“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 11 அக்டோபர், 2010

டேட்டூஸ் போட்டா சுவை தெரியுமா நாக்குக்கு??



சுவையறி மொட்டுகள்...சுவையானத் தகவல்கள்...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT8Te_OruWaB4Kf28SLjtXZ6kJ26Ao7xiRbapqFL9DiAB1PG8Q&t=1&usg=__WotwbdlPBvjykiagq88PKbxT3gU=

இணையத்தில் எதையோ தேட இப்படி ஒரு நாக்கு கிடைத்தது. இதைப் பார்த்தவுடன் சற்று நேரம் என்ன என்று புரியவில்லை. இன்றைய நவ நாகரிக் மக்களின் டேட்டூஸ் மோகம். எங்கு போய் இருக்கிறது பாருங்கள். இது நாக்கு வரை போய் விட்டது. இப்படி ஒரு நாக்கைப் பார்க்க நேர்ந்ததும் நல்லதாகத்தான் போனது. சுவையுணர இறைவன் படைத்த நாக்குக்கும் ஒப்பனை தேவைதான். அந்த ஒப்பனை வாய்மை என்ற அழகான ஒப்பனை. அதை விடுத்து இப்படியா??.

யாகாவாராயினும் நாகாக்க”. என்று திருக்குறள் சொல்லும். நம் மனதை, நாம் செய்கின்ற செயல்களை அடக்கி ஆளாது விட்டு நாக்கைக் குறை கூறுவதுஎன்னங்க நியாயம். இந்த நாக்கு எத்தனையோ நல்லதை நமக்குச் செய்கிறது. நாம் அதை முறையாகப்பயன் படுத்தாமல் இருந்து விடுவதுடன், குறை வேறு கூறுகிறோம்.
அழகுணர்ச்சி நிறைந்தது இந்தக் காலம்.

கமபர் சீதையின் இடையைச் சொல்லும் போது “பொய்யோ எனும் இடையாள்” என்பார். இதையே கண்ணதாசனோ “இல்லை என்று சொல்வதுந்தன் "இடையல்லவோ; மின்னல் இடையல்லவோ?” என்று பாடுவார். கொடியிடையாள், துடியிடையாள், மின்னார் மருங்காள், இல்லாத இடையாள் என்றெல்லாம் வருணிக்கப்படும்பெண்கள் இப்போது இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.ஆண்கள் குண்டாக இருப்பது இல்லையா என்று தாங்கள் வினவுவது லேசாக என் காது மடலில் குசுகுசுக்கிறது. இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறெல்லாம் வருணிக்கப்பட்டவர்கள் இல்லையே.

அழகு என்றால் பெண்மையும் வலிமை என்றால் ஆண்மையும் அன்று முதல்இன்றளவும் நம் மனதில் பதிவான படிமங்களாக இருக்கின்றன. இதைப்பற்றி நாம் சிந்திக்கும்போது குண்டுக்குக் காரணம் நாக்குதான் என்று எல்லோரும் கூறுவார்கள். ருசி ருசியாகச்சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் குண்டாவார்கள் என்ற எண்ணம் நம் மனத்தில் நிலவுகிறது.இல்லைங்க ருசி பார்க்க நாக்கை விடாது இருப்பதே முதன்மையான காரணம்.

நாக்கு நாம் அதிகமாகத் தின்றாலும் குண்டாகமல்தடுக்கும் பணியை வெகு நேர்த்தியாகச் செய்கிறது. ருசியறிந்து உண்ண அதை நாம் அனுமதித்தால்அது நாம் உண்பதை நம் உடலில் உறுப்புகளாருக்கு, யார் யாருக்கு எதுபிடிக்குமோ என்பது மட்டுமன்றி எது தேவையோ, எவ்வளவு தேவையோ அதை பகிர்ந்து கொடுத்து உடலைசீராக வைத்து இருக்கும். நடுத்தரவயது பெண்கள் பெரும்பாலும் குண்டாக இருப்பதற்கு ஒரு காரணம் நாக்கை மதிக்காமல் இருப்பதே.காலையில் சிற்றுண்டி. எல்லா உணவும் இருந்தும் உண்ண போதிய நேரம் இருக்காது. ஆகவே அது இவர்களுக்கு மொபைல் உண்டி. இவர்கள் காலையில்அலுவலகத்திற்கு ஓடும் அவசரத்தில், ஒரு கையில் சாப்பாட்டுத்தட்டு, ஒரு கையில் பூட்டு சாவி என்று ஓடிக்கொண்டேசாப்பிடுவார்கள். மதிய உணவு ருசியறிந்து சாப்பிட நேரம் இருந்தாலும் உணவு இருக்காது. ஏனெனில் சிறு டப்பாக்குள் அடைபட்டிருக்கும் கட்டுச்சோறு. இதுவும் ஓடுகின்ற கிடைத்ததை எடுத்துப் போட்டு அடைத்துச்சென்றதாக இருக்கும் ஆறி அவலாய்ப் போன சிற்றுண்டியே. .இரவு நன்றாகச்சாப்பிடுவார்கள். ஆனால் அப்போதும் நாவுக்குக் கொடுத்து உண்ணும் அளவுக்குப் பொறுமை இருப்பதுஇல்லை. நாள் முழுவதும் உழைத்த அலுப்பு ஏதோ கொட்டி வயிற்று டப்பாவை அடைத்து மூடிவிட்டு, உறங்கலாம் என்று தோன்றி விடுகிறது. அத்துடன்உண்டவுடன் அயர்ந்த உறக்கம். இவற்றால் குண்டுச் சமுதாயத்தைத் தவிர்க்க இயலாது போய்விட்டதுஎன்பதே உண்மை.

இப்போது தொடங்கிய விஷயத்திற்கு வருவொம். பூவுக்குள் மட்டும் தான் மொட்டு உள்ளது என்பதில்லை. நம் நாவுக்குள்ளும் மொட்டுக்கள் உள்ளன. நாக்கில்9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளில் நிறைந்துள்ள சத்துக்களைச் சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. மூளையின் உதவியுடன் நாக்கு செய்யும் சம தர்மம் இது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. அனைத்து உறுப்புகளும் பலமாக இருப்பதுடன்பகிர்ந்த உணவு நம் உடல் பருமனை சீராக வைத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து உமிழ் நீருடன் கலந்து நிதானமாகச் சாப்பிடும் போது மட்டும் தான் நடைபெறும்.


http://t0.gstatic.com/images?q=tbn:IPRQy-QBXbvIhM:http://www.nelsonideas.com/medical-information/tongue%20taste%20buds.jpg&t=1

அறிவியல் பாடத்தில் நாம் பார்த்திருப்போம். நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளைக் கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள்.அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நாக்கில் சுவைகளுக்கானநாக்கியல் வரைபடம் (மேப்) எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 CharlesZuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லாஇடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார்.நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அல்லது மேட்டு வடிவ மொட்டுகள். அவற்றை சுவை அரும்புகள்அல்லது சுவை மொட்டுகள் என்பர்.

ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கானசெல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் சுமார் 25 வகை சுவைகளை அறிகிறோம். (அறுசுவைகள்என்பது சரியில்லை. அவை இருபத்தைந்துக்கும் மேல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). நாம்அடிப்படை வண்ணங்கள் ஏழு. அதிலிருந்து பல வண்ணங்கள் உருவாவது போல அடிப்படை சுவைகள் ஆறுஎன்று கொண்டு அதிலிருந்து சிறிது சிறிது வேறுபட்ட புது சுவைகள் பல எனக்கொள்ளலாம்..ஏனெனில் ஒரு சுவையில் எந்த பண்டமும் நாம் இக்காலத்தில் பார்ப்பது இல்லை. ஒரே ஐஸ் கீரீம்நூற்றுக்கணக்கான சுவைகளில் (Flavour) இருக்கிறதே..
ஒவ்வொருசுவைக்கும் தனியாகச் சுவையறி செல்கள் உண்டு என்பதும் தவறான கருத்து. அதாவது ஒரு செல்ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலைமூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதிஒரு சுவையை மட்டும் அறியும் என்பதும் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ளஎல்லா மொட்டுகளிலும் எல்லா வகை சுவைகளையும் அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில்சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல(கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன.இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின்பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். அப்போது உடலும் உயிரும்பொருந்திக் கொள்வது போல இவை இரண்டும் பொருத்தமாக ஒட்டிக்கொள்கின்றன. இதனால் இந்தக்கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார்.
அதனடிப்படையில்நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவலை இந்த மூளை அனுப்பி விடுகிறது. கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும். இந்த உறுப்புகள் பஞ்ச காலத்தில் ஹெலிகாப்டரில்இருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களை வாங்க தயாராகக் காத்திருப்பவர்களைப் போல இந்த தகவல் வந்ததும் உணவுச்சத்தை ஏற்க இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. நாக்கு மென்று சுவைத்து சாப்பிட்டு அனுப்பிய பாகற்காயின் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு நாம் உண்ணும் பல சுவைகளும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் உணரப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்பட்டு அந்தச் சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளைத் தெளிவாகப் பிரித்து மூளைக்குத் தகவல் தெரிவிக்க முடிவதில்லை. இவ்வாறு முன்னறிவிப்பு ஏதுமின்றி அனுப்பப்படும் உணவுச்சத்தை சுய மரியாதை மன்னார் சாமிகளான உறுப்புகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆம்...சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அது என்ன கொண்டதைக் கொள்ளும் கொள்ளிடமாஎன்ன? அளவைத் தாண்டும் போது கிட்னியும் போடா சரிதான் என்று தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.

மற்றுமொரு சுவையான போனஸ் தகவலுடன் இக்கட்டுரையின்முடிவுக்குப் போகலாம் சுவை ஏற்பி ஒவ்வொன்றின்கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம்,கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அதன் அருகே உள்ள இன்னொருசிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும்இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும்மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான என்றுகண்டறிந்தார் ஸூக்கர். ஒரு சுவையும் இல்லாத அஜின மோட்டோவின் சுவையை மாமிசத்தின் சுவையுடன்சேர்த்து சுவையாக்கும் சூட்சமத்தை இந்த இன்னொரு அறைதான் செய்கிறது. கண்டிப்பாக அஜினமோட்டோ செய்வது இல்லை.

இந்த அத்தனை பயன்களையும் நாம் நாக்கை நன்கு மதித்துஒழுகினால் மட்டுமே பெற முடியும். எனவே அதிகமாகக் கூடச் சாப்பிடுங்கள். சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும். நொறுக்ஸ் கூட சாப்பிடுங்க. ஆனா அதையும் நொறுக்கிச் சாப்பிடுங்க. அதனால்தான் நொறுங்கத்தின்னால் நோயில்லை என்றனர் நம் முன்னோர். ஆனால் ரசித்துருசித்துச் சாப்பிடுங்கள். பாவம் உங்களுக்காகவே சுவைகளை ருசிக்கக் காத்திருக்கும் நாக்கை மதியுங்கள்.சுய மரியாதைச் உடல் சிங்கங்களான உறுப்புகளுக்கு அவைகள் விரும்பும் சத்தைக் கேட்டுக்கேட்டுக் கொடுங்கள். உங்களை நீங்களே விரும்பும் அழகான, அளவான பருமனுடன் மிளிருங்கள்.....




12 கருத்துகள்:

  1. நாக்கு பற்றிய சுவையான தகவல்கள்.நாவடக்கம் தேவை என்கிறீர்கள். சுவையிலும் பேச்சிலும்..

    திருவானைக்காவில் கோவில்மூடியது கூட உணராமல்,உள்பிரகாரத்தில்,வாயைத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் அசமஞ்சன் காளமேகம். அங்கே இரவு உலா வந்த அகிலாண்டேஸ்வரி,தன் நாவு சுவைத்த தாம்பூலத்தின் குதப்பலை,காலமேகன் நாவில் உமிழ,அவன் ஆசு கவியாய் கவிமழை பொழிந்தான்.
    அருணகிரியின் நாவில்,முருகன் தன் வேலால் பிரணவம் எழுத,திருப்புகழ் உரைத்தான்.

    நாவிர்க்கும் ஞானத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதல்லவா?

    பதிலளிநீக்கு
  2. காளிதாசனுக்கு நாக்கில் காளி எழுதியதாக எங்கோ படித்திருக்கிறேன் மோகன்ஜி. நாவுக்கு அரசர் திருநாவுக்கரசர். நாக்குல அலகு குத்திக்கிராங்களே அதனால டேஸ்ட் மாறிடாதா ஆதிரா? இருந்தாலும் நாக்குல டாட்டூ டூ மச். நானே நானா.... நாக்கே தானா.. அப்படின்னு பாட வச்சுடீங்க... நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வந்து அருமையான கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி. நாவுக்கும் ஞானத்திற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உண்டு என்பார்களே. நாக்கு தடிமனாக இருந்தால் படிப்பு வராது என்பார்களே. அதனால் வெற்றிலை பாக்குக் கூட இளைஞர்களைப் போடக் கூடாது என்பார்களே. கருநாக்கு உடையவர்களை நாமகள் அம்சம் என்பார்கள். அவர்கள் கூறுவது பலிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டே.
    ஒரு ஐயம்,
    கவி காளிதாசனுக்கு காளியிடமிருந்து அருள் கிடைத்தாகக் கூறுவார்களே. அதனால் தான் அவர் காளிதாசன் ஆனார் என்பார்கள். தாங்கள் கூறும் செய்தி புதுமையாக உள்ளது..வருகைக்கு, கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  4. //நாக்குல டாட்டூ டூ மச். நானே நானா.... நாக்கே தானா.. அப்படின்னு பாட வச்சுடீங்க...//

    உங்கள் பாராட்டைப் படித்தவுடன் நானும் நானில்லை.. இயல்பாக தானில்லை என்று பாடத்தோன்றுகிறது RVS மிக்க நன்றி வருகைக்கும் அழகான கருத்துக்கும்..
    அலகு குத்திக்கொள்வதால் சுவை குறையாது RVS . சில நாட்கள் புண் இருக்கும். பின் ஆறிவிடும். புண்ணை ஆற்றும் சக்தி மற்ற எந்த மருந்தையும் விட உமிழ் நீருக்கு (எச்சிலுக்கு) அதிகம் உண்டு.

    ஆனால் இந்த புதுமை மோகம் டேட்டூஸ் போடுவதால் பல் தீய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  5. நாக்கு பற்றிய சுவாரசியமான கட்டுரை படிக்க பெரிதாய் இருந்தபோதினும் பயனுள்ளதாய் முழுவதும் படித்திடும் விதத்துடன்...

    தகவலுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள வாசன்,
    பயனுள்ள தகவல்களைப் பதிய வேண்டியிருப்பின் நீளம் பல நேரஙகளில் தவிர்க்க முடியாததாகிப் போய் விடுகிறது.

    அப்படியாவது உங்களையெல்லாம் என் குடிலில் சிறிது நேரம் தங்க வைத்து விட்டேனே..ஹா ஹா ஹா ஹா..

    இனி வரும் பதிவில் அது குறித்து கவனம் கொள்கிறேன்..

    தாங்கள் கூறிய கான்செப்டையே மாற்றி விட்டேனோ?..

    அத்தனையையும் பொறுமையாகப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு என் மனமார்ந்த நன்றி வாசன்..

    பதிலளிநீக்கு
  7. நாவை பற்றி இவ்வளவு செய்திகளா..... சுவையரும்புகள் மூளையோடு தொடர்பு கொண்டு ஒவ்வொரு சுவையையும் தரம் பிரித்து அததற்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்யும் அற்புதத்தை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்.

    நொறுங்க தின்றால் நோய் நொடி இல்லை என்பார்கள்.. சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு பல், நாக்கு என்ற உறுப்புகள் இல்லாத மாதிரி உள்ளே தள்ளுவார்கள்...
    பல் கொண்டு நொறுக்கினால் நாவிற்கு சுவையும் கிடைக்கும் குடலும் சபிக்காமல் செரிப்பு வேலைசெய்யும் ..

    பொறுமையாக இத்தனை செய்திகளையும் திரட்டி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. குடிலில் கால்தடம் பதிக்காவிடினும்... பார்வை படாமல் இருப்பதில்லை...

    மிக்க மகிழ்ச்சி தங்களுடன் என்னை வைத்துக்கொண்டமைக்கு...

    பதிலளிநீக்கு
  9. அன்பு வாசன்,
    காலதடம் (finger print)பதிந்துவிடாமல் சர்வ ஜாக்கிரதையாக எட்ட இருந்து பார்வையை வீசிச் செல்கின்ற என் அருமை மகன் வாசனுக்கு என் விழி சொல்லும் நன்றியும் அன்பும்.

    அன்பானவர்கள் கண்டிப்பாக ஆதிராவுடன் இருப்பார்கள் வாசன். இல்லை இல்லை அன்பானவர்களுடன் ஆதிராவும் எப்போதும் இருப்பாள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு பத்மநாபன்,
    கண்டிப்பாக நான் அறிந்தவரை (நான் உட்பட) நொறுக்கித்தின்ன ஓடிக்கொண்டே தின்னும் பெண்கள் பெருகி வருகின்றனர்.

    முக்கியமாக இன்றைய தலைமுறை நொறுங்கத்தின்பதில்லை. நொறுக்ஸ்தான் தின்கின்றார்கள் என்பதற்கு இப்போது ஆங்கங்கு முளைத்துள்ள ஃபாஸ்ட் ஃபுட்களே ஆதாரம்.

    அழகான தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. அப்படியா!!! தங்காள் அன்பான தகவலுக்கு.. மிக்க நன்றி.

    முதல் முறை வந்து நல்ல தகவல் சொல்லி இருக்கிறீர்கள். என்ன தருவது என்று தெரியவில்லை. நன்றி என்ற மூன்றெழுத்தைத் தவிர. என் மனமார்ந்த நன்றி யோவ்..அவர்களே..

    பதிலளிநீக்கு