“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 13 ஜூன், 2012

கண்ணுக்குள்ள கெழுத்தி


காண்டக்ட் லென்ஸ் ஜாக்கிரதை…….
(கண்ணுக்குள்ளே கண் ஆடி}
கண்ணுக்குள்ள கெழுத்தி வெச்சிருக்கா ஒருத்தி என்னும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்களுக்குள் ஆடியைப் (லென்ஸை} பொருத்திக் கொண்டிருப்பவர்கள் நினைவுதான் வரும். இரண்டு வயது ஆனவுடனே கண்ணாடி போடும் பாரம்பரியமாக இந்திய பாரம்பரியம் போனது என்பது இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோதனை என்றே கூற வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிடாததால் பார்வை குறைபாடு நிறைய பேருக்கு இருக்கிறது என்கின்றனர். ஆனால் தொலைக்காட்சி, கணினி பயன்பாடு ஆகியவையும் இதற்குக் காரணம் என்றால் அது மிகையல்ல. வேறு வழியின்றி இளம் வயதிலேயே கண்ணாடி போட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த கண்ணாடி போடும் முறையும் பதினைந்து வயது வரைதான் என்ற நிலையில் நம் நாகரிக உலகம் சென்று விட்டது. அதற்கு மேல் காண்டக்ட் லென்ஸ் கட்டாயம் என்ற அளவில் சென்று விட்டோம். ஏனெனில் கண்ணாடி முக அழகைக் குறைக்கிறது என்பதால்.
சரி காண்டக் லென்ஸ் போடட்டும். காலத்திற்கு ஏற்ப நாமும் மாறித்தானே ஆகவேண்டும். இல்லாவிட்டால் சோடா புட்டி என்று அழைப்பதைத் தவிர்க்க முடியாது. மேலும் கண்ணாடி போடுவதால் மூக்கில் ஏற்படும் தழும்புக்கும் விடை கொடுக்கலாம்.
அதைப் போடுகிறவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கான்டாக்ட் லென்ஸ் போடுறங்களுக்கு கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல், இதுலாம் எதுக்கு வருது? ஏன்னா அவங்க அதை போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதுனால அவங்க கண் தான் பாதிக்கப்படும். ஏனென்றால் கண் ரொம்ப சென்ஸிடிவ், அதை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். கான்டாக்ட் லென்ஸயும், அதை போடும் போதும் என்னென்ன ஃபாலோ பண்ணணும்-னு பாக்கலாமா!!!
1. கான்டாக்ட் லென்ஸ் எப்படி போட வேண்டும் என்று கொடுத்திருக்கிற அறிவுரைகளை நன்றாகப் படித்து அதனைப் பின்பற்றுவது மிக மிக முக்கியம்
2.. கான்டாக்ட் லென்ஸ் போடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். கழுவியதும் கையை ஒரு சுத்தமான துணியால் துடைத்துப் பிறகு தான் லென்ஸ் போட வேண்டும்.
3. மிகவும் முக்கியமான ஒன்று, லென்ஸ் போடும் முன்னும், போட்டு எடுத்து வைக்கும் முன்னும் அதை கொடுத்திருக்கும் மருந்தால் மறக்காமல் கழுவ வேண்டும். இந்த மருந்து லென்ஸில் பாக்டீரியா இருந்தால் அழித்து விடும். மேலும் கண்களில் எந்த ஒரு நோயும் வராது.
4. லென்ஸை கண்ட இடங்களில் வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் அந்த பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
5. லென்ஸை கழுவும் மருந்தின் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். ஏனென்றால் மருந்தின் தேதி முடிந்தும் உபயோகித்தால் அது கண்களையே பாதிக்கும். ஆகவே அதன் தேதியைக் கவனிப்பது மிகவும் முக்கியம்.
6. கான்டாக்ட் லென்ஸை கழுவுவதற்கான மருந்துகள் பல உள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்வு செய்து வாங்கி பயன் படுத்த வேண்டும். ஏனெனில் நூற்றுக்கு இருபது விழுக்காட்டினர்க்கு சில மருந்துகளால் அலர்ஜி ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.
7. குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும் போதும் கண்டிபாக கான்டாக்ட் லென்ஸைக் கழட்டி வைத்து விட வேண்டும்.
8. முக ஒப்பனை செய்யும் முன் முக்கியமாக கண் மையும் பவுடரும் கான்டாக்ட் லென்ஸை போட்டு தான் போட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் மேக்கப் போட கண் சரியாகத் தெரியும் என்பது ஒருபுறம். மேலும் ஒப்பனை போட்டபின் லென்ஸைப் பொருத்தினால் சில நேரங்களில் கண்ணீர் வரும், கண் கலங்கும். போட்ட முகப்பவுடர் கலைய வாய்ப்பாகி விடும்.
9. ஒப்பனை செய்த பின்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிட்டு, கழுவிய கைகளைச் சுத்தமான துணியால் துடைத்த பின்பே கான்டாக்ட் லென்ஸை தொடவோ கண்களில் பொருத்தவோ செய்ய வேண்டும்.
10. கான்டாக்ட் லென்ஸை போட்டு வெளியில் செல்லும் போகும் போது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர் நேரடியாகக் கண்ணில் படாமல் பாது காக்க வேண்டியதும் மிக முக்கியமானது. கண்ணுக்கு சன்கிளாஸ் அல்லது தொப்பி போட்டு போக வேண்டும்.
11. சில லென்ஸ் ஒவ்வொரு நாளும் மாற்றக்கூடியதாக இருக்கும். சில ஒரு வாரம் பயன் படுத்துவதாக இருக்கும். சில மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை போடும் படியாக இருக்கும். அவற்றின் கால எல்லை அறிந்து அதன் பின் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். RGB லென்ஸ்கள் ஒராண்டு பயன் படுத்தும் வகையில் அமைந்திருப்பன.
12. சற்றேறக்குறைய பனிரெண்டு மணி நேரத்திற்கு மேல் லென்ஸைப் பயன்படுத்துவதைக் குறைப்பது கண்களுக்கு நல்லது.
13. இரவு படுக்கும் முன்பு லென்ஸை கழற்றி வைத்து விட வேண்டும். தொடர்ந்து லென்ஸ் அணிவதால் கண்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் செல்வதற்கு அது தடையாக இருக்கும்.
14. எப்போதாவது லென்ஸை கழற்றுவதிலோ அல்லது பொறுத்துவதிலோ சிரமம் ஏற்பட்டால் உடனடியாக யார் தொடர்ந்து சிகிச்சையும் அறிவுரையும் கொடுக்கிறார்களோ அந்த லென்ஸ் பொருத்துநரை அனுகுதல் நல்லது.
15. சில நேரங்களில் கண் எரிச்சல், கண் சிவத்தல், பார்வையில் பிரச்சனை போன்றவை ஏற்படுவது உண்டு. இவை பெரும்பாலும் கவனமின்மையால் ஏற்படுவது. அதாவது லென்ஸை சரியாக லோஷனில் போட்டு கழுவாமல் விடுவது, சரியாகப் பொருத்தாமல் விடுவது, லென்ஸில் போதிய கவனமின்மை போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த கண் எரிச்சல், சிவத்தல் முதலியவை கண் அல்சர், அலர்ஜி ஆகியவற்றுக்கு ஒரு அடையாளமாகும்.
16. கண் எரிச்சல், கண் சிவத்தல் முதலியவை ஏற்படும் நேரங்களில் கண்டிப்பாக ஆடி பொருத்துநரைப் பார்ப்பதைத் தவிர்த்து சிகிச்சை அளித்த கண் மருத்துவரைப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
அப்பாடா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் போல இருக்கிறதே. அழகுக்கு அழகு குறையாமல் இருக்கப் பொருத்தும் ஆடியில் இருக்கும் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொண்டல் பிரச்சனையே இல்லை. காட்டலாம் சோடா புட்டிக்கு டா டா. கொடுக்கலாம் கண்களை லென்ஸுக்கு…..

நன்றி குமுதம் ஹெல்த்

2 கருத்துகள்:

  1. அழகுக்கு அழகு குறையாமல் இருக்கப் பொருத்தும் ஆடியில் இருக்கும் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொண்டல் பிரச்சனையே இல்லை.

    கண்ணான அறிவுரை தந்த பதிவுக்குப் பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு