லேப்டாப் எனப்படும் மடிக்கணினிக்கு உள்ள மோகம் சொல்லி முடிவதில்லை. கங்காரு தன் குட்டியை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல, குரங்கு தன் குட்டியை முதுகில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல இளைஞர்களும் எப்போதும்
மடிக்கணினியைத் தம் தோளில் கட்டிக்கொண்டு அலைகின்றனர். என்ன சொல்ல. காரில், ஃபிளைட்டில், ரயிலில், பஸ்ஸில்,
பேருந்து நிலையத்தில் என்று உட்கார இடம் கிடைத்தால் போதும், எங்கு போனாலும் ஏறி ஐந்து நிமிடங்களில் திறந்து விடுகின்றனர் இந்த மடிக்கணினிப் பெட்டியை.
‘கன்னியவளை
என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன்
மடிக்கணினியவளை
காதலியின் நினைவோடு
என் மடிமீதும்
சுமக்கிறேன்
எப்போதும்” (- தஞ்சை வாசன்)
என்று சொல்லி மடியில் சீராட்டிப்
பாராட்டிச் சுமக்கும் அளவிற்குக் காதலி பெற்றிருந்த இடத்தைவிடவும் கணினி முக்கிய இடத்தைப்
பிடித்து விட்டது இளைஞர்களிடம். இந்தக் கவிதையை எழுதியவரும் ஐ.டி. பிரிவில் பணிபுரியும்
தஞ்சையைச் சேர்ந்த இளைஞரே.
மடிக்கணினி இல்லை.. இளைஞர்களுக்கு அது இடிக்கணினி.... மடிக்கணினி ஆண்களின் உடலில்
விந்தணுக்களை மடிய வைக்கும் காலன் என்பதை இளைஞர்கள்
அறிவதில்லை. அப்படி ஒரு வேகம் அதை பயன் படுத்துவதில். இவர்கள் என்னவோ மடிக்கணினியைக்
குழந்தை போல பாவித்து மடியில் வைத்து சீராட்டுகின்றனர். அது இவர்கள் குழந்தையைச் சீராட்டும்
வாய்ப்பை இழக்கச் செய்து விடுகிறது.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கும், எப்போதும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
சாதராணமாகவே மடிக்கணினி பயன் படுத்துவோர்க்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது என்று முன்னமே சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்போது கேட்கவே வேண்டாம். வை ஃபை (Wi-Fi) வேறு வந்து விட்டது. இந்த வையர்லெஸ் வகையான Wi-Fi என்பது WLAN (wireless local
area network) என்னும் சொல்லின் மாற்றுச் சொல். இந்த வயர்லெஸ் நெட்வொர்க் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது.
இதன் மூலம் வலைத்தளங்களை விரைவாகப் பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் வீட்டின் எங்கு
வேண்டுமானாலும் இருந்து வலைத் தளங்களைப் பயன் படுத்த முடியும். அதாவது 20 மீட்டர்கள்
அல்லது 65 அடிகள் வரை இதன் செயல்பாடு இருக்கும்.
லேப்டாப்களில் வை-ஃபை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப் பட்டுள்ளது..
மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-ஃபை இணைய தளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர். இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்தது.
மின்காந்த கதிர்வீச்சு
இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்த ஆண்களைப் பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-ஃபையை இணைத்து உபயோகித்தவர்களின் விந்தணு பாதிப்பிற்குள்ளானது ஆய்வில் தெரியவந்தது.
இதற்குக் காரணம் வை-ஃபையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்
இந்த இலட்சணத்தில் . இப்போது மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட
புதிய தொழில் நுட்பத்தில் அமைந்த ஜீன்ஸை (Jeans) நெதர்லாந்தைச்
சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள்
அறிமுகப் படுத்தி உள்ளனர். இதுதான் மடிக்கணினி என்பதன் உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று வாக்கு மூலம் வேறு கொடுத்துள்ளனர்.
இதுதான் உண்மையாக எமனை மடியில் கட்டிக் கொண்டதற்குச்
சரியான பொருள் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று கூறாது விட்டுவிட்டனர். .
எரிக் டீ நிஜ்ஸ் மற்றும் டிம் ஸ்மித் ஆகியோரால் நடத்தப்படும் ஆடை
வடிவமைப்பு நிறுவனமான
நியூவே ஹெரன் என்ற நிறுவனம் இந்த மடிக்கணினி ஜீன்ஸை வடிவமைத்துள்ளது. கீ போர்ட்,
மௌஸ், ஸ்பீக்கர்கள் எல்லாம் எளிமையாகப்
பயன்படுத்தும் நிலையில் ஜீன்ஸின்
தொடைப் பகுதியில் இருக்குமாறு
உருவாக்கப்பட்டுள்ளன
நெகிழ்வுத் தன்மையான கீபோர்ட் சிறிய ஒலிபெருக்கிகள், மற்றும் சிறிய
மவுஸ் என்பனவற்றின் காரணமாக இந்த
ஜீன்ஸ் வழக்கமான காற்சட்டைகளைவிட
அதிக பாரமாக இருக்காது
என்றும் டீ
நிஜ்ஸ் தெரிவித்துள்ளார்.
நவீன வடிவத்தில்
இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனது பின்புற
பாக்கெட் மவுஸை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்
பட்டுள்ளது. மௌஸை
ஆடையுடன் இணைப்பதற்காக எலாஸ்டிக் பொருத்தப்
பட்டுள்ளது. அது வயர்லெஸ்ஸின்
தொழில் நுட்பத்தில் மடிக்கணினியுடன் இணைக்கப்
பட்டுள்ளது. முற்றிலும் மின் காந்த அலைகளால் இயங்கும் இது இது சந்தைக்கு
வந்தால்……!!!! அப்பாடா……. நல்ல வேளையாக வரவில்லை. வந்தால் ரூ. 50,000 விலை ஆகுமாம்.
அதனைச் செய்வதற்கான பண வசதி அந்த நிறுவணத்திற்குத் தற்போது இல்லையாம். அது இல்லாமலே
போகக் கடவது.
கேளுங்க..கேளுங்க இளைஞர்களே..... மடிக்கணினி என்ன மழலையா உங்கள் மடியில் வைத்துக்
கொஞ்ச? நீங்கள் மழலையைக் கொஞ்சும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுக்க வந்த மாயப்
பிசாசு அது.
எல்லாவற்றையும் பெயருக்கு ஏற்றாற் போலவே பயன் படுத்த வேண்டும் என்னும் அவசியமில்லை. மடிக்கணினியை மடியில் வைத்துதான் பயன் படுத்த வேண்டும் என்று எந்த அரசும்
சட்டமும் இயற்றவில்லை. மடிக்கணினியை டெஸ்கிலும் வைத்துப் பயன் படுத்தலாம். மடிக் கணினிக்காக உங்கள் மடியை இழக்காதீர்கள்.. மடிக் கணினியை மற்ற கணினியாகப் பயன் படுத்துங்கள்.. மேலும் வை-ஃபைப் பயன் படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. மீண்டும் மிண்டும் கூறுகிறேன்…..
வை-ஃபை உங்கள் லைஃபைப் பாதிக்கும் மறந்து விடாதீர்கள் இளைஞர்களே.....
(இந்தக் கட்டுரை செப்டம்பர் மாத சோழ நாடு இதழில் வெளியானது. நன்றி சோழ நாடு)
(இந்தக் கட்டுரை செப்டம்பர் மாத சோழ நாடு இதழில் வெளியானது. நன்றி சோழ நாடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக