“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

“மருத்துவ சேவை என்பது தாய்மை உணர்வு



மனம் திறக்கிறார்... திருமதி. பாரதி ரெட்டி

மேலாண்மை இயக்குநர்.. விஜயா ஹெல்த் செண்டர்.

சென்னையிலேயே மிகப்பிரபலமான மருத்துவமனை. பரம ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை நம்பி வரும் வரும் ஒரே மருத்துவ மனை விஜயா. இன்னும் கூறப்போனால் வடபழனி என்றால் முருகன் கோவிலுக்கு அடுத்து  எவருக்கும் பளிச்சென்று நினைவுக்கு வருவது விஜயா ஹெல்த் செண்டர்தான். இவ்வளவு பெரிய, அனைத்து வசதிகளும் நிறைந்த, அழகிய ஒரு ஆலயமாகத் திகழும் மருத்துவமனையின் இயக்குநராக இருக்கிறீர்கள். அதுமட்டுமன்று மருத்துவ கூடடாண்மை பொறுப்பில் (Medical corporate) புகழ் பெற்றுத் திகழும் பெண்கள் மிகச்சிலர். அதில் தாங்கள் முக்கியமானவராகத் திகழ்கின்றீர்கள்.

இந்த இலக்கை நீங்கள் எப்படி எட்டினீர்கள்?
தாங்கள் கூறுவது உண்மைதான் சென்னையில் முதன்மையான ஹெல்த் செண்டராக இது திகழ்கிறது என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். இந்த மருத்துவமனை என் தாத்தா திரு பி. நாகிரெட்டி அவர்களால் 1972ல் விஜயா மருத்துவ மனையாக தொடங்கப்பெற்றது. 1987ல் விஜயா ஹெல்த் செண்டராக விரிவடைந்தது. 1996ல் விஜயா ஹார்ட் ஃபெளண்டேஷனாக பொலிவு பெற்றது. 1999ல் விஜயா இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராமா அன் ஆர்த்தோபெடிக்ஸாக மலர்ந்தது. இன்று சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இரண்டாயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் இருபதாயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தனி ஒருவரால் எந்த நிறுவனமும் சிறப்படைந்து விடாது. இந்த அளவு விஜயா ஹெல்த் செண்டர் சிறப்படைய காரணம் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியவர்கள்தான். இவர்களைப் பணியாற்றுபவர்கள் என்று கூறவது பொருந்தாது. இங்கு சேவை புரிபவர்கள் என்றுதான் கூறவேண்டும். இங்கு எவரும் சம்பளத்திற்கு வேலைக்கு வருகின்றோம் என்ற எண்ணத்துடன் எவரும் வருவதில்லை. நீங்கள் கூறியது போல மக்கள் தெண்டே மகேசன் தொண்டு என்பதை அறிந்து ஒரு ஆலயத்திற்கு வரும் பக்தியோடு வந்து மக்கள் சேவை ஆற்றுகின்றனர். அனைவரும் இணைந்த கரங்களாய் செயல்பட்டதன் விடையே எங்கள் மருத்துவமனை சென்னையின் நம்பர் ஒன் மருத்துவ மனை என்று பெயர் எடுத்துள்ளது.
மருத்துவத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தங்களுக்கு எதனால் வந்தது?
நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். அது ஏனோ பலிக்காமல் போனது. என் கல்லூரிப் படிப்பை டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பிறகு சென்னை வந்தேன். மருத்துவ மனையின் பொறுப்புகள் எனக்காகக் காத்திருந்தது போல இருந்தது. உடனே அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டேன். என் கண்கள் மருத்துவ மனையை எப்படி முன்னேற்றுவது? மக்களின் நல்லாதரவைப் எப்படிப் பெறுவது? பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் கனவு காணவில்லை. அதே சமயம் எப்படி மக்களுக்குத் தொண்டாற்றுவது? மருத்துவத்தை ஏழைகளின் இதயத்தை எட்டச் செய்வது எப்படி? என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன். கண்ணில் தெரிந்த காட்சிகள் என் கைவசப்பட்டன விரைவில் என்றே கூறுவேன்.

தேசிய அளவிலான அங்கீகாரம் (N A B H Accredited) உங்கள் மருத்துவ மனைக்குக் கிட்டியுள்ளதே. அதற்காகப் பிரத்தியேகமாக முயற்சிகள் மேற்கொண்டீர்களா?

     நிச்சயமாக. இந்த அங்கீகாரம் உலக சுகாதார தரநிர்ணய குழுவால் (International Society for Quality in Healthcare (ISQua) அளிக்கப்படுகிறது. உலக அளவில் பனிரெண்டு நாடுகளில் மட்டுமே இந்த அங்கீகாரம் பெற்ற மருத்துவ மனைகள் உள்ளன. சென்னையில் ஓரிரு மருத்துவ மனைகளுக்கே இந்த அங்கீகாரம் கிட்டியுள்ளது. அதில் எங்கள் மருத்துவ மனையும் ஒன்று. இந்த அங்கீகாரம் பெற சற்று சிரமப்பட வேண்டி இருந்தது. இந்த அங்கீகாரத்திற்குப் பல கட்ட ஆய்வுகள் நடக்கும். பல்வேறு மருத்துவ பிரிவுகள், தகுதி வாய்ந்த மருத்துவர்கள், நவீன மருத்துவக் கருவிகள், அறைகள் முதல் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வகை வசதிகள் இவை  அனைத்தும் உள்ளனவா என்று பல முறை சோதித்த பின்னரே அங்கீகாரம் வழங்குவர். இங்கு மீண்டும் இம்மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நான் கூறியே ஆகவேண்டும். அனைவரின் ஒத்துழைப்பின் மூலமே இந்த அங்கீகாரம் எங்கள் மருத்துவ மனைக்குக் கிட்டியது.

சிறு மருத்து மனையைப் பராமரிப்பதே கடினம். இவ்வளவு பெரிய மருத்துவ மனை. இங்கு மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என்னும் மூன்று நிலையில் உள்ள மக்களைத் தாங்கள் நிர்வகிக்க வேண்டும். இதனை எப்படி கையாளுகின்றீர்கள்?
இந்த வினாவுக்கு விடை கூறுவது மிக எளிமை. அவரவர்களின் பிரச்சனை வரும்போது அவரவர்கள் நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அப்போது சரியான புரிதலுடன் அவர்களை அன்புடன் நடத்த முடியும். மருத்துவர்களும் எல்லா வகை உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள் என்று எண்ணுவேன். நோயாளிகள் பாவம். சுமக்க முடியாத வேதனையையும் எக்கச்சக்க நம்பிக்கையையும் சுமந்து வருகின்றார்கள் என்று எண்ணிப்பார்ப்பேன். ஊழியர்கள் இம்மருத்துவ மனையின் உயிர்நாடிகள் என்று எண்ணுவேன். நம்பிக்கையின் பலன் அன்பு அன்பின் பலன் சேவை. சேவையின் பலன் அமைதி”  என்று அன்னை தெரசா கூறுவார். அந்த அன்பு சேவை என்னும் இரண்டின் அடித்தளத்தில் அமையும் நிர்வாகம் அழகாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை.

உங்கள் மருத்துவ மனையின் மருத்துவர்களுக்கு அல்லது மருத்துவர்கள் மூல்லம் நோயாளிகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
நோயாளிகள் உள்ளே நுழையும் போது என்ன ஆகுமோ என்னும் அச்சத்துடன் வருவார்கள். வந்தபின்பு தம் நோயை அகற்றி ஆறுதலும் தேறுதலும் மட்டும் அவர்கள் உணர வேண்டும். அதாவது விஜயா ஹெல்த் செண்டர் என்றாலே A word of comfort என்பதை எந்த வித நோயாளிகளாக இருந்தாலும் மருத்துவ மனையின் எல்லா இடங்களிலும் அவர்கள் உணர வேண்டும். இது ஏதோ பலகையில் எழுதி மாட்டி வைப்பது அல்ல. பஜனை செய்கிற வாயை விட பணிவிடை செய்கிற கை உயர்ந்தது என்பார் சாரதா தேவி. அதே போல நோயாளிகளிடம் மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை காட்டும் அன்பு, அரவணைப்பு, நேசிப்பு, பணிவிடை ஆகியவற்றின் வழி இதனை உணரச்செய்வது.
மற்றொரு முக்கியமான வினா. உங்கள் மருத்துவமனை பணியாளர்களுக்குச் சலுகைகள் மட்டுமல்லாமல் பணியாளர்களாலேயே பாராட்டுப்பெறும் அளவுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து..
இதுவும் ஒரு எளிய தத்துவமே. உரிமைகள் தாராளமாக வழங்கப்படும்போது நம் கடமைகள் முழு மனதுடன் நிறைவேற்றப்படும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. என்பதைச் சிறிது மாற்றி பலனை முதலிலே கொடுத்து விட்டால் கடமை தானாக நிறைவேறும் என்பது என் தத்துவம். கடைபிடித்தேன். என் மருத்துவ மனை பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் எவ்விதத்திலும் எட்டாமல் போய்விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறேன்.
இன்னும் நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம் அல்லது எதிர்காலத் திட்டம் என்ன?
     சென்னை முழுவதிலும்  விஜயா லேப் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளேன். அகில உலக மெடிகல் டூரிசம் நடத்தி வெளிநாட்டு உயர் மருத்துவர்களை இங்கு வரவழைத்து கருத்தரங்குகள் நடத்த வேண்டும் என்பது அடுத்த திட்டம். நோயாளிகள் என்ற அளவிலும் வெளிநாட்டவர்க்கு சலுகை கொடுத்து இந்தியாவில் மருத்துவத்துறை தங்கள் நாட்டைவிட சிறப்பாக விளங்குகிறது என்பதைக் காட்டவேண்டும். இப்படி பல...

உங்கள் மருத்துவ மனைக்கு ஆந்திராவில் இருந்து வந்து சிகிச்சை பெற்று திரும்புவோரின் எண்ணிக்கை அதிகம். இதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?
உண்மைதான். ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சிகிச்சை பெறுபவர்கள் இங்கு அதிகம். இது எனக்கும் புரியாத ஆச்சரியமான புதிராக இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சிற்றூர் எங்கள் ஊர். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களுக்கென்று தனியாக எதுவும் செய்வதில்லை. மற்ற நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்குவது போலவே அவர்களுக்கு மருத்துவம் வழங்குகிறோம். இருந்தாலும் இது எப்படி என்று தெரியவில்லை. ஒன்று மனதில் தோன்றுகிறது. அதிகமான நோயாளிகள் அங்கிருந்து வந்து எங்கள் மருத்துவ மனையைப் பெருமை படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

நிறைவாக.. ஒரு புறம் சமூக சேவை. மறுபுறம் மருத்துவ தொண்டு, இன்னொரு புறம் திரைப்படம் என்று எல்லா துறைகளிலும் நீங்கள் உங்கள் கால்தடங்களைப் பதித்துள்ளது குறித்து....
என் தந்தையார் திரு நாகிரெட்டி திரைத்துறையில் அழுத்தமாகக் கால்தடம் பதித்தவர் என்பது தமிழகம் அறிந்தது. அவர் வழியில் நானும்... ஒரு படத்தைத் தயாரித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. தனுஷ் கதாநாயகராக நடித்த வேங்கை என்னும் திரைப்படத்தைத் தயாரித்தேன். அதுவும் வெற்றிப்பாதையிலேயே என் பயனத்தைச் செலுத்தியது. கலைத்துறையிலும் ஏதேனும் சாதனை செய்ய ஆசை. எல்லாம் ஒரு நம்பிக்கையில் எடுத்த வைத்த அடிதான். நன்மையாகவே முடிந்தது. இப்பயணமும் மக்கள் ஆதரவில் இனியும் இனிதாகத் தொடரும் என்றே நினைக்கிறேன். 

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.




5 கருத்துகள்:

  1. விஜயா மருத்துவமனை ஏன் இவ்வளவு பிரபலம் என்பதை புரிந்து கொண்டே.. நோய்க்கு முதலுதவியாக முதல் சிகிச்சையாக அன்பும் ஆறுதலும் பல டோஸ் தருகிறார்கள்... நல்ல பகிர்வு ஆதிரா.....

    பதிலளிநீக்கு
  2. தெரியாத விவரங்கள், பின்னணி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இந்த மாத இதழிலின் சிறப்பு இவரது பேட்டிதான். சினேகிதியிலும் ஹெல்த் ஸ்பெஷலிலும். அதுவும் பதிவாக இருக்கட்டுமே என்றுதான் பதிவிட்டேன்.

    நானறிந்தவரை நடுத்தர வர்க்கத்தினருக்கு உரிய மருத்துவமனை, இதய நோயாளிகளுக்கு உரிய மருத்துவ மனை தி ஒன் அன் ஒன்லி விஜயாதான்னு சொல்வேன்.

    பிறந்தநாளிலும் ஊக்கப்படுத்தும் கருத்து சமூக சேவை புரிகின்றீர்கள். கருத்துக்கு நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு அப்பாதுரை,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி... மீண்டும் வருக....

    பதிலளிநீக்கு