“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்.....

http://tamilshots.com/albums/kavigarkal/bharathy/normal_mahakavi-bharathiar.jpg

முறுக்கு மீசையும் நறுக்குத் தெறித்தார்போல சிந்தனையும் கருப்புக்கோட்டும் கைத்தடியும் முண்டாசும் என்று தனக்கென ஒரு படிமத்தை உருவாக்கி தென்றல் காற்றில் உலவ விட்டு, தன் மூச்சுக்காற்றை முடித்துக்கொண்டவன் சுப்பிரமணிய பாரதி. முப்பொத்தொன்பது ஆண்டுகளே இம்மண்ணுலகில் வாழ்ந்து இன்று உலக மக்களின் மன உலகில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மகாகவி அவன்.

பொன்னும் பொருளும் புகழும் விரும்பாத ஆசையற்ற மனத்தை வேண்டி கண்ணம்மாவைச் சரணடைந்த அம் மாகவி வாழும் காலத்தில் பொன், பொருள் புகழ் என்று எதையும் காணாமலே போனதை விதி என்பதா? சமுதாய நீதியற்ற வீணர்களின் சதி என்பதா?

பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் விரும்பியவன் அம் மகான். மூடப்பழக்கத்தைச் சுட்டெரிக்க சுடர்விடும் விழிகளில் தீ, வீசும் விழிப் பார்வையில் தீ, விரல் சுடும் எழுத்தில் தீ, வீறு கொண்டு பேசும் உதட்டில் தீ, உண்மை உணர்வினில் தீ, உள்ளத்தில் தீ. என்று தானே தீக்குழம்பாய் மாறினான். ஆம் பாரதீயாய் கொழுந்து விட்டு எரிந்தான். அவன் மீன்குஞ்சுகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வில்லை. தீக்குஞ்சுகளுக்குப் பாய்ச்சல் கற்றுக்கொடுத்தான் அவன் தமிழ்த்தாய் பெற்ற தன்னிகரில்லா வரம், அவன் தமிழகத்தின் தனிப் பெருமை. அவன் தமிழினத்தின் தவப்பயன்.

ஆடுவோம் பாடுவோம் என்று சுதந்திரம் வருமுன்னே துள்ளிக்குதித்த அவன் வெள்ளை உள்ளம் கண்ட நெட்டைக்கனவுகளின் நீளம் மட்டுமல்ல கல்வியில், சமத்துவத்தில் அறிவியலில், தொலைத் தொடர்பியலில் என்று அவன் கண்ட கனவுகளின் எண்ணிகையும் நீளமானதே.. அந்தக் கனவுகள் இன்று காட்சிகளாயினவா? என்று நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாப்பதும் சீர்தூக்க முயல்தும் ஒரு யுகக் கவிக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

குயில் பாட்டில் தான் கண்ட கனவில்
“குயிற்பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ”

என்று பெட்டையைப் பிரியாமல் வாழும் நல்வரம் கேட்கும் அவன் குயிலுக்காகவா இதைப் பாடியிருப்பான். இல்லை என்பதை அவனே,

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தால் கூறீரே”

என்று கூறுவதால் அறியலாம். காதலிருவர் கருத்தொருமித்து,

“வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுக்கு,
நல்ல உயிர் நீ யெனக்கு நாடியடி நான் உனக்கு,
வேதமடி நீ எனக்கு, வித்தையடி நான் உனக்கு”

என்று ஆதரவாக இணைந்து வாழும் போக்கு இன்று தமிழினத்தில், தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று கட்டியம் கூற இலட்சக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சான்றாக உள்ளன. மேலை மோகம் பாரதியின் அக்கனவை நினைவாக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூற வைக்கிறது.

மேலைநாட்டு நாகரிகம் நம்மவர்களிடம் புதியதாக நுழைத்துள்ள கலாச்சார சீரழிவு, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living Together). இன்று பெருநகரங்களில் பெருவழக்காகியுள்ள நாகரிங்களில் முதலிடம் பிடிப்பது இது. பாரதி பெண் தவறுவதற்கு ஆணே காரனம் என்று ஆண்களைச் சாடினான். விதவை மறுமணத்தை ஆராதித்தான். ஆனால் அவன் இருந்திருந்தால் ஒருபோதும் இதுபோன்ற முறையற்ற வாழ்நெறியை ஆதரித்து இருக்க மாட்டான்.

“பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்”

என்று கூறிய பாரதி, பாருக்கெல்லாம் வாழ்நெறி கற்றுக்கொடுத்த நம் பாரதப் பெருமை பாழ்பட்டு சீர்கெட்டு கீழிட்டுப் போயுள்ளதைக் கண்டால் பொறுப்பானா? அவன் முறட்டு மீசைதான் துடிக்காமல் இருக்குமா?

பெண்டாட்டிகளுக்கும் பெண்களுக்கும் அழுத்தமாக வக்காளத்து வாங்கியவன் முண்டாசுக் கவிஞன்..
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்” 
என்று ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து பெண்ணினத்தைத் தலைதூக்க வைத்த பெருமை அந்தப் புனிதக்கவிஞனையே சேரும். பெண்களை ஆண்களோடு போட்டிப் போடச் சொன்னான். பெண்களும் போட்டனர் போட்டி. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும். பாரதி “ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்று கூறியது பொய்த்துப் போகவில்லை. பட்டங்கள் ஆண்டனர், சட்டங்கள் செய்தனர் பாரினில் நம் பெண்கள். ஆனால் அவர் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிய ‘எட்டும் அறிவினில்’ என்ற சொல்லை மட்டும் கவணிக்காது எல்லாவற்றிலும் என்று எடுத்துக்கொண்டதால் இன்று கள்ளும் காமமும் களியாட்டங்களும் பொதுவுடைமையாகிப் போனது.

கல்வி நிலை முதல் கற்பு நிலை வரை ஆண்களும் பெண்களும் சமம் என்று கற்பு நிலையையும் சேர்த்து பாரதி கூறியதன் உள்நோக்கம் ஆண்களும் பெண்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத வாழ்நெறியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக....

ஓதரும் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்”

என்ற பாரதியின் கனவு காட்சியானதா? என்பது வினாவல்ல. இல்லை என்பதன் குறியீடே...

சொந்த மண்ணில் பிறர்க்கடிமைகளாய், அந்நியர்களை எதிர்க்க திரானியற்று, அவர்களால் வறுமையுற்று வதைப்பட்டுக் கிடந்த மக்களை மேலேற்ற சொல்லேணி படைத்த சுதந்திரக் கவி பாரதி. அந்நலம் இந்நலம் தன்னலம் என்று எந்நலமாயினும் ஓருபோதும் ஈயென இரத்தல் செய்யோம் என்பதை,

"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்".

என்று பாடினான். இன்று குழந்தையைத் தவிர எல்லாம் இலவசமாகத் தருகிறோம் என்ற கட்சி பேதமின்றி ஏகோபித்த வாக்குறுதிகள். சுதந்திர நாட்டிலேயே எங்கும் எதிலும் தலைவிரித்தாடும் இலவசங்களின் வசப்பட்டு இன்றும் கஞ்சி குடிப்பதற்கில்லாத தன் வறுமை நிலைக்கும் விலைவாசி ஏறி மலையுச்சியை அடைந்துள்ள இந்நிலைக்கும் காரணம் எது? அல்லது யார்? என்றறியும் பகுத்தறிவு விளையாது போனதேன்?

மண்வெட்டிக் கூலி தினலாச்சே! – எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே – இந்த
மேதியினில் கெட்ட பெயராச்சே!

என்று வெந்து புழுங்கும் நிலை ஏன் வந்தது? மூலைக்கொரு கட்சி சாதிக்கொரு தலைவர் என்று புற்றீசலாய்க் கிளம்பி விட்ட அரசியல் தலைவர்களின் மூளைச்சலவையில் அழுத்தமாக மடித்து மழுங்கி இந்நாட்டு மன்னர்கள் எல்லோரும் பொறியற்ற விலங்குகளாய் இலவசங்களுக்காக இரு கரம் விரித்து வாழும் இழிநிலையை எய்தியுள்ளனர். பாரதி கண்ட தொலைதூரக் கனவு இந்த அற்ப ஆசைகளால் நொறுங்கிப் போனதை அறிவார்களா இவர்கள்?

இந்தத் தேசத்தைச் செதுக்கிச் செப்பனிடக் கவிதை உளியுடன் கிளம்பிய சத்தியக் கவிஞனின் நித்திரைக் கனவுகளில் சித்திரமாக இடம் பிடித்தவை இன்றும் அமைக்கப்படாத நதிப்பகிர்வும் சமைக்கப்படாத சேது பாலமும். இன்று ஈ என்ற எழுத்துப் படிமம் உணர்த்தும் துனபச்சாயல் ஈழம்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிசையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”

புனித கங்கையை பொது உடைமை மங்கையாக்கி பயிர் காக்க, பசியால் வாடுகின்ற மக்களின் உயிர் காக்க நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்திற்கு அன்றே வழி கோலினான் அந்தப் பாரதக்கவி. இன்றளவும் அவன் விட்ட இடத்தில் இருந்து ஒரு புள்ளியேனும் நகர்ந்துள்ளதா? அரசியல் கமண்டலத்தில் அடைப்பட்ட கங்கையும் காவிரியும் என்று விரியும்? என்று விரியும்? என்று காத்திருக்கும் கண்களில் கண்ணீர்தான் விரிந்திருக்கிறது.

தசையெல்லாம் வெந்தபின்னே குளிர்ந்திடும் விழிகள் ஏது? இதயமே இழந்தபின்தான் முகிழ்த்திடும் உணர்வு ஏது? பெடையதைப் பிரிந்தபின்னர் பறவைகள் பிழைப்பு ஏது? பாசப்பிணைப்புகள் பதறிச்சாகப் பார்த்திடும் இனங்கள் ஏது? இனத்தமிழ்ர்கள் குருவிகளாய் கொசுக்களாய் மடிய ஈழத்துத் தின்னைகளில் கேட்கும் மரண ஓலம் ஓய ஏதேனும் வழி நாம் கண்டதுண்டா?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

என்று அவன் கண்ட கனவு விழித்திறையில் விழுந்த வீண்கனவு இல்லை. குருதிக் கொப்பளிக்கும் இருதயத்தின் உள்ளிருந்து கிளம்பிய இலட்சியக் கனவு. ஏழிசையை எழுப்பும் முன்னே அந்த நல்லதொரு வீணையை நாம் எறிந்து விட்டோம் எரிதழலில். அவன் விதைத்தவை நல் விளைச்சல்களே என்று அறிந்த பின்னும் வெற்று மொழி பேசி வாழ்ந்திடுதல் நலமாமோ?

நிறைவாக.....

நீண்டுகொண்டே போகும் அநீதிகளைக் கண்டு அவன் கனல் கக்கும் விழியின் கோப நெருப்பே சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள். மலைகள் தோறும் கொட்டும் அருவிகள் நிறைவேறாத கன்வுகளுக்காக அவன் கண்கள் சிந்தும் கண்ணீர். இனியேனும் பாரதியை உச்சரிக்கும் ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு கனமும் எச்சரிக்கையாக அவன் கனவுகளை, அவற்றின் உண்ணத உட்பொருட்களை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற முயலுட்டும்.......

நன்றி பாரதியார் சங்கம்.

(இக்கட்டுரை கோலாலம்பூரில் 29.05.2011 அன்று நடைபெற்ற பாரதியார் விழாவில் வெளியிடப்பெற்ற “இன்றும் வாழ்கிறாய் இமய பாரதி!” என்னும் சிறப்பு மலரில் இடம்பெற்றது.)

25 கருத்துகள்:

  1. பாரதி கனவு கண்டான். நாமும் கனவு காணுவோம். கனவு மட்டுமே காண்போம். அதற்கு மட்டும்தான் நாம் லாயக்கு. வாழ்க பாரதியின் தொடரும் கனவுகள்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கோபம் புரிகின்றது ஜி.என்.பி அய்யா. சிறிது சிறிதாகத்தானே நகர்த்த வேண்டும். பெண் விடுதலை நனவாகவில்லையா? எல்லாம் கைகூடும்...நம்பிக்கையோடு கல்லெறிவோம். கண்டிப்பாக கனி உதிரும். கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. பாரதியின் சிந்தனைகளையும் கனவுகளையும் அழுத்தமாக எடுத்து வைத்த கவிகளை ஒருங்கே மேற்கோள் காட்டிய அழகான பதிவு ...

    எண்ணிய முடிதல் வேண்டும்...

    நல்லவே எண்ணல் வேண்டும்....

    பதிலளிநீக்கு
  4. //பெண்களை ஆண்களோடு போட்டிப் போடச் சொன்னான். .....ஆனால், அவர் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிய ‘எட்டும் அறிவினில்’ என்ற சொல்லை மட்டும் கவனிக்காது எல்லாவற்றிலும் என்று எடுத்துக்கொண்டதால் இன்று கள்ளும் காமமும் களியாட்டங்களும் பொதுவுடைமையாகிப் போனது.//

    அன்பின் ஆதிரா,

    சிறப்பான கட்டுரை. இது இன்னும் பலரை எட்டவேண்டும். ஆதிரா சமுதாயம் பற்றி எழுதத்தொடங்கி விட்டால் “பெண்பாரதி” போல் சொல்வீச்சு!
    (ஆதிரா தற்போது சென்னையிலா வசிக்கிறார்?)

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள பத்மநாபன்,
    தங்கள் அன்பும் அக்கறையும் நிறைந்த கருத்துரை என்றும் என்னை மேன்மேலும் வளர்க்கும். என்றும் இந்த அன்பை எதிர்நோக்கி... நன்றியுடன்...

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்!
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
    பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பனியே போல
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்//
    எனக்கும் இது மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு சத்ரியன்,
    நான் சென்னையில்தான் வசிக்கிறேன் சத்ரியன். சென்னையின் அச்சுறுத்தும் நாகரிக வளர்ச்சி இப்படியெல்லாம் எழுத வைக்கிறதோ என்று எண்ணவும் வைக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லை.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சத்ரியன். தாங்கள் சென்னையா?

    பதிலளிநீக்கு
  7. பிரமாதம்! பிரமாதம்! நெகிழ வைத்தக் கட்டுரை (அனேகமாக :).

    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பள்ளு பாட ஒரு பயலுக்கும் தைரியம் வரவில்லை. பெண்ணுக்கும். விருதுகளும் பொன்முடிகளும் மட்டும் ஏனோ தைரியமுள்ளவருக்குக் கிடைப்பதில்லை. விடுங்கள். பாரதியை இன்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு இது ஒரு காரணமோ?

    ஆமா.. டாக்டரம்மா... மேலை மோகத்தால விவாகரத்து அதிகம்னு சைக்கிள் கேப்ல பூந்து புறப்படறீங்களே? என்னாங்க இது? living together பாரதியின் பெண் சுதந்திரம் பகற்கனவாகவில்லை என்பதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா? இதில் என்ன கலாசார முரண் வந்துவிட்டது? தன் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சுதந்திரத்தின் துணிச்சலான வெளிப்பாடு தானே அது?

    திருமணம் என்ற பெயரிலும், குடும்பம் என்ற பெயரிலும், மனைவி, சகோதரி, பெற்ற பெண்களை கேவலமாக வேலைக்காரி போல் நடத்துவது எந்த வகையில் கலாசார மேன்மையானது சொல்லுங்க? ஆதரவில்லாத இடத்தில் தன் நிலையை உணர்ந்து வேலைக்காரி போல் நடக்கும் பெண்களை கலாசார மேன்மையை வளர்ப்பவர்கள் எனலாமா?

    என்னமோ போங்க..

    பதிலளிநீக்கு
  8. 'பாலித்திட வைத்தவர்' என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  9. பிரமாதம்! பிரமாதம்! நெகிழ வைத்தக் கட்டுரை (அனேகமாக :).
    இப்படியெல்லாம் கிண்டல் பண்ணினா எப்படி?

    //living together பாரதியின் பெண் சுதந்திரம் பகற்கனவாகவில்லை என்பதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா?//

    ஆரு இல்லன்னாங்க. பாரதி கண்டுகின கனவு பலிச்சிருக்குன்னு தான் சொன்னேன். அவன் கொஞம் கனா கண்டாக்கா இப்ப ரொம்ம்ம்ம்ம்ப பலிச்சிருச்சு...

    ஆஹா நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெயிலு..
    டுகெதர் இருந்தா ஓகே... ஒன்னா டூ மச் கெதர்... இல்லாட்டாக்கா வெரி சூன் ஒன்லி லிவிங்னு இருக்காங்களே... அதைத்தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  10. //அப்பாதுரை சொன்னது…

    'பாலித்திட வைத்தவர்' என்றால் என்ன?//

    பாலை ஊத்தி ஒலகத்தை வளர்த்தவர் என்று பொருளோ!!!!!. எப்படியாவது மடக்கிடறாங்களே....

    பதிலளிநீக்கு
  11. கிண்டல் இல்லீங்க.. உண்மையிலேயே பிரமாதமான கட்டுரை. மேலை மோகத்தைக் குறை சொன்னது மட்டுந்தான் கொஞ்சம் இடறிச்சு - எனக்கு.

    பாரதியோட உண்மையான கனவு, 'ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம் - தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்' மட்டுமே என்று தோணுதுங்க.

    பதிலளிநீக்கு
  12. கனவு நினைவாகும் ,நிச்சியம் அது வந்து ஆளும்!
    நேற்றைய கனவு ,இன்று தடையாகலாம் ! நாளைக்கு தடையை மீறி உருவாகாலம்!நம்பிக்கை தானே வாழ்க்கை!நம்பி கை உயர்த்தினால்,உருவாகும் !

    பெண் பாரதியின் வரிகள்,வருங்காலத்தை உருவாக்கும்.
    குரல் கொடுக்கும் .

    என்ற நம்பிக்கையோடு ...
    கலைநிலா .

    பதிலளிநீக்கு
  13. அன்பு அப்பாதுரை,
    எனக்குத் தெரியாதா. சும்மா விளையாட்டுக்கு...

    //பாரதியோட உண்மையான கனவு, 'ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம் - தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்' மட்டுமே என்று தோணுதுங்க.//

    அதுமட்டுமில்லங்க.. எட்டும் அறிவில் போட்டி வேண்டும். அது மிகையில்லை. அவர் அவ்வப்போது பெணகளை ஞான நிலையமாகக் கூறுவதற்கும் இதுவே காரணம். அப்போதானே அது சரியான போட்டியா, முன்னேற்றமா இருக்கும்.
    மீண்டும் வந்து கருத்து பகர்ந்தமைக்கு நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  14. vazeerali சொன்னது…
    நேற்றைய கனவு ,இன்று தடையாகலாம் ! நாளைக்கு தடையை மீறி உருவாகாலம்!நம்பிக்கை தானே வாழ்க்கை!நம்பி கை உயர்த்தினால்,உருவாகும் !//

    உண்மை கலைநிலா. உங்கள் அன்புக்கு ஒரு அளவே இல்லையா கலைநிலா?

    கருத்துக்கு நன்றி கலைநிலா.

    என்றும் மாறா அன்புடன் நன்றியுடன்...

    பதிலளிநீக்கு
  15. // (இக்கட்டுரை கோலாலம்பூரில் 29.05.2011 அன்று நடைபெற்ற பாரதியார் விழாவில் வெளியிடப்பெற்ற “இன்றும் வாழ்கிறாய் இமய பாரதி!” என்னும் சிறப்பு மலரில் இடம்பெற்றது.) //

    மகிழ்ச்சி.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள வாசன்,
    மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி வாசன்.

    பதிலளிநீக்கு
  17. பாரதியை நினைவு கூர்ந்து அவரின் உன்னத உணர்வுகளின் பதிவாய் அமைந்த விதம் சிந்தனையைத் தூண்டியது

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள ரிஷபன்,
    அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  19. “வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
    பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுக்கு,
    நல்ல உயிர் நீ யெனக்கு நாடியடி நான் உனக்கு,
    வேதமடி நீ எனக்கு, வித்தையடி நான் உனக்கு”//

    இந்த வரிகள் ஒரு காம்பயரிங்க நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லி பாட வைத்தார்கள்... இன்னும் மனதில் நிற்கும் வரிகள்... பாரதி என்றும் நம்மோடு... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. இன்று மாய உலகம் ஆதிராவின் வலையில்..
    முதல் முறை பாதம் பதித்துள்ளீர்கள் மாய உலகம். வருக! வருக!
    வாழ்த்துக்கு.. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள் சூர்யா ஜீவா,

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...... அது தீ...

    முதல் வருகை, முதல் கருத்து இரண்டும் மனதை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி சூர்யா..

    பதிலளிநீக்கு
  23. //திருமதி. ஆதிராமுல்லை. இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். அவரின் “ஆதிரா பார்வைகள்” என்னும் வலைப்பூவில் எட்டையயப்புரத்தின் நெட்டைக் கனவுகள் என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அவரது மற்ற படைப்புகளையும் விட்டு விடாதீர்கள்.//

    அன்புள்ள சத்ரியன்,
    அசத்தியுள்ளீர்கள் பதிவில்.
    அந்தக் கண்ணன் மாடு மேய்த்தவன். இந்தக்கண்ணன் ஆடு மேய்த்தவன். இப்போது இந்தக் கண்ணன் புனித மேய்ப்பன்....

    உங்களை ஆளாக்கிய அந்த புனிதருக்கு நெஞ்சம் சொல்கிறது நன்றி.... நன்றி.... நன்றி.... நன்றி....நன்றி....

    வலைச்சரத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி அறப்பணி செய்யும் ஆசிரியர்களைப் பற்றிய அழகான அறிமுகங்கள். நானும் ஒரு சிற்றுலா வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. //திருமதி. ஆதிராமுல்லை. இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். அவரின் “ஆதிரா பார்வைகள்” என்னும் வலைப்பூவில் எட்டையயப்புரத்தின் நெட்டைக் கனவுகள் என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அவரது மற்ற படைப்புகளையும் விட்டு விடாதீர்கள்.//

    மிக அழகாக என்னையும் அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்...

    இங்கிருந்து விழியோர பனி தெளித்து என் நெஞ்சத்து நன்றி மலர்களைத் தூது விடுத்துள்ளேன் தங்களிடம்...

    என் மனமார்ந்த நன்றிகள் சத்ரியன்...

    பதிலளிநீக்கு