“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உதிர்க்கிறார் உதிரிப்பூக்கள் வடிவுக்கரசி

என் அம்மாவின் கை மணத்தில்……..

     

   உதிரிப்பூக்கள் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த  வடிவுக்கரசி அம்மாவை “அம்மாவின் கைம்மணத்தில்” என்னும் இந்தத் தொடருக்காக நானும் இதழாசிரியர் மணிஎழிலனும் சந்திக்கச் சென்றோம். பார்வையிலும் குரலிலும் தாய்மையுடன் அழைத்து உடனே தேநீர் வரவழைத்துக் கொடுத்து உபசரித்த விதத்தில் எங்கள் தாயையே கண்டதாக ஒரு உணர்வு. தாமதமாக அனுமதித்தமைக்குப் பலமுறை மன்னிப்புக் கேட்டதில் நெகிழ்ந்தே போனோம். அதுவும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லுடா... ஆமாடா... என்று அழைத்த பாசம்.... உருக வைத்தது. அதெல்லாவற்றையும் விட மேலாக இரவு பதினொன்றரை மணிக்கு “சாரிம்ம்மா.. பானு.. நான் உங்களுடன் நாளை பேசுகிறேன்” என்று அனுப்பிய குறுஞ்செய்தி, எவ்வளவு நேரமானாலும் நினைவு வைத்துக்கொண்டு பதில் கொடுக்கும் பண்பைப் பறை சாற்றியது.

      நிலாச்சோறு இதழை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி “இந்தப் பராட்டா எண்ணெயில் பொரித்தது, இந்த மீன் குழம்பைப் பார்க்கும் போதே வாயில் எச்சி ஊறுது” என்று ஆர்வமாகக் கூறியதுடன் “புத்தகம் ரொம்ப அழகா இருக்கு” என்று மகிழ்ச்சியாகப் பாராட்டி எங்கள் மனத்தில் மேலும் மேலும் உயர்ந்தார்.


      அப்படியே இளமைக் காலத்தை அசை போட ஆரம்பித்தார். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆர்காடு. பி.யு.சி. படித்த லாஸ்ட் செட் நான். எனக்கப்பறம் பிளஸ்டூ.. நேரடியாக டிகிரி கிளாஸ் ஆரம்பமாச்சு. நான் பியு முடித்ததும் தூர்தர்ஷனில் சிங்கராக (பாடகராக) வேலைக்குச் சேர்ந்தேன். சிறுவர் நிகழ்ச்சிகளும் அடிக்கடி கொடுப்பேன். குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம். சினிமா படம் எடுத்து செல்வத்தைத் தொலைத்தவர்களில் என் தந்தையும் அடக்கம். மேல படிக்க வைக்க முடியல. சம்பாதிச்சு ஆகவேண்டிய நிலைமை. அப்ப எனக்குச் சம்பளம் ஒரு நாளைக்கு 12 ரூபா.50 பைசா. அதுவும் பாடல் இருந்தால்தான். 

அப்பறம் தாஜ் கன்னிமாராவில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று விளம்பரம் செய்து இருந்தார்கள். நான் என்ன என்று தெரியாமலே இண்டர்வியூ போனேன். அங்கு ரிசப்ஷனிஸ்டா இருக்க விருப்பமா ஹவுஸ் கீப்பிங்க் பணி புரிய விருப்பமா என்று கேட்டார்கள். எனக்கு ஹவுஸ் கீப்பிங்க் என்றால் என்ன என்று விளக்குங்கள் என்று கேட்டேன். அவர்கள் அறையைச் சுத்தம் செய்வது முதல் எல்லாம் என்றார்கள். நானும் ரொம்ப தைரியமாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டேன். அப்படியே கன்னிமாராவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கன்னி மாராவில் எனக்கு பிராக்டிகல். அடையாரில் தியரி என்று தேர்வு எழுதி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்தேன் என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் வடிவுக்கரசி. நாங்கள் ஒரு அம்மாவாக அவர்கள் சமையல் பற்றியும், அல்லது ஒரு மகளாக அவர்கள் அம்மாவின் சமையல் பற்றியும் கேட்கச் சென்றால் இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்த ஒரு நடிகையாக புதிய உணவையும் பழைய மரபுச் சமையலையும் விலாவரியாகக் கூறி நம்மை அசர வைத்தார்.

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நீங்க முதன் முதலில் அம்மாவாக அறிமுகம் ஆகிய படம் எது? என்று கேட்டவுடன் “ஆஅ.... இது நல்ல கேள்வியா இருக்கே.... எனக்கே நினவில்லையே என்று கூறி நீண்ட சிந்தனையின் பின் ‘நான் நானேதான்’ என்னும் பி. மாதவன் இயக்கத்தில் தமிழில் உருவான தெலுங்கு திரைப்படத்தில் ராஜ்குமாருக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்ததாக ‘நிழல் தேடும் நெஞ்சங்கள்’ என்னும் படத்தில் பானுசந்தருக்கு அம்மாவாக..... அப்படியே தொடர்ந்தது. ஒரே நேரத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக, ஒரு படத்தில் அம்மாவாக என்றெல்லாம் நடித்திருக்கிறேன்” என்று கூறும் இவர் இன்று திரையுலகில் பல கதாநாயகி, கதாநாயகர்களை அம்மா என்று அழைக்க வைத்தவர். “நடிப்புக்காக மட்டுமன்றி உண்மையிலும் அம்மாவாக இருப்பதை விரும்புகிறேன். “பொதுவாக மேடம் என்று அழைப்பதை நான் விரும்புவதில்லை. ஒரு முறை இரு முறைதான் மேடம் என்று அழைப்பதை அனுமதிப்பேன். பிறகு நானே அம்மான்னு கூப்பிடுங்கனு சொல்லிடுவேன். அம்மான்னு கூப்பிடுறதுல  அன்பும், பாச உணர்வும் அதே சமயத்தில் ஒரு மரியாதையும் இருக்கறத ஒவ்வொரு அம்மாவிலும் உணர்றேன். மேடம்னு கூப்பிட்டா அந்நியமா இருக்கற மாதிரி தோனுது” என்று கூறும் வடிவுக்கரசி, தன் அம்மாவைப் பற்றிக் கூறிய போது “அம்மாவுக்காக மனம் விட்டு அழுவதற்கு  ஒரு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று நினைக்கக் கூட நமக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது என்று கண்களில் நீர்த் துளிர்த்துப் நம்மையும் கண்ணீர் சிந்தச் செய்து விட்டார்.

      நம் மகிழ்ச்சியை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் நம் கோபத்தைத் தாங்கும் ஒரே உள்ளம் தாயுள்ளம் மட்டுமே. இன்று நான் கட்டியுள்ளதும் அவர்களது புடவை.

      எங்க அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணினவங்க. எங்க அப்பா அவங்களுக்கு அதிகமா வேலை கொடுக்க மட்டாங்க. எங்களுக்குக் காலை உணவு என்றால் பிஸ்கட்தான். அந்த வெண்ணெய் பிஸ்கட் என்பார்களே.. அதுதான். ஏன்னா எங்க ஊர் ஆர்காடு. ஆர்காடிலிருந்து வேலூர் போகிற வழியில பேக்கரி அதிகமா இருக்கும். அதனால் பிஸ்கட். மதிய உணவுக்குத் தினமும் கீரையும் தயிர்சாதமும் வரும். இரவு கவாப். சப்பாத்தி, கறிக்கொழம்பு.

      ஆனால் அடிக்கடி புகாரியில் இருந்து பிரியாணி வாங்கிட்டு வந்துடுவாங்க அப்பா. அப்பல்லாம் புகாரி பிரியாணி சாப்பிட்டா ஹைகிளாஸ்னு அர்த்தம். நைட்டு பனிரெண்டு மணி ஆனாலும் எழுப்பி பிரியாணி சாப்பிட வச்சிட்டுத்தான் படுப்பாரு எங்கப்பா.

      என் அம்மாவை நினைவு படுத்தும் உணவுகள் என்று சொல்ல மாட்டேன். என்னதான் அவங்களையே பக்குவம் கேட்டு செய்தாலும் வரவே வராத ருசி அவங்க வைக்கிற அந்த மீன் குழம்புக்கு உண்டு. எங்க உறவுக்காரங்க எல்லோரும் எங்க அம்மா மீன் குழம்பு வச்சா நல்லா இருக்கும்னு சொல்லி மீன் குழம்பு வைக்கச் சொல்லி விரும்பி சாப்பிடுவாங்க. என்னதான் செய்வாங்களோ அப்படி ஒரு ருசி. அவங்க உடம்பு சரியில்லாத போது அவங்களே பக்கத்துல உக்காந்து சொல்லிக் கொடுப்பாங்க. புளியைக் கரச்சு வச்சுக்கோ. மிளகாய்த்தூளை அதுல போடு என்றெல்லாம் பக்குவம் சொல்வாங்க. அது மாதிரியே நான் செய்வேன். ஆனா அவங்க வைக்கிற குழம்பின் ருசியும் மணமும் இருக்கவே இருக்காது.

      தூக்குச் சட்டியில் சோற்றையும் நீச்சத்தண்ணியயையும் ஊற்றி வைத்து மூக்கை ஒரு முறை சிந்துவீர்களே அந்த… நடிப்பு.... என்று தொடங்கியவுடன், ஒரு மலர்ச்சியுடன் "ஓ அதுவா.... நான் நடிகர் திலகத்துடன் நடிக்கப் போகிறேன் என்றதும் தங்கப்பதக்கம் கே.ஆர். விஜயா அம்மா மாதிரி நடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இன்னொரு மூக்கெல்லாம் குத்திக்கொண்டேன். என்னை ஏண்ட்டி ஹீரோயினாக (Anty Heroine)  ஆக்கப் போகிறார்கள் என்று அப்போது எனக்குத் தெரியாது. அழுது கதறி நான் ஊருக்கே போய்விடுகிறேன் என்று அடம்பிடித்து, கடைசியில் ஒரு வழியாக நடித்தேன். ஆனால் அது இன்றும் மக்கள் மனத்தில் நிற்கும் நடிப்பாக இருக்கிறது” ன்று கூறுகிறார். முதல் மரியாதைக்காக இரண்டு மூக்குக் குத்திக் கொண்ட மகிழ்ச்சியில் இன்னும் இருக்கிறார் என்பது நேர்காணல் முடியும் தருவாயிலும் ரெண்டு மூக்குக் குத்திக் கொண்டதைப் பெருமையாகக் கூறியதில் இருந்து அறிய முடிந்தது.


      நீங்க நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவத்தைச் சொல்லுங்கம்மா என்றவுடன், ஆஹா….. நிலாச்சோறு அடிக்கடி சாப்பிட்டு இருக்கோமே…. எங்க வீட்ல மொட்டை மாடியில் ஒரு சின்ன ஓலைக் குடிசை இருக்கும். வெற்றிடம் அதிகமாக இருக்கும். அங்க கயித்துக் கட்டில் இருக்கும். பழைய காலத்து அந்தப் பித்தளை ஸ்டவ் இருக்கும்ல அதை வைத்து மொட்ட மாடியில் அம்மா சப்பாத்தி செய்வார்கள். சுடச் சுட அந்த சப்பாத்தியைச் சாப்பிடுவோம். அப்பறம் களி. ஒரு தட்டுல களி உருட்டி வெச்சு, அதுல குழி வெட்டி, சர்க்கரையும் நல்லெண்ணையும் சேர்த்துத் தரும் அவரது அம்மாவின் கைம்மணத்தைச் சொல்லும் போது,  “இப்போது நான் சொல்லும் போதே அந்த மணம் என் மூக்கில் வருகிறது” என்று இழுத்து ஒரு பெருமூச்சு விடுகிறார். அது மட்டுமல்ல சாம்பார், ரசம், பொறியல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அதைச் சோற்றில் போட்டு நன்றாகப் பிசைந்து கையில் உருட்டி உருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது…. கருவாடு மொச்சக் கொட்டை போட்டு ஒரு குழம்பு வைப்பாங்க எங்க அம்மா…… அது சும்மா….. அப்ப்ப்படி இருக்கும்” என்று பழைய நினைவுக்குச் சென்று தன் கையை முகர்ந்து பார்த்துக்கொள்ளும் வடிவம்மாவிடம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் நிலாச்சோறு ஊட்டியுள்ளீர்களா? என்று கேட்டவுடன் சற்று அதிர்ச்சியுடன் அதையெல்லாம் அவள் விரும்புவதே இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் பழைய மகிழ்ச்சியான பலவற்றை இழந்து விட்டனர் என்று தன் மகளுக்காக வருந்துகிறார். ஆனால் நான் இப்போதும் பழைய குழம்பு மீதம் இருந்தால் உடனே கீரை வாங்கி வாங்கி அதைச் சுண்டவச்சு அதை ஃப்ரெஷ்ஷா சாப்பிட மாட்டோம். அதைக் குழம்புல போட்டுக் குழம்பை நல்லா சுண்ட வச்சு சாப்பிடுவோம். இப்பவும்… அதுக்குப் பேரு சுண்டக்குழம்பு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
     
       இன்றைய தலைமுறையினருக்காக வருந்தினாலும் அவர்கள் அம்மா வீட்டில் இருக்கும்போது சமையல் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் திருமணம் ஆனதும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அவர்கள் திருமணம் ஆனதும் முதலில் வாங்கும் பொருள் மைக்ரோ அவன்தான். சூடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக என்று நகைச்சுவையாகக் கூறிச் சிரிக்கிறார்.

       “படப்பிடிப்பிற்காக வெளியிடங்களுக்குப் போனால் உங்கள் உணவு முறை எப்படிம்மா? டயட் எதாவது… என்று கேட்டவுடன் மிக ஆர்வமாக, “டயட்டா….. என்னைப் பாத்தா அப்படி தெரியுதா? என்று சிரித்து அதெல்லாம் இல்லவே இல்ல. சில பேர் சவுத் இந்தியன் ஆர்டிஸ்ட் என்றதும் இட்லி சாம்பார் கொண்டு வருவாங்க. நான் கேரளா போனா புட்டு, பயறு, பப்படம் கண்டிப்பா கேட்டுச் சாப்பிடுவேன். கர்நாடகா போனா களி, தயிர் கண்டிப்பா சாப்பிடுவேன். அந்தந்த இடத்து ஃபேமஸைக் கேட்டுச் சாப்பிடாம இருக்க மாட்டேன். எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்க்கனும் என்று தம் உணவு அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த வடிவுக்கரசி அம்மா.

        நடிகைகளுக்குச் சமையல் தெரியாது. சமைக்க ஆள் இருப்பார்கள் என்பதையெல்லாம் தாண்டி வடிவம்மா வேலைக்குக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை. என் கையால் சமைத்து என் குடும்பத்துக்குப் பரிமாறுவதை நான் மிகவும் விரும்புவதால் காலை ஒன்பதரை மணிக்கு மேல்தான் நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறுகிறார். மீண்டும் தேநீர் வரவழைத்துக் கொடுத்து எங்களை தாய்மைப் பாசத்துடன் வழியனுப்பி வைத்தது மனத்தில் இன்னும் நிறைவாக........

      




4 கருத்துகள்:

  1. அக்கா அருமையானதொரு சந்திப்பை எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. முதலில் வருகை தந்துள்ளீர்கள். வருக.. வருக! தங்கள் மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது. மிக்க நன்றி பொதிகைச் சாரல்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இங்கும் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி ரத்ன வேல் ஐயா.

      நீக்கு