“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 23 அக்டோபர், 2010

அரசனும்... அரசியும்...


கோவிலுக்குப் போலாங்களே.......நோயின்றி வாழ......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRtwNalsN3KAp2tBW5rtlY78iytfWWfmye5BUBrQ7d6Wnkw4e-K
     ஊருக்கு அரசன் அரசி எவ்வாறு முக்கியமோ, அதே போல கருவூருக்கு இந்த அரசன் அரசி என்றழைக்கப்படும் அரசமரமும் வேப்ப மரமும் முக்கியம் என்று சென்ற இதழில் கண்டோம்.. இதில் வேமபு தமிழர்களின் பண்பாட்டோடவும் வழிபாட்டோடவும் வாழ்வியலோடும், உடல் ஓம்பு முறையோடவும் தொடர்புடைய்து. வழிபாட்டோடு தொடர்புடையது என்பது அம்மன் வழிபாட்டை அறிந்த அனைவரும் அறிவர்.
        பக்தி செய்யும் வகையைக் கூற வந்த வள்ளலார் வேம்பையே  உவமையாகக் கூறுகிறார். 
வேமபுரு புழுவை வாங்கிமென் கரும்பிடை விட்டாலும் வேம்பையே நோக்கிப் பின்னும் வியப்புறுமாறு
 
என்று கூறி வேம்பு ஆலயம் செல்வது இரண்டும் கசந்தாலும், பக்தி பிறவி என்ற பிணியைப் போக்கி இன்பம் பயப்பது. வேம்பு உடல் பிணியைப் போக்கி நலமாக வாழ் வைப்பது.. ஆகவே உடல் ஓம்புவதற்கு முதன்மையான மருந்தாக வேம்பு பயனளிக்கிறது. 
      தமிழர்களின் அகத்தும் புறத்தும் வேம்பு தொடர்ந்தே வந்துள்ளது. தமிழர்களின் அக வாழ்வில்,
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ (குறுந்தொகை 24)
    என்று பிரிந்து சென்ற காதல் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி, வேம்பின் மலரைப் பார்த்து ஏங்க, தலைவன் வரும் காலம் காட்டும் கடிகாரமாகப் பயன் பட்டது வேம்பு. புற வாழ்விலோ போரில் அடையாள மாலையாகப் பயன்பட்டுப் பண்பாட்டோடு தொடர்புடைய பெருமையைப் பெற்றுள்ளது. இதனைச் சுட்டும் பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து  


   இது மட்டுமல்ல வேம்பு வானியலுடன் தொடர்புடையது என்பதற்கு சான்றுகள் பல காணப்படுகின்றன. நம்புவதும் நம்பாததும் அவரவர் கையில் என்ற போதும் உள்ளவற்றைப் பதிவது நம் கடமையுமாகிறது.
நவகோள்களில் கேதுவின் பிரியமான மூலிகை வேம்பு என்கின்றது வானியல் நூல். ஜாதகத்தில் கேதுவின் தச புத்திகள் கேடு தர விளைவிக்கும் தருணங்களில் வேப்பமரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஒன்பது நாட்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வர, கெடுபலன் குறையும் என்பர். அதுமட்டுமல்ல மரத்தின் எல்லா பாகங்களையும் சமமாக எடுத்து தூள் செய்து, தேனில் குழைத்து நெற்றியில் பூசி வர மிருகங்களைக் கூட வசியப்படுத்தலாமாம். 

         அகில உலகத்தையும் இயக்கும் பெரும் சக்தியே ஆதி பராசக்தி. எங்கும் நிறைந்த  ஆதி சக்தியை மூலைகையிலும் கண்டனர் நம் முன்னோர்கள். வேம்பை நம் சித்தர்கள் ஆதிசக்தி மூலிகை, பராசக்தி மூலிகை என்று பெயரிட்டு அழைத்தனர். அகத்தியரின் பரிபூரணம் 400 உம் இந்தக் குறிப்புகளைக் காணலாம். 

         கோடையில் இளைப்பாற்றிக் கொள்ள நம் முன்னோர்கள் கண்ட வழி அம்மன் கோயில் திருவிழாக்கள். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.. 

          என்ன ஒன்று அவர்கள் உரிமை வாங்க வேண்டும் என்பதை மட்டும் அறியாது விட்டு விட்டார்கள். அதன் பலன் இன்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து நம் உரிமையை நாம் பெறவேண்டியுள்ளது.. அமெரிக்காவிடம் இருந்து போராடிப் பெற்ற காப்புரிமையைத்தான் (பேடண்ட்) சொல்கிறேன். போந்தை, வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும்என்று கூறி தொல்காப்பியர் காலம் தொடர்ந்து நாம் பயன் படுத்தி வரும் வேப்பிலையை பறிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வரி கட்டும் அபாயத்தில் இருந்து நல்ல வேளையாகத் தப்பித்தோம் என்றே கூற வேண்டும்.

       சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும். அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் வேம்புக்கு உள்ளது. வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்ற வேதிப்பொருள் மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளை முற்றிலும் இயங்க விடாமல் அழித்து விடும் தன்மையது. வேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தால் முடிவில்லாது தொடரும். 

காய சித்தியாகும்  கடிய சிலேஷ்ம மாறும்
தூய விந்து நாதமிவை சுத்தியுமாம் தூயவருக்
கெத்திக்கும் கிட்டு, இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதற்குத் தேர்” 

 அகத்தியம் காயசித்திக்கு மருந்தாகும் என்று வேம்பின் தேர் என்று கூறுகிறது. ஆத்தா மகமாயி ஒருபுறம், வேம்பு ஒரு புறம் என்று பக்தர்களின் உள்ள உடல் நோயைத் தீர்க்க அடமாக அமர்ந்து இருக்கும் இடம் கோயில். இக்கோயில்களுக்குப் போகமாட்டேன் என்று அடமாக இருப்பது அழகா? அறிவுடைமையா?
சென்ற இதழில் அரச மரம் பற்றி குறிப்பு கூறி விடுத்தேன். அதன் தொடர்ச்சியாக, 
            வேப்ப மரத்தை மரங்களின் அரசி என்று கூறுவதன் காரணங்கள் அறிந்தோம். அதே போல அரச மரத்தை வ்மரங்களின் அரசன் என்று கூறுவதற்கு முக்கியமான காரணம் அறியவேண்டாமா? அது பெரியதாக வளர்வதாலா? உதிய மரம் கூட பெருத்து பெரிய மரமாக இருக்குமாமே. பழமொழி சொல்லுகிறதே.. உதியம் பெருத்து உத்திரத்திற்கு ஆகுமா? என்று. அப்போது அது அல்ல காரணம். வேறு எதுவாக இருக்கும்.

          கம்பரின் கைவண்ணத்தில் கூறவேண்டுமாயின் அரச மரத்தை உயிர் காற்றெலாம் உரைவதோர் உட்ம்புமானது என்று கூறலாம். உயிரெலாம் உரைவதோர் உடம்பு மாயினான் என்று மன்னன் தசரதனைக் காட்டுவார். கம்பர். மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களைக் உயிர் போல எண்ணி காக்க வேண்டிய கடமையுடையவன் என்பாதால். அக்கடமையை ஒரு மரம் செய்கிறது எனும்போது அதனை 'அரசன்' என்று முடிசூட்டாமல் எப்படி அழைப்பதாம்? எப்படி என்று கேட்கிறீர்களா? 

                மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் நமக்காக நாம் உயிர் வாழ, நல்ல காற்றைச் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜனை) 24 மணிநேரமும் வெளியேற்றும்  அற்புதமான தனமையைத் தன்னகத்தே கொண்டது.. 

               அதனால்தான் கோயில்கள் தோறும் அரசும் வேம்பு கோலோச்சுகிறது. இவ் அறிவியலை உணர்ந்த நம் முன்னோர்கள், கோயில்கள் தோறும், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரித்தார்கள். பொது இடங்களிலும் கிராமங்களில் அரச மரத்தை நட்டார்கள். இந்த இடத்தில் நம் முன்னோர்களின் உயிரியல் அறிவையும் பாராட்டியே ஆகவேண்டும். 

                கிரகங்களில் வியாழன் (Jupiter) கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தைப் பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்துக்கள் அரச மரத்iதை வலம் வந்து குரு' என்று அழைப்பார்கள். வியாழக்கிழமை உருவானதும் இதை அடியொற்றியே.

        வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும். அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன என்று வானநூல் அறிவியல் கூறுகின்றன.. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் அடைத்துக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு நம்மையும் வாழ வைக்கும் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருந்தாக மாறுகிறது.

         
"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களைக் குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது. (ஆரச மரத்தைக் கட்டிப் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு ரெய்கி மருத்துவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்)  

          இவற்றின் காரணமாகவே அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு வலம் வருவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
பெட்ரோல் புகையில் கலந்து ஐக்கியமான உயிர்க்காற்றைச் சுவாசிக்க முடியாது தவிக்கும் இன்றைய சூழலில்,


அவசரமாகச் சுவாசிக்க வேண்டும்
காரோட்டி ஊருக்கு வெளியே போ” 

என்றும்,
பிராண வாயு பிரித்தெடுக்க 
நாசிக்குச் சக்தி இல்லை 

சுற்றியுள்ளது காற்றல்ல 
இது
பெற்றோல் டீசலின் 
வளிவடிவம்

இதைச் சுவாசிப்பதெனில் 
எந்திர மூக்கு வேண்டும்”

என்றும் கூறிய வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. சிறிது நேரமாவது தூய உயிர்க் காற்றைச் சுவாசிக்க விரும்பினால் .கோயிலுக்குப் போகலாமே.. இன்னும் வரும் ஆலய உலா...


நன்றி குமுதம் ஹெல்த்.

சனி, 16 அக்டோபர், 2010

இனி கொசுக்களின் காலம்


http://i00.i.aliimg.com/photo/v0/10302576/Mosquito_Mat_And_Liquid_Vaporiser.jpg



                      மண்டையைப் பிளக்கும் வெயில் காலம் முடிந்து விட்டது. அப்பாடா... என்று கூறும் அழகான கார்காலம் தொடங்கிவிட்டது,  இக்காலத்திலும்  நம்மால் மகிழ முடியவில்லை. எப்போதுதான்  நாம் தொல்லைகள்  இல்லாது இன்பமாகக் எல்லா காலங்களைக் கழிக்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்தி மழையையும், குளிர் இரவையையும்  இனிமையாக ரசிக்க முடியாதபடி  அடுத்த தொல்லை தொடங்கி விட்டது. 

                      இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும்.  கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி.  கொசு தவறாமல் கடைபிடிக்கும் கொள்கை என்றும் சொல்லலாம்..

                    தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச் சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக  சில நோய்களைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி  விட்டுத்தான் போகும்.

                    அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக்கொள்ளலாம், என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம்.  இந்த மழைக்காலத்திலன்  முக்கியமான  பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல் வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும்.  வானத்தில் மினுக்கென்றால் கரண்ட் கட் ஆகிவிடும்.

                  முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால்  லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது. வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம். சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போல கனவுடன் உறக்கம் கொள்கிறோம்..  மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்கு இரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும்.  இரண்டு அதைப் பயன் படுத்தும் நம்மை  மெல்ல மெல்லக் கொல்லும்.

                   இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள்
1.  சிந்தெடிக் D அலித்ரின்
2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2
இவை எரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல் ஈதைர். இது  நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்.

http://image.shutterstock.com/display_pic_with_logo/148012/148012,1252619240,1/stock-photo-mosquito-coil-36900238.jpg


                    தொடர்ந்து மூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை. இது  நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதை தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை.

                    தொடர்ந்து அடர்த்தி அதிகமான இப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதிய அளவு கிடைக்காமல் போகிறது.

                     இந்த வேதிப்பொருள் விளைக்கும்  இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம் இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி  எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல் போன்றது அல்ல.   காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணிய சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். ) நோய்கள் வரலாம்.

                      நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள் நன்கு  உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில் கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப் பாயில் (மேட்டில்)  இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

                       குழந்தைகளுக்கு இத்தகு துன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல் இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
 
                       இதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது. 

                      இத்தனையையும் படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்? போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள்  கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போல  ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று மனைவியின்  காதில்  பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள். அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

திங்கள், 11 அக்டோபர், 2010

டேட்டூஸ் போட்டா சுவை தெரியுமா நாக்குக்கு??



சுவையறி மொட்டுகள்...சுவையானத் தகவல்கள்...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT8Te_OruWaB4Kf28SLjtXZ6kJ26Ao7xiRbapqFL9DiAB1PG8Q&t=1&usg=__WotwbdlPBvjykiagq88PKbxT3gU=

இணையத்தில் எதையோ தேட இப்படி ஒரு நாக்கு கிடைத்தது. இதைப் பார்த்தவுடன் சற்று நேரம் என்ன என்று புரியவில்லை. இன்றைய நவ நாகரிக் மக்களின் டேட்டூஸ் மோகம். எங்கு போய் இருக்கிறது பாருங்கள். இது நாக்கு வரை போய் விட்டது. இப்படி ஒரு நாக்கைப் பார்க்க நேர்ந்ததும் நல்லதாகத்தான் போனது. சுவையுணர இறைவன் படைத்த நாக்குக்கும் ஒப்பனை தேவைதான். அந்த ஒப்பனை வாய்மை என்ற அழகான ஒப்பனை. அதை விடுத்து இப்படியா??.

யாகாவாராயினும் நாகாக்க”. என்று திருக்குறள் சொல்லும். நம் மனதை, நாம் செய்கின்ற செயல்களை அடக்கி ஆளாது விட்டு நாக்கைக் குறை கூறுவதுஎன்னங்க நியாயம். இந்த நாக்கு எத்தனையோ நல்லதை நமக்குச் செய்கிறது. நாம் அதை முறையாகப்பயன் படுத்தாமல் இருந்து விடுவதுடன், குறை வேறு கூறுகிறோம்.
அழகுணர்ச்சி நிறைந்தது இந்தக் காலம்.

கமபர் சீதையின் இடையைச் சொல்லும் போது “பொய்யோ எனும் இடையாள்” என்பார். இதையே கண்ணதாசனோ “இல்லை என்று சொல்வதுந்தன் "இடையல்லவோ; மின்னல் இடையல்லவோ?” என்று பாடுவார். கொடியிடையாள், துடியிடையாள், மின்னார் மருங்காள், இல்லாத இடையாள் என்றெல்லாம் வருணிக்கப்படும்பெண்கள் இப்போது இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.ஆண்கள் குண்டாக இருப்பது இல்லையா என்று தாங்கள் வினவுவது லேசாக என் காது மடலில் குசுகுசுக்கிறது. இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறெல்லாம் வருணிக்கப்பட்டவர்கள் இல்லையே.

அழகு என்றால் பெண்மையும் வலிமை என்றால் ஆண்மையும் அன்று முதல்இன்றளவும் நம் மனதில் பதிவான படிமங்களாக இருக்கின்றன. இதைப்பற்றி நாம் சிந்திக்கும்போது குண்டுக்குக் காரணம் நாக்குதான் என்று எல்லோரும் கூறுவார்கள். ருசி ருசியாகச்சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் குண்டாவார்கள் என்ற எண்ணம் நம் மனத்தில் நிலவுகிறது.இல்லைங்க ருசி பார்க்க நாக்கை விடாது இருப்பதே முதன்மையான காரணம்.

நாக்கு நாம் அதிகமாகத் தின்றாலும் குண்டாகமல்தடுக்கும் பணியை வெகு நேர்த்தியாகச் செய்கிறது. ருசியறிந்து உண்ண அதை நாம் அனுமதித்தால்அது நாம் உண்பதை நம் உடலில் உறுப்புகளாருக்கு, யார் யாருக்கு எதுபிடிக்குமோ என்பது மட்டுமன்றி எது தேவையோ, எவ்வளவு தேவையோ அதை பகிர்ந்து கொடுத்து உடலைசீராக வைத்து இருக்கும். நடுத்தரவயது பெண்கள் பெரும்பாலும் குண்டாக இருப்பதற்கு ஒரு காரணம் நாக்கை மதிக்காமல் இருப்பதே.காலையில் சிற்றுண்டி. எல்லா உணவும் இருந்தும் உண்ண போதிய நேரம் இருக்காது. ஆகவே அது இவர்களுக்கு மொபைல் உண்டி. இவர்கள் காலையில்அலுவலகத்திற்கு ஓடும் அவசரத்தில், ஒரு கையில் சாப்பாட்டுத்தட்டு, ஒரு கையில் பூட்டு சாவி என்று ஓடிக்கொண்டேசாப்பிடுவார்கள். மதிய உணவு ருசியறிந்து சாப்பிட நேரம் இருந்தாலும் உணவு இருக்காது. ஏனெனில் சிறு டப்பாக்குள் அடைபட்டிருக்கும் கட்டுச்சோறு. இதுவும் ஓடுகின்ற கிடைத்ததை எடுத்துப் போட்டு அடைத்துச்சென்றதாக இருக்கும் ஆறி அவலாய்ப் போன சிற்றுண்டியே. .இரவு நன்றாகச்சாப்பிடுவார்கள். ஆனால் அப்போதும் நாவுக்குக் கொடுத்து உண்ணும் அளவுக்குப் பொறுமை இருப்பதுஇல்லை. நாள் முழுவதும் உழைத்த அலுப்பு ஏதோ கொட்டி வயிற்று டப்பாவை அடைத்து மூடிவிட்டு, உறங்கலாம் என்று தோன்றி விடுகிறது. அத்துடன்உண்டவுடன் அயர்ந்த உறக்கம். இவற்றால் குண்டுச் சமுதாயத்தைத் தவிர்க்க இயலாது போய்விட்டதுஎன்பதே உண்மை.

இப்போது தொடங்கிய விஷயத்திற்கு வருவொம். பூவுக்குள் மட்டும் தான் மொட்டு உள்ளது என்பதில்லை. நம் நாவுக்குள்ளும் மொட்டுக்கள் உள்ளன. நாக்கில்9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளில் நிறைந்துள்ள சத்துக்களைச் சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. மூளையின் உதவியுடன் நாக்கு செய்யும் சம தர்மம் இது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. அனைத்து உறுப்புகளும் பலமாக இருப்பதுடன்பகிர்ந்த உணவு நம் உடல் பருமனை சீராக வைத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து உமிழ் நீருடன் கலந்து நிதானமாகச் சாப்பிடும் போது மட்டும் தான் நடைபெறும்.


http://t0.gstatic.com/images?q=tbn:IPRQy-QBXbvIhM:http://www.nelsonideas.com/medical-information/tongue%20taste%20buds.jpg&t=1

அறிவியல் பாடத்தில் நாம் பார்த்திருப்போம். நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளைக் கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள்.அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நாக்கில் சுவைகளுக்கானநாக்கியல் வரைபடம் (மேப்) எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 CharlesZuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லாஇடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார்.நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அல்லது மேட்டு வடிவ மொட்டுகள். அவற்றை சுவை அரும்புகள்அல்லது சுவை மொட்டுகள் என்பர்.

ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கானசெல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் சுமார் 25 வகை சுவைகளை அறிகிறோம். (அறுசுவைகள்என்பது சரியில்லை. அவை இருபத்தைந்துக்கும் மேல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). நாம்அடிப்படை வண்ணங்கள் ஏழு. அதிலிருந்து பல வண்ணங்கள் உருவாவது போல அடிப்படை சுவைகள் ஆறுஎன்று கொண்டு அதிலிருந்து சிறிது சிறிது வேறுபட்ட புது சுவைகள் பல எனக்கொள்ளலாம்..ஏனெனில் ஒரு சுவையில் எந்த பண்டமும் நாம் இக்காலத்தில் பார்ப்பது இல்லை. ஒரே ஐஸ் கீரீம்நூற்றுக்கணக்கான சுவைகளில் (Flavour) இருக்கிறதே..
ஒவ்வொருசுவைக்கும் தனியாகச் சுவையறி செல்கள் உண்டு என்பதும் தவறான கருத்து. அதாவது ஒரு செல்ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலைமூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதிஒரு சுவையை மட்டும் அறியும் என்பதும் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ளஎல்லா மொட்டுகளிலும் எல்லா வகை சுவைகளையும் அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில்சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல(கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன.இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின்பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். அப்போது உடலும் உயிரும்பொருந்திக் கொள்வது போல இவை இரண்டும் பொருத்தமாக ஒட்டிக்கொள்கின்றன. இதனால் இந்தக்கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார்.
அதனடிப்படையில்நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவலை இந்த மூளை அனுப்பி விடுகிறது. கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும். இந்த உறுப்புகள் பஞ்ச காலத்தில் ஹெலிகாப்டரில்இருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களை வாங்க தயாராகக் காத்திருப்பவர்களைப் போல இந்த தகவல் வந்ததும் உணவுச்சத்தை ஏற்க இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. நாக்கு மென்று சுவைத்து சாப்பிட்டு அனுப்பிய பாகற்காயின் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு நாம் உண்ணும் பல சுவைகளும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் உணரப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்பட்டு அந்தச் சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளைத் தெளிவாகப் பிரித்து மூளைக்குத் தகவல் தெரிவிக்க முடிவதில்லை. இவ்வாறு முன்னறிவிப்பு ஏதுமின்றி அனுப்பப்படும் உணவுச்சத்தை சுய மரியாதை மன்னார் சாமிகளான உறுப்புகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆம்...சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அது என்ன கொண்டதைக் கொள்ளும் கொள்ளிடமாஎன்ன? அளவைத் தாண்டும் போது கிட்னியும் போடா சரிதான் என்று தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.

மற்றுமொரு சுவையான போனஸ் தகவலுடன் இக்கட்டுரையின்முடிவுக்குப் போகலாம் சுவை ஏற்பி ஒவ்வொன்றின்கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம்,கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அதன் அருகே உள்ள இன்னொருசிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும்இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும்மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான என்றுகண்டறிந்தார் ஸூக்கர். ஒரு சுவையும் இல்லாத அஜின மோட்டோவின் சுவையை மாமிசத்தின் சுவையுடன்சேர்த்து சுவையாக்கும் சூட்சமத்தை இந்த இன்னொரு அறைதான் செய்கிறது. கண்டிப்பாக அஜினமோட்டோ செய்வது இல்லை.

இந்த அத்தனை பயன்களையும் நாம் நாக்கை நன்கு மதித்துஒழுகினால் மட்டுமே பெற முடியும். எனவே அதிகமாகக் கூடச் சாப்பிடுங்கள். சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும். நொறுக்ஸ் கூட சாப்பிடுங்க. ஆனா அதையும் நொறுக்கிச் சாப்பிடுங்க. அதனால்தான் நொறுங்கத்தின்னால் நோயில்லை என்றனர் நம் முன்னோர். ஆனால் ரசித்துருசித்துச் சாப்பிடுங்கள். பாவம் உங்களுக்காகவே சுவைகளை ருசிக்கக் காத்திருக்கும் நாக்கை மதியுங்கள்.சுய மரியாதைச் உடல் சிங்கங்களான உறுப்புகளுக்கு அவைகள் விரும்பும் சத்தைக் கேட்டுக்கேட்டுக் கொடுங்கள். உங்களை நீங்களே விரும்பும் அழகான, அளவான பருமனுடன் மிளிருங்கள்.....




திங்கள், 4 அக்டோபர், 2010

விருதுக்கே விருது.....


http://t2.gstatic.com/images?q=tbn:zeSSPonmh7FQjM:http://www.thehindu.com/multimedia/dynamic/00018/IN21_KARUNANIDHI_18937f.jpg&t=1
காது கொடுத்துக் கேள்நீ தம்பி: என்றன்
கருணாநிதி எனுமறிய கழகக் கம்பி!
ஏதுமறி யாத்தமிழர் தூய வாழ்வை
எனக்குப்பின் சீர்ப்படுத்தும் மறவன் நீதான்

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3F2IXnNL-vMCRV-_3ZX3meBMEA42VrUAcpb69Pm99CPz1vwk&t=1&usg=__rMTfowHIvEtBtIhpt46vNyOJfiU=
     என நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவால் அடையாளம் காணப்பட்டவர் கலைஞர் மு. கருணாநிதி. 1924 ஜூன் மூன்று நாள் மட்டுமல்ல. தமிழ்த்தாய்க்கு மூன்றாவது கண் முளைத்தநாள். ஆம். அஞ்சுகத்தாய் தமிழ்த்தாய்க்கு மகிழ்ந்தளித்த நல்விருது கருணைநிதி. அவ்விருதே பெறுகிறது பல்விருது. சிலம்பும், மேகலையும், சிந்தாமணி குண்டலமும் அணிந்து மகிழ்ந்த தமிழ்த்தாய், முத்துவேலர் அஞ்சுகத்தாய் அகங்கனிந்து அளித்த விருதினிலே பெரிதும் மகிழ்ந்தாள். வானத்தில்  அசரீரி கேட்கவில்லை.; வாள் நட்சத்திரம் தோன்றவில்லை; கோளகள் அறுந்து விழவில்லை; சாமானியனாகத்தான் பிறந்தார். கலைஞர் நான் தென்றலைத் தீண்டியது இல்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன் என்ற தொடங்கிய வ(ரி)லிகள் இன்னும் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கிறது. அத்தீ, இத்தீ, எத்தீயானாலும் மலர்த்தூவி அணைக்கின்ற தமிழ் மேகமாக வலம் வருபவர் கலைஞர். பாதையெல்லாம் கால்  முளைத்து காவியங்கள் நடக்கின்றன. காப்பியங்கள் பிறக்கின்றன. கலைஞரின் சிந்தனைத் தேரைச் செந்தமிழ்த் தாயே இயக்குகிறாள். இந்தாப்பிடி என்று சங்க நூலின் சாறு பிழிந்து தருகின்ற ஆற்றலும், கனிவும் யாருக்கு உண்டு! படித்தேன் படித்தேன்: குடித்தேன் படித்தேன் என்று மாந்துகின்றார்களே இலக்கிய வாதிகள் இந்த மகிழ்வுக்கு யார் காரணம்? இந்த ஆண் உரு தாங்கிய செந்தமிழ்த்தாய்தானே. 

     ஈரோட்டு மேகம் திரண்டு காஞ்சிக் காற்று உரசிய போது தீவிரப்பட்டது திராவிட மழை என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார். ஆம் அந்த மழையில் நனைந்து செழித்து வளர்ந்த இலக்கியத்தோப்புகள் ஏராளம். இலக்கணம் என்றால் பலருக்கு வழுக்குப்பாறை. சிலருக்கு இருட்குகை. சிலருக்கு முட்காடு. அந்த முட்கள் குத்திக்கிழித்து காயப்பட்டவர்கள் ஏராளம். ஆனால் கலைஞருக்கோ அது சந்தனக்காடு.  தொல்காப்பியப் பூங்காவின் மலர் மணத்தை நுகர்ந்தவர்களுக்குத் தெரியும். ஆட்சி செங்கோலையும் எழுது கோலையும் ஏந்திய அவர் விரல்களில் பதிந்த ரேகைகள் எல்லாம் ரேகைகள் அல்ல. நெஞ்சின் நீதியால் துவண்டு போகாமல் எழுச்சி பெருகிறது. அகமாய் இருந்தாலும், அனைவரும் ஏற்கும் மறமாய் இருந்தாலும், மனமாசு போக்கும் அறமாய் இருந்தாலும் ஐயன் அருளிய தமிழ் மறையாக இருந்தாலும் கலைஞரின் கைப்பட்டால் களங்கறை விளக்கமாகிறது. தமிழக் வரலாறு ஒரு எழுபதாண்டு காலமாகக் கலைஞரின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்திருக்கிறது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கும்.

     அரசியலில் அவர் தனல் குளித்தார். ஆனாலும் அயராது தமிழருக்குச் ச்லுகை மழைதனையே குவித்தார். தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என்றார். அது அலங்கார வார்த்தையல்ல, தமிழ்ப்பண்பாட்டை நிலை நிறுத்திய அடித்தள் வார்த்தைகள் என்பதனைப் பல்வேறு நிகழ்வுகள் சான்று கூறுகின்றன.

     வெறும் சொற்களால கண்ணகிக்குக் கோயில் கட்டினான இளையவன். இமயத்துக் கற்களால் கோயிலைக் கட்டினான் அவன் தமையன் சேரன் குட்டுவன். தமிழ்த்தாயின் செல்லமகன் கலைஞர் தானே கற்கோயிலும் சொற்கோயிலும் சேர்த்துக்கட்டினார். உளியின் ஓசையுடன் எழுத்து செதுக்கிய எழுதுகோலின் ஓசையும் இனைந்தே மணக்கிறதே இன்றளவும் காவிரிப் பூம்பட்டினமாம் பூம்புகாரில்.. இதனால் தான் நளங்கிள்ளி நெடுங்கிள்ளிக்குப் பிறகு நாடும் ஆண்டு தமிழ் ஏடும் ஆண்டு வருகிறாய் என்று மு.வ. அவர்களால் பாராட்டப் பட்டார்.

     தமிழர் வாழ்வியலின் அடையாளச் சின்னம் வள்ளுவர் கோட்டம். தமிழர்களின் வீரத்தின் அடையாளச் சின்னம் கட்ட பொம்மு கோட்டை. வரலாற்றுக்கெல்லாம் வராலாறு கூறிய கலைஞர் ஒரு வாழும் வரலாறு. அவர் நடை தமிழுக்குத் தேனடை. இதோ ருசிக்க சிறுதுளி,

     பயிர் போன்றார் உழவருக்கு
     பால் போன்றார் குழந்தைகட்கு
     பசும்பால் கட்டித்தயிர் போன்றார் பசித்தவர்க்கு
     தாய் போன்றார் ஏழையர்க்கு

இந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர் ஈரோட்டுப் பெரியார். இதைக் கூறியவர் இந்தப் பெரியார். இந்த நடை தள்ளாத வயதிலும் கலைஞருக்கு மட்டுமே கைவரும் சொந்த நடை. இந்த 86 இளைஞரை கவிக்கோவும்

     வெறும் ஆண்டுகளால வயதை அளப்பவனா நீ
     வரிசையாய் நீசெய்த சாதனையால் அன்றோ 
     வயதைக் கணக்கிடுகிறாய்
     அந்தக் கணக்கெடுத்தால் தொண்டுக்கிளம் நீ
     ஆனாலும் உன்னைப்போல் இளமையில் வீரியம் பெற்றவர் யார்?
     சாதனைகளெல்லாம் நீ சாப்பிடத் தயாரிக்கும் காயகலப லேகியமா?
என்று புகழ்கிறார்.

கலைஞர் உவமைகளைப் பேச்சில் கையாளும் விதம் சிரிக்கவும் சிந்திக்கவும் கூடுவன.  காட்டும் உவமைக்கு ஒரு எடுத்துக்காட்டு, பருவோடு சண்டை போட்டால் நம் முகம்தான் கெடும்; பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்;. முக அழகை கெடுக்க வந்த பருவுக்குப் புனுகு ஒரு கேடா? புலிபோல சீறிடுவர் என்நண்பர் பொறுமையெனும் புனுகால்தான் பொல்லாப் பருக்கள் உதிருமெனில் மணம் என்று அதனைக் கருதாமல் மருந்தெனத் தடவிடுக! என்பார். 
மீசையைப் பற்றி கூறும் போது உளியிரண்டு உதட்டின்மேல் வைத்தாற்போல ஒளிமிகுந்த பாண்டியருக்கு மீசை உண்டு

     இந்தக் மந்திரச்சொல் வித்தைக் கற்றதனால், பனியில் நனையத் துடிக்கும் மலர். கனியில் நனையத் துடிக்கும் தேன். போல இவரின் எழுதுகோலின் நுனியில் நனையத்துடிக்கும் தமிழ் எழுத்துக்கள்.

     மனிதனாகப் பிறப்பது சாதாரனம். மனிதனாக வாழ்வது சாதனை. ஆனால் கலைஞராக வாழ்வது சரித்திரம். ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று தன் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று அரசியல் மேடைதோறும் முழக்கம் செய்யும் இந்தச் சரித்திரத்தை, கம்பன் திருவள்ளுவருக்கு அடுத்து தமிழுக்குக் கதியாகும் மூன்றாமவர் என்று (கருணாநிதி = கதி) என்று கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம் சூட்டுவது சரிதானே...

நன்றி 
நகர்வலம்.

(கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் டாக்டர் கலைஞருக்குத் தமிழ்த்தலைமகன் விருது வழங்கி சிறப்பித்த போது அனைவர் கரங்களிலும் தவழ்ந்த நகர் வலம் என்ற வார இதழில் வெளிவந்தது. இது கலைஞர் கரத்திலும் தவழ்ந்தது.)