“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 7 மார்ச், 2011

போடு...போடு.....உக்கி போடு...



உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்காடா? ன்னு பிளட் பிரஷர் ஏறிக் கோபமா கத்திகிட்டு இருக்கும் போது, “உங்க பிள்ளைதானே என்று கூறி நம் கோபத்தைக் குறைக்கும் (இரத்தக் கொதிப்பையும்) அளவுக்கு நம் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் போட்டிக்குத் தயார் ஆகனும்னா இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் போதுமா? ஆழமான சிந்தனையும் தேவை இல்லையா? அபாரமான அறிவுத்திறன் உள்ளவனா ஆக வேண்டாமா?

உங்களுக்கே நல்லா தெரியும். முருகனுக்கும் விநாயகனுக்கும் நடந்த போட்டியில மாம்பழம் யாருக்குன்னு முடிவு செஞ்சது எது? மூளை. பலமா இல்ல உடல் பலமா? தன்னோட தொப்பையைக் கூட தூக்கிட்டு ஒட முடியாத ஒரு குண்டுப் பிள்ளை, போட்டியில ஜெயிச்சதுன்னா. அது சூப்பர் பெரெயினாலதானே. அந்தக் காலத்திலேயே, புராண காலத்திலயே ஒரு சின்ன மாம்பழத்தை ஜெயிக்க மூளை வேண்டியிருந்திருக்கு. இந்தக் காலத்தில???

உலகத்தைச் சுத்திட்டு வான்னு சொன்னா செஞ்சிடலாம். முருகன் சுத்தன மாதிரி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்து பரிசை வாங்கிடலாம். இருக்கவே இருக்கு ஏரோ மயில். பல வண்ணங்கள்ள.. ஆனா அதை யாரு மதிக்கறாங்க.. மூளை இருக்கா? மூளைதான் முதல்லன்னு கேக்கற காலமா இல்ல இருக்கு.. இந்தக் காலத்தில படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும்... அப்பப்பா!! பிள்ளைகள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வாய்ப்புக்கு நூற்றுக்கணக்கானவர்கள் போட்டி போடுற இந்தக் காலத்தில் மூளை இல்லாம என்ன செய்ய முடியும்.

மூளை என்பதெல்லாம் இயற்கையில் இருக்கனும். திடீர்னு மூளை வளரனும்னு சொன்னா எப்படி வளரும். அது என்ன மரம் செடி கொடியா? கொஞ்சம் தண்ணீரும் கொஞ்சம் ஆட்டுப்புளிக்கையையும் போட்டு நல்லா கொத்தி விட்டு வளர்க்க? மண்டை ஆயிற்றே.. ரணகளமா இல்ல போயிடும்.

அதனால்தான் அந்த யானை பலமுள்ள மூளைக்கார பிள்ளை சொல்லிக்கொடுத்த ஒரு யோகாவைச் செஞ்சா அவரு மாதிரியே மூளை வளரும். அப்பரம் மாம்பழம் என்னங்க மாம்பழம்? ஒரக்கண்ணாலகூட உங்களத் திரும்பிப் பாக்காத உங்க மாமா பொண்ணைக் கூட நீங்க ஈசியா மடக்கிடலாம்.

அதுக்கு ஒரு எளிமையான வழி இருக்கிறதுன்னு சொல்றாரு..லாஸ் ஏஞ்சல்ஸ் நாட்டைச் சேர்ந்த எரிக் ராபின்ஸ் (Dr. Eric Robins) என்ற மருத்துவர்.

ஒரு சின்ன யோகா செய்தால் மூளை பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறதாம். ஆமாங்க உடல் பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லையாம். உணர்வைத்தூண்டும் மூளையையும் தூண்டுவதே உடற்பயிற்சியாம். மூளையில் உயிரணுக்கள் இறந்து விட்டால் மீண்டும் புதிய உயிரணுக்கள்உற்பத்தி ஆவது இல்லை என்ற பழைய அறிவியல் இந்தப் புதிய உடற்பயிற்சியால் புது முடிவை அடைந்துள்ளதாம். இந்த உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல், படிப்புத்திறன் இரண்டையும் அதிகரிக்கச் செய்யும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்ற நரம்பு மண்டலப் பகுதியில் புதிய செல்கள் உருவாகின்றனவாம்.

யேல் பல்கலைக் கழக நரம்பியல் நிபுனர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Aung) அவர்களும் இந்த யோகாவால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால் மூளை பலம் பெறும் என்கிறார்.

இந்த யோகாவால் ஆட்டிசம் போன்ற மூளை நோய்களும் குணமடைகிறதாம். அப்படி என்னதான் யோகா என்று கேட்கிறீர்களா?

சரி யோகாவைத் தொடங்குவோம். முதலில் இரண்டு கால்களையும் நேராக வைத்துக்கொண்டு நிறகவேண்டும். முதுகு வளையக் கூடாது. அது மிகவும் முக்கியம்

நின்றவுடன் இரண்டு கைகளையும் மாற்றிப் பிடித்துக் கொண்டு வலது கையால் தலையின் இடப்பக்கத்திலும், இடக் கையால் தலையின் வலப் பக்கத்திலும் நங்கு நங்கு என்று இல்லை. லேசாகப் பனிரெண்டு முறை கொட்டிக் கொள்ளவும்.

அடுத்து வலது கையால் இடது காது மடலையும் இடது கையால் வலது காது மடலையும் பிடித்துக் கொள்ளவேண்டும். கட்டை விரல் முன்பக்கமும் சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் முன்கை உங்கள் முன்புறம் மார்போடு லேசாக உராய்வது போல இருக்க வேண்டும். இதுவும் ரொம்ப முக்கியம். இதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம் என்னவென்றால் இடது கை உட்புறமும் வலது கை வெளிப்புறமும் இருக்க வேண்டும்.

அடுத்து என்ன அப்படியே எத்தனை முறை கொட்டிக் கொண்டீர்களோ அத்தனை முறை சும்மா உட்கார்ந்து எழுந்திருங்கள். முடிந்து போயிற்று பிரெயின் வாஷ் யோகா.. இல்லீங்க . சூப்பர் பிரெயின் யோகா..

‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது. இப்ப என்னன்னு புரிஞ்சி இருக்குமே.. நம்ம புள்ளையார் தோப்புக்கரணம் தான் இப்ப வெளி நாடு போயி சூப்பர் பிரெயின் யோகாவாக (Super Brain yoga) ரெஃப்ரெஷ் ஆயிருக்கு. இப்படி நம்ம ஆளுங்க கண்டு பிடிச்சதையெல்லாம் சுட்டுட்டுப் போயி காசு பண்ணிடறாங்களே. அதுமட்டுமில்லை. நம்மளயும் ஏதோ புதிசு கண்டு பிடிச்ச மாதிரி பிரெயின் வாஷ் செஞ்சிடறாங்க.

இத்தனை காலமா நாம் புள்ளையாரு முன்னால இந்த யோகாவைச் செய்து கொண்டு இருக்கிறோமே. இதற்கு ஒரு படம் போட்டு (யூ டியூப்) விளம்பரம் செய்யனும்னு யாருக்காவது தோனிச்சா? பக்திமான்னு சொல்லிக்கற ஆன்மிக வாதிகளையும் சேர்த்துத் தான்.

இதுக்கு கைவசம் புராணமெல்லாம் வேற வெச்சிருக்கோம். ஆமாம்ங்க. புள்ளையாருக்கு இப்படி தோப்புக்கரணம் போடுவது ஏன்? எதனால் தொடங்கியது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? .

காவிரியின் துள்ளலை அடக்க தன் கமண்டலத்தில் பிடித்து அடைத்து விட்டார் குருமுனி அகத்தியர். அவர் தவத்தில் இருக்கும் போது காகம் வடிவில் அந்த இந்த குரும்புப் பிள்ளையார் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிட்டுட்டார். பயங்கர கோபத்துடன் அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினாராம். காகமாக இருந்த விநாயகர் சுய உருவம் எடுத்து உலக நனமைக்காகத்தான் காவிரியை ஓட விட்டேன் என்றாராம்.. பிள்ளையாரால கமண்டலத்தில இருந்து ரிலீஸ் ஆனது. ஆனால் கர்நாடக கமண்டலத்தில் இருந்து இன்னும் ரிலீஸ் ஆக முடியாமல் அடைபட்டுக் கிடக்கிறது. அது வேறு விஷயம். மறுபடியும் பிள்ளையார்தான் வரனும். அது இருக்கட்டும். விட்ட இடத்திற்கு வருவோம். தன் தவறை உணர்ந்த அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டாராம். அதனால் தான் விநாயகரை வழிபடும்போது தலையில் குட்டிக்கொள்கிறோம். இது குட்டிக் கொள்வதற்குக் காரணமாக அமைந்த புராணம்.

சரி... தோப்புக்கரணம் எப்படி வந்தது என்று கேட்பது புரிகிறது? சொல்றேன்.. சொல்கிறேன். ஒரு முறை விளையாட்டுப் பிள்ளை பிள்ளையார், திருமாலின் சக்கரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டுக் கொண்டு விட்டாராம். சின்னக் குழந்தைதானே. போலோ என்று நினைத்து இருப்பார். பிள்ளையார் சிறு வயதிலேயே ரொம்ப பிடிவாதக்குணம் கொண்டவராம். அது மட்டுமல்ல யானை பலம் கொண்டவராம். கஜமுகனான அந்த விடாக்கொண்டனிடம் இருந்து தன்னுடைய தர்மச் சக்கரத்தை வாங்க திருமால் ஒரு பிளான் செய்தாராம். பிள்ளையாரைச் சிரிக்க வைத்து விட்டால் சக்கரம் வாயிலிருந்து கீழே விழுந்து விடும். எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாராம். பிள்ளையார் முன்பு இடக்காதை வலக்கையாலும் வலக்காதை இடக்கையாலும் பிடித்துக் கொண்டு


தோப்புக்கரணம் போட்டாராம். இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டாலே சிரிப்புத் தாங்க முடியாது. திருமால் நான்கு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டால் விடாக்கண்டன் என்ன கொடாக்கண்டனாக இருந்தாலும் சிரிக்காமல்
இருக்க முடியுமா? சிறு பிள்ளையான பிள்ளையாரும் சிரித்து விட்டாராம். அப்பரம் என்ன வடை கீழே விழுந்து விட்டதாம். நரி எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாம். சக்கரத்தைத்தான் சொன்னேன்.. திருமால் எடுத்துக்கொண்டு ஓடினாராம். அன்று முதல் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்ததாம்.

புத்தியும் அந்தப் புத்தியால காரிய சித்தியும் தருவதற்காகவே இரு தேவிகளை அமர்த்தியிருக்கும் விநாயகர், ஷேமம் லாபம் இரண்டையும் தர இரண்டு மகன்களையும் அமர்த்தி இருக்கிறார் அப்படின்னு சொல்ற புராணமும் நம்மகிட்ட உள்ளது.

தோப்புக்கரணத்தால் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு கிடைக்கும். சரியான
இரத்த ஓட்டம் மூளைக்குக் கிடைப்பதால் அமைதியான நினைவுகள் தோன்றும்.

இரு கரங்களால் தலையில் குட்டிக்கொள்வதால் சகஸ்ராரம் என்ற இடத்தில் அமுதம் சுரக்கும். தோப்புக்கரணம் போடும்போது சுஷீம்னா என்ற என்ற நாடி தூண்டப்படுகிறது. விநாயகரைக் இம்முறையில் வணங்குவதால் நாடி சுஷீம்னாவும் தூண்டப்பட்டு அமிர்த கலசமும் சுரப்பதால் நல்ல ஞானத்தை அடைய முடியும் என்று சித்தர்களான தமிழ் யோகா மாஸ்டர்கள் என்றோ சொல்லிச் சென்றார்கள்.

நம்ம வாத்தியாருங்க.. படிக்காத மக்குப் பிள்ளைங்களுக்குக் கொடுக்கற தண்டனை என்னவாக இருந்தது. வீட்டு வேலை செய்துட்டு வரலையா? போடு இருபத்தைந்து. தப்பு பண்ணினியா போடு இருபத்தைந்துன்னு சொல்லி குழந்தைகளைப் போட வைத்துத் தண்டனைக் கொடுக்கற சாக்கில் மூளையை வளர்த்தாங்கள். இது அந்தக் காலத் தமிழ் பள்ளியில் மட்டுமல்ல. இப்ப இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளியா இருந்தாலும் தண்டனை ஒன்னுதான். பேருதான் வேற. இவங்க Sit ups னு .சொல்லுவாங்க. இதெல்லாம் இந்தக் காலத்திலயும் நடைமுறையில் இருக்கு. அதனால்தான் இந்தியர்களின் பிரெயின் சூப்பர் பிரெயினாக இருக்கிறது என்கிறார்களோ.... என்ன இருந்து என்ன... வடை பொச்சே....

சரி. சரி.. எல்லோரும் காலையிலயும் மாலையிலயும் பிள்ளையார் முன் போடுங்க ஒரு பனிரெண்டு..... ஏன் சொல்றேன்னா, தோப்புக்கரணம் போட்டாவது மூளையை வளர்க்க வேண்டுவது அவசியம். அதைவிட மிகவும் அவசியம் குட்டிக்கரணம் போட்டாவது நம்ம புராதனச் சொத்தை இந்தத் திருட்டுக் கும்பலிடம் இருந்துக் காப்பாற்ற வேண்டுவது.

நன்றி குமுதம் ஹெல்த்.

பின்குறிப்பு:
”உடல் உறவுக்காக உயிரையும் கொடுக்கும் ஆண்கள், உளவியல் ஆய்வு” என்ற தலைப்பில் ஈகரைதமிழ் களஞ்சியதில் பதிவான கட்டுரைக்குக் கலைவேந்தன் அவர்களின் கீழ்க்கண்ட பின்னூட்டம் கண்டதால் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்யும் எண்ணம் எழுந்தது। நன்றி கலை।

//சிலபல நல்ல ஆய்வு முடிவுகளுக்குப்பின் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையைஇறுதியில் மொழிந்த இந்த வல்லுனர்களுக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே நம்மிழர் குறிப்பிட்டுச் சென்று விட்டார்களே..

நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம்ம் வெகுவாகப் பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..//

9 கருத்துகள்:

  1. கஜானனம் பூதகணாதி சேவிதம்... டெய்லி குட்டிக்கறேன்.. விலாவாரியா மக்களுக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி.. ;-))

    பதிலளிநீக்கு
  2. ஆதிரா நலமா? வானவில் பக்கமே வராததற்கு தோப்புக் கரணம் எப்போ போடப்போகிறீர்கள்? மீண்டும் உங்கள் பதிவு காண மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு... அருமையான விளக்கம்..

    பள்ளிகூடத்தில் எத்தனைமுறை தினம் தோப்புக்கரணம் போட்டிருப்பேன்... இப்ப தான் போடுறது இல்லை...

    டீச்சர் சொல்லிடீங்க இனி தினம் செய்ய வேண்டியதுதான்... அதோட வேறென்ன வேலை...

    பதிலளிநீக்கு
  4. வந்து தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டதற்கு மிக்க நன்றி RVS

    பதிலளிநீக்கு
  5. ஆஹா.. ஓனர் ஆப் மாத்தி யோசி.. நல்லா இருக்கே பேரு.. வாங்க... வாங்க.. முதல் முறை வந்திருக்கீங்க..நல்ல கருத்தும் சொல்லி இருக்கீங்க. நன்றி.. மீண்டும் வருகையை எதிர்நோக்கி....

    பதிலளிநீக்கு
  6. இன்னும் கொஞ்சம் நாள் மோகன் ஜி. சீக்கிரம் வந்துடுவேன். வந்து உங்க எல்லார் வலைப்பூவிலும் 108, 108 தோப்புக்கரணம் போட்டு விடுகிறேன். அதுவரை உங்கள் அனைவரின் அன்பை எதிநோக்கும் அன்பான சோம்பேறி ஆதிரா..

    பதிலளிநீக்கு
  7. வாசன் இப்படியா தோப்புக்கரணம் போடுவாங்க. ஒழுங்கா போடுங்க.. நல்லா உக்காந்து எழுந்திரிங்க.. ஆம் அப்படித்தான். வேற வேலை இருந்தாலும் போடனும். மூளை வளர வேண்டாமா?

    நன்றி வாசன் கருத்துக்கும் அன்புக்கும்..

    பதிலளிநீக்கு
  8. பள்ளியில தோப்புக்கரணம் போடச் சொன்னதை ஒரு ஆன்மீக பனிஷ்மெண்ட்னு மட்டும்தான் நெனச்சுட்டிருந்தேன். ஆசிரியப் பெருமக்கள் அதுலயும் நம்ம அறிவு வளர்ச்சியத்தான் நினைச்சாங்கன்றது கிரேட். (அப்படியும் எனக்கு வளரலைன்றது வேற விஷயம், ஹி... ஹி...) தலையில் குட்டுவதற்கும் தோர்பிக்கரணத்திற்குமான கதைகளும் ஆஹா....

    பதிலளிநீக்கு