“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 31 மார்ச், 2011

தேவலோக அமுதத்துளி… .. சாப்பிடலாம் வாங்க....
       தகடூரை ஆட்சி செய்த மன்னன் அதியமான் அஞ்சி தமிழ்ப்பற்று கொண்டவன். தன்னை நாடிவரும் புலவர்களை அன்போடு வரவேற்று உபசரிப்பான். வீரத்திலும் சிறந்து விளங்கிய அதியன் தன்னை நாடி வந்த ஒளவைக்கு பல நாட்கள் சென்றும் தமிழார்வம் காரணமாகப் பரிசில் தராது காலம் நீட்டித்தான். ஒரு நாள் மலைவளம் காணச் சென்ற அதியனுக்கு அற்புதமான கனி ஒன்று கிடைத்தது. அந்தக்கனியைத் தின்றால் சாவே வராது.. மூப்பின்றி நெடுநாள் வாழலாம் என்று அறிந்தான். அதை உடனே தான் தின்னாமல் அப்படியே எடுத்து வந்தான். ஒளவைக்குக் கொடுத்துத் தின்னச்சொன்னான்.

       ஒளவை ருசித்துத் தின்று முடித்த பின் அக்கனியின் மகத்துவம் குறித்துக் கூறினானாம்.. ஒளவை பதறிப்போய் அத்தகு சிறப்பு வாய்ந்த கனியை உட்கொள்ள வேண்டியவன் நீயன்றோ. இந்நாட்டை ஆள வேண்டிய நீதானே பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்., இப்படிச் செய்துவிட்டாயே என்று புலம்பினாராம். அவர் என்றும் முதுமை மாறாத அதே கிழவியாகப் பல்லாண்டு வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இந்த சம்பவம் உண்மை என்பதை இலக்கியங்கள் கூறுகின்றன..

        ஒரு மன்னனின் கொடைத்திறத்தைப் பறைசாற்றக் காரணமாக ஒரு கனி இருக்கிறதென்றால், அருங்கனி ஈந்தவன் என்று தமிழுலகத்தில் ஒரு மன்னன் ஒரு கனியால் அடையாளம் காட்டப்படுகிறான் என்றால் அக்கனி எத்துனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கக்கூடும். ஒளவை மூப்பின்றி நெடுநாள் வாழ்ந்தமைக்குக் காரணமான அக்கனி அருநெல்லிக்கனி என்பது யாவரும் அறிந்ததே. அப்படி இருக்க அந்த அருநெல்லிக்கனியைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பது எவ்வகையில் பொருந்தும்?

      நரை திரை மூப்பு என்ற மூன்றையும் எதிர்க்கும் ஆற்றல் அதியனுக்கு அடுத்ததாக அவன் கண்டெடுத்த வேறு எந்த கனியிலும் இல்லாத அளவு வைட்டமின் `சி' நிறைந்த நெல்லிக்கு உண்டு. இதனை

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

என்று தேரையர் கூறுவார். இதன் பொருள், முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிட வேண்டுமாம்.

       ஒரு மண்டலம் நெல்லிப் பொடியை தேனில் குழைத்துத் தின்று வந்தால் கருங்காலிக் கட்டையை எரித்தால் உண்டாகும் தீ போல உடலை ஜொலிக்கச் செய்யும் மாமருந்து நெல்லி என்கிறார் போகர். பாடல் இதோ.

வயிரமாம் நெல்லிமுள்ளி தனைவாங்கி
மருவ நன்றா யிடித்துமே யெடுத்து
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரந்தான்
அதற்கெட்டுப் பங்கு ஒன்று சேர்த்து
துயிரமாம் தேன் தன்னில் குழைத்துண்ணு
சுகமாக மண்டலந்தான் உண்டாயானால்
கைரமாங் காய்ந்தான் கருங்காலிக்கட்டை
கனல்போல சோதியாய்த்தான் காணும்காணே

       இளமை தரும் டானிக்கான நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற இரு இனங்கள் உண்டு. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய யுபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்த மரம். விரிந்து பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். வேனில் காலத் துவக்கத்தில் பூக்க ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது.

     ஒரு நெல்லியில் உள்ள சத்து புரதம் - 0.4 கி, கொழுப்பு - 0.5 கி, மாவுச்சத்து - 14 கி, கல்சியம் 15 மி.கி, பொஸ்பரஸ் - 21 மி.கி, இரும்பு - 1 மி.கி, நியாசின் - 0,4 மி.கி, வைட்டமின் ´பி1` - 28 மி.கி, வைட்டமின் ´சி` - 720 மி.கி, கரிச்சத்து, சுண்ணாம்பு தாதுப் பொருட்கள், கலோரிகள் - 60

       இதனைத் தின்று சுனையின் தேங்கியிருந்த சிறிது நீரை அருந்தி, அதன் சுவையில் தன்னை மறந்துள்ளனர் சங்கத்தமிழர் இந்த நெல்லிக் கனியை சங்க காலத்தில் நடைப்பயணத்தில் தாகத்தைப் போக்கிக்கொள்ளப் பயன்படுத்தினர் என்று அறிகிறோம். இதனை

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப் புன்காழ்
நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி
சுவையில் தீவிய மிழற்றி
என்று அகநானூறும்,

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
என்று ஐங்குறுநூறும்,

சேய்நாட்டுச் சுவைக்காய் நெல்லிப் போக்குஅரும்
பொங்கர் வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைசசிறு நீர் குடியினள்,

என்று நற்றிணையும் சுட்டும்.

        நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.. கிணற்று நீரே இனிப்பாக மாறும் போது இயல்பாகவே இனிமைச் சுவை நிரம்பிய வாயில் ஊறும் உமிழ்நீர்?

கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி
வாயின்ஊறல் கண்டு சர்க்கரையோ தேனோ
கனியொடு கலந்த பாகோ அண்டர் மாமுனிவர்க்கு
எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமோ

      என்று விவேக சிந்தாமணி ஆசிரியர் கேட்பார். ஆனால் நெல்லிக்காய் ஆண் பெண் பேதமற்று அனைவரின் நோய் தீர்க்கும் அருமருந்தாகிய உமிழ்நீர்ச் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றது.

        கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது

பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது

உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுப்பதுடன். ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

         ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களைக் கழுவினால் கண் சிவத்தல், உறுத்தல் ஆகியவை குணமாகும்.

        ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது வீரியமான விந்தணுக்கள் உருவாகவும் கருப்பை உறுதிக்கும் நெல்லி அருமருந்து.

        உணவு செரிமானத்திற்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு
பேருதவி புரிகிறது

பெண்களுக்கு அழகைக்கூட்டுவதில் கண்களுக்கு அடுத்த இடம் கூந்தலுக்குத்தான். இயறகையிலே இளமை டானிக்கான இது முதுமையின் அடையாளமான நரைக்கும் மருந்தாகிறது. அன்றாடம் தலையில் ஒரு கரண்டி நெல்லி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு,

        இதில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவிவந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.

         வழக்கமாகச் சுவையான செய்தி ஒன்றைச் சொன்னால்தானே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நெல்லிக்காயின் பிறப்பு ரகசியத்தை ரகசியமாகச் சொல்கிறேன். யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அசுரர்களும்தேவர்களும் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் இந்திர லோகத்துக்கு எடுத்து சென்றார்கள் அல்லவா, அப்போது தேவலோகத்தில் இந்திரன் அந்த அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி கையில் இருந்து நழுவி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து வந்ததுதான் நெல்லிமரமாம்....அமுதக்கனி என்று கூறலாமா!!!


11 கருத்துகள்:

 1. நீங்கள் எந்தத் துறையில் முனைவர் பட்டம் வாங்க முனைகிறீர்கள்.?நெல்லியின் சிறப்புகளைத் தேடித் தேடிகண்டெடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள மதுரை சரவணன்,
  நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பாதம் இக்குடிலில் பதிந்துவிட குடில் செய்தது பெரும் புண்ணியம். த்ங்கள் வருகையில் மகிழ்ந்தது மனம். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மீள் வருகையை எதிர் நோக்கி... அன்புடன்..

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள ஜி.எம். பாலசுப்ரமணியன் ஐயா,
  தங்கள் தொடர் வருகையில் மகிழ்ச்சி. என் முனைவர் ஆய்வுக்கும் இந்தப் பதிவுகளுக்கும் கொஞ்சம் கூட தொடர்பே இல்லை. என் முனைவர் பட்ட ஆய்வு திருவருட்பாவில் அகப்பாடல்கள் பற்றியது.

  இவை குமுதம் ஹெல்த் இதழில் ’தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்’ என்ற தொடருக்காக வாராவாரம் எழுதுவது.

  இந்தத் தேடலில் பாதி நேரம் கழிகிறது. அங்கு என்னால் விடுப்பு கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் தங்கள் போன்றோரின் ஆசிகளுடன் முடித்து விடுவேன் மே மாதத்திற்குள் என்று நம்பிக்கையுடன்..

  பதிலளிநீக்கு
 4. அதனால் தான் என்னால் தங்கள் வலைப்பூவுக்கெல்லாம் வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா. விடுபட்ட அனைவரின் பதிவுகளும் வந்தவுடன் அதி வேகத்துடன் படித்து படித்து விடுவேன். தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அன்பு வாசன், வழக்கம் போல தங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அரைவேக்காடு நெல்லிக்காய் (கனி?) சுவை மறந்து முப்பது வருடமாகிறது. போங்க.

  பதிலளிநீக்கு
 7. அன்பு அப்பாதுரை,
  தாங்கள் இருக்குமிடம் சொன்னால் எவரிடமாவது கொடுத்து அனுப்புகிறேன். சற்று வித்தியாசமாக் அதியனுக்கு(அப்பாதுரைக்கு) ஒளவை (ஆதிரா) கொடுத்ததாக இருக்கட்டுமே.

  பதிலளிநீக்கு
 8. அமுதக்கனியைப்பற்றிய அருமையான தகவல்கள்..

  பதிலளிநீக்கு
 9. நெல்லிக்கனியின் சிறப்புகளையும் ,பயன்களையும் அழகாக விவரித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு