் பார்க்கும்போது கவனமாகச் செய்ய வேண்டுவது இது.

       எல்லாவற்றையும் விட முக்கியமாக ஃபேஸ்புக்கை, குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர் கண்காணிப்பது அவசியம். சரி பெற்றோர்கள் உபயோகப் படுத்தும்போது யார் கண்காணிப்பார்கள். மனம்தான்ங்க... கண்டதையெல்லாம் பேசாது பயனுள்ளதை மட்டும் பேசுன்னு மனசுக்கும் ஒரு கட்டுப்பாடு கொடுத்துட்டு ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தனும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கத்தியால் காய்கறியும் வெட்டலாம். கழுத்தையும் அறுக்கலாம். எல்லாம் ஜாக்கிரதையாகக் கையாளும் நம் கையில்தான் உள்ளது.

ஃபேஸ்புக் புராணத்தை முடிக்கும் முன்பு சுவையான இரு தகவல்கள். ஃபேஸ்புக்கைப் பற்றியும் அதன் நிறுவனர்களைப் பற்றியும் தி சோஷியல் நெட்வொர்க் (The social net work) என்னும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று வந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.
ஃபேஸ்புக் மேல் உள்ள மோகத்தால் ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு ஃபேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர். முகப்புத்தகமாக நினைத்து அந்தக் குழந்தைப் புத்தகத்தில் ரெக்வெஸ்ட்  வைத்தும் லைக் போட்டும் எவரும் கிழிக்காமல் இருந்தால் சரி.
(சோழ நாடு ஜீன் மாத இதழில் வெளியான கட்டுரை)


நன்றி சோழ நாடு.

ஞாயிறு, 24 ஜூன், 2012

குடிக்கு மட்டுமல்ல முடிக்கும் பீர்.


மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான். ஆம் கவரிமான்களுக்கே மயிர் மீது அவ்வளவு மோகம் இருக்கும் போது கன்னி மார்களுக்கு மயிர்மோகம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அன்று தொட்டு இன்று வரை பெண்கள் கவலை கொள்ளும் விஷயங்களில் முதலிடம் பெறுவது தலைமுடியே. ஆம் கவலையினால்தான் தலைமுடி உதிர்வதும் தலைமுடி உதிர்வதால் மனக்கவலை வருவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. தொடர்ந்து நடைபெறுவது. ஆம் அந்த அளவு பெண்களுக்கு அழகு தருவதில் முதலிடம் பெறுவது கூந்தல். அத்தகைய கூந்தல் உதிர்ந்தால் பெண்களின் அழகில் ஏதோ ஒன்று இல்லை மொத்தமே குறைவது போலத் தோன்றும். அதனால்தான் முந்தைய காலங்களில் கணவனை இழந்த பெண்களின் அழகைக் குறைக்கும் நோக்கில் கணவன் இறந்தால் மனைவிக்கு மொட்டை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படியும்...... என்ன செய்வது?? 

 கூந்தல் உதிர்வதற்குக் காரணம் நமது உடலில் ‘சல்பர்‘ போதுமான அளவு இல்லாததே. அந்த கூந்தல் உதிராமல் தடுக்க நாம் வெங்காயத்தைப் உபயோகிக்கலாம். ஏனெனில் இதில் ‘சல்பர்‘ அதிகமாக உள்ளது. இதனை உண்பதால் நம் உடலில் இரத்த சுழற்சி சீரடைந்து கூந்தல் பட்டு போன்று மென்மையாக வளரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


உதிர்தலைத் தடுக்கும் வழிகள்வெங்காய ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில் உள்ள ‘ஸ்கால்ப்‘ அதாவது வேர்ப்பகுதியில் தடவ வேண்டும். சாற்றைத் தடவுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், வெந்நீரில் நனைத்த துணியைத் தலையில் சுற்றி கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.வெங்காயம் மற்றும் பீர்:பீர் என்று கூறியவுடன் எடுத்து அடித்து விட்டு முடி பளபளக்கவில்லையே என்று கேட்காதீர்கள். இது வேறு வகையான மருத்துவம். கூந்தல் பட்டு போல மினுமினுக்க வெங்காய சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயைப் பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கப் பீரை அந்த பேஸ்டுடன் கலந்து தலைமுடியில் தடவிக் கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து நன்கு சாம்பு போட்டு அலசி விடவும். இதனால் கூந்தல் பட்டு போல் இருக்கும். 

தலைப்பைப் பார்த்ததும் ஆண்கள் பலர் ஆர்வமாக உள்ளே ஓடிவந்து இருப்பீர்கள். உங்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கலாமே. உங்களுக்குப் பிரச்சனையே இல்லை. குடிக்கும்போது கொஞ்சம் முடிக்கும் ஒதுக்குங்கள். ஒரு கல் இரு மாங்காய்...ம்ம்ம்ம்ம் ஆகட்டும்...ஆகட்டும்


சனி, 23 ஜூன், 2012

செல் ஃபோன்களுக்கு இனி ஜாக்கெட் வாசம் இல்லை.பாக்கெட் சாரிஸ் வந்துவிட்டன.....

பாவம் இந்தப் புடவைக் கட்டும் பெண்கள். ஜீன்ஸ் போடும் பெண்களைப் பாத்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர். ஏன் என்று கேட்க மாட்டீர்களா? ஆம் ஜீன்ஸ் போடும் பெண்கள் எல்லாப் பொருள்களையும் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு கூலிங் கிளாஸையும் மாட்டிக்கொண்டு ஜாலியாகக் கையை வீசிக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் ஒரு கையால் புடவையையும் மற்றொரு கையால் ஹாண்ட் பேக்கையும் தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்களுக்குப் பொறாமையாக இருக்காதா என்ன? அதுவும் பேருந்தில் செல்லும்போது ஒரு ரிங் வந்தவுடன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு ஸ்டைலாக மொபைலை எடுத்துப் பேசும் நாகரிக யுவதிகளைப் பார்த்து  காதிலும் வயிற்றிலும் லேசாக அக்கினி உருவாவது இயற்கையே. அதிலும் புடவைப் பெண்கள் மொபைலை வைத்துக் கொள்வது எங்கே என்று தெரியாமல் எங்கெங்கோ வைத்துக்கொண்டு அல்லல் படும் போது சொல்லவே வேண்டாம்.....
ஆனால் இவர்களுக்கும் இனி ஜாலிதான். ஆமாம் பாக்கெட் வைத்த புடவைகள் வந்து விட்டன. குமரன் சில்க்ஸ் பாக்கெட் வைத்த புடவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மொபைல்களுக்கு ஜாக்கெட் வாசம் கிடைக்காது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் ஈசியா எடுத்தப் பேச பொருத்தமாகப் பாக்கெட் இடத்தைத் தேர்வு செய்துள்ள குமரன் சில்க்ஸ் நிறுவனத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
இந்தப் பாக்கெட் சாரிஸ் சிறு குழந்தைகள் கட்டிக்கொள்ளும் புடவைகளைப் போலவே முன்னரே பிளிட் அதாவது கொசுவம் ரெடிமேடாக வைக்கப்பட்ட்து. சல்வாரை மாட்டுவது போல இதனை மாட்டிக்கொண்டு ஜிப்பைப் பூட்டினால் முடிந்தது வேலை. இது முக்கியமாக விழாக்களுக்கு (PARTY WEAR) அணிந்து செல்லும் வகையில் பட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விலை ரூபாய் 4,000. இளம் பெண்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இப்புடவைகளுக்குக் கொள்கைப் புடவை (concept sariஎன்று பெயர் சூட்டியுள்ளது இந்நிறுவனம்.
குமரன் சில்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பாக்கெட் சாரியைக் கட்டிக்கொண்டு பெண்கள் நடந்தால் அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தே வந்து விடும் போல இருக்கிறது... மகிழ்ச்சிதான். ஆனால் பிட்பாக்கெட் கார்ர்களுக்கும் இதில் கொண்டாட்டம்தான். ஜாக்கிரதை ஜாக்கிரதை..... புடவைப் பெண்களே......

சனி, 16 ஜூன், 2012

தண்ணீரும் வெந்நீரும்
1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உற்பத்தித் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட முடிவை அடுத்து ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாகக் கொண்டாடலாம் என ஐக்கிய நாடுகளின் அவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக நீர்த்தினம் அதாவது உலக நீர்நாள் அனுட்டித்து வருகிறோம். ஆனால் பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இடம்பிடித்து இருப்பது நீர் எனினும் உலக மக்கள் தொகையின் நான்கு பேரில் மூவர் அருந்துவதற்குத் தூய நீரின்றி அவதிப்படுகின்றனர் என்பதே உண்மை.
உலகில் பாதுகாப்பான நீரின்றி எட்டு நொடிகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் குழந்தைகள் சாவதற்குப் பாதுகாப்பற்ற குடிநீரே முதல் காரணமாக அமைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதுவே இன்றைய நீர்வளத்தின் நிலை.
நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு என்பது வள்ளுவம். இதனால் அண்டம் என்றழைக்கப்படும் உலகும் பிண்டம் எனறழைக்கப்படும் உயிரும் நீரின்றி அமையாது என்பது தெளிவு.
தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பும்போது கூட நீரின்றி அமையாத உலகம் போலத் தலைவனின்றி அமையாத தன் நிலையை அறிந்து அவன் வந்துவிடுவான் என்று ஒரு தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல் ஒன்று நற்றிணையில் காணலாகும். பாடல் இதோ,
நீரின்றி அமையாது உலகம் போல்
தம்மின்றி அமையாது நன்னயந்தருளி”.

இவ்வளவு முக்கியமான நீர் உடலுக்கு எந்த அளவு தேவை? மிகுதி என்பது எந்த அளவு? குறைவு என்பது எந்த அளவு? எந்த நீரைப் பயன் படுத்த வேண்டும்? எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்ப்தை அறிய வேண்டிய கோடை இது.

நெடுநல் வாடையில் தொகுவாய்க் கலத்து நீரை அருந்தாமல் பகுவாய் கலத்து நெருப்பில் குளிர் ஆறுவர் என்று கூறுவதால் குளிர்காலத்தில் மக்கள் குவிந்த வாயினை உடைய குடத்துத் தண்ணீரைக் குடிக்காமல் பெரிய வாயையுடைய காரைச்சட்டியில் நெருப்பை இட்டு அதில் குளிர் காய்வார்கள் என்பதை புலப்படுத்தும். ஆனால் கோடையில் குளிர் நீர்தானே வேண்டியுள்ளது.

ஆனால் என்னதான் கோடையாக இருந்தாலும் குளிர் நீரைப் பருகவே மனம் விரும்பினாலும் அதையும் காய்ச்சி குளிர வைத்தே குடிப்பது நல்லது என்கின்றனர்.

அதே சமயம். காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால் நெஞ்செரிச்சல், தலைவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று வலி, இருமல் ஆகிவை உடனே குணமாகும். குளிர் நீரை மட்பாண்டத்தில் சேமித்து அருந்துவது போல வெந்நீரை எப்பாண்ட்த்தில் சேமித்தல் நலம் பயக்கும் என்பதும் மிக முக்கியமானது.

பொன்பாத்திரத்தில் வெந்நீரைச் சேமித்து அருந்துவதால் வாயு, கபம், வெப்பு நோய் போகும். நல்ல புத்தி உண்டாகுமாம். அறிவு விருத்தி அடையுமாம். ஆனால் இது யாருக்குச் சாத்தியம்?

வெள்ளிப்பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம்,  காய்ச்சல் வெப்பு நோய் ஆகியவை நீங்குமாம். உடல் செழிப்பாக இருக்குமாம். பலம் பெருகுமாம். இது ஓரளவு சாத்தியமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான இல்லங்களில் வெள்ளி கிளாஸ் இருக்கிறது.

தாமிரப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம், கண்புகைச்சல், கண் எரிச்சல் ஆகியவை நீங்குமாம். நடுத்தற வர்க்கத்தினர் செப்புக்குடமே பெரும்பாலும் பயன் படுத்துகின்றனர். ஆலயங்களில் தீர்த்தம் தருவது இக்காரணம் கருதியே எனலாம்.
பஞ்ச லோகப் பாத்திரத்தில் வைத்து அருந்துவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முந்நோயும் நீங்குமாம்.
வெங்கலப் பாத்திரத்தில் நீரைச் சேமித்து அருந்துவதால் தாது விருத்தி ஆகுமாம்.
இரும்புப் பாத்திரத்தில் சேமித்த நீரை அருந்துவதால் பாண்டு நோய் போகுமாம். தாது உண்டாகுமாம். உடல் குளிர்ச்சி அடையுமாம். தகரக்குடம் பயன் பாடு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது அறவே இல்லை எனலாம். இவையெல்லாம் வெந்நீரைச் சேமித்து வைப்பதைப் பற்றிய தகவல்கள்.
இது மட்டுமல்ல தண்ணீரை வெந்நீராகக் காய்ச்சும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பயன் என்பதையும் ஆய்ந்து சொன்ன மருத்துவம் தமிழ் மருத்துவம். 
கால்கூறு காய்ந்த வெந்நீர் பித்த்த்தைப் போக்கும்
அரைக்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்
ன்று வெந்நீர் மருத்துவத்தைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி விளக்கும்.  இவை தண்ணீரைச் சுண்ட வைக்கும் முறை. ஆனால் தண்ணீரை மருந்தாகவே மாற்றும் முறையும் சித்த மருத்துவத்தில் இருந்து வந்துள்ளது. எட்டில் ஒரு பாகமாகத் தண்ணீரைச் சுருக்கினால் மேலே கூறப்பட்ட அனைத்து நோய்க்கும் மருந்தாகிறதாம்.
 நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்
என்று நீர் மருத்துவத்தைப் பற்றிப் பேசும் சித்த மருத்துவம்.
நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே
என்றும் ஆணித்தரமாகக் கூறுவதால் வெந்நீரைக் காய்ச்சிக் குடிப்பது மெய்க்கு நோய்வாராமல் காக்கும் வழியாம்.
பெருக்கத்து மோரும் சுருக்கத்து நீரும் உடல் நோய்க்கு மருந்தாகும் என்பது பண்டையோர் கண்ட உடலோம்பு முறை. இக்கட்டுரையில் நீர் பற்றி எத்தனையோ இலக்கியச் செய்திகளும் மருத்துவச் செய்திகளும் உள்ளன.
 அருந்தும் நீரைப் பற்றி அறிந்தோம். ஆடும் நீரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? அது கூழானும் குளித்துக் குடி” என்று கூறுதற்கும் சனிநீராடு என்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி இங்கு பார்க்க வேண்டும். குளித்தல், நீராடுதல் இரண்டு பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

நன்றி குமுதம் ஹெல்த்

புதன், 13 ஜூன், 2012

கண்ணுக்குள்ள கெழுத்தி


காண்டக்ட் லென்ஸ் ஜாக்கிரதை…….
(கண்ணுக்குள்ளே கண் ஆடி}
கண்ணுக்குள்ள கெழுத்தி வெச்சிருக்கா ஒருத்தி என்னும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்களுக்குள் ஆடியைப் (லென்ஸை} பொருத்திக் கொண்டிருப்பவர்கள் நினைவுதான் வரும். இரண்டு வயது ஆனவுடனே கண்ணாடி போடும் பாரம்பரியமாக இந்திய பாரம்பரியம் போனது என்பது இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோதனை என்றே கூற வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிடாததால் பார்வை குறைபாடு நிறைய பேருக்கு இருக்கிறது என்கின்றனர். ஆனால் தொலைக்காட்சி, கணினி பயன்பாடு ஆகியவையும் இதற்குக் காரணம் என்றால் அது மிகையல்ல. வேறு வழியின்றி இளம் வயதிலேயே கண்ணாடி போட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த கண்ணாடி போடும் முறையும் பதினைந்து வயது வரைதான் என்ற நிலையில் நம் நாகரிக உலகம் சென்று விட்டது. அதற்கு மேல் காண்டக்ட் லென்ஸ் கட்டாயம் என்ற அளவில் சென்று விட்டோம். ஏனெனில் கண்ணாடி முக அழகைக் குறைக்கிறது என்பதால்.
சரி காண்டக் லென்ஸ் போடட்டும். காலத்திற்கு ஏற்ப நாமும் மாறித்தானே ஆகவேண்டும். இல்லாவிட்டால் சோடா புட்டி என்று அழைப்பதைத் தவிர்க்க முடியாது. மேலும் கண்ணாடி போடுவதால் மூக்கில் ஏற்படும் தழும்புக்கும் விடை கொடுக்கலாம்.
அதைப் போடுகிறவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கான்டாக்ட் லென்ஸ் போடுறங்களுக்கு கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல், இதுலாம் எதுக்கு வருது? ஏன்னா அவங்க அதை போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதுனால அவங்க கண் தான் பாதிக்கப்படும். ஏனென்றால் கண் ரொம்ப சென்ஸிடிவ், அதை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். கான்டாக்ட் லென்ஸயும், அதை போடும் போதும் என்னென்ன ஃபாலோ பண்ணணும்-னு பாக்கலாமா!!!
1. கான்டாக்ட் லென்ஸ் எப்படி போட வேண்டும் என்று கொடுத்திருக்கிற அறிவுரைகளை நன்றாகப் படித்து அதனைப் பின்பற்றுவது மிக மிக முக்கியம்
2.. கான்டாக்ட் லென்ஸ் போடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். கழுவியதும் கையை ஒரு சுத்தமான துணியால் துடைத்துப் பிறகு தான் லென்ஸ் போட வேண்டும்.
3. மிகவும் முக்கியமான ஒன்று, லென்ஸ் போடும் முன்னும், போட்டு எடுத்து வைக்கும் முன்னும் அதை கொடுத்திருக்கும் மருந்தால் மறக்காமல் கழுவ வேண்டும். இந்த மருந்து லென்ஸில் பாக்டீரியா இருந்தால் அழித்து விடும். மேலும் கண்களில் எந்த ஒரு நோயும் வராது.
4. லென்ஸை கண்ட இடங்களில் வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் அந்த பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
5. லென்ஸை கழுவும் மருந்தின் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். ஏனென்றால் மருந்தின் தேதி முடிந்தும் உபயோகித்தால் அது கண்களையே பாதிக்கும். ஆகவே அதன் தேதியைக் கவனிப்பது மிகவும் முக்கியம்.
6. கான்டாக்ட் லென்ஸை கழுவுவதற்கான மருந்துகள் பல உள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்வு செய்து வாங்கி பயன் படுத்த வேண்டும். ஏனெனில் நூற்றுக்கு இருபது விழுக்காட்டினர்க்கு சில மருந்துகளால் அலர்ஜி ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.
7. குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும் போதும் கண்டிபாக கான்டாக்ட் லென்ஸைக் கழட்டி வைத்து விட வேண்டும்.
8. முக ஒப்பனை செய்யும் முன் முக்கியமாக கண் மையும் பவுடரும் கான்டாக்ட் லென்ஸை போட்டு தான் போட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் மேக்கப் போட கண் சரியாகத் தெரியும் என்பது ஒருபுறம். மேலும் ஒப்பனை போட்டபின் லென்ஸைப் பொருத்தினால் சில நேரங்களில் கண்ணீர் வரும், கண் கலங்கும். போட்ட முகப்பவுடர் கலைய வாய்ப்பாகி விடும்.
9. ஒப்பனை செய்த பின்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிட்டு, கழுவிய கைகளைச் சுத்தமான துணியால் துடைத்த பின்பே கான்டாக்ட் லென்ஸை தொடவோ கண்களில் பொருத்தவோ செய்ய வேண்டும்.
10. கான்டாக்ட் லென்ஸை போட்டு வெளியில் செல்லும் போகும் போது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர் நேரடியாகக் கண்ணில் படாமல் பாது காக்க வேண்டியதும் மிக முக்கியமானது. கண்ணுக்கு சன்கிளாஸ் அல்லது தொப்பி போட்டு போக வேண்டும்.
11. சில லென்ஸ் ஒவ்வொரு நாளும் மாற்றக்கூடியதாக இருக்கும். சில ஒரு வாரம் பயன் படுத்துவதாக இருக்கும். சில மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை போடும் படியாக இருக்கும். அவற்றின் கால எல்லை அறிந்து அதன் பின் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். RGB லென்ஸ்கள் ஒராண்டு பயன் படுத்தும் வகையில் அமைந்திருப்பன.
12. சற்றேறக்குறைய பனிரெண்டு மணி நேரத்திற்கு மேல் லென்ஸைப் பயன்படுத்துவதைக் குறைப்பது கண்களுக்கு நல்லது.
13. இரவு படுக்கும் முன்பு லென்ஸை கழற்றி வைத்து விட வேண்டும். தொடர்ந்து லென்ஸ் அணிவதால் கண்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் செல்வதற்கு அது தடையாக இருக்கும்.
14. எப்போதாவது லென்ஸை கழற்றுவதிலோ அல்லது பொறுத்துவதிலோ சிரமம் ஏற்பட்டால் உடனடியாக யார் தொடர்ந்து சிகிச்சையும் அறிவுரையும் கொடுக்கிறார்களோ அந்த லென்ஸ் பொருத்துநரை அனுகுதல் நல்லது.
15. சில நேரங்களில் கண் எரிச்சல், கண் சிவத்தல், பார்வையில் பிரச்சனை போன்றவை ஏற்படுவது உண்டு. இவை பெரும்பாலும் கவனமின்மையால் ஏற்படுவது. அதாவது லென்ஸை சரியாக லோஷனில் போட்டு கழுவாமல் விடுவது, சரியாகப் பொருத்தாமல் விடுவது, லென்ஸில் போதிய கவனமின்மை போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த கண் எரிச்சல், சிவத்தல் முதலியவை கண் அல்சர், அலர்ஜி ஆகியவற்றுக்கு ஒரு அடையாளமாகும்.
16. கண் எரிச்சல், கண் சிவத்தல் முதலியவை ஏற்படும் நேரங்களில் கண்டிப்பாக ஆடி பொருத்துநரைப் பார்ப்பதைத் தவிர்த்து சிகிச்சை அளித்த கண் மருத்துவரைப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
அப்பாடா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் போல இருக்கிறதே. அழகுக்கு அழகு குறையாமல் இருக்கப் பொருத்தும் ஆடியில் இருக்கும் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொண்டல் பிரச்சனையே இல்லை. காட்டலாம் சோடா புட்டிக்கு டா டா. கொடுக்கலாம் கண்களை லென்ஸுக்கு…..

நன்றி குமுதம் ஹெல்த்

திங்கள், 11 ஜூன், 2012

புத்தம்புதுக் காலை….பொன்னிற வேளை…வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்

தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -

முந்தையோர் கண்ட முறை. 


என்பது ஆசாரக்கோவை பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம் அதற்கு எப்படி பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்து பின் தந்தை தாய் இருவரையும் வணங்கி தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று துறை இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் இறைவனை எழுப்புவதையும் பாடுபொருளாகக் கொண்டது. வடவர்கள் இதனை சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலிக்கக் காண்கிறோம். 


அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
புத்தம் புது காலை, பொன்னிற வேளை என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவயெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக்கும் முழுத்தம் (நேரம் காலம்} பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும். 

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது

ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும் குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுவது நம் முந்தையோர் கடைபிடித்த வழக்கமாக இருந்து வந்தது. இப்போது எல்லாம் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. 

தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப் பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட் மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் முக்கியமாக கணியில் பணி புரிவோர் (ஐ.டி} அங்கெங்கெனாதபடி பரவி விட்ட பின் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும். இப்போதெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக நைட் ஷிப்ட் பார்க்க பெண்களும் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. முக்கியமாக இத்துறையில் இருப்போருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. ப்ராஜக்ட் முடியும் வரை மூன்று நான்கு ஐந்து.. என்று போய் ஒரு வாரம் கூட உறங்காமல் இருக்கும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. அதனால் தான் இளம் வயதிலேயே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறிவிடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படி கூறுவது. அவர்களின் உடலியல் நுட்பத்தை எப்படி பாராட்டுவது. நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந்தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிக வேலையை சோர்வின்றி செய்தனர். 

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த இரு பிரிவினரின் வேறுபாட்டை பாரதிதாசன் குடும்ப விளக்கிலும் இருண்ட வீட்டிலும் அழகாகப் படம் பிடிப்பார். 

கருநிற மேகத்தின் ஆழத்தில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டு மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்தச் கதிர்க் குழந்தையின் உதயம், அழகான அமைதி, பறவைகள் கொஞ்சும் மொழி, பறக்கும் இனிய காட்சி என்று இவற்றை ரசிக்க பழகிக்கொண்டால் அதிகாலை அனுபவம் அழகான அனுபவமாக இருக்கும்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

பாரதிதாசனின் இந்த வர்ணனையைப் பார்த்த பின்னுமா பத்து மணி வரை உறக்கம். 

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குநின்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளியெழுந்தருளாயே!

என்று உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தைத் தன் கவிதைக் கரங்களால் தட்டி எழுப்பி விழிக்கச் சொன்னான் அந்த எழுச்சிக் கவி பாரதி. அவன் எழுப்பியது பாரத மணித்திரு நாட்டின் சோம்பேறிகளாகிய நம்மைத்தான். இத்தனை எழுச்சிக் கவிதைகளை யாத்த அவன் ஒரு தாலாட்டுப் பாடல் கூட பாடாததற்கு பாரத்தத்தின் குழந்தைகளாகிய நம் சோம்பேறித்தனமே காரணமாக இருந்துள்ளது. 

நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தோம். இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க, மடமையில் இருந்து விடுதலை பெற அதிகாலையிலேயே விழித்தெழுவோம். இரவில் சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிப்போம்….. வாருங்கள்….
நன்றி குமுதம் ஹெல்த்.

புதன், 6 ஜூன், 2012

எண்ணெயில் கொப்பளிப்பதா…..     
 சென்னையில் இலக்கிய விழாக்களுக்குச் சென்றால் கை நிறைய ஆயில் புல்லிங் ஆயில் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வரலாம். இவற்றை இவர்கள் விளம்பரத்திற்காகத் தருகிறார்களா இல்லை விறபனை ஆகவில்லை என்பதற்காகத் தருகிறார்களா என்று புரியவில்லை. ஆனால் குறைந்தது இருபது முப்பது பாக்கெட்கள் கிடைக்கிறது என்பது உண்மை.
      வயிறு சோற்றுக்கு அழுகுது, குடுமி பூவுக்கு அழுகுது என்று பழமொழி கூறுவார்கள். அது போல இங்கு ரேஷன் கடையில் கியூவில் நின்று ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி ஒரு மாதம் முழுவதும் பயன் படுத்தும் என்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் நாட்டில் இது சாத்தியமாகுமா. இருந்தாலும் ஐந்து நட்சத்திர விடுதிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாதவர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்வது இல்லையா அது போலத்தான் இதுவும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடலுக்கு எவ்வளவு  தேவையோ அவ்வளவு தேவையானது ஆயில் புல்லிங் (Oil Pulling Therapy OPT} என்று சொல்லப்படும் எண்ணெய் கொப்பளித்தலும்.

முதலில் ஆயில் புல்லிங் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணெயை (Sesame seed Oil= Til Oil} வாயில் ஊற்றிக்கொண்டு கொப்பளிப்பதே ஆயில் புல்லிங் ஆகும். 

 தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும்வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம். இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எண்ணெய் கொப்பளித்து முடித்து வாஷ் பேசினில் உமிழ்ந்து விட்டு வாஷ் பேசினை நன்கு கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பும் அதனால் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அல்லது மணல் நிரம்பிய குப்பைத்தொட்டியில் உமிழலாம். அதனையும் அவ்வப்போது மாற்றுவது அவசியம். அதுவும் முடியாத வேளையில் பிளாஸ்டிக் கவர்களில் உமிழ்ந்து அதனை எறிவது சுலபமான முறை. கண்டிப்பாக உமிழும் போது கண்டிப்பாக நடைபாதையிலோ அல்லது தோட்டத்தில் செடிகளின் அருகிலோ உமிழக்கூடாது.
 எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
ஆனால் இந்த எண்ணெய் மருத்துவம் நம் சமுதாயத்தி பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன., நல்லெண்ணெயை வாயில் போட்டுக் கொப்பளிப்பது, காலையில் பழைய சோற்றுத் நீரில் நல்லெண்ணெயை விட்டு குடிப்பது இவையெல்லாம் பண்டைய முறை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய சாரகா (CHARAKA} என்னும் ஆயுர்வேத மருத்துவ நூலில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிக்கும் இம்மருத்துவம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இப்போது இம்மருத்துவம் ஆயில் புல்லிங் என்னும் பெயரில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வருகிறது. 

இதன் பயன் பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது. ஆயில் புல்லிங் மூலம் கழுத்துவலி, உடல் வலி, அலர்ஜி, ஆஸ்துமா, தோல்நோய், அரிப்பு, கரும்படை இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான  நோய்கள் குணமடைவதாகக் கூறுகின்றனர். இந்த ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் கொப்பளிப்பை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்
நல்ல உறக்கம் உண்டாகிறது. பற்கள் வெண்மை நிறம் அடைகிறதுவாய் புண் நீங்குகிறதுவாயு தொந்தரவு நீங்குகிறதுதசை நோய்கள் விலகுகிறது மார்பு நோய் நீங்கு கிறதுமுதுகு வலி பல் நோய்கள் விலகுகிறது காதுநோய்கள் விலகுகிறது, கண் நோய்கள் விலகுகிறது கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது மூல நோய்கள் விலகுகிறது சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறதுபக்கவாத நோய் விலகுகிறதுவலிப்பு நோய்கள் விலகுகிறது புற்று நோய் கட்டிகள், மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல் நோய்,  புற்று நோய்,  பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற  எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதனை சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் கராஷ் (Dr. KARACH}  என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
அப்பரம் என்ன நமக்குத்தான் வடிவேலு சொல்லுவது போல நம்ம ஆளுங்க எவ்வளவுதான் சொன்னாலும் வெளிநாட்டார் சொன்னால் வேதவாக்கு ஆயிற்றேன். செய்வோம் ஆயில் புல்லிங்க்……