“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 13 ஜூன், 2010

பாட்டுத்திறத்தாலே....


வெற்றிகளைப்பாடி, வீரத்தைப்பாடி, போக்களத்தைப்பாடி கொடைப்பறும் நம்பிக்கையை ஊட்டிய தமிழ் சங்ககாலத் தமிழ். வழங்கி வழ்ங்கிச் சிவந்த கரத்தினையும், வாங்கி வாங்கிச் சிழித்த திறத்தையும் , வரிசை வரிசையாகப் பாடி பரிசுகளைக் குவிக்க ஏதுவாக இருந்த தமிழ் பழந்தமிழ். சங்க காலத்திற்குப் பிறகு, பக்தி காலத்தில் பாலோடு ஞானத்தைச் சம்பந்தருக்கு ஊட்டிய கொஞ்சு தமிழ், நாவுக்கரசரின் சூலை நோயைப் போக்கிய பக்திச் சுடர் கமழும் நெஞ்சு தமிழ், ஓலை காட்டி சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி ஆட்கொண்ட நெஞ்சு தமிழ், பிட்டுக்கு மண் சுமந்து பக்தனைக் காத்த விஞ்சு தமிழ் ஆகிய அத்தனை தமிழும் மக்களைப் பார்க்கத்தவறியது. தமிழ் மன்னனைப் பார்த்தது;: மகுடங்களைப் பார்த்தது:: மணி முடியைப் பார்த்தது: இறைவியைப் பார்த்த்து: இறைவனின் திருவிளையாடல்களைப் பார்த்தது: ஆனால் மக்களின் தேவைகளைப் பார்க்கத்தவறியது. சஙக இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியலைச் சித்தரித்தார்களே அன்றி அவர்களின் தேவைகளை உணர்த்துகின்ற கவிதைகள் காணக் கிடைத்தில.

தமிழோடு தமிழாக, மக்கள் தங்களோடு தமிழாகக் கலந்த காலத்தை உருவாக்கிய கவிஞன் மகாகவி பாரதி என்று துணிந்து கூறலாம். அவன் காலத்தில்தான் தமிழ் அனைவருக்கும் பொதுவுடைமை ஆயிற்று. “எங்கே தமிழ்? எங்கே தமிழ்? என்று எந்தமிழர் ஏங்குகையில் இங்கே தமிழ் என்று இழுத்து வந்தாய் நீ வாழ்க” என்று கண்ணதாசன் பாராட்டிக் கூறியது இமாலய உண்மையன்றோ!!

”தமிழரின் உயிர்நிகர் தமிழ் நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தரும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்”

தமிழுக்கு அருவியின் துள்ளல் உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழுக்கு அமுதின் சுவை உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழில் அணலைக் காட்டியவன் பாரதி. தமிழில் அகிலின் மணத்தைக் கூட்டியவன் பாரதி. வாளின் கூர்மையும், வழியும் பனியின் குளிர்மையும் தமிழுக்கு உண்டு என்று சொன்னவன் பாரதி. மின்னல் வரிகளையும், மீட்டும் இடிமுழக்கச் ச்ந்தங்களையும் “தீம் தீம் தீம்” எனக் குவித்தவன் பாரதி. அந்தப் பாரதியின் கண்கள் ஆங்கில ஆட்சியில் தீப் பொறிகளைக் கொட்டியதால் அவன் கவிதைகள் எல்லாம் கூர் தீட்டிய வாட்களாயிற்று.

”ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி”

என்ற இந்த பூகம்ப வரிகளால்தான் பாரத மாதவை புத்தியிர் ஊட்டினான். ”எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே த்ரமன்றோ” என அவர் பூனையையா பாடினார்? சாதி, மத, இன, மொழி என்ற வேறுபாட்டால் பிரிந்து இருந்த பாரதச் சேனையைப் பாடினார். அந்த எழுத்துதான் பரங்கியரைப் பயமுறுத்தியது. இந்தியாவை ஆளவேண்டும், இன்னும் ஆளவேண்டும் என்ற ஆசை கொண்ட போதெல்லாம், வெள்ளைப் பரங்கியரைப் பாரதியின் மீசை வெறுட்டியது. இந்தியர்கலை அடிமையாக்க வேண்டும், அடிமையாக்க வேண்டும் என்று வெள்ளையர்கள் ஆசைபட்ட போதெல்லாம் அவர்களைப் பாரதியின் கவிதை ஓசை மிறட்டியது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று விடுதலைக்கு முன்பாகவே நம் தலையில் மணிமுடியைத் தரித்தவன் பாரதி. தேசப்பற்றும் தெய்வீகப்பற்றும் கொண்ட அவனால் தமிழ் வாசம் பெற்றது. பராசக்தியைக்கூட அவன் பாரத மாதாவுக்காகவே வேண்டினான. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” எனச் சொல்லிச் சொல்லி அவன் துள்ளிய துள்ளல் அருவியில் இன்று விடுதலை பெற்ற பாரத மாதா மஞ்சள் குளிக்கிறாள்.

ஆன்மீகத்தைப் பாடிய பாரதி ஆயிரம் தெய்வங்களா? என்று அதிசயத்தான். சக்தி வழிபாடே சஞ்சலத்தைப் போக்கும் என்றான். விடுதலை வேட்கையில் வெள்ளையனை விறட்ட விருத்தப்பாக்களைப் பாடியவன், மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமையைப் போக்க அகவல்களைச் சிந்தினான். இத்ற்கெல்லாம் மணிமுடியாக அவன் பாரில் எவரும் மனத்தில் எண்ணியும் பாராத பெண்ணுரிமைப் பேருணர்வைப் படைத்தான். பெண்ணைப் பெண்ணாகவா பர்த்தான் பாரதி?

”உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவ ளென்று அறியீரோ?”

என்று தெய்வ நிலைக்கு ஏற்றினான். அவன் பெண்ணைச் சமைப்பவளாகவோ சமைந்தவளாகவோ பார்க்கவில்லை. இந்த உலகைச் சுமப்பவளாக அன்றோ பார்த்தான்.அதனால்தான்

”பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையே இல்லை

என்று உறுதிபடக் கூறினார். பாரதி கொண்ட பெண்ணுரிமைத்தீயின் மிச்சமே பாவேந்தரின் பெண்ணுரிமை என்றால் அது மிகையில்லை.
பள்ளித்தளங்களைக் கோயிலாக்கும் அற்புத முயற்சியைச் செய்து, அந்து வளர் மனிதப் பயிர்களுக்கு,

சொல்லின் இந்து தமிழ்ச் சொல்லே
அதனைத் தொழுது படித்திடடி பாப்பா”

என்று நெஞ்சில் மழலை மனதில் நெய்மணத்தைத் தடவிய பாரதி, தமிழுணர்வைத் தமிழ்நாட்டில் பெய் மழையாகப் பெய்தான். எந்த மொழியும் தெரியாமல் “தமிழ் எங்கள் உயிர்” என்று வறட்டுக் கூச்சல் இடாமல், எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்ந்து,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணேன்”

என்று சொன்ன பாரதியின் வாக்கு நம் சிந்த்னைக்கு உரியது. அந்தச் சிந்தனையின் விளைவுதான் பாவேந்தர் பார்வையில்
பைந்தமிழ்ப் பாகனாக, செந்தமிழ்த்தேனியாக, சிந்துக்குத் தந்தையாக, குவிக்கும் கவிதைக் குயிலாக பாரதியார் மிளிர்ந்தார்.

சுவை புதிது, வளம் புதிது, பொருள் புதிது, சொல் புதிது, என்று எதிலும் புதுமை படைத்த பாரதி யாப்புக் கடலில் மூழ்கி முத்தெடுக்கப் பழகியவன். புதுக்கவிதையில் முறுவலித்தான். அவன் காதலித்தது மரபுக்கவிதையை என்றாலும் கண் சிமிட்டியது புதுக்கவிதையில்.

”நமக்குத் தொழில் கவிதை: நாட்டுக்குழைத்தல்: இமைப்பொழுதும் சோராதிருத்தல்” இதுவே அவன் தாரக மந்திரம். இந்த அடிகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து பாரதி என்றாலே கண்களில் ஈரத்தைக் காட்டும் அடிகள். மனிதர்கள் பிறப்பார்கள்; ஈசல்களாய் வாழ்ந்து இறப்பார்கள்; ஆனால் கவிஞர்கள் பிறப்பார்கள்; என்றும் இருப்பார்கள் நித்தியமாய். காலனைக் காலால் உதைத்த பாரதியும் இருக்கிறான் எல்லோர் மனத்திலும் சத்தியமாக.

இன்று தமிழகத்து மேடைகளே அன்றி பிற மண்ணிலும் உதிரும் சுடர் வரிகளில் பாரதியின் வரிகளே மின்னலாக மின்னுகின்றன. புனையும் கவிதைகளில் பாரதியின் மீசை துடிப்பே அதிகமாகக் காணலாகிறது. புலவர்களின் விழித்திரையில் பாரதியின் ஒளித்திரையே மிளிர்கிறது வண்ண மயமாக. எழுதுகோல்கள் திறக்கும் போதெல்லாம் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த பாரதியே சிறகு விறிக்கிறான். எண்ணத்தில் சிரிக்கிறான்; எழுத்தில் சிரிக்கிறான்; கருத்தில் சிரிக்கிறான்; கற்பனையில் சிரிக்கிறான். தமிழை உச்சரிக்கும் போது உதடுகள் ஈரமாவது போல பாரதியின் நினைவுகள் நம் நெஞ்சங்களில் ஈரமாகவே இருக்கின்றன. அந்த பாரதி என்றும் நம்மோடு! நாம் என்றும் அவனோடு!!

2 கருத்துகள்:

  1. பாரதத்தில்
    ரத்தமின்றி
    திலகமிட்டவன்...

    பாமரனையும்
    ரசிக்கவைத்து
    திறம்பட செய்தவன்...

    அவனை பற்றி எழுத இங்கு பக்கங்கள் போதாது...
    அவன் புகழ்பாடி என்றும் இனிதாய் பழகுவோம்...

    அவனை பற்றிய தனக்ளின் கட்டுரைக்கு என் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. கவிதையுடன் வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும் வாசன்...

    பதிலளிநீக்கு