“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 12 ஜூலை, 2010

நாடி... துடிக்குது.. நலம் நாடி....

http://www.rush.edu/rumc/images/ei_0364.gif
நாடித் துடிக்குது துடிக்குது...உன்னை நாடித் துடிக்குது துடிக்குது...என்று பாடல் கேட்டிருப்போம். இப்பாடலைக் கேட்கும் போது நாடி, எதை நாடித் துடிக்கிறது? எப்படி துடிக்கிறது? ஏன் துடிக்கிறது? அது துடிக்காவிட்டால் என்ன நடக்கும்? அதன் துடிப்பைக் கண்டறிவது எப்படி? இது போன்ற ஆயிரம் கேள்விகள். இறைவனின் படைப்பில் மனித உடலில் உள்ள உறுப்புகளில் மனிதனின் நல வாழ்வைக் கருதி துடித்துக்கொண்டு இருக்கின்ற நாடிகளை நோயறியும் கருவிகள் எனலாம்.  ஆங்கில மருத்துவர்கள் நோய்களைக் கண்டறிய பயன் படுத்தும் ஸ்டெத்தாஸ்கோப், தர்மாமீட்டர் போன்று நம் உடல் பொருத்திக் கொண்டுள்ள  நரம்பால் ஆன நோயறி கருவியே நாடிகள். நம் . முன்னோர்களாகிய ஆதிமருத்துவ மேதைகள் கண்டறிந்த, கண்கண்ட நோயறி கருவி இவை என்று கூறுவதில் சிறிதளவும் தடையிருக்காது ஒருவருக்கும்.
    
மருத்துவத்திற்கு நான்கு முக்கிய படிநிலைகள் உள்ளன. மருத்துவம் தொடங்குமுன் 1. மருத்துவர் நோய் இன்னது என்று நன்கு ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2. அதன் பின் நோய் வந்த காரணம் என்ன என்று ஆயாய வேண்டும். 3. பிறகு நோயைத் தணிக்கும் (குறைக்கும்) மார்க்கம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும். 4. அதன் பின்னே தேவையான மருத்துவத்தைச் செய்யத்தொடங்க வேண்டும்.  .
. அவற்றுள்  நோய் இன்னது என்று கண்டறிவதுவே முதல் படிநிலை என்பர்.  உடல் நோய்க்கும், உள்ள நோய்க்கும் ஈரடியில்  மருந்து சொன்ன தமிழ்ப்பேராசான் திருவள்ளுவரும்,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” 
என்று கூறி நோய் அறிவதையே முன் வைத்தார். தமிழ் மருத்துவத்தில் நோய் தேர்வு, அதாவது நோய் என்ன என்று கண்டறிவது எட்டு முறைகளில் காணப்படும்.. நாடி, தொடுதல், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர் ஆகிய எட்டும் நோய் தேர்வுக்குப் பயன் படுத்தும் முறைகளாக இருந்து வந்துள்ளன.இன்னும் இருக்கின்றன. ஆயினும் நாடித் துடிப்பின் வழி நோயை அறிவதே முதன்மையாக இருந்து வந்துள்ளது.. இதன் காரணத்தாலே வள்ளுவரும் நோய் அறிதலை முன்வைத்ததுடன் நாடி என்ற சொல்லை எடுத்தாண்டார்.. உயிர்களின் நலம் நாடுவது மட்டுமின்றி, நோய் இன்னது என்று நாடிக் கூறுவதும் இதன் தலையாய பணி என்பதால் நாடி ஆயிற்று எனலாம். இன்றும் பல மருத்துவ முறைகளிலும் தொட்டுப் பார்ப்பது, நாக்கை .நீட்டச்சொல்லிப் பார்ப்பது, விழியைத் திறக்கச்சொல்லிப் பார்ப்பதும், மலம், சிறுநீர் ஆகியவற்றை சோதித்துப்பார்ப்பதும் வழக்கில் உள்ளன. என்றாலும் நாடிச்சோதனை  எல்லா மருத்துவத்திலும் முதன்மையாகக் கருதபடுவதே உண்மை.. இதனையே ஆங்கிலத்தில் Pulls என்ற சொல்லால் கூறுகின்றனர். இந்த நாடிகளின் எண்ணிக்கையை 72,000 எனச்சுட்டும் சித்த மருத்துவம்..
இருப்பன நாடி எழுபத்தோடீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்
என்ற பாடல் வழி உணரலாம். அவற்றுள்ளும் கரு உருவாகும் போதே தோன்றும் நாடிகள் பத்து.  அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், ச்ங்குனி, குரு என்பன. இவற்றுள்ளும் முதன்மையானவையும், முக்கியமானவையும் மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை. இவையே. வாதம், பித்தம், கபம் என்ற பெயர்ப்படும் நாடிகள். இதனை விளக்கும் கண்ணுசாமியம்பாடல் பின்வருவது.
 “வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணனைச் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு
200532519-001, Rayman /Digital Vision
நாடியைச் சிறை என்று சுட்டும் சீவக சிந்தாமணி. சிறையைந்தும் விடுதும் என்பர் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர்என்று கூறும் சீவகசிந்தாமணி நாடிகள் ஐந்து என்று எடுத்துரைக்கும். இவை கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று ஆகிய ஐந்து இடங்களில் இருப்பவை. என்றுரைக்கும்.

http://meded.ucsd.edu/clinicalmed/extremities_normal_dp2.jpg
இலக்கியங்கள் பலபடச் சுட்டினும் நாடி என்று அழைக்கப் படும் அதி முக்க்யமான தாதுக்கள்  மூன்றே என்று உரைக்கும் தமிழ் மருத்துவம்.
http://www.istockphoto.com/file_thumbview_approve/2980706/2/istockphoto_2980706-checking-her-pulse.jpg
சரி, நாடியைச் சோதிக்கும் முறையை அறிய வேண்டாமா? பெருவிரல் பக்கமாக மணிக் கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி தெரியும் இரத்தக் குழாயையே நாடி நரம்பு என்பர். இதன் மேல் ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களையும் வைத்துப் பார்க்கும் போது, ஆள்காட்டி விரல் உணர்வது வாத நாடி. நடுவிரல் உணர்வது பித்தநாடி, மோதிர விரல் உணர்வது கப நாடி. இதனை,
கரிமுகனடியை வாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிர லங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்
ஒரு விரலோடில் வாதம்,
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலோத்தும நாடிதானே
என்று அகத்தியர் நாடி உரைக்கும், அவர் வழி வந்த திருமூலரும்,
“குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் ந்டுவிரலமர்ந்தது பித்தமே
என்று உரைப்பார். இந்த நாடிகள் முறையே 1, 1/2 , 1/4 என்ற மாத்திரையளவில் துடிக்குமாயின் நல்ல ஆரோக்கியமான் உடல்நிலை உள்ளவர்கள் என்று சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். அந்த நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் போது அவற்றின் துடிப்புகளின் (அதிர்வுகளின்) வேறுபாட்டைக் உணரக்கூடியதாக இருக்கும். அதாவது ஆள்காட்டி விரலுக்கு நேராக உள்ள நாடி 1/4 ஆகவும் நடு விரல் உணரக்கூடிய நாடி 1/2  ஆகவும் மோதிர விரல் உணரும் நாடி 1 ஆகவும் அதிர்வுகள் இருக்க வேண்டும். இந்தெ அதிர்வு எண்ணிக்கை வீதம் மாறி வருமாயின் குறைபாடு இருக்கும் மனிதன் என்று உணரலாம். அல்லது குறைபாடு வரும் அறிகுறி என்றும் உணரலாம்.
     அலோபதி முறையிலும் நாடி பார்க்கும் முறை உள்ளது என்பது நாம் அறிந்ததே..ஒரு வேறுபாடு என்னவென்றால் அம்முறையில் ஒரே எண்ணிக்கை, ஒரே நாடி. ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வு ஏற்படுகின்றன என்று கணக்கிட்டு சராசரியாக 75 முதல் 80 அதிர்வுகள் என்றால் அம்மனிதன் சாதாரணமாக உள்ளார் எனக் கொள்ளலாம் என்பர்.
இந்த நாடித்துடிப்புகள் சற்று கூடினாலும் குறைந்தாலும் நோய் என்பதை நாம் அறிய வேண்டும். இதனையே திருக்குறள் தந்த தெய்வ மருத்துவனும் முக்கியமாக வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் என்பதை பின்வரும்  குறட்பாவால் விளக்குவார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
இந்த மூன்று நாடிகளைத் தவிர `பூத நாடி என்று ஒன்று உண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல என்பர். இதில் என்ன ஒரு குறை என்றால் நாடி நூலகள் பலவும் இந்த நாடியைக் குறிப்பிடவே இல்லை என்பதே. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறியுள்ளன. இது வாத, பித்த, கப நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக இருக்கும் என்பர். அதாவது ஐந்து விரல்களாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலும் சிறுவிரலும் உணரும் நாடியே பூத நாடியாம். இந்த நாடியின் சிறப்பு, இந்த நாடி சரியானபடி துடிக்குமானால் சாமாதி நிலை என்று கூறப்படும் பேருறக்க நிலையை எளிதாக அடையலாமாம்.  சரி அது இருக்கட்டும்... இந்த நாடிகள் நடக்கும் முறையை அல்லது அதிரும் முறையை நம் முன்னோர்கள் எவ்வெவற்றோடு ஒப்பிட்டுள்ளனர் என்று அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதனை அடுத்த பதிவில் பார்ப்போமா....உங்களுக்காக இந்த நாடி அடுத்த இதழிலும் துடிக்கும்...

3 கருத்துகள்:

  1. நீங்கள் அதிராவா? அவ்வையாரா? அவ்வையார் சித்த மருத்துவம் படித்து விட்டு சுஜாதா பாணியில் எழுத முயன்றது போல வித்தியாசமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நூருல் அமீன்,
    முதலில் தங்கள் கேள்விக்குப் பதில் கூறுகிறேன்.. நான் ஒளவையார் என்று அழைக்கப்பட்ட ஆதிரா.
    முதலிலேயே எனக்கு ஒளவையார் என்று பெயர் சூட்டி விட்டனர் என் அன்பு உலக உறவுகள் சிலர்.

    இன்று புதிமையாக சுஜாதா பாணி என்பது தங்ங்களின் புதுமொழி. சுஜாதாவின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. படிக்கும் ஆர்வம் தங்களால் ஏற்பட்டுள்ளது. ஆர்வமூட்டியமைக்கு மிக்க நன்றி.

    முதன் முதலில் பாதம் பதித்தமைக்கும், அழகாகக் கருத்துப் பகர்ந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி நூருல் அமீன். தொடர்ந்து உங்கள் வருகையை எதிபார்த்து...அன்புடன்...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ளக் கட்டுரை. நன்றி.

    சத்யா

    பதிலளிநீக்கு