“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 18 ஜூலை, 2013

இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை










நகரத்தார் நாகரிகம்
                  தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் தவிர ஏனைய தமிழ் பேசும் எந்த இனத்திற்கும் அடையாளக் கொடியோ மாலையோ இருப்பதாகத் தெரியவில்லை.  நகரத்தார் என்று அழைக்கப் படுகின்ற செட்டியார்களுக்கு அடையாளக் கொடியும், மாலையும் உள்ளதாக நகரத்தார் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. சிங்கக் கொடியும் சீரகப்பூ மாலையும் அவர்களது அடையாளம்.

                  நகரத்தார், செட்டியார் என்னும் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்திருக்க வேண்டும் என்பர். செட்டாக இருப்பதால் செட்டியார் என்றும் நகர நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு வந்ததால் நகரத்தார் என்றும் வழங்குவதாகக் கூறுவர்.  

“வீட்டினில் செட்டாக வாழ்ந்திடுவார் 
ஏதும் வீணின்றி மிக்க கணக்கிடுவார்”

என்று சுத்தானந்த பாரதி கூறுவார்.

                  பிற சமயத்தினரிடமோ இனத்தினரிடமோ இல்லாத பல நாகரிகம் இவர்களிடம் காணலாகிறது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் பார்க்கும் நகரத்தாரிடம் சமயச்சார்பு இருந்திருக்கவில்லை. இதற்குச் சான்று ‘இராமாயணம் படித்தல்’. நகரத்தாரிடம் 1843 முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருவதற்குச் சான்று உள்ளது என்கிறது நகரத்தார் கலைக்களஞ்சியம். நாட்டுப்பாடல் அமைப்பும் உரைநடையும் கலந்த வடிவில் இராமனின் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடியைப் புனிதமாக வணங்கும் மரபு இவர்களிடம் இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதம் முதல் தேதி தொடங்கி, மாதம் முழுவதுமோ அல்லது ஒரிரு வாரங்களோ அக்குடும்பத்துப் பெரியவரோ, அல்லது அறிஞர் ஒருவரைக் கொண்டோ இராமாயணம் படிக்கப்படும்.  இராமாயணம் படிக்கத் தொடங்கும் புனித நாளை ‘ஏடு எடுப்பது’ என்று வழங்குவர். ஏடு எடுத்த நாள் முதல் படித்து முடிக்கும் நாள் வரை தீட்டு என்று கருதப்படும் எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்ளாததை மரபாகக் கொண்டுள்ளனர்.

இராமாயணம் படிக்கும் நாள்களில் தொடக்க நாள், இராமர் சீதை திருமணம், இராமன் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணுதல், இராம பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளைப் படிக்கும் நாட்களில் நகரத்தார் இல்லங்கள் விழாக்கோலம் கொள்ளும். கடைசியாகப் பட்டாபிஷேகம் படிக்கும் நாளில் இராமாயணம் படித்த அறிஞர்க்கு உணவு, ஆடை முதலியவை கொடுத்துச்  சிறப்புச் செய்வது வழக்கம். ஏடுகள் மறைந்து நூல்களாக மாறிப்போன இக்காலத்திலும் இராமாயணம் படித்தல் நகரத்தார் இல்லங்களில் தொடர்ந்து கொண்டு உள்ளன.

                  நகரத்தார் தம் பண்பாட்டில் வழிபாட்டுக்கே முதலிடம் கொடுத்து வந்தனர். வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ‘உபதேசம் கேட்டல்’. சமயம், விசேஷம், நிருவாணம், ஆச்சாரிய அபிஷேகம் என்னும் நான்கு வகைத் தீட்சைகளில் தொடக்க நிலையாகிய சமய தீட்சையே உபதேசம். நகரத்தார்க்கென ஒரு குரு இருப்பார். அந்தக் குரு திருவைந்தெழுத்தாகிய மூல மந்திரத்தைச் இவர்களுக்கு உபதேசிப்பார். அது முதல் நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் உபதேசம் பெற்றவர் மூல மந்திரத்தை ஓதுதல் வேண்டும். பெருவிழாவாகக் கொண்டாடப்படும் ‘உபதேசப் புதுமை’ என்னும் உபதேசம் வழங்கும் இவ்விழாவில் பங்கு பெறும் அனைவரும் பணம், அன்பளிப்பு கொடுத்து ஆசிர்வதிப்பதும் உண்டு.

                  உபதேசம் குறித்த சுவையான செய்தி ஒன்று. கீழப்பூங்கொடி நகரத்தார் தங்கள் ஊரில் உபதேசம் ஏற்பாடு செய்து இருந்தனர். உபதேசம் கேட்டு விட்டு பர்மா செல்ல வேண்டிய நகரத்தார்களுக்காகப் பர்மா செல்ல வேண்டிய கப்பலையே கோர்ட்டில் தடையுத்தரவு பெற்று இரு நாட்கள் நிறுத்தி வைத்திருந்தனராம். (சான்று - நகரத்தாரும் உபதேசமும்.

                  இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. அயல்நாடு செல்லும் நகரத்தாரின் சம்பளப் பற்றுச் சீட்டில் கீழே கொடுக்கப்பட்டிருந்த வாசகம் இது “உபதேச முத்தி வைத்தால் முதலாளி செலவில் வந்து போகிறது”   

                  நகரத்தார் இல்லத் திருமண விழா ஏழு நாள்கள் நடைபெறும். காலப்போக்கில் இந்தத் திருமண விழா மூன்று நாட்களாகக் குறைந்து இப்போது ஒரு நாள் திருமணமாக மாறிவிட்டது. பிற இனங்களில் தத்தம் கோத்திரங்களில் திருமணம் செய்யாதது போல நகரத்தாரிலும் தத்தம் கோயில் பிரிவினரில் மணம் முடிப்பதில்லை. ‘முகூர்த்தக்கால் ஊன்றுதல்’ தொடங்கி உறவினர் வீடு சென்று ‘பால் பழம் அருந்தி வருதல்’ வரையான பல  வகையானச் சடங்குகள் நகரத்தாரின் திருமண விழாவில் காணப்படுகின்றன. இவர்களின் திருமணச் சடங்குகளில் பெரும்பாலும் பிற இனத்தாரின் சடங்குகளுடன் ஒத்துப் போனாலும் அவற்றின் பெயர்கள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன. 

கோவிலில் பாக்கு வைத்தல் என்னும் சடங்கு முக்கியமானதாக உள்ளது. இவர்கள் கோவில் பிரிவினராக இருப்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பெறுகிறது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகக் கோயிலில் திருமணம் குறித்த அனைத்து விபரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் (அழைப்பிதல்) பாக்கு வைக்க வேண்டும். தற்போதைய பதிவுத்திருமணம் போல திருமணத்தைப் பதிவு செய்யும் முறையாக (Regester) இதனை நோக்கலாம். நகரத்தாரின் புள்ளிக்கணக்குப் பார்க்க இதுவே பெருந்துணையாக இருந்திருக்கின்றது. திருமணத்திற்கு முதல் நாள் அந்தந்தக் கோயிலில் இருந்து மணமகனுக்கும் மணமகளுக்கும் மாலைகள் வரும். மணமக்களுக்கு அந்த மாலைகளை அணிவித்தே ‘திருப்பூட்டுதல்’ என்னும் தாலி கட்டும் மணச்சடங்கு நடைபெறும். 

                  பிற இனங்களில் குடத்தில் மோதிரம் இட்டு மணமகனையும் மணமகளையும் எடுக்கச் சொல்லும் விளையாடல் ‘குலம் வாழும் பிள்ளை எடுத்தல்’ என்னும் பெயரில் நகரத்தார் மணவிழாவில் இடம்பெறுகிறது. குடத்துக்குள் சிறிய வெள்ளியால் ஆனக் குழந்தைச் சிலையை இடுவர். மணமகனும் மணமகளும் அக்குடத்தை மும்முறை வலம் வருவர். குடத்திலிருந்து மோதிரம் எடுக்க மணமகளும் மணமகனும் போட்டி போடுவதும் அருகில் தோழிகள் இருந்து கலாட்டா செய்வதுமான பிற இனத்தாரிடம் காணலாகும் கேளிக்கைகளெல்லாம் இவர்களின் குலம் வாழும் பிள்ளை எடுக்கும் சடங்கில் இல்லை. குடத்துக்குள் இருக்கும் குழந்தைச் சிலையை மணமகள் மட்டும் எடுப்பார். அக்குழந்தைச் சிலையுடன் குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெறுவார்.

                  ‘தாலி’, ‘திருமாங்கல்யம்’ என்று அழைக்கப்பெறும் மங்கல அணிகலன் நகரத்தார் வழக்கில் ‘கழுத்துரு’ என்று வழங்கப்படுகிறது. இம்மங்கல அணிகலனை மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் இச்சடங்கை ‘திருப்பூட்டுதல்’ என்கின்றனர். இது ஒர் அழகிய இலக்கிய வழக்கு ஆகும். திருமாங்கல்யம், ஏத்தனம், சரிமணி, லெட்சுமி, குச்சி, தும்பு, துவாளை, ஒற்றைத்தும்பு ஆகியவற்றைச் சேர்த்து 35 உருப்படிகளைக் கொண்டது கழுத்துரு..

                  நகரத்தார் வழக்கத்தில் திருமணமான இணையர்களைத் தனிக்குடித்தனம் வைத்தலை ‘வேறுவைத்தல்’ என்னும் சடங்காகக் கொண்டாடுவர். இதனை ‘மனையறம் படுத்துதல்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும். இதே தனி வைத்தலை பெரிய புராணமும் காரைக்கால் அம்மையார் புராணத்தில் சுட்டிக்காட்டும். இல்லறக் கடமைகளான அறவோர்க்கு அளித்து, அந்தணர் ஓம்பி, துறவோரைப் பேணி, விருந்துகளை எதிர்கொண்டு உபசரித்தல் முதலிய அறங்களைச் செய்து வாழ்வதற்காகத் திருமணமான ஓராண்டின் பின்னரோ அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரோ அந்த இளைய இணையரை அதே வீட்டில் வேறாக வைப்பது நகரத்தார் வழக்கம். மகன் குடும்பத் தலைவன் என்னும் பொறுப்பை உணர்வதற்காக அவர்களை வேறு வைத்தாலும் குடும்பச் செலவுக்காக மணமகளிடம் மணமகனின் தாய் தந்தையர் ஆண்டு தோறும் இருநூறு உரூபாயும் இரண்டு பொதி நெல்லும் வழங்குவாராம். இதற்கு ‘வருஷத்துப் போகம்’ அல்லது ‘பொதி போடுதல்’ என்று பெயராம்.

                  நகரத்தார் குடும்பங்களில் மணமான பெண் கருவுறும் போது நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ‘தீர்த்தம் குடித்தல்’. கருவுற்ற ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் கருவுற்ற பெண்ணின் நாத்தனார் மருந்து(நாட்டு மருந்து)) இடித்துக் கொடுக்கும் இவ்விழா பெரிய அளவில் இப்போதும் ஒரு சமயச் சடங்காகக் கொண்டாடப்பெறுகின்றது.

                  செட்டி நாட்டு ஆச்சிமார்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானவை  ‘பேறு கேட்டல்’, மற்றும் ‘பேறுஇடுதல்’. குழந்தைப் பேற்றையும் பூப்படைதலையும் விசாரிப்பதற்கு இச்சொல்லாடல்கள் பயன்பட்டு வந்தன. ரொட்டிகள், மிட்டாய்கள் தட்டில் வைத்து காபி, வெற்றிலைபாக்குக் கொடுத்து குழந்தை பிறந்ததை விசாரிக்க வருபவர்களை உபசரிக்கும் இம்முறை இன்றும் செட்டிநாட்டில் பின்பற்றப்படுகிறது. தற்காலத்தில் ‘போர் கேட்டல்’  போரிடுதல்’ என்று இவை மருவி வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

                  பொதுவாக திருமணமான புதுமணத்தம்பதிகளுக்கு நடக்கும் முதலிரவை சாந்திக்கலியாணம் என்பது வழக்கம். ஆனால் நகரத்தார் குடும்பங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பெறும் அறுபதாண்டு நிறைவு விழாவை ‘சாந்திக் கலியாணம்’ என்கின்றனர்.

                  பொங்கலின் போது வீட்டில் ஒரு விளக்குச் சட்டியில் தேங்காய் ,பழம், கரும்பு, பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல் கொத்து,, சிறுபூளைப்பூ,, கத்தரிக்காய், வாழைக்காய் ஆகியவற்றை வைத்துக் கும்பிடுவர். இப்பொருள்களை மாட்டுப் பொங்கலன்று இளம்பெண்கள் சிவன் கோவிலுக்கு எதிரில் உள்ள பொட்டல் வெளியில் (இதன் பெயர் கொப்பிப் பொட்டல்) பரப்பி வட்டமாகச் சுற்றி வந்து கும்மி தட்டுவர். அப்பொட்டலுக்கு நகரத்தார்க்குச் சலவை செய்யும் சலவைத் தொழிலாளர்களும் வருவார்கள். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டி முடிந்த பின் அப்பொருள்களைச் சலவைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து பின்பு கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவார்களாம். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டுவதால் இது ‘கொப்பி கொட்டுதல்’ எனப்பட்டது. செல்வ செழிப்பு மிக்க நகரத்தார் இல்லங்களில் இந்த வழிபாட்டுப் பொருள்கள் போல வெள்ளியில் செய்து திருமணத்தின் பொது பெண்ணுக்குச் சீராகக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

                  சைவம் அசைவம் என்னும் இருவகையிலும் செட்டி நாட்டு உணவு வகைகள் ருசியானவை என்பதற்கு செட்டி நாடு உணவங்கங்கள் எல்லா நகரங்களிலும் அமைந்திருப்பதே சான்று கூறும். உக்காரை, கும்மாயம், கந்தரப்பம், கவணரிசி, கல்கண்டு வடை, சீடைக்காய், சீப்புச் சீடைக்காய், இளங்குழம்பு, சும்மா குழம்பு, மனகோலம் வெள்ளைப் பணியாரம் ஆச்சிமார்களின் கைம்மணத்தில் ருசிப்பவை.

                  புழுங்கரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து வெல்லம் சேர்த்து மாவாக ஆட்டித் தேங்காய்ப்பூ சேர்த்து பணியாரம் போல் எண்ணெயில் போட்டு எடுப்பது செட்டி நாட்டுக்கு மட்டுமே சொந்தமான கந்தரப்பம்.

                  விருந்துகளுக்குப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் படுவது கல்கண்டு வடை. நன்கு ஊறிய உளுந்தில் கல்கண்டைச் சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொறிப்பது இது.

                  உளுந்தை வறுத்துக் கொண்டு அதனோடு பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து இயந்திரத்தில் திரித்துக் கொண்டு அந்த மாவில் வெல்லம் சேர்த்துக் கரைத்து, கரைசலை அடுப்பில் வைத்து கூழ் போல் கிண்டுவது கும்மாயம்.

                  வேறு எந்த இனத்திலும் காணப்படாதது இளங்குழம்பு. விருந்துகளில் இரசத்திற்குப் பதிலாக பரிமாறப்படுவது. அதாவது பீன்ஸ், அவரைக்காய் போன்ற ஏதேனும் ஒரு காயைப் போட்டுக் குழம்பும் இல்லாமல் ரசமும் இல்லாமல் இரண்டுக்கும் நடுநாயககமாகச் சமைத்துப் பரிமாறுவர். இதனைத் ‘தண்ணிக் குழம்பு’ என்றும் கூறுவதுண்டு.  

                  இழவு தொடர்பானப் பல சமயச் சடங்குகள் பிற சமுகத்தினரைப் போலவே அமைந்திருந்தாலும் பச்சைக் குத்துதல், அந்தரட்டை, மோட்ச தீபம், கல்லெடுத்தல் ஆகியவை இச்சமுகத்தினரைப் பிற சமுகத்தினரிடமிருந்து வேறு படுத்துகின்றன.
                        ஒருவர் இறந்தது முதல் சவுண்டி வரை நடைபெறும் இறுதிச் சடங்கின் சமயச் சடங்குக்கு நகரத்த்தார் மரபில் ‘இழவு கூட்டுதல்’ என்று பெயர். இறந்தவரின் சுகப் பயணத்திற்காக ‘பசுத்தானம் கொடுத்தல்’ மிக முக்கியமாகக் கடைபிடித்து வரும் மரபு. பசுமாடு கொண்டு வரப்பட்டு சில மந்திரங்கள் சொல்லப்பட்டு பசு தானமாகக் கொடுக்கப் பட்டிருக்கலாம். பிற்காலத்தில் நகரங்களில் வசிக்கும் நகரத்தார் பசுத்தானத்தில் பசுவுக்குப் பதிலாகப் பணம் கொடுக்கின்றனர்.

                        நான்கு களிமண் உருண்டைகள் வைத்து அதில் நான்கு கால்களை ஊன்றி அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை பரப்பிப் பந்தல் போடுவது பங்காளிகளின் வேலை. இந்தப் பந்தலின் கீழ் கல்லுரல் ஒன்றைப் போட்டு அதில் சிறிது பச்சை நெல்லை இட்டு இறந்தவரின் மகளோ பேத்தியோ மருமகளோ அதைக் குத்தி அரிசியாக்கி வாய்க்கரிசி இடும் முறை இவர்களது. இது ‘பச்சைக் குத்துதல்’. எனப்படும்

                  உபதேசம் கேட்டவராகவும், புலால் உண்ணாதவராகவும் இறந்தவர் இருந்தால் அவருக்கு உபதேசம் செய்து வைத்த மடத்திலிருந்து தேசிகர் ஒருவர் வந்து ‘அந்தரட்டை’ என்னும் ஒரு சமயச் சடங்கை நடத்துவார்.

                  அதே போல இறந்தவர் நினைவாக நகரச்சிவன் கோயிலில் ‘மோட்ச தீபம்’ அதாவது தீபம் போட்டால் இறந்தவர் மோட்சம் அடைவார் என்று நம்பினர். இறந்தவரின் குடும்பத்தினர் பொருள் கொடுத்து இத்தீபம் போட ஏற்பாடு செய்வார்கள். இதற்கு ‘மோட்ச தீபம்’ என்று பெயர்.

                  இறந்த வீரர்களுக்குக் நடுகல் அமைத்து வழிபடும் சங்ககால மரபோடு தொடர்புடைய ‘கல்லெடுத்துப் புலால் ஊற்றிக் கொள்ளுதல்’ நகரத்தாரிடம் மட்டுமே காணலாகும் சடங்காக உள்ளது. ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரைக்குச் சென்று அங்கு செங்கல் நட்டு அதற்குச் சிறப்புப் பூசனைககள் செய்வது நகரத்தார் மரபு. கருங்கல் நாட்டி வழிபாடு செய்வதாகத் தொல்காப்பியம் கூறும் ‘சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்’ என்ற அடிப்படையில் இறந்தாரின் சிறப்பை எடுத்துக்கூறுவதற்காக அமைந்த சடங்காக இச்சடங்கு இருத்தலைக் காண முடிகிறது.

                  கலைகள் என்று சொன்னால் நகரத்தார்க்கு இணை அவர்களே. திரைப்படக் குழுவினர்க்குச் செல்வ வீட்டுக் காட்சி என்றால் ஆச்சிமார்கள் வீடுதான் மனத்தில் வரும். சென்னையில் இருந்து படப்பிடிப்புக் குழுவினர் செட்டி நாட்டுக்குப் படையெடுப்பது கலை நயம் மிக்க அவர்கள் வீட்டில் படமாக்குவதற்காக எனின் அது மிகையல்ல. நாட்டுக்கோட்டையில் வீடுகள் கோட்டைகள் போல இரு தெருக்களை இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். பொதுவாக 160 அடி நீளம் 60 அடி அகலம் உடையதாகச் செட்டிநாட்டு வீடுகள் அமைந்திருக்கும் வீட்டின் முகப்பு ஒரு தெரு என்றால் பின்கட்டு எனப்படும் புழக்கடைக் கதவு அடுத்த தெருவில் முடியும்.

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேக்கு, பளிங்குக் கற்கள், கண்ணாடிப் பொருள்கள் முதலிய கட்டுமானப் பொருள்களை பர்மா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து பிரம்மாண்டமான வீடுகள் கட்டினர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நகரத்தார் அக்குடும்பத்தின் ஒவ்வொரு புள்ளியும் தனியே சமைத்து, உண்டு, உறங்கும் வண்ணம் படுக்கை அறைகள், சரக்கு அறைகள், அடுப்படிகள் ஆகியவை அமைத்துப் பெரிய வீடாகக் கட்டினர். முகப்பு, வளவு, பெரிய பெரிய தூண்கள் அமைந்த பட்டாசாலை, பட்டாசாலையில் வரிசையாக அறைகள்,  இரண்டாங்கட்டுப் பட்டாசாலை, அங்கும் அறைகள், அடுப்படி, அடுப்படிக்குப் பின்னால் தோட்டம் என்று அரண்மனை போல் அமைத்திருந்தனர்.  நுழை வாயிலில் கலையழகு மிளிறும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பெரிய நிலையும் கதவுகளும் அமைந்திருக்கும். சங்க காலத்தில் அரண்மனை வாயிலில் அமைந்திருந்ததைப் போல மரத்தாலான புடைப்புச் சிற்பங்களை வீட்டின் முகப்பில் அமைத்தனர். தாமைரைப்பூவில் அமர்ந்த திருமகள், இருபுறமும் மாலையுடன் யானைகள் அமைந்திருக்கும். குதிரைகள், குதிரை வீரர்கள், தேர்கள், பூமாலைகள், யாழிகள், முதலிய சிற்பங்கள் அழகொளிரும் காட்சி நாட்டுக்கோட்டைக் காட்சி .

                  நகரத்தாரின் உறவு முறைப் பெயர்கள் திரைத்துறையினருக்கும் பொதுவாகப் பேசும் பலருக்கும் நகைச்சுவைக்குப் பயன் பட்டாலும் அவை ஆராய வேண்டிய முறையில் அமைந்தவை. உறவு முறைப் பெயர்களை ஆராயும்போது உறவுகளைப் பிறரிடம் கூறும்போது பயன்படுத்தும் பெயர்களுக்கும் முன்னிலையில் அவர்களை விளிக்கப் பயன்படுத்தும் பெயர்களுக்கும் வேறுபாடு இருப்பது நகரத்தாரிடம் மட்டும் காணலாகும் கலாச்சாரம்.  

                  ஆங்கிலத்தில் Uncle, Aunt  என்பவை பொதுப்பெயராக இருப்பது போல நகரத்தாரிடம் அண்ணன் என்பது பொதுப்பெயராக உள்ளது. 

     அவர்கள் அண்ணன் என்று பல உறவு முறைக் காரர்களை அழைக்கும் போது ஆங்கிலக் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதைக் காண முடிகிறது. இக்கலாச்சாரம் ஆங்கிலத்திற்கு நகரத்தாரின் கொடையா அல்லது ஆங்கிலத்தில் இருந்து நகரத்தார் கொண்டதா என்பதும் ஆராய வேண்டியது அவசியம்.

                  சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தான் என்னும் உறவு முறைக்காரர்களை ஒரே பெயர் சொல்லி அழைக்கும் அங்கிள் (Uncle) என்பதும். சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி அனைவரையும் ஆண்டி (Aunty) என்று அழைப்பதும் ஆங்கில வழக்கு..
                  தந்தை வழி சித்தப்பாவையும், (அப்பாவின் தம்பி) தாய் வழிச் சித்தப்பாவையும் (சித்தியின் கணவர்), நாத்தனாரின் கணவர், சம்பந்தி, சித்தப்பாவின் மகன்கள், சித்தியின் மகன்கள், அனைவரையும் பெரியவராக இருப்பின் அண்ணன் என்று அழைக்கின்றனர்.

                  பொதுவாக மனைவி என்று சொல்லப் பெண்டிர் என்னும் வழக்காற்றை நகரத்தார் பயன்படுத்துகின்றனர். அண்ணன் மனைவியை ‘அண்ணமுண்டி’ என்கின்றனர். அண்ணன் பெண்டிர் என்பதன் மரூஉ இது. சித்தப்பாவை அண்ணன் என்று அழைக்கும் இவர்கள் சித்தியை அண்ணன் பெண்டிர் என்று சொல்வதில்லை. சின்னாத்தாள் என்றோ ஆச்சி என்றோதான் அழைக்கின்றனர்.

                  அத்தை மகனையும் மாமன் மகனையும் அய்த்தான் (அத்தான் என்பதன் மரூஉ) என்கின்றனர். அதே போல் ஆண்கள் மனைவியின் அண்ணன் முறை உள்ளவர்களையும் பெண்கள் கணவனின் அண்ணன் முறை உள்ளவர்களையும் அத்தான் என்றே அழைக்கின்றனர்.

                  அத்தை மகனையும் அம்மான் மகனையும் அய்த்தியாண்டி (அத்தியாண்டியின் மரூஉ) என்றும் அழைப்பர். தாயை ஆச்சி என்றும்  தந்தையை அப்பச்சி என்றும் அழைப்பது செட்டி நாட்டு வழக்கம் பங்காளிகள் ஒருவரை ஒருவர் அழைக்கும் போது ‘மானி’ என்றே அழைத்துக் கொள்கின்றனர் .

                  நாகரிகத்தில் சிறந்தவர்கள் நகரத்தார் என்பதைக் காட்டும் சான்றுகளில் மிகவும் முக்கியமானது அவர்களது மொழி நடை. நகரத்தாரின் மொழியில் இலக்கிய நடையும் தனித்தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் காணப்படுவதை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்வர்.

                  சான்றாக, 
குறிச்சி - சாய்வு நாற்காலி, 
வட்டி - உணவு உண்ணும் தட்டு (வட்டில் என்பது பண்டைத் தமிழ் வழக்கு,) சிலாந்தி - சல்லடை, 
சுளகு - முறம், 
போகினி - டம்ளர், 
குந்தாணி - உரல், 
ஏவம் கேட்டல் - பரிந்து பேசுதல், 
கொண்டி – போக்கிரி, (கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது) 
தாக்கல் – செய்தி, ஒள்ளத்தி –மிகச்சிறிய அளவு (எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்), 
தொக்கடி – மிகக் குறைந்த விலை, 
மருக்கோளி – பைத்தியம், 
வறளி – பிடிவாதக்காரர், 
மூதலித்தல் – மெய்ப்பித்தல். 
இவை சான்றுக்குச் சிலவே. இன்னும் இவை போல எண்ணற்ற சொற்கள் காணலாகின்றன.

பேரா. முனை. ப. பானுமதி
  


4 கருத்துகள்:

  1. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பொருளாதாரப் பட்டத்திற்காய் படித்த காலங்களில் அங்கு வாழ்ந்ததுண்டு நான். நகரத்தார் பெருமையையும் பழக்கவழக்கங்களையும் ஓரளவு அறிவேன். என்றாலும் இத்தனை விரிவாய் இப்போது உங்களால் அறிந்து கொண்டேன். மிகப் பயன்மிக்க பகிர்விற்கு மனம் நிறைய நன்றி ஆதிரா மேம்!

    பதிலளிநீக்கு