“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 1 செப்டம்பர், 2012

ஒரு மாணவிக்கு வந்த சோதனைபிளேட்லெட்ஸ் /த்ரோம்போசைட்ஸ்

எம்.பி.. படித்துக் கொண்டிருக்கும் நல்ல திடகாத்திரமான பெண் தான் அவள். அவள் பி.. முடித்து நான்கு ஆண்டுகள் ஒரு நல்ல நிறுவனத்தில் பணி புரிந்து விட்டு இப்போது எம்.பி.. முழுநேரப் படிப்பாகச் சேர்ந்தாள். ஹாஸ்டல் கல்லூரி எல்லாமே அவளது மனம் போலவே. நல்ல உணவு, நல்ல அறை, .சி. என எல்லா வசதிகளும் மிக மிக நன்றாகவே அமைந்திருந்தது. சும்மாவா காஸ்ட்லி கல்லூரி ஆச்சே. ஒராண்டுக்கே 18 இலகரங்களை அல்லவா அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

            கல்லூரிக்குச் சென்றவள் ஒரு மாதம் கூட முடியவில்லை. அடிக்கடி காய்ச்சல் என்று சொல்லி வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். அவள் அப்படியெல்லாம் கல்லூரிக்கு லீவ் போடும் பொறுப்பற்ற பெண்ணும் அல்லள். மருந்து சாப்பிட்டு ஒரு நாள் நன்றாக இருப்பாள். மீண்டும் காய்ச்சல் வயிற்று வலி, குமட்டல் என்று வந்து விடுவாள். பிறகென்ன நம் மருத்துவர்களுக்கு கையில் சீட்டும் பேனாவும் உள்ளதே. கையில் கிடைத்த டெஸ்டையெல்லாம் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்து விட்டார்கள். இவளும் சிரித்துக்கொண்டே காலேஜ்ல டெஸ்ட் எழுத முடியல. இங்கயாவது எழுதறேன் என்று ஒவ்வொரு லெபாரட்டரியாகச் சென்று இரத்தம் கொடுப்பதும் ரிசல்ட் பார்ப்பதும் என்று தொடர்ந்தாள். பல ஆய்வுகளுக்குப் பின் இரத்தத்தில்உறை அணுக்கள்என்று சொல்லப்படும் பிளேட்லெட்ஸ் (platelets) குறைவாக உள்ளது என்னும் ரிசல்ட்டை ஒரு வழியாகக் கண்டு பிடித்தனர்.

            நாம் இரத்த சோகை அல்லது அனிமிக் என்று ஒரு காலத்தில் சொன்ன கதையோடு நின்று விட்டோம். இப்போது என்னென்னவோ கூறுகிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டாமா?

            பிளேட்லெட்ஸ் எனப்படும் உறை அணுக்கள் என்றால் என்னமனித உடலுக்குத் தேவையான அளவு எவ்வளவு? அளவு குறைந்தால் அதைக் கூட்ட அல்லது சரிகட்ட என்ன செய்ய வேண்டும்? போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?

              பிளாசுமா என்ற திரவத்தில் இரத்த சிவப்பு உயிரணுக்கள், வெள்ளை அணுக்கள்,  இரத்த உறை அணுக்கள் போன்றவை தொங்கு நிலையில் காணப்படும் திசுக்கள். இந்த திசுக்களுக்கு இரத்தம் பிராண வாயுவையும் ஊட்டப் பொருட்களையும் கொண்டு செல்கிறது. இந்த திசுக்களில் இருக்கும் கழிவுப் பொருட்களையும் இரத்தமே அகற்றி எடுத்துச் செல்கிறது.

            இதில் இரத்த சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் பற்றி ஒரளவு அறிவோம். ஆனால் இந்த இரத்த உறை அணுக்கள் பற்றி பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது.

            பிளேட்லெட்ஸ் (Platlets) அல்லது த்ரோம்போசைட்ஸ் (Thrombocytes) என்பதை தமிழில் இரத்த உறை அணுக்கள்  என்பார்கள். இவை மிக நுண்ணிய அளவினவை. வெவ்வேறு வடிவம் கொண்டவை. 5 முதல் 9 நாட்கள் வரை உயிர் வாழும் தன்மையைக் கொண்டவை. இவை இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றி வருகின்றன. இவை இரத்தத்தை உறைய வைப்பதிலும் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் குறைவாக இருந்தால் இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். பிளேட்லெட்ஸ் அதிகமாக இருந்தால் இரத்தம் உறைவதால் பல நேரங்களில் இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்தக் குழாய் அடைப்பு, அதனால் மாரடைப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரத்த உறை அணுக்கள் சீராக  இருத்தல் அவசியம்.

             
இரத்த உறை அணுக்களின் அளவும் தேவையும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் சாராசரியாக ஒரு மிலி லிட்டர் இரத்தத்தில் சுமார் 150 முதல் 400 மில்லியன் வரை உறை அணுக்கள் இருக்கும் அல்லது இருக்கலாம்.

            கருவுற்ற பெண்களுக்குச் சற்று குறைவாகக் காணப்படும்நூறு கருவுற்ற பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் 8 பெண்களுக்கு ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தில் 100 முதல் 150 மில்லியன் உறை அணுக்கள்தான் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கர்ப்பக் காலத்தில் இரத்தப் பிளாஸ்மா சற்று நீர்மமாக ஆகி விடுகிறது. இதன் காரணமாக உறை அணுக்களின் அடர்த்தியும் குறைந்து விடுகிறது. ஆனாலும் இவை ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. அவர்கள் சாதாரணமாகவே செயல்படுவார்கள். இதைவிடவும் குறைவாக பிளேட்லெட்ஸ் காணப்படுமாயின் சற்று கவனம் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களின் பிளேட்லெட்ஸ் டெஸ்டில் மருத்துவர்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இரத்தம் உறையும் தன்மையை அது பாதிக்கும்.

            குறைவான பிளேட்லெட்ஸ் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம். அதிலும் பிளேட்லெட்ஸின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால் எந்த அளவு குறைவு எந்த அளவு கூடுதல் என்பதை மருத்துவர்களாலும் கண்டறிய முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு இருக்கும். எனவே கருவுற்றவுடன் ஒரு சில முறைகளாவது இரத்தப் பரிசோதனை செய்து  முன்னர் எந்த அளவு இருந்தது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அதன் வேறுபாட்டின் மூலமே குறைவு அல்லது கூடுதல் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

            சாதாரணமாக பிளேட்லெட்ஸ் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. டைஃபாய்டு, மலேரியா, டெங்கு போன்ற வைரஸ்களால் குறைவது உண்டு. சில நேரங்களில் கருவுறுதலுமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. மேலும்  pre-eclampsia என்று சொல்லக்கூடிய ஒரு நோயும் காரணமாக அமைந்து விடுகிறது.       
    
            ப்ரி எக்ளம்ஸியா என்னும் இந்நோய் கருவுற்ற பெண்களுக்கு, அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு உண்டாகக் கூடிய நோய். பொதுவாக ஒருவருக்கு இருப்பின் கருவுற்று இருக்கும் போது அது  தாய் சேய் இருவரையும் பாதிப்பது தானே சகஜம். ஆகையால் இருவருக்கும் தோன்றுவதும் உண்டு. இந்நோய் பல கண்டறிய முடியாத பல நோய்களுக்குக் காரணமாக அமையும். உதாரணமாக இரத்த அழுத்தம், சிறுநீரில் உப்பு அதிகரித்தல் (proteinuria) முதலிய பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.  
          
            பிளேட்லெட்ஸ் குறைவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அல்லது அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பார்த்து விடுவோமா?

            தலைவலி, அடிக்கடி காய்ச்சல், குமட்டல், மேல்வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இவற்றை பிளேட்லெட்ஸ் குறைந்ததற்கான அடையாளமாகவும் கொள்ளலாம்.

            சரி அடையாளம் கண்டாகிவிட்டது. இரத்த உறை அணு குறைவைச் சரிப்படுத்த வேண்டுமே. இது வரை பிளேட்லெட்ஸின் தன்மை, பயன் முதலியவற்றைத் தெரிந்து கொண்டோம்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
 வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்பார் திருவள்ளுவர். எந்த நோயையும் தீர்க்க இயலாது. அதன் தன்மையைத் தணிக்க இயலும் என்பதே அவரது கருத்து. அதே போல இங்கும் பிளேட்லெட்ஸை அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.

            1. குறைவாகவும் சத்தற்ற உணவாலும் பிளேட்லெட்ஸ் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சிறிதளவே பிளேட்லெட்ஸ் குறைவாக இருப்பின் நல்ல சத்தான பலதரப்பட்ட உணவின் மூலம் பிளேட்லெட்ஸை அதிகரிக்கலாம்.

            2. மலேரியா, டைஃபாய்டு, டெங்கு போன்ற வைரஸ்களால் பிளேட்லெட்ஸ் குறைந்திருந்தால் முதலில் அந்த வைரசுகளைக் கட்டுப் படுத்துவதால் பிளேட்லெட்ஸை அதிகரிக்கச் செய்யலாம்.

            3. அதிக அளவு என்றால், எந்த வைரசால் பிளேட்லெட்ஸ் குறைந்திருக்கிறது என்பதும் எல்லா ஆய்வும் செய்தும் சில சமயங்களில் அறிய முடியாமல் போகிறது.

மேற்கூறிய பெண்ணுக்கு எல்லா டெஸ்டும் எடுத்தும் என்ன வைரஸ் என்று அடையாளம் காண இயலவில்லை. இறுதியில் மருத்துவர்கள் அனானமஸ் (Ananamous) வைரஸ் என்று கூறி முடித்து விட்டார்கள்.

            இது போன்ற நேரங்களில், இரத்த வங்கிகள் போலவே பிளேட்லெட்ஸ் வங்கிகள் உள்ளன. அங்கிருந்து பிளேட்லெட்ஸ் பெற்று இரத்தம் ஏற்றுவது போலவே இதனையும் ஏற்றுவதே உடனடியாகச் செய்ய வேண்டியது.

ஆக எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. எனவே அஞ்ச வேண்டிய நிலைமை இப்போதெல்லாம் இல்லை என்றே கூறலாம். ஆனால் நோய் இன்னது என்று சரியாகக் கண்டு பிடித்து நோய்க்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது. சரி அடுத்த இன்னொரு புதிய செய்தியோடு ஓடி வரேன்…………… அதுவரை… டா…. டா….(இந்தக் கட்டுரை செப்டம்பர் 1 - 15 நாளிட்ட குமுதம் ஹெல்த் இதழில் சிறந்த மருத்துவக் கட்டுரையாகத் தேர்வாகிப் பரிசு பெற்றுள்ளது. நன்றி குமுதம் குழுமம்)
 

2 கருத்துகள்:

  1. நோய் இன்னது என்று சரியாகக் கண்டு பிடித்து நோய்க்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது.

    பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு