“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 20 நவம்பர், 2011

மொழிப்பாடம் கற்பித்தலில்.....

 


“கல்வி பயிற்றலில் பல்வேறு மாற்றங்கள் வந்த
விடத்தும் தமிழின் பண்பாட்டுப் பெறுமானம்
காரணமாக, அதன் பயில்வு முறையில்
அதிக மாற்றங்கள் ஏற்பட்டன என்று
கூறமுடியாது. தமிழ் வகுப்பும் தமிழாசிரியரும்
கல்விப் போக்கில் பொதுவான ஓட்டத்துடன்
இணையாப் பொருளாகக் கொள்ளப்படும்
ஒரு நிலைமை காணப்பட்டு வந்துள்ளது”
-முனைவர் கா. சிவத்தம்பி.- 

கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே நிறைவு பெறுகிறது. பள்ளிக் கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டிய பாடங்களுள் ஒன்று மொழிப்பாடம். மொழித் திறனைப் பெறுபவர் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும் வல்லமையைப் பெறுவர். அம்மொழித் திறனை மாணவர்கள் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மொழியாசிரியர்கள். ஆனால் மொழியாசிரியர்கள் என்றாலே பிறதுறை அறிவும் பயன்பாடும் அற்றவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள, தொலைத் தொடர்புச் சாதனங்களின் ஆட்சிக்காலமான, அந்நிய மொழி மோகம் நிறைந்த இன்றைய சூழலில் மொழிப்பாடம் கற்பித்தல் என்பது மொழியாசிரியர்களை எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும். இக்காலக் கட்டத்தில் மொழிப்பாடம் கற்பிக்க வேண்டிய முறைமைகளையும் மொழிப்பாடம் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகளையும் தொடர்ந்து ஆராய வேண்டியது தேவையாகிறது.

நாப்பழக்கமே செந்தமிழ்
 
 
பொதுவாக இந்நூற்றாண்டைத் தொலைத் தொடர்பு யுகம் என்றழைக்கலாம். கணினியில் மூழ்கிப் போவதைப் போலவே தொலைக்காட்சியிலும் மூழ்கிப் போய் விடுகின்றனர் மாணவர்கள் சிலர். தொலைக்காட்சியின் உச்சரிப்புப் பிழைகள் மாணவர்களிடமும் பதிந்து விடுகின்றன, முக்கியமாக மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் சன் மியூசிக், ஜாக்பாட் (ஜாக்பாட்டில் கேள்வி என்பது பல ஆண்டுகளாக, கேல்வி என்றே உச்சரிக்கப்பட்டதைத் தமிழ் அறிந்தவர்கள் அறிவர்) முதலிய நிகழ்ச்சிகளில் ல, ள, ழ, ந, ன, ண, ர, ற ஆகிய எழுத்துகள் ஒலி வேறுபாடுகள் இன்றியோ அல்லது தவறாகவோதாம் பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றன. புதிதாகப் படித்து முடித்து வரும் தமிழாசிரியர்களில் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழியின் தனிச்சிறப்பே சிறப்பு கரம். இவ்வொலி இன்று தன் சீரிழந்து நிற்கிறது.
“நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 95)
நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தடவ ழகரம் பிறக்கிறது.
“நாவிளிம்பு வீங்கி யண்பல் முதனுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 96)
நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தை வருட ளகரமும் பிறக்கிறது.இவ் இலக்கணங்களை மனத்தில் நிறுத்திக் கொண்டு இவ்வொலிகளை உச்சரித்துப் பழகுதல் வேண்டும். மாணவரோ பிறரோ யாராகவிருப்பினும் செய்தித் தாளைப் படித்து அதனை ஒலிப்பேழையில் பதிவு செய்து,  மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்கும்போது தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். இப்பயிற்சியின் மூலம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர முடியும். இதற்காகவே
“ஓடுற நரியில ஒரு நரி கிழநரி கிழநரி தலையில ஒரு முடி நரைமுடி.
உருளுது பெறழுது தத்தளிக்குது தாளம் போடுது”
என்னும், இது போன்ற நா நெகிழ் பயிற்சிகள் நம் முன்னோர்களால் முற்காலத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எழுத்தறியத் தீரும் இழிதகைமை

எண்களின் கூட்டு கணிதம் என்றும் எழுத்துக்களின் கூட்டு இலக்கணம் என்றும் கூறுவர். பண்டைய முறையில் உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஒலிக்கக் கற்பிக்கும்போது இரண்டு இரண்டு எழுத்துக்களாகச் சேர்த்துக் கூறுவர். (விதி விலக்கு ஐ, ஒள.
அஆ    இஈ    உஊ    எஏ   ஒஓ
கங்    ச்ஞ்   ட்ண்   த்ந்    ப்ம்    ய்ர்   ல்வ்   ழ்ள்   ற்ன்
இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே. ஆனால் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் கூட மூன்று சுழி ண் இரண்டு சுழி ன்  என்றுதான் கூறுகின்றனர். மாணவர்களின் இந்நிலைக்கு அவர்களுக்கு முறையாகக் கற்பிக்காமையே காரணம் எனலாம். “எழுத்தறியும் தீரும் இழிதகைமை” என்பார் சிவஞான முனிவர். எனவே மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுத்துகளையும் அவற்றை ஒலிக்கும் முறைகளையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களையும் அறிந்து முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களின் இவ் இழித் தகைமை நீங்கும். மொழிப்புலமை ஓங்கும்.

இலக்கணமும் இன்சுவையே

ஆங்கில வழியில் பயில்வதே இன்றைய நாகரிகமாக உள்ளது.தமிழ்ப் பாடத்தை ஆர்வமின்றிப் பயில்வதும் அதிலும் இலக்கணப் பாடத்தைப் புறக்கணிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது பேச்சும் எழுத்தும். மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணமே. இலக்கணம் கற்பிக்கும் போது பழைய மரபுகளை மீறாமல் புதிய உத்திகளைப் பயன் படுத்தி ஆர்வத்தைத் தூண்டுவது கற்பித்தலில் தலையாய ஒன்றாகும்.
மனத்தி னெண்ணி மாசறத் தெளிந்து
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் (தொல்.பொருள்: 656)

என்பது தொல்காப்பியம். இலக்கண விதிகளை இலக்கிய வழிகளில் மட்டுமல்லாமல் உலகியல் வழிகளிலும் பொருத்திக் காட்டுதல் வேண்டும் என்பதையே தொல்காப்பியர் “இனத்திற் சேர்த்தி” என்னும் தொடரால் உணர்த்துகிறார். கற்பித்தல் நிலையில் இலக்கணம் கற்பிக்க கரும்பலகையை மிகுதியும் பயன்படுத்துதல் வேண்டும். ஒப்புமைக் கூறுகளைக் கரும்பலகையில் எழுதிக் காட்டுதலும் ஐயப் பகுதிகளைத் தடை விடைகளைக் காட்டி தெளிவித்தலும் வேண்டும்.
இலக்கணப் பாடத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் முக்கிய இடத்தைப் பெறுவது இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி இலக்கணம் ஆகிய மூன்றும். பிற்காலத்தில் எந்நிலையிலும் இவ்விலக்கணங்கள் மாணவர்களுக்குப் பயன்படாது போயினும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகள் இவை. இப்பகுதியைக் கற்பிக்கும் ஆசிரியர் மூன்று அல்லது நான்கு மாணவர்களை ஒரே நேரத்தில் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சொற்களைக் கொடுத்து, கரும்பலகையில் இலக்கணக் குறிப்பையும் உறுப்பிலக்கணத்தையும் எழுதச் சொல்லுதல் வேண்டும். உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்லும் போது மாணவர்கள் இரண்டு இலக்கணங்களையும் ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவதுடன் பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பதையும் மாணவர்கள் அறிவர். இலக்கணக் குறிப்பு தொழில் பெயராகவிருப்பின் விகிதி, தல், அல், அம், ஐ, கை இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும், வியங்கோள் வினை முற்றாக இருப்பின் க, இய, இயர் என்னும் மூன்றில் ஒன்றாக அதன் விகுதி அமைதல் வேண்டும் முதலியவற்றை அறிந்து சொற்களைப் பகுப்பர். எனவே உறுப்பிலக்கணம் எழுதும்போது அதன் இலக்கணக் குறிப்பையும் எழுதச் சொல்லுதல் இன்றியமையாதது. சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் பழகிக் கொண்டால் உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய வாசிப்பும் எளிதாக இருக்கும்.

இலக்கணக் குறிப்பைப் பயிற்றுவிக்கும் போது மாணவர்களுக்கு அனுபவம் மிக்க பொருள்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள் அமைந்திடின் ஆர்வம் மிகுவதுடன் மனத்தில் நிறுத்துவது எளிதாகிறது. சான்றாக உருவகத்தை விளக்க “என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே” (திரைப்பாடல்) முதலிய பாடல்களை மூலம் விளக்கலாம். “புதிய வானம் புதிய பூமி” என்பதில் வானம் X பூமி என்று வருவது முரண் தொடை என்றும் “ஓ ப்ரியா! ப்ரியா!” என்னும் பாடலில் ப்ரியாவை அழைப்பது விளி வேற்றுமை என்றும் “மலை மலை மலை மலே மலே” இப்பாடலில் இப்படி அடுக்கி வருவதுதான் அடுக்குத்தொடர் என்றும்,
“சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதகஇரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”
இப்பாடல் வழி இரட்டைக்கிளவியின் விளக்கமும் தரலாம். ஆசிரியர் மனத்தின் எண்ணி மாசறத் தெளிந்து இவ்வுத்திகளைப் பயன் படுத்தி மாணவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் இலக்கணப் பாடமும் இனிமையான அனுபவமாக அமையும். ஆனால் இம்முறையில் பயிற்றுவிக்கும் போது ஆசிரியருக்குத் தெளிவு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஐயங்கள் எழாவண்ணம் பயிற்றுவிக்க இயலும். அதே சமயம் ஊடகங்களின் மொழிகளை உள்வாங்கிக் கற்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஊடகங்களுக்குரிய பண்பாட்டு நெறிகள் வகுப்பறைக்குள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

இலக்கணப் பாடம் பயிற்றுதல் என்பது மொழியின் பயன்பாட்டை உணர்த்துவது என்பதாகும். நவீன காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த பயிற்றல் முறையினைச் சமூகச்சூழலும், வாழ்வியல் பாங்கும் முற்றிலும் மாறியுள்ள இக்காலத்தும் பின்பற்றுவதும் தமிழாசிரியர்கள் தங்களைக் காலத்திற்கு ஏற்ப தகவு அமைத்துக் கொள்ளாததையே காட்டும். எனவே சூழலுக்கு ஏற்ப மாறி மொழி வளம் பேணுதல் வேண்டும்.

செவியுணவே சுவையுணவு

அறிவுக்கு விளக்கம் கொடுக்க வந்த திருவள்ளுவர் “தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு” (குறள்-424) என்கிறார். ஆன்ற பெருமையைத் தரும் செவிக்கு உணவாகிய, கேள்விச் செல்வத்தைப் பெற மாணவர்கள் பெரிதும் விரும்ப வேண்டும். செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டு, கேட்டவற்றை விடாது உள்ளத்து அமைத்தல் வேண்டும். காட்சி வழிக் கற்றலுக்கு அடுத்த நிலையில் அதிகப்பலன் தருவது கேட்டல் வழிக் கற்றலில்தான். காட்சி, கேள்வி வழியில் 50 விழுக்காடு கற்றல்நடைபெறுகிறது என்றால் அதில் 11 விழுக்காடு கேட்டல் வழியில் நடை பெறுகிறது. (ஆய்வுத்தகவல்: உயர்நிலைத்தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள். ப.17) கல்வியாளர்களில் பெரும்பாலோர் விரிவுரை முறையையே சிறந்தது என்கின்றனர். இக்கேட்டலில் மானவர்கள் திறன் பெற்றுள்ளனரா என்பதை அறிய மேல்நிலை வகுப்புகளில்  ‘கேட்டல் பேசுதல் திறனறி தேர்வு’ (Testing off Oral – Aural skills) நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு ஆசிரியர் ஏதேனும் ஒரு பகுதியைப் படித்துக்காட்டி படித்தவற்றுள்  சில வினாக்களை எழுப்பிச் சோதித்தல் வேண்டும். சிலர் பொதிகைத் தமிழ்க் கையேட்டில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது  மாணவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி கேட்டல் திறனைக் குன்றச் செய்கிறது.
மாற்றாகச் சான்றோர்களின் அல்லது தலைவர்களின் (சுதந்திர தின உரை, குடியரசு நாள் உரை, சமயச் சொற்பொழிவுகள்) வானொலி தொலைக்காட்சி உரைகளை ஒலிப்பேழையில் பதிவு செய்து ஒலிபரப்பி அவற்றில் வினாக்கள் கேட்கும் போது மாணவர்கள் புதிய அனுபவத்தால் ஆர்வத்துடன் விடை இறுப்பதுடன் கேட்டல் அனுபவமும் சுவையானதாக மாறுகிறது. அத்துடன் ஆசிரியர் நமக்காக அருமுயற்சிகள் எடுக்கிறார் என்று ஆசிரியர் மீது நன் மதிப்பும் ஏற்படுகிறது. “கல்வி என்பது எழுத்தறிவை மட்டுமே கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் புரிந்து கொள்ள வைப்பதாகவும் பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.” என்னும் அறிஞர் இராதா கிருட்டிணன் அவர்களின் கருத்துக்கு அரண் செய்வதாக அமையும்.

இயக்குநர் ஆசிரியர்

முத்தமிழில் வைப்பு முறையால் கடைநிலைப் பட்டாலும் தொல்காப்பியரால் முதல் நிலையில் வைத்து எண்ணப் பெறுவது நாடக வழக்கு (தொல்.பொருள்: 56). இயற்றமிழ் கட்புலனுக்கும் இசைத்தமிழ் செவிப்புலனுக்கும் இன்பத்தை நல்குகின்றன. நாடகத்தமிழ் ஒன்றே கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒரு சேர இன்பத்தை நல்குகிறது. பள்ளிப்பாடத் திட்டத்தில் இளநிலை வகுப்பு முதல் உயர்நிலை வகுப்பு வரை எல்லா வகுப்புகளிலும் உரைநடைப் பகுதியில் நாடகம் ஒன்று அமைந்திருக்கும். இந்நாடகத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் நாடகத்தில் எத்தனை கதை மாந்தர்கள் உள்ளனரோ அத்தனை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய பாத்திரத்தை ஒப்படைத்து அவர்களை வகுப்பில் முன்பக்கம் பிற மாணவர்கள் பார்க்குமாறு நிற்க வைத்தல் வேண்டும். அவர்கள் படிக்க வேண்டிய பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது குரல் மாற்றம், குரல் ஏற்றத்தாழ்வு, இடத்திற்கேற்ப சைகளை முதலியவற்றைச் செய்யுமாறு உற்சாகப் படுத்துதல் வேண்டும். அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் நாடகம் பலமுறை நடத்தப் பெறுதல் வேண்டும். இம்முறையில் படிக்கும்(நடிக்கும்) மாணவர்கள் தாங்கள் நடிக்கும் கதை மாந்தராகவே மாறி விடுகின்றனர். அப்பாத்திரத்தின் பண்புகளையும் தம் பண்பாக மாற்றிக் கொள்கின்றனர். நாடகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஓர் இயக்குநர் போலிருந்து கற்பிக்கும் போது மட்டுமே நாடகப்பாடம் செறிவுடையதாக அமையும்.(க. அறிவுடைநம்பி, தமிழ்வழி கற்றல் கற்பித்தல் புதிய உத்திகள்- ப:242) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து எக்குழு நன்கு நடித்துக் காட்டுகிறது? என்று போட்டியும் வைக்கலாம். நன்கு நடித்தவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் அல்லது தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம்.ஆனால் இம்முறைப் பயிற்றுவித்தலில் காலச்செலவு அதிகம். ஆசிரியரின் பணிச்சுமையும் கூடுதலாகிறது. இதனால் இவ்வாறு செய்யாமல் ஒரு சிலர் நாடகச் சுருக்கத்தைக் கூறி பாடத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் பாடம் பல ஆண்டுகட்குப் பின்னும் மாணவர் நெஞ்சில் மறவாமல் இருக்கும்.

எதிர்காலப் புலன் வேண்டும்

ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில் (குலோத்துங்கன் கவிதைகள்: ப. 202)
என்பது வா.செ.குழந்தைசாமியின் கல்விக் கொள்கை. நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலைமுறை மாணவர்களின் எண்ணக்கரு உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகச் சூழலை விளங்கிக் கொள்வதிலும் மொழிப்பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தொழில்மயம், நவீனமயம், உலகாயதமயம் போன்ற காரணிகளால் இன்றைய தலைமுறையினர் அறிவில் மூத்த தலைமுறையினர் என்றெண்ணும் அளவில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கூரிய ஆயுதம் போன்றவர்கள். இவர்களுக்குப் புகட்டப்படுகின்ற கல்வி பதம் பார்த்து, பகுத்தறி சிந்தனையுடன் கற்கின்ற நிலையில் அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பெற்ற தேசிய கல்வித் திட்டத்தின் படி அமைந்த 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை.
  1. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு
  2. இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் கடமை ஆற்றல்
  3. சமூக்த் தடைகளை அகற்றுதல்
  4. பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
  5. ஆண் பெண் நிகர்மை
  6. நிகர்மை, சகோரத்துவம், குடியாட்சி
  7. இந்திய பொதுப் பண்பாட்டு மரபு
  8. சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வு
  9. சிறுகுடும்ப கொள்கைப் பதிவு
  10. அறிவியல் மனப்பான்மை.
 
ஆகிய பத்து அழுத்தமான பொருண்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது. (உயர்நிலைத் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகு முறைகள். ப.10) ஆனால் இளநிலை பாடத்திட்டத்தில் சூழ்ச்சியையும் வஞ்சகத்தையும் கற்றுக் கொடுக்கின்ற பாங்கில் பாடங்கள் அமைந்துள்ளன. (சொர்க்கத்தில் நரி, நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்) பழைய பாடத்திட்டத்தில் காகத்தை ஏமாற்றிய நரி; புதிய பாடத்திட்டத்தில் ஓநாயை ஏமாற்றுகிறது. பழைய மொந்தையில் புதிய கள். காகத்தை ஏமாற்றிய நரி நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்றுவார் என்ற அறத்தைப் புகன்றது. புதிய நரி தன்னலத்திற்காக ஓநாயை ஏமாற்றுகிறது. மேல்நிலை வகுப்புகளில் வீரச்சுவை கலிங்கத்துப் பரணி (மேல்நிலை முதலாமாண்டு) முதலிய பாடங்கள் வீரம் என்னும் பெயரில் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளன. இவை போன்ற பாடங்களைக் கற்ற பின்பு அவற்றின்படி ஒழுக வேண்டிய மாணவர்களின் மனங்களில் வன்முறை எண்ணங்கள் துளிர் விடும் என்பதும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. காலச்சூழலுக்கு ஏற்ப அமையாத பாடத்திட்டங்களும் கற்றல் கற்பித்தலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையை,
உங்கள் புத்தகங்கள்
கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். பாடத்திட்டம் காலத்திற்கேற்ப மாணவர்களை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் எதிர்காலப் புலனுடன் அமைதல் வேண்டும். அதற்காகப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பாடத்திட்டக் குழுவினர்க்குத் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும்.
இறுவாய்.
மாறாத பொருளெதுவும்
வளர்வதில்லை
வையத்தின் விதியிதற்கு
மாற்றமில்லை (வா.செ.குழந்தைசாமி)
என்பார் அறிவியல் அறிஞர் கவிஞர் குலோத்துங்கன். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலக்கியங்கள் நற்பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பனவாய் அமைதல் வேண்டும். இலக்கணம் வளர்ந்து வரும் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற வழி எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள் மொழிப்பாடம் கற்றுக் கொடுக்க என்றோ படித்தது  போதும் என்னும் தம் நிலையில் இருந்து மாற வேண்டும். காலச்சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீனப் போக்குகளை அறிந்து கொள்ளல் வேண்டும். நவீன எழுத்தாளர்களை ஓரளவேனும் அறிந்து கொள்ள வேண்டும். பிற மொழி இலக்கிய அறிவுடன் விளங்க வேண்டும். முக்கியமாக சற்றேனும் ஆங்கில இலக்கிய அறிவும் அவர்களுக்கு இருத்தல் அவசியமாகிறது. குறைந்த அளவு, பல்துறை சார்ந்த நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருத்தல் வேண்டும். தாம் பல் துறை வல்லாண்மையுடனும் பயிற்றுவித்தலில் புதுமைப் போக்கையும் ஆசிரியர்கள் கையாண்டால் மொழிப்பாடம் கற்பித்தல் உன்னத நிலையை அடையும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் வகுப்புகளை வெற்றுக் கட்டிடங்கள் மட்டும் கேட்கும் நிலை உருவாவது திண்ணம்.



இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
நன்றி வல்லமை மின்னிதழ்.
http://www.vallamai.com/archives/10451/


22 கருத்துகள்:

  1. இன்றும் டண்ணகரம் மற்றும் றன்னகரம் எனக்கு குழப்பமே... இன்று முதல் உங்களால் தெளிந்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற கருத்து இனிக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. /அஆ இஈ உஊ எஏ ஒஓ
    கங் ச்ஞ் ட்ண் த்ந் ப்ம் ய்ர் ல்வ் ழ்ள் ற்ன்
    இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே/. ண என்ற எழுத்துதான் டகரத்தின் முன் வரும் ....போன்ற எடுத்துக்காட்டுகள் ட்ண்,த்ந், ற்ன்
    என்பனவற்றுக்கு முரண்படுகிறதோ. பண்டம், வந்தான், சென்றன என்பன போன்ற உதாரணங்கள் காட்டியிருக்கலாமோ.? இந்தக் காலத்தில்தான் இவ்வளவு பிழையான உச்சரிப்புகளைக் கேட்கிறேன். தமிழ் மட்டும் அல்ல, ஆங்கிலமும் குதறப்படுகிறது. உங்கள் பதிவுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. அன்பு சகோதரி,
    அருமையான செழுமையான ஒரு கருத்தை ஆக்கமாக்கி இருக்கிறீர்கள். இத்தலைப்பை இவ்வளவு அழகாக உருவேற்றியதறு முதலில் உங்களுக்கு ஒரு பலமான கைத்தட்டல்.
    நானும் சில சமயம் மலையாளிகள் பேசுகையில் 'ழ' உச்சரிப்பை கண்டு பிரமித்திருக்கிறேன்.
    தமிழின் சிறப்பு எழுத்து என்று மார்தட்டிக்கொள்ளும் நம்மால் அவ்வளவு அழகாக அந்த எழுத்தை உச்சரிக்க முடிவதில்லை ஆனால் மலையாளிகள் அதை அருமையாய் செய்கிறார்கள்...
    கற்றலுக்கு கற்பித்தலும் கற்பிக்கும் முறையும் எவ்வளவு அவசியமோ அதே போல கற்கும் நம் மனநிலையும் மிக முக்கியம்..

    அருமையான ஒரு கட்டுரைக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத்துப் பாடமாக்கி....நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன் என்று சொல்லி அரைகுறைத் தமிழில் நுனிநாக்கால் தேவாரம் பாடும் இன்றைய தலைமுறையை என்ன செய்யலாம் சகோதரி !

    பதிலளிநீக்கு
  6. அன்பு சூர்யஜீவா,
    வருகை கருத்து இரண்டும் மகிழ்விக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை சொன்னது…

    //மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற கருத்து இனிக்கிறது.//

    கண்டிப்பாக மாற்றத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் வாழ முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  8. மதிப்பிற்குரிய G.M Balasubramaniam ஐயா
    //பண்டம், வந்தான், சென்றன என்பன போன்ற உதாரணங்கள் காட்டியிருக்கலாமோ.?// காட்டியிருக்கலாம். இப்போது என்ன தடை. எழுதிவிட்டால் போகிறது. செய்து விடுகிறேன். தங்கள் பயனுள்ள கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. அன்பு மகேந்திரன்,

    கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை எண்ணி சற்று வருந்திய போது எழுதிய கட்டுரை இது. ஊக்கம் தரும் தங்கள் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  10. //தமிழின் சிறப்பு எழுத்து என்று மார்தட்டிக்கொள்ளும் நம்மால் அவ்வளவு அழகாக அந்த எழுத்தை உச்சரிக்க முடிவதில்லை ஆனால் மலையாளிகள் அதை அருமையாய் செய்கிறார்கள்...
    கற்றலுக்கு கற்பித்தலும் கற்பிக்கும் முறையும் எவ்வளவு அவசியமோ அதே போல கற்கும் நம் மனநிலையும் மிக முக்கியம்.//
    மிகச்சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன். நம்மால் அழகாக ழகரத்தை உச்சரிக்க இயல்வது இல்லை என்பது உண்மையிலும் உண்மை.

    எல்லாம் இப்படி இருந்தால் போதும் என்னும் மனோபாவமே என்றும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  11. ஹேமா சொன்னது…

    //ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத்துப் பாடமாக்கி....நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன் என்று சொல்லி அரைகுறைத் தமிழில் நுனிநாக்கால் தேவாரம் பாடும் இன்றைய தலைமுறையை என்ன செய்யலாம் சகோதரி !//

    அவர்களுக்கு எளிதில் காட்சி ஊடக வாய்ப்புகள் கிடைத்து விடுமே ஹேமா. அவர்களின் நுனி நாக்கு லகரத்தை ஒரு நாளுக்கு ஈட்டி கொடுத்து விடுகிறதே. அப்பரம் லகரமாவது ழகரமாவது.......லகரத்தின் (லட்சங்களின்)முன்!!!

    பதிலளிநீக்கு
  12. “உங்கள் புத்தகங்கள்
    கண்களைத் திறப்பதில்லை
    ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”
    என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

    புத்தகங்களே ஜாக்கிரதை
    குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்
    என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.

    பதிலளிநீக்கு
  13. மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவருக்கும் அவசியமானது

    உயர்கல்வியில் பணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை தமிழ் மொழிக் கல்வியினை மாணாக்கர் விரும்பி பயிலமாட்டார்கள்

    பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை.

    அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
    முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்

    பதிலளிநீக்கு
  14. மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவருக்கும் அவசியமானது

    உயர்கல்வியில் பணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை தமிழ் மொழிக் கல்வியினை மாணாக்கர் விரும்பி பயிலமாட்டார்கள்

    பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை.

    அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
    முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்

    பதிலளிநீக்கு
  15. அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர் என்பதை ஆங்காங்கே நன்கு உணர முடிகிறது.

    விரைவில் முனைவர் பட்டமும் கிடைத்திட என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன் vgk [gopu1949.blogspot.com]

    பதிலளிநீக்கு
  16. //இராஜராஜேஸ்வரி சொன்னது…
    “உங்கள் புத்தகங்கள்
    கண்களைத் திறப்பதில்லை
    ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”
    என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

    புத்தகங்களே ஜாக்கிரதை
    குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்
    என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.//

    இதை நானும் படித்து மிகவும் ரஸித்திருக்கிறேன்.
    அவரை நேரில் சந்தித்து இதைப்பற்றிக்கூறி பாராட்டியும் இருக்கிறேன்.

    இனிய நினைவலைகளை ஞாபகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். ;))))

    vgk

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி சொன்னது…
    // புத்தகங்களே ஜாக்கிரதை
    குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்
    என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.//

    ஆம் இராஜராஜேஸ்வரி.. நானும் படித்துள்ளேன். உண்மையைச் சொல்லியுள்ளார். நாம்தான் இன்னும் குழந்தையைச் சுமை கழுதைகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோமே.
    அம்மா என்னவோ பருவ முறைக் கல்வியை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளார்களே. பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற் இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  18. பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை.

    அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
    முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார் /

    அன்புள்ள பேரா.முனைவர். கிருஷ்ணகுமார்,

    தங்களின் முதல் வருகை இனிக்கிறது. நல்வரவு. முதல் கருத்து அதினினும் இனிமையாக.

    ஆம் அப்படிச் செய்தால், பொறியில முனைவர்கள் எல்லாம் ஆங்கிலத்துக்கு மட்டும் தொண்டு செய்யும் நிலை முதலில் மாறும்.

    பொறியியல் கலைச்சொற்களும் அறிவியல் கலைச்சொற்களும் வருவதும், அதனை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மட்டுமே சற்றேனும் நம் நாடு வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட இயலும்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர் என்பதை ஆங்காங்கே நன்கு உணர முடிகிறது.

    விரைவில் முனைவர் பட்டமும் கிடைத்திட என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன் vgk [gopu1949.blogspot.com] //
    அன்புள்ள வி.கோ.கி. ஐயா,
    தங்களது அன்பில் மனம் மகிழ்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. என் சிறு சிறு முயற்சியும் தங்களது பொன்னான கரங்களால் பாராட்டப்படுவதை எண்ணும்போது எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அத்துணை இன்பம். மீண்டும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. //இதை நானும் படித்து மிகவும் ரஸித்திருக்கிறேன்.
    இதை நானும் படித்திருக்கிறேன். நான் பார்த்துப் பேச விரும்பும் கவிஞர்கள் பட்டியலில் கவிக்கோ முக்கியமானவர். எப்போதோ?

    //அவரை நேரில் சந்தித்து இதைப்பற்றிக்கூறி பாராட்டியும் இருக்கிறேன்.//
    அப்பரிசு எங்களுக்கே தங்களிடம் இருந்து எப்பொதும் கிடைக்கும் போது அவருக்குக் கிடைக்காமல் இருக்குமா ஐயா?

    இனிய நினைவலைகளை ஞாபகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். ;))))
    இனிய நினைவலைகள்.... தொடர வேண்டும்...
    மீண்டும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. தங்களது கட்டுரை எனது இடுபணியைச் செய்து முடிப்பதற்குப் பெருந்துணைப் புரிந்துள்ளது. இதுபோன்ற வரவுகள் யாவும் என்னைப் போன்ற வருங்கால ஆசிரியர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். தங்களது சிறந்த படைப்பிற்கு எனது வாழ்த்துக்கள் ^_^

    பதிலளிநீக்கு
  22. முதலில் என் வலைப்பூவுக்குள் வருகை புரிந்தமைக்கு நன்றி. அடுத்து கருத்துக்கு நன்றி. எதிர்காலத்தில் உங்கள் ஆசிரியப்பணி செம்மையுற மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு வருத்தம் உங்கள் பெயர் யாரென கருத்துப் பதிவிலாவது தெரிவித்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு