“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன்


சென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S , நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசர் ஆகியோருடன்






சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.


“ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.
நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.
பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.
“பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
காரணம் யாதெனும் அறிவுமிலார்”
என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.
இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.
எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.
சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.
சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.
சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.
கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.
புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.
ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.
அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.
“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்” 
என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.
ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.
அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.
“விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

(இக்கட்டுரை வல்லமை மின்னிதழ், சோழநாடு மாத இதழ் இரண்டிலும் வெளியானது)