“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

காரைக்கால் பேயின் பெண்ணியம்ஆண்களுக்குத் துணையாக நின்று  அவர்களின் வாழ்வில் சுவை சேர்ப்பவர்கள் பெண்கள். தமிழகம் கண்ட பெண்மணிகள் பலரும்
“தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்னும் வள்ளுவரின் வாக்கின் படி பிரச்சனைகளின் போது தம் கற்பையும் நிலை நிறுத்திக் கொண்டு தம் குலத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் துணிச்சலுடன் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர். அதே சமயத்தில் அநீதி கண்ட போது ஆர்த்தெழுந்து அதனை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.
மன்னனின் மடத்தனத்தைச் சுட்டிக் காட்டி, முலை திருகி மூட்டிய நெருப்பால் ஊரை அழித்து பெண்மையின் ஆற்றலை நிலை நாட்டியவள் சிலம்புச்செல்வி கண்ணகி. ஆடவனின் துணையின்றி அறப்பணி செய்து அகிலம் போற்ற வாழ்ந்திட முடியும் என்று வழிகாட்டியவள் அறச்செல்வி மணிமேகலை. இவர்களைப் போலவே ஆன்மிகப் புரட்சி செய்தவர் காரைக்காலில் மலர்ந்த ஆன்மிகச்செல்வி புனிதவதியார்..
சைவ அடியார்களில் பெண்கள் மூவர். அவருள்ளும் முதன்மையானவர் பேய்ப்பெண்ணாக உருமாறிய புனிதவதியார்.
துன்பத்தின் எல்லை பல்வேறு விதமான வினோதமான முடிவுகளைத் தரும் என்பது விதி. தன்னைத் தானே அழித்துக் கொள்வதும் மற்றவரை அழிப்பதும் என்னும் முடிவுகள் இவ்விதியில் அடங்கும். இவை இரண்டுமே அடங்க மறுக்கும் மனப்போக்கைக் காட்டுவதே. இதில் இரண்டாவது முடிவைத் தேர்ந்தவர் கண்ணகி. முதலாவது முடிவைத் தேர்ந்தெடுத்தார் புனிதவதியார்.
அன்பும் ஆசையுமாக இருக்க வேண்டிய துணைவன் பக்தியைக் காரணம் காட்டி விலகியதால் அதே பக்தியை உலகுக்கு எடுத்துக் காட்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் புனிதவதியார். பக்தியைக் காட்டி தம்மை நிலைநாட்டுவது எவ்வாறு அடங்க மறுக்கும் மனப்போக்கு என்ற வினா எழலாம். இயற்கையின் நியதிக்கு மாறாக  வாழ நினைப்பது அடங்க மறுக்கும் ஒரு மாற்றுச் சிந்தனைவாதியின் செயலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
இறைவனை வேண்டிப் பேய் வடிவத்தைப் பெற்ற புனிதவதியார் “காரைக்கால் பேய்” என்றும் செடியைப் போல அடர்ந்த முடியை உடைய காரைக்கால் பேய் (செடிதலைக் காரைக்காற் பேய்) என்றும் கனல்வாய் எயிற்றுக் (எயிறு-பல்) காரைக்காற்பேய் என்றும் தம்மைத் தாமே கூறி மகிழ்ந்து கொள்கிறார்.
இதனைப் பக்தியின் முற்றிய நிலை என்று பார்ப்பதை விட தோல்வியின் மடை மாற்று அல்லது மனப்பிறழ்வு என்று பாப்பது உளவியலாரின் நோக்கு. இல்லற வாழ்வில் தோல்வி அடைந்த தாம் எப்படியாவது தம் கொழுநனையும், இந்தச் சமுதாயத்தையும் தண்டிக்க வேண்டும் என்று நினைத்த நினைப்பின் தீவிரமும் தம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் மாற்றுச் சிந்தனையுமே இந்த தீவிர பக்திக்கும் அழகுருவம் வேண்டாம் என்று பேயுருவம் வேண்டிப் பெற்றமைக்கும் காரணிகள் எனலாம்.
புனிதவதியார் காரைக்காலில் பெருவணிகன் தனதத்தனின் குலக் கொழுந்தாய் பிறக்கிறார். செல்வச் செழிப்போடு வளர்கின்றார். அவரைப் பரமதத்தனுக்குச் சீரோடும் சிறப்போடும் மணம் செய்து கொடுத்த தனதத்தன் தம் மகளைப் பிரிய மனமின்றி பெருஞ்செல்வம் தந்து மணமக்களைக் காரைக்காலிலேயே தங்க வைக்கின்றார்.
இருவரும் இனிய இல்லறம் நடத்தி வந்த வேளையில்  பரமதத்தனைக் காண வந்த வணிகன் ஒருவன் இரு மாங்கனிகளைத் தருகிறான். அதனை இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான் பரமதத்தன். சிவனடியார் ஒருவர் அரும்பசியுடன் வர, உணவு சமைக்கப்பட்டு காய் சமைக்கப் படாத நிலையில் அந்த மாங்கனிகளில் ஒன்றை இலையில் இட்டுச் சிவனடியாரின் பசியை ஆற்றுவிக்கிறார் புனிதவதியார்.
            நண்பகலில் உணவு உண்ண வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாங்கனியைப் பரிமாறுகிறார். அது சுவையாக இருக்க தாம் அனுப்பியதில் மீதமிருக்கும் மற்றொன்றையும் வைக்கும்படி கேட்கிறான் பரமதத்தன். செய்வதறியாது அஞ்சி நடுங்கிய புனிதவதியார் இறைவனை வேண்ட, இறையருளால் ஒரு கனி கிடைக்கிறது. அதனைப் பரமதத்தனுக்குப் பரிமாறுகிறார்.
முன்னர் அந்த மாங்கனியைப் பரிமாறியது சிவனடியாருக்குத்தான். அப்படியிருக்க இதற்குப் புனிதவதியார் அஞ்ச வேண்டிய காரணம் என்ன என்று தெரியவில்லை. அடியாருக்கு உணவு படைப்பது அஞ்ச வேண்டிய செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு வேளை, தான் இல்லத்தில் இல்லாத போது ஒரு ஆடவர் இல்லத்திற்கு வருவதை விரும்பாதவனா பரமதத்தன் என்னும் வினா எழுவதைத் தடுக்க முடியவில்லை.
இறையருளால் பெற்ற கனியின் சுவை முன்னதின் சுவையைக் காட்டிலும் மதுரமாக இருக்கவே “இது ஏது” என்று வினவுகிறான் பரமதத்தன். புனிதவதியார் உண்மையைச் சொல்கிறார். அப்படியென்றால் மற்றொரு கனியைப் பெற்றுக் காட்டு என்கிறான் பரமதத்தன். இறையருளால் மற்றொன்றும் பெற்றுக் காட்டுகிறார் புனிதவதியார். அச்சம் கொண்ட பரமதத்தன் இவள் மானிடப் பிறவி அல்லள். தெய்வப் பிறவி என்று அவரை விட்டுப் பிரிந்து விடுகிறான்.
            புனிதவதியாரைப் பிரிவதற்காக வங்கப் பயணம் மேற்கொண்ட பரமதத்தன் மிகுதியாகப் பொருள் ஈட்டி திரும்புகிறான். மதுரையில் ஒரு வணிகர் குலப் பெண்ணை மறுமணம் புரிந்து வாழ்கிறான்.
புனிதவதியாரின் பெற்றோர்க்கு இச்செய்தி தெரிய வருகிறது. அவர்கள் சுற்றம் சூழ அவனிடம் புனிதவதியாரை அழைத்து செல்கின்றனர். அவனோ,
“மானுடம் இவர்தாம் அல்லர் நற்பொருள் தெய்வமாதல்
நானறிந்து அகன்றேன்”
என்று கூறிப் புனிதவதியாரின் பாதத்தை வணங்குகிறான். அத்துடன் நின்றானா? வந்தவன் எப்படி வருகிறான்? மறுமணம் புரிந்து கொண்டு தன் மனையாளுடனும் மகளுடனும் வந்து “இது என் மகள். உங்கள் பெயரைச் சூட்டியுள்ளேன். நாங்கள் வாழ அருள்வீராக” என்று பாதத்தில் விழுந்து பணிகிறான்.
            அத்துடன் “பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின்” என்று உற்றார் உறவினரையும் புனிதவதியாரைத் வணங்குமாறு கூறுகிறான்.
            இந்நிலையில் அப்பெண்ணின் மனம் எப்படி இருந்திருக்கும். தன்னை விலக்கிய கொழுநன் தனியனாக இல்லாமல் மனைவி, மகளுடன் வந்து காலில் விழுந்தது அதிர்ச்சியாக இருந்திருக்கும். பேரிடி தாங்குமா பேதை இதயம்? புனிதவதியார் இனி தனக்கு இல்லற வாழ்வு இல்லை என்பதை உணர்கிறார்.
தன் கொழுநன் எங்கோ சென்றுள்ளான் வருவான் என்று நினைத்து வாழ்ந்து வந்த வரையில் ஒரு அமைதியான குடும்பப் பெண்ணாக இருந்த புனிதவதியார், கற்பறம் வழுவாது வாழ்ந்து வந்த தன்னைப் பக்தியைக் காரணம் காட்டி விலக்கியது மட்டுமல்லாமல் வேற்று மணமும் புரிந்து வாழ்ந்த தன் கொழுநனின் செயலைக் கண்ட போது ஒரு பெண்ணியவாதியாக உருமாறுகிறார்.
எந்த பக்தியால் தன் இல்லற வாழ்வை அழித்தார்களோ அதே பக்தியால் தான் உயர்பதம் அடைய நினைத்திருப்பார். அமைதிப் புயலாய் மாறிய அந்தப் புரட்சி வெறியின் அடையாளமாகவே,
“அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்… அவர்க்கல்லால் மற்றொருவர்க்காகப் போம் எஞ்ஞான்றும் ஆள்” 
(அற்புதத் திருவந்தாதி: 6)

என்றும்,
“வானத்தான் என்பாரும் என்க,மற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் என்க – ஞானத்தான்
முன்னஞ்சத் தால்இருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத்தான் என்பவள் யான்” (அற்புதத் திருவந்தாதி: 6)

என்றும் ஈசனை “வானத்தான்,  தானத்தான், கண்ட நீலத்தான் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவன் “என் நெஞ்சத்தான்” என்று கூறி என்றும் தம் நெஞ்சத்தில் இருப்பவன் இறைவனே என்று அடித்துச் சொல்கிறார்.
            தம் கொழுநனுக்குப் பயன்படாத ஊனுடம்பை வேண்டாம் என்று ஒதுக்கிப் பேய் உடம்பை வேண்டிப் பெற்றது முற்றிலும் விரக்தியின் அடையாளம். இளமையும் அழகும் இனி யாருக்காக என்ற வெறுப்பின் உச்சத்தில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை மனப்பான்மையே பேயுருவம் வேண்டிப் பெற்றமை எனலாம். அளவில்லாத அன்பு கொண்ட ஒருவரின் அன்பு வேறு பெண்ணிடம் மாறும் போது, இனி அவன் தனக்கில்லை என்று முடிவாகும் போது அவனே கதி என்று நம்பி வாழ்ந்த பேதைப் பெண்ணின் மனம் எடுக்கும் அவசர முடிவாக இதனை நோக்க முடிகிறது.
            “பரமதத்தன் நீவிரும் வணங்குமின்” என்று சுற்றியிருந்தவர்களைப் பார்த்து கூறுகிறான். “இது என்ன கொடுமை” என்று சுற்றத்தினர் கூறிக்கொண்டு நிற்கின்றனர். பரமதத்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அக்கணத்திலே புனிதவதியார் இறைவனை நோக்கி வரம் கேட்டு விடுகின்றார். இதனை,
“மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை       
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்”
என்கிறது பெரியபுராணம்.
            இவன் முடிவு இது என்றால் என் முடிவு இவனுக்காக நான் தாங்கிய வனப்பான அழகிய உடலை பேய் போல மாற்றிக் கொண்டு வலம் வருவேன் என்று தன் எதிர்ப்பைக் காட்டி இருக்கலாம். இந்த எதிர்ப்புக் குரல்,
“ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்          
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்     
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்”

என்று ஆணியப் பார்வையில் ஒலி மாற்றி உச்சரிக்கப் பட்டு இருக்கலாம்.         
பொதுவாக எல்லோரும் வேண்டும் சுவர்க்கப் பதியை வேண்டவில்லை.,
“பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்
மாயன்ஆட மலையான் மகளும் மருண்டு நோக்கும்”
(திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-20)
 இடுகாட்டுப் பதவி வேண்டுகிறார். பேய்களெல்லாம் கூடி சண்டையிட்டுக் கொண்டு பிணங்களைத் தின்னுவதும் அச்சம்தரும் இடுகாட்டில் ஈசன் ஆட அதைக் கண்டு பராசக்தியே அஞ்சும் இடுகாட்டில் அமரும் பதவியை வேண்டுவது அப்பெண் கொண்ட சீற்றத்தின் உச்சம் எனலாம்.
மார்பகங்கள் வற்றி, நரம்புகள் மேல் எழுந்து, பற்கள் விழுந்து, கண்களும் வயிறும் குழி விழுந்து தலை மயிர் அனல் சிவப்பாகி, கோரைப் பற்கள் இரண்டும் நீண்டு, நீண்ட கால்களையுடைய பெண் பேய் அலறிக்கொண்டு, காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகளை எட்டுத் திக்குகளிலும் வீசி அனலில் ஆடி அங்கம் குளிரும் இடமான திரு ஆலங்காட்டுக்குச் செல்ல விரும்பி வேண்டுகிறார். அரவம் அணிந்த இறைவனிடம் வரமும் பெறுகிறார்.
இல்லறம் புரிந்த இனிய நாட்களில் ஆண்டவனையும் அடியாரையும் போற்றுதல் தவிர வேறொன்றும் அறியாதவர் அம்மையார். அக்கால கட்டத்தில் அச்சம் மடம் நிறைந்தவராக விளங்கியுள்ளார். மேலும் இல்லறம் நடத்திய காலத்தில் இலக்கியங்கள் படைத்ததாகவோ படித்ததாகவுவோ கூட அறியப்படவில்லை. அப்படியிருக்க பேய் வடிவு தாங்கியது, தலங்கள் தோறும் தனியளாகச் சென்றது, அரவனே வியக்கும் புதுமையாய் திருக் கயிலை மலையைத் தலையால் கடந்தது, பேயாடும் இடுகாட்டில் இருக்க வரம் கேட்டுப் பெற்றது, திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி முதலிய பக்தி இலக்கியங்களைத் தமிழுக்குப் படைத்து அருளியதுன்று அடுக்கடுக்காக அவர் செய்தன எல்லாம் அடங்க மறுக்கும் செயல்களே. ஆனால் இவை அனைத்தும் இறை பக்தியை அடிப்படையாகக் கொண்ட செயல்கள். தம் இல்லற வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மடை மாற்றம் செய்ய பக்தி என்னும் தூய மார்க்கத்தைக் கைக்கொண்டார் என்றாலும் முதன் முதலில் இல்லம் விட்டேகி புதுமைப் புரிந்த பெண்ணியவாதி காரைக்காலம்மையார் என்று திட்டமாகக் கூறலாம்.
மாங்கனியால் இல்லற வாழ்வை இழந்து உயிருக்கு உறுதி பயக்கும் ஆன்மிகத்தைக் உறுதியாகப் பிடித்த அம்மையார் நாயன்மார்களில் முதல்வராக இருப்பதும், அறுபத்து மூவரில் அம்மையார் அமர்ந்திருக்கும் சிறப்பைப் பெற்றிருப்பவர் என்பதும், அம்மையாருக்குக் காரைக்காலில் கோயில் அமைந்துள்ளது என்பதும். அங்கு ஆண்டுதோறும் மாங்கனித் திருநாள்  நடைபெறுகிறது என்பதும் முதல் பெண்ணியவாதியின் ஆன்மிகப் பயனத்தின் முதல் வெற்றி எனலாம்.


(இக்கட்டுரை அகரமுதல் இணைய இதழ் ( மற்றும் சோழநாடு மாத இதழ் இர்ண்டிலும் இடம்பெற்றது.)

7 கருத்துகள்:

 1. அருமையான குறள்களுடன் சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. சைவ அடியார்களில் பெண்கள் மூவர். அவருள்ளும் முதன்மையானவர் பேய்ப்பெண்ணாக உருமாறிய புனிதவதியார்.//சிறந்த பகிர்வு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. புலிக்குப் பிறந்தது சோடை போகுமா.

  பதிலளிநீக்கு
 4. fun88 | Join our fun88 and get 25 free spins for newbie
  Play fun88 casino games online. Enjoy the fun and 12bet excitement of Play fun88 soikeotot free slots and casino games right from your william hill phone.

  பதிலளிநீக்கு