“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 11 மார்ச், 2014

இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்
மூன்றாம் பாலான திருநங்கைகள் வெளியுலகில் சுதந்திரமாக உலாவருவதற்கு இன்று வரையும் பல இடையூறுகள் இருந்தே வருகின்றன. அதற்குக் காரணம் வெளித்தோற்றத்தால் அவர்கள் அடையாளப் படுத்தப் படுவதால். ஆனால் இணைய தளங்களில் இவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் உலா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகப் பலர் இணையத்தின் வாயிலாகத் தம் எழுத்தாளுமைகளைக் காட்டி வருகின்றனர் என்ற போதும் எண்ணிக்கையின் அளவில் மிகக் குறைவாக உள்ளனர். ஆனாலும் இந்த குறைந்த விழுக்காட்டினர்  தம் சுயத்தை வெளிக் காட்டிக் கொண்டு தம் இனத்திற்கு மட்டுமல்லாமல் இச்சமுதாயத்திற்கும் நலன் நினைக்கும் உள்ளத்தினராக உள்ளனர்.

திருநங்கையருக்கும் மங்கையருக்கு உள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களும் உள்ளன என்பதையும் கூடுதலாகச் சமுதாயம் குறித்த பொறுப்புகளும் அக்கறையும் இருக்கின்றன. என்பதையும் இந்தச் சமுதாயம் புரிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் தம் எழுத்துகளைப் பொறித்து வருகின்றனர். அவர்களுள் ப்ரியா பாபு, கல்கி சுப்ரமணியம், ஆயிஷா ஃபாரூக் என்னும் மூவரின் எழுத்துகளில் பொதிந்துள்ள தன் இனம், பெண்ணினம், சமுதாயம் பற்றிய கருத்துகளைச் சுட்டிக் காட்டுகிறது இக்கட்டுரை.


“என் எழுத்துக்களை வடிவமைக்கிறாய்
என் சொற்களை அச்சுக் கோர்க்கிறாய்
என் நினைவுகளில் நிறை நிற்கிறாய்
என் கனவுகளில் மலர்கிறாய்
இன்னும் இன்னும் எத்தனையோ
விதைக்கிறாய் என்னுள் – நான் அறியாமலே
கணங்களின் அவஸ்தையைச் சொல்லிவிட துடிக்குது
மனதுடன் மெல்லப் புலர்கிறது புதுக்காலை”

என்று காலை புலர்வதை இவ்வளவு மென்மையும் அழகியலும் நிரம்பி வழிகின்ற கவிதையைப் புனையும் இவர் இணையத்தின் ஈடு இணையற்ற சமூக சேவகியாக உலாவரும் திருநங்கை ப்ரியா பாபு. “அன்பின் வழியது உயிர்நிலை” (குறள் 80) என்ற வள்ளுவனின் குறளுக்கு உருவம் தந்துள்ள இவர் திருநங்கைகளோடு அன்புறவு கொண்டு தம் வாழ்நாளைச் சேவை நாளாக ஆக்கிக் கொண்டவர். காதலனைப் பற்றி,

“தனித்த என் இரவுகளின் கனவுகளில் விடிந்துக்கொண்டிருக்கிறாய்
இன்னுமும்… நீ….”

என்று கூறும் இவர், ஏதோ ஒரு காரணம் கருதி பிரிந்த பின் அந்த காதலனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனம் படும் பாட்டை,

“பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு
 (பிரியும் போது)துன்பத்தால் கலங்குவதையும் 
விட்டு பிரிந்த பின் மீண்டும் மீண்டும்
வரவை எண்ணி/ உயிரோடிருந்தும்
வாழாதவர்”
என்று வலி மிகுந்த எழுத்துகளில் வடிக்கிறார். இவர்

கனவுகளை சுமந்து செல்கிறது என் இரவு 
நீர்த்துப் போகா நினைவுகளுடன் 
நிழல்களையும் தாண்டிய நம்பிக்கையோடு"

என்று ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் தம் நினைவில் நிழலாடும் நம்பிக்கையையையும் விதைத்து வருகிறார். திருநங்கைகளுக்கான பல சமூக சேவைகளுக்காகத் தம்மை அர்ப்பனித்துக் கொண்ட ப்ரியா பாபு எழுதிய திருநங்கைகளின் வேதனைகளைத் தாங்கிய, அதே வேளையில் அவர்களின் விடியலுக்கான வெளிச்சத்தைப் பாய்ச்சும் நூலே மூன்றாம் பாலின் முகம். வலிகளை மட்டுமே அனுபவித்த இந்தத் திருநங்கை தம் மனத்தில் சுமந்த சின்னச் சின்ன ஆசைகளை,

”அத்தனையும் அத்தனையுமாய் ஆகிவிட ஆசைத்தான்
அரக்கை சட்டையாய் 
 உறவாடும் உள்ளுடையாய்
குளித்த தலையை கோதிடும் கரங்களாய்
கையோடு கலந்திருக்கும் கெடிகாரமாய் ....
மடியில் தலை சாய்த்த மழலையாய்/ பகிர்தலுக்குரிய தோழியாய்
பூத்த கண்களுடன் காதலியாய்/ எல்லாமாகி விட்ட மனைவியாய் ”

என்று பட்டியலிடுகிறார். வலிகளை சுமந்த விழிகளில்  கனவுகளை மிச்சம் இருத்தி எழுத்துக்களில் எண்ணங்களை வடித்து நிஜங்களின் நம்பிக்கையோடு கனவுகளைக் கண்டு கொண்டிருக்கிறார்.

இவரைப் போலவே திருநங்கையர்களுக்கான இட ஒதுக்கீடு, உதவித்தொகை என்ற பல நிலைகளில் அவர்களுக்காகப் போராடும் வீராங்கனை திருநங்கை கல்கி சுபரமணியம்,
“குறி அறுத்து 
குருதியில் நனைந்து
மரணம் கடந்து  
மங்கையானேன்”

என்று தான் வலிசுமந்து பெண்சுமந்ததைக் (திருநங்கையானதை) கூறும் கல்கி சுபரமணியத்தின் உடலும், மனமும் அனுபவித்த வலியை எழுத்தில் வடிக்கிறார். இரத்தம் வடியும் இவ்வெழுத்துகளைப் படிக்கும் போது வேதனையை அனுபவிக்காத மனம் மனித மனமாக இருக்க முடியாது. சிகிச்சை மூலம் என்னதான் பெண்ணானாலும் திருநங்கையருக்குக் கரு சுமக்கும் அறை இல்லை; ஆகையால் பெண் என்னும் தகுதி இல்லை என்று ஏளனம் செய்யும் ஆண்கள் உலகைப் பார்த்து,

“நீங்கள் கழிக்கும்
எச்சங்களை, 
சாதி வெறியும் மதவெறியும் 
கொண்டு நீங்கள் 
விருட்சமாக்க/ விதைபோட்ட
 உங்கள் மிச்சங்களை/ சிசுவாக சுமக்கிற 
கருவறை எனக்கு வேண்டாம்”

என்று கூறும் துணிச்சல் மட்டுமல்ல, இழிதொழிலான இரவுத்தொழிலைச் செய்பவர்களைப் பார்த்து,

“எழுந்திரடி
 புரட்டிப் போடு அவனை
உன்னை அம்மணமாக்கும்
அவமானங்களின் பிரதிநிதி அவன்
அவன் கழுத்தில் 
கால் வைத்து
உன் காளி முகம் காட்டு”

என்று வீர ஆவேசம் ஊட்டி அவர்களை நல்வழிப் படுத்தும் விவேகமும் நிறைந்தவர் இந்தத் திருநங்கை.  

“இப்போதெல்லாம்
 வடுக்களை நான் 
தொடும்போது/ ஐயோ வயிறு கிழிந்து
யோனி பிளந்து 
இறந்து போன 
என் ஈழத்துச் சகோதரியின்
நினைவுகள் நெருப்பாய் தகிக்கிறதே”

என்று ஈழச் சகோதரிகளை வெறி பிடித்த சிங்களவர்கள் கற்பழித்துச் சின்னா பின்னமாக்கியதை நினைத்து கவிதையால் கண்ணீர் சிந்துகிறார். காதலுக்காகத் தன் காதலி திவ்யாவுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த இளவரசனுக்குப் பாடும் இரங்கலில், 

“இன்னொரு பிறவியென்று
னக்கு உண்டெனில் 
என்னிடம் வந்து விடு 
மாறாக்காதலும்
மனம் ஒத்த வாழ்வும் 
போராடும் குணமும் 
பூப்போன்ற மனமும் 
நான் உனக்குத் தருகிறேன்” 

என்று ஒரு காதலியாக உருவெடுக்கிறார். 

“மூன்றாம் பாலினமான நாங்களும் எழுத்துலகில் சாதிக்க முடியும் என்பதைச் சமூகத்திற்குத் தெளிவு படுத்தத்தான் என் எழுத்துக்களைப் பெரிதும் பயன் படுத்துகிறேன்” என்று கூறும் ஆயிஷா ஃபாருக் என்று அழைக்கப் பெறும் திருநங்கை ரம்யா முகப்புத்தகம் தவிர தமக்கென்று தனித்தளம் உருவாக்கி எழுதி வருகிறார். கவிதைகள் கட்டுரைகள் மூலமாக அபாரமானத் தம் எழுத்து ஆளுமைகளை வெளிப்படுத்துகிறார். சமுதாயச் சிந்தனைக் கவிதைகளைப் படைக்கும் இவரும் அவற்றுடன் திருநங்கைகளின் வேதனைகளையும் விருப்பங்களையும் வெகு நாகரிகமாக வெளிப்படுத்துகிறார்.

திருநங்கைகள் வாழ்வில் படும் துன்பங்களை,
“பெற்றோர் நிராகரிப்பு 
சுற்றம் ஒதுக்கல்/ காதல் மயக்கம்
 காமப் பசி/ வாழ்க்கை ஏக்கம் 
எதிர்காலப் பயம் 
இப்படி 
சுற்றிலும் சூழ்நிலைப் பின்னடைவுகள் 
ஆக மன சோர்வுகள் 
வாழ்கையில் பயம்
வாழ்ந்தே ஆகவேண்டும் 
வாழ்கிறோம்/ இனியும் வாழ்வோம்  
வாழ்ந்தே ஆவோம் துணிவோடு எதிர்கொண்டு 
நாம் திருநங்கைகள்”
என்று கூறி தம் இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறார். காதலுக்காக ஏக்கம் கொண்டு, துய்த்துப் பின் தூ என்று உமிழும் ஆண்களால் தம் உயிரை உமிழ்ந்த திருநங்கைகள் பலர். இப்படி ஆண்களை நம்பி ஏமாந்ததை,  

“நம்மை ஊர் ஏற்காது உறவும் ஏற்காது
நீ கருவுறும் பூவும் அல்ல
உன்னை மணக்க நான் மகான் அல்ல
அனைத்தும் இழந்த மங்கை 
உயிரும் துறந்தாள் திருநங்கை யாதலால்”

என்று சொல்லிப் புலம்புகிறார். தாய் வேறு தாய்மை வேறு. தாயனவர்கள் எல்லோரும் தாய்மையடைவதில்லை. தாய்மை உள்ள அனைவரும் தாயாகிவிடுகின்றனர்.. தாயாகாது தாய்மை அடைந்த இந்தத் திருநங்கை ஏதோ ஒரு குழந்தைக்காகப் பாடும் தாலாட்டு பின்வருவது.

மொடமா பொறந்தாலும் மனந்தான் திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பால் மாறி பிறந்து விட்டோம் நம் மீது தப்பென்ன
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
 நம் பொறப்பு ஒசந்ததடி நீ உறங்கு என்மகளே
பெண்ணான ஆண்மகளே”

ஏழைகளுக்கு உதவாமல் இறைவனுக்குச் செலவு செய்யும் ஆன்மிகத்தை,

“நீ ஏற்றிய மெழுகுவர்த்தியின்
 ஒளியை தேவன் ரசிக்கவில்லை
ஒளியிழந்த குடிசைகளுக்கு
நீ ஒளி ஏற்றாததால்
நீ அபிஷேகிக்கும் பாலை 
தெய்வம் விரும்பவில்லை 
பாலில்லாமல் அழும் குழந்தைகளுக்கு
 நீ கொடுக்காததால்”

என்று என்றுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாத இவர், குழந்தைக்காகப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பேசுகிறார்.  


            அர்த்தநாரியாகச் சிவனை வழிபடும் மானுடம் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் மதிக்காது துன்புறுத்துவது வேதனையிலும் வேதனை. காக்கை குருவி எங்கள் சாதி என்று அஃறிணை பாலையும் உயர்திணைப் பாலுடன் சேர்த்துப் பாடிச்சென்றான் பாரதி. ஞானமும் நல்லறமும் நிரம்பி வழியும் சதையும் உணர்வுமாக இருக்கும் இவ்வுயர்திணையின் மூன்றாம் பாலை மதிப்பதும் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் எக்காலமோ? 

பார்க்க முக நூல் பக்கங்கள்
ப்ரியா பாபு
https://www.facebook.com/priyababu.priyababau
கல்கி சுப்ரமணியன்
https://www.facebook.com/kalki.subramaniam
ஆயிஷா ஃபாருக்  
https://www.facebook.com/Ayeshafarook


இந்தக் கட்டுரை வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் இணைந்து நடத்திய “உலகப் படைப்பிலக்கியங்களில் பெண்களின் பங்கு” என்னும் தலைப்பில் அமைந்த மாநிலக் கருத்தர்ங்குக்கு வழங்கப் பட்டது.8 கருத்துகள்:

 1. ஒவ்வொரு கவிதை வரியும் அவர்களின் ஆதங்கத்தையும், வலியையும் உணர முடிகிறது... தன்னம்பிக்கை என்பதை அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம்...

  சிறப்பான கட்டுரை... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மால் இதைத் தவிர என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை.

   மிக்க நன்றி தனபாலன் சார்.

   நீக்கு
 2. வாள் வீச்சாய் வார்த்தைகள் ...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. மிகச்சிறப்பான கட்டுரை. அவர்களின் உணர்வுகளையும் திறமைகளையும் அழகாக எடுத்து சொன்னீர்கள் மேடம். ஆயிஷா பாரூக் முகநூலில் நான் நட்புடன் பழகும் இனிய சிறந்த தோழி. திரு நங்கையர் பற்றி ஒரு சிறு கவிதை எழுத முயன்றதில் அன்று உருவான சில வரிகள்:
  அரு திருநங்கையர்...
  *****************************
  ஆண்டவன் அன்பினில்
  மலர்ந்தது ஓரினம் - அவன்
  அருளினில் விளைந்தது
  அழகிய உன்னதம்!!!
  அருள் நிறை நங்கையர்
  அரு திருநங்கையர்!!

  உருகும் உணர்வுகள்
  கருக்கினர் தீயினில்...
  கருவினில் சுமந்தவள்
  அருகினில் வளர்ந்தவர்
  தெருவினில் வீசினர்....
  பூஜை மலர்களின்
  புனிதம் புரியாமலே!!!

  அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை
  அர்த்தமுடன் வணங்கும் நாம்...
  வணங்கிட வேண்டாம்...
  உணர்வுள்ள திருநங்கையவள்
  மனம் மதித்தால் அது போதும்
  மணம் வீசும் அவள் வாழ்வும்!!!

  ---கீர்த்தனா---

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதாரவி அவர்க்ளே,

   மிக அழகான கவிதை.

   //மனம் மதித்தால் அது போதும்
   மணம் வீசும் அவள் வாழ்வும்!!!//

   ம்ம் மிக அழகான வரிகள். கல்வியிலும் ஞானத்திலும் பழகும் பண்பிலும் சிறந்து விளங்கும் இவர்களையெல்லாம் நாம் மேலெடுத்துச் செல்லவில்லை என்றால் எப்படி?

   முதல் வருகை, முதல் கருத்து இரண்டும் மகிழ்ச்சியாக..

   நீக்கு
 4. பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில் நிலையங்களிலும், டோல் பூத்‌துக்களிலும், கையேந்தி நிற்கும் நிலை மாறி

  தங்களுக்கென்று ஒரு சுய தொழில் புரிந்து தங்களின் நிலையை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.

  அரசும் இவர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு தராவிட்டாலும்.
  பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில் நிலையங்களிலும், டோல் பூத்‌துக்களிலும் இவர்கள் சுய தொழில் புரிவதற்க்கு ஏற்றார் போல். அங்கு இயங்கும் அனைத்து ஸ்டால் கடைகளும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே என்று ஒதுக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் இவர்களை விட உயர்ந்த நிலை அடைவோர் எவரும் இலர்.

  இதை எந்த அரசியல்வாதி துணிவுடன் செய்வார் என்பதும் கேள்விகுறியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வாடாமல்லி. அரசியல் வாதிகளா? அதிலும் இலாபம் பார்ப்பார்களே......

   அப்படி ஒன்று நடந்து விட்டால் நன்றாகத்தான் இருக்கும்

   நீக்கு