“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 18 பிப்ரவரி, 2012

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு....

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

தேனாக இருந்தாலும் சுவைப்பதற்கு
திகட்டி விடும் சிலநாளில்
தினந்தினந்தான் கேட்டாலும் தித்திக்கும்
திகட்டாத குரலினிமை
கானெழுந்த சந்தனத்து நன்மணமாய்
கனித்தமிழில் மணக்கின்றாய்
ஊனெழுந்து உதிர்க்கின்ற மொழியாலே
உலகத்தை இழுக்கின்றாய்

இனிமை பூத்த நிலவொளியில்
இரவு பூக்கும் இசைமலர் நீ
இரவெல்லாம் காய்ச்சி வைத்த
இளைய தமிழ் அமுதம்நீ
மழைத்துளிகள் ஒன்றாகிக்
கொட்டுகின்ற பாட்டருவிநீ
மனமெல்லாம் அன்பாலே
நிறைந்து விட்ட தேனருவிநீ

வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ
வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ
தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ
தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ
ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க
உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று
போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி
பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!

இது தம்பி உதயாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி ஜெய் இணையதள வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.

4 கருத்துகள்:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நானும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி மகேந்திரன். மன்னிக்க உங்களையெல்லாம் நீண்ட நாட்களாக காக்க வைத்து பதில் எழுதுவதற்கு. முச்சு விட இயலாதவாறு பணிச்சுமையில் அமிழ்ந்ததால் தாமதமான பதில்.

    பதிலளிநீக்கு