“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

டீன் ஏஜ் பெண்களைச் சமாளிப்பது எப்படி???




மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று ஒரு புலவன் பாடினான். பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது என்று ஒரு புலவன் பாடினான். இதில் எது சரியான கருத்து என்று சீர் தூக்கிப் பார்த்தல் இன்றைய பெண்களின் கடமை. இதைச் சீர் தூக்கிப் பார்க்கத் தொடங்கும் வேளையில் பெண்களைப் பற்றி வண்ணக் கனவுகள் கண்ட முண்டாசுக்காரன் பாரதி நம் கண் முன் வராமல் இருக்க மாட்டான். சாதம் படைக்கவும் செய்திடுவாள். தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவாள்என்று புதுமைப் பெண்களைப் பற்றி கனவு கண்டான்.

முதன் முதல் பெண் பிரதமராக திருமதி இந்திரா காந்தி வந்த கால கட்டத்தில் பெண்களின் முகத்தில் தோன்றிய வெற்றிக்களிப்பு சொல்லில் அடங்காது. ஏதோ ஒவ்வொருவரும் தானே பிரதமராக வந்ததாக நினைத்து மகிழ்ந்தனர்.

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக வந்ததில் என்ன வியப்பு இருக்கிறது? அவர் பிறந்த குடும்பப் பின்னணி, வளர்க்கப் பெற்ற விதம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை என்றே கூறலாம். சிறையில் இருக்கும் போது ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களைப் படித்தால் படிக்காத பாமரப் பெண்ணும் உலகியல் அறிவைப் பெற்று அரசியல் வாதியாகத் திகழலாம். அப்படி தன் குல வாரிசை வளர்த்தார் நேரு

ஆனால் நாம் நம் பெண்களை அப்படி வளர்க்கிறோமா? காலையில் எழுந்து சமைத்து, டப்பாக்களில் உணவை அடைத்துக் கொடுப்பது. அவளது உடைகளைத் துவைத்துப் பொடுவது.  கடைகளுக்குச் சென்று அவளுக்கு விருப்பமான நவநாகரிக ஆடைகளையும் காதுக்கு, கழுத்துக்கு என்று கவரிங்க நகைகளையும் வாங்கித் தந்து அவளை ஒரு நடமாடும் கவரின் நகைக்கடையாக மாற்றுவது, (ஏனெனில் நம் பொருளாதாரம் உண்மை நகைக்கடையாக மாற்ற இடம் கொடுக்காது) அவளது பிறந்த நாளில் அவளது பள்ளித்தோழி தோழர்களூக்கும் ஆசிரியர்களுக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுப்பது. அவள் கேட்டும் கேட்காமலும் ஒரு கைப்பேசி வாங்கிக் கொடுப்பது. எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பது அல்லது எந்நேரமும் படி என்று நச்சரிப்பது இவைகளைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம்.

காலையிலும் மாலையிலும் அவளுடன் ஒரு நடை போயிருப்போமா? அவள் அருகில் அமர்ந்து ஆதரவாகத் தலையைக் கோதி அவளது ஆசைகள் என்ன என்ன என்று கேட்டிருப்போமா? அவளுக்கு சாதனைப் பெண்கள் எவரது கதையையாவது கூறியிருப்போமா? அவளது ஆழ் மனம் தேடும் ஆசையின் ஏக்கத்தை அறிய ஒரு சின்ன முயற்சியாவது செய்திருப்போமா? இவை எதையும் செய்யாமல் இரவும் பகலும் சதா டி.வி. என்று முட்டாள் பெட்டியின் முன்பு உட்கார்ந்து விட்டு பெண்ணை முட்டாள்கள் என்று திட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஆணை காலையில் தினமும் கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் குடும்பம் பெண்ணை ஒரு ஹிந்தி வகுப்புக்கோ அல்லது ஒரு ஃபிரஞ்ச் வகுப்புக்கோவாவது ஏன் அவள் விருப்பப் படும் எந்த ஒரு பயிற்சிக்கும் அனுப்புவது இல்லை.

இன்றும் மூன்று பெண்கள் இந்திய அரசியலுக்கு ஆணி வேராக இருந்து ஆண் அரசியல்வாதிகளைச் சற்று அச்சுறுத்தி வருகின்றனர்காவல்துறையில் கிரன்பேடி முதலியோர் பெருமை சேர்த்து வருகின்றனர். ஆட்சித்துறையில் ஆட்சியராகப் (கலெக்டராக) பல பெண்கள் தம்மை நிருபித்து உள்ளனர். இவைகள் எல்லாம் எத்தனை விழுக்காடு என்று எண்ணிப்பார்க்கும்போது பெண்கள் வெற்றி பெறவே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

பெண்கள் வெற்றிக்கான அடியை எடுத்து வைக்கும் பருவம் டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பள்ளிப் பருவம். இந்தப் பருவத்தில் பெரும்பான்மையான பெண்கள் காதல் வலையில் சிக்கி விடுகின்றனர்.

இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில்தான் டீன் ஏஜ் பெண்கள் காதல் வசப்படுவது அதிகரித்து உள்ளது. ஆம் பழைய காலத்தில் பனிரெண்டு பதினான்கு வயதில் காதலிக்க வில்லையா? என்ற கேள்விகளும் அப்பருவ பெண்களிடமிருந்து எழுகிறது. ஆம் பழைய காலத்தில் காதலித்தனர். காதலித்தவனையே கரம்பிடித்தனர். காதலித்தவனும் காத்திருந்தாவது அவளையே மணம் முடிப்பான். இன்று??? எல்லாம் மாறிப்போனது. இளைஞர்கள் ஒரே வேளையில் பலரைக் காதலிக்கும் போக்கும் போய்க்கொண்டிருக்கிறது. ஏமாற்றுவதும் ஏமாறுவதும் இரு புறமும் இலகுவாக நடக்கத் தொடங்கி விட்டது.

இதில் அவனது அல்லது அவளது தவறு ஒன்றும் இல்லை. நம் வளர்ப்பு, நாம் சமுதாயத்தின் போக்கு, அந்நிய கலாச்சாரத்தின் வரவு என்று பல காரணங்களைக் கூற வேண்டியுள்ளது. இக்காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம் பெண்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் காதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? எப்படி அறிவுரை வழங்க வேண்டும்?

அன்று கல்வி தேவையற்ற காலமாக இருந்தது. தன் காலில் பெண்கள் நிற்க வேண்டிய அவசியமில்லமல் இருந்தது. இன்று அப்படியா இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் கல்வியறிவு இல்லாமல் வாழவே முடியாது என்னும் நிலையாக அல்லவா உள்ளது.

டீன் ஏஜில் பெண்களுக்கு ஹார்மோன்களின் சுரப்பு, அதன் காரணமாக உடல் மாற்றம், மனமாற்றம் எல்லாம் ஏற்படுவது இயல்பு. இம்மாற்றத்தின் போது அவளைப் பார்க்கும் இளைஞர்கள் எல்லோரும் அழகானவர்களாகத் தோன்றுவது, இளைஞன் ஒருவன் அக்கறையாகப் பேசினால் அவன் மட்டுமே அவள் மீது அக்கறையுள்ளவனாகத் தோன்றுவது, உலகமே அவன் மட்டும்தான் என்றெல்லாம் தோன்றுவது இயல்பு. சற்றேறக்குறைய அவள் சொர்க்கத்தில் உலவிக்கொண்டு இருப்பாள். அப்போது நீங்கள் அவளைக் கண்டித்தால் அவள் கண்களுக்கு உலகிலேயே அவளது முதல் எதிரி நீங்களாகத்தான் தெரிவீர்கள்.  இதயெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் அதாவது நாமும் கடந்துதான் வந்திருப்போம். ஆகவே அப்போது மென்மையான அன்பும் உண்மையான ஆதரவும் இதமான வருடலும் பதமான சொற்களுமே அவளை உங்களுக்கு அருகில் வரவைக்கும். கடுஞ்சொற்களும் அறிவுரைகளும் அவளது காதலை இன்னும் தீவிரமாக்கும். பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கும். அடங்காத்தனத்தை உருவாக்கும்.

டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, அது வளர்ச்சியின் ஒரு கட்டம். அதிலே நின்று சிந்தித்துக்கொண்டிருக்காமல் அதைக் கடந்து சென்று கொண்டிருக்கவேண்டும்' என்பதை வெளிப்படையாக பெண்ணிடம் பேசுங்கள். யாராவது காதல் தூது விட்டாலோ, காதல் கடிதம் கொடுத்தாலோ அங்கேயே கூச்சல்போட்டு அதை பெரிய விஷயமாக்காமல், யதார்த்தமாக, நிதானமாக அதை அணுகி மறுப்பு சொல்ல வேண்டும் என்று கூறுங்கள். உணர்ச்சி வசப்பட்டால் பிரச்சினை வலுவாகிவிடும் என்பதை புரியவையுங்கள். இது இயல்பானதே. எங்கும் நடக்கக் கூடியதே என்பதைப் புரிய வையுங்கள்.

டீன்ஏஜில் திருமணத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. அதைப் பற்றி தீர்மானம் எதுவும் எடுக்கத் தேவையில்லை என்பதையும் உணர்த்துங்கள். ஏனெனில் அது கல்விக்கு உரிய பருவம். திருமணத்திற்கு உரிய பருவம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

சக மாணவர்களோடு கல்வி ரீதியாக மட்டும் நட்பு பாராட்டலாம். அதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்று சொல்லுங்கள். காதல் வசப்பட்டு விட்டால் கூட காதலனோடு தனிமையான எந்த இடத்திற்கும் சென்றுவிட வேண்டாம் என்பதைக் கூறுங்கள். அதில் இருக்கும் சிக்கல்களை அபாயத்தை அபாயமின்றி பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டே இருங்கள்.
நண்பர்கள், தோழிகள் வாழ்க்கையில் வருவார்கள்...போவார்கள். ஆனால் யார் தன்னைப் புறக்கணித்தாலும் பெற்றோரும், உறவினர்களும் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்பதை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுங்கள். அதாவது எப்போதும் மகளின் நல்வாழ்வில் அக்கறையுடையவர்கள் நீங்கள் என்பதை உறுதிப் படுத்துக் கொண்டே இருங்கள்.

         
தன் உடல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு பொக்கிஷம். எந்த சூழ்நிலையிலும் யாரும் உடலைத் தொட அனுமதிக்க மாட்டேன் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்.

சில தேவையற்ற பிரச்சனைகள் வரும்போது என்று தைரியமாக `நோ' `சொல்லும் தைரியத்தை வளர்த்தெடுங்கள். செல்போன் வாங்கித்தருகிறேன், விலை உயர்ந்த உடை வாங்கித் தருகிறேன், நகை வாங்கித்தருகிறேன்' என்று பெற்றோரைத் தவிர யார் சொன்னாலும், `தேவையில்லை..' என்று ஒரே வார்த்தையில் மறுத்துக்கூறும் தைரியத்தை வளருங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் செல்லுக்காகக் காதலிக்கும் டீன் ஏஜ் பெண்கள் அதாவது பள்ளிப் பருவ பெண்கள் பெருகி வருகின்றனர்.

எவ்வளவு பேரழகி என்றாலும் அவள் ஒருசில வருடங்கள் மட்டுமே போற்றப்படுவாள். திறமை மட்டுமே எல்லா காலமும் போற்றுதலுக்குரியதாக இருக்கும் என்பதைக்கூறி, திறமையை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள். அவளுக்குள் இருக்கும் திறமையை அடிக்கடிச் சுட்டிக் காட்டி அவளது திறமையை வளர்க்கும் ஆர்வத்தை உண்டாக்குங்கள். பரிசும் பாராட்டும் பெருமளவுக்கு அவளுக்கு உதவுங்கள். இந்தப் போதையில் காதல் போதை அறவே காணாமல் போய்விடும் என்பது பலரின் அனுபவம்.

       உங்கள் மகள் காதலில் விழுந்து விட்டாள் என்று தெரிந்தால் அவளைத் திட்டுவதோ அடிப்பதோ தேவையில்லை. அவளது காதலனை உங்களுக்கு அறிமுகப் படுத்தச் சொல்ல்லுங்கள். நல்ல குடும்பம், பண்பு, கல்வி, ஒழுக்கம் இவை உள்ளவனாக இருந்தால் இருவரது குறிக்கோள் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்லுங்கள். உண்மைக் காதல் காத்திருக்கும். காலம் இதற்கு உரிய முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தாய் தந்தை இருவரும் மகளிடம் நட்புடன் அன்புடன் பழகுதல் முக்கியம். அதிலும் தாயின் அன்பில் தான் ஒரு குழந்தை நலம் பெறும் என்பார்கள், பெண்களைப் பொருத்த அளவில் தந்தையின் நெருக்கம் அவளது தவறை உணரச் செய்யும். 



(இந்தக் கட்டுரை செப்டம்பர் 2012 பெண்மணி மாத இதழில் பிரசுரமானது. பெண்மணி இதழாசிரியருக்கு நன்றி)

6 கருத்துகள்:

  1. தாய் தந்தை இருவரும் மகளிடம் நட்புடன் அன்புடன் பழகுதல் முக்கியம். அதிலும் தாயின் அன்பில் தான் ஒரு குழந்தை நலம் பெறும் என்பார்கள், பெண்களைப் பொருத்த அளவில் தந்தையின் நெருக்கம் அவளது தவறை உணரச் செய்யும்.
    உண்மையான வார்த்தைகள்...பாராட்டுக்கள் தோழியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போலத் தங்கள் பாராட்டு. மனத்திற்குக் குளிர்ச்சியாக... மிக்க நன்றி கலைநிலா

      நீக்கு
  2. தாயின் அன்பில் தான் ஒரு குழந்தை நலம் பெறும்

    விழிப்புணர்வு தரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜேஸ்வரி உங்கள் அன்பின் எல்லையை நான் எப்படிச் சொல்வது. தொடர் அன்பு மழையில் என்னைக் குளிரச் செய்கிறீர்கள். மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  3. அன்றைய கல்விமுறை வாழ்க்கையை வாழக் கற்றுத்தந்தது. இன்றய கல்வி முறை வேலை கிடைப்பதற்கான வழிமுறையை கற்று தருகிறது. அதனால் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் சரியான வாழ்க்கையை வாழ முடிவதில்லை... தங்கள் அருமையான பகிர்வுகளுக்கு என் நன்றிகள்...பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்கரவர்த்தி பாரதி. முதல் வருகை, முதல் கருத்து, முதல் பாராட்டு அனைத்திற்கும் மனமார்ந்த நன்றி சக்கரவர்த்தி.

      நீக்கு