“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சுடரொளித் திருநாள்... மாநிலக்கல்லூரியில்... தொல். திருமா அவர்களுடன் ஒர் நாள்

 


மாநிலக்கல்லூரியில்  இன்று (27.02.2012) பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி நான் வாசித்த கவிதை...

வேழத்தின் முழக்கம் போல் வெண்டமிழை முழக்குகின்ற
விசைத்தமிழன் - திருமாவளவன்
ஈழத்தின் முழவோசை இடி இடிக்கும் இவன்பேச்சில்
பார்வை வீச்சில் ஏவுகணை இரண்டோடும்
இனப்பகையை தூளாக்கும் -இவன்

மூச்சுச் சூட்டில் மொழிப்பகைக்கு
வேல் வடிக்கும் சிறுத்தையெல்லாம் சிலிர்த்தெழுந்து இவன்
காலத்தால் அழியாத கனிந்த தமிழ் போர்மறவன்

மாநிலக்க்ல்லூரியின் முன்னாள் மாணவர்
பாராளுமன்றத்தின் இந்நாள் உறுப்பினர்
இனத்தமிழன் இதயத்தில் எந்நாளும் 
 
தனித்தமிழனாய் வீற்றிருக்கும்  
நற்குணத் தமிழன் திருமாவளவன்..


இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..
கருஞ்சிறுத்தைக் கூட்டம் இவன் கன்னத்தாடி
கண்ணிரண்டும் கன்னி வெடி
என்ன முரண்? மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு பல்லே இவன் தான்
நாவில் சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை இயக்குகின்ற இயக்குநர்.

கவிஞர் அறிவுமதியை..
தமிழ் உணர்வுத் தணல்காடு - இவன்
தமிழர்க்காய் கட்டி வைத்த இனமானத் தேன்கூடு
சிமிழ் தூக்கிப் பாய்கின்ற சீற்றக் காளை
குமிழ் ஊற்றாய் சொல்லூறும் குமுறும் ஆறு
இனப்பகையை இடுப்பொடிக்கும் இவன்சொல் ஈட்டி

சனி, 18 பிப்ரவரி, 2012

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு....

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

தேனாக இருந்தாலும் சுவைப்பதற்கு
திகட்டி விடும் சிலநாளில்
தினந்தினந்தான் கேட்டாலும் தித்திக்கும்
திகட்டாத குரலினிமை
கானெழுந்த சந்தனத்து நன்மணமாய்
கனித்தமிழில் மணக்கின்றாய்
ஊனெழுந்து உதிர்க்கின்ற மொழியாலே
உலகத்தை இழுக்கின்றாய்

இனிமை பூத்த நிலவொளியில்
இரவு பூக்கும் இசைமலர் நீ
இரவெல்லாம் காய்ச்சி வைத்த
இளைய தமிழ் அமுதம்நீ
மழைத்துளிகள் ஒன்றாகிக்
கொட்டுகின்ற பாட்டருவிநீ
மனமெல்லாம் அன்பாலே
நிறைந்து விட்ட தேனருவிநீ

வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ
வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ
தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ
தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ
ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க
உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று
போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி
பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!

இது தம்பி உதயாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி ஜெய் இணையதள வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.