சனி, 31 மார்ச், 2012
புதன், 28 மார்ச், 2012
அடை காக்கிறேன் ஏக்கச் சூட்டில்!
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்
எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை
நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
என் நெஞ்சின்
ஏக்கச் சூட்டில்!
திங்கள், 26 மார்ச், 2012
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும்
நாடு சுதந்திரம் அடைந்தபின் ஒருநாள் நள்ளிரவு அண்ணல் அப்பேத்கரைச் சந்தித்த வெளிநாட்டுச் செய்தியாளர் அந்த நள்ளிரவு நேரத்திலும் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களிடம், ”காந்தி, நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம். அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று வியந்து கேட்டார்.
“அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது
ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.
என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது
எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்”
என்று பதில் கூறினார் அம்பேத்கர். விழியிருந்தும் ஒளியிழந்து, உயிர் இருந்தும் உணர்விழந்து, மதியிருந்தும் மனிதராகக் கூட மதிக்கப் படாத ஏற்றத் தாழ்வு மிகுந்த சமுதாயத்தில், ஒவ்வொரு விடியலிலும் கையில் கோணியுடன் நாணி நின்ற அந்தச் சிறுவன் தாழ்த்தப்பட்டோர் உயர உயர ஏறிப்போக ஏணியாக மாறுவதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டதில் பெருவியப்பு ஏதுமில்லை. அதனால்தான் ஒரு மேல்தட்டு மனிதனாலும் எட்ட இயலாத அந்த உயரத்தை அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்ட கீழ்த்தட்டு இனத்து அம்பேத்கர் அவர்களால் எட்ட இயன்றது. இது எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாத ஒரு ஏற்றம்.
மனிதனை மனிதன் மதிக்கின்ற உறுதியான பண்பாடு அற்ற காலத்தில் அதாவது தன் எச்சிலைக்கூடத் வெளியில் துப்புவதற்கு அனுமதியற்று எச்சில் துப்பும் ஒரு கலயத்தைத் தன் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு சென்றுள்ளனர். தெருக்களில் இவர்கள் நடந்தால் பாதை தீட்டாகிவிடும் என்பதால் துடைப்பத்தைத் தம் இடுப்பில் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். உயர் சாதிக்காரர்களுக்கு இணையாக முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்ட அனுமதியற்ற ஆண்களும் மார்பை மறைக்கும் மேலாடையை(ரவிக்கையை) அணிய அனுமதியற்ற பெண்களுமாக அடக்குமுறை நிறைந்த இருட்டுலகில் வாழ்ந்து வந்த இனத்தில் ஓர் ஒளிவிளக்குத் தோன்றி தம் இனத்தின் பண்பாட்டை அடியோடு மாற்றியமைக்கப் போராடியது. அப்போராட்டத்தின் முடிவு வெற்றியா என்பதே இன்றைய கேள்வி?
ஆடு மாடு எங்கு வேண்டுமானாலும் திரியலாம். ஆனால் தலித் என்று அழைக்கப்பெற்ற மனிதனின் மூச்சுக்காற்றும் தீட்டாகப் போனது. மகாராட்டிரத்தில் காற்றுத் தீட்டாகிவிடும் என்று காலை ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டமும் இருந்த தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இவர்கள் வீதியில் நடமாடினால் ஒரு மணியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அந்த ஒலி கேட்டவுடன் பிற இனத்தவர்கள் எதிரில் வராமல் ஒதுங்கிச் செல்வார்களாம். அந்த மகாராட்டிரத்தில் மகார் என்ற இனத்தில் பிறந்த அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அவர் தலித்திய இயக்கங்களைத் தொடங்கவும் தொடரவும் காரணமாக அமைந்தன.
அம்பேத்கர் பரோடா அரசில் உயர் பதவி வகித்த போதிலும் இவருக்குக் கீழே பணிபுரிந்த உயர்சாதியினர் இவரை நடத்திய விதம் இங்கே குறிப்பிடத்தக்கது. எல்லோரும் பணியாற்றும் அறையில் அமர்ந்து பணியாற்றவும் தண்ணீர் அருந்தவும் இவருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இந்நிலை இவரைச் சாதியத்தை ஒழிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் எழுச்சியைத் தோற்றுவித்தது. மகார் இன மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சாதிய அமைப்பைக் கடுமையாகச் சாடும் கபீர்தாசருடைய பக்தி இயக்கமும் பூக்கள் கட்டும் சாதியில் (மாலி) பிறந்த பூலே உருவாக்கிய சத்திய சோதக் சமாஜம் என்னும் இயக்கமும் அதற்கு உதவின என்று கூறலாம்.
இப்பின்னணியில் அம்பேத்கரின் சாதிய ஒழிப்புப் போராட்டம் குறித்த கருத்துகளைப் பல நூல்களில் கண்டாலும் ’இந்தியாவில் சாதிகள்’, ‘சாதி ஒழிப்பு’, ‘சூத்திரர் யார்’, ‘தீண்டத்தகார்’ ஆகிய அவரது நான்கு படைப்புகளில் அவரது அகமனம் ஆற்றிய போராட்டங்கள், அவர் பட்ட வேதனைகள், அதன் காரணமாக அவரது புரிதல்கள், அதனால் மக்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் என பெரியதொரு விழிப்புணர்வு எழுத்துப் பிரச்சாரத்தைக் காணலாம்.
வருணாசிரம முறையில் தீண்டத்தகாதவர் உருவாக்கப் படவில்லை. அங்கு அசுத்தமானவர்கள், அடிமைகள் என்ற நிலையே காணப்பட்டது. வருண நிலைக்கு உட்பட்டவர் (வர்ணஸ்தர்) வர்ண நிலைக்கு உட்படாதவர் (அவர்ணஸ்தர்) எனப்பட்டனர். ஒரு குழுவின் குருதிப் புனிதத்தைப் பாதுகாக்க தேவையெனக்கருதிய அகமணமுறை புரோகிதர்களிடம் தோன்றி பின்னர் மெல்ல மெல்ல எல்லாப் பிரிவினரிடமும் பரவியது என்கிறார் அம்பேத்கர்.
செத்த மாட்டின் இறைச்சியை உண்பவர் தீண்டத் தகாதவர் ஆயினர். இவர்கள் தீண்டத் தகாதவர் ஆனதற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று டாக்டர் அம்பேத்கர் நினைக்கிறார் தலித் என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் என்று கருதப் பெற்ற இனத்தின் அடையாளமாகக் கருதப்பெற்றது. அச்சொல் அவ்வின மக்களின் வேதனைக் குறியீடாகவே இன்றும் ஒலிக்கப் படுகிறது. இன்றும் தலித் என்பவர் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் என்னும் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டோராகவே இருந்து வருகின்றனர்.
சாதிய ஒழிப்பு முறைகளாக அம்பேத்கர் முன்வைத்தவைகளில் முக்கியமானவை அரசதிகாரத்தில் பங்கு, கலப்பு மணம், சாதியத்துக்குப் புனிதம் கற்பிக்கும் இந்து சாத்திரங்களைத் தகர்த்தல் ஆகியவை. இட ஒதுக்கீடே சாதியத்தை அழிக்கும் வலிமையான ஆயுதம் என நம்பி அதனைச் சட்டமாக்குவதில் தீவரமாக உழைத்தார். நிலமற்ற கூலி விவசாயிகள் பாரம்பரியமாக அடிமைகளாக இருப்பதால், அவர்களுக்கு சிறு நிலங்களைப் பிரித்துக் கொடுத்துப் பயனில்லை என்று எண்ணிய அம்பேத்கர் கூட்டுப் பண்ணை முறையே சிறந்தது என்னும் கருத்தையும் முன்மொழிந்தார். குத்தகை விவசாயிகளின் அடிமைத்தன ஒழிப்பு மசோதாவை முதலில் அறிமுகப் படுத்திய பெருமைக்குரிய சட்ட மனற உறுப்பினர் அம்பேத்கர். பம்பாய் பாரம்பரியப் பணிகள் சட்டம் (1928) குறுநில விவசாயிகள் சிவாரணச்சட்டம் (1927), கோத்தி முறை ஒழிப்புச் சட்டம், வாட்டள் முறை ஒழிப்பு, ஜூடி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்கான மசோதாக்களை இவரது கரங்களே முன்மொழிந்தன. தகுதியுடைய இந்துக்கள் எவரும் புரோகிதராக இருக்கலாம் என்னும் கருத்தையும் முன்வைத்தார்.
ஊர்ப்புறங்களில் இன்னும் தீண்டாமை முற்றிலும் விலகவில்லை. இன்னும் தலித் இனப்பெண்களை வன்புணர்தல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
தலித் என்பவர்கள் தமக்கென ஒரு பண்பாடு, தமக்கென ஒரு மொழி தமக்கென ஒரு பாட்டு, தமக்கென ஒரு இசைக்கருவி என்று தம்மை அடையாளப்படுத்திய காலத்தில் இவற்றில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று குரல் கொடுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் இன்றும் சிலர் கொச்சை மொழியே தம் அடையாளம் என்றும் கொச்சையாக எழுதுவதும் பேசுவதுமே தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கட்டியம் கட்டிக் கூறுகின்றனர்.
‘வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெறுக்கும்
கவிப்பெறுக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்”
என்று பாரதி கூறுவது போலத் தம் இன மக்கள் கல்வி கற்றால்தான் இவ்விழிநிலையில் இருந்து மீளலாம் என்று உறுதியாக நம்பி அதற்கு ஆவன செய்தவர் அம்பேத்கர்.
ஒரு நாட்டின் வளத்திற்கு மண்வளம் மனித வளம் இரண்டை விடவும் நீர் வளமே மிக முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எல்லையை இழந்து பல தொல்லைகளை அடைந்து இன்று முல்லையையும் இழந்த நிலையில் டாக்டர் அம்பேத்கரின் நீரியம் பற்றி பேசுவதும் நம் கடமையாகிறது.
இயற்கையும் மைய அரசைப் போலவே நீரைத் தருவதில் ஒருபுறம் கஞ்சத்தனமும் ஒரு புறம் தாராளத்தனமும் காட்டுகின்றது என்பது மட்டுமல்ல. தருகின்ற சிறிதளவு நீரையுமே உரிய நேரத்தில் தருவதில்லை. ஆனாலும் நாம் இயற்கையின் மீது பழி சுமத்துவதை விடுத்து அதனைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே அன்று, இன்று மட்டுமன்று என்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய நாட்டின் மொத்த நீர்வளம் 65,986 டி.எம்.சி. மேற்சொன்ன விவசாயம், வீட்டுப் பயன்பாடு, தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிய அனைத்திற்குமாக பயன்படுத்தும் அளவு 21,356 டி.எம்.சி. தான். இது மொத்த நீர்வளத்தில் சுமார் 31 விழுக்காடுதான். மீதமுள்ள 69 விழுக்காடு நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் பல மாநிலங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சில இடங்களில் வெள்ளத்தால் வளம் வீணாகிறது
நீர்வளம், பாசனவசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்குகிறது. குறைந்த செலவில் போக்கு வரத்திற்குப் பயன்படுகிறது. தொழில் மயமாக நாடு மாறுவதற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணமானது நீர்வளம். ஆகவே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று அறைகூவல் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இந்த ஒலியின் ஆரம்பம் இந்த ஒலியில் துவக்கம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே டாக்டர் அம்பேத்கர் திருவாய் மலர்ந்து பிறந்தது: ஒலித்தது. பறை சாற்றியது என்பதே உண்மை.
அன்றைய பிரித்தானிய அரசு 1919 ல் செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதில், நதிகள் அவ்வவ் மாநிலங்களின் சொத்து என்று சொன்னது.
1935ல் விவசாயமும் நதிநீர்த்தேக்குதலும் மாநில அரசுகளின் உரிமை அதில் மைய அரசு தலையிடாது என்று சட்டம் இயற்றியது.
இவ்விரு சட்டங்களையும் 1942ல் தொழிளாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் கடுமையாகச் சாடினார். எப்படி இந்தியாவை இணைக்கின்ற தொடர் வண்டி போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அதே போல பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நதிகளும் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேஎண்டும் என்றார். இந்தியாவில் காணப்படும் ஒரு பகுதியில் பெய்யும் அதிக மழையும் ஒரு பகுதியின் வறட்சியையும் சமநிலைப் படுத்த நீர்த்தேக்கங்கள் வேண்டும் என்ற கருத்தை அன்றே பறைசாற்றினார். அத்துடன் நிற்காது 1945 ஆகஸ்ட் 23 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்ட வரைவினை அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக 1945ல் கட்டாக்கில் ஒரிசாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்ட மாநாட்டில் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவரது சிந்தனை செயல் வடிவம் பெற்றது. இன்றய ஒரிஸா மாநிலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையன்று. இந்தத் திட்டத்தை அடியொற்றியதே நேருவின் புகழ் வாய்ந்த நதிநீர்த்திட்டங்களான பக்ராநங்கல் திட்டம், சோனே திட்டம், மகாநதி திட்டம் ஆகியவை.
நதிநீர் தேசிய உரிமை. நதிநீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து கூட்டுத் திட்டங்கள் வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் மாநிலங்களைத் தாண்டி பெரும்பான்மை மக்களுக்குப் பயன் தரும் பொதுத் திட்டமாக அமைய வேண்டும் என்று அன்று அழுத்தம் திருத்தமாக வாதாடினார். இன்று வருமா நாளை வருமா என்று எதிர்ப்பார்த்து வரும் நதிநீரைப் போலவே நதிநீர் தேசியமயமாக்கல் திட்டமும் தென் மாநில மக்களைத் தொடர்ந்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அவர் அன்று தொடங்கி வைத்த இந்த உரிமைப்போராட்டங்களாகிய சேரியமும் நீரியமும் இன்றும் முழு வெற்றியைக் காணவில்லை என்பது இந்தியர்களின் துர்ப்பாக்கிய நிலை என்றே கூறலாம்.
ஞாயிறு, 25 மார்ச், 2012
ஒரு தாயின் ஜனனம்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை
உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்
ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று
உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)