“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

அக்டோபர் 13, 2013 தினமலர் - பெண்கள் மலரில் இடம்பெற்ற என் சிறுகதை.


அவள் சொன்ன அடையாளம்
ஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் தாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் சத்தம் அவ நெஞ்சுக்குள்ளே கேக்குது.
ஆத்தாடி, இது என்ன? புருசன பஞ்சாயத்துல வச்சு தூக்கிக் கொடுத்தப்போ கூட இப்படி அடிச்சுக்காத நெஞ்சு இப்ப இப்படி படார் படார்னு அடிச்சுக்குதே”னு அவ வாய் முனுமுனுக்குது. குளம் நெறஞ்சு கரைய ஒடச்சிட்டு தண்ணி ஓடியாறது மாதிரி அவ கண்ணுக் குளம் நெறஞ்சு கண்ணீர் ஓடியாறது.
ஏலே சோலே எங்கினே விடிகாலையிலே கெளம்பிட்டே, இம்புட்டு வெரசா போறவ” என்று கேள்வி கேட்டு அரசாணி அவ முன்னால நிற்கிறா.
தனக்கு முன்னால ஒருத்தி நின்னதோ, அவ கேள்வி கேட்டதோ எதுவும் தெரியாமல், காத்துல கரஞ்ச சத்தமும், கண்ணுல தெரிஞ்ச உருவமும் மறைய, எட்டி நடை போட்டா சோலையம்மா. 
”என்னத்த காணாததக் காணப் போறா இவ! ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது? சித்தபிரம்ம பிடித்தவளா நடந்துகிட்டு இருக்கிறா.
நெத்தியில இறங்கிய வேர்வை புருவத்தில் எறங்கி,  கண்ணீரோட சேந்து வடியுது. இந்தத் தண்ணியில வெள்ளாமை செஞ்சிருந்தா ஒரு ஊரே ஒரு வருசம் ஒக்கார்ந்து சாப்படலாம்.
முகத்தில வடியற வேர்வையைத் தொடைக்க இழுத்து சொறுகின முந்தானையை அவள அறியாமலேயே அவ கை எடுக்குது. ஆனா தொடக்காமயே மறுபடியும் சொருகுது. வெடித்துச் செதர்ற பாறைங்க எங்கெங்கோ போயி நொடியில் மண்ணுக்கே திரும்புறது மாதிரி அவ நெனப்புங்க எல்லாம் எங்கேயோ போனாலும் போலீஸ்காரர் சொன்ன அந்த சேதிக்கே திரும்பத் திரும்ப வந்து நிக்குது.
புள்ளயோட வயசக் கூடச் சொல்லத் தெரியாத பெத்தவ அவ. நம்ம புள்ளக்கு ஒம்பது வயசு இருக்குமா, இல்ல பத்து வயசு இருக்குமா” ன்னு நெனச்சுப் பார்த்தவ, பக்கத்து வீட்டு மாரியம்மாவும் அவளும் ஒரே மாசத்துல புள்ள பெத்தவங்க. அவ புள்ள இசக்கி வயசுதானே நம்ம புள்ளக்கும் இருக்கும். அவ ஒரு வாரத்துக்கு முன்னே பேசும்போது “கழுதெக்குப் பத்து வயசு ஆவுது; களச்சு வூட்டுக்கு வர்ற ஆத்தா அப்பனுக்கு ஒரு கொவள தண்ணி மோந்துத் தரத் துப்பில்ல” ன்னு சொல்லி பொலம்பினது நெனப்பு வர நம்ம புள்ளக்கும் பத்து வயசுதானே இருக்கும். இப்ப எம்புட்டு வளந்திருக்கும்? இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமா?னு நெனச்சிக்கிட்டே நடைய எட்டிப் போட்டா.
கால் முன்னாடி எட்டு வச்சாலும் மனசு என்னமோ பின்னாடிதான் எட்டு வச்சு போய்ட்டு இருக்கு அவளுக்கு. கொழந்த பொறந்தப்ப, அது கெவர்மெண்ட் ஆசுபத்திரி. இவ மயக்கம் தெளிஞ்சு கண்ணத்தொறந்து பாத்தப்ப, கொழந்த பொறந்துடுச்சும்மான்னு டாக்டரு சொன்னது, நர்சுங்கல்லாம் இவளப் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிட்டே அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் போனது, “கொழந்த நல்லாத்தான் லச்சனமா  அவுக அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருக்கு, ஆனா இப்படி ஆயிடுச்ச்சே”ன்னு பாத்தவங்க எல்லாரும் சொன்னது, மாடசாமி ஒத்தப் பார்வையில நெருப்ப அள்ளிக் கொட்டிட்டு ஆசுபத்திரியை விட்டு போனது எல்லாம் அடுக்கடுக்கா நினைவுக்கு வருது. ஒரு நொடியில் ஓராயிரம் நெனப்புகள அசை போடும் வாமனமா வளருது அவ மனசு.
அன்னக்கு அப்படித்தான் குழந்தையைக் குளிப்பாட்டி, அதுக்குப் பொட்டு வச்சு, கண்ணே, எங்கண்மணியே உங்கப்பன் உன்னக்காணா பாவியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே தொட்டில்ல போட்டுட்டு, குறுநொய்யைப் போட்டு கஞ்சியும் சோறுமா வடிச்சி, தொட்டுக்க உப்பு, பச்சமொளகா, புளி சேத்து ஒரு துவையல அரைச்சு கஞ்சியயும் துவையலையும் தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு வந்து தொட்டிலைப் பார்த்தா, அங்க புள்ளையக் காணோம். குய்யோ முறையோன்னு அழுதது, ஊரு முழுக்க கொழந்தையைத் தேடி அழுத்தது, அப்பறம் நாள், வாரம், மாசம், வருசம்னு புள்ள நெனப்ப மனசு நெறையவும், கஞ்சிய வயிறு கொறையவும் வச்சிட்டு இத்தனை வருசத்தை ஓட்டினதெல்லாம் நெனச்சிகிட்டே வந்தவ எப்படித்தான் இவ்வளவு வெரசா நடந்தான்னே தெரியாம போலிசு டேசனுக்கு வந்து சேந்துட்டா..
நாந்தான் சோலையம்மா, எங்கொழந்த கெடச்சிருக்குன்னு சொன்னீங்களே.. எங்கே? எங்கே? எங்கே? ன்னு படபடப்பா கேட்டா.
போலிசுகாரர் “ஒங்குழந்தைக்கு என்ன அடையாளம்னு சொல்லும்மா” ன்னு கேட்க, அவ கண்ணு முன்னாடி வருது பத்து வருசத்துக்கு முன்னால நடந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்து.
பஞ்சாயத்துல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்துரும் போல பிதுங்க, வேட்டிய மடிச்சு கட்டி, நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறப்பா மாடசாமி வந்து நின்னது, வெரவா ஒரு முடிவுக்கு வாங்கப்புன்னு ஊர்  பெருசுங்க சொன்னது, பொட்டுல அரைஞ்ச மாதிரி அவன் அந்தப் புள்ளய அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வந்தா வச்சு வாழுறேன்னு மாடசாமி சொன்னது, கண்ணுல கொடங்கொடமா தண்ணி கொட்ட, நமக்குன்னு பொறந்தது, அத எப்படி அனாதையா விடறதுன்னு அவ அழுதது, அதற்கு அவன் கை, கால் இல்லாம பெத்திருந்தாலும் பரவால்ல வளத்துக்கலாம், சான் புள்ளயினாலும் ஆண் புள்ளன்னு சொல்லிக்கலாம், ஊமை குருடா பொறந்து இருந்தாலும் ஒன்னுமில்லாத்துக்கு ஒரு ஊமைப் பொண்ணுனு சொல்லி வளத்துக்கலாம். ரெண்டுலயும் சேத்துக்க முடியாத இந்தக் கழுத பெத்த புள்ளய என்ன பொறப்புன்னு சொல்லி வச்சுக்கிறது? என் முடிவ நா சொல்லிட்டேன். அவ புள்ளய விட்டுட்டு வரதுன்னா வரட்டும். இல்லாட்டி அத்துக்கிட்டு போகட்டும்னு சொன்னது, அவ அழுகையோட ஆனால் அழுத்தமா “அவருக்கு நா இல்லாட்டி வேற ஒருத்தி வருவா, இந்தப் புள்ளக்கி என்னவிட்டா யாரு தொண, நா எம்புள்ளயோடவே இருந்துக்கிறேன்” என்று சொல்லி தாலியை அறுத்துக் கொடுத்துட்டு வந்தது, எல்லாம் ஒரு சினிமாவா அவ கண்ணுல வர, அவ அப்படியே கல்லா நிக்கறா.
  போலீஸ்காரர் “ஏம்மா என்ன அடையாளம்னு கேட்டா எதோ லச்ச ரூவா குடுத்துட்டு புள்ளய கூட்டிட்டுப் போன்னு சொன்ன  மாதிரி செலயா நிக்கறே” என்று மீண்டும் ஒரு அதட்டு போட்டார்.
இத விட வேற என்ன அடையாளத்தை அவளால பெருசா சொல்லிட முடியும்? தன் பிள்ளையை ஆம்பளையா பொம்பளையான்னே சொல்ல முடியாத அவ, நான் பொம்பள போலீசுகிட்ட பேசனும்” னு சொன்னா.
ஏம்மா ஆம்பிளகிட்டயே பேசாத ஊருல பொறந்த மாதிரி பன்றே, சொல்லும்மா அடையாளத்தை என்று மீண்டும் அவர் கத்த, அவளுக்கு வாயிலிருந்து வார்த்தகள் வரல்ல. கண்ணுல இருந்து தண்ணிதான் வருது.
அப்போ அந்தப் பக்கமா ஒரு பெண் போலிசு வர,, அவ ஒடிப்போய் அவங்க காதுல ஏதோ சொல்ல, அவங்க சங்கடத்தோட, திருதிருன்னு முழிச்சி கிட்டிருந்த அந்தக் கொழந்தையைத் தன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.  

வியாழன், 19 ஜூலை, 2012

அம்மா வந்தாள்



இந்தக் கதையின் பி டி எஃப்

http://www.mediafire.com/view/?860kq5x76gxeblo


            வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

            நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வளர்ச்சி வந்திருக்கும் என்பதை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பங்கு பெற்றால் கூட பனிரெண்டு இலட்சத்தை எட்டுவது சிரமம். ஆனால் நரேன் தன் வியாபாரத்தில் பனிரெண்டு கோடிகளை எளிதாகவே தாண்டியிருந்தான். இத்தனைக்கும் அவன் செய்தது அலாரம் வியாபாரம்தான். அப்படி என்ன விசித்திரமான அலாரம் என்று கேட்கிறீர்களா? திருடர்கள் கதவைத் திறந்தால் திறந்தவுடன் கத்தி, காட்டிக் கொடுக்குமே அந்த அலாரம். டோர் அலாரம் என்பார்களே அதுதான். திருடர்களிடம் இருந்து வீட்டைக் காக்கும் காவல் அதிகாரி அது.

அவன் அந்த வியாபாரத்தைத் தொடங்கிய போது யாரிடமோ வாங்கி தான் விற்றுக் கொண்டிருந்தான். வீடு வீடாக ஒரு நாள் முழுவதும் அலைந்தாலும் ஒரு அலாரம் விற்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். சலிப்புடன் திரும்புவான்


பூட்டிய வீட்டில் கொள்ளைஎன்று செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வந்ததைப் பார்த்தான். இவனுக்கு ஒரு யுக்தி உதித்தது. அந்தத் திருட்டுப் போன பகுதிகளில் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். செய்தித்தாள்களில் இந்தச் செய்தியைத் தேடிப் பிடித்துப் படிப்பான். திருட்டுப் போன பகுதிக்கு உடனே சென்று விடுவான். ‘கெட்டிக்காரன் பூட்டுக்கு எட்டுச் சாவி என்பது போல அவர்கள் அந்த அச்சத்தில் இருக்கும் போதே, தன் வியாபாரத்தை ஏக போகமாக முடித்து விடுவான். அப்பரமென்ன? திருடர்களுக்குத் திண்டாட்டம். இந்த அலாரப் புலிக்குக் கொண்டாட்டம்.

சிலர்இந்தச் சத்தம் போதாது. இன்னும் வால்யூமை அதிகப் படுத்திக் கொடுங்கள் என்றனர். சிலர் வேறு மாடல் வேண்டும் என்றனர். கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் யார் யார் எப்படி கேட்டாலும் அப்படியே செய்து கொடுக்க வேண்டி தானே அலாரம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினான். இப்போதெல்லாம் மொத்த ஆர்டர்கள்தான்வெளி நாடுகளுக்கு மட்டும் மாதத்திற்குப் பத்தாயிரம் டோர் அலாரம் ஏற்றுமதி ஆகின்றன. இதைத் தவிர உள்நாட்டு வியாபாரம் வேறு.

ஆனால் என்ன? அன்று வீடு வீடாக அலைந்ததால் வீடு வர வெள்ளி முளைத்து விடும். சுமார் 500 பேர் கொண்ட தொழிற்சாலையை நிர்வகிப்பது என்பது சும்மாவா. இப்போதும் அதே நிலைதான்.

            நரேன் தினமும் வர்ஷா தூங்கிய பின் வருவான். அவள் விழிப்பதற்கு முன் சென்று விடுவான். ஞாயிற்றுக் கிழமையில் அல்லது என்றாவது வர்ஷா சீக்கிரம் விழித்தாலோ தான் தன் அப்பாவைப் பார்ப்பாள். அம்மாவுடன் தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க முடியும். மற்ற நேரமெல்லாம் வர்ஷாவுக்கு ஒரே அடைக்கலம் சாந்திதான்.

சாந்தி ப்ரெத்யேகமாக வர்ஷாவைப் பார்த்துக் கொள்வதற்காகவே வந்தவள். அவர்கள் வீட்டிலேயே தங்கி வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளும் பதிமூன்று வயது பெண் அவள். அவள் திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள். அவளுக்கு இங்கு புதிய வசதி. புதிய வாழ்க்கை. அவசர அவசரமாக, அரையும் குறையுமாக வேலை முடிப்பாள். மற்ற நேரமெல்லாம் டிவியே கதி என்று அதன் முன்னால் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பாள்.

சில நேரம் சீரியலைப் பார்த்துக்கொண்டே வர்ஷாவின் மூக்கில் சோற்றை ஊட்டி விடுவாள். பாவம் குழந்தை தும்மி, இருமி.. தானே, கைக்கு எட்டாத வாஷ் பேசினில் ஸ்டூல் போட்டு ஏறி தன் சின்னஞ்சிறு கையால் மூக்கையும் முகத்தையும் கழுவிக் கொள்வாள். சில நேரங்களில் மியூசிக் பார்த்துக் கொண்டே ஜட்டி மாற்றி விடுகிறேன் என்று ஒரே கால் ஓட்டையில் இரண்டு கால்களையும் மாட்டி விட்டு விடுவாள். வர்ஷா திண்டாடி திணறி கழட்டி மீண்டும் தானே சரியாகப் போட்டுக்கொள்வாள். இப்படி தினம் தினம் குட்டி குட்டி சீரியல் கலாட்டாக்கள். ஆனால் அவளும் நல்ல பெண் தான். என்ன டி.வி. பைத்தியம் அவ்வளவுதான்.

அவள் அப்படி டி.வி பார்ப்பதனாலோ என்னவோ வர்ஷாவுக்கு டி.வி என்றாலே பிடிக்காமல் போனது. விளம்பரங்கள் வரும்போது மட்டும் கண்களைச் சிமிட்டாமல் பார்ப்பாள். ஆனால் சாந்தி விளம்பரங்கள் வந்தாலே சேனலை மாற்றிவிடுவாள்.

அம்மா அருகில் இல்லாத ஏக்கம், சாந்தி அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து வர்ஷா நளினியைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு சாக்கில் அழத்தொடங்குவாள்.

னக்கு மட்டும் ஏம்மா முடி நீளமா இல்லைஎன்று விளம்பரத்தைப் பார்த்து வர்ஷாவும் அதே கேள்வியை நளினியிடம் கேட்டு நச்சறிப்பாள்நளினியும்  “நானும் அந்த ஆண்ட்டி மாதிரி வேலைக்குப் போகிறேன்லம்மாஅதனாலதான்  தலைக்கு எண்ணெயெல்லாம் தேச்சி குளிப்பாட்டி விட நேரமில்லை. நீ வளந்து பெரியவளா ஆனதும் உன்னை மாதிரியே பெரிசா முடியும் வளத்து ஜடை பின்னிக்கலாம்என்று சொல்லி சமாதனப்படுத்துவாள்வர்ஷாவும் கோபத்துடன் பாய்கட் பண்ணிய தன் குட்டிக் கூந்தலைக் கோபத்துடன் பிய்த்துக்கொண்டு இதையேதான் நீ எப்பவும் சொல்லுவே, நான் எப்ப வளருவேன் என்று கண்ணீருடன் குதித்துக் கொண்டே கேட்பாள்இன்னும் இரண்டே வருடத்தில் வளந்துருவடா கண்ணுஎன்று நளினி கட்டியணைத்துச் சமாதானப்படுத்துவாள்.

இன்னொரு நாள்  ”எங்க ஸ்கூல்ல இன்னைக்கு ஸ்போர்ட் டே, நீங்க மட்டும் ஏம்மா வரவே மாட்டேங்கறீங்க? என்று  தொடங்குவாள்.அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? நீ நல்ல அம்மாவே இல்ல போ….என்று கோபித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குக் கீழே போய் உக்கார்ந்து கொள்வாள் வர்ஷா. கெஞ்சி கூத்தாடி அவளைச் சாப்பிட வைக்கும்போதே அவளுக்கும் தூக்கம் வந்துவிடும்நளினிக்கும் அரைத்தூக்கம் வந்துவிடும்.

தினந்தோறும் நளினி வந்தவுடன் வர்ஷாவிடமிருந்து சாந்தியைப் பற்றி ஒரு கம்ப்ளெயிண்டாவது இருக்கும். ஒரு அடமாவது இருக்கும். அன்று தொடங்கியது புது வித அடம். “அம்மா இந்த சாந்தி என்னோட கொஞ்ச நேரம் கூட விளையாட மாட்டேங்கறா. எனக்கு விளையாட ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்என்று லேசாகத்தான் அழ ஆரம்பித்தாள். எப்போதும் போல கூட அடம் கூட செய்யவில்லை.  
   
ஆனால் நளினிக்கு ஒரு அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல ஒரு கலக்கம். ஒரே குழப்பமாக இருந்தது. குழந்தை மூலமாக கடவுள் தன்னிடம் ஏதோ உரைத்ததாக உனர்ந்தாள். அவள் மனத்தில் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாது என்ற எண்ணம் முளை விட்டது.
அன்றும் நரேன் வழக்கம் போல லேட்டாகத்தான் வந்தான். ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனிடமும் ஒரு பரபரப்பு இருந்தது. வந்தவன் நளினி நான் பார்ட்டியில ஃபுல்லா பிடிச்சுட்டு வந்துட்டேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்; சீக்கிரம் வா ஒரு குட் நியுஸ் சொல்லனும்என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.

சாந்தி! இந்தா பால்என்று அவளுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து விட்டு நரேனுக்குப் பாலை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் நளினி. நரேன் பாய்ந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு என்னை வணிகர்கள் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்காங்கடாஎன்றான் மகிழ்ச்சியாக. நளினியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இவர்களின் துள்ளலில் பாலும் துள்ளிக் குதித்தது. நல்ல வேளை கீழே சிந்தவில்லை.

டேபிளில் பாலை வைத்த நளினி “அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். எனக்குத் தெரியும் நீங்க சாதிப்பீங்கன்னு….. இது எவ்வளவு பெரிய பெருமை…. உங்க உழைப்புக்குக் கெடச்ச பரிசுங்க இதுஎன்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் அரும்பியது. அட என்னடா செல்லம், சந்தோஷமான நேரத்துல அழற…… என்று அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தன் மடிமீது சாய்த்துக்கொண்டான். தன் இதழ்களால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.  அவள் முகத்தருகே குனிந்து, இதை நாம் எப்படிடா கொண்டாடலாம்? என்று கொஞ்சலாகக் கேட்டான்.

 “வர்ஷா வந்தப்பரந்தான் நமக்கு எல்லாம் வந்ததுன்னு நான் நெனக்கிறேன் நரேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? என்றாள் அவன் கைகளை மெல்ல வருடிக்கொண்டே.

அதிலென்ன சந்தேகம், நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு தெரிஞ்சதுக்கப்பரம் இந்த நல்ல முடிவை நீதானே தைரியமா சொன்னே. நானும் தலையாட்டினேன். வர்ஷாவும் வந்தா. கூடவே வசந்தத்தையும் கூட்டிட்டு வந்தா; சந்தோஷமா இருக்கோம். இப்ப என்னடா செல்லம் அதைப்பத்திஎன்றான் நெகிழ்வாக.

“அப்படின்னா அவ சந்தோஷமா இருக்கனுமா இல்லையா நரேன்?என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன்ஏன் அவளுக்கென்ன? என்ன நடந்துச்சு? தத்து எடுத்த விவரம் தெரிஞ்சு போச்சா?என்று படபடத்தான்.  

இல்ல….. இல்ல… அவளோட விளையாட யாருமே இல்லைன்னு அழறா. ஒரு தங்கச்சி வேணும்னு அடிக்கடி அடம் பிடிக்கறா. எனக்கும் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன். கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்திருக்கும் போது நாம ஏன் இன்னொரு குழந்தைக்கு நல்ல வசதியைச் செஞ்சு கொடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன்என்றாள் கெஞ்சலாக.

அப்பாடா கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன். அம்மா.. தாயே…. இதுக்கு நீங்க கெஞ்சவெல்லாம் வேண்டாம். அம்மா ஆணை… தட்டமுடியுமா? ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது…. என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது.. என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா? என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.

மறுநாள் நளினி வர்ஷாவிடம் உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவைக் கூட்டிட்டு வரப் போறோம். வாடா… வாடா செல்லம்…; சீக்கிரம் கிளம்பு..என்று வர்ஷாவைத் தயார் படுத்தினாள். ஹையா! என்று குதித்துக் கொண்டே வர்ஷா வேக வேகமாகக் கிளம்பியது.

வர்ஷாவுக்கு, விளையாடத் தனக்கு ஒரு துணை வருவதில் சொல்லத் தெரியாத சந்தோஷம். நளினிக்கு நல்ல காரியம் ஒன்னு செய்யப் போகிறாள் என்பதால் சொல்ல முடியாத சந்தோஷம். நரேனுக்கு நளினியின் ஆசையை நிறைவேற்றுவதில் அளவில்லாத சந்தோஷம். விஷ்ராந்தி இல்லத்திற்குள் நுழைந்த நளினி நரேன் தம்பதியினரைக் கண்டதும் இல்ல நிர்வாகிகளுக்கும் அதை விடவும் சந்தோஷம்.

நளினி கொண்டு போயிருந்த இனிப்பையும் டிரஸ்ஸையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தாள். அப்படியே வர்ஷாவின் தங்கையாக இருக்க, பொருத்தமான ஒரு குழந்தையையும் தேர்ந்தெடுத்தாள். அது நகத்தைக் கடித்தபடி நளினியைப் பார்த்து ஞே என்று விழித்தபடி நின்றிருந்தது.

பக்கத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவின் கருப்பும் வெள்ளையுமாக நீண்ட முடியைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு மட்டும் இவ்வளவு முடி இருக்கு…... எனக்கும் இப்படி வளத்துத் தருவீங்களா? என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
அவளை அழைத்தாள் நளினி. அருகில் வந்த வர்ஷாவிடம், “இந்தத் தங்கச்சியை உனக்குப் பிடிச்சிருக்காடா செல்லம்? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா என்று நளினி கேட்டாள்.

 “இல்லம்மா இந்த கிரேண்ட்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா என்றாள் ஓடிப் போய் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு. அம்மா இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா. பாட்டி வந்தா எனக்கு நிறைய கஹை சொல்வாங்க. நான் தூங்கும்போது என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. நிலாவைக் காட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா கஷாயம் வச்சுக் கொடுப்பாங்க. என் தலைமுடி நல்லா வளர மூலிகை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாங்க. தங்கச்சி பாப்பாவை விட இவங்க வந்தாங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க வரதுக்கு லேட்டானா கூட நான்  இவங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். இவங்க வந்தாங்கன்னா கிரேன் பேரண்ட் டே அன்னக்கு இவங்கள எங்க ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்கதான் எங்க பாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன். அதனால இந்தப் பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் பொலாம்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் வர்ஷா.

நளினி நரேனைப் பார்த்தாள். நரேன் லேசாகத் தலையை ஆட்டி சம்மதத்தைச் சொன்னான். பாட்டியும் வந்தாள் வர்ஷாவுக்கு.

வர்ஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்ற கமலாவை (பாட்டியை) ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நளினியும் நரேனும்.

வாங்க! வாங்க! கிரேன்மா நான் என் பொம்மையெல்லாம் காட்டறேன்என்று பாட்டியின் சுருக்கம் நிறைந்த கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே போனாள் வர்ஷா. பாட்டியும் குழந்தையாக அவள் பின்னே உள்ளே போனாள்.

ஒரு மகளைக் கொடுத்தான். இப்ப நமக்கு ஒரு அம்மாவக் கொடுத்திருக்கான். கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பான்னு சொல்லுவாங்க. நமக்கு ஒரு கதவை மூடிட்டு, ரெண்டு கதவைத் திறந்திருக்கான்ல நரேன் என்று நரேனின் காதில் ரகசியமாகச் சொன்னாள் நளினி.……….




  (இந்த வாரம் 25.07.12 நாளிட்ட குமுதம் இதழில் ‘அம்மா வந்தாள்’ என்னும் என் இந்தச் சிறுகதை பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

சுஜாதா முதலிய பெரிய பெரிய ஜாம்பவான்களின் எழுத்துகளைத் தாங்கி வந்த குமுதம் இதழில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மனம் கவர் ஓவியர் ஜெ (ஜெயராஜ்) அவர்களின் ஓவியம் என் கதையை அழகாக்கியுள்ளது என்பது மேலும் ஒரு மகிழ்ச்சி. நன்றி ஓவியர் ஜெ.

இந்தக் கதையைப் பிரசுரம் செய்த குமுதம் இதழுக்கும் இதழாசிரியருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
 )




செவ்வாய், 27 ஜூலை, 2010

அவன் பெயர் ரவிவர்மன்.....(சிறுகதை)


அவன் பெயர் ரவிவர்மன்....(சிறுகதை)

     வான்மதி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில் ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள் கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச் சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால  இன்பத்தை எண்ணீத்துடிக்கும் மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால் தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.

     இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல் இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலக்கூடத்தில் இளங்கோவடிகள், ஊர் முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப் போல அவன்தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் பச் சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள் நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத் தன் கண்களுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

     இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, தமிழரின் முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில் முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக் கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால் ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு  கண்களையும் இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.

           அச்சத்திலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த உதயாவின் முகத்தை அலைகளின் ஓசை ஆரவாரமாக அவள் காதில் ஒலித்தது. இரண்டாவது முறை பூம்புகார் போனபோது அவளுக்கும் ஆதவனுக்கும் ஏற்பட்ட ஊடல் காட்சி நிழலாடுகிறது அள் கண்களில். அலையின் ஓசை, மக்கள் கூட்டம், பேச்சு சத்தம் இவற்றினிடையில் காதலர்கள் ஒரு கட்டுப்பாடின்றி நடந்து கொண்ட முறை, அதனைக் கண்டு தான் அறுவறுப்பு அடைந்து கோபத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றது, அவன் பார்வை அங்கு சென்றுவிடாமல் அவனைத்திருப்பி அழைத்து வந்தது, ஏன் தான் இளைஞர்கள் இப்படி நாகரிகமின்றி நடந்து கொள்கிறார்களோ என்று புலம்பிய போது, அவன் நீ மட்டும் பார்த்துட்டே அந்தக் காட்சியை நான் பார்க்க வேண்டாமா? என்று போவது போல அடியெடுத்து வைக்க, பளார் என்று அவன் முதுகில் ஒரு அடிகொடுத்து அவனை இழுத்து வந்தது, பின்பு இவ்வளவு அழகான இடத்தின் அழகை இவர்கள் கெடுக்கிறார்களே என்று இருவரும் வருத்தப்பட்டது, முதல் வேலையாக பத்திரிகையில் இதனைப்பற்றி எழுத வேண்டும் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தது என்று அலை அலையாக நினைவுகள் மேலெழ, கடலலையில்தான் இந்த நினைவலைகளைக் கரைக்க வேண்டும் என்று கடலை நிமிர்ந்து பார்த்த போது, தொலைவில் ஓர் உருவம் கடலுக்குள் அஞ்சி அஞ்சி இறங்குவது தெரிந்தது.

     இவள் இதயம் திக் திக் கென்று அடித்துக்கொண்டது. இன்னொரு தற்கொலையா? அது ஆணா பெண்ணா? எதுவும் தெரியவில்லையே. காப்பாற்றுவோமா? காப்பாற்ற நமக்கென்ன அறுகதை இருக்கிறது? நரக வேதனையில் வாழ்வது எத்தனை கடினமென்று அறியாதவள நான்? போகட்டும். நிம்மதியாகச் செத்துப் போகட்டும். என்ன துன்பமோ? வாழ்நாள் முழுவதும் துன்பப் படுவதைவிட, ஒரு பத்து நிமிட வேதனைதானே இது. என்ன? எமனின் உலகத்திற்கு என்னைவிட பத்து நிமிடம் சீனியராகச் செல்லப் போகிறார் என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு அம்ர்ந்தவளுக்கு, என் அலுவலகத்து நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் இரண்டு நாட்களாகவே நான் சாக வேண்டும், நான் சாக வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தான். நான் அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்று நினைத்தேன். இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஒரு தற்கொலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது ஆத்வன் வெடித்துச் சிதறியச் சொற்கள் அவள் காதில் மோதின.

     தற்கொலை எண்ணம் தோன்றுவதும், மறைவதும் ஒரு கணப்பொழுதில்தான். அதிக பட்சமாக அரைமணி நேரத்தில் எடுக்கும் முடிவுதான். அந்த நேரத்தில் அந்த எண்ணத்தை மாற்றி விட்டோமானால் அவர்கள் பின் எப்போதும் தற்கொலையை நினைத்து கூட பார்க்கமாட்டார்கள். வாழ்க்கையின் அழகையும், அவசியத்தையும், இறைவன் நம கையில் கொடுத்த வாழ்நாளை வாழ்ந்து முடிப்பது நம் கடன், என்பதையும் உணர வைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையை வாழ்வது மட்டுமன்றி, தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் வாழ்ந்து முடிப்பர். அது மட்டுமல்ல தற்கொலைக்கு முயல்கிறார் ஒருவர் என்பதறிந்து, அதனைத் தடுக்காமல் இருப்பது கொலை முயற்சிக்குச் சமமானது என்றுதான் நான் கூறுவேன் என்று கூறிய ஆதவனின் கோபக்கனல் வான்மதியின் வைராக்கியத்தைச் சாம்பலாக்க அவள் வேகமாக எழுந்து ஓடுகிறாள்.

     ஏங்க!! ஏங்க!! யாருங்க அது? நில்லுங்க.. என்று அலறியவுடன் இடுப்பளவு நீரில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த உருவம் நின்றது. அது அச்சமா? இவள் அழைத்ததாலோ? அந்த உருவம் லேசாகத் திரும்பிப் பார்த்ததில் அது பெண் என்று உறுதியானது. நானும் உங்களைப்போல சாகத்தான் வந்துள்ளேன்.. நில்லுங்க.. நானும் வருகிறேன் என்று உரக்கக் கூறிக்கொண்டே அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அலைகளினூடே மெதுவாக இழுத்து வந்து கரையை அடைந்தாள். கரையில் அமர்ந்து சாகத்துடித்த இரு இதயங்களும் உரையாடின.

அன்புடன் தன் இரு கரங்களிலில் ஏந்திக் கொண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் என்று சொல்லி முடிக்கும் முன்னே உதயாவின் கேவல் அதிகமாயின. சற்று நேரக் கேவலின் பின்பு பேசத்துவங்கினாள். நானும் என் கணவன் சுரேந்திரனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்தாறு முறை கரு உண்டாகி அபார்ஷன் ஆகிவிட்டது. எனக்கு யூட்ரஸ்  வீக்காக உள்ளதாம்.  அதனால் குழந்தை பெறும் பாக்கியம் எனக்கு இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். என் கணவர் நல்லவர் தான். என் மாமனார் மாமியார் இருவரும் எங்களுக்கு இருப்பதோ ஒரு வாரிசு, அந்த வாரிசுக்கு ஒரு வாரிசு இல்லையென்றால் இந்த தலைமுறை இவனோடு அற்று விடும் என்று புலம்புகின்றனர். என் கணவர் குழந்தை இல்லையென்றால் என்ன? எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையாக இருந்து விட்டுப் போகிறோம்என்று அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். அவர்களோ சமாதானம் ஆவதாக இல்லை. ஆனால் அவர்கள் என் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் நோக்கம் இருக்கும் போலத் தெரிகிறது. என் சுரேந்தரை இன்னொருத்திக்குத் தூக்கிக் கொடுத்து விட்டு............. என்னால்..........அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்........என்று வார்த்தையை முடிக்காமலே ஓஓஓஓஓ........ என்று அழ ஆரம்பித்தாள்...

     அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்மதிக்கு திருமணம் செய்து கொண்ட கையோடு நீ எனக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும். அதிலெல்லாம் தாமதமே இருக்கக் கூடாது. தம் பொருள் தம் மக்கள் னு திருவள்ளுவர் சொல்ர மாதிரி என் மனைவி, என் குழந்தைன்னு நான் பெருமையா சொல்லிட்டு வாழ வேண்டும். நான், நீ , நடுவுல நம்ம குழந்த, யோசிச்சுப் பாரேன்..வண்டியில போற காட்சி எவ்வளவு நல்லா இருக்குன்னு என்றெல்லாம் ஆதவன் ஆசைக் கோட்டைக் கட்டியது அவள் மனத்திரையில் ஓடியது. உடனே ஒரு மின்னல் அடித்தாற் போல உணர்ந்தாள். என் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு இது.. பயன் படுத்திக்கொள்என்று ஆதவன் கூறுவது போலத் தோன்றியது அவளுக்கு.

     மென்மையாக உதயாவின் தோளைத் தொட்டு நீங்கள் கவலைப் படாதீர்கள். எல்லாம் நல்ல படியாக முடியும். என்று கூறிவிட்டு உங்களுக்குக் கர்ப்பப்பைதானே வீக் என்று கூறினீர்கள்? மாதந்தோறும் கரு முட்டைகள் உரிய நாட்களில் உருவாகின்றனவா? என்று கேட்டாள் ஏதோ தெளிவு பெற்றவளாக.. உதயாவும் அதெல்லாம் நார்மலாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேல குழந்தையைத் தாங்கும் வலிமை மட்டும் என் கருப்பைக்கு இல்லையாம். என்றாள். நீங்கள் வாடகைத்தாய் மூலம்  உங்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதை கேள்விபட்டதில்லையா? இல்லை விரும்பவில்லையா? என்று கேட்டாள் வான்மதி. உதயா அதற்குப் புரிந்தும் புரியாததுமாகத் தலையை ஆட்டி என் கணவர் கூறினார். நான் தான் அதெல்லாம் சரிப்படுமா? என்று கேட்டு வேண்டாமென்று கூறிவிட்டேன் என்றாள். உடனே வான்மதி உங்கள் குழந்தையை நீங்கள் கைநிறைய எடுத்துக் கொஞ்சும் காலம் அருகில் வந்து விட்டது என்று நம்பிக்கையாகக் கூறினாள்.நீங்கள் என்ன சொல்றீஙக, அது நடக்குமா? என்று குழந்தை ஆசை கொண்ட ஒரு குழந்தையாகக் கேட்டாள் உதயா..கிளம்புங்க.,நான் பேசறேன் உங்க வீடல் என்று அவள் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக எழுந்தாள் வான்மதி.

     இருவரும் உதயாவின் வீட்டை அடைந்தனர். நடந்தவைகளை வான்மதியே உதயாவின் மாமனார் மாமியாரிடமும் சுரேந்திரனிடமும் எடுத்துக் கூறினார். சுரேந்திரனும் அவன் பெற்றோரும் நடந்ததைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். குழந்தை குறித்து சுரேந்திரனிடம் தனித்துப் பேச வேண்டும் என்பதால் அது குறித்து எதுவும் பேசவில்லை. அன்றிரவு வான்மதியும் உதயாவும் ஓர் அறையில் விடிய விடிய பேசிவிட்டு கண் அயர்ந்தனர். மறு நாள் புறப்பட்ட வான்மதி சுரேந்திரனிடம் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்என்றாள். அவளை வழியனுப்புவதாக வந்த சுரேந்திரனிடம், தான் குழந்தையைச் சுமந்து, பெற்றுத்த்ருவதாகக் கூறினாள். சில மணி நேரத்திற்குப் பிறகு அவனும் சம்மதித்தான். இருவரும் மீண்டும் வீடு திரும்பினர்.

     இது நல்ல முடிவு. இதைத்தானே நாங்கள் முன்னரே கூறினோம் என்றுரைத்து உடனடியாக ஏற்பாடு செய்கிறோம் என்றார் மகப்பேறு மருத்துவத்தில் பல சாதனைகளைப் புரிந்து வரும் டாக்டர் பூமா சுரேஷ்.

     உடனடியாக இருவருக்கும் எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன. மாதவிலக்கின் ஐந்தாம நாள் முதல் உதயாவுக்கு கருமுட்டையின் வளர் நிலை ஸ்கேன் செய்து கண்டறியப் பட்டது. கருவின் கூடுதல் வளர்ச்சிக்கு மருந்தும் இரண்டு மூன்று முறை ஊசிமூலம் கொடுக்கப்பட்டது. சரியாக பதினாறாம் நாள் கருமுட்டை நன்கு வளர்ந்து உடையும் தருவாயில் கருப்பையிலிருந்து கருமுட்டையைச் சோதனைக்குழாயில் சேமித்து, சுரேந்திரனின் விந்துவிலிருந்து விரைவாக நகரும் தனமையுடைய வீரிய விந்தணுக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கருமுட்டையுடன் இணைக்கப்பட்டது. சுரேந்திரன் உதயா தம்பதியினர் மகிழும் ஒரு நன்னாளில் வீரிய விந்தணு கருமுட்டையின் வெளிச்சுவரைக் கிழித்துக்கொண்டு முன்னேறி கருவுடன் இணைந்து உயிர்கொண்டது. உருவான உயிர்க்கரு வான்மதியின் கருப்பைக்குள் குடியேற்றப்பட்டது. இனி எந்தப் பொறுப்பும் உதயா சுரேந்திரனுக்கு இல்லை. முழுப்பொறுப்பும் வான்மதியின் வசம் வந்தடைந்தது. நாளொரு பரிசோதனை வான்மதியின் வயிற்றுக்கு நடந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழ்ந்தையும் வயிற்றில் வளர்ந்தது.
    
     இதனிடையில் வான்மதி யாரோ! எவளோ? அவள் குழந்தையைப் பெற்றுத்தர எவ்வளவு எதிர்ப்பார்ப்பாளோ?என்ற கவலை சுரேந்திரனின் பெற்றோருக்கு. எதிர் காலத்தில் குழந்தையின் மீது உரிமை கொண்டாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை சுரேந்திரனுக்கு.. வான்மதி கன்னிப்பெண். அவளுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலை உதயாவுக்கு. இத்தனை கவலைகளுக்கு இடையில் எந்தவிதக் கவலையுமில்லாமல் இருந்தாள் வான்மதி. அவளுக்கு ஆதவனின் ஆசையை நிறைவெற்றுவதில் மகிழ்ச்சி. “எப்போதும் உதயா வான்மதி அருகிலேயே இருப்பாள். உணவு, மருந்து, ஓய்வு எல்லாவற்றையும் அட்டவனைப்படி பார்த்துக்கொண்டாள் உதயா. வான்மதியைத் தனிமையிலேயே விடமாட்டாள். வான்மதிக்கு யாருமற்ற தனிமை கிடைத்துவிட்டால் போதும், ஆதவனிடம் குழந்தையைப்பற்றி வாய்விட்டுப் பேசிக்கொண்டு இருப்பது வழக்கமாகி விட்டது. குழந்தைக்காகப் பார்த்துப் பார்த்து உண்ணும்போது, ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்என்று கூறிக்கொண்டு ஏழைச்சிறுவர்களைக் கண்டால் ஆதவன் அவர்களுக்கு உதவிடும் இரக்கக் குணத்தை எண்ணுவாள். “உன் விருப்பம் போலவே நான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறேண்டாஎன்று வாய்விட்டு சொல்லிக்கொண்டாள். அன்றொரு நாள் அப்படித்தான் குழந்தை வயிற்றில் சோம்பல் முறிக்குமாம், கொட்டாவி விடுமாம், கால்களால் உதைக்குமாம். இவையெல்லாம் வயிற்றில் கை வைத்துப் பார்த்தால் தெரியுமாமே. கணவன்கள் எல்லாம் தங்கள் மனைவியின் வயிற்றில் கை வைத்துப் பார்த்து இதையெல்லாம் ரசிப்பார்களாம். இந்த அனுபவம் எனக்கு எப்ப கிடைக்கும்?என்று ஆதவன் கேட்டது நினைவு வர, வான்மதி தன் கைகளை வயிற்றில் “ஆதவா தெரியுதா? கொழந்தை ஒதக்கறது..இங்க கையை வச்சுப் பாரு..இங்கடாஎன்று சொல்லிக்கொண்டிருக்கும் போது உதயா வந்துவிட்டாள். வான்மதி எதை எதையோ சொல்லி மழுப்ப வேண்டியதாயிற்று.

     மாதங்கள் சென்றன. டாக்டர் பூமா குறிப்பிட்ட நாளில் மருத்துவமனை சென்றாள். அழகாக வெளியில் வந்தான் குட்டி சுரேந்திரன். உதயா, சுரேந்திரன் இருவரும் ஆனந்த வெள்ளத்தில் தள்ளாடினர். வான்மதியும் தான். “ஆதவா, எண்ணி பத்து  மாசத்துல கொழந்த வேணும்னு சொன்னியே, பார்த்த்க்கோடா.. நம்மளுதோ இல்லையோ. உன் வார்த்தையை நான் காப்பாத்திட்டேண்டா..என்று மனதுக்குள் பேசிக்கொண்டாள்.

     பத்துமாத ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது. இனி குழந்தைக்கும் வான்மதிக்கும் எந்த பந்தமும் இல்லை. வான்மதி வந்த வழியே போக வேண்டியவள். கிளம்பியும் விட்டாள்.

     என் உயிரையும் காப்பாற்றி எனக்கென்று ஒரு உயிரையும் பெற்றெடுத்துக் கொடுத்த நீ எங்களுடனே தங்க வேண்டும்..இது உன் அக்காவின் அன்புக்கட்டளை...அக்கா நான் உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்... என்று கூறினாள். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத வான்மதி நிதானமாக அமைதியான குரலில் “நெஞ்சில் ஆதவனைக் கணவனாகச் சுமந்து விட்டேன். அவன் ஆசையையும் உங்கள் தேவையையும் நிறைவேற்ற ஒரு குழந்தையையும் வயிற்றில் சுமந்து விட்டேன். இது ஒரு வகையில் அவனுக்குச் செய்த துரோகமாக இருக்கலாம். ஆனால் என் மனசாட்சி அவன் மனசாட்சி அவன் ஆசையை நிறைவேற்றி வைப்பதில் பாவமில்லை என்றுரைத்தது. அதன்படி நடந்தேன். ஆனால் இன்னொருவரை ஆதவன் இடத்தில் வைத்துப் பார்க்கக்கூட என் மனம் ஒப்பாது. என்னை தயவு செய்து வற்புறுத்தாது போக விடுங்கள்..என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

     நாங்கள் கொடுக்கும் சிறு கைம்மாறையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நோட்டுக் கட்டுக்கள் நிறைந்த பெட்டியை நீட்டினான் சுரேந்திரன். வான்மதி அதனையும் பெற மறுத்து விட்டாள். “நீங்கள் செய்த உதவிக்கு நாங்கள் என்று.. சுரேந்திரன் கூறும்போது இடை மறித்த வான்மதி ஒரு கணம் சிந்தித்தாள். ஆதவனும் அவளும் எதிர்கால வாழ்க்கையை எண்ணி உருகி உருகி காதலித்தவர்கள் மட்டுமல்ல. பல முடிவுகளையும் அப்போதே எடுத்தவன் அவன்.. அதற்கு அப்போதே தலை அசைத்தவன் அவள்.

      ஆதவன் கலைகளில் இலக்கியம், சிற்பம் போன்றவைகளைப் போலவே ஓவியத்தையும் ரசித்தவன். ஒரு முறை திருவனந்தபுரம் மியூசியம் சென்றிருந்த போது ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்துப் போனான். அங்கிருந்த ஓர் பெண் ஓவியத்தைக்காட்டி “என்ன கூர்மை அந்தப் பெண்ணின் பார்வையில். நாம் எங்கிருந்து பார்த்தாலும் அது நம்மையே பார்ப்பது போல தெரிகிறது பார். “இங்கு வந்து பார். இங்கு வந்து பார்என்று மாறி மாறி நின்று ரசித்தான். இதை வரைந்த கைகளுக்கு நாம் எதாவது பரிசு தர வேண்டுமே. நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரவிவர்மா என்று பெயர் பெயர் வைத்து விடுவோமே?என்று கூறிய ஆதவனின் முடிவை நினைத்துக் கொண்டே, சுரேந்திரனிடம், “எனக்கு நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால், உங்கள் குழந்தைக்கு விவர்மன் என்று பெயர் வைப்பீர்களா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள். சுரேந்திரன் மகிழ்ச்சியாகத் தலையாட்டி “நீங்களே உங்கள் வாயால் பெயர் வைத்துவிடுங்கள் என்றான். வான்மதி குழந்தையின் காதில் ரவிவர்மா, ரவிவர்மா ரவிவர்மா என்று மூன்று முறை அழைத்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து விட்டு கிளம்பினாள்..நம் குழந்தைக்கு ரவி வர்மா என்று பெயரும் வைத்து விட்டேன்...மற்றவற்றைப் பேச நேரில் வறேன் ஆதவா என்று மனதில் சொல்லிக்கொண்டே கடலை நோக்கி நடந்தாள்.....


ஆதிரா...