“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 19 மே, 2013

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….


           
      

                        கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும்போது தமக்கும் விடுமுறையாக இருப்பதால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையைக் கழிக்க கிளம்பி விடுவார்கள்.

            மற்ற அலுவலர்கள் நிலை பெரிய பிரச்சனைதான். வெளியூர் செல்வது இருக்கட்டும். முக்கியமாகக் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாது. யார் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு அலுவலகம் செல்வது என்று அலையும் அல்லல் சொல்லில் வடிக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தினர்க்குக் கோடைக்கால வெய்யில் மட்டுமல்ல வறுமையும் சேர்ந்து உடலையும் மனத்தையும் எரிக்கவே செய்கிறது.
           முடி உள்ள சீமாட்டி முன்னும் முடிவாள், பின்னும் முடிவாள் என்பது போல வசதி படைத்தவர்களாக இருந்தால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று கிளம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல ஜனவரி பிப்ரவரி மாதங்களில் துண்டுப் பிரசுரங்களில் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கும் கோடை விடுமுறை வகுப்புகள் செல்வக் குழந்தைகளின் விடுமுறையில் பாதி நாட்களை எடுத்துக் கொள்ளும்.. ஆட்டம், பாட்டம், நீச்சல், கையெழுத்து, மொழி, கணிதம் என்று குழந்தைகள் பணத்தையும் காலத்தையும் மகிழ்ச்சியாகச் செலவு செய்வார்கள். வசதி இருப்பவர்களுக்கு எக்காலத்திலும் வாழ்வு சுகமாகிவிடுகிறது.
           வசதி இல்லாதவ்ர்கள் என்ன செய்வார்கள். இரண்டு சினிமாவுடன் குழந்தைகளின் கோடை விடுமுறையை முடித்து விடுகின்றனர். மற்ற நாட்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அலுவலகம் செல்கிறார்கள்.  ஆனால் தொலைக்காட்சியெல்லாம் குழந்தைகளுக்கு அலுத்துப் போய் பல நாட்கள் ஆயிற்று. எப்போது கணினி வந்ததோ அப்போதே குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி புளித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் கணினியில் விளையாடுவது பெருகிவிட்டது.
         
அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், கார் ரேஸ், பைக் ரேஸ் முதலிய கணினி விளையாட்டுகள் குழந்தைகளின் கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பிக்  கொண்டுள்ளன. இவற்றைத் தவிர Stratcgic games என்று அழைக்கப் படும் ஹாரிபார்டர், பிரின்ஸ் ஆஃப் பர்சியா போன்றவை சி.டிக்களில் வலம் வந்து குழந்தைகளைக் கும்மாளமிட வைத்துள்ளன. இது மட்டுமன்று கூகுல், முகப்புத்தகம், டிவிட்டர் முதலிய வலைத்தளங்கள் எண்ணற்ற புத்தம் புதிய விளையாட்டுகளை நாள்தோறும் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பபுல் சாகா, பபுல் எபிக், பபுல் வேல்ட், பபுல் ஸ்நேக் சாகா, பிரமிட் சாகா போன்ற நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளன.

          ஏற்கனவே நுண்ணோக்கி கொண்டு தேடினாலும் கண்ணாடி அணியாத குழந்தையைக் காண்பது அரிதாகிப் போய்விட்டது. இந்த விளையாட்டுகள் எல்லாம் குழந்தைகளின் மூளையைத் தூண்டி சிந்தனையை வளர்க்கின்றன என்பதில் உண்மை இருக்கிறது. மூளையை வளர்த்தால் மகிழ்ச்சி. ஆனால் இவ்விளையாட்டுகள் மூளையை அதிகமாக வளர்த்து சிந்தனைத் திறன் அனைத்தையும் 

விளையாட்டிலேயே முடக்கி விடுகின்றன என்பதே இன்றைய அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. விளையாட்டுகளில் மூளை முடங்கி விடுவது கூட அவ்வளவு அபாயம் இல்லை. இவ்விளையாட்டுகளை விளையாடும் போது மட்டுமல்ல விளையாடி முடித்து உறங்கும் போதும் மூளை விளையாட்டிலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்விளையாட்டுகளிலேயே காலத்தைக் கழி(ளி)க்கும் குழகுழந்தைகளை விசாரித்த போது அவையும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றன. மூளையை ஒட்டுமொத்தமாக இவ்விளையாட்டுகள் ஆக்கரமிப்பு செய்கின்றன என்பதே உண்மை.
          நினைவு, நினைவிலி என்னும் இரு நிலையிலும் மூளை விளையாட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மூளை நரம்பில் இருக்கும் அணுக்கள் ஒரு வினாடிக்கு சுமார் 80 முறை துடிக்கும். இவை முன்னும் பின்னும் துடிப்பதால் எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவை உருவாகின்றன. இம்மூளை நரம்பின் அணுக்கள் சில வேளைகளின் விபரீதமாக வினாடிக்கு 500 வரை துடிக்கும். அணுக்களின் இப்படிப் பட்ட அதிக பட்ச துடிப்பால் மூளை முழுவதும் அல்லது மூளையின் ஒரு பகுதி பாதிக்கப் படுகிறது. உணர்வு ரீதியாக குழந்தை பாதிக்கப் படும்போது இந்நோய் வருகிறது. இந்நோய் வரும்போதும் குழந்தைகள் உணர்வு ரீதியாகப் பாதிக்கப் படுகின்றன. கணினி விளையாட்டு இவ்விரண்டுக்கும் காரணமாகி விடுகிறது.
              ஃபிட்ஸ் எனப்படும் இந்நோய் குழந்தை பிறப்பின்போது ஆயுதம் பயன்படுத்துவதால், மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பதால், குறைந்தும் மிகுந்தும் கேட்கப் படும் ஒலிகளால், குறைந்தும் அதிகரித்தும் பார்க்கப்படும் பளிச்சிடும் ஒளிகளால் அதாவது தொலைக்காட்சியை வெளிச்சமின்றி பார்ப்பதால், அதிகப் படியான மனக்கவலையால், கால வரைமுறை அற்ற உணவுப் பழக்கத்தால், பெண்குழந்தைகளுக்குப் பூப்புக்காலத்தில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளால் என்று பல காரணங்களால் வருகிறது. கணினியும் மெல்ல மெல்ல இந்நோயைக் குழந்தைகளுக்குத் தந்து கொண்டு இருக்கின்றது. குழந்தைகளின் பொழுதைக் குடிக்கும் கணினி மெல்ல மெல்ல அவர்களின் உடல் நலத்தையும் குடிக்கிறது.
“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா”

              என்று அன்றே அறிவுரை கூறினான் பாரதி. அவன் தேசியக் கவி, சுதந்திரக் கவி என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் ஒரு குழந்தை நல மருத்துவனும்.  குழந்தைகளின் உடல், மன நலத்திற்கு எது தேவையோ அதைப் பாடியுள்ளான். இது போன்ற இயந்தரங்களுடன் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ப்பது போல வளர்த்து வாழ்விழக்கச் செய்து விடும் என்பதை அறிந்தவன் அவன்.
                கணினி விளையாட்டில் ஒரு குழந்தைதான் விளையாட முடியும். வேறு ஒருவருடன் விளையாட முடியாது. வேண்டுமானால் கணினியில் ஒவ்வொரு விளையாட்டிலும் உடன் விளையாடுபவர்களைப் போல ஒரு உயிரற்ற உருவம் விளையாடும். இப்படியே கணினியைத் தான் மட்டுமே பயன் படுத்தி விளையாடிப் பழகிய குழந்தைகள் இன்னொரு குழந்தை விளையாட வந்து விட்டால் பாண்டியன் நெடுஞ்செழியன் கன்னி யுத்தம் செய்தது போல் இந்தக் குழந்தைகள் கணினி யுத்தம் புரிய தொடங்கி விடுகின்றனர். கூடி விளையாடும் பண்பும் கணினியால் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
                  ஓடி விளையாடுவது குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்பது பெற்றோர்கள் அறிந்ததே. கூடி விளையாடுவதால் நட்பு, அன்பு, பகிர்வு, ஒற்றுமை முதலிய நற்பண்புகள் வளர்வதை எவராலும் மறுக்க முடியாது.
                       பெற்றோர்களே உங்களுக்கு விடுமுறை இல்லாவிட்டால் என்ன? வெள்ளைப்பணம் கைகளில் இல்லாவிட்டால்தான் என்ன? வெளியூருக்குத்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டுமா? பணக்காரர்களுக்குப் பாதாம் பருப்பு என்றால்  ஏழைக்கு என்று ஒரு பட்டானிப் பருப்பு கூடவா கிடைக்காமல் போய் விடும். அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்றால் நீங்கள் அருகில் இருக்கும் பூங்காவுக்கு, கடற்கரைக்கு,, அழைத்துச் செல்லுங்கள். அடி, கடி பட்டால் பதில் சொல்ல வேண்டிய தைரியம் உங்களுக்கு இருந்தால், உங்கள் குழந்தைகளுடன். பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள். கூடி விளையாட அனுமதியுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளின் விளையாட்டை நாள் தோறும் இரண்டு மணிநேரம் கண்டு மகிழுங்கள். கோடையை கொஞ்சமாவது இன்பமாக கழித்த புத்துணர்வு குழந்தைகளுக்குக் கிடைக்கும். ஏன்? உங்களுக்கும் கிடைக்கும். சும்மாவா சொன்னார்கள் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று. அதிலும் சுவை இருக்கத்தானே செய்கிறது!

(இக்கட்டுரை பெண்மணி மாத இதழ் மற்றும் வல்லமை மின்னிதழில் இடம்பெற்ற என் கட்டுரை.) 

2 கருத்துகள்:

  1. நிச்சயமாக மேற்கத்தையை பாணியில் மட்டுமே பிள்ளையை வளர்ப்போம் என்றிருப்போர் பார்க்க வேண்டிய பதிவு

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகை மகிழ்ச்சியாக உள்ளது ம.தி.சுதா. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்களின் தொடர் வருகையை எதிர்நோக்கி... அன்புடன்

    பதிலளிநீக்கு