“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 7 அக்டோபர், 2011

பூப்பு....பூப்பு ..., 2


http://watermarked.cutcaster.com/cutcaster-photo-100323795-beautiful-girl.jpg
சென்ற பதிவில் பூப்பு காலங்களில் பெண்கள் பிறர் காண முடியாதவாறு இல்லத்துள் இருத்தி வைக்கப்பட்டனர் என்று அறிந்தோம். இதனை விளக்குவது போல அமைந்த மற்றொரு பாடல் இது.. இரவில் உறக்கத்தில் பூப்பு எய்திவிட்டாள் குறுந்தொகைத் தலைவி. வைகறையில் கோழி கூவும்போது அதைக் காண்கிறாள்.அவளுக்கு திக்கென்றதாம் நெஞ்சம். எதனால்? பூப்பு எய்தியதை எண்ணி அல்ல. தலைவனைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியதால். எது போல? இரவு நேரத்தில் ஒருவரும் அறியாமல் சந்திக்கும் காதலர்களை வைகறை வந்து பிரித்து விடுவது போல இந்த வைகறைப் பொழுதில் பூப்பு வந்துள்ளதாம். தலைவனுடன் நான் கூட முடியாமல் பிரித்துவிடுமே என்று அஞ்சியதால், குக்கூ என்று கோழி கூவியதும் அவள் மனம் திக்கென விக்கித்ததாம். நீங்களும் பாடலைப் பாருங்களேன்.

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால்

இப்பாடல்  வாயிலாகவும் பூப்பு காலங்களில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இந்த எண்ணத்தைத் தான் மாத்தனும் என்று கூறும் விளம்பரங்களும் பாதுகாப்பான  வசதிகளும் அக்காலத்தில் இல்லாது போனதும் ஒரு குறையே.

மரங்களின் அல்லது செடிகளின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தம் தோன்றுவது பூக்களில்தான். இதனைக் கருத்தில் கொண்டே மங்கையரிலும் இனப்பெருக்கத்திற்கு அதாவது கருவுறுவதற்கு உடல் பக்குவப்படும் முதல் மாதவிடாய்ப் பருவத்தை அல்லது முதல் மாதவிடாயைப் பூப்பு என்றனர் போலும். இதனை கிராமப்புறங்களில் சமைதல் (சமஞ்சிட்டா) என்று கூறுவர். 

தமிழர்களின் மொழியறிவு இங்கு பளிச்சென மின்னுவதைக் காணமுடிகிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுவேஎன்பது எவ்வளவு உண்மை என்பதை இது போன்ற் சொல்லாட்சிகள் உறுதி படுத்துகின்றன. அரிசி, பச்சைக் காய்கறிகள், பலசரக்குப் பொருள்கள் எல்லாவற்றையும் கழுவி  சுத்தப்படுத்தி உண்பதற்கேற்ற உணவாகப் பக்குவ படுத்துதலைச் சமைத்தல் என்பது போல, தாயாவதற்குப் பக்குவப்பட்ட பெண்ணின் உடலின் இந்த குறிப்பை அல்லது அறிகுறியைச் சமைதல் என்றனர் போலும்.
 
. பூப்பு, சமைதல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த  இனிய பருவம் பிற்காலத்தில் விலக்கி வைக்கும் நிலையில் வீட்டு விலக்கு என்ற புதுப்பெயரையும் தாங்கிக்கொண்டது. ஓய்வுக்காக வீட்டில் வைத்த பண்டைய நிலை பிற்காலத்தில் தூய்மையைக் காரணமாக்கி வீட்டிலிருந்து விலக்கியது. மாதவிடாய்க் காலங்களில் பெண்களை ஒன்றுக்கும் உதவாதார் போல தீண்டத்தகாதாவர்களாக்கி வெளியில் விலக்கியது. பூப்பு காலங்களில் பெண்கள் பூச்சூடக்கூடாது. மங்களப் பொருள்களான மஞ்சள் குங்கும் அணியக்கூடாது. உயர்ந்த பஞ்சணையில் படுக்க்கூடாது. இவையெல்லாம் இன்றும் பின்பற்றப்படுகிறது துறவிகளுக்குப் பிச்சை இடுவது இல்லையாம். இடைக்கால சித்தர் வள்ளலார் பாடலிலும் இக்குறிப்புக் காணப்படுகின்றது. பசித்து வந்தவர்க்கு உணவிடாமல் தோழியை ஏவிவிட்டு நீ கீழ்பள்ளி கொண்டாய் என்று பிச்சை பெற தலைவன் கூறுவதாக ஒரு பாடலை அமைத்துள்ளார் புறட்சித் துறவி வள்ளலார்.. (1817) (இது நம்ம ர்ஞ்சிதா நித்யாவுக்குகேல்லாம் பொருந்தாதோ!!)

பூப்பு என்றால் முதல் முறை மாதவிடாய் தோன்றுவது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க தொல்காப்பியம், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் தொடர்ந்து வருகின்ற மாதவிடாய்களைப் பூப்பு என்று கூறுகிறது. ஆசாரக்கோவை பூப்பின் குறிப்பைச் சொல்லும் போது பூப்பு காலத்தில் ஆண்பெண் கூடல் தகாது என்றும், மகப்பேறுக்காக பூப்பு முடிந்த பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தும். தொல்காப்பியமும் பூப்பு தோன்றிய பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரிந்து இருத்தல் கூடாது என்று கற்பியலில் புணரும் காலம் குறித்துக் கூறும்போது குறிப்பிடும்.

பூப்பின் புறப்பாடு ஈறாறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான

இவையெல்லாம் முதல் பூப்பு பற்றி பேசுவது இல்லை. திருமணம் கழிந்தபின்பு வரும் தொடர் பூப்பு பற்றி பேசுகின்றன. 

உடலில் ஏற்படும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படும் சோர்வுகள், தீண்ட த்தகாதவர்களாக்கித் திண்ணையில் உட்கார்த்திவைக்கும சமூகச் சவுக்கடிகள், இவையெல்லாம் போதாதென்று மாதவிடாய்க் காலங்களில் உடல் நோய்களான ஊறல், அறிப்பு, செம்மேகம், கருமேகம், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களும், மங்கையரின் மனத்தை இன்னும் வாட்டமுறச்செய்கின்றன. இத்துடன் மாதவிடாயை மையமாகக் கொண்டு சூறாவளியாய்ச் சுழன்று அடித்து இளமை மனதைப் பாதிக்கும் முகப்பருக்கள், கண்ணின் கருவளையங்கள் போன்றவையும், மணமான பெண்களைப் பாதிக்கும் உடலுறவுப்பிரச்சனைகள், அதனால் உண்டாகும் ஆறாத பரிதவிப்பு, மன உளைச்சல் போன்றவையும், மாதவிடாய் பெண்களுக்கென்று அள்ளிக்குவிக்கும் விஷேஷப் பரிசுகள். இது குறித்தும் இன்னும் ஆராய்வோம்.

முந்தைய காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்தமைக்கும் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் இந்த பூப்பு தந்த அச்சமே காரணமாக இருந்திருக்கிறது. பெண்ணிடம் ஏதோ அதிசய சக்தி உள்ளது என்று பூப்பு, பிள்ளைப்பேறு இரண்டையும் கண்டு அஞ்சிய ஆண்மகன் அவளை முதன்மைப் படுத்தி வாழ்ந்தான். இன்று இந்த பூப்பே அன்பு தெய்வமான அவளுக்குப் பல விதங்களில் இன்னல் கொடுத்தாலும் பெண் அதில் இன்றும் பெருமை கொள்பவளாகவே இருந்து வருகிறாள்.


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்






















6 கருத்துகள்:

  1. //தொல்காப்பியம், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் தொடர்ந்து வருகின்ற மாதவிடாய்களைப் பூப்பு என்று கூறுகிறது...//

    அன்பின் ஆதிரா,

    அதென்ன ”முதல்முறைக்கு” மட்டும் பூப்பு என்று சொல்கிறார்களே என்னும் ஐயம் நெடு நாட்களாய் இருந்தது. உங்களின் இந்தக் கட்டுரை ஐயத்தை போக்கி விட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஆதிரா,
    அந்த காலத்தில் வீட்டை விட்டு விலக்கி வைத்தல் என்பது பெண்ணுக்கு ஒரு ஓய்வு தேவை எனும் காரணமாக இருந்திருக்கலாம்...
    ஆனால் பூப்புவை பற்றிய விழிப்புணர்வு உள்ள இந்த காலத்தில் வீட்டை விட்டு விலக்காமலே ஓய்வு கொடுத்து காக்கலாம்!
    இன்னும் வீட்டு விலக்கு தேவையில்லை அல்லவா?!!

    பதிலளிநீக்கு
  3. அழகாய் பூப்புவைப் பற்றி பதிவு செய்ததிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையாக விளக்கி உள்ளீர்கள், இன்னும் சில சமூக பிரச்சினைகளையும் ஆழமாக அலசி இருக்கலாம் என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  5. இந்த இயற்கை நிகழ்வை முற்காலத்தில் எப்படி பார்த்தார்கள் தற்காலத்தில் எப்படி பார்க்கிறோம் என்பதை இலக்கியம் கலந்து அறிவியல் பாடமாக எடுத்து வருகிறீர்கள் .. உண்மையில் பெண்குலத்திற்கும், அவர்களின் சிரமம் அறிந்து அவர்களை போற்றி வாழவைக்க ஆண்குலத்திற்க்கும் பயனளிக்கும் சிறந்த பாடம் ..
    பிற்காலத்தில் எப்படி இதை எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் அடுத்து வரும் பாடங்கள் தெளிவாக்கும் வகையில் தொடர நல்வாழ்த்துகள் ஆதிரா ..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பல கருத்துக்களை எடுத்துச்சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு