“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 27 ஆகஸ்ட், 2011

நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.


நூல் மதிப்புரை
நூல் பெயர்: மருத்துவம் புதிது
ஆசிரியர்: டாக்டர் வஸந்த் செந்தில்
பக்கங்கள்: 112
விலை: ரூபாய் 40
பதிப்பகம்: குமரன் பதிப்பகம்
1, முத்து கிருஷ்ணன் தெரு
   தி நகர். சென்னை – 600ம் 017.

               
        ஆரம்பமே தற்சமயம் மருத்துவ உலகில் நடந்த புதிய விஷயங்களை, கடினமின்றி, சுலபமாகப் புரிய வைப்பதற்காக, மிக எளிய தமிழில் முயற்சி செய்திருக்கிறேன். படிக்கும்போது நீங்கள் இந்தப் பக்கங்களில் இருந்து தப்பி விடாமல் இருப்பறகாக கூடவே சில சில ஜிக் – ஜிக் வேலைகளும் அங்கங்கே இருக்கிறது என்று தொடங்கும் இந்நூலில் முப்பது மருத்துவ கட்டுரைகள் அமைந்துள்ளன..

                தலைப்புகள்: கசப்பு மாத்திரைகளைத் தேன் தடவித் தந்ததுடன், பார்வையைச் சுண்டி இழுக்கும் கலர் கலர் மிட்டாய்களாய் தலைப்பை மின்னச் செய்துள்ளமை கட்டுரைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் டாக்டர் வஸந்த் செந்திலின் பலே சாமர்த்தியம். சான்றுக்குச் சில தலைப்புகள்.. ஒரு உ போதும், உங்களிடம் எக்ஸ் இருக்கிறதா?, கண்டு கொல்வேன் கண்டு கொல்வேன், கொழுப்புக் குழப்பங்கள், காண்டம் கண்டம், ஆண் குழந்தை பிறக்க வேண்டுமா?, அலியின் எலி, நாய்கள் ஜாக்கிரதை (படித்துச் சிரித்ததில் மருத்துவச் செலவு.. வயிற்று வலிக்கு) நெய்தோசையும் நண்டுக்கல் பற்பமும். தலைப்பைப் பார்த்து வேறு என்ன கட்டுரைகளோ என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சத்தியமாக மருத்துவ கட்டுரைகளே..ஆம் இணையதளத்தில் (அம்பலம் இணையம்) டாக்டர் வஸந்த் செந்திலால் பதிக்கப் பட்டவை இவை.

                கட்டுரை செய்திகள்: ”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருவள்ளுவரின் வாக்குக்குப் பொருத்தமாக ஒவ்வொரு கட்டுரைகளும் நோய், நோய்க்குக் காரணம், தீர்க்கும் மருத்துவம் என்ற நிலையில் தனித்தனி தலைப்பில் கூடுதல் ஜிக் ஜிக் வேலைகளுடன் சுவையாக அளித்துள்ள பாங்கே கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இதற்கும் சான்று ஒன்று தருகிறேன்.. ”உங்களுக்கு ரேபிஸ் இருக்கிறதோ இல்லையோ நாய்களிடம் பின்பற்ற வேண்டிய குறுப்புகளைத் தருகிறேன். 1. இடுப்பு உயரத்திற்கு நாய்களை வளர்த்து கட்டி வைக்காமல் வீட்டில் உலா வரச் செய்யாதீர்கள். காரணம் போஸ்ட் மேன் முதல் புடலங்காய் விற்கிற பெண் வரை வாசலுக்குள் வரவேண்டிய கட்டாயம் சில அந்நியர்களுக்கு உண்டு. தந்தி என்று அவர் சொல்வதற்கு முன் கொந்தி விடும்  ”பிங்கி..கீப் கொய்ட்” என்று நீங்கள் சொல்வதற்குள் வேலை முடிந்திருக்கும். 2. டோனி... கோ.... காட்ச் என்று அதை சும்மா விரட்டாதிர்கள். அது எதையும் கைகளால் காட்ச் பிடிக்காது. வாயால் தான் காட்ச் பிடிக்கும். அதற்கு பெயர் காட்ச் அல்ல. கடி. என்று அறிவுரைகள் தொடரும். 
        மற்றொரு சிறப்பு கட்டுரைகளின் முடிவில் உங்களுக்கு ஒர் ஜோக் சொல்லுகிறேன் என்று கூறி ஒரு நகைச்சுவையோடு (ஜோக் சொல்லி) ஒவ்வொரு கட்டுரையையும் முடித்து இருக்கிறார் டாக்டர் வஸந்த். ஒரு கட்டுரையை மட்டும் இல்லைங்க, இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூலையும் படித்து முடிக்காமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பது என் அனுபவம். (மன்னிக்கவும்...இயற்கை உபாதைகளைத் தவிர்க்க முடியாது). 
 
                வாதம் முதல் வலிப்பு வரை தூக்கம் முதல் துக்கம் வரை பல உடல் மன நோய்களை அலசுகிறது இப்புத்தகம். இது ஒரு நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். படிப்பீர்.  மருத்துவப் புரட்சிகளை அறிவீர். பயன் பெறுவீர்....

10 கருத்துகள்:

 1. இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூலையும் படித்து முடிக்காமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பது என் அனுபவம். (மன்னிக்கவும்...இயற்கை உபாதைகளைத் தவிர்க்க முடியாது).

  விமர்சனத்தையும் நகைச்சுவையாய் சொல்லிய விதம் அழகு.

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய வார்த்தகளா அல்லது அந்த மருத்துவருடையதா என்று தெரியவில்லை... நல்ல நகைச்சுவையாக இருந்தது. நல்ல அறிமுகம். :-)

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள ரிஷபன்,
  நகைச்சுவை புத்தகம். விமர்சனத்தை வேறுமாதிரி சொன்னால் பாவம் வந்து ஒட்டிக்கும் அல்லவா. அய்யோ பாவம் ஆதிரா!

  இன்னும் பெரிதாக எழுத எண்ணினேன். ஒரு பக்கமே வர வேண்டும் என்பது குமுதம் ஹெல்த் இதழில் அதற்கு ஒதுக்கப்பட்ட இடம்.
  ஆனால் சுவையான நூல்.
  படித்துக் கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ஆர்.வி.எஸ்.
  அவருடைய வார்த்தைகளை அவருடையவையாகத் தந்திருக்கிறேன். என்னுடைய வார்த்தைகளை என்னுடையதாகத் தந்திருக்கிறேன்.

  மருத்துவர் என்னுடைய நண்பர். அவர் பேசும்போதும் இப்படித்தான் நகைச்சுவையாகப் பேசுவார். ஒரு வேளை அவர் நடை என்னிடம் ஒட்டிக்கொண்டதோ. எது எப்படியோ நான் ரசித்துப் படித்தப் புத்தகம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 5. G.M Balasubramaniam சொன்னது…

  அது என்ன ஜிக் ஜிக் வேலைகள் ?’’
  அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் நானும் இந்தக் கேள்வியைத்தான் மருத்துவரைக் கேட்டேன் ஐயா.

  அதைப் படிங்க புரியும் என்று கூறிவிட்டார். இப்போது எனக்குப் புரிந்து விட்டது!!!!

  வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. உடனே படிக்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகவுரை ...

  ’’வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் ‘’ என்பதை உணர்ந்து மருத்துவர் இந்நூலை எழுதியிருப்பார் போலிருக்கிறது....

  வாழ்க வளர்க...

  பதிலளிநீக்கு
 7. வருக பத்மநாபன்,
  ஆம் பத்மநாபன். அவர் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார்.எழுதுவார்.
  படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி பத்மநாபன்.

  பதிலளிநீக்கு
 8. கட்டுரைத் தலைப்புகளே சிரிக்க வைக்கின்றன. வித்தியாசமான முயற்சியாக இருக்கும் போலத் தெரிகிறது. அறிமுகத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு