“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 11 ஜூன், 2012

புத்தம்புதுக் காலை….பொன்னிற வேளை…வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்

தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -

முந்தையோர் கண்ட முறை. 


என்பது ஆசாரக்கோவை பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம் அதற்கு எப்படி பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்து பின் தந்தை தாய் இருவரையும் வணங்கி தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று துறை இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் இறைவனை எழுப்புவதையும் பாடுபொருளாகக் கொண்டது. வடவர்கள் இதனை சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலிக்கக் காண்கிறோம். 


அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
புத்தம் புது காலை, பொன்னிற வேளை என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவயெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக்கும் முழுத்தம் (நேரம் காலம்} பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும். 

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது

ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும் குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுவது நம் முந்தையோர் கடைபிடித்த வழக்கமாக இருந்து வந்தது. இப்போது எல்லாம் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. 

தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப் பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட் மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் முக்கியமாக கணியில் பணி புரிவோர் (ஐ.டி} அங்கெங்கெனாதபடி பரவி விட்ட பின் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும். இப்போதெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக நைட் ஷிப்ட் பார்க்க பெண்களும் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. முக்கியமாக இத்துறையில் இருப்போருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. ப்ராஜக்ட் முடியும் வரை மூன்று நான்கு ஐந்து.. என்று போய் ஒரு வாரம் கூட உறங்காமல் இருக்கும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. அதனால் தான் இளம் வயதிலேயே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறிவிடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படி கூறுவது. அவர்களின் உடலியல் நுட்பத்தை எப்படி பாராட்டுவது. நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந்தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிக வேலையை சோர்வின்றி செய்தனர். 

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த இரு பிரிவினரின் வேறுபாட்டை பாரதிதாசன் குடும்ப விளக்கிலும் இருண்ட வீட்டிலும் அழகாகப் படம் பிடிப்பார். 

கருநிற மேகத்தின் ஆழத்தில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டு மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்தச் கதிர்க் குழந்தையின் உதயம், அழகான அமைதி, பறவைகள் கொஞ்சும் மொழி, பறக்கும் இனிய காட்சி என்று இவற்றை ரசிக்க பழகிக்கொண்டால் அதிகாலை அனுபவம் அழகான அனுபவமாக இருக்கும்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

பாரதிதாசனின் இந்த வர்ணனையைப் பார்த்த பின்னுமா பத்து மணி வரை உறக்கம். 

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குநின்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளியெழுந்தருளாயே!

என்று உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தைத் தன் கவிதைக் கரங்களால் தட்டி எழுப்பி விழிக்கச் சொன்னான் அந்த எழுச்சிக் கவி பாரதி. அவன் எழுப்பியது பாரத மணித்திரு நாட்டின் சோம்பேறிகளாகிய நம்மைத்தான். இத்தனை எழுச்சிக் கவிதைகளை யாத்த அவன் ஒரு தாலாட்டுப் பாடல் கூட பாடாததற்கு பாரத்தத்தின் குழந்தைகளாகிய நம் சோம்பேறித்தனமே காரணமாக இருந்துள்ளது. 

நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தோம். இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க, மடமையில் இருந்து விடுதலை பெற அதிகாலையிலேயே விழித்தெழுவோம். இரவில் சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிப்போம்….. வாருங்கள்….
நன்றி குமுதம் ஹெல்த்.

4 கருத்துகள்:

 1. ப்ரிய ஆதிரா! விழிமின்! எழுமின்! உழைமின் என்று சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

  இங்கு இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. 'சிர்க்காடியன் ரிதம்' என்ற உடற்கூறுக் கொள்கை ஒன்றுண்டு. அதை பயலாஜிகல் கடிகாரம் என்பார்கள். ஒருவரின் தூக்கம், விழிப்பு, ரத்தக்கொதிப்பு நிலை, இதயத்துடிப்பு,ஹார்மோன்களின் அளவை, உடல் வெட்ப நிலைபடுத்தல்,எதிர்ப்பு சக்தி போன்றவற்றை சரிவிகிதமாய் சமன் செய்ய இயற்கை அளித்த கொடை இது.. 24 மணி நேர சுழற்சியில் நமக்குள் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. சூரிய ஒளியால் இந்த சமன்பாடு(ரிதம்) மீண்டும் ரீசெட் ஆகிறது. நாம் காலை நேரக் குயிலா இல்லை இரவுநேர ஆந்தையா என்பதை இந்த சுழ்ற்சியே முடிவு செய்கிறது.. இந்த ரிதத்துடன் மல்லுக்கட்டுவதைவிட அதை அனுசரித்து நாம் செயல்களை செய்வது சிறந்தது என்ற தியரி உண்டு.


  என் மாலைக்காலம் இரவு ஒன்பது மணிக்குத் துவங்கும். இதை பதிவிடும் நேரம் 12.30 சோரனும் உறங்கி விழும் முன்னிரவிலே தூளிபட்டுக்கொண்டிருக்கும் என் அறையிலே. நேரம் கழித்தே தூங்கப் போனாலும் காலை சீக்கிரம் எழுந்து விடுவேன்.. காணாமல் போய்விட்ட கனவை கொஞ்சம் தேடிவிட்டு நாளை துவங்கி விடுவேன்..

  ரொம்ப நாளாச்சு உங்க சுவற்றில் பெருங்கிறுக்கலாய்க் கிறுக்கி ஆதிரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி வாங்க. இந்த வலைப்பூவை நான் சரியாகக் கவனிக்காமல் சற்று வாடித்தான் போயுள்ள்து. மீண்டும் துளிர்க்க கட்டுரை நீர் வார்த்து வருகிறேன்.

   அழகான கிறுக்கல். இநத அறிவியல் செய்தியெல்லாம் நான் ஆராயவே இல்லையே... வருத்தம் வருத்தம்... நல்ல தகவலுக்கு நன்றி. நான் இப்போதெல்லாம் கடமைக்காகவே....

   ஜி. மிக்க மகிழ்ச்சியாக. தங்கள் இதிலும் ஒற்றுமையா என்று. என் மாலைக்காலமும் இரவு ஒன்பது மணிக்கு மேலேதான் தொடங்குகிறது.

   நீக்கு
 2. அறுமையான வாக்கியங்கள் ஒருவருக்கு தூக்கம் எப்படி எல்லாம் முக்கியமானது தூக்கத்தால் உடல்நளத்தையும் அவர்கள் தேவையையும் கவிதையால் உரைநடையால் அருமையான விலக்கத்தினை தந்து ஆச்சரியத்தில் படிக்க படிக்க திகட்டாத சொர்களால் என்னை மூழ்கடித்து காலையில் எழும் கதிரவனதய் உங்கள் உரை அற்புதம்.

  கவிஞர் அதிரமுல்லை அவர்களுக்கு நிலனின் வார்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலவன் முதல் முறை என் குடிலுக்கு வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   அழகான கருத்து சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி நிலவன்.

   நீக்கு