“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 16 ஏப்ரல், 2011

டிப்ஸ் புல்லட்டின்.

.1 வாசனையே இல்லைன்னா அனோஸ்மியாதான்.

நல்ல குடைமிளகாய் போல பெரிய மூக்காக இருக்கும். ஆனால் எந்த மணத்தையும் அது அறியாது அல்லது சில நேரங்களில் நல்ல மணமான பொருட்கள் கூட கெட்ட மணமாக அந்த மூக்குக்குத் தெரியும். இந்த நோயைத்தான் அனோஸ்மியா (Anosmia) என்பர். இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது? அனோஸ்மியா என்பது கிரேக்கச் சொல். an [no] -osmia [smell] ஆமாம் no smell என்பதே இச்சொல்லின் பொருள். இது மொத்தமாக மூக்கு தன் மணம் உணர் திறனை இழப்பது. ஹிப்போஸ்மியா (HYPOSMIA) என்று ஒரு மூக்கு நோய் உள்ளது. இது மூக்கின் ஒரு பக்கம் மட்டும் மணத்தை உணரும். மூக்கு நரம்பின் செயல்திறன் பாதிக்கப்பட்டால் மூக்கு இவ்வாறு மணத்தை உணராது அல்லது வேறு மாதிரி உணரும். அதனால் மூக்குக்கு வாசனை தெரியலைன்னா உடனடியா நல்ல மருத்துவர் எங்கே இருக்காருன்னு மோப்பம் பிடித்து போய் காண்பிக்கறது நல்லது.

2. பல்லேலக்கா... பல்லேலக்கா......

நம்ம பல்லையெல்லாம் யாரு பாது காக்கிறாங்கன்னு தெரியுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பற்பசையைக் காட்டி அப்பப்ப நம்மள முட்டாள் ஆக்குகிற பற்பசை விளம்பரங்கள் ஏராளமாய் வந்துகொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தவுடன் நாம் ஏதோ பெரிய சுத்தக்காரங்க மாதிரி குழந்தைகள் ஏதாவது கொஞ்சம் தின்னவுடன் வாயைக் கொப்பளி, பல் தேய்ச்சுட்டு வா என்று மிரட்டுகிறோம். ஆனா ஒவ்வொரு முறை ஏதேனும் தின்றவுடன் வாய் கொப்பளிப்பது பரவாயில்லை. பல் தேய்ப்பது கைக்கும், தண்ணீருக்கும் பற்பசைக்கும் மட்டுமில்லைங்க பல்லுக்கும் தேய்மானம் தான் என்கிறது . புதிய மருத்துவ ஆராய்ச்சி. ஏன்னா நாம் உண்ணும் எந்தப் பொருளிலும் ஒரு அமிலம் இருக்கும். இது பல்லில் உள்ள எனாமலை இளகும் நிலைக்கு ஆளாக்கும். அந்த அமிலம் இருக்கும்போது பல் துலக்கினால் பல் பலம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் எனாமல் கரையும் வாய்ப்பு இருப்பதாகவும் புதிய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமல்ல பற்பசையும் அதிகம் பயன்படுத்தக் கூடாதாம். அதனால் காலை, இரவு என்ற இரு வேளை மட்டும் அதுவும் உணவு உண்டபின்பு ஒரு மணி நேரமோ குறைந்த பட்சம் அரை மணி நேரமோ இடைவெளி விட்டு பல் துலக்குபவர்களின் பல்லுக்கு பலமான .எதிர்காலம் உண்டு. அடிக்கடி பல் தேய்த்தால் பல்லேலக்கா....பல்லேலக்கா...என்று பல் ஆட்டம் கண்டு விடும்.. அப்பரம் திருச்சிக்கும் மதுரைக்கும் மட்டுமல்லங்க டாக்டர்களிடம் பல்லுக்கும் பில் கட்ட வேண்டியதுதான். ஜாக்கிரதை....
3. குண்டு ஆசாமிகளே ஜாக்கிரதை... ஆண்கள் ஸ்பெஷல்:

இப்போதெல்லாம் பெண்களுக்குப் போட்டியாகப் ஆண்களும் குண்டாவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் பணி அப்படி. பொதுவாக ஐ டி பிரிவில் பணி புரியும் இளைஞர்களுக்குச் சத்தான ஆகாரம், குளிர்ச்சாதன் அறை, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பணி, அது முடிந்தால் உறக்கம். இதுவே உலகமாக மாறிவிட்டது. அதிக எடையுள்ள பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்று அடித்து சொன்ன மருத்துவ ஆய்வுகள் இப்போது அதிக எடையுள்ள ஆண்களுக்கு வாரிசுகளைக் காணக்கூடிய வாய்ப்புகள் அருகி வருகின்றது என்கின்றன. எடை கூடுவது பெரும்பாலும் கொழுப்புச்சத்தினால். இதனால் இதயம் பாதிப்படைகிறது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற பழைய பல்லவிகளுக்கு இப்போது புதிய சரணமும் இயற்றப் பட்டுள்ளது. உடல் எடைக்கும் உயிரணுக்களின் எடைக்கும் தொடர்பு உள்ளது. கூடுதல் உடல் எடை உயிரணுக்களைப் பாதிக்கிறது.. இதனாலும் பிள்ளைப் பேற்றை இழக்கவேண்டி வரும். எனவே ஆண்களே நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் உடல் உழைப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது உடற்பயிற்சியைச் செய்தாவது எடைக்கு தடை விதியுங்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் கொஞ்சிக் குலவ குழந்தைச் செல்வம் இல்லாவிட்டால் வாழ்வு வெறுமையாகப் போய்விடும்...
4. இதுவும் ஆண்கள் ஸ்பெஷல்....

மன்னிச்சுக்கோங்கப்பா...... மறுபடியும் உங்களுக்கே....என்னடா திரும்பத் திரும்ப ஆண்களுக்கே டிப்ஸா என்று தவறாக நினைக்க வேண்டாம். இப்போது உலகில் நிலவி வரும் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு பெரும்பாலும் ஆண்களே காரணம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு என்ற சர்க்கரை நோய் யாருக்கு வரும். பெருமாலும் 40 ஐக் கடந்த பெரியவர்களுக்குத்தான் வரும். அதனால்தான் நாற்பதைத் தாண்டினால் நாலை குறைக்கனும் என்பார்கள்.. இப்பொழுதெல்லாம் இளைஞர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறது. அதற்கும் காரணம் நாகரிக வாழ்வியல் முறையே. இதன் ஒட்டுமொத்தமான முடிவாக இப்போது நீரிழிவு நோயினாலும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்பு அடைகிறதாம். இவர்கள் என்னதான் பாதாம் பிஸ்தா தின்னும் பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் இவர்களின் உயிரணு நோஞ்சானாக மாறிவிடுகிறதாம். அதனால் ஒன்று கருத்தரிக்கவே முடியாமல் போகிறதாம். அடுத்து மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாம். இதையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஆண்களே.. நம் நாட்டின் பலமே மனித வளம்தான்!!! 

5. நிரோடிக் பயம்: இது பெண்கள் ஸ்பெஷல்:


சும்மா ஆண்களுக்கே ஸ்பெஷல்னு கோபிக்ககூடாதே அதனால் பெண்களுக்கும் ஒரு ஸ்பெஷல். பொதுவாய் பெண்களே எதற்கும் பயப்படுவார்கள்.. சொர்ணா அக்காக்ககள் தவிர. இந்த நோய் தாக்கியவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். இந்த நோய்க்கு என்ன அறிகுறி என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே கூறினேனே. எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது பஸ் நிறுத்தாமல் போய்விடுவானோ என்று பயம், ஆட்டோவில் ஏறினால் இறங்கும்போது ஆட்டோ டிரைவர் அதிகம் துட்டு கேட்பாரோ என்று பயம். காலையில் குறித்த நேரத்தில் எழாமல் தூங்கிவிடுவோமோ என்று பயம். டிவியில் பாம்பைக் கண்டால், வெட்டும் அல்லது அடிதடி காட்சியைக் கண்டால், சாலையில் விபத்தைக் கண்டால், இரத்தத்தைக் கண்டால் என்று எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டே இருப்பார்கள். இந்த நோயால் உடல் அளவிலும் அவர்கள் வியர்வை, படபடப்பு, நடுக்கம், வேகமான இதயத்துடிப்பு சில நேரங்களில் மயக்கம் ஆகிய பாதிப்புகளை அடைவார்கள். பொதுவாக இந்நோய் மணமான பெண்களுக்கு வருகிற நோய். இந்நோயைப் போக்க ஒரே ஒரு மருந்துதான். அவர்கள் மன தைரியததை வளர்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும். என்ற எண்ணத்துடனும் கடவுள் நம்பிக்கையுடனும் இருந்தாலே போதும். தியானம் செய்தல், மெல்லிய இசையைக் கேட்டல், எல்லோரிடமும் சிரித்துப் பேசி மகிழ்தல் ஆகியவற்றுடன் எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

6 கருத்துகள்:

 1. .1 வாசனையே இல்லைன்னா அனோஸ்மியாதான்.//

  மூக்கின் உணர்வு திறன் பாதிப்புயும் அதனோடு தொடர்புடைய நோய் பற்றி விளக்கியுள்ளீர்கள்.


  2. பல்லேலக்கா... பல்லேலக்கா......//

  பல்லுப் போனால் சொல்லுப் போகும் என்பதனை விளக்கியுள்ளீர்கள். ஆனால் தினமும் இரண்டு வேளைகள் பல்லு விளக்கச் சொல்லி டாக்டர்கள் சொல்லுகிறார்களே, இதனாலும் பல்லின் வலிமை பாதிப்படையுமா?


  குண்டு ஆசாமிகளே ஜாக்கிரதை... ஆண்கள் ஸ்பெஷல்://

  ஆண்களுக்குப் பெண்களும் போட்டியாக... ரசித்தேன்.. இவ் வரிகள் நகைச்சுவையுடன் கலந்து மருத்துவக் கருத்துக்களை அனைவரிடமும் சென்று சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

  நீரிவிழு நோய் பற்றியும் அதன் விளைவுகளையும் விளக்கியுள்ளீர்கள்,

  பெண்களின் பயம் பற்றிய பகிர்வும் நல்லதொரு குறிப்பே..

  மருத்துவக் குறிப்புக்களை இயல்பான மொழி நடையில், கொஞ்சம் சுவாரசியமும் சேர்த்து நீங்கள் எழுதுவது தான் மேலும் மேலும் படிக்க வேண்டும் எனும் ரசனையினைக் கூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 2. எல்லோருக்கும் எல்லாம் புரியும் என்று நினைக்கிறீர்கள். அதென்ன ” திருச்சிக்கும் மதுரைக்கும் அல்லாமல்”? “நாற்பதைத் தாண்டினால் நாலைக் குறைக்கணும் “ எந்த நாலை. ? டிப்ஸ் நன்றாகவே உள்ளன.

  பதிலளிநீக்கு
 3. எவ்ளோ டிட் பிட்ஸ்! பல்லு ... சரிதான்... ;-)

  பதிலளிநீக்கு
 4. அபுள்ள நிரூபன்,
  தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. ஆனால் உணவு உண்டு குறைந்தது அரை மணி நேரம் கழித்தே பல் துலக்க வேண்டும்.

  தங்கள் வருகைக்கு பாராட்டுப் பொழிவுக்கு மிக்க நன்றி நிரூபன். மீள் வருகையை எதிர்நோக்கி...

  பதிலளிநீக்கு
 5. ம்ன்னிக்கவும் ஜி.என்.பி ஐயா. தாங்கள் சொல்வது சரி. நான் என் மனதுக்குப் புரிந்ததைப் பதிவிட்டு விட்டேனோ?
  திருச்சிக்கு மதுரைக்கு... சும்மா திரைப்படப் பாடல் வரி.

  அந்த நான்கு - மூன்று வெள்ளை (அரிசி, உப்பு, சர்க்கரை) ஒரு கொழுப்பு.

  நெய், எண்ணெய், தேங்காய் முதலிய கொழுப்புப் பொருட்கள்.
  குறைகள் சுட்டிக்காட்டும் போதே திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உண்மையும் பாசமும் கண்டிப்புமான தங்கள் கருத்துரையில் மனம் மகிழ்ந்து என்னைத் திருத்திக் கொண்டேன். இனி இது போல தெளிவற்று எழுதுவதைத் தவிர்க்கிறேன் ஐயா. இது போன்ற நல்ல அறிவுரைகளை எதிர்நோக்கி, நன்றியுடன்.... அன்புடன்..

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள RVS,
  நலமா? வருகை மகிழ்விக்கிறது. மனம் நன்றி கூறுகிறது.

  பதிலளிநீக்கு