“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 9 ஜூன், 2010

காக்க! காக்க! இதயம் காக்க!


இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள். தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.

உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?

எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.

இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.

நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம.....கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.

பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.

”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”

இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..

இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.

இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..

இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”

ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.

”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”

புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.

“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..”

அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?

மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....



2 கருத்துகள்:

  1. இதயம் காத்தல் பற்றிய தகவலுக்கு நன்றி...

    கைப்பிடி அளவு இதயம் என்றாலும் எண்ணிலடங்கா செயல்களும், எண்ணங்களும் அதில்...

    பெண்ணின் வசம் அல்ல பெண்களின் வாசம் நாடாதவரை இதயம் பத்திரமாக... உடலும் உள்ளமும் நலமாக...

    பதிலளிநீக்கு
  2. இல்லை வாசன். பெண் என்று இல்லை. இன்பமும் துன்பமும்.. நம் கைகளில். பெண் மட்டுமல்ல எதுவும் அளவுடன் இருக்கும் வரை இனிமையே... அளவை மீறும்போது அமிர்தமும் நஞ்சாகத்தானே மாறும்.. கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..

    பதிலளிநீக்கு