“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 30 ஜூன், 2012

பேசும் புத்தகம்.... காட்டும் வித்தகம்




திரும்பிய இடமெல்லாம் விரும்பிய நேரமெல்லாம் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் என்று எதிரொலி கேட்டுக்க்கொண்டே  இருப்பதை எல்லோரும் அவதானித்து இருப்பார்கள். இப்போதெல்லாம் இளசுகள் பேசும் ஒரே பேச்சு ஃபேஸ் புக்..  ஃபேஸ் புக். இளைஞர்கள் முக்கியமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்தப் புத்தகத்தைப் படிக்கிறார்களோ இல்லையோ எப்போதும் ஃபேஸ் புக் எனப்படும் முகப்புத்தகத்தைப் படிக்கத் தவறுவதே இல்லை. முப்பொழுதும் உன் சன்னதியில் என்று முகப் புத்தகத்திலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். அப்படி என்னதான் இந்தப் ஃபேஸ்புக்கில் இருக்கிறது என்று தெரிவதில்லை. இதுவும் ஒரு போதை போலவே மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. மாணவர்கள் மாலை பள்ளியை விட்டுக் கலையும் நேரம் சொல்லிச் செல்லும் ஒரு வார்த்தை ஏய் வரேண்டா என்பதில்லை.  “ஃபேஸ் புக்குக்கு வாடா மச்சி”  என்பதே. அதுவும் முகத்தைக் காட்டி ஜாடை சொல்லும் நிலைமைக்குப் போய்விட்டது. இதைவிட சிறப்பு என்ன என்றால் சிறுசுகளுக்கு இணையாகப் பெரிசுகளும் ஃபேஸ்புக்கே கதியென்று மோட்சத்திற்கு வழி தேடுகின்றனர்.

இன்று ஃபேஸ் புக் மூலம் எண்ணிலா காதல் மொட்டுகள் விட்டுள்ளன. அவை மலர்ந்துள்ளன. பல திருமணங்களாகக் கனிந்துள்ளன. அவற்றுள் சில வெம்பி வெடித்து விவாகரத்தாக உதிர்ந்தும் உள்ளன. என்றோ பிரிந்த உறவுகள் சேர்ந்துள்ளன. பிரிந்த நட்புகள் இணைந்துள்ளன. பல உண்ணதமான உலகலாவிய நட்புகள் இனிமையைத் தருகின்றன.

ஃபேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தனி நபரின் விவரங்களில் இருந்து பல வணிக நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றன. இது ஏதோ கேள்விப்பட்ட விபரம் அல்ல. அமெரிக்காவின் மேரிலெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை. அதுமட்டுமல்ல, விளம்பரங்கள் மூலம் பல வணிக நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டக் காரணமாக இந்தப் ஃபேஸ்புக் இருந்திருக்கின்றது என்பது கண்கூடு.

இப்படி ஃபேஸ்புக் எனப்படும் இந்த சமூகவலைத்தளம் மூலம் எண்ணற்ற புரட்சிகள் நடந்து கொண்டு வருவதை ஒருவராலும் மறுக்கவும் இயலாது. இனிவரும் காலத்தில் ஃபேஸ்புக்கை கனநேரம் கூட ஒருவராலும் மறக்கவும் இயலாது. அதே சமயம் ஏதோ ஒரு சில நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் எதிர் விளைவையே ஏற்படுத்துகின்றது என்கின்ற சமூகவியல் ஆர்வலர்களின் எச்சரிக்கைக் குரல்கள் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.. எதில்தான் குறை இல்லை. குறைகளைக் களைந்து நிறைகளைக் கையிலெடுத்தால் இந்த உலகை நம் கையில் கொள்ளலாம்.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்பது வள்ளுவம் கூறும் அறமல்லவா?

ஃபேஸ்புக்கில் எது மிகை என்று காண்பதற்கு முன்பு ஃபேஸ்புக் பற்றி துளியளவும் அறியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக இந்த சமூக வலைத்தளத்தின் சேவைகள் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளம் அமெரிக்காவின் மார்க் சுர்க்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவரால் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது முதன்முதலில் ஹார்வார்டு மாணவர்களுக்காகத் துவங்கப்பெற்றது. இந்தத் தங்கத்தட்டு இப்போது பதிமூன்று வயது நிரம்பியும் ஒரு மின்னஞ்சல் முகவரியும் இருக்கும் எவரும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம் என்ற அளவில் விரிந்திருக்கிறது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


கனடா, அமெரிக்கா, ஐக்கிய குடியரசுகள் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய குடியரசுகள், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றுள்ளது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது.. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன்களை அனுப்புவதற்குரிய சிறந்த வழியாக ஃபேஸ்புக்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற இணைய தளங்களைவிட ஃபேஸ்புக்கில் விளம்பரக் கட்டணம் குறைவு. ஏனெனில் இளைஞர்கள் விளம்பரங்களைப் பார்க்கும் ஆர்வமற்றவர்களாக உள்ளனர். நண்பர்களுடன் அளாவளாவுவதை மட்டும் இளைஞர்கள் விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது.

பிரச்சனை இல்லாதவாறு ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி சற்று பார்ப்போம். பொதுவாகச் சேமித்து வைக்கவேண்டும் என்று எண்ணும் சுய விவரங்கள், செய்திகள், புகைப்படங்கள் போன்றவற்றைச் சேமிக்க உதவும் ஒரே இடம் ஃபேஸ்புக். ஊர்விட்டு, நாடுவிட்டு, கண்டம் விட்டு நண்பர்களுடன் பேசிப் பழக வாய்ப்புள்ள இடம் ஃபேஸ்புக். அரட்டைகள், விளையாட்டுகள், பிறந்த நாள் அட்டவணைகள் என்று நட்புக்கு பலவகையில் பாலம் அமைக்கிறது இது. ஃபேஸ்புக் மூலமாக கூட்டு அமைப்பாக இணையதளம் போல அவரவர் நண்பர்கள் அவரவர்களுக்கென அமைப்பை உருவாக்கி எழுதலாம். அரட்டையும் அடிக்கலாம். கிரிக்கெட், பார்ம்வில்லா, சிட்டிவில்லா, அட்வெஞ்சர் வேர்ல்டு, எம்பையரும் அலியான்சும், அனிமல் கிங்டம், ஹார்ஸ் ஹெவன், முதலிய விளையாட்டுகள் அறிவை வளர்க்கும் வண்ணமும் விறுவிறுப்பாகவும் ஃபேஸ்புக் பயனாளர்களை ஈர்க்கின்றன. குறிப்பாக் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவர்களுக்கு இவ்விளையாட்டுகள் பயனளிக்கின்றன. இப்படி எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் ஃபேஸ்புக் இப்போது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் செய்து தந்துள்ளது.

இத்தனை வசதிகள் நிறைந்துள்ள ஃபேஸ்புக்கை நம் இளைஞர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி வருகின்றனர்? அரசியல் பேச, அன்றாடச் செய்திகளை அலசி ஆராய, வெளியாகும் புத்தம் புதுத் திரைப்படங்களை விமர்சிக்க, தங்களுக்குப் பிடித்த படப்பாடல்களைக் காணொளியாகப் பதிவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, கவிதை எழுத, கட்டுரை எழுத, நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள என்று பலவகையில் பயன்படுத்துகின்றனர்.

சமூக அக்கரையுடன் ஃபேஸ்புக் வழியாக எழுத்துப் போராட்டங்களை இளைஞர்கள் நடத்துவது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்று லைக் (கையெழுத்து) போட வைத்து அவர்கள் செய்த போராட்டம், சிறுவணிகத்தை அந்நியருக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்று செய்த போராட்டம் ஆகியவை பெரிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சமூகப் புரட்சியை உண்டாக்கும் நபர்களை இந்திய/ தமிழக அரசுகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதே இதற்கு சான்று. 

அதே வேளையில் காலைவணக்கம், மாலை வணக்கம் என்று வேளைக்கொரு வணக்கம் சொல்வதும் அதை ஒருநூறுபேர் வழிமொழிவதும் நட்பை வளர்க்கும் என்றாலும் இது வேலையற்றவர்களின் வேலை. தனியாகவும் குழுவாகவும் ரகசியமாகவும் அரட்டை அடிப்பதை என்ன என்று சொல்வது? 2008 ல் ஆரம்பித்த இந்த அரட்டைப் பிரிவு 2011 முதல் வீடியோ அரட்டைக்கும் வழி வகுத்து தந்துள்ளது.


ஃபேஸ்புக் மூலமாகப் பெரும்பான்மையான பாலியல் தவறுகள் நடக்க இந்த வீடியோ வசதியே ஏதுவாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஃபேஸ்புக்கில் பதிவிடும் தனிநபரின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு விடுகிறது என்கின்றனர்.

இதில் நடைபெற்றுள்ள சில கொடுமைகளை எண்ணும்போது எத்தனை குடும்பங்கள் ஃபேஸ்புக்கில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறதோ என்று அவர்கள் அச்சப்படுவதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஆணென நினைத்து பெண்ணே பெண்ணை காதலித்த கதை, ஆணே ஆணைக் காதலித்த கதை, கணவனிடமே வேறு ஒருவரிடம் பேசுவதாக எண்ணிக்கொண்டு காது கூசக் காதல் வசனங்களைப் பேசிய மனைவி, தன் மாணவியிடமே நட்பு கொண்டு கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியர் என்று எண்ணற்ற கதைகள் ஃபேஸ்புக்கின் பக்கங்களில் இடம்பிடித்துள்ளன. எதிரில் இருந்து பேசுபவர் யாரெனத் தெரியாது விட்ட ஜொல்லில் மாட்டிக்கொண்டு ஞேஏஏ என்று விழித்த அண்ணன் தங்கைளும் அகப்பட்டுள்ளனர். நல்ல நட்பென்று நம்பி பல மோசமான விளைவுகளைச் சந்தித்த வஞ்சகக் கதைகளும் இதில் ஏராளம்.

 ஃபேஸ்புக்கின் சிறந்த சேவையே நட்புதான். ஆனால் இதுபோன்ற விளைவுகளிருந்து தப்பித்துக்கொள்ள முதலில் நட்பு விண்ணப்பம் அனுப்பும்போதும் பிறரது நட்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நட்பு கோரிக்கை வைப்பவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து நம்பிக்கை வந்தபின்பு நட்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ப்ரொஃபைல் எனப்படும் சுயவிவரப் பக்கத்தில் அனைத்து சுய விவரங்களையும் பதிவிட்டே ஆகவேண்டும் என்னும் அவசியமில்லை. பொதுவானவற்றை மட்டும் பதிவிட்டு தேவையற்றவற்றை பதிவு செய்யாமல் இருப்பது நலம் தரும். ஆர்வ மிகுதியில் பதிவு செய்தாலும் அவற்றை நண்பர்கள் மட்டும் (only friends) என்னும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது. முக்கியமாக தொலைபேசி எண், தொடர்பு முகவரி, புகைப்படங்கள் ஆகியவற்றைப் பொதுப்பார்வைக்கு வைக்காமல் கட்டுப்பாட்டில் வைப்பது பாதுகாப்பானது.

அதே போல நாம் பதிவிடும் செய்திகளிலும் எவை பொதுவாக எல்லோரும் பாக்கும்படி பதிவிடலாம், எவை நண்பர்கள் மட்டும் பார்க்கலாம் என்பதை முடிவு செய்து நண்பர்கள் மட்டும் பார்க்கலாம் எனபதை ஒன்லி ஃப்ரண்ட்ஸ் என்பதில் சொடுக்கி அவர்கள் மட்டும் பார்க்கவும் நண்பர்களின் நண்பர்களும் பொதுமக்களும் பார்க்காமல் இருக்குமாறும் கட்டுப்பாடு செய்து கொள்வது நல்லது. முக்கியமாகப் புகைப்படங்களைப் பதிவிடும்போது Custom என்னும் பகுதியில் சொடுக்கியபின் பதிவிடுவது நீங்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ளும் வழி. தவறான ஒருவர் நண்பராகச் சேர்ந்து இருக்கிறார் என்பதாக ஐயம் ஏற்பட்டால் உடனடியாக அவரை Manage Blocking என்னும் பகுதியில் சென்று தடை (Block) செய்து விட்டால் குள்ளநரியை விறட்டியடித்த வெள்ளைப் புறாவாக நீங்கள் ஃபேஸ்புக் தென்றலில் உலாவரலாம்.

ஒருவரது ஃபேஸ்புக் கணக்கை அவர் அறியாது மற்றவர் கையாளவும் வழி இருக்கிறது முக்கியமாகப் பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்ளாமல் எட்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் கொண்ட சொற்கள், அவற்றின் நடுநடுவே எண்கள் அல்லது குறியீடுகளைச் சேர்த்து வைத்துக்கொள்வது நல்லது.

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி முடிக்கும் போது மறக்காமல் லாக் அவுட் செய்துவிட வேண்டும். முக்கியமாக வெளியிடங்களில் சென்று (பிரவுசிங் செண்டரில்) ஃபேஸ்புக் பார்க்கும்போது கவனமாகச் செய்ய வேண்டுவது இது.

       எல்லாவற்றையும் விட முக்கியமாக ஃபேஸ்புக்கை, குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர் கண்காணிப்பது அவசியம். சரி பெற்றோர்கள் உபயோகப் படுத்தும்போது யார் கண்காணிப்பார்கள். மனம்தான்ங்க... கண்டதையெல்லாம் பேசாது பயனுள்ளதை மட்டும் பேசுன்னு மனசுக்கும் ஒரு கட்டுப்பாடு கொடுத்துட்டு ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தனும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கத்தியால் காய்கறியும் வெட்டலாம். கழுத்தையும் அறுக்கலாம். எல்லாம் ஜாக்கிரதையாகக் கையாளும் நம் கையில்தான் உள்ளது.

ஃபேஸ்புக் புராணத்தை முடிக்கும் முன்பு சுவையான இரு தகவல்கள். ஃபேஸ்புக்கைப் பற்றியும் அதன் நிறுவனர்களைப் பற்றியும் தி சோஷியல் நெட்வொர்க் (The social net work) என்னும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று வந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.
ஃபேஸ்புக் மேல் உள்ள மோகத்தால் ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு ஃபேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர். முகப்புத்தகமாக நினைத்து அந்தக் குழந்தைப் புத்தகத்தில் ரெக்வெஸ்ட்  வைத்தும் லைக் போட்டும் எவரும் கிழிக்காமல் இருந்தால் சரி.




(சோழ நாடு ஜீன் மாத இதழில் வெளியான கட்டுரை)


நன்றி சோழ நாடு.

2 கருத்துகள்: