“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 30 ஜூலை, 2012

டிசம்பர் 21 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!சென்ற இதழில் மாயன் காலண்டர் பற்றி அறிந்தோம். மாயன் காலண்டர் போலவே உலக அழிவைப் பற்றி கணித்துள்ள மற்றொரு தீர்க்கத் தரிசியின் கருத்துகளையும் இப்போது பார்க்கலாம்.


சுமார் நான்கரை நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுபவர் நாஸ்டர்டாமஸ். இவர் உலகம் முழுவதும் உள்ளவர்களால் தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பெற்றவர். இவரின் கருத்துகள் வரலாற்றுப் பதிவுகளாகத் திகழ்கின்றன. கருத்துகள் பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது கருத்துகளின் மீது இன்றளவும் நம்பிக்கைத் தொடர்கிறது. இவரது தொலைந்து போன புத்தகம் ஒன்று சமீபத்தில் கிடைத்துள்ளதாம். ’நாஸ்டர்டாமஸ் குவார்டெரெயின்ஸ்’ (NOSTRADAMUS QUATRAINS) என்னும் அவரது முந்தைய நூலில் குறிப்பிட்டுள்ள தீர்க்க தரிசனம் போல இந்நூலிலும் பல திர்க்க தரிசனங்கள் வரைபடங்களாக உள்ளன என்கின்றனர். அவற்றுள் சில வரைபடங்கள் உலக அழிவைப் பிரதிபளிப்பதாக உள்ளன என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதாவது நாஸ்டர்டாமஸின் நூலில் காணப்படும் ஏழு வரைபடங்கள் உலக அழிவைக் குறிப்பனவாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


1.  சூரியன், அதனடியில் ஒரு சிங்கம், .

2.  நட்சத்திர மண்டலத்தைக் குறிவைத்தபடி கையில் வில்லை ஏந்திய ஒரு மனிதன்.

3.  மூன்று தேய்பிறைகள் (கிரகனத்தைச் சந்தித்திருக்கின்ற நிலா).  

4.  ஒரு தேளும் அதன் தலைப்பகுதியில் வளைந்த வடிவமான கோடுகளும். இதனைத்தான் மில்கிவேயின் வடிவம் என்கின்றனர்  

5.  கையில் வாளை ஏந்திய ஒரு மனிதன். வாளை நேராகப் பிடித்திருக்கிறான். அதில் S என்னும் ஆங்கில எழுத்தைக் குறிப்பது போல ஒரு துணி சுற்றப்பட்டிருக்கிறது. (மில்கிவேயின் நட்சத்திர மண்டலம் ஆங்கில எழுத்து S போலக் காட்சியளிக்கும்).  

6.  வில்வீரன் ஒருவன் தனது வில்லில் அம்பைப் பூட்டி ஒரு பெண்ணைக் குறி பார்ப்பது போன்ற வரைபடம்.

7.  இதில் உள்ள ஒரு சக்கரம் காலச்சக்கரத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாம்.


1992 முதல் 2012 வரையான காலகட்டத்திற்கு நாஸ்டர்டாமஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அந்த வரைபடங்கள் காட்டுவதாகக் கூறுகின்றனர்.


வரைபடத்துடன் நான்கடி செய்யுட்களாக உள்ள பகுதியிலும்கூட இந்தக் காலக் கட்டம்தான் அதிகம் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. ஆதலால் தற்காப்புக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளதாக அந்த ஏழு வரைபடங்களைக் கொள்ளவேண்டும் என்று  அறிஞர்கள் கூறுகின்றனர்.


இதே செய்திக்கான குறிப்புகள் எகிப்தின் பிரமிடுகளிலும், மர்மமான ஒரு ஹெண்டே சிலுவையிலும் யூதர்களின் நாட்காட்டியிலும் காணலாகின்றன. இவை எல்லாவற்றிற்கும் சான்றாக நாஸ்டர்டாமஸின் எழுத்துகளும் விடை கூறுவது போல இருக்கின்றன என்கின்றனர்.


பூமியில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சூரிய கிரகனம் ஏற்படும். அது பூமி தன் இயல்பான புவியீர்ப்பு சக்தியை இழந்துவிட்டதோ என்று எண்ண வைக்கும். பூமி இருள் சூழ்ந்த இந்தக் கடலில் புதைந்துவிடுமோ என்றும் அஞ்சும் அளவு அபாயகரமானதாக அது இருக்கும். விண்ணிலிருந்து எரிகற்கள் பூமியில் விழும். தகவல் தொடர்பு முறை பாதிக்கப்படும். மின்சாரம் தொடர்பான எந்தப் பொருளும் வேலை செய்யாது. எண்ணெய் வளத் தட்டுப்பாடு, உயிரின  அழிவுகள், பயங்கரமான சுனாமிகள், அணு ஆயுத ஆபத்துகள் இவையெல்லாம் ஏற்படும் என்கின்றன.


இவற்றைப் பார்க்கும் போது இதுவரை ஏற்பட்ட இது போன்ற பேரழிவுகள் தற்செயலானவையா? இல்லை எல்லாமே இவற்றோடு தொடர்புடையவையா என்று நம்மிடம் பல வினாக்கள் எழுகின்றன. இந்த புராதன கணிப்புகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவற்றிலும் ஏதோ உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றனர் அறிஞர்கள்


  பூமியில் இருக்கும் எனர்ஜி என்று கூறப்படும் சக்தி அமைப்புகளின் எல்லை, வானிலை அமைப்புகளின் எல்லை அதாவது ஐம்பூதங்களின் எல்லை, பொருளாதார வீழ்ச்சி, உணவு உற்பத்தி, நீர் மேலாண்மை என்று எல்லா வகையிலும் விளிம்பில் இருக்கிறோம் என்பது நமக்கு கண்கூடு.


“எதிர்காலத்தில்

தங்கத்தை கொடுத்து தண்ணீர் 

வாங்க வேண்டிவரலாம்... 


அரசாங்கத்தால்

சம்பளத்துக்கு பதிலாய்

ஆளுக்கொரு போத்தல்(பாட்டில்)

தண்ணீர் வழங்கப்படலாம்....


ஒருபோத்தல் தண்ணீர் 

வைத்துள்ளவனுக்கே

திருமணம் நடக்கலாம்...


நாளை எந்த நேரமும்

எதுவும் நடக்கலாம்...

தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்..”


என்று ஒரு புதுக்கவிஞர் (கவிஞர் அஸ்மின்) சொல்லுவார். அதுபோல இச்சூழலில் அன்று உலகம் முழுவதும் அழியலாம் அல்லது பகுதி அழியலாம் அல்லது உருமாறலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் அறிவியலார். 


அழிவு என்றால் எப்படி நிகழும்? அந்த நாளில் கேலக்டிக் அலைன்மெண்ட் (GLACTIC ALINMENT) என்றொரு விண்வெளி நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.


சரி, கேலேக்டிக் அலைன்மெண்ட் என்றால் என்ன?  சூரியன் நட்சத்திர மண்டலத்தில் உள்ள மில்கிவேயில் இணைவதை கேலக்டிக் அலைன்மெண்ட் என்கிறது விண்ணியல் ஆய்வு.


நாஸ்டர்டாமஸ் வரைபடத்தில் ஒரு சூரியன், அதன் கீழ் ஒரு சிங்கம் உள்ளது. இந்த சிங்கம் என்பது சிம்ம ராசி. சூரியன் சிம்ம ராசியில் அல்லது கும்ப ராசியில் வரும்போது கேலக்டிக் அலைன்மெண்ட் நிகழும் என்பதாக அந்த வரைபடம் குறிக்கிறதாம். இருபத்தாறாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ஒரு அற்புதமான அதே வேளையில் ஆபத்தான நிகழ்வு இது.


இது போன்ற கேலக்டிக் அலைன்மெண்ட் முன்னர் நிகழ்ந்ததை மாயன்கள் கண்டு அறிந்ததாகக் குறிப்பு மாயன் காலண்டரில் காணலாகின்றது. மற்றும் அவர்களின் கோயில்களில், ஒரு கல் துவாரத்துக்குள் ஒரு பந்து நுழைவதாகப் பொறித்து வைத்துள்ளனர். இது கேலக்டிக் அலைன்மெண்ட் என்னும் விண்வெளி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதே என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமல்ல அவர்கள் விளையாடிய பந்து விளையாட்டு கூட இத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர். நாம் கூடைக்குள்  பந்தைப் போடும் பேஸ்கட் பால் போல ஒரு பாறைத் துவாரத்துக்குள் இரும்புப் பந்தைப் போட வேண்டும். அப்படி போடாத அணித் தலைவனின் தலை துண்டிக்கப் படும். இதில் என்ன விந்தையென்றால் காட்டு மிராண்டிகளின் இவ்விளையாட்டு கேலக்டிக் அலைன்மெண்ட்டுடன் தொடர்பு உடையது என்பதுதான்.


எது எப்படியோ, இந்தக் கேலக்டிக் அலைன்மெண்டை உலகம் வெப்பமயமாதலுடன் இணைத்துப் பார்க்கலாம். முன்னர் உலகலாவிய வெப்பமயமாதலால் பனி மலைகள் உருகத் தொடங்கியதையும் இதனோடு சேர்த்துப் பார்க்கின்றனர் ஆய்வர்கள். கடற்கரைப் பகுதிகளில் புயல், வெள்ளமும் உருவாகும்; கடலில் இருக்கும் மீன்கள் நெருப்பால் வெந்துவிடும்; பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். விண்வெளிப் புயல் ஏற்படும்.


இது போன்ற தாக்கங்கள் நாம் எப்போதோ எதிர் நோக்க ஆரம்பித்ததே. 2004 சுனாமி, 2011ல் ஜப்பான் சுனாமி, 2012 கத்ரினா புயல், தானே புயல், அமெரிக்காவின் இப்போது ஒரு வார காலமாக எரிந்து கொண்டிருக்கும் மலைக்காடுகள் இவையெல்லாம் உலக அழிவின் தொடக்கமாக இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தவில்லையா?


உலகம் அழியப்போகிறது என்னும் கூற்றை நூறு விழுக்காடு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நாம் இயற்கையை அழித்து நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ள எதிர்கால ஆபத்தை அவதானிக்காமல் இருக்க முடியாது. புறக்கணிக்கவும் இயலாது.


ஆக்கமும் அழிவும் இயற்கையால்தான் என்ற போதும் இயற்கையை அப்பாதையில் இட்டுச் சென்றது அல்லது செல்வது யார்? நம் சுயநலமே. பேராசையே. இயற்கையைக் காத்து உலக அழிவிலிருந்து நம்மையும் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மறந்தோம். அதனை நினைவு படுத்தும் இயற்கை சீற்றங்களே இந்த கேலக்டிக் அலைன்மெண்ட். அல்லது இந்த உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்று நாம் கொள்ள இடமுள்ளது.


சரி. உலக அழிவில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த அச்சுறுத்தலின் வழியாக மாயன் காலண்டர் எச்சரிப்பது எதனை? நாஸ்டர்டாமஸ் மற்றும் அறிவியலார் எச்சரிப்பது என்னவாக இருக்கும்.  


“புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு விஞ்ஞானப் போர்களும், முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; இதுவரை மனித குலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும் மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான்” என்று நம் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து அச்சுறுத்துவதையும் நாம் நினைத்துப் பார்க்கும் நேரமிது.


ஆகவே, இப்பெரும் விஞ்ஞானப் போரிலிருந்து காத்துக் கொள்ள, டிசம்பர் 21 சவாலை எதிர்கொள்ள, உலக அழிவில் இருந்து ஓரளவாவது தப்பித்துக் கொள்ள, உடனடியாக நாம் செய்ய வேண்டியவை பின்வரும் இவை.


கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க வேண்டும். வானிலைக் கட்டுப்பாட்டை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுக்காக்க வேண்டும். காடு, கழனிகளை அழிப்பதை நிறுத்தி புதியதாக உருவாக்க வேண்டும். வெப்ப மயமாக்கும் செயற்பாடுகளைக் குறைத்து உலகை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்தியா மட்டும் செய்தால் போதாது. அதிக அணு உலைகளையும் ஆலைகளையும் கொண்டுள்ள, பிற நாடுகளுக்கு அறிவுரை கூறுவதையே எப்போதும் தம் வாடிக்கையாகக் கொண்டுள்ள வல்லரசுகளான வளர்ந்த நாடுகளும் கடைபிடிக்க முன் வரவேண்டும். அப்போது இயற்கையின் சீற்றத்தில் இருந்து ஓரளவு நம்மைக் காத்துக் கொள்ளலாம்.(இக்கட்டுரை இம்மாத சோழநாடு இதழில் வெளியானது.

நன்றி சோழநாடு)           

வியாழன், 26 ஜூலை, 2012

டிசம்பர் 21 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!

198  days
4758   hours
285503  minutes
17130227   seconds
            இது என்ன என்று கண்களை அகல விரிப்பது புரிகிறதுஎனக்கும் கூட அச்சம் கலந்த ஆச்சரியம்தான்இந்தக் கட்டுரையை நான் எழுதத்  தொடங்கிய போது, உலகம் அழிய இன்னும் இருக்கக் கூடியதாக காட்டிய காலம்  இது.  198 நாட்கள் 4758 ணிகள்  285503 ிமிடங்கள் 17130227 நொடிகள். டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் 11 மணி 11 நிமிடம் 11 நொடிகளில் உலகம் அழிய இருப்பதாக மாயன் காலண்டர் அறிவித்த செய்தி  

        அன்று இரவு கடந்து, பொழுது விடியாது. கதிரவன் வானில் உதிக்காது. உலகம் தன் முடிவைச் சந்தித்தே தீரும்; பூமியில் மரண ஒலியும் அழுகையும் கேட்கும், என்று இன்று உள்ள கிரேக்க புராதன கலாச்சார அடையாளங்களில் சில குறிப்புகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன என்கின்றனர்.

இவை பரவலாக, தொலைக்காட்சியில், இதழ்களில் எல்லாம் வலம் வந்து கொண்டுஇருக்கின்றது. இது எந்த அளவு உண்மை என்பதை அறிய என்னோடு உங்களுக்கும் ஆவலாக இருக்கும்.

காலச்சக்கரம் தன் சுழற்சியை நிறுத்திக் கொள்ளுமா? நாட்கள் முடிந்து நாமும் முடிந்து விடுவோமா? அப்படியென்றால் அழிவு எப்படி நிகழும்? இப்படிப்பட்ட வினாக்கள் அடுக்கடுக்காக நம்மில் எழுந்து சற்று அச்சுறுத்துகின்றன.

        உலகம் அழியப் போகிறது என்று  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரர் கூறினர். அப்போது அந்த அச்சத்தால், பீதியால் அழிந்தவர்கள் பலர்.

        இதே போலத்தான் 2000ம் ஆண்டிலும் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும்; அதன் மூலம் உலகம் அழிந்து விடும் என்று கிளம்பிய புரளியால் இருக்கும்போதே அனுபவித்து விடுவோம் என்று பலரும், அதற்கு முன் நானே அழிந்து விடுகிறேன் என்று பலரும், பீதி முகத்தோடு பலரும் அலைந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். இப்போதும் சற்றேறக்குறைய அதே நிலைதான்.

அறிவியலாரும் சில பிரச்சனைகளுக்கு விடை தேடி, அது கிடைக்காத வேளையில் பண்டைய அல்லது புராதனத்தில் என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பிக்கின்றனர்.

        இப்போது உலகம் அழிவதாக பீதியைக் கிளப்பி விட்டது மாயன் காலண்டர். நமக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கில நாளிதழ் விட்டால் பாம்பு பஞ்சாங்கம். அது என்ன மாயன் காலண்டர். இந்த காலண்டரைக் கணித்தவர் யார்? பிரிண்ட் பண்ணியவர் யார்? எங்கு விற்கப்படுகின்றன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா (மாயன்) என்ற ஓர் இனம் இருந்தது. சுமார் 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனம் 15-ம் நூற்றாண்டில் அழிந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாகச் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்திருக்கின்றனர் என்கிறது வராலாறு.

நம் மகாபாரதத்திலும் மயன் என்று கட்டடக்கலை வல்லுநன் இருந்ததாகவும் அவனே பாண்டவர்களின் மாளிகையைக் கட்டியதாகவும் கேட்டிருக்கிறோம். மாயன் இனத்தாருக்கும் இந்த மகாபாரத மயனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது ஆராயத்தக்கது. இது ஒருபுறம் இருக்கட்டும்.

மாயன் நாகரிகம நம் ஆதிவாசிகள் என்றழைக்கப்பெறும் பழங்குடியினரின் நாகரிகம் போன்றது எனலாம். ஆனால் இவர்களது நாகரிகத்தில் மனிதனைப் பலிகொடுக்கும் முறை இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அறிவியல் தொலைநோக்குப் பார்வையும் அதே வேளையில் காட்டுமிராண்டித் தனமும் நிறைந்தவர்கள் இந்த மாயன்கள். கி.மு.2600 ல் தோன்றி உச்சத்தை அடைந்த இவர்களின் நாகரிகம் ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றத்தாலும், சில மூட நம்பிக்கைகளாலும் அங்காளி பங்காளி சண்டைகளாலும் முறையற்ற விவசாயம் முதலிய காரணிகளாலும் அழிந்து இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் இன்றும் சுமார் 6 இலட்சத்திற்கும் மேல் மாயன்கள் மெக்சிகோ, குவாத்திமாலா ஆகிய நாடுகளில் வசிப்பதாக கூறப்படுகின்றது.

இந்த மாயன் இனத்தினர் முக்காலமும் காட்டக்கூடிய நாட்காட்டியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மாயன் காலண்டர் என்றழைக்கப்படும் இந்த நாட்காட்டி இன்றும் மெக்ஸிகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் (MUSEO NATIONAL DE ANTROPOLOGIA)  பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் வியக்கத்தக்க விஷயம் இந்த நாட்காட்டியில் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வராத நாட்கள் என்று சில நாட்களை, வாழ்க்கையைச் சுதந்திரமாக ரசிக்க, கொண்டாட என்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். மாயன் நாட்காட்டியில் சூரிய வருடத்தின் கடைசி 5 நாட்கள் அடுத்த வருடத்திற்கான  மாற்றத்திற்கும் அதற்காகத் தயார் படுத்துவதற்காகவும் என்று கணக்கிடப் பட்டு அவை “பெயரில்லாத நாட்கள்என்று பெயரிடப்பட்டுள்ளன. பூமியின் அசைவைக் கணக்கிட்டு இந்தக் காலண்டரைக் கணித்துள்ளனர் என்பதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கானது இக்காலண்டர் என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அதிசயத் தகவல்.

கி.மு. 313 ல் தொடங்கிய இந்நாட்காட்டி டிசம்பர் 2012ஆம் ஆண்டு 21ம் தேதியுடன் முடிவடைவதாக உள்ளது. உடனே நம் நாட்காட்டியும் ஒரு ஆண்டு முடிந்ததும் முடிவடைகிறதே. அப்போது ஒவ்வொரு ஆண்டும் உலகம் அழிகிறது என்று கூறலாமா என்றெல்லாம் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கக் கூடாது.

ஆண்டுக்கொருமுறை அச்சடிக்கும் காலண்டர் போல அல்ல மாயன் காலண்டர். தேர்ந்த ஞானத்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்காலத்தைக் கண்டு சொன்னது. அதனால் அன்றோடு உலகமும் முடிந்துவிடும் என்கின்றனர். இதையும் அவர்கள் சும்மா ஏனோ தானோ என்று கூறவில்லை. கணக்குப் போட்டே கூறியுள்ளனர் என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

அதாவது சூரிய மண்டலத்திற்கு ஒரு வாரம் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம்.. கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நம்மவர்கள் நான்காகப் பிரித்துள்ளது போல மாயன் காலண்டரும் சூரியனின் ஒரு வாரத்தின் அல்லது பூமியின் 25,625 வருடங்களை ஐந்து காலக் கட்டங்களாகப் பிரிக்கிறது. நம்மவர்களின் கணக்குப் படி தற்போது கலியுகம் நடைபெறுகிறது. கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் தோன்றும் என்கிறது.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்று மடங்கு பெரியதான  திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.ன்றும் கூறப்படுகின்றது. (நன்றி விக்கிபீடியா)

நாம் இப்போது இறுதி யுகமாகிய கலியுகம் நடைபெறுகின்றது என்று கூறுவது போலவே, மாயன் காலண்டரும் இப்போது அவர்கள் கணக்குப்படி இறுதி யுகமான ஐந்தாவது யுகம் நடைபெறுகின்றது என்கின்றனர். அந்த ஐந்தாவது யுகத்தின் முடிவு நாள் தான் மேற்கூறிய 21.12.2012, 11.11.11.
(கலியுகம் அடுத்த  இதழில் தொடரும்)

(இந்தக் கட்டுரை சோழ நாடு ஜுலை மாத இதழில் இடம்பெற்றது. நன்றி சோழநாடு)

வியாழன், 19 ஜூலை, 2012

அம்மா வந்தாள்இந்தக் கதையின் பி டி எஃப்

http://www.mediafire.com/view/?860kq5x76gxeblo


            வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

            நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வளர்ச்சி வந்திருக்கும் என்பதை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பங்கு பெற்றால் கூட பனிரெண்டு இலட்சத்தை எட்டுவது சிரமம். ஆனால் நரேன் தன் வியாபாரத்தில் பனிரெண்டு கோடிகளை எளிதாகவே தாண்டியிருந்தான். இத்தனைக்கும் அவன் செய்தது அலாரம் வியாபாரம்தான். அப்படி என்ன விசித்திரமான அலாரம் என்று கேட்கிறீர்களா? திருடர்கள் கதவைத் திறந்தால் திறந்தவுடன் கத்தி, காட்டிக் கொடுக்குமே அந்த அலாரம். டோர் அலாரம் என்பார்களே அதுதான். திருடர்களிடம் இருந்து வீட்டைக் காக்கும் காவல் அதிகாரி அது.

அவன் அந்த வியாபாரத்தைத் தொடங்கிய போது யாரிடமோ வாங்கி தான் விற்றுக் கொண்டிருந்தான். வீடு வீடாக ஒரு நாள் முழுவதும் அலைந்தாலும் ஒரு அலாரம் விற்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். சலிப்புடன் திரும்புவான்


பூட்டிய வீட்டில் கொள்ளைஎன்று செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வந்ததைப் பார்த்தான். இவனுக்கு ஒரு யுக்தி உதித்தது. அந்தத் திருட்டுப் போன பகுதிகளில் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். செய்தித்தாள்களில் இந்தச் செய்தியைத் தேடிப் பிடித்துப் படிப்பான். திருட்டுப் போன பகுதிக்கு உடனே சென்று விடுவான். ‘கெட்டிக்காரன் பூட்டுக்கு எட்டுச் சாவி என்பது போல அவர்கள் அந்த அச்சத்தில் இருக்கும் போதே, தன் வியாபாரத்தை ஏக போகமாக முடித்து விடுவான். அப்பரமென்ன? திருடர்களுக்குத் திண்டாட்டம். இந்த அலாரப் புலிக்குக் கொண்டாட்டம்.

சிலர்இந்தச் சத்தம் போதாது. இன்னும் வால்யூமை அதிகப் படுத்திக் கொடுங்கள் என்றனர். சிலர் வேறு மாடல் வேண்டும் என்றனர். கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் யார் யார் எப்படி கேட்டாலும் அப்படியே செய்து கொடுக்க வேண்டி தானே அலாரம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினான். இப்போதெல்லாம் மொத்த ஆர்டர்கள்தான்வெளி நாடுகளுக்கு மட்டும் மாதத்திற்குப் பத்தாயிரம் டோர் அலாரம் ஏற்றுமதி ஆகின்றன. இதைத் தவிர உள்நாட்டு வியாபாரம் வேறு.

ஆனால் என்ன? அன்று வீடு வீடாக அலைந்ததால் வீடு வர வெள்ளி முளைத்து விடும். சுமார் 500 பேர் கொண்ட தொழிற்சாலையை நிர்வகிப்பது என்பது சும்மாவா. இப்போதும் அதே நிலைதான்.

            நரேன் தினமும் வர்ஷா தூங்கிய பின் வருவான். அவள் விழிப்பதற்கு முன் சென்று விடுவான். ஞாயிற்றுக் கிழமையில் அல்லது என்றாவது வர்ஷா சீக்கிரம் விழித்தாலோ தான் தன் அப்பாவைப் பார்ப்பாள். அம்மாவுடன் தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க முடியும். மற்ற நேரமெல்லாம் வர்ஷாவுக்கு ஒரே அடைக்கலம் சாந்திதான்.

சாந்தி ப்ரெத்யேகமாக வர்ஷாவைப் பார்த்துக் கொள்வதற்காகவே வந்தவள். அவர்கள் வீட்டிலேயே தங்கி வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளும் பதிமூன்று வயது பெண் அவள். அவள் திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள். அவளுக்கு இங்கு புதிய வசதி. புதிய வாழ்க்கை. அவசர அவசரமாக, அரையும் குறையுமாக வேலை முடிப்பாள். மற்ற நேரமெல்லாம் டிவியே கதி என்று அதன் முன்னால் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பாள்.

சில நேரம் சீரியலைப் பார்த்துக்கொண்டே வர்ஷாவின் மூக்கில் சோற்றை ஊட்டி விடுவாள். பாவம் குழந்தை தும்மி, இருமி.. தானே, கைக்கு எட்டாத வாஷ் பேசினில் ஸ்டூல் போட்டு ஏறி தன் சின்னஞ்சிறு கையால் மூக்கையும் முகத்தையும் கழுவிக் கொள்வாள். சில நேரங்களில் மியூசிக் பார்த்துக் கொண்டே ஜட்டி மாற்றி விடுகிறேன் என்று ஒரே கால் ஓட்டையில் இரண்டு கால்களையும் மாட்டி விட்டு விடுவாள். வர்ஷா திண்டாடி திணறி கழட்டி மீண்டும் தானே சரியாகப் போட்டுக்கொள்வாள். இப்படி தினம் தினம் குட்டி குட்டி சீரியல் கலாட்டாக்கள். ஆனால் அவளும் நல்ல பெண் தான். என்ன டி.வி. பைத்தியம் அவ்வளவுதான்.

அவள் அப்படி டி.வி பார்ப்பதனாலோ என்னவோ வர்ஷாவுக்கு டி.வி என்றாலே பிடிக்காமல் போனது. விளம்பரங்கள் வரும்போது மட்டும் கண்களைச் சிமிட்டாமல் பார்ப்பாள். ஆனால் சாந்தி விளம்பரங்கள் வந்தாலே சேனலை மாற்றிவிடுவாள்.

அம்மா அருகில் இல்லாத ஏக்கம், சாந்தி அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து வர்ஷா நளினியைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு சாக்கில் அழத்தொடங்குவாள்.

னக்கு மட்டும் ஏம்மா முடி நீளமா இல்லைஎன்று விளம்பரத்தைப் பார்த்து வர்ஷாவும் அதே கேள்வியை நளினியிடம் கேட்டு நச்சறிப்பாள்நளினியும்  “நானும் அந்த ஆண்ட்டி மாதிரி வேலைக்குப் போகிறேன்லம்மாஅதனாலதான்  தலைக்கு எண்ணெயெல்லாம் தேச்சி குளிப்பாட்டி விட நேரமில்லை. நீ வளந்து பெரியவளா ஆனதும் உன்னை மாதிரியே பெரிசா முடியும் வளத்து ஜடை பின்னிக்கலாம்என்று சொல்லி சமாதனப்படுத்துவாள்வர்ஷாவும் கோபத்துடன் பாய்கட் பண்ணிய தன் குட்டிக் கூந்தலைக் கோபத்துடன் பிய்த்துக்கொண்டு இதையேதான் நீ எப்பவும் சொல்லுவே, நான் எப்ப வளருவேன் என்று கண்ணீருடன் குதித்துக் கொண்டே கேட்பாள்இன்னும் இரண்டே வருடத்தில் வளந்துருவடா கண்ணுஎன்று நளினி கட்டியணைத்துச் சமாதானப்படுத்துவாள்.

இன்னொரு நாள்  ”எங்க ஸ்கூல்ல இன்னைக்கு ஸ்போர்ட் டே, நீங்க மட்டும் ஏம்மா வரவே மாட்டேங்கறீங்க? என்று  தொடங்குவாள்.அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? நீ நல்ல அம்மாவே இல்ல போ….என்று கோபித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குக் கீழே போய் உக்கார்ந்து கொள்வாள் வர்ஷா. கெஞ்சி கூத்தாடி அவளைச் சாப்பிட வைக்கும்போதே அவளுக்கும் தூக்கம் வந்துவிடும்நளினிக்கும் அரைத்தூக்கம் வந்துவிடும்.

தினந்தோறும் நளினி வந்தவுடன் வர்ஷாவிடமிருந்து சாந்தியைப் பற்றி ஒரு கம்ப்ளெயிண்டாவது இருக்கும். ஒரு அடமாவது இருக்கும். அன்று தொடங்கியது புது வித அடம். “அம்மா இந்த சாந்தி என்னோட கொஞ்ச நேரம் கூட விளையாட மாட்டேங்கறா. எனக்கு விளையாட ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்என்று லேசாகத்தான் அழ ஆரம்பித்தாள். எப்போதும் போல கூட அடம் கூட செய்யவில்லை.  
   
ஆனால் நளினிக்கு ஒரு அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல ஒரு கலக்கம். ஒரே குழப்பமாக இருந்தது. குழந்தை மூலமாக கடவுள் தன்னிடம் ஏதோ உரைத்ததாக உனர்ந்தாள். அவள் மனத்தில் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாது என்ற எண்ணம் முளை விட்டது.
அன்றும் நரேன் வழக்கம் போல லேட்டாகத்தான் வந்தான். ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனிடமும் ஒரு பரபரப்பு இருந்தது. வந்தவன் நளினி நான் பார்ட்டியில ஃபுல்லா பிடிச்சுட்டு வந்துட்டேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்; சீக்கிரம் வா ஒரு குட் நியுஸ் சொல்லனும்என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.

சாந்தி! இந்தா பால்என்று அவளுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து விட்டு நரேனுக்குப் பாலை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் நளினி. நரேன் பாய்ந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு என்னை வணிகர்கள் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்காங்கடாஎன்றான் மகிழ்ச்சியாக. நளினியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இவர்களின் துள்ளலில் பாலும் துள்ளிக் குதித்தது. நல்ல வேளை கீழே சிந்தவில்லை.

டேபிளில் பாலை வைத்த நளினி “அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். எனக்குத் தெரியும் நீங்க சாதிப்பீங்கன்னு….. இது எவ்வளவு பெரிய பெருமை…. உங்க உழைப்புக்குக் கெடச்ச பரிசுங்க இதுஎன்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் அரும்பியது. அட என்னடா செல்லம், சந்தோஷமான நேரத்துல அழற…… என்று அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தன் மடிமீது சாய்த்துக்கொண்டான். தன் இதழ்களால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.  அவள் முகத்தருகே குனிந்து, இதை நாம் எப்படிடா கொண்டாடலாம்? என்று கொஞ்சலாகக் கேட்டான்.

 “வர்ஷா வந்தப்பரந்தான் நமக்கு எல்லாம் வந்ததுன்னு நான் நெனக்கிறேன் நரேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? என்றாள் அவன் கைகளை மெல்ல வருடிக்கொண்டே.

அதிலென்ன சந்தேகம், நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு தெரிஞ்சதுக்கப்பரம் இந்த நல்ல முடிவை நீதானே தைரியமா சொன்னே. நானும் தலையாட்டினேன். வர்ஷாவும் வந்தா. கூடவே வசந்தத்தையும் கூட்டிட்டு வந்தா; சந்தோஷமா இருக்கோம். இப்ப என்னடா செல்லம் அதைப்பத்திஎன்றான் நெகிழ்வாக.

“அப்படின்னா அவ சந்தோஷமா இருக்கனுமா இல்லையா நரேன்?என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன்ஏன் அவளுக்கென்ன? என்ன நடந்துச்சு? தத்து எடுத்த விவரம் தெரிஞ்சு போச்சா?என்று படபடத்தான்.  

இல்ல….. இல்ல… அவளோட விளையாட யாருமே இல்லைன்னு அழறா. ஒரு தங்கச்சி வேணும்னு அடிக்கடி அடம் பிடிக்கறா. எனக்கும் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன். கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்திருக்கும் போது நாம ஏன் இன்னொரு குழந்தைக்கு நல்ல வசதியைச் செஞ்சு கொடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன்என்றாள் கெஞ்சலாக.

அப்பாடா கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன். அம்மா.. தாயே…. இதுக்கு நீங்க கெஞ்சவெல்லாம் வேண்டாம். அம்மா ஆணை… தட்டமுடியுமா? ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது…. என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது.. என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா? என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.

மறுநாள் நளினி வர்ஷாவிடம் உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவைக் கூட்டிட்டு வரப் போறோம். வாடா… வாடா செல்லம்…; சீக்கிரம் கிளம்பு..என்று வர்ஷாவைத் தயார் படுத்தினாள். ஹையா! என்று குதித்துக் கொண்டே வர்ஷா வேக வேகமாகக் கிளம்பியது.

வர்ஷாவுக்கு, விளையாடத் தனக்கு ஒரு துணை வருவதில் சொல்லத் தெரியாத சந்தோஷம். நளினிக்கு நல்ல காரியம் ஒன்னு செய்யப் போகிறாள் என்பதால் சொல்ல முடியாத சந்தோஷம். நரேனுக்கு நளினியின் ஆசையை நிறைவேற்றுவதில் அளவில்லாத சந்தோஷம். விஷ்ராந்தி இல்லத்திற்குள் நுழைந்த நளினி நரேன் தம்பதியினரைக் கண்டதும் இல்ல நிர்வாகிகளுக்கும் அதை விடவும் சந்தோஷம்.

நளினி கொண்டு போயிருந்த இனிப்பையும் டிரஸ்ஸையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தாள். அப்படியே வர்ஷாவின் தங்கையாக இருக்க, பொருத்தமான ஒரு குழந்தையையும் தேர்ந்தெடுத்தாள். அது நகத்தைக் கடித்தபடி நளினியைப் பார்த்து ஞே என்று விழித்தபடி நின்றிருந்தது.

பக்கத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவின் கருப்பும் வெள்ளையுமாக நீண்ட முடியைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு மட்டும் இவ்வளவு முடி இருக்கு…... எனக்கும் இப்படி வளத்துத் தருவீங்களா? என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
அவளை அழைத்தாள் நளினி. அருகில் வந்த வர்ஷாவிடம், “இந்தத் தங்கச்சியை உனக்குப் பிடிச்சிருக்காடா செல்லம்? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா என்று நளினி கேட்டாள்.

 “இல்லம்மா இந்த கிரேண்ட்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா என்றாள் ஓடிப் போய் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு. அம்மா இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா. பாட்டி வந்தா எனக்கு நிறைய கஹை சொல்வாங்க. நான் தூங்கும்போது என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. நிலாவைக் காட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா கஷாயம் வச்சுக் கொடுப்பாங்க. என் தலைமுடி நல்லா வளர மூலிகை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாங்க. தங்கச்சி பாப்பாவை விட இவங்க வந்தாங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க வரதுக்கு லேட்டானா கூட நான்  இவங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். இவங்க வந்தாங்கன்னா கிரேன் பேரண்ட் டே அன்னக்கு இவங்கள எங்க ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்கதான் எங்க பாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன். அதனால இந்தப் பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் பொலாம்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் வர்ஷா.

நளினி நரேனைப் பார்த்தாள். நரேன் லேசாகத் தலையை ஆட்டி சம்மதத்தைச் சொன்னான். பாட்டியும் வந்தாள் வர்ஷாவுக்கு.

வர்ஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்ற கமலாவை (பாட்டியை) ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நளினியும் நரேனும்.

வாங்க! வாங்க! கிரேன்மா நான் என் பொம்மையெல்லாம் காட்டறேன்என்று பாட்டியின் சுருக்கம் நிறைந்த கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே போனாள் வர்ஷா. பாட்டியும் குழந்தையாக அவள் பின்னே உள்ளே போனாள்.

ஒரு மகளைக் கொடுத்தான். இப்ப நமக்கு ஒரு அம்மாவக் கொடுத்திருக்கான். கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பான்னு சொல்லுவாங்க. நமக்கு ஒரு கதவை மூடிட்டு, ரெண்டு கதவைத் திறந்திருக்கான்ல நரேன் என்று நரேனின் காதில் ரகசியமாகச் சொன்னாள் நளினி.……….
  (இந்த வாரம் 25.07.12 நாளிட்ட குமுதம் இதழில் ‘அம்மா வந்தாள்’ என்னும் என் இந்தச் சிறுகதை பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

சுஜாதா முதலிய பெரிய பெரிய ஜாம்பவான்களின் எழுத்துகளைத் தாங்கி வந்த குமுதம் இதழில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மனம் கவர் ஓவியர் ஜெ (ஜெயராஜ்) அவர்களின் ஓவியம் என் கதையை அழகாக்கியுள்ளது என்பது மேலும் ஒரு மகிழ்ச்சி. நன்றி ஓவியர் ஜெ.

இந்தக் கதையைப் பிரசுரம் செய்த குமுதம் இதழுக்கும் இதழாசிரியருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
 )