“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 4 அக்டோபர், 2010

விருதுக்கே விருது.....


http://t2.gstatic.com/images?q=tbn:zeSSPonmh7FQjM:http://www.thehindu.com/multimedia/dynamic/00018/IN21_KARUNANIDHI_18937f.jpg&t=1
காது கொடுத்துக் கேள்நீ தம்பி: என்றன்
கருணாநிதி எனுமறிய கழகக் கம்பி!
ஏதுமறி யாத்தமிழர் தூய வாழ்வை
எனக்குப்பின் சீர்ப்படுத்தும் மறவன் நீதான்

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3F2IXnNL-vMCRV-_3ZX3meBMEA42VrUAcpb69Pm99CPz1vwk&t=1&usg=__rMTfowHIvEtBtIhpt46vNyOJfiU=
     என நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவால் அடையாளம் காணப்பட்டவர் கலைஞர் மு. கருணாநிதி. 1924 ஜூன் மூன்று நாள் மட்டுமல்ல. தமிழ்த்தாய்க்கு மூன்றாவது கண் முளைத்தநாள். ஆம். அஞ்சுகத்தாய் தமிழ்த்தாய்க்கு மகிழ்ந்தளித்த நல்விருது கருணைநிதி. அவ்விருதே பெறுகிறது பல்விருது. சிலம்பும், மேகலையும், சிந்தாமணி குண்டலமும் அணிந்து மகிழ்ந்த தமிழ்த்தாய், முத்துவேலர் அஞ்சுகத்தாய் அகங்கனிந்து அளித்த விருதினிலே பெரிதும் மகிழ்ந்தாள். வானத்தில்  அசரீரி கேட்கவில்லை.; வாள் நட்சத்திரம் தோன்றவில்லை; கோளகள் அறுந்து விழவில்லை; சாமானியனாகத்தான் பிறந்தார். கலைஞர் நான் தென்றலைத் தீண்டியது இல்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன் என்ற தொடங்கிய வ(ரி)லிகள் இன்னும் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கிறது. அத்தீ, இத்தீ, எத்தீயானாலும் மலர்த்தூவி அணைக்கின்ற தமிழ் மேகமாக வலம் வருபவர் கலைஞர். பாதையெல்லாம் கால்  முளைத்து காவியங்கள் நடக்கின்றன. காப்பியங்கள் பிறக்கின்றன. கலைஞரின் சிந்தனைத் தேரைச் செந்தமிழ்த் தாயே இயக்குகிறாள். இந்தாப்பிடி என்று சங்க நூலின் சாறு பிழிந்து தருகின்ற ஆற்றலும், கனிவும் யாருக்கு உண்டு! படித்தேன் படித்தேன்: குடித்தேன் படித்தேன் என்று மாந்துகின்றார்களே இலக்கிய வாதிகள் இந்த மகிழ்வுக்கு யார் காரணம்? இந்த ஆண் உரு தாங்கிய செந்தமிழ்த்தாய்தானே. 

     ஈரோட்டு மேகம் திரண்டு காஞ்சிக் காற்று உரசிய போது தீவிரப்பட்டது திராவிட மழை என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார். ஆம் அந்த மழையில் நனைந்து செழித்து வளர்ந்த இலக்கியத்தோப்புகள் ஏராளம். இலக்கணம் என்றால் பலருக்கு வழுக்குப்பாறை. சிலருக்கு இருட்குகை. சிலருக்கு முட்காடு. அந்த முட்கள் குத்திக்கிழித்து காயப்பட்டவர்கள் ஏராளம். ஆனால் கலைஞருக்கோ அது சந்தனக்காடு.  தொல்காப்பியப் பூங்காவின் மலர் மணத்தை நுகர்ந்தவர்களுக்குத் தெரியும். ஆட்சி செங்கோலையும் எழுது கோலையும் ஏந்திய அவர் விரல்களில் பதிந்த ரேகைகள் எல்லாம் ரேகைகள் அல்ல. நெஞ்சின் நீதியால் துவண்டு போகாமல் எழுச்சி பெருகிறது. அகமாய் இருந்தாலும், அனைவரும் ஏற்கும் மறமாய் இருந்தாலும், மனமாசு போக்கும் அறமாய் இருந்தாலும் ஐயன் அருளிய தமிழ் மறையாக இருந்தாலும் கலைஞரின் கைப்பட்டால் களங்கறை விளக்கமாகிறது. தமிழக் வரலாறு ஒரு எழுபதாண்டு காலமாகக் கலைஞரின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்திருக்கிறது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கும்.

     அரசியலில் அவர் தனல் குளித்தார். ஆனாலும் அயராது தமிழருக்குச் ச்லுகை மழைதனையே குவித்தார். தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என்றார். அது அலங்கார வார்த்தையல்ல, தமிழ்ப்பண்பாட்டை நிலை நிறுத்திய அடித்தள் வார்த்தைகள் என்பதனைப் பல்வேறு நிகழ்வுகள் சான்று கூறுகின்றன.

     வெறும் சொற்களால கண்ணகிக்குக் கோயில் கட்டினான இளையவன். இமயத்துக் கற்களால் கோயிலைக் கட்டினான் அவன் தமையன் சேரன் குட்டுவன். தமிழ்த்தாயின் செல்லமகன் கலைஞர் தானே கற்கோயிலும் சொற்கோயிலும் சேர்த்துக்கட்டினார். உளியின் ஓசையுடன் எழுத்து செதுக்கிய எழுதுகோலின் ஓசையும் இனைந்தே மணக்கிறதே இன்றளவும் காவிரிப் பூம்பட்டினமாம் பூம்புகாரில்.. இதனால் தான் நளங்கிள்ளி நெடுங்கிள்ளிக்குப் பிறகு நாடும் ஆண்டு தமிழ் ஏடும் ஆண்டு வருகிறாய் என்று மு.வ. அவர்களால் பாராட்டப் பட்டார்.

     தமிழர் வாழ்வியலின் அடையாளச் சின்னம் வள்ளுவர் கோட்டம். தமிழர்களின் வீரத்தின் அடையாளச் சின்னம் கட்ட பொம்மு கோட்டை. வரலாற்றுக்கெல்லாம் வராலாறு கூறிய கலைஞர் ஒரு வாழும் வரலாறு. அவர் நடை தமிழுக்குத் தேனடை. இதோ ருசிக்க சிறுதுளி,

     பயிர் போன்றார் உழவருக்கு
     பால் போன்றார் குழந்தைகட்கு
     பசும்பால் கட்டித்தயிர் போன்றார் பசித்தவர்க்கு
     தாய் போன்றார் ஏழையர்க்கு

இந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர் ஈரோட்டுப் பெரியார். இதைக் கூறியவர் இந்தப் பெரியார். இந்த நடை தள்ளாத வயதிலும் கலைஞருக்கு மட்டுமே கைவரும் சொந்த நடை. இந்த 86 இளைஞரை கவிக்கோவும்

     வெறும் ஆண்டுகளால வயதை அளப்பவனா நீ
     வரிசையாய் நீசெய்த சாதனையால் அன்றோ 
     வயதைக் கணக்கிடுகிறாய்
     அந்தக் கணக்கெடுத்தால் தொண்டுக்கிளம் நீ
     ஆனாலும் உன்னைப்போல் இளமையில் வீரியம் பெற்றவர் யார்?
     சாதனைகளெல்லாம் நீ சாப்பிடத் தயாரிக்கும் காயகலப லேகியமா?
என்று புகழ்கிறார்.

கலைஞர் உவமைகளைப் பேச்சில் கையாளும் விதம் சிரிக்கவும் சிந்திக்கவும் கூடுவன.  காட்டும் உவமைக்கு ஒரு எடுத்துக்காட்டு, பருவோடு சண்டை போட்டால் நம் முகம்தான் கெடும்; பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்;. முக அழகை கெடுக்க வந்த பருவுக்குப் புனுகு ஒரு கேடா? புலிபோல சீறிடுவர் என்நண்பர் பொறுமையெனும் புனுகால்தான் பொல்லாப் பருக்கள் உதிருமெனில் மணம் என்று அதனைக் கருதாமல் மருந்தெனத் தடவிடுக! என்பார். 
மீசையைப் பற்றி கூறும் போது உளியிரண்டு உதட்டின்மேல் வைத்தாற்போல ஒளிமிகுந்த பாண்டியருக்கு மீசை உண்டு

     இந்தக் மந்திரச்சொல் வித்தைக் கற்றதனால், பனியில் நனையத் துடிக்கும் மலர். கனியில் நனையத் துடிக்கும் தேன். போல இவரின் எழுதுகோலின் நுனியில் நனையத்துடிக்கும் தமிழ் எழுத்துக்கள்.

     மனிதனாகப் பிறப்பது சாதாரனம். மனிதனாக வாழ்வது சாதனை. ஆனால் கலைஞராக வாழ்வது சரித்திரம். ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று தன் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று அரசியல் மேடைதோறும் முழக்கம் செய்யும் இந்தச் சரித்திரத்தை, கம்பன் திருவள்ளுவருக்கு அடுத்து தமிழுக்குக் கதியாகும் மூன்றாமவர் என்று (கருணாநிதி = கதி) என்று கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம் சூட்டுவது சரிதானே...

நன்றி 
நகர்வலம்.

(கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் டாக்டர் கலைஞருக்குத் தமிழ்த்தலைமகன் விருது வழங்கி சிறப்பித்த போது அனைவர் கரங்களிலும் தவழ்ந்த நகர் வலம் என்ற வார இதழில் வெளிவந்தது. இது கலைஞர் கரத்திலும் தவழ்ந்தது.)
    

9 கருத்துகள்:

  1. கலைஞரின் தமிழுக்கு தலை வணங்கியே ஆகவேண்டும்.....

    குறளோவியம் கண்டவருக்கு புதிதாக விருது கொடுப்பது பெரு மலைக்கு போடும் சிறு சால்வை போன்றதே....

    பதிலளிநீக்கு
  2. இலக்கியவாதி கலைஞரை புறம் வைத்துவிட்டு தமிழ் இலக்கிய வரலாறை எழுத இயலாது.ஆறாண்டுகள் நான் பழகிய கல்கத்தா பாரதி தமிழ் சங்கத்தின் இந்த விருது எனக்கு மகிழ்ச்சி அளித்தது

    பதிலளிநீக்கு
  3. "பத்துப்பாட்டுப் பாட எட்டுத்தொகை வேண்டுமென்றான்..." என்று ஒரு கலைஞரின் கவியரங்க கவிதை பல வருடங்களுக்கு முன்பு கேட்டது. கலைஞரின் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதிரா. கட்டுரை செம்மையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெருமலையில் ஒரு சிறு புல்லாக இருக்க இக்கட்டுரையை எழுதினேன் என்று கூறலாம் பத்மநாபன். என்றென்றும் அரசியலைப் புறந்தள்ளிவிட்டு..அவரின் தமிழுக்கு, சிலப்பதிகாரக் கலைக்கூடத்திற்கு, குறளோவியத்திற்கு, வள்ளுவர் கோட்டத்திற்கு நாம் தலை வணங்குவோம்.

    இப்பதிவைப் படித்துக் கருத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி. தாமதமான் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் பத்மநாபன்.

    என்ன உங்க வலைப்பூவை ப்லமுறை பார்வையிட்டுப் புது பதிவுகள் காணாது...
    பணி அதிகமோ?

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜி,
    ஆறு ஆண்டுகள் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தில் இணைந்து இருந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி. திரு ஸ்ரீதரன் அவர்களிடம் நேர்காணல் நடத்தி,கொல்கொத்தா தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளையும் அந்தப் பத்திரிகையில் போட்டோம்.
    தமிழர்களாக இணைந்ததிலும் மகிழ்ச்சி ஜி. நன்றியும்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள RVS,
    ”வயசு ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை” என்று ரம்யா கிருஷ்ணன் ரஜினியைப் பார்த்துக் கூறும் டையலாகதான் கலைஞரைப் பார்க்கும் போது இல்லை அவர் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வரும். இன்றும் இதழோரம் ஒரு புன்னகையைச் சிந்திக்கொண்டு, அவர் நகைச்சுவைக்கு நான் அடிமைதான்.
    தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி RVS.

    பதிலளிநீக்கு
  7. என் தளத்திற்கு ஏற்கனவே ஒரு ஜி வருவார். தாங்கள் இரண்டு ஜிஜி(டாவது ஜி) தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு
  8. உரைநடை எழுதினாலும் அது உயர்நடை கவிதையாகவே தெரிகிறது...நிறைமதியாளர் என்பது நிஜம் நிஜம்...நீள் தமிழ் ;நெகிழ் தமிழ் ; மகிழ் தமிழ் உங்களுடையது...கலைஞரின் அருமை பெருமை பேசும் கட்டுரை அருமை...

    பதிலளிநீக்கு