“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 அக்டோபர், 2011

எங்க அப்பா ரொம்ப அழகு.....

              அப்பாவின் உடலை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நேரம், அனைவருக்கும் ஃபோன் பண்ணி இறப்புச் செய்தியைச் சொன்ன நேரம் தொட்டுத் தொட்டு அழுதுட்டு இருந்த அம்மாவை விலக்கிட்டு அப்பாவைப் ப்ரீஸர் பாக்ஸில் படுக்க வைத்த நேரம், உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொருவரா வந்து பிலாக்கணம் பாடி அழுது கதறின நேரம், இப்படி எந்த நேரத்திலும் இல்லாத் ஒரு பரபரப்பு இப்போது. எல்லார் முகத்திலும் கவலை ரேகை கட்டை விரல் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் குரல் வளத்தில் ஆனால் கம்மிய குரலில் சோகப் பாவனையில் ”கிடைக்கலப்பா” என்று வருத்தத்தோடு சொன்னார்கள்.. அங்கே கேட்டுப் பாரேன். இங்கே கேட்டுப் பாரேன் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த இடத்தைச் சொன்னார்கள்.

”இதுவே கிராமமா இருந்தா உடனே கிடைச்சுடும்” என்று ஒர்வர்.

“ஒரு வார்த்தைச் சொல்லி இருக்க கூடாதா? நான் பையில தூக்கிப் போட்டுட்டு வந்திருப்பேனே. எங்க வீட்ல எவ்வளவு கிடக்குது.” இது அப்பாவின் ஒத்தை ஆண் உடன் பிறப்பு. எங்க சித்தப்பா.

”மெட்ராஸ்ல எல்லாம் ஒருத்தரும் இருந்தாக் கூட குடுத்து உதவிக்கிட மாட்டாங்க” அப்பாவின் இறுதிச்சடங்குக்காக பூர்வீக கிராமத்தில் இருந்து வந்திருந்த அப்பாவோட ஆத்மார்த்த நண்பர். கிராமத்துக்காரர்.

”.எங்க ஊருல கோயில் கடையில கிடைக்காத பொருளே இல்ல” இது அப்பாவோட ஒன்னுவிட்ட ஸ்ரீரங்கத்துச். சகோதரி.

            ”நாங்கல்லாம் பணம் கொடுத்து வாங்க மாட்டோம். ஒரே ஓட்டமா காட்டுப்பக்கம் ஓடிப் போய் பொறுக்கிட்டு வந்துருவோம்” இது சேலத்துக்காரர்.. என்னோட ஓரகத்தி.

              ”கெடச்சா பாருடா.. இல்லாட்டா பரவாயில்லை, அப்பா இதுக்கெல்லாம் வருத்தப் படமாட்டார். இருக்கும் போது அவர நல்லா வச்சிருந்துட்டோம். அவர் திருப்தியா போயிருக்காரு. பரவால்லடா விடுடா.” இது அப்பாவைக் கண்ணும் கருத்துமா இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த, அப்பாவுக்குக் கொள்ளி வைக்கப் போகிற அந்த குடும்பத்தின் மூத்த மகன்.. எங்க அண்ணன்..

               எங்க வீட்ல இருக்கு நான் போயி கொண்டு வந்துரட்டா இது வர்ணனையாகப் பேசத்தெரியாத, வேலை மட்டுமே செய்யத் தெரிந்த என் தங்கச்சி..

            ”அதெல்லாம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரக்கூடாதும்மா” இது கடிகாரத்தையே அடிக்கடி பார்த்தபடி சட்டு புட்டுனு சடங்கை நடத்திட்டு கிளம்பறதிலேயே குறியாக அடிக்கடி கருத்த அந்தக் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த அப்பாவின் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க வந்திருந்த தொப்பைச் சாஸ்திரி.

                  இத்தனைக்கும் நடுவுல எல்லா வேலையும் சரியா நடக்கனும் ஆனா எனக்கொன்னும் தெரியாது. நான் வெளிநாட்டுக்காரன். என்ற தோரனையில் இதுகூடவா வாங்க முடியாது? இவ்வளவு பெரிய சிட்டீல” என்று எங்கள் வீட்டின் ஆறரை அடி உயரக் கடைக்குட்டி கடோத்கஜன்... என் தம்பி. குட்டி என்றவுடன் ஏதோ சின்னபையன் என்று எண்ணக்கூடாது. அவனுக்கு இரண்டு சின்னக் குட்டிங்க இருக்கு.....

                     அப்பா இப்ப ஃப்ரீஸர் பாக்ஸை ஒடச்சிட்டு எழுந்து வந்து ”நாகப்பா அதைப்போய் வாங்கிட்டு வாப்பா” என்று வாச்மேனை கூப்ட்டுச் சொல்லப்போறாரு. இல்லாட்டி அவரே எழுந்து போயி தேவர் கடைக்குப் ஃபோன் பண்ணி தேவர்! அதைக் கொஞ்சம் உடனடியா அனுப்புப்பான்னு சொல்லப் போறாரு” .இது சிரித்துக் கொண்டே அக்கா. அப்பாவின் ஒரே செல்ல மூத்த மகள். எப்போதும் காமெடியும் கையுமாகவே அலைபவள்.

                 “என்னடா இது கிலேசம்....கன்றாவி.....சாஸ்திரம் கீஸ்திரம்னு எதையாவது சொல்லிகிட்டே அலையரதே பொழப்பா போச்சுடா... யாருடா சொன்னாங்க உங்களுக்கு? திருந்தவே மாட்டீங்களாடா? சகிக்கலடா......நீங்க பன்றது...போங்கடா.... போங்கடா போயி வேலையைப் பாருங்கடா.... இருக்கும்போது ஒழுங்கா வச்சுக்கங்கடா அப்பா அம்மாவ...” அப்படின்னு எழுந்து வந்து மூக்கை வெடக்கப்போறாரு மாமா” இது அப்பாவின் அக்கா மகன். மூடப்பழக்கத்தை வெறுக்கும் அப்பாவை அவ்வப்போதுத் தூண்டி, எப்போதும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதில் சந்தோஷம் காண்பவன்.

                    அப்பா இறந்ததில் பெரிதாக ஒருவருக்கும் வருத்தம் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் அவர் பட்ட துன்பம் அவ்வளவு கடந்த ஐந்து ஆண்டுகளாக. அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாது. கேன்சர் மட்டும் இல்லை. கால் வீக்கம். உடம்பு எரிச்சல்..என்று பல...படாத பாடு. அவரை சீக்கிரம் அனுப்பி வைத்ததில் பெரும்பங்கு என்னுடையதே. எனலாம். கடைசி கடைசியாக அவரைத் கஞ்சி குடிப்பா, குடித்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஊற்றி, கஞ்சியெல்லாம் நெஞ்சில் அப்படியே சேர்ந்து, அதனைச் சிரஞ்சினால் உறிஞ்சி எடுத்து நினைக்கும் போதே கண்களைக் கரைக்கிறது அவர் இருந்த நிலை. அப்போதும் என்னப்பா செய்யுது? என்றால் ஒன்றும் இல்லை. என்று அவர் தலையாட்டியது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல மெல்ல உயிர் பிரிந்தது...

               அம்மாவுக்கு அப்படி இருக்குமா?. அறுபது வருடம் அவருடன் வாழ்ந்தவளாயிற்றே. அப்பா இறந்த துக்கத்துடன், நோயிலும் பாயிலும் இருந்தாலும் கடைசி வரையிலும் தன் அதிகாரத்தையும் சிம்மக் குரலையும் விடாது வாழ்ந்து விட்டு, இன்று நெடுஞ்சாண் கிடையாக சாய்ந்து இருக்கும் இந்த கம்பீரமான் கட்டைக்கு இறுதிச்சடங்குக்கு ஒரு இது கூடக் கிடைக்கலயா!! என்று தோன்றிய துக்கத்தையும் சேர்த்து மனத்தில் புதைத்துக் கொண்டு மெளனமாக அம்மா. . கணவனைப் பரிகொடுத்தவள் அதிகம் பேசக்கூடாதாமே!!! அதனால்.

                        எல்லார் முகத்திலும் எதோ இது இல்லாவிட்டால் இறுதிச்சடங்கே நடக்காது என்பது போன்ற சோகம். இத்தனையையும் கேட்டுக் கொண்டு நடுக்கூடத்தில் ஃப்ரீஸர் பொட்டியில் நீங்க்ல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்பது போல ஒரு நம்ட்டுச் சிரிப்புடன் இதில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத என் தி க அப்பா.

                        எங்கள் ஊரில் ஒரு பெண்மனி. யாராவது கொஞ்சம் அழகாக அவர் முன்னால் சென்று விட்டால் போதும், அவருக்கு என்ன ஆகுமோ தெரியாது. “அழக மட்டும் என்ன சந்தனக்கட்டையப் போட்டா எரிக்கப் போறாங்க”.. என்று திட்டுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஏன் இப்படித் திட்டுகிறார்கள் என்று நீண்ட நாள் எண்ணியதுண்டு. அவர்கள் அத்தனை அழகு!!! ம்ம்ம்... அப்பறம் எப்படி பொறுக்கும் மற்றவர்கள் அழகா இருந்தா??!!! அதனால்தான் என்று நினைத்துக் கொள்வேன்.. அவர் அப்படி அடிக்கடி சொன்னதின் உண்மை இப்போதுதான் புரிந்தது..

                            இந்தக் குழப்பததைத் தீர்ப்பது போல போன் மணி அலறியது. நான் தான் குறுக்கும் நெடுக்குமா அமர்ந்திருந்தவர்கள் மீது கால் பட்டுவிடாதபடி, கோடு போட்டு தாண்டித் தாண்டி சின்ன வயசுல கல்லாங்காய் விளையாடுவோமே, அது போல நொண்டி அடித்துச் சென்று ஃபோனை எடுத்தேன்.. எதிர்முனையில் ஏதோ சொல்லி மூச்சை வாங்கினார் என் நோஞ்சான் மாமா. ரிஸீவரில் வெறும் காற்றுதான் வந்தது. ஏற்கனவே அவர் பேசும் போது கிண்ற்றுக்குள் இருந்து வருவது போல இருக்கும் அவர் குரல்...

                        இப்போது இங்கு கூட்டம். அழுகை இல்லை. ஆனால் அங்கலாய்ப்பு. ஒப்பாரி இல்லை. ஆனால் ஒருவித மன உளைச்சல். 85 ஆண்டு சரித்திரம் ஒன்று படுத்து விட்டதே. ”என்ன, பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம்” முன்னாடியே சொல்லி இருந்தா கடைசியா ரெண்டு வார்த்தைப் பேசி இருக்கலாம்” ”எப்படி கம்பீரமா இருந்த மனுஷ்ன் கடைசி கடைசியா ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு”. அவருக்குப் பேரன் ஹரீஷ் பூணலைப் பாத்துட்டுப் போகனும்னு ரொம்ப “ஆசை. வரவு செலவு, பிளாட்ஸ் மெயிண்டனென்ஸ் இதே நினைப்புதான் எப்போதும்” என்றெல்லாம் வார்த்தைகள் நீட்டி முழக்கியபடி கூடத்தில் பல குரல்கள் அங்கங்கு ஒரு நான்கு பேர் கூடியபடி ஐந்து கூட்டம். அப்பாவைச் சுற்றி.

                           இந்தக் குரலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படுக்கை அறைகள் இரண்டிலும் மும்மூன்று கூட்டமாய் ஆறு கூட்டம். குஞ்சு குழுவான்கள் தாத்தாவைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாட்டு. ஓடியதில் தம்பி மகள் மூத்தவள் வாலு மட்டும் இல்லாத ஒரு பெண் ---- குட்டி. குழந்தைகளை வேறு பெயர் வைத்து சொல்வது எனக்குச் சற்றும் பிடிக்காது. அதனால் நாகரிகமாக் இப்படிச்சொல்லலாம். கீழே விழுந்து ஃப்ரீஸர் பெட்டியின் மூலை நெற்றியில் பட்டு இரத்தம். என்ன அவளாக விழுந்ததால் அழுகாமல் அதற்குப் பதிலாகச் சிரித்துக் கொள்கிறாள். கண்களில் கண்ணீருடன். பத்தாததற்கு அவள் அம்மாவிடம் இரண்டு அடியும் போனஸாகப் பெற்றுக்கொண்டு.

                           ”அதே கீழ விழுந்து இருக்கு ஏண்டி இப்படி போட்டு அடிக்கிற” என்ற தன் அம்மாவின் திட்டைக் காதிலும் போட்டுக் கொள்ளாது குழந்தையின் தலையில் லேசாக வடியும் இரத்தத்தை கண்ணிலும் பார்க்காத தம்பி மனைவி.

                       ”இவ்வளவு சின்ன குழ்ந்தைகளுக்கு எவ்வளவு சாமர்த்தியம் பாரேன், கீழே விழுந்து இரத்தம் வந்தும் அழலையே. தன் த்ப்புன்னு தெரிஞ்சிகிட்டு சிரிக்கிறாளே” என்று ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் சித்தி..

                     வாசலில் பக்கத்து வீட்டில் இருந்து அப்போதுதான் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு..”சூடா இருக்கு. கப்புல ஊற்றும் போது ஜாக்கரதை.. இது போதலன்னா கேளுங்க” என்று பக்கத்து வீட்டு அம்மா..

                   போதும் போதும். இதுவே ஜாஸ்தி. உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம். இது அந்த கிருஹத்தின் மூத்த மருமகள். அண்ணனின் சகதர்மினி . என் அண்ணி...
“அப்பாவுக்கு இது கூட செய்யாம என்ன?” என்று அப்பாவிடம் உண்மையிலேயே பாசம் கொண்ட, கண்களில் நீர் தளும்ப தளதள குரலில் அந்த அம்மா.

                      .”அப்பாடா நல்ல வேளை காபி வந்துடுச்சு. ரொம்ப தலைவலிக்குது.. கொஞ்சம் எனக்குச் சூடா முதலில் கொடுத்துடு” இது அப்பாவின் அக்கா மகன். அந்த வீட்டின் இரண்டாவது மாப்பிள்ளை. என் அன்புக் கணவர்.

                     ஒரு காதை மூடிக்கொண்டு ஒரு காதில் ரிசீவரை வைத்துக்கொண்டு எல்லோரையும் சற்று அமைதிப் படுத்தி விட்டு ’மாமா கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.. காதுல விழுகல்’ என்றேன். என்ன சொன்னாரோ புரியவில்லை. கடைசி வார்த்தை மட்டும் லேசாகப் புரிந்தது. ‘கெடச்சிடுச்சு’ என்று மெலிதாகக் கேட்டது. மீண்டும் அவரை என்ன கெடச்சிடுச்சு? என்று கேட்டேன். அவரால் கத்த முடியவில்லையோ இல்லை எனக்குத்தான் காது மந்தமோ தெரியவில்லை. ஒன்றும் பலிக்காமல் போக நானும் அண்ணனிடம் ’கெடச்சிடுச்சாம்’ என்றேன். அண்ணனும் பெரிய குரலில் கெடச்சிடுச்சாம் என்றார்.. கெடச்சிடுச்சாம் என்று நானும் அண்ணனும் கூறியவுடன் கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்.... என்னும் எதிரொலிகள் நாலா பக்கமும் கேட்டன. அனைவரது முகத்திலும் ஒரு வித நிம்மதி....

                        பத்தே நிமிடத்தில் மாமா வந்தார் கையில் ஒரு சுள்ளியைப் பிடித்துக் கொண்டு.. அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் விடுமுறை. அலைந்து திரிந்து எங்கும் கிடைக்க வில்லை. இறுதியாக மூடியிருந்த ஒரு கடையைத் திறக்கச்சொல்லி ஒரு ஜான் அளவே உள்ள அந்தச் சுள்ளியை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்தார் மாமா. அப்போதைக்கு அந்த வீட்டின் வீரப்பன் அவர்தான். மகிழ்ச்சி. அவருக்கு அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே..

                           ஆகட்டும்... ஆகட்டும்.... அப்பரம் குளிகை வந்துடும் என்று சாஸ்திரி கொஞ்சம் சுதியோடு அவசரப்படுத்தினார். ஃப்ரீஸரில் உரைந்து போயிருந்த அப்பா வீதிக்கு வந்து விட்டார்.. வீட்டில் போட்ட சாப்பாடு போதவில்லை என்று அனைவரும் வாசலில் சென்று வாயில் அரிசியை நிரப்பினர்.

                   நீ கஞ்சி ஊத்தினதாலதான் நான் சீக்கிரம் கிளம்பிட்டேன். இன்னும் அரிசி வேற  போட வந்திருக்கியா என்று அப்பா என்னை ஏக்கமாகப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ... நாம்தான் கஞ்சியை ஊற்றி அனுப்பி வைத்து விட்டோமோ என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு. அந்த அரிசியைப் போடவும் மனமில்லாமல் போடாமல் இருக்கவும் முடியாமல் கை நடுங்க போட்டு வந்தேன். அப்பாவை ஊர்தியில் ஏற்றினர். வீதி வரை சென்று அப்பாவை வழியனுப்பி வைத்தோம், கைகளால் டாடா மட்டும் காண்பிக்காமல் கண்களில் நீரைக் காண்பித்து.

                       .இரண்டே மணி நேரம் ஒரு சிறு சட்டியில் சாம்பலுடன் அண்ணன், தம்பி இருவரும் உறவுகள் புடை சூழ வந்தனர். “அதுக்குள்ளயா முடிஞ்சுடுச்சு?” என்று வியப்புடன் வீட்டில் இருந்த பெண்கள் அனைவர் குரலும்.....

                      ”அப்பாவோட நெஞ்சுல கொஞ்சம் நாங்க சட்டியில் கொண்டு போன நெருப்பு, அப்பறம் அந்த சந்தனக்கட்ட இரண்டையும் வைச்சு மிஷினுக்குள் விட்டாங்க.. ஐஞ்சே நிமிஷத்துல அப்பா சாம்பலா வெளியில வந்துட்டாரு என்றான் அண்ணன் ஆச்சரியத்துடனும் வருத்தத்துடனும் ஒரு நீண்ட பெருமூச்சுடனும்....  அப்பாவைச் சந்தனக்கட்டையில் எரிச்சிருக்கோம்..... எங்க அப்பா ரொம்ப அழகு....... 
 அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

ஆதிரா.

திங்கள், 14 மார்ச், 2011

நீயா நானா?

            
             இந்த விருந்தாளிங்களோட  மூஞ்சியைப் பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு அவங்க உக்காந்து இருக்கற அழகப் பாருங்க. எவ்வளவு அப்பாவியா இருக்கறாங்க. .இவங்க யாரு தெரியுமா? இவங்கல்லாம் எங்க வீட்டின் மதிப்பிற்குரிய மழைக்கால விருந்தாளிங்க. எங்க வீட்ல ஏசி இல்லாததால இவர்களுக்கு வசதிப்படலையோ என்னவோ. எங்க வீட்டைப் பொறுத்த வரையில சம்மர்ல் இந்த விருந்தாளிங்கல்லாம் வரதே இல்லை. அப்ப விடுமுறைக்கு எங்கே போவார்களோ என்னவோ தெரியாது. மழை நாளான இவங்களோட ஒரே வாசஸ்தலம் எங்க வீடு தான். கோடைக்காலம் முடிஞ்சு குளிர்க்காலம் ஆரம்பிச்சவுடனே குளிருக்கு இதமா எங்க வீட்ல வந்து அடைக்கலம் புகுந்து இவங்க அடிக்கிற லூட்டிகளை ஒரு புத்தகமே எழுதலாம்.

                 மழைக்காலத்தில் ஒண்ட வந்த இவர்கள் ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே அமைத்திருப்பார்கள். இவங்கல்லாம் வருவதால் எங்க வீட்ட என்னவோ ஓட்டு வீடுன்னு நெனைச்சா அது தப்புக்கணக்கு. பிளாட்ல ஒரு அழகான ஒற்றைப் படுக்கையறை வீடு எங்களது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுசனக் கடிக்கறது மாதிரி சமச்சு வச்ச சாப்பாடு, காய்கறிகள், சாமி படத்துல போட்டிருக்கிற பூ, அரிசி, பருப்பு, பத்தாக்குறைக்கு அரிசி பருப்பு வச்சிருக்கற டப்பா என்று எல்லாத்தையும் கடிச்சுப் புளிச்சுப் போய் இப்ப கொஞ்சம் கண்ணை அசந்தா மனுசங்க காலைக் கடிக்கிற அளவுக்கு வளந்துட்டாங்க  எங்க வீட்டு எலி விருந்தாளிங்க.

              ஆரம்பத்தில ஒருத்தருதான் ஓடியாடிட்டு இருந்தாரு. இப்ப ஒரு குடும்பமா ஆயிட்டாங்க.. நம்ம குடும்பம் மாதிரி சின்ன குடும்பம் இல்ல. ஒரு ஏழெட்டுப் புள்ளகுட்டிகளோட அம்மா அப்பா சேர்ந்த பெரிய எலிக்குடும்பம். முதல்ல வந்த எலியார் பாட்டியாகவோ  தாத்தாவாகவோ கூட இருக்கலாம். எனக்கு இனம் கண்டுபிடிக்கத் தெரியல.

               வெள்ளை மாளிகையில எலித்தொல்லை அதிகமாக இருக்கிறதாம். எலிகளை வேட்டையாட லேரி என்ற ஒரு பூனையை அழைத்து வந்திருக்கிறார்களாம். அது பார்க்கவே பயங்கரமா இருக்குது அந்தப் பூனை. போல ஒரு பூனையை வளர்க்கலாம் என்றால், லேரியைவிட பெரிய லாரியெல்லாம் இங்கே இருக்கு. அதுங்க கத்தற கத்தலில் இராத்திரி ஓமன் படம் பார்த்த மாதிரி அடிக்கடி தூக்கிவாரி போட்டு எழுந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியுள்ளது. அதனால் இந்தப் பூனை வளர்க்கிற எண்ணம் கைவிடப்பட்டது. 

                 இந்த எலிகளை நினைத்தா ஒரு சமயம் கோபமா வரும். ஒரு சமயம் அழுகையா வரும். சில சமயம் கொலைவெறி வந்துரும். ஆனா வெத்துக் கையாலத்தனம்தான் மிஞ்சும். கோபம் கோபமா வந்தாலும் ஒரு சமயம் பார்த்தா அதுங்க செய்யறதை ரசிக்காமல் இருக்க முடியாது. 

               அன்னக்கி அப்படித்தான் குட்டி குட்டி சமோசா வாங்கிட்டு வந்து ஃபிரிஜ் மேல வச்சுட்டு ராத்திரி படுக்கும் முன்னாடி அதை எலிப்பொறி உள்ளே வக்கலாம்னு வந்தேன். வச்சப்பறம் கையைக் கழுவனுமேன்னு சோம்பேறித்தனம் அவ்வளவுதான். எல்லா வேலையும் முடிச்சுட்டு எலிப்பொறியை எடுத்துட்டு வந்து பார்த்தா ஃபிரிஜ் மேல வச்சிருந்த சமோசா சுவாஹா ஆகிவிட்டிருந்தது. அடக்கடவுளே என்ன இந்த எலி படுத்தற பாடுன்னு வருத்தப் பட்ட அதே சமயம், மனதுக்குள்ள இதுக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும். இருடி உனக்கு நாளைக்கு வக்கிறேன் ஆப்பு..ன்னு சொல்லி பொலம்பிட்டு சரி நாளைக்கு வச்சுக்கலாம்னு வந்துட்டேன். 

                மறுநாள் சமோசா வாங்கிட்டு வர மறந்தாச்சு. அதனால என்ன? தோசைதான் ஊத்தப்போறோமே அதுல ஒரு பீசு வச்சுடலாம்னு பிளான் பண்ணி குட்டியா கெட்டியா ஒரு ஊத்தப்பம் அதுக்குன்னு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியளவுக்குப் போட்டேன். அது ஆறினவுடனே வக்கலாம்னு வந்து கம்ப்யூட்டரை ஆன் பண்ணினேன். கம்பூட்டரில் வேலை பார்த்தாலும் நினைவு எல்லாம் தோசை, எலிப்பொறி, எலிகள்தான். பத்து நிமிடம் கூட வேலை செய்யலை, சரி ஆறி இருக்கும் போயி வச்சுட்டு வந்திடலாம்னு எழுந்து போய் பார்த்தா தோசைக்கல்லு சூடு ஆறலை. ஆனா லாவகமா அந்தக். குட்டி தோசையை எடுத்துட்டு விறு விறுன்னு மிக்ஸி ஒயர்ல தாவி டியூப் லைட் மேல ஏறி லாஃப்ட்டுக்கு ஓடிடுச்சு எத்தனுக்கு எத்தனான  எங்கவீட்டு எமன். எங்க எலியார். அது எல்லாத்தையும் கடிச்சு வக்கிறதை நெனைக்கும்போது கோபம் கோபமா வந்தாலும் அதனோட சாமர்த்தியத்தைப்பார்த்து மனசுக்குள்ள ரசிச்சிகிட்டே இப்ப நீ ஜெயிச்சுட்டே. ஆனா இன்னக்கு நீ மாட்டுனடீன்னு சொல்லிக்கிட்டே  இந்த நீயா நானா விளையாட்டுல இன்னைக்கு நான் ஜெயிச்சே ஆகனும்னு முடிவு பண்ணி மறுபடியும் கவணமா அதுக்குப் பிடிச்ச மாதிரி குட்டித் தோசை தயாரானது.

                   பக்கத்துல ”என்னம்மா மறுபடியும் தோசையா... இன்னக்கும் எலிகிட்ட ஏமாந்துட்டீங்களா? எனக்குக் குட்டி இட்லியும் சாம்பாரும் செஞ்சு கொடுங்கன்னா செய்து தர மாட்டேன்னீங்களே... அதுதான் எலிக்குட்டி உங்கள வேலை வாங்குது செய்ங்க.. செய்ய்ய்ங்க” ன்னு எங்க வீட்டுப் புலிக்குட்டியோட கமெண்ட் வேற. அதுதான் என்னோட சீமந்தப் புத்திரன்..  ஒரு ஹெல்ப் செய்ய முடியலை. இதச்சொல்ல வந்துட்டியாக்கும் . விட்டுட்டா தெரியும்  உன்னோட ஷூ கதைமாதிரி எல்லாம் கந்தலாகட்டும்னு. வேலையைப் பார்த்துட்டு போடான்னு அவனை  திட்டிகிட்டே தோசைக்கல்லு  முன்னாடியே அடமா பத்து நிமிஷம் நின்னு தோசை ஆறியும் ஆறாமலும் இருக்கும் போது பதமா எடுத்து எலிப்பொறியில் லாவகமா மாட்டிட்டு லைட்டை நிருத்திட்டு அப்பாடான்னு வந்து  ஒக்காந்தேன்.

                பெரும்பாலும் வச்ச ஒரு பத்து நிமிஷத்திலேயே எலியார் மாட்டிடுவாரு.  அப்படி மாட்டலன்னா எனக்குத் தூக்கமே வராதே. ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் போய்ப் பார்த்துப் பார்த்து வருவது ஒரு தொடர் வேலை. நீர்க்கடுப்பு வந்தாக்கூட அப்படி எழுந்து போக மாட்டேன். இதப் பார்க்கிற ஆவல் அப்படி. வச்சு அரை மணி நேரம் ஆச்சு ஒரு சத்தமும்  இல்லை. சரி என்னதான் ஆச்சுன்னு போய் பார்த்தா நீங்க லாவகமா தோசையை மாட்டி வச்சா உங்ககிட்ட வளர்ந்த நாங்க லாவகமா எடுத்து சாப்பிட மாட்டோமான்னு அது  சாமர்த்தியமா வந்து சாப்பிட்டுட்டு  ஒரு பெரிய ஏப்பம் விட்டுட்டுப் போயிருந்தது.   இந்த முறையும் ஏமாந்ததை எண்ணி சே ஒரு எலிக்கிட்ட இப்படி தோத்துட்டோமேன்னு கண்ணோரம் கொஞ்சம் வெந்நீர் வர ஆரம்பிச்சாலும்.... அதோட சாமர்த்தியம் எனக்குப் புதுப் பாடத்தைக் கற்றுக்கொடுத்ததாக உணர்ந்து உறக்கம் வராமல் உறங்கினேன்.

                  எலி மருந்து வச்சு கொல்லலாம்னா என்னோட அகிம்சை மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது। சரி எலிப்பொறியில ஒவ்வொன்னா பிடிச்சு அதைக் கொண்டு போய் வெளியில் எங்கேயாவது விட்டுட்டு வர.லாம்னு பிடிச்சு வச்சு ஒரு நாள் எங்க குப்பைக் காரருகிட்ட கொடுத்தா அவரு என் கண் முன்னாடியே அதைக் கழுத்தை சடக்குன்னு ஒடச்சத நெனச்சுப் பாத்தால் இப்பவும் என்னோட முதுகுத் தண்டு வடத்தில ஐஸ் கட்டிய வச்ச மாதிரி இருக்குது। அடுத்த முறையில் இருந்து எப்ப கொடுத்தாலும் அதைக் கொன்னுடாதீங்க। எங்கேயாவது கொண்டு போயி விட்டுட்டு வாங்கன்னு சொல்லிக் கொடுப்பது வழக்கமாகப் போனது। 

                    எங்க தெரு குப்பைக்காரருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.. அவர் அடிக்கடி வேலைக்கு மட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.. அந்த நேரம் பார்த்து முதலில் வீரர்கள், படைத்தளபதி என்று எல்லாரையும் அனுப்பி விட்டு கடைசியில் போருக்குச் செல்லும் மன்னரைப்போல நான் விரித்த வலையில் கடைசியாக வந்து மாட்டிக்கொண்டவர் குடும்பத்தலைவர் மொறட்டு எலியார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் குப்பைக்காரர் வரவே இல்லை. நானும் எனக்கு லஞ்ச் பேக் செய்யும் போது அதற்கும் சிற்றுண்டி, லஞ்ச் எல்லாம் செய்து கொடுத்துக் காத்து வந்தேன்.

                    முதல் நாள் இரவு எலிப்பொறியில் இருந்து டொக் டொக் கம்பி சத்தம் அதிகமாகக் கேட்டது. அடுத்த நாள் குறைந்து போயிற்று.. அது பட்டினியில இருக்கே. எங்கேயாவது செத்துப் போயிடப்போகுதேன்னு தோசைத்துண்டு, கேரட் துண்டு இப்படி எல்லாம் போட்டுட்டுப் போனா அது கொஞ்சம் கூடத் தொட்டுப் பாககலே. சரி அதுக்குப் பிடிக்குமேன்னு கடையிலே இருந்து குட்டி சமோசா வாங்கிட்டு வந்து போட்டா அதையும் அது மோந்து கூட பாக்கல. அப்பரம்தான் புரிஞ்சது அது உண்ணா விரதம் தொடங்கிருக்குன்னு. 

                   எலியைப் பிடிச்சு அடச்சு வச்சுட்டு சாகாம இருக்கனும்னு அதுக்குத் தீனி போடறவ நீயாத்தான் இருப்பே” னு எனக்குத் திட்டு வேற குடும்பத்தலைவர்கிட்டே இருந்து.. அம்மா அதுக்குப் புத்திர சோகம்னு ஒரு கமெண்ட் என் புத்திரன்கிட்டே இருந்து.

                  இதை விடப் பெரிய கொடுமை என்னன்னா, ராத்திரியெல்லாம் ஒரே மொற மொறன்னு சத்தம். என்னன்னு எழுந்திருச்சுப் பார்த்தா ஒரு பெரிய பூனை எலிக்கூண்டையே இழுத்துட்டு போகுது. கம்பைக் காட்டி வெறட்டினாலும் அது போகலை. அதால கூண்டைத் திறக்க முடியலங்கற கோபத்தை என் மேல காட்டி அது மொறச்சதைப் பார்க்கனுமே., அசப்புல பசியோடத் திரியர ஒரு சிங்கக்குட்டி மாதிரியே இருந்தது.

               எப்பவும் கூண்டுக்குள்ள இருந்து கம்பியை டொக் டொக்குனு ஆட்டிகிட்டே தன் முயற்சியைக் கைவிடாது எப்போதும் சத்தம் செய்து கொண்டு இருக்கும் எலிக்கு அப்பொழுது சப்த நாடியும் ஒடுங்கி போய்விட்டது. ஆடிய ஆட்டமெல்லாம் ஓடிப்போய். எலிப்பொறியின் ஒரு மூலையில் ஒடுங்கிச் சுருங்கி இருந்தது. எனக்குச் சந்தேகம். அது மண்டையைப் போட்டுடுச்சோன்னு. பூனையை விரட்டிட்டு எலிப்பொறியை எடுத்து தலைகீழா பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தா அது கொஞ்சம் கூட அசையலை. ஐயோ செத்துப் போயிடுச்சேன்னு நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சிக்க ஆரம்பிக்க, அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பூனை இல்லை நமக்கு தின்மும் சமோசா கொடுக்கறவங்கன்னு தெரிஞ்சு லேசா கண்ணை மட்டும் கொஞ்சமா முழிச்சு பார்த்ததது. அப்பா இது உயிரோடதான் இருக்குன்னு நிம்மதி வந்தது. அன்னக்கி வீட்டுக்கு வராத நித்ய விருந்தாளியான குப்பைக்காரரை அடுத்தத் தெருவுக்குப் போய் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து வந்து இரண்டு நாளா அடைப்பட்டிருந்த இந்த விருந்தாளியை வழியனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது. இன்னொரு 

                 சுவையான இப்ப நினைத்தாலும் வயிற்றைக் கலக்கும் சம்பவம். துணியெல்லாம் ரொம்ப சேர்ந்து போயிற்று என்று வாஷிங் மெஷினைப் போட்டேன். வாஷிங் மெஷின் தன் வேலையை எப்போதும் போல விரைவாக ஒரு முக்கால் மணி நேரத்தில் செய்து முடித்தது. அடிக்காமல் துவைத்து, முறுக்கிப் பிழிந்து பாதி காயவைத்துத் துணியை தூசு துப்பின்றி கொடுத்துவிட்டு என் வேலையை முடித்து விட்டேன் என்று மூன்று முறை குரல் கொடுத்து அமைதியடைந்தது.

                இனி என் வேலைதான் மிச்சம். என்ன எடுத்து ஒரு தட்டு தட்டி கொடியில் உலர்த்த வேண்டியதுதான். அதற்கு நேரமின்மையால் அதைச் செய்ய ஒரு இரண்டு மணிநேரம் தாமதம் வேறு. இதற்கு தலைவர்கிட்ட வசவு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் போதே அது இன்னும் வலுப்பதைக் குறைக்க மெஷினைத் திறந்து துணியை எடுக்க கையை உள்ளே விட்டால் கேபில் ஒயர் போன்ற ஒன்று என் கையில் மாட்டியது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் கையில் வால். வீல் என்ற அலறலுடன் கையை உதற “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் தெரியாது. பிளக்கை எடுத்துவிட்டு துணியை எடு என்று சொன்னால் கேட்டால் தானே. ஒரு நாள் நான் இல்லாது இருக்கும்போது செத்துக் கிடக்கப்போறே” என்று ஆசிர்வாதத்துடன் அருகில் வந்தவர் என் கையைப் பிடித்தும் என் கைகளின் தந்தி அடிக்கும் வேலை நிற்கவில்லை.

                    என்ன ஆச்சு என்று கத்திக்கொண்டே வாஷிங் மெஷினுக்குள் எட்டிப் பார்த்தால் பெரிய எலி உள்ளே. மயக்கம் எனக்கும் எலிக்கும். இருவருக்கும் தண்ணீர் தெளித்ததில் எனக்குத் தெளிந்தது மயக்கம். அதற்கு தெளியவில்லை. பிழிஞ்சு போட்ட துணியாய்க் கிடந்தது அது. எடுத்துப் போடப் போன அவர் “ப்ளீஸ் கொஞ்ச நேரம் பாக்கலாம்பா” என்ற என் கெஞ்சலுக்குச் செவி சாய்த்து எலியை எடுத்து வராண்டாவில் போட்டார். அது லேசாக அசைவது போல இருந்தது. அதற்குள் எங்களுக்குள் பட்டிமண்டபம். தொடங்கி விட்டது.   அது செத்துப் போய்விட்டதா? இல்லையா? இல்லை என்று நான். செத்துப் போய் விட்டது என்று  அவர்.  இருவரும் அதையே பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமையைக் கழித்தோம் என்று சொல்லலாம். முடிவில் வழக்கம் போல நான் தான் வெற்றி பெற்றேன். நடுவராக எலியாரே வந்தது போல ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் அந்த எலி எழுந்து உடலை ஒரு முறை முறித்து விட்டு மெதுவாக நகர்ந்து நகர்ந்து பின் ஓடிப்போனது.

              அப்பாடா......எனக்கோ ஆச்சரியம்..... சந்தோஷம். மெஷின் துவைத்த துவையலில் அது எப்படி தப்பியது என்று. அதற்கு ஆயுள் கெட்டி. அதைவிட சந்தோஷம்... அது பிழைத்ததில் எனக்கு. அந்தத் துணிகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பல முறை அலசி இடுப்பு ஒடிந்தது ஒருபுறம்.. இருக்கு...... 

                 சங்க காலத்துல ஒரு புலவருக்கு அணிலாடு முன்றிலார்னு பெயர். அவர் முற்றத்தில அணில்கள் விளையாடுவதைப் பற்றி பாடல் ஒன்று புனைந்ததால். அவரு இங்கே எலிகள் போடுற ஆட்டத்தைப் பார்த்திருந்தால் எலிகளைப் பற்றி பாடல் எழுதி எலியாடு முன்றிலார்னு பெயர் வாங்கியிருப்பாரு. ஒருவேளை எதிர்காலத்திலே எனக்கு எலியாடு முன்றிலார்னு பெயர் வருதோ என்னவோ? யார் கண்டது!!!!!!!!!! 



ஆதிரா..