“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 16 ஏப்ரல், 2011

டிப்ஸ் புல்லட்டின்.

.1 வாசனையே இல்லைன்னா அனோஸ்மியாதான்.

நல்ல குடைமிளகாய் போல பெரிய மூக்காக இருக்கும். ஆனால் எந்த மணத்தையும் அது அறியாது அல்லது சில நேரங்களில் நல்ல மணமான பொருட்கள் கூட கெட்ட மணமாக அந்த மூக்குக்குத் தெரியும். இந்த நோயைத்தான் அனோஸ்மியா (Anosmia) என்பர். இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது? அனோஸ்மியா என்பது கிரேக்கச் சொல். an [no] -osmia [smell] ஆமாம் no smell என்பதே இச்சொல்லின் பொருள். இது மொத்தமாக மூக்கு தன் மணம் உணர் திறனை இழப்பது. ஹிப்போஸ்மியா (HYPOSMIA) என்று ஒரு மூக்கு நோய் உள்ளது. இது மூக்கின் ஒரு பக்கம் மட்டும் மணத்தை உணரும். மூக்கு நரம்பின் செயல்திறன் பாதிக்கப்பட்டால் மூக்கு இவ்வாறு மணத்தை உணராது அல்லது வேறு மாதிரி உணரும். அதனால் மூக்குக்கு வாசனை தெரியலைன்னா உடனடியா நல்ல மருத்துவர் எங்கே இருக்காருன்னு மோப்பம் பிடித்து போய் காண்பிக்கறது நல்லது.

2. பல்லேலக்கா... பல்லேலக்கா......

நம்ம பல்லையெல்லாம் யாரு பாது காக்கிறாங்கன்னு தெரியுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பற்பசையைக் காட்டி அப்பப்ப நம்மள முட்டாள் ஆக்குகிற பற்பசை விளம்பரங்கள் ஏராளமாய் வந்துகொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தவுடன் நாம் ஏதோ பெரிய சுத்தக்காரங்க மாதிரி குழந்தைகள் ஏதாவது கொஞ்சம் தின்னவுடன் வாயைக் கொப்பளி, பல் தேய்ச்சுட்டு வா என்று மிரட்டுகிறோம். ஆனா ஒவ்வொரு முறை ஏதேனும் தின்றவுடன் வாய் கொப்பளிப்பது பரவாயில்லை. பல் தேய்ப்பது கைக்கும், தண்ணீருக்கும் பற்பசைக்கும் மட்டுமில்லைங்க பல்லுக்கும் தேய்மானம் தான் என்கிறது . புதிய மருத்துவ ஆராய்ச்சி. ஏன்னா நாம் உண்ணும் எந்தப் பொருளிலும் ஒரு அமிலம் இருக்கும். இது பல்லில் உள்ள எனாமலை இளகும் நிலைக்கு ஆளாக்கும். அந்த அமிலம் இருக்கும்போது பல் துலக்கினால் பல் பலம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் எனாமல் கரையும் வாய்ப்பு இருப்பதாகவும் புதிய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமல்ல பற்பசையும் அதிகம் பயன்படுத்தக் கூடாதாம். அதனால் காலை, இரவு என்ற இரு வேளை மட்டும் அதுவும் உணவு உண்டபின்பு ஒரு மணி நேரமோ குறைந்த பட்சம் அரை மணி நேரமோ இடைவெளி விட்டு பல் துலக்குபவர்களின் பல்லுக்கு பலமான .எதிர்காலம் உண்டு. அடிக்கடி பல் தேய்த்தால் பல்லேலக்கா....பல்லேலக்கா...என்று பல் ஆட்டம் கண்டு விடும்.. அப்பரம் திருச்சிக்கும் மதுரைக்கும் மட்டுமல்லங்க டாக்டர்களிடம் பல்லுக்கும் பில் கட்ட வேண்டியதுதான். ஜாக்கிரதை....
3. குண்டு ஆசாமிகளே ஜாக்கிரதை... ஆண்கள் ஸ்பெஷல்:

இப்போதெல்லாம் பெண்களுக்குப் போட்டியாகப் ஆண்களும் குண்டாவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் பணி அப்படி. பொதுவாக ஐ டி பிரிவில் பணி புரியும் இளைஞர்களுக்குச் சத்தான ஆகாரம், குளிர்ச்சாதன் அறை, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பணி, அது முடிந்தால் உறக்கம். இதுவே உலகமாக மாறிவிட்டது. அதிக எடையுள்ள பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்று அடித்து சொன்ன மருத்துவ ஆய்வுகள் இப்போது அதிக எடையுள்ள ஆண்களுக்கு வாரிசுகளைக் காணக்கூடிய வாய்ப்புகள் அருகி வருகின்றது என்கின்றன. எடை கூடுவது பெரும்பாலும் கொழுப்புச்சத்தினால். இதனால் இதயம் பாதிப்படைகிறது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற பழைய பல்லவிகளுக்கு இப்போது புதிய சரணமும் இயற்றப் பட்டுள்ளது. உடல் எடைக்கும் உயிரணுக்களின் எடைக்கும் தொடர்பு உள்ளது. கூடுதல் உடல் எடை உயிரணுக்களைப் பாதிக்கிறது.. இதனாலும் பிள்ளைப் பேற்றை இழக்கவேண்டி வரும். எனவே ஆண்களே நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் உடல் உழைப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது உடற்பயிற்சியைச் செய்தாவது எடைக்கு தடை விதியுங்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் கொஞ்சிக் குலவ குழந்தைச் செல்வம் இல்லாவிட்டால் வாழ்வு வெறுமையாகப் போய்விடும்...
4. இதுவும் ஆண்கள் ஸ்பெஷல்....

மன்னிச்சுக்கோங்கப்பா...... மறுபடியும் உங்களுக்கே....என்னடா திரும்பத் திரும்ப ஆண்களுக்கே டிப்ஸா என்று தவறாக நினைக்க வேண்டாம். இப்போது உலகில் நிலவி வரும் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு பெரும்பாலும் ஆண்களே காரணம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு என்ற சர்க்கரை நோய் யாருக்கு வரும். பெருமாலும் 40 ஐக் கடந்த பெரியவர்களுக்குத்தான் வரும். அதனால்தான் நாற்பதைத் தாண்டினால் நாலை குறைக்கனும் என்பார்கள்.. இப்பொழுதெல்லாம் இளைஞர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறது. அதற்கும் காரணம் நாகரிக வாழ்வியல் முறையே. இதன் ஒட்டுமொத்தமான முடிவாக இப்போது நீரிழிவு நோயினாலும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்பு அடைகிறதாம். இவர்கள் என்னதான் பாதாம் பிஸ்தா தின்னும் பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் இவர்களின் உயிரணு நோஞ்சானாக மாறிவிடுகிறதாம். அதனால் ஒன்று கருத்தரிக்கவே முடியாமல் போகிறதாம். அடுத்து மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாம். இதையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஆண்களே.. நம் நாட்டின் பலமே மனித வளம்தான்!!! 

5. நிரோடிக் பயம்: இது பெண்கள் ஸ்பெஷல்:


சும்மா ஆண்களுக்கே ஸ்பெஷல்னு கோபிக்ககூடாதே அதனால் பெண்களுக்கும் ஒரு ஸ்பெஷல். பொதுவாய் பெண்களே எதற்கும் பயப்படுவார்கள்.. சொர்ணா அக்காக்ககள் தவிர. இந்த நோய் தாக்கியவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். இந்த நோய்க்கு என்ன அறிகுறி என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே கூறினேனே. எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது பஸ் நிறுத்தாமல் போய்விடுவானோ என்று பயம், ஆட்டோவில் ஏறினால் இறங்கும்போது ஆட்டோ டிரைவர் அதிகம் துட்டு கேட்பாரோ என்று பயம். காலையில் குறித்த நேரத்தில் எழாமல் தூங்கிவிடுவோமோ என்று பயம். டிவியில் பாம்பைக் கண்டால், வெட்டும் அல்லது அடிதடி காட்சியைக் கண்டால், சாலையில் விபத்தைக் கண்டால், இரத்தத்தைக் கண்டால் என்று எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டே இருப்பார்கள். இந்த நோயால் உடல் அளவிலும் அவர்கள் வியர்வை, படபடப்பு, நடுக்கம், வேகமான இதயத்துடிப்பு சில நேரங்களில் மயக்கம் ஆகிய பாதிப்புகளை அடைவார்கள். பொதுவாக இந்நோய் மணமான பெண்களுக்கு வருகிற நோய். இந்நோயைப் போக்க ஒரே ஒரு மருந்துதான். அவர்கள் மன தைரியததை வளர்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும். என்ற எண்ணத்துடனும் கடவுள் நம்பிக்கையுடனும் இருந்தாலே போதும். தியானம் செய்தல், மெல்லிய இசையைக் கேட்டல், எல்லோரிடமும் சிரித்துப் பேசி மகிழ்தல் ஆகியவற்றுடன் எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

செய்க தவம்!! செய்க தவம் !!

http://i958.photobucket.com/albums/ae69/hwytse1972/Picture2282-1.jpg


செய்க தவம் செய்க தவம் நெஞ்சே
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்

என்று கூறும் பாரதியார் இயற்கையான சூழலைத் தேடிச் சென்று தனிமையில் மோன நிலையில் அமர்ந்து, அவை கொடுத்த ரம்மியத்தில் சுந்தரக் கவிதைகள் வடித்தார். அதனால் கவியுலகின் மகாகவியாக மக்கள் மனங்களில் மங்காது நிலைபெற்றார். கவியரசர் கண்ணதாசன் தன் கவிதைகளுக்கு அடியெடுத்து கொடுத்தவைகள் கோப்பையின் மதுவும் கோல மயில்களும் என்று வாக்குறுதியே தருகிறார். இயற்கைக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவோ மொட்டைமாடி தனிமையும் தட்டை நிலவும் பட்டை தீட்டாத வைரக்கற்களாய் மின்னும் நட்சத்திர கூட்டங்களும் என்று இவையே தன் கவிதைகளுக்குக் கருத்து மழை பொழிந்த கொடை வள்ளல்கள் என்கிறார். இவர்கள் கலைப்பக்கத்தின் கருணாமூர்த்திகள்.
பிரஞ்சுக் கவிஞர் ஷெல்லியும்,

தீர்க்கமாம் தியானம் சோர்விலாக் கலைத்தேர்ச்சி
வரையறு நாள்மேலும் வாழ்கின்ற நற்பேறு “

என்றுரைத்து தியானம் கலைகளை வளரச்செய்வதுடன் வாழ்நாளைக் கூட்டும் என்கிறார்.

விழித்துக் கொண்டே கனவு காணச்சொன்ன அறிவியல் கொடையாளி கலாம் அவர்களோ தன் அக்கினிச்சிறகு பயண காலத்தில் தான் எந்த கூட்டத்தில் இயங்க வேண்டிய சூழல் அமைந்தாலும் அக்கினியை எப்படி இயக்குவது? எப்படி பழுதைச் செப்பனிடுவது? என்று தன் மனம் தனித்தே சிந்தித்துக் கொண்டு இருக்கும் என்கிறார். 

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழல் மன நிறைவைத் தந்துள்ளது. அந்த நிறைவு மன அமைதியைத் தந்துள்ளது. அந்த அமைதி அவர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளது. சிந்தனையின் தீவிரம் உள்ள உறுதியாக உருமாற்றம் பெற்றுள்ளது. அந்த உறுதியே வெற்றியை அள்ளித்தந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் வழி கூறும் நம் பாட்டன் மறையும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்

என்றுரைத்து உறுதியான நெஞ்சம் எதையும் வென்றே தீரும் என்கிறது.


கலாம் கூறுவது போல தனித்து இயங்குவது என்பது என்ன? இந்த வினாவுக்கு விடை மன ஒருமைப்பாடு என்பர். எங்கு இருந்தாலும் எந்த கூட்டத்தில் ஒலியில் அல்லது ஓசையில் இருந்தாலும் தன் மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலே மன் ஒருமைப்பாடு என்பதாம். மனத்தை தன் வசம் வைத்திருக்க ஒருவன் தன் மனத்தைப் பற்றி முழுமையாக முதலில் தான் அறிந்து இருக்க வேண்டும். அப்படி அறிந்து கொள்ளாதவன் தன் மனத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.

 நான் சீக்கிரத்துல முடிவெடுக்க மாட்டென். முடிவெடுத்துட்டேன் அப்பறம் நான் சொல்றதை நானே கேட்கமாட்டென் என்று சினிமாவில் உலவி வரும் வசனத்தில் இருக்கும் உண்மையை எண்ணி வியக்கத்தான் வேண்டும்.  அப்படி மனத்தைத் தன் வசப்படுத்தத் தெரியாதவர்களுக்கு கை கொடுப்பது தியானம், தவம், யோகம் என்றெல்லாம் பல பெயர்களைத் தாங்கி இருக்கும் சும்மா இருத்தல்.

சும்மா இரு! சும்மா இரு! என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவது போல சும்மா இருப்பது அப்படி ஒன்றும் சுலபமான செயல் அல்ல. ஒரு நாள் சும்மா இருந்தால் தெரியும். அது எத்துனை கடினமான செயல் என்று.  ஆனால் அதனைப் பயின்று விட்டால் சாதனைத் தேரேறி ஊர்வலம் வரலாம். இதனை உணர்த்தும் பழம்பாடல் இது.

கந்துக மதக்கரியை அடக்கலாம்
கரடி வெம்புலியையும் கட்டலாம்
ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழ்லின் ரதம் வைத்து ஐந்து உலகத்தையும்
வேதித்து அவிற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத்துலவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது

சும்மா இரு என்று ஆன்றோர் கூறக்காரணம் நம் மனதில் சிங்கம், புலி, கரடி, யானை, நரி  போன்ற மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆம். நம் மனமாகிய காட்டில் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் உள்ளன, மனம், புத்தி, சித்தி, அகங்கார்ரம் நான்கு நரிகள் உள்ளன. பல்வேறு ஆசைகளில் நம்மைக் கொண்டு சேர்த்து அலைபாய வைக்கும் ஐம்பொறிகளாகிய பெரும் யானைகள் உள்ளன. இவை ஆணவம் மலம் என்ற குற்றங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும். எனவே அந்த விலங்குகளை அடக்க முதலில் மன அடக்கம் தேவை என்பதனை, திருமூலர் அழகாகக் காட்டிச்சென்றுள்ளார். பாடல் இதோ,

திகைக்கின்ற சிந்துயுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நாலு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குள் பால் இரண்டு ஆமே

       ஆழ்மனப்பதிவுகளே எண்ண ஓட்டங்கள் தொடரச் செய்கிகின்றன. இந்த எண்ண ஓட்டங்களின் பின்னே மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். மனம் கை கால்களைப் போல ஒரு உறுப்புதான். அதை எப்போது வேண்டுமோ அப்போதுதான் பயன்படுத்த வேண்டும். எப்போதும் நாம் கை கால்களை ஆட்டிக்கொண்டே இருக்க முடியாது. அது போல மனத்தையும் தேவையானபோது பயன்படுத்தி பிற நேரங்களில் சும்மா இருக்கச் செய்ய வேண்டும் என்பார் ஓஷோ.

ஓஷோவின் தியான முறை முற்றிலும் புதுமையானது என்பர். இதை active meditation எனக் கூறுவார். முதல் நிலையாக எந்த மன உணர்வுகளையும் அடக்கி வைக்காமல் செயற்கையாக வெளிப்படுத்தி விடுவது. இரண்டாம் நிலை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய பின் ஆசைகளை அனுபவித்து அடங்கிய ஆள்மனதை அமைதியாகக் கவனிப்பது.  இதில் அடக்கப்பட்ட மன உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டுகிறது. குறுகிய காலத்தில் உடல், மன அமைதி தானாவே உருவாது மட்டுமல்லாமல் தியான நிலையைக் குறுகிய காலத்தில் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது என்று மேலை நாட்டு ஆய்வுலகம் கூறுகிறது.

செயற்கை என்பதை மட்டும் எடுத்து விட்டுப் பார்த்தால் இதைத்தானே அன்றே கூறியுள்ளார் நம் திருமூலர்.
      
       அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
      அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமால் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

மீறி அடக்கம் அடக்கம் என்று ஐம்புலன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடக்க முற்பட்டால் கட்டுப்பாடுகளை மீறி அணையை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் வெள்ளமாய் மனம் தறிகெட்டு ஓடும் நிலை வந்துவிடும். இதனை திருமூலர்,

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே

என்று கூறுகிறார். அதாவது தன் ஐந்து புலன்களும் ஆரவாரத்துடன் அனுபவிக்கத் துடித்தன. அந்தப் பெருமத யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கினேன். அவை நன்கு விளைந்து இருந்த கரும்புத் தோட்டத்தை அழித்துச் சென்ற மத யானைகளைப் போல நன்கு ஏற்கனவே என்னிடம் செழித்திருந்த என் தெளிவான அறிவையும் சிதைத்துச் சென்று விட்டன என்று பொருள்.

அதே நேரம் ஜென் த்ததுவத்தையும் நாம் காண வேண்டியுள்ளது. ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’ என்று கேட்டான்.என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும்என்றார் ஜென். அவனும் குருவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தனியாக அமர்தல், தியானித்தல் என்று எதையும் அவர் செய்யவில்லை. 

இதில் மனம் சலித்த சீடன், ‘எப்போது நான் தியானம் கற்றுக்கொள்வது?’ என்றான். நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லைஎன்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு.

இந்த திருமூலர் உள்ளிட்ட இரு குருமார்களின் வாக்கிலிருந்து ஒன்று புரிய வருகிறது. நம் மனதின் முதலாளி நாமாக இருக்க வேண்டும். மனம் ஒரு பணியாள்தான். வேலைக்காரனைக் கண்காணிக்கும்போது வேலைக்காரன் தன் வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பான். அதுதான் தியானம் இதனையே செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்.

நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனதைக்கட்டி மகா புரட்சியெல்லாம் செய்தனர். அதனால்தான், 

“நிலத்தில் குளித்து நீள்விசும்பேறிச்
சலத்தில் திரியும் ஓர் சாரணன்

என்று சித்தர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் அவையெல்லாம் துறவிகளுக்கு மட்டும் தொடர்புடையது, ஆன்மிகத்தேடலுக்கு மட்டுமே உரியது, சமாதி நிலையை அடைய உதவுவது முதலிய சாயங்கள் பூசப்பட்டு ஆன்மிகவாதிகள் கையில் சிக்கிக்கொண்டு பொது மக்கள் வரை எட்டாமல் போனது நம் போதாத காலமே.

மேலை நாடுகளோ மனித மன ஆற்றலை மேம்படுத்தும் சும்மா இருக்கும் செயலான தியானம் என்பதை முழுக்க முழுக்க பொருளீட்டும் வணிகமாக்கி பொது மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. 

ஆனால் இதில் என்ன விந்தை என்றால் கீழை நாட்டு மக்களான நம்மவர்களின் எந்த கண்டுபிடிப்பும் எந்த தத்துவமும் எந்த அறிவுரையும் வணிக நோக்குள்ள மேலை நாட்டவர்கள் கூறினால் மட்டுமே அதனை நம்பும் துர்ப்பாக்கிய நிலை நம்மவர்களிடம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது வருந்த வைக்கிறது. அதே சமயம் நாம் கண்களை மூடிக்கொண்டு சொன்ன விஷயங்களை எல்லாம் மேலை நாட்டினர் ஆய்வுக்கு உட்படுத்திச் சொல்லும் போது இரு தரப்பினரையும் பார்த்து நாம் மூக்கின்மேல் விரல் வைக்கத்தான் வேண்டியுள்ளது.

எண்ணங்களின் தொடர் ஓட்டத்தைத் தடைபடுத்தி சும்மா இருக்கும்போது மனம் உறக்கத்தின் போது உண்டாகும் ஆல்பா நிலையை அடைகிறது. அதனால் மனிதர்கள் மிகுந்த மன அமைதி அடைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று ஹார்டுவேர்டு மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பென்ஷன் கூறுகிறார்.
இதனையே,
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே

என்று நம் திருமூலர் அன்றே கூறினார்.

மனதின் நிலையை நித்திரை நிலை, கனவு நிலை, விழித்திருக்கும் நிலை என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றது மேலைநாட்டு ஆய்வுலகம். ஆனால் நம் சித்தர்களின் தத்துவம் அல்லது ஆன்மிக அருளாளர்களின் மெய்ஞானம் விழிப்பு நிலை, துயில் நிலை, கனவு நிலை, பொதி எருது நிலை என்ற நான்காகப் பிரிக்கிறது. இந்த நான்காவது பொதி எருது நிலையை துரியம் என்றும்  துரியமாகிய நான்காம் நிலைக்கும் மேம்பட்ட  துரியாதீதம் என்ற ஐந்தாம் நிலையும் உள்ளதாகக் கூறுவார். இதனைச் சுட்டும் வள்ளலார் பாடல் பின்வருவது.

துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொது

தியான முறை:

ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது ஒரு முறை.

ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் இந்த தியான முறையை மந்திர உச்சாடன தியானம் என்றும் கூறுவர்.

  உரம்தரு மந்திரம் ஓம் என்று எழுத்தே 

என்று திருமூலர் கூறுவது சான்று.


மற்றொன்று தமது மூச்சைக் மூக்கின் நுனியில் வைத்து தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இதனை  விப்பாசனா (vipassana) என்பர்.

முன்னர் கூறப்பட்ட செய்யும் தொழிலே தெய்வம் என்ற சென் (Zen) தத்துவமும் நல்ல தியான முறையாக ஜப்பான் போன்ற பல முன்னேறிய மேலை நாட்டினரால் கைகொள்ளப்பட்டு வருகிறது.

ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமனத் தியானப் பயிற்சி செய்பவர்களிடையில் பிரபலமானவை.

மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR)  என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn)  என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள்ள, உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

தியானம் செய்பவர்கள் எண்ணற்றோரை ஆய்வுக்கு உட்படுத்திய மேல்நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றன. மற்றவர்களைப் போல எண்ணங்களின் அலைமோதல் அதிக அளவில் இல்லை. அதுவும் தியானம் செய்யும் நிலையில் நினைவுகள் எண்ணங்கள் சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றி அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் மிகக் குறைந்த அளவிளான செய்ற்பாடுகளே இவர்களிடம் காணலாகின்றன என்கின்றனர். அதனால் இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ நமக்குத் தேவை ஆரோக்கியமான மனநிலை உள்ள மக்கள் சக்தியே.