“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 15 பிப்ரவரி, 2014

அந்தக் கேமராவின் கண்கள் மூடின...



          பாலு என்ற பெயரில் திரைப்படத் துறையில் பளிச்சென ஒளிவீசியவர்கள் பலர். அவர்களுள் ஒளிகளாலேயே ஒளியூட்டப் பட்ட பெளர்ணமி நிலவு பாலு மகேந்திரா என்னும் உண்ணத ஒளிப்பதிவுப் படக் கலைஞர். கோகிலா, மூன்றாம்பிறை, நெல்லு, பிரயாணம், மணவூரிபாண்டவலு, நீர்க்காசனா முதலிய திரைப்படங்களைத் தம் கேமராவால் வெற்றி பெறச் செய்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றவர் பாலு மகேந்திரா.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்தவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர், இலக்கியவாதி, இப்போது நடிகருமான பாலு மகேந்திரா என்று எல்லோராலும் அழைக்கப் பெறும்  பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா. ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும், உயர்கல்வியை இலண்டனிலும் பயின்றார். புனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலையைப் பயின்றார். தங்கப் பதக்கம் பெற்ற ஒளிப்பதிவுக் கலைஞராக திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளிவந்தார். ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை, கவிதை ,குறும்படம், நடிப்பு திரைப்படம், புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை இளம்பருவத்திலேயே பதித்துக்கொண்டவர்.
இலக்கியவாதியும் எழுத்தாளருமான பாலு மகேந்திரா இலங்கையிலிருந்த காலத்தில் தேனருவி என்னும் நூலின் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். பிற்காலத்தில் கதை நேரம் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி நாடங்களில் நடித்துள்ளார்.
விளக்குகளைப் பயன்படுத்தாமல் இயற்கை ஒளியில் காட்சிகளை ஒளிப்பதிவாக்கிய பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு காலம் திரையுலக வரலாற்றில் பளிச்சிடும் வண்ண எழுத்துகளால் பொறிக்கப் பட்ட காலம். ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்தார். மலையாளப் படமான ‘நெல்லு’ அவரது ஒளிப்பதிவுக்குத் தேசிய விருது, கேரள அரசின் விருது இரண்டையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சேதுமாதவன், மகேந்திரன், மணிரத்தினம் போன்ற பலரிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திரா கன்னடப் படமான ‘கோகிலா’ வை முதன் முதலில் இயக்கினார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்று தென்னிந்தய மொழிகளில் பல படங்களை இயக்கினார்.
மொழி கடந்த ஒரு கலைஞனாக வாழ்ந்த பாலு மகேந்திரா ‘அழியாத கோலங்கள்’ படத்தில் தொடங்கி 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி  கணபதி', 'அது ஒரு கனா காலம்' 'தலைமுறைகள்' முதலிய 26 திரைப்படங்களை இயக்கினார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர், நடிகர், எடிட்டர் என்று பல வண்ண மயமான கோலங்களைத் தம் முத்திரையோடு அழியாத கோலங்களாகப் போட்டுச் சென்றுள்ளார்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம், கோகிலா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், பிரயாணம், மூடுபனி, நீங்கள்கேட்டவை, மறுபடியும், சத்மா  போன்ற பல படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
ஷோபா, அர்ச்சனா, மெளனிகா, வினோதினி, பானுசந்தர் என்று நடிகர், நடிகையர் பலரை உருவாக்கிய பாலுமகேந்திராவின் சீடர்கள் வெற்றிப் பட இயக்குநர்களான பாலா, வெற்றி மாறன், சீமான், ராம், சுகா முதலியோர்..
5 தேசிய விருதுகள், 2 கேரள அரசின் விருதுகள், 1 கர்நாடக அரசின் விருது, 3 பிலிம்ஃபேர் விருதுகள் 2 நந்தி விருதுகளைக் குவித்த இவர் தம் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தார். இத்தகு மாக்கலைஞர் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.
எப்போதும் பொய் முகம் காட்டி நடிக்கும் ஏமாற்று நிறைந்த திரைப்படத் துறையில் ஒளிவு மறைவில்லாமல் தம் மேல் எழும் விமர்சனங்கள் விவாதங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையைப் பேசித் தம் நிஜ முகத்தைக் காட்டியவர் பாலுமகேந்திரா. திருமதி அகிலா அவரது முதல் மனைவி. தம் திரைப்படங்களில் நடித்த நடிகை ஷோபாவை இரண்டாவதாகவும் மெளனிகாவை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார்.
“தமிழை மறந்துடாதீங்கப்பா.. இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...” இது அவர் நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்தில் பேசிய இறுதி வசனம். முதல் படம் மட்டுமல்ல இறுதிப் படமும் அவர் நடித்த ஒரே படமுமான ‘தலைமுறைகள்’ திரைப்படத்தில் பாலுமகேந்திரா பேசிய இறுதி வசனம் இது.
இதுவே தமிழ் ரசிகர்களிடம் அவர் வைத்த இறுதி கோரிக்கை. அந்தக் கோரிக்கைத் திரைப்படங்கள் வாழும் வரை, ஒளிப்படக் கருவிகள் வாழும் வரை தமிழ் ரசிகர்கள் மனத்தில் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

கேமராவின் ஒளிக்கற்றைகளாகி திரைப்பட வரலாற்றில் தலைமுறைகள் தோறும் மெளனமாக இசைத்துக் கொண்டே இருக்கும் பாலு மகேந்திரா என்ற அந்த சந்த்யா ராகம்! 


2 கருத்துகள்:

  1. இயக்கியது குறைவான படங்கள் என்றாலும், ஒவ்வொன்றும் மறக்க முடியுமா...? என்றும் பலரின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்...!

    பதிலளிநீக்கு
  2. ஆத்மா சாந்தி“யடையட்டும்தமிழை மறந்துடாதீங்கப்பா.. இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா..

    பதிலளிநீக்கு