“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 28 டிசம்பர், 2013

தண்ணீர் கேட்டால் பெட்ரோலைக் கொடுத்த ஈழ இராணுவத்தை...




“குற்றமே காக்க பொருளாக; குற்றமே

அற்றம் தரூஉம் பகை”


தொடர்ந்து குற்றமே செய்து வாழும் தமிழினப் பகைவன் மகிந்த இராசபட்சேவின் குற்றப் பட்டியலில் நீண்டு கொண்டே போகிறது. மீனவர்கள் கைது; பத்திரிகையாளர் கொலை; சுற்றுலாப் பயணிகள் கைது என்று இலங்கை காவற்படையினரால் கைது செய்யப் படுவதும் கொலை செய்யப் படுவதும் முடிவில்லாத தொடராகப் போய்க் கொண்டிருக்கிறது. “இலங்கை செல்லும் தமிழர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெளிப்படையாகக் கூரியதைப் போலவே அச்சமூட்டும் வகையில் நடந்தேறியுள்ளது தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற 22 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரனின் கைது சம்பவம்.
NEWS என்பதே நாலாபுறமும் சென்று சேகரித்துக் கொடுக்கப் படும் செய்திகள். செய்தியாளகள் ஈ நுழைய முடியாத இடத்திலும் நுழையும் திறனும் தகுதியும் பெற்றவர்கள் மட்டுமல்ல. உரிமையும் பெற்றவர்கள். அதுதான் செய்தியாளர்களுக்கு உரிய பெரிய வாய்ப்பு. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை எந்த நீதியும் போர்க்குற்றவாளியான மகிந்திர இராச்பட்சேவுக்கு கிடையாது.
இலங்கை காவற்படையினர் ஐம்பது பேரால் சுற்றி வளைத்துக் கைது செய்யப் பட்ட ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரன் இதற்கு முன்னரே இரத்த ஈழத்தில் இருபத்தைந்து நாட்கள் மனித வேட்டை நடந்த முள்ளி வாய்க்கால், வடக்கு மாநிலம் முதலிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்தவர். இரத்தம் சிந்தியவர்களின் உறவுகளிடம் பேசி அந்தக் கண்ணீர்க் கதைகளை ஜூனியர் விகடன் இதழில் ‘புலித்தடம் தேடி..’ என்னும் தலைப்பில் தொடராக  எழுதினார். நெஞ்சு கனக்க சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைத்த இத்தொடருக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் பத்திரிகையாளர் மற்றும் புகைப்படவியலாளர் என்னும் பரிசினையும் பெற்றவர்.
இப்பரிசினை இவர் பெற்றமைக்குக் காரணமே யுத்த பூமியை நேரில் கண்டு புகைப்படம் எடுத்து உண்மைக் காட்சியாக வழங்கினார் என்பதால். 
கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று (25.12.13) காலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் நிலைமையைப் பார்த்தவுடன் இவரது புகைப்படக் கருவி தன் கண்களை அகல விரித்துள்ளது. இராணுவ முகாம், காவல் நிலையங்கள் உட்பட பல இடங்களை படமாக்கியுள்ளார். சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் இலங்கையில் இது போன்ற தடை செய்யப் பட்ட பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் விசா விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி துப்பாக்கி முனையில் கைது செய்யப் பட்டுள்ளார். உடன் சென்றவர்களையும் கைது செய்த அரசு அன்று மாலை வரை காவலில் வைத்து விசாரனை நடத்திய பின் அவர்களை விடுதலை செய்துள்ளது. இலங்கை சென்ற மகா பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார். விசாரனையில் சிறிதரன், மகா பிரபாகரன் என் நண்பர்தான். ஆனால் அவர் ஒரு ஊடக வியலாளர் என்றே தமக்குத் தெரியாது என்று கூறி தப்பியுள்ளார்..
தமிழ் மகா பிரபாகரன் கொழும்பில் உள்ள தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சித்திரவதைக்கும், சட்ட விரோதக் கொலைகளுக்கும் பெயர் பெற்ற தீவிர வாத குற்ற தடுப்பு மையத்தில் மகா பிரபாகரன் தீவிரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். நான்கு மாடி என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையம், கொலை வரை செல்லக் கூடிய  கொடிய பகுதி என்பதாலேயே நமக்கு அச்சம் கூடுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மாய்ந்து மாய்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. முகநூல் பயன்பாட்டாளர்கள் கூட்டுக் கூட்டாக வெளியுறவு செயலருக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் ஈழம், தமிழ் என்றெல்லாம் உடல் அதிர பேசும் தலைவர்கள் ஒருவரும் இதுவரை இந்த இளைஞனுக்காக வாய் திறக்க வில்லை. திரு. வை. கோ. மருத்துவர் இராமதாஸ் இருவரைத்தவிர அரசியல் தலைவர்கள் எவரும் இதற்குக் குரல் கொடுக்காத மர்மம் என்ன என்று புரியவே இல்லை.
இது ஒரு புறமிருக்க,. இந்திய அரசியல் வாதிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல விகடன் குழுமத்தினர். விகடன் மின்னிதழ் ஒரு செய்தி என்னும் அளவில் இது குறித்து வெளியிட்டுள்ளது. விகடன் குழுமம் தமிழ் பிரபாகரன் அங்கு பணி புரியவில்லை என்ற காரணத்தைக் கூட கூறலாம். ஆனால் விகடனில் பயிற்சி பெற்று, தொடர்ந்து ஜூனியர் விகடனில் எழுதி வரும் தமிழ் மகா பிரபாகரனை விகடன் நிருபர் என்றுதான் கூற வேண்டும்? அதை விட்டுவிட்டுப் பார்த்தாலும் தம் பத்திரிகையின் நிருபர் என்ற அளவில் இல்லையென்றாலும் ஒரு தமிழ் இளைஞன் ஒரு கொலைப் பாதக நாட்டில் சிறைப் பட்டிருக்கிறார் என்னும் ஆதங்கத்தைக் கூட விகடன் நிறுவனத்தின் இணைய தளத்திலோ, அல்லது குழும சமூக வலைத்தள பக்கங்களிலோ இது வரை வெளியிடாத அந்தப் பத்திரிகையின் அரசியல்தான் புரியாத புதிராக உள்ளது.
“நம்பிய போதெல்லாம் 
ஏமாளி, 
கோமாளியானேன்... 
வெம்பிய நாழிகை யாவும் 
தன்னந்தனிமையில் 
கண்ணீரானேன்...”
என்று மகா பிரபாகரன் கண்ணீர்க் கவிதை வடித்தது விகடன் குழுமத்தை நினைத்துதானோ என்று தோன்றுகிறது!! 
இலங்கையின் கொடுங்கோல் ஆட்சிக்கு அந்நிய நாடுகள் துணை போகலாம். ஆனால் அவை கூட பல போது நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்கின்றன. இந்திய ஆளும் கட்சியின் நிலையில்தான் எப்போதும் மாற்றமே வருவதில்லை.. தன் குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் காப்பதே ஆட்சியாளர்களின் நல்லாட்சியாக இருக்கக் கூடும். குடிமக்களைக் காக்காத அரசு தானே அழியும் என்பதை மனத்தில் இறுத்தி அழிவில் இருந்து குடிகளைக் காப்பாற்றி தன் அரசையும் காத்துக் கொள்வது ஆளும் அரசின் கடமை.  
            தன் கொடூர அரசாட்சியின் உண்மைகள் வெளி வந்து விடும் என்னும் அச்சத்தில் ஊடக தர்மத்தை மீறி கைது செய்துள்ள இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. இளமையின் வேகமும் தன் இனத்தின் மீது உள்ள பாசமும் அந்த இளைஞனைத் தூண்ட கைப்பொருளைச் செலவழித்து இலங்கை சென்றுள்ள அந்த இளைஞன் ஈழ மக்களுக்காகவும் இந்திய மக்களுக்காகவும் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இந்திய அரசின் கடமை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய இந்தியக் குடி மக்களின் துர்ப்பாக்கிய நிலையை என்னென்பது?  தமிழ் மாநில மக்களை எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது இந்திய அரசு. சிறை பிடித்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே. தமிழ் பிரபாகரனின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுவதே.
 தமிழகத் தானைத் தலைவியையும் தாய்மையோடு அணுகி கொடுஞ் சிறையில் அகப்பட்டுள்ள அந்த இளைஞனைக் காக்க ஆவன செய்ய வேண்டும் .



( அலை ஓசை  மாத இதழில்) 

நலமுடன் தமிழகம் திரும்பிய தம்பி பிரபாகரனின் மனம் இந்நிகழ்வை மறந்து அமைதி பெற வேண்டுவோம்






வெள்ளி, 15 நவம்பர், 2013

கல்வி சாதனையாளர் விருது



காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைப்பூ உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

கதிரவன் கைதொழும் அனந்தபத்மனாபன்


“கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே”
          என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு இந்துக்கள் வழிபடும் திருத்தலமாகும். திவ்யதேசம் என்று அழைக்கப் பெற்ற திருமாலின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை) காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர் தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான் உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார். அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன் காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது. தன் தவறை உணர்ந்த முனிவர் அலைந்து திரிந்து அனந்தன் காட்டைக் தேடிக் கண்டு பிடித்தார்.
          அங்கு அனந்தன் என்னும் பாம்பின் மீது சயனத்தில் இருக்கும் பகவானைக் கண்டார். அப்போது அவர் உண்ணிக் கண்ணனாக (சின்னக் கண்ணனாக) இருக்கவில்லை. அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. அவர் அத்தனை பெரிய உருவம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவைச் சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை. அவரை வலம் வரவும் முடியவில்லை.  ஆகையால் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், அவர் வேண்டிக்கொண்டது போலவே காட்சி அளித்தார்.
          பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்டி   பாம்பின் மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமமும் சூட்டப்பட்டது.
          அனந்த சயனான பத்மநாபனை மூன்று வாயில்கள் வழியாகவே வழிபட வேண்டும். முதல் வாயிலில் பரம சிவனையும்  இரண்டாம் வாயிலில் திருமாலில் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனையும் மூன்றாவது வாயிலில் விஷ்ணுவின் பாதங்களையும் கண்டு வணங்குமாறு இக்கோயில் அமைப்பு இருக்கிறது.
          சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.
          1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு சரணாகதியடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.
          திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை 1729 ல் கடைசியாக புதுப்பித்தாகவும் அச்சமயத்தில்தான் அதுவரை இருந்த இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி, சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியாக புதுப்பித்து பிரதிஷ்டை செய்யப் பட்டதாகவும் தல வரலாறு கூறுகின்றது.
          சென்ற ஆண்டு உச்ச நீதி மன்றம் வரை சென்றது இதன் 6 இரகசிய அறைகள் அவற்றினுள் பாதுகாக்கப் பட்ட விலையுயர்ந்த இரத்தினம், தங்கம் பற்றிய விவகாரங்கள். 300 தங்கக் குடங்கள், 2000 வைர நகைகள் இருக்கிறது என்றெல்லாம் ஊடகங்கள் காட்டிய காட்சிகள் இன்றும் கண்களில் விரிகின்றன.
          ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு தங்கத்தாலான ஆபரணங்கள் கணக்கெடுக்கப்பட்டன.  ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையான வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தங்க சங்கிலியின் பதக்கத்தில் மட்டும் 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கச்சங்கிலிகளில் உள்ள டாலர்களில் 100-க்கும் மேற்பட்ட வைர கற்கள் உள்ளன.  19.50 லட்சம் தங்க நாணயங்கள் உள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நாணயங்களும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும்  இக்கோயிலில் உள்ளன என்ற அறிக்கைகளெல்லாம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன.
கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் இக்கோயில் கோபுரம் 100 அடி உயரமும் ஏழு மாடங்களும் கொண்டதாகும். எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.
இப்போது கண்டறியப் பட்டுள்ள இக்கோயில் கோபுரத்தின் சிறப்பானது, சூரியன் இக்கோபுரத்தின் நடு மாடத்தின் வழியாக  உதித்து வெளிவருவது போல அமைத்துள்ளது. இரவும் பகலும் சம நேரமுடைய பருவ காலத்தில் (equinox) இக்கோபுர வாயில்கள் வழியாக சூரியக் கதிர்கள் உட்புகுந்து வெளிவருவது போல் அமைந்துள்ள இத்தகு சிறப்பான கட்டடக் கலை வேறு எக்கோயிலிலும் காண இயலாத ஒன்று.
இரவும் பகலும் சம நேரமாக இருக்கும் பருவகாலம் ஆண்டிற்கு இரு முறை வரும். அதாவது வசந்த காலம், இலையுதிர் காலம் (spring and autumn) என்று அழைக்கப் பெறும் பருவ காலங்களில் இது வருகிறது. மார்ச் மாதத்தில் 20 அல்லது 21 ஆம் தேதியிலும் செப்டம்பர் மாதத்தில் 22 அல்லது 23 ஆம் தேதியிலும் இந்தச் சம நேர பருவ காலம் வரும்.
நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் செம்பாதியாகிய 12 மணி நேரம் பகலும் மற்ற பாதியாகிய 12 மணிநேரம் இரவுமாக இருக்கும் பருவ காலத்தை equinox என்று ஆங்கிலத்தில் கூறுவர். தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் பூமியின் சுழல் அச்சு சூரியனை நோக்கி சரிவாகச் சாயும் ஒரு புள்ளியில் இந்தக் கோயில் கோபுர மாடங்களின் வாயில்களில் சூரிய ஒளி பாய்ந்து வெளிவருவது போல அமைத்துள்ள இக்கோயில் கட்டிடக் கலை வியக்கத் தக்க பெருமையுடையது. இப்படி மாடங்களின் உட்புகுந்து வரும் சூரியன் சற்றும் வெளியில் சிதறாமல் அல்லது சாயாமல் மிகத் துல்லியமாகக் கோபுர வாயிலில் வருவது என்பதுதான் கட்டடக் கலைஞர்கள் எல்லோருக்கும் வியப்பாக உள்ளது.
“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு..
ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே – உயர்
நோக்கத்திலே உயர் நாடு”

என்று பாரதி பெருமைப் பட்டது இதனாலன்றோ…!

புதன், 16 அக்டோபர், 2013

அக்டோபர் 13, 2013 தினமலர் - பெண்கள் மலரில் இடம்பெற்ற என் சிறுகதை.


அவள் சொன்ன அடையாளம்
ஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் தாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் சத்தம் அவ நெஞ்சுக்குள்ளே கேக்குது.
ஆத்தாடி, இது என்ன? புருசன பஞ்சாயத்துல வச்சு தூக்கிக் கொடுத்தப்போ கூட இப்படி அடிச்சுக்காத நெஞ்சு இப்ப இப்படி படார் படார்னு அடிச்சுக்குதே”னு அவ வாய் முனுமுனுக்குது. குளம் நெறஞ்சு கரைய ஒடச்சிட்டு தண்ணி ஓடியாறது மாதிரி அவ கண்ணுக் குளம் நெறஞ்சு கண்ணீர் ஓடியாறது.
ஏலே சோலே எங்கினே விடிகாலையிலே கெளம்பிட்டே, இம்புட்டு வெரசா போறவ” என்று கேள்வி கேட்டு அரசாணி அவ முன்னால நிற்கிறா.
தனக்கு முன்னால ஒருத்தி நின்னதோ, அவ கேள்வி கேட்டதோ எதுவும் தெரியாமல், காத்துல கரஞ்ச சத்தமும், கண்ணுல தெரிஞ்ச உருவமும் மறைய, எட்டி நடை போட்டா சோலையம்மா. 
”என்னத்த காணாததக் காணப் போறா இவ! ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது? சித்தபிரம்ம பிடித்தவளா நடந்துகிட்டு இருக்கிறா.
நெத்தியில இறங்கிய வேர்வை புருவத்தில் எறங்கி,  கண்ணீரோட சேந்து வடியுது. இந்தத் தண்ணியில வெள்ளாமை செஞ்சிருந்தா ஒரு ஊரே ஒரு வருசம் ஒக்கார்ந்து சாப்படலாம்.
முகத்தில வடியற வேர்வையைத் தொடைக்க இழுத்து சொறுகின முந்தானையை அவள அறியாமலேயே அவ கை எடுக்குது. ஆனா தொடக்காமயே மறுபடியும் சொருகுது. வெடித்துச் செதர்ற பாறைங்க எங்கெங்கோ போயி நொடியில் மண்ணுக்கே திரும்புறது மாதிரி அவ நெனப்புங்க எல்லாம் எங்கேயோ போனாலும் போலீஸ்காரர் சொன்ன அந்த சேதிக்கே திரும்பத் திரும்ப வந்து நிக்குது.
புள்ளயோட வயசக் கூடச் சொல்லத் தெரியாத பெத்தவ அவ. நம்ம புள்ளக்கு ஒம்பது வயசு இருக்குமா, இல்ல பத்து வயசு இருக்குமா” ன்னு நெனச்சுப் பார்த்தவ, பக்கத்து வீட்டு மாரியம்மாவும் அவளும் ஒரே மாசத்துல புள்ள பெத்தவங்க. அவ புள்ள இசக்கி வயசுதானே நம்ம புள்ளக்கும் இருக்கும். அவ ஒரு வாரத்துக்கு முன்னே பேசும்போது “கழுதெக்குப் பத்து வயசு ஆவுது; களச்சு வூட்டுக்கு வர்ற ஆத்தா அப்பனுக்கு ஒரு கொவள தண்ணி மோந்துத் தரத் துப்பில்ல” ன்னு சொல்லி பொலம்பினது நெனப்பு வர நம்ம புள்ளக்கும் பத்து வயசுதானே இருக்கும். இப்ப எம்புட்டு வளந்திருக்கும்? இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமா?னு நெனச்சிக்கிட்டே நடைய எட்டிப் போட்டா.
கால் முன்னாடி எட்டு வச்சாலும் மனசு என்னமோ பின்னாடிதான் எட்டு வச்சு போய்ட்டு இருக்கு அவளுக்கு. கொழந்த பொறந்தப்ப, அது கெவர்மெண்ட் ஆசுபத்திரி. இவ மயக்கம் தெளிஞ்சு கண்ணத்தொறந்து பாத்தப்ப, கொழந்த பொறந்துடுச்சும்மான்னு டாக்டரு சொன்னது, நர்சுங்கல்லாம் இவளப் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிட்டே அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் போனது, “கொழந்த நல்லாத்தான் லச்சனமா  அவுக அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருக்கு, ஆனா இப்படி ஆயிடுச்ச்சே”ன்னு பாத்தவங்க எல்லாரும் சொன்னது, மாடசாமி ஒத்தப் பார்வையில நெருப்ப அள்ளிக் கொட்டிட்டு ஆசுபத்திரியை விட்டு போனது எல்லாம் அடுக்கடுக்கா நினைவுக்கு வருது. ஒரு நொடியில் ஓராயிரம் நெனப்புகள அசை போடும் வாமனமா வளருது அவ மனசு.
அன்னக்கு அப்படித்தான் குழந்தையைக் குளிப்பாட்டி, அதுக்குப் பொட்டு வச்சு, கண்ணே, எங்கண்மணியே உங்கப்பன் உன்னக்காணா பாவியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே தொட்டில்ல போட்டுட்டு, குறுநொய்யைப் போட்டு கஞ்சியும் சோறுமா வடிச்சி, தொட்டுக்க உப்பு, பச்சமொளகா, புளி சேத்து ஒரு துவையல அரைச்சு கஞ்சியயும் துவையலையும் தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு வந்து தொட்டிலைப் பார்த்தா, அங்க புள்ளையக் காணோம். குய்யோ முறையோன்னு அழுதது, ஊரு முழுக்க கொழந்தையைத் தேடி அழுத்தது, அப்பறம் நாள், வாரம், மாசம், வருசம்னு புள்ள நெனப்ப மனசு நெறையவும், கஞ்சிய வயிறு கொறையவும் வச்சிட்டு இத்தனை வருசத்தை ஓட்டினதெல்லாம் நெனச்சிகிட்டே வந்தவ எப்படித்தான் இவ்வளவு வெரசா நடந்தான்னே தெரியாம போலிசு டேசனுக்கு வந்து சேந்துட்டா..
நாந்தான் சோலையம்மா, எங்கொழந்த கெடச்சிருக்குன்னு சொன்னீங்களே.. எங்கே? எங்கே? எங்கே? ன்னு படபடப்பா கேட்டா.
போலிசுகாரர் “ஒங்குழந்தைக்கு என்ன அடையாளம்னு சொல்லும்மா” ன்னு கேட்க, அவ கண்ணு முன்னாடி வருது பத்து வருசத்துக்கு முன்னால நடந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்து.
பஞ்சாயத்துல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்துரும் போல பிதுங்க, வேட்டிய மடிச்சு கட்டி, நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறப்பா மாடசாமி வந்து நின்னது, வெரவா ஒரு முடிவுக்கு வாங்கப்புன்னு ஊர்  பெருசுங்க சொன்னது, பொட்டுல அரைஞ்ச மாதிரி அவன் அந்தப் புள்ளய அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வந்தா வச்சு வாழுறேன்னு மாடசாமி சொன்னது, கண்ணுல கொடங்கொடமா தண்ணி கொட்ட, நமக்குன்னு பொறந்தது, அத எப்படி அனாதையா விடறதுன்னு அவ அழுதது, அதற்கு அவன் கை, கால் இல்லாம பெத்திருந்தாலும் பரவால்ல வளத்துக்கலாம், சான் புள்ளயினாலும் ஆண் புள்ளன்னு சொல்லிக்கலாம், ஊமை குருடா பொறந்து இருந்தாலும் ஒன்னுமில்லாத்துக்கு ஒரு ஊமைப் பொண்ணுனு சொல்லி வளத்துக்கலாம். ரெண்டுலயும் சேத்துக்க முடியாத இந்தக் கழுத பெத்த புள்ளய என்ன பொறப்புன்னு சொல்லி வச்சுக்கிறது? என் முடிவ நா சொல்லிட்டேன். அவ புள்ளய விட்டுட்டு வரதுன்னா வரட்டும். இல்லாட்டி அத்துக்கிட்டு போகட்டும்னு சொன்னது, அவ அழுகையோட ஆனால் அழுத்தமா “அவருக்கு நா இல்லாட்டி வேற ஒருத்தி வருவா, இந்தப் புள்ளக்கி என்னவிட்டா யாரு தொண, நா எம்புள்ளயோடவே இருந்துக்கிறேன்” என்று சொல்லி தாலியை அறுத்துக் கொடுத்துட்டு வந்தது, எல்லாம் ஒரு சினிமாவா அவ கண்ணுல வர, அவ அப்படியே கல்லா நிக்கறா.
  போலீஸ்காரர் “ஏம்மா என்ன அடையாளம்னு கேட்டா எதோ லச்ச ரூவா குடுத்துட்டு புள்ளய கூட்டிட்டுப் போன்னு சொன்ன  மாதிரி செலயா நிக்கறே” என்று மீண்டும் ஒரு அதட்டு போட்டார்.
இத விட வேற என்ன அடையாளத்தை அவளால பெருசா சொல்லிட முடியும்? தன் பிள்ளையை ஆம்பளையா பொம்பளையான்னே சொல்ல முடியாத அவ, நான் பொம்பள போலீசுகிட்ட பேசனும்” னு சொன்னா.
ஏம்மா ஆம்பிளகிட்டயே பேசாத ஊருல பொறந்த மாதிரி பன்றே, சொல்லும்மா அடையாளத்தை என்று மீண்டும் அவர் கத்த, அவளுக்கு வாயிலிருந்து வார்த்தகள் வரல்ல. கண்ணுல இருந்து தண்ணிதான் வருது.
அப்போ அந்தப் பக்கமா ஒரு பெண் போலிசு வர,, அவ ஒடிப்போய் அவங்க காதுல ஏதோ சொல்ல, அவங்க சங்கடத்தோட, திருதிருன்னு முழிச்சி கிட்டிருந்த அந்தக் கொழந்தையைத் தன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.  

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?!


கடந்த சில நாட்களில் இலங்கை சந்தித்துள்ள முக்கியமான பல திருப்பங்கள், நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பபைத் தூண்டி விட்டுள்ளன.
முதலாவது வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியும்.
          இரண்டாவது “மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் சனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள்” என இலங்கை அதிபர் ராஜ்பக்சே தேர்தல் முடிவுகள் அறிவித்த பின்னர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. (இது நாகரிகம் கருதி கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.)
முன்றாவது போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் பொதுச்சபைக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.
நான்காவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற இலங்கை அரசாங்கம் தவறினால், சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள எச்சரிக்கை.
இப்படி அடுக்கடுக்கான மகிழ்ச்சிகள். கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் இன்ப அலைகள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேர்தலைச் சந்திக்காத,, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை வடக்கு மாகானம் தேர்தலைச் சந்தித்ததே கடந்த கால இலங்கை வரலாற்றில் தமிழர்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று. அதில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது தனி ஈழத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் உள்ளங்களில் பாய்ச்சிய சூரியக் கதிராக ஒளிவீசுகிறது. 
மண்ணோண்டு மண்ணாகிப் போன ஒவ்வொரு இலங்கைத் தமிழனும் சிந்திய இரத்தமே இந்த வெற்றிக்கு அடித்தளமாக, பல்வகையிலும் இருந்து உள்ளது வாக்காளர்களின் விரல்களில் பதித்த கரு மை எல்லாம், புலிகள் சிந்திய குருதியின் செம்மை. விடுதலைப் போரில் தனி ஈழத்திற்காகத் தம்மை மாய்த்துக் கொண்ட தமிழர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் விரல்களாக் மாறி விட்டனரோ? அந்த விரல்கள் பதித்த ஓட்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தில் பதிவாயினவொ? ஆம் வீடு துறந்து வீடு சென்றவர்களாலே இலங்கைத் தமிழர்களுக்கான நாடு உருவாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதோ.
இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று மாகாணங்களுக்குத் தேர்வு நடந்தன. அதில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட இலங்கை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் அபார வெற்றி பெற்றார். ஐந்து மாவட்டங்களில், மொத்தம், 38 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 30 இடங்களைக் கைப்பற்றி தமிழர்களின் ஒன்றுபட்ட உணர்வை வெளிக்காட்டியுள்ளது.  
இலங்கை இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி என்னும் அமைப்பினரும் இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம், பெண் வேட்பாளர் வீட்டில் இரவுத் தாக்குதல் என்று பல முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று முயன்றாலும் அத்தனை சதிகளையும் முறியடித்து முதன்மை பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்புடனும், காவல்துறை மற்றும் ராணுவத்தின் பலத்தப் பாதுகாப்புடனும், தேர்தல் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து தேர்தல் பார்வையாளர்களும் காமன்வெல்த்தில் இருந்து வந்திருந்த ஒரு கண்காணிப்புக் குழுவும் தேர்தலைக் கண்காணித்தன. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சென்றிருந்தார். 
இத்தனைக் கண்காணிப்புகளின் இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்ற இந்த அபார வெற்றி ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றி. சுய ஆட்சி வேண்டும் என்று எண்ணிய தமிழர்களின் எண்ணத்தின் வெளிப்பாடே வாக்குகளாகக் குவிந்தன.
இந்த வெற்றியினால் இலங்கையில் எதைச் சாதித்து விட முடியும்? மாகாணங்களில் தன்னாட்சி உரிமை, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்றெல்லாம் பட்டியலிட்டாலும் இவையெல்லாம் நடைபெறுமா என்பது வினாக்குறிகளே.
ஏனெனில் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கையைப் பொறுத்த வரையில் மாகாண முதல்வருக்கான அதிகாரம் மிகவும் குறைவே என்பது பலரும் அறிந்ததே. இங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கையேந்தும் நிலையில் இருந்து எந்தவித மாற்றமும் இருக்காது. அதனால், வளர்ச்சிப் பணிக்கான திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில், தமிழர்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றம் நிகழுவதற்கு வாய்ப்புகள் மிகக் மிகக் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ராஜபக்சேவிடம் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வினவியுள்ளார். அதற்கு அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாக ராஜபக்சே­ தெரிவித்துள்ளார். இதில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை என்றாலும் பொதுச்சபையின் கண்காணிப்பு வடக்கு மாகாணத்தின்மீது உள்ளது என்று உணர முடிகிறது. அதே வேளையில் இதுவும் முந்தைய கால கட்டத்து நாடகங்கள் போல கண் துடைப்போ என்ற ஐயமும் உள்ளது.
 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஒருபுறம் கவலையளிக்கிறது.
என்றாலும் இந்த வெற்றியின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எதிராகப் போராடித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருத இடமுள்ளது என்ற அளவில் நாம் மகிழ்ச்சி அடையலாம்.
முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் உள்ள மணிப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். இலண்டனில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் கொழும்பு பல்கலையில் சட்டக்கல்வியையும் பயின்றவர். 
மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் மாவட்ட நீதி மன்றகளில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 1987 ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும் 1988 முதல் 2000 வரை உயர்நீதி மன்ற நீதிபதியாகவும்,  2001 முதல் 2004 வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
வெற்றி வாகை சூடிய இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல்வர் வேட்பாளர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.




(இக்கட்டுரை சோழநாடு கூட்டமைப்பு (அக்டோபர் 2013) மாத இதழில் வெளியானது.)


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நீதியரசர் எஸ். மோகன் மற்றும் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்களுடன்

மயிலைத் திருவள்ளுவர் சங்கம், நேரு யுவ கேந்திரா, எண்ணூர் துறைமுகம் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவுக்களஞ்சியம் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு மேனாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி S. மோகன் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர் டாக்டர் சேயோன், ஸ்ரீ கற்பகவல்லி விநாயகா கல்வி நிறுவனத்தின் தாளாளர் திரு அரிமா கிருத்தி வாசன் ஆகியோருடன். 














நீதியரசர் எஸ். மோகன் அவர்களுடன்

மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் நிகழ்த்திய இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழாவில் மாண்பமை நீதியரசர் எஸ். மோகன், பேராசிரியர். தி. இராசகோபாலன், கல்வியாளர் ஆர்.வி., தனபாலன், மாநிலக்கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம். மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவ்ர் சங்கப் பொதுச்செயலாளர். திரு. ரூஸ்வெல்ட் ஆகியோருடன். தினமலர் நாளிதழில் வந்த செய்தி










திங்கள், 19 ஆகஸ்ட், 2013

நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன்


சென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S , நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசர் ஆகியோருடன்






சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.


“ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.
நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.
பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.
“பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
காரணம் யாதெனும் அறிவுமிலார்”
என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.
இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.
எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.
சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.
சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.
சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.
கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.
புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.
ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.
அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.
“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்” 
என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.
ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.
அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.
“விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

(இக்கட்டுரை வல்லமை மின்னிதழ், சோழநாடு மாத இதழ் இரண்டிலும் வெளியானது)



வியாழன், 18 ஜூலை, 2013

இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை










நகரத்தார் நாகரிகம்
                  தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் தவிர ஏனைய தமிழ் பேசும் எந்த இனத்திற்கும் அடையாளக் கொடியோ மாலையோ இருப்பதாகத் தெரியவில்லை.  நகரத்தார் என்று அழைக்கப் படுகின்ற செட்டியார்களுக்கு அடையாளக் கொடியும், மாலையும் உள்ளதாக நகரத்தார் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. சிங்கக் கொடியும் சீரகப்பூ மாலையும் அவர்களது அடையாளம்.

                  நகரத்தார், செட்டியார் என்னும் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்திருக்க வேண்டும் என்பர். செட்டாக இருப்பதால் செட்டியார் என்றும் நகர நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு வந்ததால் நகரத்தார் என்றும் வழங்குவதாகக் கூறுவர்.  

“வீட்டினில் செட்டாக வாழ்ந்திடுவார் 
ஏதும் வீணின்றி மிக்க கணக்கிடுவார்”

என்று சுத்தானந்த பாரதி கூறுவார்.

                  பிற சமயத்தினரிடமோ இனத்தினரிடமோ இல்லாத பல நாகரிகம் இவர்களிடம் காணலாகிறது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் பார்க்கும் நகரத்தாரிடம் சமயச்சார்பு இருந்திருக்கவில்லை. இதற்குச் சான்று ‘இராமாயணம் படித்தல்’. நகரத்தாரிடம் 1843 முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருவதற்குச் சான்று உள்ளது என்கிறது நகரத்தார் கலைக்களஞ்சியம். நாட்டுப்பாடல் அமைப்பும் உரைநடையும் கலந்த வடிவில் இராமனின் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடியைப் புனிதமாக வணங்கும் மரபு இவர்களிடம் இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதம் முதல் தேதி தொடங்கி, மாதம் முழுவதுமோ அல்லது ஒரிரு வாரங்களோ அக்குடும்பத்துப் பெரியவரோ, அல்லது அறிஞர் ஒருவரைக் கொண்டோ இராமாயணம் படிக்கப்படும்.  இராமாயணம் படிக்கத் தொடங்கும் புனித நாளை ‘ஏடு எடுப்பது’ என்று வழங்குவர். ஏடு எடுத்த நாள் முதல் படித்து முடிக்கும் நாள் வரை தீட்டு என்று கருதப்படும் எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்ளாததை மரபாகக் கொண்டுள்ளனர்.

இராமாயணம் படிக்கும் நாள்களில் தொடக்க நாள், இராமர் சீதை திருமணம், இராமன் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணுதல், இராம பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளைப் படிக்கும் நாட்களில் நகரத்தார் இல்லங்கள் விழாக்கோலம் கொள்ளும். கடைசியாகப் பட்டாபிஷேகம் படிக்கும் நாளில் இராமாயணம் படித்த அறிஞர்க்கு உணவு, ஆடை முதலியவை கொடுத்துச்  சிறப்புச் செய்வது வழக்கம். ஏடுகள் மறைந்து நூல்களாக மாறிப்போன இக்காலத்திலும் இராமாயணம் படித்தல் நகரத்தார் இல்லங்களில் தொடர்ந்து கொண்டு உள்ளன.

                  நகரத்தார் தம் பண்பாட்டில் வழிபாட்டுக்கே முதலிடம் கொடுத்து வந்தனர். வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ‘உபதேசம் கேட்டல்’. சமயம், விசேஷம், நிருவாணம், ஆச்சாரிய அபிஷேகம் என்னும் நான்கு வகைத் தீட்சைகளில் தொடக்க நிலையாகிய சமய தீட்சையே உபதேசம். நகரத்தார்க்கென ஒரு குரு இருப்பார். அந்தக் குரு திருவைந்தெழுத்தாகிய மூல மந்திரத்தைச் இவர்களுக்கு உபதேசிப்பார். அது முதல் நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் உபதேசம் பெற்றவர் மூல மந்திரத்தை ஓதுதல் வேண்டும். பெருவிழாவாகக் கொண்டாடப்படும் ‘உபதேசப் புதுமை’ என்னும் உபதேசம் வழங்கும் இவ்விழாவில் பங்கு பெறும் அனைவரும் பணம், அன்பளிப்பு கொடுத்து ஆசிர்வதிப்பதும் உண்டு.

                  உபதேசம் குறித்த சுவையான செய்தி ஒன்று. கீழப்பூங்கொடி நகரத்தார் தங்கள் ஊரில் உபதேசம் ஏற்பாடு செய்து இருந்தனர். உபதேசம் கேட்டு விட்டு பர்மா செல்ல வேண்டிய நகரத்தார்களுக்காகப் பர்மா செல்ல வேண்டிய கப்பலையே கோர்ட்டில் தடையுத்தரவு பெற்று இரு நாட்கள் நிறுத்தி வைத்திருந்தனராம். (சான்று - நகரத்தாரும் உபதேசமும்.

                  இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. அயல்நாடு செல்லும் நகரத்தாரின் சம்பளப் பற்றுச் சீட்டில் கீழே கொடுக்கப்பட்டிருந்த வாசகம் இது “உபதேச முத்தி வைத்தால் முதலாளி செலவில் வந்து போகிறது”   

                  நகரத்தார் இல்லத் திருமண விழா ஏழு நாள்கள் நடைபெறும். காலப்போக்கில் இந்தத் திருமண விழா மூன்று நாட்களாகக் குறைந்து இப்போது ஒரு நாள் திருமணமாக மாறிவிட்டது. பிற இனங்களில் தத்தம் கோத்திரங்களில் திருமணம் செய்யாதது போல நகரத்தாரிலும் தத்தம் கோயில் பிரிவினரில் மணம் முடிப்பதில்லை. ‘முகூர்த்தக்கால் ஊன்றுதல்’ தொடங்கி உறவினர் வீடு சென்று ‘பால் பழம் அருந்தி வருதல்’ வரையான பல  வகையானச் சடங்குகள் நகரத்தாரின் திருமண விழாவில் காணப்படுகின்றன. இவர்களின் திருமணச் சடங்குகளில் பெரும்பாலும் பிற இனத்தாரின் சடங்குகளுடன் ஒத்துப் போனாலும் அவற்றின் பெயர்கள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன. 

கோவிலில் பாக்கு வைத்தல் என்னும் சடங்கு முக்கியமானதாக உள்ளது. இவர்கள் கோவில் பிரிவினராக இருப்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பெறுகிறது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகக் கோயிலில் திருமணம் குறித்த அனைத்து விபரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் (அழைப்பிதல்) பாக்கு வைக்க வேண்டும். தற்போதைய பதிவுத்திருமணம் போல திருமணத்தைப் பதிவு செய்யும் முறையாக (Regester) இதனை நோக்கலாம். நகரத்தாரின் புள்ளிக்கணக்குப் பார்க்க இதுவே பெருந்துணையாக இருந்திருக்கின்றது. திருமணத்திற்கு முதல் நாள் அந்தந்தக் கோயிலில் இருந்து மணமகனுக்கும் மணமகளுக்கும் மாலைகள் வரும். மணமக்களுக்கு அந்த மாலைகளை அணிவித்தே ‘திருப்பூட்டுதல்’ என்னும் தாலி கட்டும் மணச்சடங்கு நடைபெறும். 

                  பிற இனங்களில் குடத்தில் மோதிரம் இட்டு மணமகனையும் மணமகளையும் எடுக்கச் சொல்லும் விளையாடல் ‘குலம் வாழும் பிள்ளை எடுத்தல்’ என்னும் பெயரில் நகரத்தார் மணவிழாவில் இடம்பெறுகிறது. குடத்துக்குள் சிறிய வெள்ளியால் ஆனக் குழந்தைச் சிலையை இடுவர். மணமகனும் மணமகளும் அக்குடத்தை மும்முறை வலம் வருவர். குடத்திலிருந்து மோதிரம் எடுக்க மணமகளும் மணமகனும் போட்டி போடுவதும் அருகில் தோழிகள் இருந்து கலாட்டா செய்வதுமான பிற இனத்தாரிடம் காணலாகும் கேளிக்கைகளெல்லாம் இவர்களின் குலம் வாழும் பிள்ளை எடுக்கும் சடங்கில் இல்லை. குடத்துக்குள் இருக்கும் குழந்தைச் சிலையை மணமகள் மட்டும் எடுப்பார். அக்குழந்தைச் சிலையுடன் குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெறுவார்.

                  ‘தாலி’, ‘திருமாங்கல்யம்’ என்று அழைக்கப்பெறும் மங்கல அணிகலன் நகரத்தார் வழக்கில் ‘கழுத்துரு’ என்று வழங்கப்படுகிறது. இம்மங்கல அணிகலனை மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் இச்சடங்கை ‘திருப்பூட்டுதல்’ என்கின்றனர். இது ஒர் அழகிய இலக்கிய வழக்கு ஆகும். திருமாங்கல்யம், ஏத்தனம், சரிமணி, லெட்சுமி, குச்சி, தும்பு, துவாளை, ஒற்றைத்தும்பு ஆகியவற்றைச் சேர்த்து 35 உருப்படிகளைக் கொண்டது கழுத்துரு..

                  நகரத்தார் வழக்கத்தில் திருமணமான இணையர்களைத் தனிக்குடித்தனம் வைத்தலை ‘வேறுவைத்தல்’ என்னும் சடங்காகக் கொண்டாடுவர். இதனை ‘மனையறம் படுத்துதல்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும். இதே தனி வைத்தலை பெரிய புராணமும் காரைக்கால் அம்மையார் புராணத்தில் சுட்டிக்காட்டும். இல்லறக் கடமைகளான அறவோர்க்கு அளித்து, அந்தணர் ஓம்பி, துறவோரைப் பேணி, விருந்துகளை எதிர்கொண்டு உபசரித்தல் முதலிய அறங்களைச் செய்து வாழ்வதற்காகத் திருமணமான ஓராண்டின் பின்னரோ அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரோ அந்த இளைய இணையரை அதே வீட்டில் வேறாக வைப்பது நகரத்தார் வழக்கம். மகன் குடும்பத் தலைவன் என்னும் பொறுப்பை உணர்வதற்காக அவர்களை வேறு வைத்தாலும் குடும்பச் செலவுக்காக மணமகளிடம் மணமகனின் தாய் தந்தையர் ஆண்டு தோறும் இருநூறு உரூபாயும் இரண்டு பொதி நெல்லும் வழங்குவாராம். இதற்கு ‘வருஷத்துப் போகம்’ அல்லது ‘பொதி போடுதல்’ என்று பெயராம்.

                  நகரத்தார் குடும்பங்களில் மணமான பெண் கருவுறும் போது நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ‘தீர்த்தம் குடித்தல்’. கருவுற்ற ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் கருவுற்ற பெண்ணின் நாத்தனார் மருந்து(நாட்டு மருந்து)) இடித்துக் கொடுக்கும் இவ்விழா பெரிய அளவில் இப்போதும் ஒரு சமயச் சடங்காகக் கொண்டாடப்பெறுகின்றது.

                  செட்டி நாட்டு ஆச்சிமார்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானவை  ‘பேறு கேட்டல்’, மற்றும் ‘பேறுஇடுதல்’. குழந்தைப் பேற்றையும் பூப்படைதலையும் விசாரிப்பதற்கு இச்சொல்லாடல்கள் பயன்பட்டு வந்தன. ரொட்டிகள், மிட்டாய்கள் தட்டில் வைத்து காபி, வெற்றிலைபாக்குக் கொடுத்து குழந்தை பிறந்ததை விசாரிக்க வருபவர்களை உபசரிக்கும் இம்முறை இன்றும் செட்டிநாட்டில் பின்பற்றப்படுகிறது. தற்காலத்தில் ‘போர் கேட்டல்’  போரிடுதல்’ என்று இவை மருவி வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

                  பொதுவாக திருமணமான புதுமணத்தம்பதிகளுக்கு நடக்கும் முதலிரவை சாந்திக்கலியாணம் என்பது வழக்கம். ஆனால் நகரத்தார் குடும்பங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பெறும் அறுபதாண்டு நிறைவு விழாவை ‘சாந்திக் கலியாணம்’ என்கின்றனர்.

                  பொங்கலின் போது வீட்டில் ஒரு விளக்குச் சட்டியில் தேங்காய் ,பழம், கரும்பு, பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல் கொத்து,, சிறுபூளைப்பூ,, கத்தரிக்காய், வாழைக்காய் ஆகியவற்றை வைத்துக் கும்பிடுவர். இப்பொருள்களை மாட்டுப் பொங்கலன்று இளம்பெண்கள் சிவன் கோவிலுக்கு எதிரில் உள்ள பொட்டல் வெளியில் (இதன் பெயர் கொப்பிப் பொட்டல்) பரப்பி வட்டமாகச் சுற்றி வந்து கும்மி தட்டுவர். அப்பொட்டலுக்கு நகரத்தார்க்குச் சலவை செய்யும் சலவைத் தொழிலாளர்களும் வருவார்கள். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டி முடிந்த பின் அப்பொருள்களைச் சலவைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து பின்பு கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவார்களாம். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டுவதால் இது ‘கொப்பி கொட்டுதல்’ எனப்பட்டது. செல்வ செழிப்பு மிக்க நகரத்தார் இல்லங்களில் இந்த வழிபாட்டுப் பொருள்கள் போல வெள்ளியில் செய்து திருமணத்தின் பொது பெண்ணுக்குச் சீராகக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

                  சைவம் அசைவம் என்னும் இருவகையிலும் செட்டி நாட்டு உணவு வகைகள் ருசியானவை என்பதற்கு செட்டி நாடு உணவங்கங்கள் எல்லா நகரங்களிலும் அமைந்திருப்பதே சான்று கூறும். உக்காரை, கும்மாயம், கந்தரப்பம், கவணரிசி, கல்கண்டு வடை, சீடைக்காய், சீப்புச் சீடைக்காய், இளங்குழம்பு, சும்மா குழம்பு, மனகோலம் வெள்ளைப் பணியாரம் ஆச்சிமார்களின் கைம்மணத்தில் ருசிப்பவை.

                  புழுங்கரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து வெல்லம் சேர்த்து மாவாக ஆட்டித் தேங்காய்ப்பூ சேர்த்து பணியாரம் போல் எண்ணெயில் போட்டு எடுப்பது செட்டி நாட்டுக்கு மட்டுமே சொந்தமான கந்தரப்பம்.

                  விருந்துகளுக்குப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் படுவது கல்கண்டு வடை. நன்கு ஊறிய உளுந்தில் கல்கண்டைச் சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொறிப்பது இது.

                  உளுந்தை வறுத்துக் கொண்டு அதனோடு பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து இயந்திரத்தில் திரித்துக் கொண்டு அந்த மாவில் வெல்லம் சேர்த்துக் கரைத்து, கரைசலை அடுப்பில் வைத்து கூழ் போல் கிண்டுவது கும்மாயம்.

                  வேறு எந்த இனத்திலும் காணப்படாதது இளங்குழம்பு. விருந்துகளில் இரசத்திற்குப் பதிலாக பரிமாறப்படுவது. அதாவது பீன்ஸ், அவரைக்காய் போன்ற ஏதேனும் ஒரு காயைப் போட்டுக் குழம்பும் இல்லாமல் ரசமும் இல்லாமல் இரண்டுக்கும் நடுநாயககமாகச் சமைத்துப் பரிமாறுவர். இதனைத் ‘தண்ணிக் குழம்பு’ என்றும் கூறுவதுண்டு.  

                  இழவு தொடர்பானப் பல சமயச் சடங்குகள் பிற சமுகத்தினரைப் போலவே அமைந்திருந்தாலும் பச்சைக் குத்துதல், அந்தரட்டை, மோட்ச தீபம், கல்லெடுத்தல் ஆகியவை இச்சமுகத்தினரைப் பிற சமுகத்தினரிடமிருந்து வேறு படுத்துகின்றன.
                        ஒருவர் இறந்தது முதல் சவுண்டி வரை நடைபெறும் இறுதிச் சடங்கின் சமயச் சடங்குக்கு நகரத்த்தார் மரபில் ‘இழவு கூட்டுதல்’ என்று பெயர். இறந்தவரின் சுகப் பயணத்திற்காக ‘பசுத்தானம் கொடுத்தல்’ மிக முக்கியமாகக் கடைபிடித்து வரும் மரபு. பசுமாடு கொண்டு வரப்பட்டு சில மந்திரங்கள் சொல்லப்பட்டு பசு தானமாகக் கொடுக்கப் பட்டிருக்கலாம். பிற்காலத்தில் நகரங்களில் வசிக்கும் நகரத்தார் பசுத்தானத்தில் பசுவுக்குப் பதிலாகப் பணம் கொடுக்கின்றனர்.

                        நான்கு களிமண் உருண்டைகள் வைத்து அதில் நான்கு கால்களை ஊன்றி அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை பரப்பிப் பந்தல் போடுவது பங்காளிகளின் வேலை. இந்தப் பந்தலின் கீழ் கல்லுரல் ஒன்றைப் போட்டு அதில் சிறிது பச்சை நெல்லை இட்டு இறந்தவரின் மகளோ பேத்தியோ மருமகளோ அதைக் குத்தி அரிசியாக்கி வாய்க்கரிசி இடும் முறை இவர்களது. இது ‘பச்சைக் குத்துதல்’. எனப்படும்

                  உபதேசம் கேட்டவராகவும், புலால் உண்ணாதவராகவும் இறந்தவர் இருந்தால் அவருக்கு உபதேசம் செய்து வைத்த மடத்திலிருந்து தேசிகர் ஒருவர் வந்து ‘அந்தரட்டை’ என்னும் ஒரு சமயச் சடங்கை நடத்துவார்.

                  அதே போல இறந்தவர் நினைவாக நகரச்சிவன் கோயிலில் ‘மோட்ச தீபம்’ அதாவது தீபம் போட்டால் இறந்தவர் மோட்சம் அடைவார் என்று நம்பினர். இறந்தவரின் குடும்பத்தினர் பொருள் கொடுத்து இத்தீபம் போட ஏற்பாடு செய்வார்கள். இதற்கு ‘மோட்ச தீபம்’ என்று பெயர்.

                  இறந்த வீரர்களுக்குக் நடுகல் அமைத்து வழிபடும் சங்ககால மரபோடு தொடர்புடைய ‘கல்லெடுத்துப் புலால் ஊற்றிக் கொள்ளுதல்’ நகரத்தாரிடம் மட்டுமே காணலாகும் சடங்காக உள்ளது. ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரைக்குச் சென்று அங்கு செங்கல் நட்டு அதற்குச் சிறப்புப் பூசனைககள் செய்வது நகரத்தார் மரபு. கருங்கல் நாட்டி வழிபாடு செய்வதாகத் தொல்காப்பியம் கூறும் ‘சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்’ என்ற அடிப்படையில் இறந்தாரின் சிறப்பை எடுத்துக்கூறுவதற்காக அமைந்த சடங்காக இச்சடங்கு இருத்தலைக் காண முடிகிறது.

                  கலைகள் என்று சொன்னால் நகரத்தார்க்கு இணை அவர்களே. திரைப்படக் குழுவினர்க்குச் செல்வ வீட்டுக் காட்சி என்றால் ஆச்சிமார்கள் வீடுதான் மனத்தில் வரும். சென்னையில் இருந்து படப்பிடிப்புக் குழுவினர் செட்டி நாட்டுக்குப் படையெடுப்பது கலை நயம் மிக்க அவர்கள் வீட்டில் படமாக்குவதற்காக எனின் அது மிகையல்ல. நாட்டுக்கோட்டையில் வீடுகள் கோட்டைகள் போல இரு தெருக்களை இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். பொதுவாக 160 அடி நீளம் 60 அடி அகலம் உடையதாகச் செட்டிநாட்டு வீடுகள் அமைந்திருக்கும் வீட்டின் முகப்பு ஒரு தெரு என்றால் பின்கட்டு எனப்படும் புழக்கடைக் கதவு அடுத்த தெருவில் முடியும்.

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேக்கு, பளிங்குக் கற்கள், கண்ணாடிப் பொருள்கள் முதலிய கட்டுமானப் பொருள்களை பர்மா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து பிரம்மாண்டமான வீடுகள் கட்டினர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நகரத்தார் அக்குடும்பத்தின் ஒவ்வொரு புள்ளியும் தனியே சமைத்து, உண்டு, உறங்கும் வண்ணம் படுக்கை அறைகள், சரக்கு அறைகள், அடுப்படிகள் ஆகியவை அமைத்துப் பெரிய வீடாகக் கட்டினர். முகப்பு, வளவு, பெரிய பெரிய தூண்கள் அமைந்த பட்டாசாலை, பட்டாசாலையில் வரிசையாக அறைகள்,  இரண்டாங்கட்டுப் பட்டாசாலை, அங்கும் அறைகள், அடுப்படி, அடுப்படிக்குப் பின்னால் தோட்டம் என்று அரண்மனை போல் அமைத்திருந்தனர்.  நுழை வாயிலில் கலையழகு மிளிறும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பெரிய நிலையும் கதவுகளும் அமைந்திருக்கும். சங்க காலத்தில் அரண்மனை வாயிலில் அமைந்திருந்ததைப் போல மரத்தாலான புடைப்புச் சிற்பங்களை வீட்டின் முகப்பில் அமைத்தனர். தாமைரைப்பூவில் அமர்ந்த திருமகள், இருபுறமும் மாலையுடன் யானைகள் அமைந்திருக்கும். குதிரைகள், குதிரை வீரர்கள், தேர்கள், பூமாலைகள், யாழிகள், முதலிய சிற்பங்கள் அழகொளிரும் காட்சி நாட்டுக்கோட்டைக் காட்சி .

                  நகரத்தாரின் உறவு முறைப் பெயர்கள் திரைத்துறையினருக்கும் பொதுவாகப் பேசும் பலருக்கும் நகைச்சுவைக்குப் பயன் பட்டாலும் அவை ஆராய வேண்டிய முறையில் அமைந்தவை. உறவு முறைப் பெயர்களை ஆராயும்போது உறவுகளைப் பிறரிடம் கூறும்போது பயன்படுத்தும் பெயர்களுக்கும் முன்னிலையில் அவர்களை விளிக்கப் பயன்படுத்தும் பெயர்களுக்கும் வேறுபாடு இருப்பது நகரத்தாரிடம் மட்டும் காணலாகும் கலாச்சாரம்.  

                  ஆங்கிலத்தில் Uncle, Aunt  என்பவை பொதுப்பெயராக இருப்பது போல நகரத்தாரிடம் அண்ணன் என்பது பொதுப்பெயராக உள்ளது. 

     அவர்கள் அண்ணன் என்று பல உறவு முறைக் காரர்களை அழைக்கும் போது ஆங்கிலக் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதைக் காண முடிகிறது. இக்கலாச்சாரம் ஆங்கிலத்திற்கு நகரத்தாரின் கொடையா அல்லது ஆங்கிலத்தில் இருந்து நகரத்தார் கொண்டதா என்பதும் ஆராய வேண்டியது அவசியம்.

                  சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தான் என்னும் உறவு முறைக்காரர்களை ஒரே பெயர் சொல்லி அழைக்கும் அங்கிள் (Uncle) என்பதும். சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி அனைவரையும் ஆண்டி (Aunty) என்று அழைப்பதும் ஆங்கில வழக்கு..
                  தந்தை வழி சித்தப்பாவையும், (அப்பாவின் தம்பி) தாய் வழிச் சித்தப்பாவையும் (சித்தியின் கணவர்), நாத்தனாரின் கணவர், சம்பந்தி, சித்தப்பாவின் மகன்கள், சித்தியின் மகன்கள், அனைவரையும் பெரியவராக இருப்பின் அண்ணன் என்று அழைக்கின்றனர்.

                  பொதுவாக மனைவி என்று சொல்லப் பெண்டிர் என்னும் வழக்காற்றை நகரத்தார் பயன்படுத்துகின்றனர். அண்ணன் மனைவியை ‘அண்ணமுண்டி’ என்கின்றனர். அண்ணன் பெண்டிர் என்பதன் மரூஉ இது. சித்தப்பாவை அண்ணன் என்று அழைக்கும் இவர்கள் சித்தியை அண்ணன் பெண்டிர் என்று சொல்வதில்லை. சின்னாத்தாள் என்றோ ஆச்சி என்றோதான் அழைக்கின்றனர்.

                  அத்தை மகனையும் மாமன் மகனையும் அய்த்தான் (அத்தான் என்பதன் மரூஉ) என்கின்றனர். அதே போல் ஆண்கள் மனைவியின் அண்ணன் முறை உள்ளவர்களையும் பெண்கள் கணவனின் அண்ணன் முறை உள்ளவர்களையும் அத்தான் என்றே அழைக்கின்றனர்.

                  அத்தை மகனையும் அம்மான் மகனையும் அய்த்தியாண்டி (அத்தியாண்டியின் மரூஉ) என்றும் அழைப்பர். தாயை ஆச்சி என்றும்  தந்தையை அப்பச்சி என்றும் அழைப்பது செட்டி நாட்டு வழக்கம் பங்காளிகள் ஒருவரை ஒருவர் அழைக்கும் போது ‘மானி’ என்றே அழைத்துக் கொள்கின்றனர் .

                  நாகரிகத்தில் சிறந்தவர்கள் நகரத்தார் என்பதைக் காட்டும் சான்றுகளில் மிகவும் முக்கியமானது அவர்களது மொழி நடை. நகரத்தாரின் மொழியில் இலக்கிய நடையும் தனித்தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் காணப்படுவதை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்வர்.

                  சான்றாக, 
குறிச்சி - சாய்வு நாற்காலி, 
வட்டி - உணவு உண்ணும் தட்டு (வட்டில் என்பது பண்டைத் தமிழ் வழக்கு,) சிலாந்தி - சல்லடை, 
சுளகு - முறம், 
போகினி - டம்ளர், 
குந்தாணி - உரல், 
ஏவம் கேட்டல் - பரிந்து பேசுதல், 
கொண்டி – போக்கிரி, (கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது) 
தாக்கல் – செய்தி, ஒள்ளத்தி –மிகச்சிறிய அளவு (எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்), 
தொக்கடி – மிகக் குறைந்த விலை, 
மருக்கோளி – பைத்தியம், 
வறளி – பிடிவாதக்காரர், 
மூதலித்தல் – மெய்ப்பித்தல். 
இவை சான்றுக்குச் சிலவே. இன்னும் இவை போல எண்ணற்ற சொற்கள் காணலாகின்றன.

பேரா. முனை. ப. பானுமதி