“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 4 ஜனவரி, 2014

இயற்கையோடு கலந்த வீரிய மனித விதை


சோழ நாட்டின் வீரிய விதை…
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்
இயற்கையோடு கலந்துவிட்டது...

காற்றாக...மழையாக...வெயிலாக...
அவர் நம்மோடு இருப்பார்...
அவர் நம்மோடு விதைப்பார்..
அவர் நம்மோடு நாற்று நடுவார்...
அவர் நம்மோடு களை எடுப்பார்..
அவர் நம்மோடு அறுவடை செய்வர்...

விதைநெல்லுக்கு என்றும் இல்லை மரணம்..
- பாவலர் பழநிபாரதி
சோழ நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது வானளாவிய தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், காவிரி பாயும் பசுமையான கழனிகள், யானை கட்டி போரடித்த வேளாண்மை. ஊருக்கே உணவளித்த உழவர்கள். இவற்றைப் போலவே மக்களினம் தொழுது வணங்க வேண்டிய பெருமை உடையவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பசுமையைப் பறை சாற்றும் இவர் தம் கருத்துகளைப் போலவே பசுமையான உடை. எந்தப் பயனும் கருதாது தம்மை அளிப்பவருக்கும் தம் பயனைத் தரும் இயற்கையைப் போலவே இவரது தியாக உள்ளம். இயற்கையின் பசுமையை நேசிக்கும் எவரது மனமும் இவரை நேசிக்காமல் இருக்க முடியாது. 
“சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் நமக்கு சோறு போட்ட விவசாயிகளாகத்தான் இருப்பார்கள், என மனசு கனக்கச் சொன்னவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. (விவசாயம்) பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள வேளாண் மண்டல ஆய்வு மையத்தில் 1963 ஆம் ஆண்டில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 6 ஆண்டுகள் பணியாற்றிய இவர் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரம், ரசாயன பூச்சிக் கொல்லி பயன்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாகத் தாம் வகித்து வந்த அரசு பணியிலிருந்து விலகினார்.
உலக நாடுகள் நாளுக்கு நாள் புவி வெப்பமடைதல் குறித்து கவலையடைந்து, அதன் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், இதுகுறித்து தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இயற்கை வேளாண்மையைப் பரவலாக்குவதன் மூலம் இப்பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர். மீத்தேன் எரிவாயு திட்டத்தால் சோழ மண்டலம் வீணாகிவிடும் என்று தொடர்ந்து அதனை எதிர்த்துப் போராடினார்.
          தொடர்ந்து எழுத்து, காட்சி முதலிய ஊடகங்களின் வாயிலாக, வேளாண்மையில் வீரிய மிக்க விதைகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு எதிராகவும், இயற்கை வழி வேளாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் வந்தார்.  மரபணு மாற்ற விதை களுக்கு எதிராகத் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வந்தார்.
          ‘விதைகளே பேராயுதம்’ என்னும் பாரம்பரிய விதை பேரியக்கத்தை உருவாக்கியவர். நெல் ரகங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. இந்தப் பாரம்பரிய விதைகளைப் பயன் படுத்துவதால் பூச்சி மருந்துகள், உரம் முதலியவை தேவையில்லை. ஆகையால் அரசிடம் கையேந்தாமல் உழவர்களின் இயற்கை விதையான பேராயுதத்தைப் பயன் படுத்ததல் வேண்டும் என்ற செயல்பாட்டை நடைமுறை படுத்தியவர்.
கரூர் மாவட்டத்தில் "வானகம்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்த அவர் அதன் மூலம் இயற்கை விவசாயத்தை கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வதுடன், அவ்விவசாயம் குறித்த முறையான பயிற்சியையும் அளித்து வந்துள்ளார். தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். நம்மாழ்வார் பேரிகை என்ற இயற்கை  வழி வேளாண்மை மாத இதழையும் நடத்தி வந்தார்.  
          பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்துகளையும் முன் வைத்தார். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவு விஷமாகி விட்ட இன்றைய நிலையைச் சுட்டிக் காட்டி இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் பயணம் செய்தவர். ரோப்பா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வந்தார்.
          பசுமை ஆடை அணிந்த விவேகானந்தராக விளங்கிய நம்மாழ்வார் அவர்கள், இளைஞர்களே இந்நாட்டின் எதிர்காலம். அவர்களின் கரங்களில் ஒப்படைப்பதால் மட்டும் புதியன உருவாவதைப் போலவே பழையன மீண்டும் மீட்கப் படும் என்பதை உணர்ந்து தம் பணியை அங்கிருந்து தொடங்கினார். இளைஞர்கள் பலரை இயற்கை வேளாண்மையில் ஈடுபடுத்தினார்.
சுற்றுச்சூழல் சுடரொளி,  காந்தி கிராமப் பல்கலைக்கழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், கிராமப்பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்,  மக்கள் சிந்தனையாளர் விருது, பாரதியார் விருது முதலியவற்றைப் பெற்றுள்ளார். தமிழப் பத்திரிகைகளில் தொடர்நது எழுதி வந்த இவர் தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுசூழல் இயக்கம் ஆகியவற்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மனிதன் செயற்கையை விடுத்து இயற்கையோடு இயைந்த நலவாழ்வு வாழ வேண்டும் என்று அயராது உழைத்த சோழ நாட்டின் வீரிய மனித விதை இயற்கையோடு கலந்து விட்டது. இயற்கையின் பேரழிவை எதிர்த்துப் போராடிய அந்தத் தொண்டுள்ளம் திங்களும் உடுக்களும் உலாவரும் இரவின் மடியில், இயற்கையின் நிழலில் நீள் துயில் கொண்டுள்ளது.




 ("தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக 30.12.2013 அன்று இரவு  பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டி கிராமத்தில்  இயற்கை எய்தினார்) 

(நன்றி சோழநாடு கூட்டமைப்பு மாத இதழ்)

2 கருத்துகள்:

  1. மாபெரும் மனிதர்... அவரின் இழப்பு ஈடு இணையற்றது... இருந்தாலும் பல இயற்கை வேளாண் நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html - இந்தப் பதிவு அவர்க்கு சமர்ப்பணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு