“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 8 ஏப்ரல், 2013

பூந்தலைச் சிறு கோல்




“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் புறநானூற்றுப் பாடல். பெற்றோர் இக்கடன்களை நிறைவேற்றுகின்றனரா என்றால், கடனே என்று நிறைவேற்றுகின்றனரோ என்று ஐயமே எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனது செய்முறைத் தேர்வுக்கு முந்தைய தினம் மருத்துவ மனைக்கு வருகிறான். முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிகிறது. என்ன என்று கேட்டால், படி என்று சொன்னவுடன் புத்தகத்தைக் கையில் எடுக்காத குற்றத்திற்குக் கிடைத்த தண்டனை என்கிறான். கொடுத்தவர் அவனது தந்தை.
குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே எழுதிய சட்டமாகிப் போனது. பெற்றோர்களுக்கு??? இப்போது அம்மாணவன் தந்தை என்றாலே வெறுக்கிறான். அவருக்காகவே “நான் நன்றாகத் தேர்வு எழுத மாட்டேன்” என்று வாய் திறந்து கூறுகிறான். அக்குழந்தையின் இந்தப் பிடிவாதக் குணத்திற்கு யார் பொறுப்பு? அன்பும் அரவணைப்பும் இல்லாத தாங்கள்தாம் என்பதைப் பெற்றோர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
இன்று பெருகி வரும் குழந்தைக் குற்றவாளிகளுக்குப்  பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களின் பெற்றோர்களும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சின்னக் குழந்தைகள் வண்ண மலர்கள். ஆம் மலர்களைப் போலவே மென்மையானவர்கள். மலர்களின் பல வண்ணம் போலவே பல எண்ணம் கொண்டவர்கள். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். மலர்களின் மணத்தையோ குணத்தையோ மருந்தை அடிப்பதால் எப்படி மாற்ற முடியாதோ அப்படிதான் குழந்தைகளின் குணத்தை அடிப்பதால் மாற்ற முடியாது. அவர்களை அவர்களின் போக்கில் விடுத்து, அன்பு காட்டி அரவணைப்பதன் மூலம் மாற்ற முடியும்.
சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் விழிப்பில்; எட்டு மணி நேரம் உறக்கத்தில்; எட்டு மணி நேரம் பள்ளியில் என்று குழந்தைகளின் இருபத்து நான்கு மணி நேரம் பகிர்வு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் குழந்தைகளின் இரண்டாம் தாய் என்றும் பெற்றோர் குழந்தைகளின் இரண்டாம் ஆசிரியர் என்றும் பொதுவாகக் கூறுவது வழக்கம். எட்டு மணி நேரம் ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளை அடிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் வீட்டில் அக்குழந்தையை எப்படி வேண்டுமானாலும் அடிக்க பெற்றோருக்கு உரிமை இருக்கிறது.
அதனால்தான், “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று கூறிக் கூறி அடிப்பது, அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது”  என்று அடித்துக் கை கால்களை ஒடிப்பது, “அடியாத மாடு படியாது”  என்று மாட்டை அடிப்பது போல விளாசித் தள்ளுவது “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று அன்பைக் காட்டும் சாக்கில் அடிப்பது “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்று முதுகை வளைத்து அடிப்பது “ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்” என்று கூறிப் பேயாக மாறிக் குழந்தைகளுக்குச் சூடு வைப்பது எல்லாம் ஒரு சாராரின் பழக்கமாகிப் போனது.
இவர்கள் குழந்தைகளை அடிப்பதற்கான காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒன்று மதிப்பெண், மற்றொன்று தன் குழந்தை சச்சினாக, சூப்பர் சிங்கராக, பில்கேட்சாக  ஆகவேண்டும் என்னும் இவர்களின் கனவு. இவை போன்ற பேராசை பெற்றோர் அவர்கள் விரும்பும் வகையில் குழந்தை, திறன் காட்டாது இருந்து விட்டால் பல வகையில் அவர்களுக்குத் துன்பம் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகளின் பண்பில் ஏற்படும் குறைபாடு பற்றி இவர்கள் கவலை கொள்வதே இல்லை.
மேற்கூறிய இவையெல்லாம் பழமொழிகளாக இருந்தாலும் நம் மூத்த தமிழ்க் குடிகள் குழந்தைகளை அடித்ததாகவோ, சிறார் குற்றவாளிகள் இருந்ததாகவோ, சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (சிறார் சிறைச்சாலைகள்) இருந்ததாகவோ பதிவுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளை அடித்ததாகக் கூட பதிவுகள் இல்லை என்றே சொல்லலாம்.  குழந்தைகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அடித்ததாகவோ, சூடு போட்டதாகவோ, வீட்டை விட்டுத் துரத்தியதாகவோ, சாட்சியங்கள் நம் பண்டைய இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம்.
இது எதனைக் காட்டுகிறது? அவர்கள் குழந்தை வளர்ப்பில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆடல், பாடல், கதை என்று அவர்களை மகிழ வைத்து அதனூடாகப் பண்பை ஊட்டி வளர்த்துள்ளனர்.
பால் மணம் மாறாப் பச்சிளம் பருவத்தில் பாலைப் புகட்டியது போலவே நற்பண்பைப் புகட்டுவதற்குத் தாலாட்டுப் பாடினர். தாலாட்டில் வீரத்தையும், உறவு முறைகளையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் பாடல் வாயிலாகப் புகட்டியிருக்கின்றனர்.
அதே போல சற்று வளர்ந்த குழந்தைகளுக்குப் பெரியவர்கள் இரவில் கதைகளைக் கூறி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இன்னும் வளர்ந்து விட்டால் விளையாட்டுகளின் வழியாக நன்னெறியையும் கல்வியையும் கற்றுக்கொடுத்தனர்.
இன்று இது போலச் செய்கின்றார்களா? செய்வதற்கு நேரமிருக்கிறதா? நேரமிருந்தாலும் பெற்றோர்க்குத் தம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல மனம் இருக்கிறதா?  ஒரு வேளை நேரம், மனம் இரண்டும் இருந்தாலும் கதைகளுக்கு அவர்கள் எங்கு போவார்கள்? கதை சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சித் தொடர்களைச் சொல்லும் நிலையில் அல்லவா அவர்கள் இருக்கின்றனர்.
காலையில் எழுந்தவுடன் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்க்கு மாலை நேரம் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளுடன் அமர்ந்து மகிழ்வாகப் பேசி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க முடிகிறதா? பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம். பேராசை மறுபுறம். போதுமென்ற மனமில்லாததால் பொருள் தேடி அல்லறும் நிலையில் பெரும்பாலும் இன்றைய பெற்றோர்கள் இருக்கின்றனர். அந்தப் பொருளாசைக்கும் கல்வி, கலை என்று குழந்தைகளையே காரணமாகக் காட்டுகின்றனர். அவர்களின் பொருள் தேடல், அதன் காரணமான வேலைச்சுமை, நேரமின்மை, அதனால் ஏற்படும் மனச்சோர்வு, கோபம் எல்லாவற்றுக்கும் குழந்தைகள் சுமைதாங்கிகளாகி விடுவது தவிர்க்க இயலாததாகிப் போய்விடுகிறது.
துள்ளித் திரியும் பருவத்தில் பெற்றோரது நேரமின்மையால் சிறைக்கைதிகள் போல தொலைக்காட்சி முன்போ அல்லது ஒரு தனிவகுப்பிலோ (டியூஷன்) அவர்கள் அடைக்கப் படுவதும் தவிர்க்க இயலாததாகிப் போகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் அப்பா அம்மாவைக் கண்டதும் ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு அழுது அடம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு விடுகின்றன. குழந்தைகள் அடம் பிடித்தவுடன் பொறுக்க முடியாத பெற்றோர் அடித்து விடுகின்றனர். நாள் ஆக ஆக அடிப்பார்கள். அடித்து விட்டுப் போகட்டும். அடிதானே, நாம் கேட்டது கிடைத்தால் போதும் என்னும் எண்ணம் குழந்தைகளிடம் வந்துவிடுகின்றது. இப்படி காரணம் அறியாமல் தொடங்கும் அடம் பெரியவர்கள் ஆன போதும் தொடர்கிறது.
சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.
“புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அவள். சொல் பேச்சு கேளாத அவள் திருமணம் ஆகித் தன் கணவனது இல்லத்தில் ஒருவேளை உண்டு ஒரு வேளை பட்டினியாக இருக்க வேண்டிய அளவு வறுமையில் வாழ்கிறாள். இருந்த போதும் வழக்கிட்டு விவாகரத்து கோராமல் இல்லறத்துக்கு இனிமை சேர்க்கிறாள். பெற்றோர் கொடுத்த செல்வத்தைக் கூட வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் என்கிறது இப்பாடல். இந்தப் பண்பு அடித்து வளர்த்தா வந்தது அப்பெண்ணுக்கு? மென்மையான அன்பில் விளைவது நற்பண்பு. அதை மட்டுமே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்ப் பார்க்கின்றனர்.
வாழ்க்கையின் ஒவ்வொரு புரிதலையும்  குழந்தைகள்  பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்தான் இவர்களின் முதல் வழி காட்டியாய் இருக்கின்றனர்..
இது வளமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் குழந்தையை அடிக்காமல் வளர்த்த காட்சி. வறுமையில் வாடும் தாய் மட்டும் என்ன அடித்தா வளர்த்தாள்? பசியால் துடித்து அழுது அடம் பிடிக்கும் குழந்தையை மறப்புலி வரும் என்று சொல்லிப் பார்க்கிறாள். நிலவைக்காட்டுகிறாள்; உன் தந்தை முகம் எப்படி இருக்கும் என்று காட்டு என்கிறாள். மனம் நொந்த அவள் அவ்வருத்தத்தைக் குழந்தையிடம் காட்டாமல் இப்படியெல்லாம் விளையாட்டுக் காட்டுகிறாள்.
அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.
பொதுவாக நன்மை தீமைகளைக் கூறி வளர்ப்பது மிகச் சிறந்த குழந்தை வளர்ப்பு முறை. குழந்தைகளைக் கண்டிப்பது வேறு தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது குழந்தைகள் தவறு செய்யும் முன்பே தவறைச் செய்தவர்களுக்கு இறைவனால் சமுதாயத்தால், சட்டத்தால் கிடைக்கும் தண்டனையைக் கூறி வளர்த்தல் நல்லது.
தவறு செய்யும் குழந்தையைக் கண்டியுங்கள். அது பெற்றோர்களின் கடமை. முதலில் குழந்தை அந்தத் தவறைத் தெரியாமல் செய்கிறதா? தெரிந்து செய்கிறதா? என்பதை அறிதல் மிக மிக அவசியம். அதன் தீய விளைவை எடுத்துக் கூறுதல் நல்லது. அப்போதும் குழந்தையை அச்சுறுத்துதல் நல்லதல்ல. அன்பாகக் கூறுதல் நல்லது. தெரிந்து செய்யும் தவறுக்குக் கண்டிப்பு அவசியம். எப்படி? வன்முறைகளற்ற கண்டிப்பு அவசியம். வன்முறை என்பதும் உடலளவில் மட்டுமல்ல. குழந்தைக்கு மன அளவிலும் வன்முறயற்ற கண்டிப்பு இக்காலத்தில் தேவை என்பதையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கத் தொடங்கும் போது மனச்சிதைவு அடையும் குழந்தை பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான குற்றங்களைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தைக் கைகொள்ள வாய்ப்பாக அமைந்து விடும். எனவே பெற்றோர்களே அன்பும் அரவணைப்பும் உதவுவது போல அடி ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!

இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் இடம்பெற்றது

3 கருத்துகள்:

  1. பெற்றோர்கள் 'உணர' வேண்டிய கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    எனது இன்றைய பதிவும் இதை ஒட்டியே... அன்புடன் வாசிக்க அழைக்கிறேன்... நன்றி...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கனும் தனபாலன் சார். கொஞ்ச நாட்களாக உங்கள் வலைப்பூவுக்கு வர இயாலமல் போய்விட்டது.
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. உங்களின் ஆட்ட்ராமைப் புரிகிறது.அது அந்த காலம் இப்போது பிள்ளைகளுக்குத் தெரிந்தது பெரியவர்களுக்குத் தெரிவதில்லை இது இந்தக் காலம்.அதனால்தான் இப்போதைய பிள்ளைகள் துணிச்சலாய் இருப்பதில்லை

    பதிலளிநீக்கு